இலக்கியமும் ரவுப் ஹகீமும்
சில குறிப்புகளும் இன்னும் சில அடிக்குறிப்புகளும்
குறிப்பு – 01
நீண்ட நாட்களாக எழுத வேணடும் என்று நினைத்துக் கொண்டிருந்த சில விடயங்களை இப்போதுதான் எழுத அவகாசம் கிடைத்திருக்கின்றது. அவகாசம் என்பதை விட எழுதவேண்டிய சந்தர்ப்பம் இப்போதுதான் ஏற்பட்டிருக்கின்றது. அல்லது ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.
எடுத்தாளவும் பேசவும் வேறு தலைப்புக்களுடனான பல்வேறு விடயங்கள் இருப்பதால் அவற்றைத் தவிர்க்க நேரிடும் அப்போது அடிக்குறிப்பு என்று அதை இலக்கமிட்டுச் செல்வேன்.
குறிப்பு – 02
சாதாரணமாக எல்லா இளைஞர்களுக்கும் இருப்பது போல எனக்கும் இருந்த உணர்வு முதலாவது வோட்டை முஸ்லிம் காங்கிரசுக்குப் போட வேண்டும் என்பது. அது மர்ஹூம் அஸ்ரப் ஏற்படுத்திய ஈர்ப்பு அப்படித்தான் நானும் எனது முதல் வோட்டை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் போட்டேன். எந்த வேட்பாளருக்கும் விருப்பு வாக்களிக்க விருப்பமில்லாது இருந்து.
(அடிக்குறிப்பு – 01 எனது வோட்டுகள் எதையும் வீணாக்கவில்லை ஒவ்வொரு சமயத்திலும் நிதானமாகச் சிந்தித்து வாக்களித்து இருக்கின்றேன்.)
குறிப்பு – 03
தலைவர் அஷ்ரபின் மரணத்துக்குப் பின்னர் ரவுப் ஹகீம் தலைமைக்கு வந்தார் அப்போது இரத்தக் கொதிப்புள்ள வயது. அனைத்தையும் உணர்ச்சிகளால் மட்டும் பார்த்துக் கொண்டிருந்த தருனம்
(அடிக்குறிப்பு-02: தலைமைத்துவச் சண்டை, ஹகீம் பேரியல் கயிறிழுப்பு, முஸ்லிம் காங்கிரஸ் பிளவு, புலிகளுடனான அரசின் சமாதான ஒப்பந்தம், ஆளுக்கொரு கட்சி தொடங்கியமை, கதிரைச் சண்டை, ஹகீம் தன்னுடைய நப்சு கேட்டமைக்காகத் தலைமையைப் போராட்டத்துக்கு மத்தியில் பெற்றதும் தக்கவைத்ததும் தனித்தனித் தலைப்புகளில் எழுத வேண்டியவை. பலர் எழுதியிருந்தார்கள் ஆனால் எனது பார்வையை இன்னும் பதிவு செய்யவில்லை, ஒரு நேரம் வரும் அப்போது பாரப்போம்.)
குறிப்பு – 04
ஹகீமை எனக்குப் பிடித்து ஏன்?
இங்குதான் மிக முக்கியமான சில விடயங்களைப் பகிர வேண்டி இருக்கின்றது. ஹகீமுடைய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து எனக்கு நல்ல அபிப்ராயம் கிடையாது,குறிப்பாக பிரபாரனுடனான ஒப்பந்தமும் அதன் பின்னர் அவர் பேசிய விடயங்களும். (அடிக்குறிப்பு 03 ஒவ்வொரு காலத்திலும் தனது இருக்கையைத் தக்க வைக்க ஹகீம் மேற்கொண்ட பிரயத்தனங்கள்)
அடுத்தது தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் மக்கள் எழுச்சியை உள்வாங்கி அழித்தமை,
(அடிக்குறிப்பு-4 ஹகீமுடைய உள்வாங்கி அழித்தல் என்ற விடயம் தனித் தலைப்பாக ஆராயப்பட வேண்டியது) இந்த இரண்டு விடயங்களுக்காகவும் ஜாமியா நளீமியாவின் ராபிதா கலமிய்யா சுவரேட்டில் அப்போதே விரிவான கட்டுரைகளை எழுதியிருந்தேன்.
ஹகீமின் மீது பிடிப்பை ஏற்படுத்திய ஒரேயொரு விடயம் அவருக்கெதிரான அனைத்துச் சிக்கல்களையும் முறியடித்து இன்னும் தலைவராக நீடிக்கின்ற திறமை மட்டும்தான்.
ஒரு மனிதனை அவமானப்படுத்த பயன்படுத்தப்படும் கடைசி ஆயுதம் அவன் இன்னொரு பெண்ணுடன் முறையற்ற பாலியல் தொடர்பு வைத்தருந்தான் என்று பொதுவெளியில் பகிரங்கமாக போட்டுடைப்பதுதான்.
குமாரியை வைத்து சிரச தொலைக்காட்சியும் ஐ அலைவரிசையும் இரு வேறு கோணங்களில் கருத்துக்களை நேரலையாக வழங்கி மக்களைக் குழப்பிக் கொண்டிருந்த போது குமாரி விடயத்தில் ஹகீமும் கொஞ்சம் ஆட்டம் கண்ட போதும் கூட அனைத்தையும் உடைத்துக் கொண்டு தன்னை நிலைநிறுத்திக்கொண்ட துனிச்சல் இருக்கின்றதே அந்தத் துணிச்சல்தான் இப்போதும்கூட அவரைப் பார்த்துப் புன்னகைக்க வைக்கின்றது.
இந்தப் பிரச்சினைக்குப் பின்னர்தான் அவர் அம்பாறையிலும் கண்டியிலும் பாராளுமன்றத் தேர்தலிலும், திருகோணமலையில் மாகாணசபைத் தேர்தலிலும், அதிக விருப்புவாக்குள் பெற்று வெற்றிபெற்றுக் காட்டினார். அதற்காக அவர் செய்த செலவு அடிக்குறிப்பு – 05 ஆனாலும் அனைத்து அவமானங்களையும் தாங்கி அனைத்தையும் உடைத்தெறிந்து மீளவும் மீளவும் எழுந்து நிற்க ஒரு தில்லும் கட்ஸ்ஷூம் இருக்கவண்டும் அது ஹகீமிடம் மிகத் தாரளமாக இருக்கின்றது. அதற்காக அவருக்கு ஒரு சல்யூட்.
ஒருவன் தலைவனாகத் தன்னை வடிவமைத்துக் கொண்டால் விட்டொதுங்கும் வரை வீழ்த்துவதற்கு இடங்கொடுக்கக் கூடாது அதுவொரு தனித்துவம்தான். அதுதான் வெற்றிபெற்ற தலைமை ( அடிக்குறிப்பு 06 ஹகீமை வீழ்த்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள்)
ஒரு கட்டத்திலும் வீழ்த்தப்படாத போது அது யாராக இருந்தாலும் அவர் மீது எனக்குப் பிரியம் ஏற்படும். அத்தகைய பிரியத்தை வைத்துக் கொண்டு மாத்திரம் எல்லாவற்றையும் பிரியமாகப் பார்க்க முடியாதே
குறிப்பு-05
2002 ம் ஆண்டு இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் முன்னெடுத்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு ஹகீம் இருந்த நெருக்கடி நேரத்தில் கிடைத்த மிகத் தரமான வெகுமதி. ஒருபக்கம் தலைமைத்துவப் பிரச்சினை மறுபக்கம் நாட்டின் அரசியல் முன்னெடுப்புகள் என்று எல்லாவற்றிற்குள்ளும் அவர் தனது இயலுமையை முஸ்லிம் சமுகத்தில் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நெருக்கடிநேரம். (நெருக்கடி நேரங்களில் ஹகீம்-அடிக்குறிப்பு – 07)
இந்த நேரத்தில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்துக்கு ஒரு உலக மாநாட்டை எப்படியாவது நடாத்தி முடிக்க வேண்டிய தேவை இருந்தது. ஹகீமும் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகமும் பரஸ்பரம் ஆளையாள் பயன்படுத்திக் கொண்டனர். ஹகீம் தனது பலமான அமைச்சைக் கொண்டு அரச அனுசரனையை அப்போது பெற்றுக் கொள்வது ஒன்றும் பெரிய சிக்கலான அல்லது சாதிக்கச் சிரமமான காரியமே கிடையாது. அதை அவர் திறமையாகச் செய்து முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்திற்கூடாக மாநாட்டுக்கான பொருளாதாரத் தேவையில் 80 வீதத்தை நிவர்த்தி செய்தார். மாநாட்டுக்கான இதர செலவுகள் 20வீதத்தை அல்லது அதை விடச் சற்றுக் குறைவான சதவீதத்தை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினர் சுமந்தனர். அவர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பும் முழுமையாகப் பதிவு செய்யப்பட வேண்டியது.
இங்கு கவனிக்க வேண்டிய மிக முக்கியமான ஒரு விடயம் வெறுமனே பணம் இருப்பதால் மட்டும் வெற்றிகரமான மாநாட்டைச் செய்து விட முடியாது என்பதை பகுத்தறிவுள்ள யாரும் ஏற்றுக் கொள்வார்கள்.
இந்த இடத்தில் ஹகீம் மற்றும் அவர் சார்ந்தவர்கள் தமது சொந்தப் பணத்தில் இருந்து எவ்வளவு மாநாட்டுக்காகச் செலவழித்தார்கள் என்பது எனக்குத் தெரியாது அதைத் தேட வேண்டிய தேவை ஏற்படவில்லை, அவசியமாயின் அதையும் தேடிவிடலாம். இந்த மாநாடு வெற்றிகரமாக நிகழ்ந்து முடிந்த பின்னர் ஒரு அதீத திருப்தி நிலவியது.
இம்மாநாடு வெறுமனே ஹகீம் செய்துமுடித்தமை மாதிரி செய்யப்பட்ட பரப்புரை - அடிக்குறிப்பு-08
ஆனால் எனக்குத் தெரிந்தவரைக்கும் ஹகீம் கலந்து கொண்ட புத்தக வெளியீடுகள் திருமண வைபவங்கள் என்று எதற்கும் தனது பையிலிருந்து அன்பளிப்பாகப் பணத்தைக் கொடுத்ததாகத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்தவரைக்கும் எனது அவதானத்தின் பிரகாரம் எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்குமான பணரீதியிலான உதவி என்பது பூச்சியம்தான். அவர் கலந்துகொள்கின்ற புத்தக வெளியீட்டு விழாக்களில் நானும் கலந்து கொண்டால் முதலில் கேட்கின்ற கேள்வி ஹகீம் எவ்வளவு பணத்தை அன்பளிப்புச் செய்தார் அல்லது ஊக்குவிப்பாகக் கொடுத்தார் என்பதுதான்.
ஆனால் அவரது சகோதரர் ரவுப் ஹஸீர் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர். எல்லாப் புத்தக வெளியீடுகள் இலக்கிய நிகழ்வுகள் என்று அழைக்கப்படாவிட்டாலும் கலந்துகொள்ளும் தன்மைமிக்க பந்தா இல்லாத பெருந்தகை. அவர் கலந்துகொள்ளும் வெளியீட்டு நிகழ்வுகளில் அன்பளிப்புக்கொடுக்காமல் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. அத்துடன் முக்கியமான வெளியீட்டு நிகழ்வுகளை அவர் மிஸ் பண்ணியதும் அரிது என்றுதான் நினைக்கின்றேன். அவரைப் பற்றி நான் எழுதத் தொடங்கிய ஒரு குறிப்புத் தொடர் அப்படியே இடையில் நிற்கின்றது.
மேலதிகமாக அவரிடமிருந்து பெறவேண்டிய தகவல்களை இன்னும் பெற முடியாமையால் அப்படி இடை நடுவே நிற்கின்றது.
இந்த இடத்தில் இதற்குமேல் இது குறித்து எழுதத் தேவையில்லை என்று தோன்றுகின்றது. இரு வேறுபட்ட இயல்புள்ளவர்கள்.
காக்காவும் தம்பியும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் அல்லது இருப்பார்கள் என்பதற்கில்லைதானே.
ஆனால் அமைச்சர் ஹகீமுக்கு அதுவொன்றும் பெரிய விசயமில்லைதான் ஏன் அதில் மைனசாக அவதானிக்கப்படும் அளவுக்கு அவர் கவனயீனமாக இருக்கின்றார் என்பதுதான் எனக்குக் கவலையளிக்கின்றது. குறைந்தபட்சம் இரண்டாயிரம் ரூபாவையேனும் அவர் கொடுக்கலாம் அதனால் அவருக்கு பாரிய பொருளாதார இழப்புகள் ஏதும் வந்துவிடப்போவதுமில்லை.
சில சமயங்களில் வீட்டில் இதைப் பற்றிக் கதைக்கும் போதெல்லாம் இந்த மனிசன் ஏன் இப்பிடி இரிக்கான் என்டுதான் தெரியல்ல என்று சொல்வதுண்டு.
ஒரு கட்சியின் தலைவராக அவரை மதித்து அதிதியாக அழைக்கின்ற கலைஞர்களுக்கு அவர் கொடுக்கின்ற குறைந்த அன்பாக அவை இருக்கக் கூடும்.
குறிப்பு-06
எனது அவதானிப்பின் படி ஹகீம் ஒரு இலக்கிய ஆளுமை கிடையாது. அந்தளவுக்கு அவரைப் பார்க்கும்படி எந்தப்படைப்பையும் செய்திடவில்லை. சில கவிதைகளுக்காக அவரை இலக்கிய ஆளுமையாகக் கொண்டாடும் பலவீனம் எனக்கில்லை. மறைந்த அமைச்சர் ஏசியெஸ் ஹமீத் அவர்களை ஓர் இலக்கிய ஆளுமையாகக் கொண்டாடுகின்றேன். அவருடைய கவிதைகளாக இருந்தாலும் சரி ஏனைய ஏழுத்துக்களாக இருந்தாலும் சரி அவர் மிகச் சிறந்த ஆளுமையாக அவற்றில் வெளிப்பட்டார். துரதிஸ்டம் அவர் தமிழில் எழுதவில்லை.
அதனால் பெருமபாலும் அறியப்படவுமில்லை. அவரது கவிதைத் தொகுப்பு தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டாலும் அது பெரிதாக கவனத்தை ஈர்கும் வகையில் இலக்கியகர்த்தாக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கப்படவுமில்லை. அதனால் ஹமீத் அவர்களின் இலக்கிய ஈடுபாடு பேசப்படவில்லை பதியப்படவில்லை. தமிழ் மிரர் பத்திரிகைதான் அவரைப்பற்றிய இலக்கியப் பார்வையைப் பதிவு செய்திருந்தது.
அமைச்சர் ஹகீம் அவர்கள் எதிர் கொண்ட சிக்கல்களையும் சவால்களையும் படைப்பாக்கம் செய்தாலே போதும் தரமான படைப்புகளாக அவை மிளிர வாய்ப்பிருக்கின்றது. அரசியலில் இருந்து படைப்பாக்கம் பெறுகின்ற சங்கதிகள் முதிர்ச்சி பெற்ற ஓர் அரசியல்வாதியின் எழுத்தாக வெளிப்படுகின்ற போது அதன் கனதி ஈர்க்கவல்லதுதானே. அத்தகைய கூர்ந்து நோக்கச் செய்யும் எத்தகைய படைப்பும் ஹகீமால் இன்னும் தரபடவில்லை என்பது எனது அவதானம்.
இலக்கிய மாநாடுகளில் முன்னுரிமை பெறுவதாலும் இலக்கிய விழாக்களில் அதிதியாக அல்லது தலைமையாகக் கலந்துகொள்வதாலும் ஒருவர் சிறந்த இலக்கிய ஆளுமையாகிவிடுவதில்லைதானே.
எப்படியாவது ஓர் உலக இலக்கிய மாநாட்டை நடாத்த வேண்டும் என்றும் அதில் தாம் முக்கிய பிரமுகர்களாக இருக்க வேண்டும் என்றும் சில நபர்கள் முன்னெடுத்த முயற்சிக்கு அமைச்சர் ஹகீம் பச்சைக் கொடி காட்டினார். அதன் விளைவானதாகத்தான் 2013ஆம் ஆண்டு மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அனுசரனையோடு ஓர் உலக மாநாட்டை நடாத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகளைப் பார்க்க வேண்டும்.
ஹகீமினாலும் அவரது பரிவாரத்தினாலும் அந்த உலக மாநாட்டை நடாத்தி முடிக்க முடியாது என்பது வெள்ளிடைமலை. ஒரு தேர்தல் காலச் செயற்பாடு போன்றதல்லவே இலக்கியமாநாடு.
இந்த இடத்தில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் சந்திப்புகள் என்று பலகோணங்களில் பல சந்தர்ப்பங்களில் இடம்பெற்றாலும் அவைகளால் எந்தப் பிரயோசனமும் ஏற்படவில்லை. மலேசிய மநாட்டில் கலந்து கொண்டமை கும்பகோண மாநாட்டில் கலந்து கொண்டமையெல்லாம் நிறைய இலக்கிய ஜாம்பவான்களைக் உருவாக்கி விட்டிருந்தது (ஹகீமும் மநாடுகளும் அடிக்குறிப்பு -09)
ஆனாலும் அந்த ஜாம்பவான்கள் தத்தமது கதிரைகளுக்காகப் போராடிக் கொண்டிருந்தார்களே தவிர மாநாட்டின் வெற்றிக்கு எத்தகையபங்களிப்பை வழங்க முடியும் என்று ஒருபக்கமும் உறுதிப்படுத்தப்படவில்லை அந்தக் கூட்டத்தை நம்பி களத்தில் இறங்க ஹகீமும் தயாரில்லை.
ஆனால் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் செயற்பாட்டுத்திறன் எத்தகையது என்பது அமைச்சர் ஹகீமுக்கு மிக நன்றாகவே தெரியும் அதனால் இலக்கிய ஆய்வகத்தின் பங்களிப்பை அவர் எதிர்பார்த்தார் ஆனால் அந்தப் பங்களிப்பு இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் என்ற பெயரோடுகிடைக்கக் கூடாது என்றும் விரும்பினார். அமைச்சரின் விருப்பம் தொடர்பில் சில சந்திப்புகள் நடந்தன. அவை முழுமையான வெற்றியைப் பெறவில்லை.
இலக்கிய ஆய்வகம் முழுமையாக முன் நின்று பொறுப்புகளைச் சுமப்பதை அவருடன் நெருங்கிய சிலர் மிகத் தெளிவாக மறுத்தமையை அவர் உள்வாங்கிக் கொண்டே நகர்வுகளை முன்னெடுத்தார். மாநாட்டை நடாத்துவதற்காக அமைச்சர் ஹகீம் அவர்களுடைய விருப்பங்கள் எத்தகையவை என்றும் இந்த மாநாட்டுக்கு இலக்கிய ஆய்வகம் எத்தகைய பாத்திரத்தை வகிக்க வேண்டும் அல்லது வகிக்கப் போகின்றது என்பது தொடர்பில் இலக்கிய ஆய்வகம் கூடி ஆராய்ந்தது.
ஹகீம் முன்மொழிந்த இஸ்லாமிய இலக்கியக் கலகங்களின் ஒன்றியம் அல்லது பேரவை என்பது இலங்கையில் உள்ள சகல முஸ்லிம் இலக்கிய அமைப்புகளையும் ஒன்றினைத்த ஒரு குழுவாகும். இந்த முன்மொழிவுக்குப் பின்னால் இருக்கும் நோக்கத்தை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் கலந்துரையாடலின் போது தெளிவாக ஆய்வகம் தெரிந்துகொண்டது. இலக்கிய ஆய்வகத்தைக் கருவறுக்கும் எந்தவொரு நிகழ்ச்சி நிரலுக்குள்ளும் இலக்கிய ஆய்வகம் இருக்காது என்பது பொதுவான ஒரு முடிவாக இருந்தது. ஆனால் தனிப்பட்ட முறையில் தனிநபர்களாக கலந்துகொள்வதும் பொறுப்புக்களை ஏற்பதும் அவரவர் தெரிவுக்கு விடப்பட்டது. அதன்படி தாருஸ்சலாமில் இடம் பெற்ற மாநாட்டுக்கான கருத்தாடல் நிகழ்வில் ஆய்வகத்தின் உறுப்பினர்கள்சிலர் கலந்து கொண்டார்கள் சிலர் புறக்கனித்தார்கள்.
அடிக்குறிப்பு 10 இதற்கிடையே எழுந்த முஸ்லிம் தேச இலக்கிய மாநாடு குறித்த சலசப்பும் அப்படியொரு மாநாட்டை நடாத்தி முடிக்க சில அன்பர்கள் எடுத்த முயற்சிகளும் பகிர்ந்துகொண்ட கருத்துக்களும் விட்ட சவால்களும்.
அடிக்குறிப்பு 11 தாருஸ்ஸலாமில் நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளும் ஒலிப்பதிவு செய்யப்பட்ட எனது விலையுயர்ந்த தரமான நவீன ஒலிப்பதிவுக்கருவி யாரோ ஓர் இலக்கியவாதியால் அல்லது நிகழ்வில் கலந்துகொண்ட கௌரவமான கனவான்களில் யாரோ ஒருவரால் தாருஸ்ஸலாமில் வைத்தே திருடிச் செல்லப்பட்டது.
இப்படியே இந்த மாநாட்டுக் காய்சல் கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் வரை தொற்றியிருந்தது. ஆனால் கடைசி வரை அது நடக்கவேயில்லை. பேசாமல் ஹகீம் எல்லோரையும் திருப்திப்படுத்தும் நிகழ்ச்சி நிரலில் இருந்து விலகியிருந்தால் கூட மாநாட்டை நடாத்தி இருக்கலாம். அல்லது இலக்கிய ஆய்வகத்திடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கலாம். அரசியலுக்குப் பயன்படுத்தும் டெக்கினிக்கு எல்லாமே இலக்கியத்துக்கு உதவாது என்பதை இந்நகர்வுகள் அமைச்சருக்கு தெளிவாகச் சொல்லி இருக்க வேண்டும். அதிலிருந்து அவர் படிப்பினை பெற்றிருக்க வேண்டும்.
இலக்கிய ஆய்வகத்தைப் புறந்தள்ளிவிடுவதில் சில தனிமனிதர்கள் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டார்கள். (இதுவும் அடிக்குறிப்பு 12 ) அவர்களின் கபடத்தனத்திற்கும் சகுனிப் புத்திக்கும் மதிப்பளிக்காமல் அமைச்சர் இருந்திருக்கலாம் ஆனால் அவர் அப்படி இருக்கவில்லை.
எல்லோரையும் திருப்திப்படுத்திட அவர் மேற்கொண்ட அனைத்தும் இறுதியில் தோற்றே போயின.
இந்த இடத்திலிருந்துதான் ஆய்வகம் தீர்க்கமான சில முடிவுகளுக்கு வந்தது. ஆய்வகத்தின் இருப்புக்கு ஹகீம் ஒருபோதும் துணையாக இருக்கப் போவதில்லை. அதனால் ஹகீமுக்குப்பின்னால் ஆய்வகம் செல்ல வேண்டியதே இல்லை. யார் குத்தினாலும் அரிசாகினால் சரிதான் ஆனால் அதற்காக இருப்பை அழித்துக் கொண்டு இன்னொருவரின் நிகழ்ச்சி நிரலுக்குல் காணாமல் போகின்ற அபாயகரமான செயற்பாடுகளில் இருந்து மிகுந்த எச்சரிக்கையுடன் இலக்கிய ஆய்வகம் எதிர்காலத்தில் தனது செயற்பாட்டுத்தளத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், என்பது மிக முக்கியமான அம்சம்.
அடிக்குறிப்பு 13 எப்படியாவது ஒரு மாநாட்டை நடாத்துதல் என்ற நினைப்பில் மூன்றாண்டுகளாக முன்னடுக்கப்பட்ட ஆய்வகத்தின் கலந்துரையாடல்கள்.
கடைசிவரையும் ஹகீமால் ஒரு மாநாட்டை நடாத்த முடியாமல் போனமை இலக்கிய ஆய்வகத்தின் பலம் எத்தகையது என்பதை நிரூபித்திருந்தது. இலங்கையில் இன்னொரு மாநாட்டை நடாத்துவதாக இருந்தால் அது இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினால் மட்டுமே முடியும் என்பதை நாம் மிகத் தெளிவாக உணர்ந்திருந்தோம்.
இப்படியிருக்கும் போதுதான் 1966 இல் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்ற விடயம் ஒரு பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டு 2016ஆம் ஆண்டோடு 50 ஆண்டுகள் முடிந்திருந்த விடயத்தை இலக்கிய ஆய்வகம் கண்டுபிடித்தது. அத்துடன் புது உட்சாகம் பிறந்தது.
இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சம் இலக்கிய ஆய்வகம்தான் இந்த பொன்விழா என்ற விடயத்தை முன்னிறுத்தி செயற்படத் தொடங்கியது அதன் பின்னர்தான் மருதமுனையிலேயே மிகச் சிறிய நிகழ்வாக பொன்விழாவை முன்னிறுத்தி ஒரு விழா இடம்பெற்றது அதன் பின்னர் ஏட்டிக்குப் போட்டியாக மற்றுமொரு அரசியல் விழா பொன்விழாவின் பெயரால் தெளிவான திட்டமிடல்களும் தயார்படுத்தல்களுமின்றி நடந்தேறியது.
அடிக்குறிப்பு 14- கவிஞர் ரவுப் ஹஸீர் அவர்கள் சில விடயங்களை இனித் தெளிவு படுத்தக் கூடும் ஏனெனில் அவர் கேட்டிருந்த ஒரு கேள்வியின் விளைவாகவே இந்தக் கட்டுரை எழுத வேண்டியேற்பட்டது.
குறிப்பு-07
பகுதி இரண்டு விரைவில் நேரங் கிடைக்கும் போது எழுதுகின்றேன். அதில் பொன் விழா குறித்த சுவாரஸ்யமான பல்வேறு இடக்குமுடக்குகளைப் படித்துச் சிரிக்கலாம்.