Friday, October 23, 2015

மனதிற் பட்டது – 01


(தமிழ்மிரர் பத்திரிகையில் வரும் பத்தி 16.10.2015)

இந்த உலகம் ஒரு மாயக் கோலம். அதில் எல்லாவற்றையும் மிகைத்த இலக்கியவாதி இறைவன்தான். கற்பனையில் சிந்தனையில் படைப்பில் என்று எல்லாவற்றிலும் புதுமை செய்ய அவனால் மட்டுமே முடிகின்றது. வீட்டுக்குள் ஊர்ந்து திரிகின்ற சின்னஞ்சிறு பூச்சியில் இருந்து அழிந்து போன டைனோசர் வரை எல்லாமே நமது கற்பனைக்கு அருகிலும் வராதவை. கர்வம் கொள்ளும் அதிகாரம் கடவுளுக்கு மட்டுமே இருக்கின்றது. ஏனெனில் அவன் மகத்தான படைப்பாளி. மகத்தான படைப்பாளி என்றால் மமதை இருக்கத்தானே செய்யும்.

எழுத்து ஒரு காலத்தில் தவம். அதனால்தான் படைப்புக்க வரமாகி வரலாற்றில் நிலைபெற்றது. ஆனால் இப்போது அப்படியில்லை. அதனால்தான் இலக்கியப் படைப்புக்களில் சிலவைதான் நின்று நிலைபெறுகின்றன. படைப்புக்கள் மலிவாகக் கிடைக்கின்றன என்பதற்காக அனைத்தையும் ரசிக்க முடிவதில்லை. நம்மால் ரசிக்க முடிந்ததைத்தான் பிறரோடும் பகிர்ந்துகொள்ளத் தோன்றும். எனக்கு அப்படித் தோன்றுவதைத்தான் பொது ரசனைக்கு என்னால் முன்வைக்க முடிகின்றது.
இலக்கியப் படைப்பாளன் ஒரு காலத்தில் கட்டி ஆண்ட உலகம் இப்போது இல்லை. எல்லோருக்கும் எல்லாம் மலிவு விலையில் கிடைக்கத் தொடங்கிற்று. அதுவும்ஒரு வகையில் நல்ல அறிகுறிதான். அவசர அவசரமாக எல்லோரது தரத்தையும் உள நோக்கத்தையும் அவற்றில் தெளிவாக நாம் கண்டு கொள்ளலாம். அவரவர் எழுத்து ஏதோவோரு விதத்தில் அவர்களின் உள்ளத்தின் மாயத் தோற்றங்களைப் படம்பிடித்து நமது கண்ணுக்குக் காட்சியாக்கிச் செல்கின்றது. அவற்றில் புதைந்து கிடப்பதைப் புரிந்து கொள்ளுவதும் விளங்கிக் கொள்வதும் அவரவர் சிந்தனை ரசனை என்ற இரண்டு விடயங்களிலும் தங்கியிருக்கின்றது. அதில் தப்பித்தலும் மாட்டிக் கொள்ளுதலும் கூட அடங்கியிருக்கின்றது.

எல்லோருக்கும் எல்லாம் வசப்படுவதில்லை. எல்லோரையும் மடையன் என்று சொல்லிக் கொண்டு அதி புத்திசாலியாகத் தம்மைக் கருதிக் கொண்டவர்கள் இப்போது பேசுபொருளாக இல்லை. இது இலக்கியப் படைப்பாளிகளுக்கும் பொருந்தும். ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொன்று முடியுமாக இருக்கும். அவரைப் போல நானும் இருந்தால் என்ன என்று சிந்தித்து அதில் முயற்சித்து நம்மைத் தொலைப்பதைவிட நமக்குள் இருப்பதைக் கொண்டு நாம் நம்மைத்தேடி அடைந்து கொள்வதுதான் நமது அடையாளமாக வரலாற்றில் பதியும்.

இலக்கியவாதிகள் தம்மை நிலை நிறுத்திக் கொள்வதிலேயே ஓடிக் களைத்துப் போவார்கள். இறுதியில் அவர்களுக்கு மிஞ்சுவது அந்தக் களைப்பு மட்டும்தான். பாவம் அவர்கள். எவ்வளவு வயது போனாலும் சிலரால் இதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. 

யாருக்கும் யாரும் முதுகு சொறிந்துவிடுவதால் நிலைபெற்றுவிடுவதில்லை. ஒருவனைத் தூக்கி நிறுத்துவது அவனது எழுத்து. அவனது எழுத்துக்குப் பலம் அவனது ஆளுமை, அந்த ஆளுமைக்கு வலிமை சேர்ப்பது பணிவும் எளிமையும்தான். எழுத்து வனிகப் பண்டமாக மாறிக் கொண்டிருக்கின்றது. படைப்பாளனும் வனிகப் பண்டமாக அடையாளப்படுத்தப்படும் நிலை தூரத்தில் இல்லை போல் தெரிகின்றது. அப்படியாகிவிட்டால் அது மெஷின். எழுத்து மெஷின்.ஒரு காலம் வரும் அப்போது படைப்பாளுமைகளுக்காக நாம் தவமிருக்கவும் நேரலாம்.

பல பொழுதுகளில் கேள்விகளுக்கான பதில்களில்தான் இலக்கியவாதிகள் தம்மை யார் என்று காட்டுகின்றார்கள். பதிலில் பிரதிபலிப்பது அவர்களது சிந்தையும் திறமையும் நடைமுறையும்தான் இங்கும் நேர்மறையாக பதினைந்து கேள்விகள் ஒவ்வொரு கேள்விக்குள்ளும் ஒவ்வொரு பொறி இருக்கின்றது. அதில் சிக்கிக் கொள்ளமால் அவர்களாக எத்தனை பேர் வெளிப்படுகின்றார்கள் என்பதை எல்லோரும் பார்க்கத்தானே போகின்றீர்கள். 
வழமையான இலக்கியப் பக்கம் என்ற நிலையிலிருந்து சின்னதாய் ஒரு மாறுதலை நோக்கி நகரும் நோக்கங்களோடு வரண்ட மண்ணில் பெய்த ஒற்றை மழைத்துளியாக இப்பக்கம் இருக்கும் என்ற நம்பிக்கையோடு
-முஸ்டீன்- 

No comments:

Post a Comment