Sunday, November 2, 2014

தடம் தொலைத்த தடையங்கள்



கவிதை வரவுகள் அதிகம், சொல்ல நினைத்ததை மில இலகுவாகச் சொல்லிவிட்டு நிமிர சுலபமாக வசப்படும் ஊடகம் இதுதான் என்பதால் அதிகம் பேர் பயன்படுத்தும் வசதிமிக்கதாயிற்று. பிரகாசக் கவி எம்.பீ.அன்வரின் இந்தப் புத்தகத்தை எனக்குக் கிடைக்கச் செய்தவர் தம்பி தாஜ் அஸ்ரீ ஊடாக சகோதரர் மனாப் அவர்கள்தான். நீண்ட நாட்களுக்குப் பின்னர் தான் படிப்பதற்கு அவகாசம் கிடைத்தது. பொதுவாக அங்கொன்றும் இங்கொன்றமாகப் பகிரப்படும் இவரின் சில கவிதைகளையே ஏற்கனவே படிக்கக் கிடைத்தது.  ஆயினும் முழுத் தொகுப்பாகப் பார்க்கும் போதுதான் ஒரே நிறுவையில் ஒருவரின் கனதி நமக்குமத் தென்படும். 

மிக நேர்த்தியான அச்சும் பார்க்கத் தூண்டும் பக்க வடிவமைப்பும் எழுத்துருக்களின் தேர்வும் அட்டைப்பட நிறமும் தெரிவுசெய்யப்பட்ட தாளும் அருமை. அந்த நேர்த்தியில் ஒரே மூச்சில் படித்து முடிப்பதே ஓர் இனிமையான அனுபவம்தான். அன்வருக்கு கவிதை எழுத வருகின்றது என்பதுதான் முக்கியமான விடயம், பெரிதும் மரணத்தைப் பற்றியும் நிலையாமை பற்றியும்தான் இவர் எழுதியிருக்கின்றார், தனக்கென ஓர் கவிதை வடிவத்தைத் தேர்வு செய்திருப்பதும், தான் சொல்ல வந்த விடயங்களைச் சொல்லி முடித்திருப்பதும் ஒரு வெற்றிதான்.

தேர்ந்த வாசிப்புதான் எழுத்தைச் செழுமைப்படுத்தும் என்பதை அன்வர் இன்னும் உறுதியாக மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். பன்முகத் தேடல் இருக்கும் உங்களுக்கு விடயதானங்களுக்கப் பஞ்சமில்லை ஆதலால் இன்னும் நீண்ட தூரம் பணயம் செய்யத்தக்க ஆற்றல் உங்களுக்கு இருக்கிறது என்பதே திருப்திகரமான செய்தி, மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் ஆர்வத்தை விதைக்கும் வண்ணம் அமைவதுதான் கவிதையொன்றின் வெற்றியென்று நான் கருதுகின்றேன். அத்துடன் ஒரு தரமான கவிதை அப்படியே முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியோ மனதில் பதிந்து போகும் தன்மை இருப்பதாக நான் உணர்கின்றேன். அல்லது அதன் கருத்தாவது மனதில் தங்கி நிற்கும். எனது வாசிப்பனுவத்தில் நான் தெளிந்த உண்மை இது. 

அற்புதம் அபாரம் ஆஹா ஓஹோவென்று பொய்யாகப் புகழ்ந்துரைக்க என்னால் ஒரு போதும் முடிவதில்லை, அத்தடன் ஒப்புக்காக ரெண்டு வார்த்தைகளைச் சொல்லிவிட்டுச் செல்வதிலும்கூட உடன்பாடில்லை, எனது ரசனைக்கு என்ன படுகின்றதோ அதைச் சொல்லிவிடும் குணம் இன்னும் என்னைவிட்டுப் போகவில்லை, ஒரு புத்தகத்தை வெளியிடுவதன் பின்னால் மறைந்திருக்கும் உழைப்பையும் கஸ்டங்களை மிக இலகுவாக என்னாலும் உணர்ந்துகொள்ள முடியும், நாம் கஸ்டப்படுகின்றோம் என்பதற்காக பொன்குஞ்சென்று கொண்டாடும் தன்மையில் இருந்து விடுபட்டு ஒரு வாசகனாக நின்று திரும்பிப் பார்க்கும் போதுதான் எந்த இடத்தில் நாம் இருக்கின்றோம் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். உங்கள் தொகுதியை ஒரு வாசகனாக நின்று ஒரு முறை படித்துப்பாருங்கள், அது இன்னும் உங்களைக் கூர்மைப்படுத்த நிச்சயம் உதவும். 

புதிய களங்களைக் கைவசம் நிறையவே கொண்டிருக்கும் உங்கள் பார்வை இன்னும் விசாலித்து இதைவிடவும் பன்மடங்கு சிறந்த மற்றுமோர் தொகுதியை எங்கள் வாசிப்புக்கு விருந்தாக்கி தமிழ் இலக்கிய உலகுக்கு பங்களிப்புச் செய்ய எனதுமனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் பலரும் வாசித்துப் பயன் பெறட்டும் என்று உங்களின் தடம் தொலைத்த தடயங்களை கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்கு அன்பளிப்புச் செய்கின்றேன்.

3 comments:

  1. எனது கவிதை தொகுப்பினை நேரம் ஒதுக்கி வாசித்தமைக்கு
    முதற்க்கண் எனது நன்றிகள்
    இதுவரை இத்தொகுப்பிற்கு பலராலும் விமர்சனங்கள்
    எழுதப்பட்டிருந்தாலும்
    என்னை அதிகம் கவர்ந்த ஆக்கபூர்வமான விமர்சனம் இதுவென்றால் மிகையில்லை

    நன்றி

    இவன்
    என்றும் அன்புடன்
    பிரகாசக்கவி

    ReplyDelete
  2. and pls contact
    simproduction2002@gmail.com

    ReplyDelete