Saturday, September 12, 2015

ஸர்மிளா ஸெய்யித் புரட்ட நினைக்கும் மலை - 04

ஸர்மிளா ஸெய்யித் புரட்ட நினைக்கும் மலை  - 04
- முஸ்டீன் -

ஒருவர் சமுகத்தில் அறியப்படுவதற்கு பல்வேறு முறைகள் இருக்கின்றன. தம்மையும் சமுகம் மதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், தாங்களும் பெரிய மனிதர்கள்தான் என்று நிலைநிறுத்திக் கொள்ளப் பாடுபடுகின்றவர்கள் அவரவர்க்குப் பொருத்தமான சாதகமான முறைகளினூடு பயணப்பட்டு அதில் திருப்தி கண்டவர்களுமுண்டு மூக்குடைந்தவர்களும் உண்டு இத்தகையவர்கள் தமது இருப்பைக் காண்பிப்பதற்காகவே கருத்தச் சொல்லும் அறிவாளிகளாக அல்லது கோமாளிகளாக இருப்பர். எல்லோரையும் அரவனைத்து அனைவர்க்கும் பிடித்தமான நல்லவர்களாக இருக்கவே பெரும்பாலானவர்கள் ஆசைப்படுவார்கள். இத்தகையவர்கள்தான் சமுகத்தின் ஆன்மாவையே அசைக்கவல்ல சைலண்ட் டெரெரிஸ்ட்கள். மிகுந்த அச்சுறுத்தலுக்குரியர்களும் இவர்கள்தான். ஏனையவர்களின் விவகாரங்களில் தலையிடுபவர்களாகவே பெரும்பாலும் தம்மை நிலைநிறுத்திக் கொள்வர். 

சிலரை மக்கள் அந்நியப்படுத்தி முகவரியே இல்லாது செய்துவிடுவார்கள். சிலரைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடி எல்லோருக்கும் தெரிந்தவர்களாக மாற்றிவிடுவார்கள். சிலரை எழும்ப விடாமல் துரத்திக் கொண்டிருப்பார்கள். அது சர்ச்சைகையின்பாற்பட்ட விடயதானங்களில் சம்பந்தப்பட்டதாக இருக்கும். மக்களுக்கு மத்தியில் அறிமுகம் தேவையே இல்லையென்று ஒதுங்கி நிற்பவர்களையும் கூட சில வேளைகளில் அவர்களின்  சர்ச்சைக்குரிய கூற்றுக்கள் மக்களுக்கிடையே முரண்பாட்டை விதைத்து பேசுபொருளாக்கிவிடும். இது சிலரை வாழ வைக்கும் சிலரை அழித்துவிடும். சிலர் அழிவின் விளிம்பை நோக்கி பலவந்தமாகத் துரத்தப்பட்டாலும் வீழ்ந்துவிடமாட்டார்கள். தம்மை நிலைநிறுத்த போராடிக் கொண்டே இருப்பார்கள். கடைசிவரையும் பாதுகாப்பாக ஒதுங்குவதற்கு விடாமல் வைக்கற்போர் நாய்கள் போல சிலர் அங்கேயே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவசியமின்றியும் காரணமின்றியும் குரைத்துக் கொண்டிருப்பார்கள். சில பொழுதுகளில் ஆதரவு போன்று குரைத்தாலும் அதில் ஒரு எதிர்ப்பு தொக்கி நிற்கும். இத்தகையவர்களால் மக்களை நோக்கி எறிகணைத் தாக்குதல் நடாத்தும் நிர்ப்பந்தத்திற்குள் அந்த விளிம்பில் இருப்பவர்கள் தள்ளப்படுவார்கள். சில பொழுதுகளில் அது சாதகமான விளைவுகளையும் பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தி விடுவதுண்டு. 

சர்மிளாவின் கருத்துக்கள் மீதான தாக்குதல் மற்றும் சர்மிளாவின் கருத்துக்களால் மேற்கொள்ளப்படுத் தாக்குதல் என்ற இரண்டு விடயங்களையும் மேற்சொன்ன விடத்தின் அடிப்படையில் நின்றுதான் பார்க்க வேண்டியிருக்கின்றது. எனது அவதானிப்பில் சர்மிளாவுக்கு கருத்துச் சொல்லுமளவுக்கு இருக்கும் அறிவு அதைப் பொருத்தமான விதத்தில் மக்கள் மன்றிற்குக் கொண்டு சேர்ப்பித்துப் புரியவைப்பதில் தோற்றுத்தான் போகின்றது. ஒருவனுக்கு ஒரு விடயம் புரியவில்லையென்றால் அது  அவன்மீதுள்ள பிரச்சினையல்ல மாறாக கருத்தைச் சொல்பவரின்பால் உள்ள பிரச்சினை. அவனுக்குப் புரியும்விதமாகச் சொல்லவில்லை என்றுதான் அர்த்தம். இந்த இடத்தில் இருக்கும் பிரச்சினையும் அப்படித்தான். முஸ்லிம் சமுதாயத்தில் நடைமுறையில் இருக்கும் பல்வேறு விடயதானங்களைக் கேள்விக்குட்படுத்த வெறும் உணச்சிபூர்வமான கோபம் அல்லது அக்கறை மட்டும் போதாது. அதை உரிய விதத்தில் சரியான தளத்தை நோக்கி நகர்த்துவதில்தான் வெற்றி இருக்கின்றது. இந்த இடத்தில் பொருத்தமான சொற்கள் வந்துவிழவில்லையென்றால் மேலும் மேலும் எதிர்மறைப் புரிதலே மேம்படும். அது பிரச்சினையைக் கூர்மையாக்கும். 

அடுத்தது ஒரு விடயத்தைக் கருத்தாகக் கூறி ஆதங்கப்படுதல் அதையே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாக முன்வைத்தல் ஆகிய இரண்டு விடயங்களுக்கும் பாரிய வித்தியாசம் இருக்கின்றது. 

உதாரணத்திற்கு ஹிஜாப் அல்லது பர்தா மற்றும் அபாயா பற்றிய சர்மிளாவின் கூற்றுக்கள். அதையும் இரண்டு விதமானப் பார்க்கலாம். சர்மிளா தனது நேர்காணல் ஒன்றில் முன் வைத்த கருத்துக்கள் கீழே

'என் மூன்று சகோதரிகளையும் சந்திக்க நேர்ந்தவர்கள் வாயடைத்து நின்றார்கள். தங்கைகள் இஸ்லாமியப் பெண்கள் என்று சொல்லப்படக்கூடியவர்களின் பிரதியுருவங்களாக இருந்தார்கள். பெண் குழந்தையின் சிறுபராயங்களை அனுபவிக்கத் தராதஇ சிறுமியை அவளது ஏழு வயது முதலே பெண்ணாகப் பார்க்கிற ஊரில் நான் வளர்ந்த விதம் முற்றிலும் வியப்பூட்டக்கூடியது. என்னை மாற்றவும் எனது சுதந்திரக் குணாதிசயங்களைக் கட்டுப்படுத்தவும் பெற்றோரும் உறவினரும் எடுத்த எந்த முயற்சியும் பயனளிக்கவில்லை. எனது சுதந்திரத்திற்காகக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டிருக்கிறேன். இருட்டறையில் பூட்டப்பட்டிருக்கிறேன். மரத்தில் கட்டிவைக்கப்பட்டிருக்கிறேன்

பன்னிரெண்டு வயதிலும் முட்டிக்கால்  தெரியும் சட்டையும் இரட்டை ஜடையுமாக சைக்கிளோட்டித் திரிந்த என்னைப் பார்த்து மொத்த ஊருமே வியப்பில் ஆழ்ந்து கிடந்தது

குர்ஆன் ஓதுவதற்கு கால்கள் வரையும் நீண்ட உடையும் பர்தாவும் அணிய முடியாதென்று அடம்பிடித்து முட்டிக்கால் சிவக்க அடிபட்டவள் 

பையனைப் போலவே நான் வளர்ந்தேன். ஏறாவூர் முற்றிலும் இஸ்லாமியச் சூழல் கொண்டது. பச்சிளம் பருவத்தில் குர்ஆன் மதரஸாவுக்கு கால்களை மறைக்கும்படியான நீண்ட உடைகளை அணிய முடியாதென்றதிலிருந்து பர்தா வரைக்கும் சர்ச்சைக்குரியவளாகவே வளர்ந்தேன். ஒழுக்கம்இ மதக் கட்டுப்பாடு என்ற வேலிகளால் சிறைப்பட்ட ஏறாவூரில் பையனைக்கூட பொத்திப் பொத்தியே வளர்த்தார்கள். ஒரு பையனுக்கு சைக்கிள் வாங்கித் தருவதற்கு அவன் பத்தாம் வகுப்புச் சித்தியடையும் வரைக்கும் காத்திருக்கச் செய்வதே பெரும்பாலான பெற்றோர்கள் செய்யக்கூடிய காரியமாக அப்போதைய காலம் இருந்தது. இந்த வேலிகளை நான் ஒருபோதும் பொருட்படுத்தியவள் கிடையாது.'

முதலாவது விடயம் : ஒரு கருத்தாகப் பார்த்தால் அதில் ஒன்றுமேயில்லை. சிறுபராயத்தில் சர்மிளா எப்படியிருந்தாள் என்பதைச் சொல்கின்றது. நான் சிறுபராயத்தில் இப்படித்தான் இருந்தேன் என்று சொல்லிவிட்டுச் செல்கின்றது. சாதாரணமாக ஒருவர் 
'கள்ளி கடுமையான ஆளாகத்தான் இருந்திருக்கின்றாள் பாருங்கோ' 
என்று சொல்வதோடு இது முடிந்துவிடும். இளமைக்காலக் குதூகலம் எஞ்சிநிற்கும் அவ்வளவுதான்.

இரண்டாவது விடயம் : தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாக இதை நோக்கினால் கட்டாயம் ஒவ்வொரு சொல்லையும் சத்திரசிகிச்சை செய்தாகவேண்டும். அப்படிச் செய்யும் போது பல முரண்பாடுகளைக் கண்டுகொள்ள முடியும். எதிர்மறையாகக் கேள்விக்குட்படுத்தி அசர வைக்க முடியும். ஒரு சட்டத்தரணியின் மூளையோடு சத்திரசிகிச்சை செய்யும் போது மேலும்மேலும் கருத்துக்குரியவர் பந்தாடப்பட வாய்ப்பிருக்கின்றது. பிரச்சினை அல்லது அதற்கான தீர்வு என்று வந்துவிட்டால் சத்திர சிகிச்சையைத் தவிர வேறு வழியில்லை. அப்படித்தான் உலக மக்கள் பழக்கப்பட்டிருக்கின்றார்கள். வாதப் பிரதி வாதங்களின் பின்னர்தான் முடிவுகள் எட்டப்பட்டிருக்கின்றன அதுதானே நியதி.

சர்மிளா சிறு வயது முதலே சுதந்திரத்துக்காகப் போராடி இருக்கின்றாள் அந்தப் பேபாராட்டத்தில் கடுiமாகத் தண்டிக்கப்பட்டிருக்கின்றாள், இருட்டறையில் அடைக்கப்பட்டிருக்கின்றாள் அவள் சொல்லவரும் சுதந்திரம் என்ன? என்ற கேள்விக்கான பதிலாக கீழ்வரும் விடங்களையே எவரும்முன்வைப்பர்.
* கால்கள் வரையும் நீண்ட உடையும் பர்தாவும் அணிய மறுத்தல்
* ஒழுக்கம், மதக் கட்டுப்பாடு என்ற வேலிகளால் சிறைப்பட்ட வாழ்வைத் தகர்த்தல்
* பையனைப் போலச் சுற்றித்திரிதல்

இந்த இடத்தில் சர்மிளாவின் கருத்துக்கள் பலருக்கும் கோபமூட்டவிளைகின்றன. அந்தக் கோபம் பின்வரும் முடிவை எடுக்கத் தூண்டும். ஏனெனில் அங்கு விழுந்துள்ள சொற்கள் அப்படித்தான் செய்தி சொல்லும். அதுசொல்லும் செய்தியைத்தான் பகுப்பாய்ந்து பார்க்க முடியும். புதிதாக விளக்கம் சொல்ல புதிய கோணத்தில் பார்க்க அங்கு ஒன்றுமே இல்லை. இத்தகைய எதிர்ப்பைக் கூர்மையாக்கிக் கொண்டே இருப்பதுதான் சர்மிளாவின் எதிர்பார்ப்பாக இருக்குமோ என்று பலரையும் மௌனியாக்கும் விடயம் இது.

குழந்தைப் பருவத்து நிகழ்வுகளாக எதிர்பார்ப்புகளாக மேலே சொன் இவைகள்தான்  சர்மிளா எதிர்பர்க்கும் சுதந்திரம் என்ற தளத்தில் இப்போதும் பிடிவாதமாக இருந்தால்  இந்த சமுகம் ஒரு போதும் அவளை அரவனைத்துச் செல்லத் தயாராக இராது. அவளுக்குள் புதைந்து கிடக்கும் ஆற்றலும் ஆளுமையும் அறிவும் சிந்தனையும் இந்தச் சமுகத்துக்குப் பயன்தரத் தேவையில்லை. அப்படியொரு நபர் நமக்கு நன்மை செய்யத் தேவையில்லை என்ற உறுதியான நிலையில் இருந்து இந்த மக்கள் விடுபடப்போவதில்லை. அப்படி விடுபடாவிட்டால் சர்மிளாவுக்கான எதிர்ப்பு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அந்த எதிர்ப்பையெல்லாம் கவணத்தில் கொள்ளாது புறந்தள்ளுபவள் என்றால் சர்மிளா புரட்ட நினைக்கும் மலையை ஒரு காலத்திலும் புரட்ட முடியாது. மலையும் அப்படியேதான் இருக்கும் சர்மிளாவும் போராடிக் கொண்டேதான் இருப்பாள் 

சர்மிளாவின் குழந்தைப்பருவ நிகழ்வுகளுக்கூடாக சர்மிளாவை விளங்கிக் கொள்ள முடியும் என்ற செய்தியைத்தான், எல்லோருக்குமாகச் சொள்கின்றாள் என்றால் அதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமேயில்லை. அவள் பற்றிய வாதங்களில் இருந்துதவிர்ந்து நேரத்தை வேறெதற்கும் பயன்படுத்தலாம். 

இதெல்லாம் அப்படியே இருக்க சர்மிளாவுக்குள் இருக்கும்  குழப்பத்தையும் தெளிவையும் பேசியாக வேண்டும். உம்மத் என்ற நாவலில் தொனிக்கும் கருத்துக்கள் மற்றும் வேறு சில பேட்டிகளில் தொனிக்கும் கருத்துக்கள் என்று ஒரு திறந்த கருத்தாடலுக்குள் நுளையும் போது அந்தக் குழப்பத்தை நான் விளங்கிக் கொண்ட விதம் பின் வருமாறு அமையும். 

தொடரும்...

No comments:

Post a Comment