Monday, March 10, 2014

கண்ணீரினூடே தெரியும் வீதி



சில புத்தகங்களைத் தேடிச் சென்று பெற்று வாசிப்பேன், இந்தப் புத்தகத்தையும் அப்படித்தான், எல்லாப் புத்தகக் கடைகளிலும் தேடி கிடைவில்லையென்றான போது அதை எழுதியவரையே தொடர்பு கொண்டு கேட்டேன். அதற்காக நாவல வரைப் பயணம் செய்து திறந்த பல்கலைக்கழகத்தில் நண்பர் முகுந்தனைச் சந்தித்து நீண்ட நேரம் உரையாடி புத்தகத்தைப் பெற்றுக் கொண்ட போது காசு கொடுத்து வாங்குவதைவிட ஓர் ஆத்மார்த்தமான பிணைப்பை அந்தப் புத்தகத்துடன் ஏதோவொன்று நமக்குள் ஏற்படுத்தி விடுகின்றது. இருபது வயது வரை இருந்த வாசிப்பின் எக்ஸ்பிரஸ் வேகம் கடந்த பத்தாண்டுகளாகக் குறைந்திருப்பதை நான் தெளிவாகவே உணர்கின்றேன். காலையில் இருந்து இரவு தூங்கி விடுவதற்குள் எப்படியும் 400 பக்கங்களுக்கு மேல் வாசித்துவிடுவேன். பாடசாலையில் படிக்கும் காலத்தில் ஒரு பாடம் முடிந்து ஆசிரியர் வெளியே சென்று அடுத்த பாடத்திற்கான ஆசிரியர் வருவதற்கிடையில் கிடைக்கும் அந்த இடைவெளியைக் கூட நான் விட்டு வைப்பதில்லை, வேகமான வாசிப்பு 20 பக்கங்களையாவது தாண்டும், 

தேவமுகுந்தனின் பத்துக் கதைகளையும் படிக்க ஐந்து நாட்கள் எடுத்தது என்னைப் பொருத்தவரைக்கும் எனது வாசிப்பின் பெருந் தோல்வி என்றுதான் கருதுகின்றேன். கதைகளைப் படித்து முடித்துவிட்டே பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் எழுதிய குறிப்பினைப் படித்தேன், நான் சொல்ல நினைத்த விடயங்கள் பலவும் அங்கே பதிவாகி இருந்தன. மேலதிகமாக இரண்டே இரண்டு விடயங்களைத்தான் தேவமுகுந்தனின் கதைகளில் இருந்து புரிந்து கொண்டேன். 

யுத்தமும் இன முரண்பாடும் தொடர்பில் குறிப்பாகத் தமிழர் - சிங்களவர் முரண்பாடு குறித்துப் பலகதைகளைப் படித்திருக்கிறேன், அவற்றிலிருந்து இந்தக் கதைகள் பெரும்பாலும் வேறுபடுவதற்குக் காரணம் சிங்களவர்களின் மனோநிலையில் எவ்விதமான உணர்வுக் கோலங்கள் படிந்திருக்கிறன என்பதைத்தான் வெளிப்படுத்துகின்றது, அதாவது சிங்களவர்களுடனான நெருக்கத்தில் இருந்தே பெருவாரியான கதைகள் பிறக்கின்றன. அந்த நெருக்கம் இராணுவத்திற்கெதிரான தாக்குதலை அல்லது நாட்டிலுள்ள அரச நலன்களுக்கெதிரான தாக்குதலால் எவ்விதமான பரிமாணத்தை அடைகின்றது என்பது மிக முக்கியமானது. எவ்வளவுதான் ஆழமான நட்பு நிலவினாலும் தமிழர்கள் தமக்கு எதிரிகள் என்பது போலவும், தமது நாட்டுக்கெதிராக தமிழர்கள் தாக்குதல் நடாத்துகின்றார்கள் என்பது போன்ற தோரனையில் வெளிப்படும் வாசகங்கள் இரு வேறு தேசங்களைக் கட்டியங்கூறி நிற்பதுவும் கவனிக்கத் தக்கது. சிங்களவர்களுக்க மிக நெருக்கமாக இருந்து அங்கிருந்த இடைவெளியில் நின்று பேசுகின்ற கதைகளே என்னை ஈர்ப்புச் செய்தன. அன்பும் நட்பும் கூடிய பிணைப்பு ஏதோவோர் இடைவெளியால்தான் கட்டிப் போடப்பட்டிருக்கிறது என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளும்படி கதைகள் நகர்கின்றன. இயல்பான பிரிவினை என்ற அம்சம் இப்படியே தொக்கி நிற்கின்றது. சேர்ந்து வாழுதல் எனும் எதிர்பார்ப்பு வெறுமனே எதிர்பார்ப்பு மட்டும்தான் அதில் சாத்தியப்பாடு கிடையாது என்பதையும்  யுத்தம் முடிந்த பின்னர் அது மேலும் கூர்மையடைந்திருப்பதையும் அவதானிக்கும்படியாக உள்ளதை இப்போது நாம் வெளிப்படையாகவே காணலாம். யுத்த காலத்துக் கதைகளினூடாக தேவமுகுந்தன் வெளிபடுத்தியிருப்பது இந்த உணர்வுகளைத்தான், அநேக இடங்களின் இந்த எதிர்பார்ப்பின் படிமங்களைத்தான் என்னால் தரிசிக்க முடிந்தது. 

போர் என்பதன் பின் தூரத்திலுள்ள சில பக்கங்களை; அதற்கு அண்மையில் இருந்து பேசுகின்றது. சிங்களவர்களுக்குள் வாழும் தமிழ் மக்கள், பிரச்சினை வருகின்ற போது மாறும் மனங்களை எப்படி உள்வாங்கிக் கொள்வது என்பதில்தான் நிறைய அம்சங்கள் சுற்றி வருகின்றன. இரட்டைக் கோபுரம், இடைவெளி மற்றும் சிவா போன்றன அதைத் தெளிவாகப் பேசுகின்றன. இது குறித்த மாற்றுப் பார்வை என்னிடமுள்ளது. அதைப் பின்னால் ஓரளவுக்கு வெளிப்படுத்தியிருக்கின்றேன். கதைகளைப் பற்றி அளவானதும் அழகானதும் குறிப்பாய் பேராசிரியர் நுஃமானின் மதிப்பீடு அமைந்திருப்பதால் அதல்லாத ஒரு கோணத்தில் தான் நான் பார்க்க வேண்டியிருக்கிறது, அது கொஞ்சம் சிக்கலானதும் கூட.

அடுத்தது தமிழர் தரப்பு எதிர்பார்ப்புகள். இதிலும் சிங்களவர் தரப்புப் போலவே தமிழர்தரப்பு நியாயங்கள் வெளிப்படுகின்றன. ஒரு இனம் இன்னொரு இனத்தின் மீது   ஆதிக்கம் செலுத்தும் போது ஏற்படுகின்ற இயல்பான ஆக்ரோஷம் தன் இனத்தின் மீது பற்றுக் கொண்ட எந்தவொரு படைப்பாளிக்கும் விதிவிலக்கானதன்று. தேவமுகுந்தனை அப்படி நியாயமான இனப்பற்றுள்ள ஒரு படைப்பாளியாகவே என்னால் பார்க்க முடிகின்றது. யுத்தகாலத்துப் படைப்புக்களில் நானும் காணும் ஒரு முரண்நிலை ஆதிக்கம் செய்யும் இனத்தின் மீதான போராட்டதை ஆதரிக்கும் பலர் சில பொழுதுகளில் போராளிகளை மறுதலிப்பர், இந்த விடயத்தைத் தெளிவாகவே பேசி விடலாம் என்று நினைக்கின்றேன்.

விடுதலைப்புலிகள் தமிழர்களுக்கான பிரதான விடுதலைப் போராட்டப் பங்காளிகள் என்ற நிலைப்பாட்டை வலிந்து வலுவாக நிலைநிறுத்திக் கொண்டபோது ஏனைய விடுதலை;ப போராட்ட இயக்கங்கள் அனைத்தும் அரசிடம் புகலிடம் பெற்றுத் தஞ்சமடைந்துவிடுவதை தெளிவாகவே நாம் வரலாற்றில் காணலாம். விடுதலைப் புலிகளின் பாரிய பிளவான கருணாவின் பிரிவின் போதும் யுத்தமுடிவின் பின்னர் கேபியின் தீர்மானமும் கூட அரசிடம் சரணடைவதைத்தான் தெளிவாகக் காட்டின அதைத்தாண்டிய நிலையிருக்கவில்லை. அது அப்படியிருக்க புலிகள் தமக்கான ஒரே காப்பாளர்கள் என்ற எண்ணத்தை ஊன்றிவிட்ட பலகாரணிகளுள் அவர்கள் மீதான அச்சத்தின் விளைவாகக் கட்டமைக்கப்பட்ட உணர்வு நிலை மிக முக்கியமானது. அதனால்தான் புலிகளுக்கு எதிராக எழுதிய எல்லோரையும் புலிகள் தேடித்தேடி அழித்தார்கள். அதற்காகவே தனிப்புலனாய்வுப் பிரிவும் செயற்பட்டது. அதனால் படைப்பாளிகள் மௌனிப்பது தவிர்க்கவொனாதாகியது. பேராசியர் நுஃமான் சுதாராஜ் அவர்களின் பெருந் தொகுப்பான உயிர்க் கசிவுக்கு எழுதிய குறிப்பில் இருந்த ஒரு பந்தியை இங்கும் குறிப்பிட்டுள்ளார் அது இந்த மௌனம் தொடர்பானது, தேவமுகுந்தனும் அந்த மௌனத்தை இங்கு கடைப்பிடிக்கிறார் என்பது, 

என்னைப் பொருத்தவரை இந்த மௌனத்தைச் சூடிக் கொண்ட பலரின் எழுத்துக்களில் ஒரு யதார்த்தத்தினை மறந்துவிடும் போக்கினை அவதானித்திருக்கிறேன். அதாவது சிங்கள தமிழ் முரண்பாடு என்பது வலுப்பெற்று யுத்தமும் இரு தரப்பாக நடக்கும் போது, ஒரு சண்டையில் ஆயிரம் ஆமிக்காரர்கள் பலியானால் தமிழர்களுக்கு எழும் வெற்றிப் பெருமிதம் இயல்பானது. மரநாய்கள் கதையின் இறுதியில் 'மரநாய்களைத் துரத்த வேண்டும்' என்பது இதைத்தான் சொல்கின்றது. அப்படித் துரத்தும் போது சிங்களவர்களுக்குள் கலந்து வாழும் தமிழர்கள் ஏதோவோர் விதத்தில் பிரச்சினையை எதிர் நோக்குவது இயல்பானதுதானே அந்த இயல்பை ஏன் எல்லா கதைஞர்களும் மறுதலிக்கிறார்கள்? என்பதுதான் எனது கேள்வி ! 

சிங்களவர்களுடன் நெருக்கத்தைக் கொண்டிருந்த பல தமிழர்கள் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டமையும், கைது செய்யப்பட்டு விசாரணைக் குட்படுததப்பட்டமையும் இந்த வகையினவே. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் ஒரு அப்பாவிச் சிங்களவன் சென்றாலும் அவன் சிங்களப் புலனாய்வுக் காரனாக இருப்பான் என்பதே புலிகளின் கணிப்பு அவன் உயிரோடு திரும்புதல் என்பது சாத்தியமற்றது. அதே இராணுவ ஸ்டடஜியைத்தான் சிங்கள தரப்புப் இராணுவ மூளையும் கைக்கொண்டது. எல்லா தமிழர்களும் புலிகளே என்பது மாதிரியான நிலைப்பாடு. தனி ஈழம் அமையப்பெற்றால் அது தமிழர்களுக்குக் கிடைத்த பெரும் பேறு என்று கருதும் உள்ளங்கள் அந்த அடைவுக்காக சிங்கள அரசை இலக்கு வைத்துத் தாக்குதல் ஒன்று நடக்கும் போது ஏற்படும் இன்னல்களை வேறோர் கோணத்தில் நோக்குவதையும் வெளிப்படுத்திய படைப்புக்களைப் படிக்கின்றபோதுதான் எனக்குள் அந்த முரண்பாட்டின் சூத்திரம் புரியாத் தன்மை எழுகின்றது. 

மர நாய்களையும் சிவாவையும் படித்த போது எனக்குள் எழுந்ததை இப்படித்தான் வெளிப்படுத்த முடிந்தது. சிங்கள இலக்கியங்கள் எப்படி  இந்நிலைகளை நோக்கியிருக்கின்றன என்பது பெரியளவில் தெரியாது, எனக்குத் தெரிய 1993ல் இருந்து கதுருவெல பஸ் ஸ்டாண்டில் ஒரு புத்திசுவாதீனமற்ற சிங்களப் பிச்சைக்காரன். எப்போதும் அவன் மகே துவ மகே துவ என்று சிரித்துக் கொண்டே சூரியன் உதிக்கும் பக்கம் நோக்கிக் கை நீட்டுவான் 1998ல் அவனை வெலிகந்தை பஸ்நிலையத்துக்குச் செல்லும் வழியில் இருந்த பெரிய அரச மரத்தின் கீழ் கண்டேன். 1999இல் ஓட்மாவடியில் இருந்தான். அப்போது அவனை இராணுவத்தினர் மிகக் கடுமையாக விசாரித்து விட்டனர் அடிகாயங்களுடன் ஓட்டமாவடிப் பகுதியில் அவன் சுற்றித்திரிந்தான், 93ல் இருந்து பல தடைவ நான் அவனுக்குச் சாப்பட்டுப் பார்சல் கொடுத்திருக்கிறேன். பின்னர் ஒரு நாள் 2002 ல் என்று நினைக்கிறேன் மட்டக்களப்பில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தான். இராணுவப் புலனாய்வுக் காரன் என்று எல்லோராலும் பேசப்பட்டான். மள்வானைக்கும் வாழைச்சேனைக்கும் 1992ல் இருந்து அலைந்த எனக்குத் தெரியும் அவன் பிச்சைக்காரன் என்பது. ஆனால் ராணுவ மூளை அவனைப் புலனாய்வுக்காரனாய்த்தான் பார்த்தது. கறை படிந்த பற்களுடன் மிகமிக மெலிந்த தோற்றத்துடன் கிழித்து எறியப்பட்ட ஊத்தைப் பையுடன் அவனது கோலங்களைந்த பிரதேத்தைப் பார்க்கும் இரண்டு சொட்டுக் கண்ணீர் எனக்கு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை, யுத்தம் இப்படித்தான், ஆயுத மொழி இப்படித்தான் சண்டை என்ற அத்தியாயம் இப்படித்தான். இக்கதையை ஒரு தமிழ் எழுத்தாளன் எப்படிப்பார்ப்பான் என்பதுதான் எனது கேள்வி? 

எனக்குத் தெரிந்ததால் அந்தப் பிச்சைக்காரன் பற்றிய பார்வை சரியாக அமைந்தது, அவனைப்பற்றி எதுவுமே தெரியாவிட்டால் நான் எப்படி அந்நிகழ்வை எடுத்துக் கொள்வேன்? இதைத்தான் பெருவாரியான யுத்தம் பற்றிய கதைகளைப் படிக்கும் போது எனக்குத் கேட்கத் தோன்றுகின்றது. தேவமுகுந்தனின் பார்வைகூட அப்படிப்பட்ட தனக்குத் தெரிந்த என்பதில்தான் தொக்கிநிற்பதாகத் தெரிகின்றது. ஆனாலும் தனது சமூகத்தின் மீதான பேரபிமானம் எல்லாக் கதைகளிலும் மிகைத்து நிற்பதை அவர் வலிந்து தடை செய்யவில்லை, உணர்வுகளுக்கு மட்டும் அங்காங்கே கடிவாளமிட்டிருக்கிறார். அதைச் சொன்னால் வீண்வம்பாகிடுமோ என்று மெதுவாக நகர்ந்து விலகிச் சென்றிருப்பதை ஊகிப்பது அவ்வளவு கஸ்டமாக இருக்கவில்லை. 

சில வேளை எனது நிலைப்பாடுகளைத் தவறாக யாரும் வியாக்கியானம் செய்யக் கூடும், அது பற்றிக்கவலையில் இல்லை நான் சொல்ல வருவதற்குள் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டாலே போதும். ஒரு படைப்பாளி  எல்லோரையும் போல இருக்க முடியாதே. அவனது பதிவுகள் காலத்தின் நியாயமான பிம்பங்களைப் பதிவு செய்யவேண்டும். இன்னும் ஐம்பது வருடத்திற்குப் பின்னுள்ள சந்ததி இப்போதைய நமது எழுத்தக்களை வைத்துத்தான் இன்றைய களநிலவரத்தைத் தெளிய நினைக்கும் அப்போது தவறான விவாதக்களத்திற்கு வித்திட்டுவிடக்கூடாதே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் மற்றபடி ஒன்றுமில்லை.  கண்ணீரினுடே தெரியும் வீதி இந்த வகையில் ஒரு பக்கத்து நிலைப்பாட்டை மட்டும் பதிவு செய்திருக்கிறது, கூலுக்கும் மீசைக்கும் ஆசைப்படும் படியான வெளிப்பாடு தெரிவது படைப்பின் பலவீணமல்ல, படைப்பாளியின் செம்மைப்படுத்தலை வேண்டி நிற்பது. 

மனிதம் என்கிற வட்டத்துள் நின்று நான் பேசப் போகின்றேன் என்றால் அந்த வட்டத்தை வலுவாக அமைத்துக்கொள்ள வேண்டும். ஒரு படைப்பாளியாக வாழ்ந்துவிட்டுப் போவதை விட நேர்மையான ஒரு படைப்பாளியாக வாழ்தல்தான் சிறந்தது என்பது எனது நிலைப்பாடு, அப்படியான நேர்மையான படைப்பாளிகளின் எழுத்துக்களைப் படிக்கும் பாக்கியம் இலங்கைச் சூழலில் குறைவாகவே கிடைக்கின்றது. தனது மனதுக்கு நெருக்கமான ஆறுதலான நிலைப்பாட்டை ஆதரிக்கும் போக்கிலிருந்து விடுபட்டு எந்தவொரு நிலைப்பாட்டையும் பொதுவான தளத்திலிருந்து அணுகும் படைப்பாளியாக தேவ முகுந்தனும் திகழ வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளுடன்...

No comments:

Post a Comment