Tuesday, June 5, 2012

குப்பை வாளி - சிறு கதை -


கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு 

மிக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. காத்திரமான வேலைகளைச் செய்ய வேண்டும், சவாலானதும் சிக்கலானதுமான எல்லா விசாரணைகளையும் வெற்;றிகரமாக முடித்து வைக்க வேண்டும், என்பதில் அதிகாரிகளின் கண்டிப்பும், கணிவும் வியக்க வைக்கத் தக்கது. ஏனைய பொலிஸ் நிலையங்களைப் போலல்லாது மிகவும் வித்தியாசமானது. இங்குள்ள ஒரு பொலிஸ் பொறுப்பதிகாரி அதுவும் ஒரு விசாரணையைப் பொறுப்பெடுத்துக் கொண்டால் ஒரு தேர்ந்த நடிகனாகி விடுவார், ஒரே நேரத்தில் ஹீரோவாகவும், வில்லனாகவும், கொமடியனாகவும் மாறிமாறி அவர் எடுக்கும் அவதாரங்கள் ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யத்தக்கது. கொஞ்ச நேரத்தில் விசாரணைக் கைதியின் மனதில் அதிகாரி குறித்துத் தோன்றும் ஒரேயொரு விடயம் இவரு நல்லவா? கெட்டவரா? என்பதுதான்.  
நான் தடுப்புக் காவலுக்கு வந்து ஒரு மாதமாகிறது. எழுதுவதையும் வாசிப்பதையும் இறைவனை வணங்குவதையும் விடுத்து, இன்னொரு வேலையும் எனக்கு பிரதானமானதாக இருந்தது, அதுதான் புதினம் பார்ப்பது. 

இங்குள்ள ஒரு கடைநிலைப் பொலிஸ் சிப்பாய் முதல் உயர் நிலை அதிகாரி வரை ஒவ்வொருவரினதும் இயல்பை இப்படிப் பட்டதென்று எனது தொடர்ந்தேச்சையான அவதானிப்புக்குட்படுத்தி துல்லியமாக கணித்து வைத்திருக்கிறேன்.
எழுதுவதும் வரையறையற்று வாசிப்பதும் இரவு முழுதும் இறைவணக்கத்திலீடுபடுவதும் எனக்கு மட்டும் கிடைத்த விஷேட சலுகை, அதை வைத்து தப்பாக எல்லாவற்றையும் எடை போட்டுவிடக் கூடாது, மிக மிகக் கேவலமாகக் கையாளப்படும் பல விசாரணைக் கைதிகளும் இருக்கிறார்கள்.

இன்றைய இலங்கைச் சூழ்நிலையில் ஊஊனு : ஊழடழஅடிழ ஊசiஅந னiஎளைழைn என்றால் ஒரு தனி மரியாதையும் மதிப்பும் இருக்கிறது. அதற்குப் பிரதான காரணம் அவர்களின் செயற்பாட்டு வீரியம். 

கொழும்பை அச்சுறுத்திய மாபியாக்களையும் பாதாள உலக கோஷ்டிகளையும் போதைப்பொருள் விற்பனை ஜாம்பவான்களான சண்டியர்களையும் என்கௌன்டர் மூலம் போட்டுத்தள்ளி கொழும்பை சுத்தப்படுத்திய பெருமை இவர்களுக்குரியது. இப்போது கொழும்பில் சண்டியர்கள் ரொம்பவும் குறைவு. விஷயம் தெரியாத ஓரிருவர் எங்காவது மூலையில் அல்லது முடுக்கில் சண்டித் தனம் காட்டிக்கொள்வர். அதுதவிர வெளிப்படையாக கிடையாது. ஒரு காலத்தில் கொழும்பை நினைத்தாலே கொலைநடுக்கம் மனதை ஆட்டிப் படைக்கும், அவ்வளவு அட்டகாசம், போதைப் பொருள் வியாரிகளும் பாவனையாளர்களும் தெரு முழுக்க ஆதிக்கம் செலுத்துவர். ஒரு வார்த்தை அவர்களையெதிர்த்துக் கதைத்திட முடியாது, பிரதான விநியேகஸதர்களாக ஆட்டோக்காரர்களும் பிரதான நுகர்வோராக மூட்டை தூக்கும் நாட்டாமிகளும் இரு பெரும் சக்திகளாக உருப்பெற்றிருந்தனர். அப்போதைய கொழும்பில் இந்த இரண்டு வகுப்பாரிடமும் யாரும் பகைத்துக்கொள்ள மாட்டார்கள். காரணம் ஒருவனுக்கு ஒன்று என்றால் எங்கிருந்துதான் அவனுக்கு ஆதரவாக ஆயிரம் பேர் ஒரு நொடியில் ஒன்று கூடுகின்றார்களோ என்று வியக்க வைக்கும். எல்லாவற்றினதும் அடிப்படை போதைப் பொருள் வலையமைப்புதான், இப்போது நிலைமை தலை கீழ் யாரும் பகிரங்கமாக சத்தம் போட முடியாது, அதன் முக்கிய காரணி கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுதான். இருந்த போதும் எவ்வளவுதான் இறுக்கமான சட்டங்களாலும் செயற்பாடுகளாலும் அவர்களைக் கட்டிப்போட்டாலும், போதைப்பொருள் விநியோகமும் பாவனையும் குறைந்த பாடில்லை. அதற்குப் பிரதான காரணம் அதன் ஏகபோக உரிமையாளர்கள் பாராளுமன்றத்தில் இருப்பதுதான். அதிகாரிகள் அவர்களுக்குத் திட்டிவிட்டு அமைதியாக இருப்பதை தவிர வேறு வழி கிடையாது.  

வழமை போல எல்லா வேலைகளையும் முடித்து விட்டுக் கொஞ்சம் புதினம் பார்க்கலாம் என்று என்னை தயார்ப்படுத்திக் கொண்டேன். 
'மக்களுக்கான சிநேகபூர்வமான தொழில் ரீதியான புகழ்வாய்ந்த பொலிஸ் சேவைக்காக'
என்ற மகுடம் தாங்கிய ஓரு விளம்பரப் பதாதை வரவேற்பறையையொட்டி சுவரில் தொங்கிக் கொண்டிருந்தது. இனி பொலிசார் மக்களின் நண்பன் என்பது அதன் பின்னால் தொக்கி நிற்கும் கருத்தியல் எதிர்பார்ப்பு, எவ்வளவுதான் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து பொலீஸ் தரப்பை மேம்படுத்தினாலும் பொலீசாரினால் சமநீதி செய்ய முடியாது வலியவனுக்கொரு அனுகுமுறை எளியவனுக்கொரு அனுகுமுறை இந்த சாபக்கேடு காலமெல்லாம் தொடரும் அவலம்தான். அதனால் எப்போதும் பொலீஸ் வில்லங்கம்தான். 
மொத்தமாக மூன்றே மூன்று தடுப்புக் காவல் கூடுகள். அதில் முதலாவது கூடு என்னுடையது. எல்லாவற்றையும் அவதானிப்பதற்கு மிக இலகுவானது. வாசலில் நிறுத்தப்படும் வாகனங்கள் தொடக்கம் வருவோர் போவோரையும் ஜன்னலில் உள்ள கண்ணாடிகளில் தெரியும் பிம்பங்கள் மூலம் மட்டிட்டுக்கொள்ள முடியும். எனக்கு நேரெதிரே தொலைத் தொடர்பாடல் பிரிவு அதனோடிணைந்தபடி நிருவாகப் பிரிவு, ஒருவர் நிருவாகப் பிரிவுக்குள் நுழைய வேண்டுமானால் சுற்றிவரப் போடப்பட்ட மேசைகளையும் அலுமாரிகளையும் பிரிக்கும் வண்ணம் இடையே உள்ள ஒருவர் மட்டுமே நுழைய முடியுமான இடைவெளி ஒன்றிருந்தது. அந்த இடைவெளியைத்தான் பெரும்பாலும் எல்லோரும் நிருவாகப் பிரிவுக்குச் செல்லப் பயன்படுத்துவர். அனைவருக்கும் அதுதான் இலகு வழி, அல்லது மூன்று தடுப்புக் காவல் கூடுகளையும் தாண்டி ஒரு 10 மீற்றர் நடந்தால் நிருவாகப் பிரிவுக்குள் நுழைய முடியும். 

ஆயினும் குறுக்கு வழிகளுக்கு எப்பவுமே மவுசு அதிகம். அதனால் 10 மீற்றர் கூட இங்கு பெருந் தூரம்தான். அதனால் எல்லோரும் பயன்படுத்துவது ஒருவர் மட்டுமே ஒரே நேரத்தில் செல்ல முடியுமான இந்த வழியைத்தான். அந்த வழிக்கு இடைவெளி விட்டதே எல் வடிவில் உள்ள இரண்டு பெரிய மரப்பெட்டிகள்தான். அது அதிபாதுகாப்புப் பெட்டி, எனது அவதானிப்பின்படி அதற்குள் இருக்கும் பிரதான பொருட்கள் ஐம்பது ரீ 56 ரக துப்பாக்கிகள், பன்னிரெண்டு கைத்துப்பாக்கிகள், அவ்வப்போதைய செலவுக்காகக் கொடுக்கப்படும் 'பெட்டி கேஷ்' மூன்று லட்சம் ரூபாய் உட்பட அதற்குள் அனைத்தும் இருக்கும். அதற்கு நடுவே அவற்றுக்குப் பொறுப்பான நபர் எப்போதும் அமர்ந்திருப்பார். அவரை அடுத்துத்தான் தொலைபேசிகளைக் கையாளும் நபர் அமர்ந்திருப்பார். அவர் மேசையில் மூன்று தொலைபேசிகள் உள்ளக அழைப்பு, மற்றும் ரேடியோ தொடர்பாடல் கருவிகள், அதனோடிணைந்த சுவரில் நிறைய 'ப்ளக் டொப்' தமது அலைபேசிகளுக்கு 'சார்ஜ்' பண்ணிக் கொள்ள அனைவரும் அதனைத்தான் பயன்படுத்துவார்கள். தொடர்பாடல் கருவிகளை கையாள்பவருக்கும் அதிபாதுகாப்பு பொருட்களைக் கண்காணிக்கும் 'ரிசேர்வ்' அதிகாரிக்கும் இடையேதான் அந்தக் குப்பை வாளி இருந்தது. அதற்கு ஓய்வே கிடையாது. எப்போதும் ஏதேனும் ஒரு குப்பை யாராலாவது போடப்பட்டுக்கொண்டே இருக்கும். 

எனது பார்வைக்கு அந்தக் குப்பை வாளியின் ஒரு சிறு பகுதி மட்டுமே தென்படும். நான் கால்களின் அற்புதமான நடமாட்டங்களை அவதானித்துக் கொண்டிருந்தேன்;. ஓவ்வொரு கால்களும் வித்தியாசமானவை. அதுபோல் ஒவ்வொருவரும் எடுத்துவைக்கும் ஒவ்வொரு எட்டுக்களும் வித்தியாசமானவை. ஓவ்வொருவரினது உயரமும் உடற் பருமனும் எட்டுக்களின் அல்லது அடியின் இடைவெளியின் அளவைத் தீர்மானிக்கின்றன. அதுபோல கால்கள் மனிதனைத் தாங்கி நிலைப்படுத்தியிருக்கும் அற்புதமான விசயத்தையும் வியப்போடு பார்த்துக்கொண்டு இருந்தேன். பெண்கள் கடந்து போகின்ற போது மட்டும் கொஞ்சம் சங்கடமாக இருக்கும். பார்வையை வேறு பக்கம் திருப்பவோ அல்லது தாழ்த்திக் கொள்ளவோ வேண்டிய கட்டாயத்தை ஏற்டுத்திவிடும் காரணம் அவர்கள் அணிந்திருக்கும் முழங்கால் வரை மட்டுமேயான குட்டைப் பாவாடை. அது ரொம்பவும் தான் சங்கடத்தை ஏற்படுத்தும்.  ஒரு நீண்ட காற்சட்டையாவது இவர்களுக்கும் சீருடையாக விதிக்கப்பட்டால் நன்றாக இருக்குமே என்ற உணர்வும் ஏற்படும். இப்படி புதினம் பாரத்துக் கொண்டிருக்கும் போது தான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. 

இரண்டு நீண்ட கால்கள் ஏதோ அவசரத்தில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தன. நிருவாகப் பிரிவுக்குள் போவதும் தொலைபேசி அலுவலரிடம் வருவதும் என்று வேகவேகமாக சுழன்று கொண்டிருந்த அதில் வலதுகால் வேகமாக பின்நோக்கி நகர்த்தப்பட குப்பை வாளியை பதம்பார்த்தது. வாளி அப்படியே சரிந்து விழுந்து உருண்டது. விழுந்தது பலமான அடி என்பதால் சற்றுச் சுற்றி சரியாக ஒருவர் மட்டுமே நுழைய முடியுமான அந்த வழியின் முடிவிடத்தில் வந்து நின்றது. குப்பைகள் சிதறியபடி சரிந்து விழுந்து கிடக்கும் குப்பை வாளியைக் கடந்து தான் செல்ல வேண்டும். எனக்குள் இரத்த வேகம் அதிகரித்தது. மிக சுவாரஷ்யமான அம்சம் ஒன்று பார்வைக்குத் தீனியாக கிடைத்தது. அந்த நீண்ட கால்களையுடையவர் குப்பை வாளி கவிழ்ந்ததைக் கருத்திற் கொண்டதாக தெரியவில்லை.  அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். ரிசேர்வ் அதிகாரி அழைக்கப்பட்டார். வேகமாக எழுந்த அவர் ஒரு புத்தகத்தை தூக்கிக் கொண்டு குப்பை வாளியைத் தாண்டிச் சென்றார். அவர் கூட அதை பொருட்டாகக் கருதவில்லை. எனக்குள் ஆர்வம் பற்றிக்கொண்டது. அந்த குப்பைகளை பொறுக்கி வாளியினுள்ளே போட்டுவிட்டு குப்பை வாளியை இருந்த இடத்தில் வைக்கப்போகும் அந்த பொறுப்பு வாய்ந்த நல்ல அதிகாரியோ சிப்பாயோ யார்? என்ற கேள்வி ஆவலுடன் அலை மோதியது. 

ஒரு சப் இன்ஸ்பெக்டர் வந்தார். அவர் புத்திசாலி. தனது சீருடையை பேணும் விதத்தை வைத்தே அவர் எவ்வளவு நேர்த்தியாக எதையும் கையாள்பவர் என்பதை புரிந்து கொள்ளலாம். அவர் சீருடையில் ஒரு சுருக்கம் மடிப்பு இருக்காது. நடக்கும் போது கூட மிக நேர்த்தியான நடை அவருடைய கையில் இருக்கும் கோப்புகளும் குறிப்பேடுகளும் கூட உயர வரிசைப்படி அடுக்கப்பட்டிருக்கும் எனக்குத் தெரியும் அவர் குப்பை வாளியை எடுத்து வைப்பார். குப்பைகளையும் பொறுக்கிப் போடுவார். காரணம் நேர்த்தியாக இருப்பவர்கள் நேர்;த்தியை விரும்புவார்கள். நேர்த்தியை விரும்புபவர்கள் தம்மைச் சூழ இருப்பதையும் நேர்த்தியாக ஒழுங்குபடுத்துவார்கள், என்பது எனது எண்ணம். இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்த அதிகாரி குப்பை வாளியைக் கடக்க நேரிடும் சில வேளை அங்குள்ள அவரை விடத் தரத்தில் குறைந்த அதிகாரிகளுக்கு அவர் அதை ஒழுங்குபடுத்துமாறு பணிக்கவும் கூடும் என்றும் கருதினேன். ச்சே! என்ன அதிகாரி அவர் குப்பை வாளியைக் கணக்கில் எடுக்காமல் அவர் பாட்டில் அதைக் கடந்து செல்கிறார். எனது அணுமானமும் கணிப்பும் பொய்த்துப் போனது. வெளித்தோற்றத்தை வைத்து மனிதர்களைக் கணிப்பிடுவது தவறு. அவர் நேர்த்தியாக இருக்கிறார் என்றால் மற்றவர்கள் தன்னை மதிக்க வேண்டும் என்பதற்காக இருக்கலாம். அல்லது தன்னை நேர்த்தியானவர் என காண்பிக்கவுமாக இருக்கலாம். அல்லது அவரது மனைவியே அவருக்காக இந் நேர்த்தியைக் கட்டமைத்திருக்கலாம் என்ற எண்ணவோட்டம் அவரது குடும்ப வாழ்வு வரை சென்று திரும்பி வந்தது. என் மனது சொன்னது நிச்சயமாக இவரை இவ்வளவு நேர்த்தியாக வைத்திருப்பது இவரது மனைவி தான் இல்லாவிட்டால் இந்தக் குப்பை எங்கே இவ்வளவு அழகாக இருக்கப் போகிறது. அவரது உள்ளம் அந்த நேரத்திற்கு முன்னுரிமை அளித்து அதை அவர் விரும்புபவராக இருந்திருந்தால் நிச்சயம் அந்தக் குப்பைகளை அப்புறப்படுத்தி குப்பை வாளியையும் எடுத்து வைத்திருப்பார். 

எனது அனுமாணத்தில் நான் கணித்து தராதரப்படுத்தி வைத்திருந்த பலர் அந்தக் குப்பை வாளியைக் கடந்து சென்றார்கள் ஒருவர் கூட அதைப் பொருட்படுத்தவில்லை. ஒவ்வொருவர் வரும்போதும் இவர் எடுத்து வைப்பார், இவர் எடுத்து வைப்பார், என்ற எதிர்பார்ப்பு தோற்றுப் போய்க்கொண்டே இருந்தது. 

காற்று பலமாக வீசியது. அதற்குப் தாக்குப் பிடிக்க முடியாத காகிதத் துண்டுகள் அங்குமிங்கும் சிதறின. அது அலுவலகத்தின் நேர்த்தியைக் கெடுத்தது. கண்ணுக்கு உறுத்தலாகவும் இருந்தது. யாரேனும் அதைப் பார்த்தால் நிச்சயம் ஒழுங்கு படுத்திட வேண்டும் எனும் உணர்வை இயல்பாகவே தோற்றுவிக்கும் வகையிலான அலங்கோலமான காட்சியது. 

அப்போது ஒரு குட்டைப் பாவாடை வந்தது. எனக்கு திருப்தி ஏற்பட்டது. பெண்கள் எப்போதும் அலுவலகமாயினும் சரி வீடாயினும் சரி, சுற்றுச் சூழல், வீட்டுத் தோட்டம் என்று எதையுமே பளிச்சென வைத்திருப்பவர்கள். அதிகம் குப்பை சேரும் சமையல்கட்டு, அதை எப்பவுமே பளிச்சென வைத்திருக்கும் அழகே தனிதான். அதுவொன்றே போதும் பெண்களின் நேர்த்தியை யாசிக்கும் மனப்பாங்கை அடையாளப்படுத்த, இங்கு மட்டும் அது விதிவிலக்காகுமா? கண்ணுக்கு உறுத்தலாக இருக்கும் குப்பைகளை பொறுக்கி குப்பை வாளியில் போட்டுவிட்டு குப்பை வாளியையும் உரிய இடத்தில் அந்தக் குட்டைப்பாவாடை எடுத்து வைக்கும் என்ற எனது உறுதியான நம்பிக்கை எதிர்பார்ப்போடு காத்திருந்தது, நேரம் விறுவிறுப்புடன் கடந்து கொண்டிருந்தது, குட்டைப்பாவாடை வாளியை நெருங்கியது, எடுத்து வைத்ததும் கை தட்ட வேண்டும் போன்ற உணர்வு என்னுள் வியாபித்திருந்தது, என்ன இது?  அந்தக் குட்டைப் பாவாடை குப்பை வாளியை கொஞ்சம் கூடக் கணக்கிலெடுத்ததாகத் தெரியவில்லை. அலேக்காக எட்டிக் கடக்க முனைந்தது. ஆயினும் குட்டைப் பாவாடையின் அளவு அதை தடுக்க மீண்டும் குப்பை வாளிக்கு ஒரு பலத்த அடி விழுந்தது. ஒரு சுற்று சுற்றி ஓய்வுக்கு வந்தது. இன்னும் கொஞ்சக் காகிதத் துண்டுகள் வெளியே சிதறின அவள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. கடக்க முனைந்த போது கீழே விழுந்த தனது கோப்பைக் கையிலெடுத்தாள். கோப்பில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தாள். அவள் தன் பாட்டில் நடந்தாள். 

எனது சிந்தனாவோட்டம் வேகமானது பல்வேறு திசைகளையும் நோக்கி நகர்ந்தது. ஊரிலுள்ள குற்றங்கள் செய்யும் எல்லா அழுக்குகளையும் துருவித் துருவி ஆராய்ந்து தேடிக் கண்டுபிடித்தும், தன் உயிரைப்பற்றிக் கூடக் கவலைப்படாது எல்லாவற்றையும் சுத்தப்படுத்தும் அதிகாரிகள் கூட்டம் வேலை செய்யும் ஒரு இடத்தில், அங்குள்ள ஒரு  அதிகாரியின் காலால் அடிபட்டு விழுந்து குப்பைகள் வெளியே சிதறிக் கிடக்க சாய்ந்து கிடக்கும் ஒரு குப்பை வாளியைத் தூக்கி வைக்கவும் சிதறிக் கிடக்கும் குப்பைகளை பொறுக்கவும். அதைத் தாண்டிச் செல்லும் எந்த அதிகாரிக்கும் பொறுப்புணர்ச்சி வரவில்லையே. இதற்கிடையில் வீதியில் குப்பை போடுபவர்களைக் கைது செய்து தண்டப் பணம் அறவிடும் வேலையைக் கூட புதிதாக ஆரம்பித்திருக்கிறார்கள். அதைக் கண்காணிப்பதும் அமுல்படுத்துவதும் இதே பொலிஸ் அதிகாரிகள் தான் ஆனால் இங்கே! 

'சீருவே சிட்டின்' 
மேற்பார்வை அதிகாரியின் குரல் ஓங்கி ஒலித்தது. 
எல்லோரும் எழுந்து நின்றார்கள். 
நான் நினைத்துக்கொண்டேன் யாரோ ஒரு உயர் அதிகாரி வருகிறார். 
இன்றைக்கு எல்லோரும் செம ஏச்சு வாங்கப் போகிறார்கள் அவர் ஏசி விட்டுப் போகும் வரை அமைதியாக தலையை தொங்க விட்டபடி கைகட்டி விரைப்பாக நின்று பின்னர் வேகமாக நான் முந்தி நீ முந்தி என்று வேலை செய்வார்கள். அப்போது பல கைகள் குப்பை வாளியை நோக்கி நகரும் சிதறிய குப்பைகளை சிறுவர் பட்டாம் பூச்சி பிடிக்க நான் முந்தி நீ முந்தி என்று ஓடுவதும் பிடிப்பதும் போல குப்பை பொறுக்குவார்கள் சின்னத் துரும்பு கூட பெரிய குப்பையாக கணிக்கப்பட்;டு அப்புறப்படுத்தப்படும். கண்குளிர பார்க்கலாமென்று ஆவலோடு இருந்தேன். வரும் அதிகாரியின் இலச்சினையைப் பார்த்து அவரின் நிலையைக் கணிக்க மனது ஆவலுடன் காத்திருந்தது. சந்தேகமே இல்லை வந்திருப்பவர் பெரிய அதிகாரிதான் என்பதில் அனைவரும் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. புதிய பெயர்பலகை மாட்டப்பட்டிருக்கிறது. பொலிஸ் நிலையத்தை அழகுபடுத்த பூஞ்செடிகள் அடங்கிய சட்டிகளும் வந்திறங்கியிருக்கின்றன. அவற்றை எப்படி எப்படி ஒழுங்குபடுத்தி வைக்க வேண்டும் என்று உத்தரவு போட்டவர் பொலிஸ் நிலையத்தின் மையப் பகுதியில் அதுவும் நிருவாகப் பிரிவுக்கு முன்னால் சிதறிய குப்பைகளுடன் சரிந்து கிடக்கும் குப்பை வாளியை மட்டும் பார்த்தாரோ அனைவரையும் சப்பித் துப்பி விடுவார் என்று அவரின் உயர்ந்த தொனியிலான சரளமான ஏச்சை கேட்பதற்கு செவிகளை கூர்மையாக்கியபடி எதிர்பார்த்திருந்தேன். 

அவர் வந்தார் ஏ.எஸ்.பி. உதவி பொலிஸ் அத்தியட்சகர் விருவிருவென்று நடந்தார் தனது வேலைகளை முடிப்பதற்கான கட்டளைகளை இட்டார். குப்பை வாளி வரை வந்தார். எதுவும் பேசவில்லை அப்படியே அவர்பாட்டில் சென்றுவிட்டார். எனக்குப் பெருத்த ஏமாற்றமாகப் போனது. இரண்டரை மணித்தியாலமாக இந்தப் பிரச்சினையைக் கூட்டுக்குள்ளிருந்து பார்த்துக்கொண்டிருந்த எனக்கு யாரையாவது கூப்பிட்டு அதை நான் எடுத்து வைக்கட்டுமா என்று கேட்க வேண்டும் போல் இருந்தது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் எனக்கு நிம்மதியும் இல்லை. 

ஏ.எஸ்.பி அதைப் பார்த்தாரா? அல்லது அவர் பார்வைக்கு அது படவில்லையா? அல்லது பார்வையில் பட்டும் அதை அலட்டிக் கொள்ளாமலேயே சென்று விட்டாராh? அப்படி இருக்க நியாயமில்லை. சரியாக குப்பை வாளியின் முன்னால் வந்து நின்றவரின் கண்களில் இருந்து சிதறிய குப்பைகளேனும் மறைவதற்கு சாத்தியமில்லை. சிலவேளை வேலையின் கனதி சுற்றி உள்ளவைகளை மறைத்து விடும். அதுபோல அவரின் வேலையின் கனதி அவர் பார்வையைவிட்டும் அந்த அலங்கோலமான காட்சியும் குப்பை வாளியின் பரிதாபகர நிலையும் மறைக்கப்பட்டுவிட்டதா? என்ற எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. ஆண்களும் பெண்களுமாய் எத்தனை பேர் இந்தக் குப்பை வாளியைக் கடந்து சென்று விட்டார்கள் ஆனால் ஒருவருக்கேனும் அதை எடுத்து வைக்கத் தோன்றவில்லையே இரண்டரை மணித்தியாலமாகத் தொடரும் இந்தப் பிரச்சினைக்குத் சிலவேளை நிலையத்தின் பணிப்பாளர் எஸ்.பி பொலிஸ் அத்தியட்சகர் தரத்திலுள்ள உயர் அதிகாரி வந்தால் தான் தீர்வு கிடைக்குமா என்றும் அவர் வந்துவிட வேண்டும் என்றும் அதைப் பொருட்படுத்தாத அனைவருக்கும் உயர்ந்த தொனியில் ஏசி விட்டு அவரே குப்பை வாளியை எடுத்து வைக்க வேண்டும். அதன் பிறகாவது இங்குள்ளவர்கள் பொடுபோக்காக இருக்கமாட்டார்கள் என்றும் என் மனது அவாக்கொண்டது. பழையபடி எல்லோரும் தமது வேலைகளை கவனிக்கலானார்கள். குப்பையும் அப்படியே இருந்தது. குப்பை வாளியும் அப்படியே இருந்தது. யாராலும் கணக்கெடுக்கப்படாமலேயே. 

அப்போது தான் அவன் வந்தான். அவனுடைய பெயர் கூட எனக்குத் தெரியாது. அடிக்கடி அவனைக் காண்பேன் எப்போதும் அவனை நான் பொலிஸ் சீருடையில் கண்டது கிடையாது. இவனை இங்குள்ள சிப்பாய்கள் யாரும் பெரிதாக மதிப்பதும் கிடையாது. நான் நினைத்துக்கொள்வேன் இவன் இங்குள்ள கடைநிலை ஊழியன் என்று. அதிகம் பேசமாட்டான். தமிழும். சிங்களமும் சரளமாகப் பேசத் தெரியும். எதையும் பெரிதாக அலட்டிக் கொள்ளவே மாட்டான். உருவத்தில் பெரிய கவர்ச்சி கிடையாது. அவன் குப்பை வாளியை பார்த்துக்கொண்டிருந்த என்னைத் தாண்டிச் சென்றான். திடீரென நின்றான். திரும்பி வந்தான் குப்பை வாளியை பார்த்தான். விர்ரென்று நேரே அதன் அருகே சென்றான். அங்கு நின்ற சீருடை அணிந்தவர்களைச் சற்று தள்ளி நிற்குமாறு வேண்டினான். குப்பைகளை பொறுக்கினான். குப்பை வாளியினுள் போட்டான். குப்பை வாளியை நிமிர்த்தினான் காற்றின் திசைக்கு வசப்பட்டு அடித்துச்செல்லப்பட்டு தூரத்தே கிடந்த காகிதத் துண்டுகளையும் பொறுக்கினான். குப்பை வாளியினுள்ளே போட்டான். குப்பை வாளி இருக்க வேண்டிய இடத்தில் நின்ற சீருடை அணிந்தவரை விலகச் சொன்னான். அவர் கொஞ்சம் கடுப்போடு பார்த்தார். அவன் பணிவோடு நின்றான். அவர் விலகிக் கொள்ள குப்பை வாளியை உரிய இடத்தில் வைத்தான். அவன் பாட்டில் அடுத்த வேலைக்குச் சென்றான். அதிகாரிகள் அப்படியே இருந்தார்கள். 

நான் பிரார்த்தித்துக்கொண்டேன் நாட்டைச் சீர்திருத்தும் இன்னுமொரு அதிகாரியின் காலால் அந்தக் குப்பை வாளி அடிவாங்கி விடக்கூடாதென்று. 

No comments:

Post a Comment