Tuesday, January 5, 2016

நேர்மறை 15 கேள்விகளுக்கு அமல்ராஜ் பதில்கள்

தமிழ் மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் இடம்பெறும் நேர்மறை 15 கேள்விகளுக்கு அமல்ராஜ் அவர்களின் பதில்கள் 


01 உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
எண்ணம் போலவும், எழுத்து போலவும், ஊருக்கான நம் உபதேசம் போலவும் இம்மியளவாவது வாழவேண்டும் என தினமும் முயற்சித்துக்கோண்டிருப்பவன். நான் நல்லவன் என நானே நினைத்து அடிக்கடி சிரித்துக்கொள்ளும் சிறுபிள்ளை. யுத்தக்களத்திலும் சந்தோசமாக பட்டாம்பூச்சி பிடித்துக்கொண்டிருப்பவன்.

02. நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?
இலக்கிய முரண்பாடுகளை எண்ணிவைத்திருப்பதில் கூட எனக்கு முரண்பாடு இருக்கிறது. அதனால் எண்ணுவதில்லை.

இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?
3. அதிகம் வாசிக்கும் இளையவர்களுக்கும் நிறைய எழுதிய பெரியவர்களுக்கும் இடையில் நடக்கும் 'அறிவாளிப் போட்டி'யும் அதனால் வரும் 'pழிரடயசவைல உழஅpடநஒ' ஏற்படுத்தும் முரண்பாடுகளும். எட்டத்தில் நின்று அதை புதினம் பார்த்தால் நல்ல சோக்கா இருக்கும்!

04. உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
நிறையப்பேர் எழுதியிருக்கிறார்கள். பட்டியலை எடுப்பாக சொல்ல வெளிக்கிட்டு இடையில் ஞாபகம் சறுக்கினால் உங்கள் இரண்டாம் கேள்விக்கு புதிய விடை கிடைத்துவிடும். அதனால், முக்கியமான ஒருவரை மட்டும் சொல்லிவிடுகிறேன். தெளிவத்தை ஜோசப்! எனது 'கருகிய காலத்தின் நாட்குறிப்புகள்' நூல் பற்றி வீரகேசரியில் அவர் எழுதிய பத்தியை வாசித்தபோது உரோமம் சிலிர்த்தது. இப்பொழுது இதை சொல்லிக்கொண்டிருக்கும் போதும்தான். இங்கே, அதே உரோமம்..!!

05. நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
 பலரைப்பற்றி...... எழுத ஆசைதான்! குப்பையை அழகிய மெத்தையென்று நிலை-முரண் விவரணம் எல்லாம் அடித்துவிடத்தெரியாத என்னைப்போன்றவர்களுக்கு எதற்கையா இந்த வேலை?

06. யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்
என் எழுத்துக்களை வாசித்தபின்னர்கூட குறட்டை விட்டு நின்மதியாக தூங்குகிறார்களே! அவர்களைத்தான்!!

இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
7. அண்மையில் ஈழத்தில் வெளிவந்த ஒரு கவிதைத் தொகுப்பு. அதை நேர்கோட்டில் எழுதி ஒரு கட்டுரைத்தொகுப்பாக போட்டிருக்கலாம் என்று தோன்றியது. கவிதையை தேடி தேடி தடவிக்கொண்டுபோய் கடைசியில் பின்அட்டையில் மோதி கீழே விழுந்ததுதான் மிச்சம்!

இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
8. ஜே கே இன் 'என் கொல்லைப்புறத்து காதலிகள்'. (அண்மைக்காலத்தில் வெளிவந்த நமது படைப்பாளிகளின் நூல்களுக்குள்..)

உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
9. யாத்ரா (காரணம் நான் கவிதைகளின் இரசிகன்)

உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
10. உண்மையான எழுத்து வணிகம் விசித்திரமானது. இங்கு உற்பத்திப்பொருளின் விலையை நுகர்வோனே தீர்மானிக்கவேண்டும்! சரி, சொல்லுங்கள், என்னுடைய ஒரு கவிதைக்கு எத்தனை டொலர்??

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
11. விதியாதர் சுராஜ் பிரசாத் (2001) இற்கு கொடுக்கப்பட்டிருந்தால், எதற்கு நம்ம சாருவிற்கு ஒருதடவையாவது கொடுத்துப்பார்க்கக்கூடாது என்று மட்டமாக யோசிப்பதோடு முடிந்துவிடும் நோபல்பரிசு பற்றிய எனது அறிவு. அவ்வளவுதான்! நோ மோ குவஷன்ஸ்!

உங்களக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
12. எந்த மொழியிலும் இன்னும் 'பாண்டித்தியம்' வரவில்லை! ஆமா, தமிழிலும்தான்!

முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
13. சிலர் எழுதுகிறார்கள். சிலர் கிறுக்குகிறார்கள். இன்னும் சிலர் வாந்தியெடுக்கிறார்கள். வாந்தியெடுப்பவன் நூற்றுக்கணக்கில் ஹிட்ஸ் அடிக்க நன்றாக எழுதுபவன் ஐந்து பத்து அவமானத்தோடு அந்த 'லொஜிக் முரண்'ஐப் பார்த்து கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கிறான். நியமத்தின்படி, தரமான எழுத்துக்களை இணையத்தில் தேடி கண்டடைபவன் இணைய பாக்கியவான்.

உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
14. சுருக்கமாக.... 'பல்கலைக்கழகம்'!

எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
15. பிரயோசினமாக இலக்கியத்தில் எந்த ஆணியையுமே பிடுங்காமல் கொழும்பு தமிழ்ச்சங்க நிகழ்வுகளில் முதல் வரிசையில் வந்து அமர்ந்தபடி தாடியைத் தடவிக்கொடுக்கும் 'இலக்கியவாதி(கள்)' முகத்தில்.
அல்லது,
முஸ்டீன், கொஞ்சம் முகத்தைக் காட்டுங்கள். 'டிஸ்யூம்ம்..!'

மனதிற் பட்டது - 08 - புகழும் புரிந்து கொள்ளுதலும்


தமிழ்மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் எழுதும் தொடர்  - 08


தம்மைப் பிறர் புகழ வேண்டும் என்பது பொதுவாக மனிதர்களின் எதிர்பார்ப்பு. இது மனிதப் பண்பு இயல்யானது. ஆனால் சிலருக்கு அதுவே வியாதி. புகழுக்குரியன் தான் மட்டு;மதான் என்பது போல சீன் போட்டுக் கொண்டு இருப்பார்கள். அவர்களுடன் கதைக்கும் போது தம்மைப்பற்றி மட்டுமே கதைப்பர். தனது சாதனைகளை இழுத்துவிடுவதில் அவர்களுக்கு அப்படியொரு ஆத்ம திருப்தி. இத்தகையவர்களுக்கு முன்னால் பிறரைப் புகழும் போது பெரும்பாலும் பேச்சைத் திசை திருப்பி விடுவார்கள். அத்தகைய வியாதிக் காரர்கள் அழிந்து போவதும் இந்தப் புகழால்தான்.

எழுத்துலகைப் பொறுத்தமட்டில் எல்லோரது எழுத்துக்களும் புகழுக்குரியதாக இருக்காது ஆனால் தரமான எழுத்துக்கள் ஒருபோதும் அதற்குரிய மதிப்பிலிருந்து நீங்கிப் போகாது. அந்த யதார்த்தத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அன்னம் ஒரு போதும் காக்கையாகிட முடியாது. அது போல காக்கை ஒரு போதும் புறா ஆகிடவும் முடியாது. அன்னத்தால் அவ்வளவு உயரப் பறக்க முடியாது ஆனால் காக்கையால் முடியும். ஒரு பெருங் காற்றை எதிர்கொண்டு காக்கையால் பறக்க முடியாது ஆனால் புறாவினால் முடியும். ஆளுக்காள் இயல்பும் தரமும் வேறுபடும் அது போல ஒருகாகம் செத்துவிட்டால் ஒரு கூட்டமே திரண்டு குரல் கொடுக்கும். ஒரு புறாக் கூட்டம் செத்தாலும் கூட புறாக்கள் அப்படி ஒன்று சேர்ந்து துக்கம் அனுஷ்டிப்பதில்லை. 

அதிசயமாக புகழை விரும்பாத சிலர் இருக்கின்றார்கள். தன்பாட்டில் காரியமாற்றுவார்கள். வீணுக்காக யாரையும் எதற்குமிழுக்காதவர்கள். யாரிடமும் அவர்கள் புகழுக்காக ஏங்கி நிற்கமாட்டார்கள். அவர்கள் நியாயமாக தக்குச் சேரவேண்டிய ஒன்றுக்காகப் போராடும் குணமுடையவர்கள். தரமற்ற ஒன்றை வெறும் அடைவுகளுக்காகப் உயர்த்திப்பிடித்து பெயர் பெற வேண்டும் என்று அவர்கள் நினைக்கமாட்டார்கள். அவர்களுடைய தராசு கறாராக இருக்கும். இத்தகையவர்களால்தான் இலக்கியத்தின் தராதரம் ஓரளவுக்கு சரியாகப் பேணப்படுகின்றது.

இன்னும் சிலர் இருக்கின்றார்கள் அவர்களது வேலையே பிறருக்கு முதுகு சொரிவதுதான். அந்தச் சொரிதலின் உச்ச கட்டத்;தை இலகுவாகவ விளங்கப்படுத்த இப்படியோர் உதாரணத்தைச் சொல்ல முடியும். நேற்றுத்தான் கவிதை எழுதத் தொடங்கி இரண்டு கவிதைகள் எழுதியிருப்பார். அவரைப் போய் கவிச் சூரியன் என்றும் கவி சந்திரன் என்றும் கவித்தாரகை என்றும் போற்றிப் புகழ்ந்து விருது கொடுத்து பொன்னாடை போர்த்தி, தனது முகநூலில் நாலு வரியில் குறிப்பெழுதி, செல்பி உட்பட ஐந்தாறு போட்டோக்களை அப்டேட் செய்து கவிச் சக்கரவர்த்தியாக்கி விடுவார்கள். பதிலுக்கு அவர்கள் சும்மா இருப்பார்களா!! அவர்கள் ஆற்றும் எதிர்விணையோ ஐயகோ காண்பதற்குக் கோடிக் கண்கள் வேண்டும். 

இன்னும் சிலர் தம்மைப் புகழவும் தமது இருப்பை அடிக்கடி நிலைநிறுத்திக் கொள்ளவும் சிலரை வளர்த்தெடுப்பார்கள். தத்துப்பிள்ளைகளின்படைப்புக்களை பிறருக்குத் தரமானது என்று பரிந்துரைப்பார்கள். அடிக்கடி அவர்களின் பெயர்களையே சிறந்த இலக்கியவாதிகளுககு உதாரணமாக்கி விடுவார்கள். அவர்களின் படைப்புக்களை அடிக்குறிப்புடன் அனுப்பியும் வைப்பார்கள். அதை உரியவரின் காதுக்குக் கொண்டு போய்ச் சேர்த்து உனக்காக நான் என்னமாப் பாடுபடுகின்றேன் என்று பார்த்துக் கொள் என்பது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி விடுவார்கள். இது ஆற்றாமையால் இயலாமையால் ஏற்படுகின்ற வருத்தம். அந்த வருத்தத்திற்கு மருந்தே அவர்கள் ஆகா ஓகோ என்றுபுகழப்படுவதுதான். 

தரமான ஒரு படைப்பை வாசித்து இன்புற சிலர் அனுப்பி வைப்பார்கள். அது வேறு விடயம். அத்தகையவர்கள் மேலேசொன்ன வருத்தக்காரர்களுக்கு மெலே இருக்கும் பந்தியில் சொல்லப்பட்ட நபர்கள் செய்யும் பணி. அதில் எத்தகைய எதிர்பார்ப்பும் இருக்காது. புள்ளி பெறும் திட்டமும் இருக்காது. 

இந்த விடயங்களைப் புரிந்து கொள்வதில்தான் சில விடயங்கள் தங்கியிருக்கின்றன. அவற்றைப் புரிந்து கொள்ளத் தவறும் பட்சத்தில் சொல்வதகொன்றும் இருப்பதில்லை.  சரியான இந்தப் புரிதல்தான் தரமான ஒரு இலக்கியவாதியின் அடையாளமாகக் கூட இருக்க முடியும். அந்தப் புரிதல் பல சித்து விளையாட்டுக்களில் இருந்து காப்பாற்றும். 

ஒரு புத்தகத்தைப் படித்தால் அது குறித்து ஒரு குறிப்பெழுதினால் என்ன என்று தோன்றும்போதே அது குறித்து எழுதிவிடுவோம். அதில் ரசனை இருக்கும் ஆனால் வெறுமனே வீம்புக்காக உசுப்பேற்றல் இருக்காது. எல்லாப் புத்தகங்களுக்கும் அப்படி எழுதத் தோன்றுவதில்லை. சிலது வெகு சிலதே நமது கவனத்தை ஈர்க்கும் அத்தகைய எழுத்தாளர்களுடன் நட்பைப் பேன மனது ஆவல் கொண்டிருக்கும். அந்த நட்பில் அழகான புரிதல் இருக்கும். எந்த எதிர்பார்ப்பும் இருக்காது. 

இஸ்லாமிய ஆட்சியின் மூன்றாவது அரசுத் தலைவராக வந்தவர் உமர் இப்னு கத்தாப் அவர்கள். அவர் ஒரு விடயம் சொன்னார்
'ஒருவன் உன்னை முகத்தில் புகழ்கின்றான் என்றால் நீ சுதாகரித்துக் கொள், முகத்தில் புகழ்பவனை நம்பாதே'
வஞ்சமிக்க அந்தப் புகழில் உண்மை இருக்காதுதானே. 

நேர்மறை 15 கேள்விகளுக்கு காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் பதில்கள்

தமிழ் மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் இடம்பெறும் நேர்மறை 15 கேள்விகளுக்கு ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் பதில்கள் 

01.   உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
என்னிலும் சிறந்தவர்களுடன் என்னை ஒப்பிடும்பொழுது நானொரு சாதாரணனே

02.   நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?
நான் யாருடனும் வலிந்து முரண்பட்டதில்லை. வீணே முரண்பட்டவர்களை விட்டதுமில்லை

03.   இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?
பிறரிடையே எற்பட்ட முரண்பாடுகள் பற்றி எதுவும் கருத்துரைக்க நான் விரும்பவில்லை என்னுடன் முரண்பட்ட சில முக்கிய நிகழ்வுகளில், என்னிலும் சிறந்த அறிஞரான வித்துவான் எம்.ஏ,றகுமானுடன் அவர்களுடன் நடந்த யாப்பிலக்கணச் சமரைச் சொல்லலாம். அது பேராசிரியர் கா.சிவத்தம்பி பற்றி நானெழுதிய கட்டளைக் கலித்துறை பற்றியது. பல வாரங்கள் நவமணியில் தொடராக வெளிவந்தது, இறுதியில் அவர் தன் தவறை மறைமுகமாக ஏற்றுக்கொண்டார்

04.   உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
இதற்கான பதில் மிக நீளமானது, அவை இறைவன் நாடினால் விரைவில் நூலாக வெளிவரவுள்ளது. இதுவரையில் இறுதியாக பன்மொழிப் புலவர் சோ.பத்மநாதன்(சோ.ப) அவர்கள் எனது எல்லாள காவியத்திற்கு எழுதிய சாற்றுக்கவி பத்துக் கட்டளைக் கலித்துறைகள்

05.   நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
நிறையவே செய்துள்ளேன். இங்கு பதிவிட பத்திரிகை இடந்தரமாட்டா.

06. யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்
முதவில் எனக்குத் தமிழ் கற்றுத்தந்த எனது தந்தையாரை அடுத்து என்னை இலக்கிய உலகுக்கு அறிமுகஞ்செய்து என்னை வளர்த்த ஐயா எஸ்.டி.சிவநாயகம் அவர்களை

07.   இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
என் இளமைக் காலத்தில் நானோரு தீவிர வாசகனாக இருந்தேன். அதனால்தான் எனக்கு வார்த்தைகள் வாலாயமாகின. அனைத்தும் இனித்தன. இப்போது என் வாசிப்பு குறுகிப் போனதால் கருத்துரைக்க இயலவில்லை.

08.   இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
அந்தக் காலத்தில் நா.பார்த்தசாரதியின் பொன்விலங்கு,

09.   உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
அப்போது யாத்ரா. இப்போது ஞானம்

10.   உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
அதனை மதிப்பிடுவது விற்பனையைப் பொறுத்ததாயின் நான் பல இலட்சங்களை இழந்துள்ளேன். சில நூல்களின் பிரதிகள் கூட என்னிடமில்லை. இருப்பினும் தமிழ் இலக்கிய உலகில் என் படைப்புக்களால் என் பெயர் பதிவாகி இருப்பது என்னளவில் விலைமதிப்பற்றது,

11.   இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்படாதிருந்தால் ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலிக்கும் அது கிடைத்திருக்காது. மேலும் விபரம் வேண்டியதில்லை.

12.   உங்களக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
பாண்டித்தியம் என்று சொல்ல எதிலும் இல்லை. சிறிது தமிழ் தெரியும்.

13.   முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
நல்லவையும் உண்டு. குப்பைகளும் உண்டு. தேர்ந்தெடுப்பது ஒவ்வொருவரதும் வேண்டுதலைப் பொறுத்தது, 'மணற்சோற்றில் கல்லாராய்வதானாலும் அதனிலும் திருத்தமுண்டு' என ஒரு அறிஞர் சொல்லி இருக்கின்றார்.

14.   உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
மனைவியுடன், மூன்று ஆண்கள், ஒரு பெண் என நான்கு மக்கள். நான்கு மருமக்கள், ஏழு பெண்கள் மூன்று ஆண்களுமாகப் பத்துப் பேரப்பிள்ளைகள்.

15.   எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
சிலரின் முகங்களில் மூக்குடையக்
குத்தியிருக்கின்றேன். கையாலல்ல. கவிதையால். அவை பலரறிந்த இரகசியம். அதில் ஒன்று பல ஆயிரம்பெயர் 'லைக்' பெற்றது. இப்போதைக்கு யாருமில்லை.

மனித வேட்டையும் புலனாய்வு இயக்கங்களும் - தொடர் - 07


தமிழ்மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் எழுதும் தொடர்  - 07
உலகில் மனிமனைக் கொல்வதற்கென்றே பல ட்ரில்லியன் பணம் செலவு செய்யப்படுகின்றது. மனிதனை மனிதன் கொல்வதை ஒரு போதும் நிறுத்த  முடியாது. மனிதனை மனிதன் கொன்று கொண்டே இருப்பான் அதுதான் நியதி. அதை யாரால்தான் மாற்ற முடியும்? யாராலும் முடியாது. மனித உரிமைகளுக்கு எந்தப் பெறுமானமும் இல்லை. எல்லாம் வெறும் வாய்ப் பேச்சு மட்டுமே. 

ஒரு நாடு தனது அதிகாரத்தை நிலை நாட்டிக் கொள்வதற்காக பல மில்லியன் பேரைக் கொன்று குவிக்கும். அதற்குக் கணக்கு வழக்குக் கிடையாது. ஒரு நாட்டின் இறைமையைத் தக்க வைக்க அந்நாடு தனது மக்களையே லட்சக் கணக்கில் கொல்லும், ஒரு நாட்டின் தலைவன் தனது அதிகாரத்தைத் தக்க வைக்க ஆயிரக் கணக்கில் கொல்வான், ஓர் அமைப்பு, ஓர் இயக்கம், ஒரு குழு, ஒரு தனிமனிதன் என்று அனைத்துத் தரப்பும் தமது தேவைக்கேற்ப பிறமனிதர்களைக் கொன்று கொண்டேதான் இருப்பர். இந்த நியதியை யாரால் மாற்ற முடியும். 

நியாயத்துக்காகவும், அநியாயமாகவும், கொள்கைக்காகவும் அதல்லாமலும் கொலை இடம்பெற்றுக் கொண்டேதான் இருக்கும். சட்டம் ஒற்றைக் கண் குருடான காகம் மாதிரி ஒரு பக்கத்தைப் பார்ப்பதே இல்லை. ஒரேயொரு பக்கத்தை மட்டும் தனது வசதிக்கேற்ப பார்த்துக் கொள்கின்றது. 

ஆயுத உற்பத்தியாளன்தான் உலகின் கொடூரமான கொலையாளி, அந்தக் கொலையாளியின் வழிகாட்டலில்தான் இராணுவம் என்ற கொலைகார கூட்டம் மக்களைக் கொன்று குவிக்கும், போராட்டம், விடுதலை, சத்தியத்தைப் பாதுகாக்க என்று எந்தப் பக்கத்தை எடுத்தாலும் சரி, ஏன்! அநியாயமாகத் தீர்ப்புச் சொல்லும் நீதிபதி கூட ஒரு கொலைகாரன்தான். 

கொலைகளை நியாயப்படுத்தியவர்கள் தப்பித்துக் கொள்வார்கள், நியாயப்படுத்த முடியாதவர்கள் மாட்டிக் கொள்வார்கள். மனசாட்சி ஒரு போதும் சட்டத்திற்கு முன்னால் சத்தியமாவதில்லை. சாட்சிகள் மட்டும்தான் எப்போது சத்தியமாகும். அது பொய் சாட்சியாக இருந்தாலும்கூட

உலக நாடுகளின் சர்வதேசப் புலணாய்வுக் கட்டமைப்பையும் அவர்களின் இங்கு தளத்தையும் புரிந்து கொண்டால் மட்டுமே ஒரு கொலையை, அல்லது மனித குலத்துக்கு அச்சுருத்தல் தரும் மாபெரும் தாக்குதல்களை விளங்கிக் கொள்ள முடியுமாக இருக்கும். 

இஸ்ரேலின் மொசாட், அமெரிக்காவின் சீஐஏ, பிரிட்டனின் எம்16, பாகிஸ்தானின்  ஐஎஸ்ஐ, இந்தியாவின் ரோ, பிரான்சின் டீஜிஎஸ்ஈ, ரஸ்யாவின் எஸ்வீஆர்-ஆர்எப், போன்ற புலனாய்வுப் பேரியக்கங்களை விளங்கிக் கொண்டால்தான் உலகில் நடக்கும் மனித வேட்டைக்குப் பின்னால் புதைந்திருக்கும் உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியும். 

ஓர் இலக்கியவாதி ஓர் எழுத்தாளன் கட்டாயம் இவற்றைத் தெரிந்திருக்க வேண்டும் இல்லாத போது ஒரு கவிதையால் கூட அவன் உண்மையைப் புறந்தள்ளி பொய்க்கு முன்னால் சரண் அடைந்து மனித குலத்துக்குத் துரோகமிழைத்திடக் கூடும். 

உலக மக்களை வாழ வைப்பதிலும் பார்க்க சாகடிப்பதற்கே பல நாடுகள் பெருந்தொகைப் பணத்தைச் செலவு செய்கின்றன. சில மேற்கு நாடுகள் மனிதர்களைக் கொன்று குவிப்பதற்காக விற்கும் ஆயுத விற்பனையால் வரும் லாபப் பணத்தில்தான் மனித உரிமைகளையும் மனித விழுமியங்களையும் அற நெறிச் சட்டங்களையும் மனிதத்தையும் சுதந்திரத்தையும் பற்றிப் பேசுகின்றன. 

அல்குரஆன் ஒரு கதை சொல்கின்றது
மனிதனைப் படைப்பதற்கு முன்னர் இறைவன் வானவர்களைப் பார்த்துச் சொன்னான் 'நான் எனது பிரதிநிதியாக மனிதனை உலகில் படைக்கப் போகின்றேன்' அப்போது வானவர்கள் 'இறைவா இரத்தம் ஓட்டக் கூடிய மனிதனையா படைக்கப் போகிறாய்? உன்னை வணங்க நாங்கள் போதாதா? என்று பதிலுக்குக் கேட்டார்கள்.

இந்த உலகம் அழியும் வரை இனத்தால், மதத்தால், நிறத்தால், மொழியால் குலத்தால் கோத்திராத்தால் ஆளையாள் மாறிமாறி ஏதாவதொன்றைக் கொள்கையாக்கி கொலை செய்து கொண்டே இருப்பர்.

ஒரு கட்டத்தில் இதெல்லாம் புரிந்து கொள்ள ஞானம் தேவைப் படும்.

Saturday, January 2, 2016

நேர்மறை 15 கேள்விகளுக்கு எழுத்தாளர் சுதாராஜ் பதில்கள்


தமிழ் மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் இடம்பெறும் நேர்மறை 15 கேள்விகளுக்கு எழுத்தாளர் சுதாராஜ் அவர்களின் பதில்கள் 

1. உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
ஆயிரம் டொலர் மனிதன்

2. நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?
முரண்பாடா.. அப்படி ஏதும் யாருடனும் இல்லையே.. (எஸ்கேப்!)

3. இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?
இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளும் அதையொட்டிய வாக்குவாதங்களும் ஒருவித இலக்கிய ரசனையைத்தரும் புத்தாக்கங்களைப்போலவும், பொழுதுபோக்குக்குரிய வேடிக்கையான நிகழ்வுகளாகவும் உள்ளன.

4. உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
இந்த ஒரு நிமிடத்துக்குள்; அவர்களையெல்லாம் நினைவெடுத்துக் குறிப்பிட்டுக் கூறமுடியவில்லை.

5. நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
சில இலக்கிய நண்பர்களின் அன்பு வேண்டுகோளைத் தட்டமுடியாது அவர்களது படைப்புகளைப்பற்றி எழுதியிருக்கிறேன்.

6. யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்?
காலமான சிரித்திரன் ஆசிரியர் சுந்தர் எனப்படும் திரு சிவஞானசுந்தரம் அவர்கள். அவர் எனது ஞானத்தந்தை.

7. இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
ஓரிரு பக்கங்களை வாசிக்கும்போதே நல்ல புத்தகங்கள் உள்ளிளுத்துவிடும். மற்றவை ஒரு பக்கமாகப் போட வைத்துவிடும். அதனால், இதெல்லாம் ஒரு புத்தகமா எனச் சினப்படும் கட்டத்துக்குள் போனதில்லை.

8. இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
எனது ஒவ்வொரு புத்தகங்களும் அச்சாகி வந்து முதன்முதலாகக் கையிலெடுத்து வாசிக்கும்போது!

9. உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
மல்லிகை.

10. உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
கதைக்கும் கவிதைக்கும் விலை போட்டால் யார் வாங்கி வாசிக்கப்போகிறார்கள்? அவை விலைமதிப்பற்றவை! (படைப்பவனுக்கும் வாசிப்பவனுக்குமுரிய இரு அர்த்தங்களிலும்.)

11. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
நல்ல விஷயம். பரிசு போதுமானளவு பெரிய தொகை. தமிழ் இலக்கியங்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்பில்லையாதலால் இலக்கிய நணபர்களுக்கு (இங்குள்ள சில பரிசுகள் விருதுகளுக்கு நேரும் கதிபோல) போட்டுக் கொடுக்கும் சாத்தியமும் இல்லை!

12. உங்களக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
பாண்டித்தியம் இல்லை.. தமிழ் ஆங்கிலம் சிங்களம் ஆகிய மொழிகளில் பரிச்சயம் உள்ளது.

13. முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
புத்தகங்களைக் கையிலெடுத்து வாசிக்க விரும்பாத புதிய இளசுகளுக்கும் சில பெரிசுகளுக்கும் இடவும் தொடவும் படவும் வசதிப்படும் ஊடகம். சில படைப்புக்கள் சிறு பதிவுகளாக இருந்தாலும் நல்ல கருத்துக்களாகவும் ரசனைக்குரியதாகவும் போகிற போக்கில் வாசித்துவிடக்கூடியவையாகவும் உள்ளன. எதிர்காலத்தில் இவற்றினூடு புது இலக்கிய வடிவங்கள் பரிணமிக்கவும்கூடும். நூறு மலர்கள் மலரட்டும்! நல்லவை நிலைக்கும்.. அல்லவை போகும்!

14. உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
ஒரே ஒரு மனைவி. (கவனியுங்கள்.. ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணு!), பிள்ளைகள்.. திருமணமாகிவிட்ட பெண்கள் இருவர், படித்துக்கொண்டிருக்கும் ஆண்கள் இருவர், பிள்ளைகளைப்போல அன்பும் ஆதரவும் கொண்ட மருமகன்கள் இருவர், பேரர்கள் இருவர்.

15. எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
வேறு யாருக்கு? உங்களுடைய முகத்திற்தான்! இப்படி இடக்கு மடக்கான கேள்விகளைக் கேட்டுக் குழப்பிறீங்களேம்மா.. (என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா... ஸ்டைலில்!)

மனதில் பட்டது - 06 - மூத்த எழுத்தாளர்கள்


தமிழ்மிரர் பத்திரிகையின் இலக்கியப் பக்கத்தில் எழுதும் தொடர்

எனக்குள் இன்னும் கனன்று கொண்டிருக்கும் ஒரு கேள்வி தான் இந்த மூத்த எழுத்தாளர் என்பது யார்? இந்த மூத்த கூட்டத்தை யார் தீர்மானிக்கின்றார்கள்?
வயது போன எல்லோரும் மூத்த எழுத்தாளர்களா? அப்படியென்றால் இள வயதுக்காரர்கள் இளைய எழுத்தாளர்கள் அப்படியா?

ஒருவர் எழுதத் தொடங்கியதில் இருந்து அதைக் கணிப்பதா அல்லது புத்தகம் வெளியிட்டதில் இருந்து அதைக் கணிப்பதா? அல்லது ஒரு எழுதிய எழுத்துக்களின் அளவைக் கொண்டு கணிப்பதா அல்லது எழுத்துக்களின் தரத்தைக் கொண்டு கணிப்பதா?

பொதுவாக வயது போனவர்கள்தான் மூத்தவர்கள். இதுதான் நடைமுறையில் இருக்கும் விடயம். அரசாங்கம் கூட 60வயது தாண்டினால் முதியவர்கள் அந்தஸ்துக் கொடுத்து எல்லாவற்றிலும் முன்னுரிமையும் அளிக்கின்றது. அப்படிப்பார்த்தால் 60 தாண்டியவர்கள் எல்லாம் சிரேஸ்ட பிரஜைகள் போல மூத்த எழுத்தார்கள் என்று எடுத்துக் கொண்டால் அங்கும் ஒரு பிரச்சினை இருக்கின்றது.

ஒருவர் தனது 16வது வயதில் எழுதத் தொடங்குகின்றார் எனின் 40 வயதாகும் போது அவரது எழுத்து அனுபவம் 24 வருடங்கள் அதே போல 30 வயதில் ஒருவர் எழுதத் தொடங்கினால் அவரது எழுத்து அனுபவம் 10 வருடங்கள்தான். இதில் யார் மூத்த எழுத்தாளர்.

ஒருவருக்கு வயது 75 அவரது வாழக்கையில் வெறுமனே பதினைந்து கதைகள்தான் எழுதி இருக்கின்றார். அதில் ஒரேயொரு கதைதான் உருப்படியானது, அனைத்தையும் சேர்த்து ஒரேயொரு தொகுதி போட்டிருக்கார் அதன் பின்னர் தனது இருப்பைக் காட்ட மறுபிரசுரம் வேறு. பின்னர் அவர் எழுத்து சூனியம் இப்போது இவர் மூத்த எழுத்தாளர் என்றும் இலக்கிய மேதை என்றும் சிறுகதை அறிஞர் என்றும் தன்னை அடையாளப்படுத்துகின்றார்.

இன்னொருவர் வயது வெறும் 40 தான் முப்பதுக்கு மேல் கதைகள் ரெண்டொரு நாவல் கவிதைகள் வேறு இப்படி எழுதித் தள்ளியிருக்கின்றார் புத்தகமான மூன்று அல்லது நான்கு தொகுதிகள்தான். ஒப்பீட்டளவில் நல்லகதைகள் அதிகம். முன்னயவரோடு ஒப்பிடும் போது எழுத்துலகத்தில் அவரது காலமும் வெகு குறைவு.

இன்னொருவர் மேற்சொன்ன இருவரைவிடவும் வயதில் குறைவு வெறும் 30தான் ஆயினும் 15ற்கு மேல் புத்தகங்கள் வெளியிட்டிருக்கின்றார்.  மொழிபெயர்ப்பு, ஆய்வு, கவிதை சிறுகதை, கட்டுரை என்று எழுத்து மயம் ஆனால் கனதி குறைந்த எழுத்து. குறிப்பிட்டுச் சொல்லும்படி பெரிதாக ஒன்றுமில்லை.
இவர்களில் யார் மூத்தவர்?

நானறிந்த ஒருவர் 45வயதில் மிக அன்மைக்காலமாக கவிதை எழுதத் தொடங்கியிருக்கின்றார். சுமாரான கவிதைகள்தான் அவருடைய நேர்காணல் ஒன்றை இணையத்தில் வாசிக்கக் கிடைத்தது. அதன் முதல் பகுதியில் மூத்த இலக்கியவாதிகள் தனது எழுத்துக்களைக் கண்டு கொள்வதில்லையென்றும், விமர்சிக்கவில்லையென்றும் ஆதங்கப்படுகின்றார். ஆயினும் தான் அதனைப் பற்றிக் கவலை கொள்ளாமல் தொடர்ந்தும் எழுதுவதாகச் சொல்கின்றார். இறுதியில் இளைய எழுத்தாளர்களுக்கு என்ன சொல்லப் போகின்றீர்கள் என்று ஒரு கேள்வி அதற்கு அவர் மூத்த இலக்கியவாதியாகப் பதில் வேறு...முடியல

தமிழ் சங்கத்தில் வடலியின் ஒரு சிறுகதைத் தொகுதி வெளியீட்டுவிழாவில் உமா வரதராஜன் மூத்த இலக்கியவாதிகள் என்ற விடயத்தில் அவதானிப்புக்குரிய கேள்விகள் சிலதை முன்வைத்துப் பேசியது எனக்கு நினைவிருக்கின்றது.

சிரேஷ்ட விரிவுரையாளர், சிரேஷ்ட ஊடகவியலாளர் என்று நபர்களை அடையாளப்படுத்துவதற்கு ஒரு கால எல்லை, தராதரம், ஆளுமை வீச்சு, திறன் எனப் பல்வேறு விடயங்கள் தாக்கம் செலுத்துகின்றன. அது போல எழுத்துலகில் எது தாக்கம் செலுத்துகின்றது என்ற கேள்விக்கு கட்டாயம் பதில் காண வேண்டி இருக்கின்றது.

வாராவாரம் விருது கொடுத்து களைத்துப் போய் இருக்கும் இலக்கிய இயக்கங்கள் இந்த வகைப் பிரிப்பைச் செய்து ஒரு புத்தகமாகப் போட்டால் என்போன்ற நபர்களுக்கு ஆட்களைத் தேடிப்பிடித்து விளித்துப் பேச எவ்வளவு இலகுவாக இருக்கும்.
வாழ்க சிரேஷ்ட எழுத்தாளர்கள்
வாழ்க மூத்த எழுத்தாளர்கள்

மனதில் பட்டது - 05 - ஆரோக்கியமும் கலைத்துவமும்


தமிழ்மிரர் பத்திரிகையின் இலக்கியப் பக்கத்தில் எழுதும் தொடர்

வாய்விட்டுச் சிரித்து மகிழும் சங்கதிகள் நிறைந்த உரையாடல் இலக்கியவாதிகளுக்கு மட்டுமே பெரிதும் அமைகின்ற ஒரு விடயம். தமிழ்மிரருக்காக இந்த இலக்கியப் பக்கத்தை ஆரம்பிக்க முன்னர் என்னோடு நெருக்கமாகப் பழகும் பலரிடம் ஆலோசனைகள் கேட்டேன். அத்துடன் சில நிகழ்வுகளையும் பறிமாறிக் கொண்டேன். அப்போதுதெல்லாம் சிரிக்க முடிந்தது அதுவும் வாய்விட்டு

இலக்கியப் பக்கத்தைக் கொஞ்சம் வித்தியாசமாச் செய்யலாம் என்று நினைக்கிறன். உங்களுக்கு எதாவது ஐடியா இருக்கா? எப்பிடிச் செஞ்சா நல்லா இருக்கும்? என்று கேட்டேன்

இலக்கியம் என்டு பேரப் போட்டுவிட்டு அப்பிடியே வெறுமையா விடுங்களம் அதவிட யாரால வித்தியாமாச் செய்ய முடியும். என்று பதில் சொன்னார்.
இதில் வெறும் சிரிப்பு மட்டுமல்ல இப்போது இலக்கியம் என்று படைக்கப்படும் பலதையும் கூர்ந்து நோக்கும் போது இலக்கியப் பக்கம் வெறுமையாக வந்தால்தான் சரியாக இருக்கும் என்றும் சிந்திக்கத் தோன்றியது. 
நேர்மறை என்று தலைப்பு வைத்ததே எதையும் நேர்மறையாக விளங்கிக்கொள்ள வேண்டும் எதிர்மறையாக விளங்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே. வழமையான கேள்விகளில் இருந்து விலகி பஞ்ச் போல இருக்கும்படியாக எழுந்த 15 கேள்விகளையும் பலருக்கும் அனுப்பினேன். மிகச் சிலரைத் தவிர மற்றெல்லோரும் எதிர்மறையாகவே விளங்கிக் கொண்டார்கள். அக்கணத்தில் நேர்மறை என்பதுகூட அவர்களின் கண்களுக்குப் புலப்படவில்லை போலும். 

ஒரு கவிஞரிடமிருந்து இப்படி பதில் வந்தது.
மன்னிக்க வேண்டும் முஸ்டீன் இப்போது ஆரோக்கியமான கருத்தாடல்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றேன், அதனால் இப்போதைக்கு உங்கள் கேள்விகளுக்குப் பதில் தர முடியவில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்

அன்று வீட்டுக்கு வந்த ஒருவரிடம் இந்தவிடயத்தையும் சொன்னவுடன் தடாலடியாக அவர் 'என்னது!! ஆரோக்கியமாமா..ம்;ஹ்.. நல்லா மரக்கறிலயும், இறச்சி முட்ட பாலும் சாப்பிடச் சொல்லி இருக்கலாமே அது ஆரோக்கியமா இருக்குமென்டு'

எனது கதைகளையும் இன்னும் சிலதையும் வாசித்துவிட்டு ஒருவர் 'உங்கட கதைகள்ல கலைத்துவம் இல்ல வெறும் தகவல்கள்தான் இருக்கு, வெறும் தகவல்கள் கொண்ட ஆக்கம் இலக்கியமாகாது. அதனால கொஞ்சம் கலைத்துவமா எழுதுங்க அப்பதான் கலர்புல்லா இருக்கும்' என்றார். 
இக்கருத்தை நண்பரிடம் சொன்னபோது 'கலர்புல்லா இருக்கனும்னா கலைத்துவமா இருந்தாச் செரி வராது மல்டிலக் பெய்ன்ட்ல வாங்கி நல்லா அடிச்சாத்தான் கலர்புல்லா இருக்கும் என்டு நீங்க சொல்லியிரிக்கலாமே' என்றாரே பார்க்கலாம் 

இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒருவர் கேட்டார் 'என்னப்பா கேள்விகளால கசக்கிப்பிழியிரிங்கலாமே' அப்போது எனக்குப் பக்கத்தில் நின்ற நண்பர் அவர் பேசி முடிவதற்குள் 'ஓஹ் அதென்ன பெரிய விசயமா? கசக்கும் போது கொஞ்சம் கூடுதலாச் சுருங்கியிருந்தா வண்ணான்கிட்டக் குடுத்து நல்ல அயர்ன் ஒன்டு போட்டு எடுத்திடலாம்' என்றார். 

பல பொழுதுகளில் நம்மில் பலர் மோதவிகளாகக் கருதிக் கொண்டு செயற்படுவோம் அப்போது கொஞ்சம் சீரியசாகக் கருத்துச் சொல்லத் தோன்றும் அப்போது இப்படி விழும் பதில்கள்தான் நம்மைச் சற்று நிதானிக்க வைக்கின்றன. அப்பதில்கள் சில அடிப்படைகளையும் அசைத்துப் பார்க்க வல்லவை.

வாய்விட்டுச் சிரித்தா நோய்விட்டுப் போகுமாமே 
பிறகென்ன சிரிக்க வேண்டியதுதான்.