எனது நினைவுகளில் எம்.எச்.எம்.ஷம்ஸ்
2014/11/03 அன்று எம்.எச்.எம். ஷம்ஸின் வளவையின் மடியினிலே சிறுகதைத் தொகுதி வெளியீட்டுவிழா நிகழ்ந்தது. நிகழ்வுக்கு முதல் நாள் நண்பர் பர்வீன் தொடர்பு கொண்டு செய்தியை எத்திவைத்தார். தன்னால் நிகழ்வில் கலந்துகொள்ள முடியாது போகும் என்றும், தனது இடைவெளியை நிரப்ப முடியுமா என்றும் கேட்டார் அப்போது நான் நினைத்துக் கொண்டது ஷம்ஸின் நினைவு தினமாக இருக்கும் என்பதுதான். ஷம்ஸைப் பற்றி ஒரு ஐந்து நிமிடம் என்னால் பேச முடியும் என்றேன். ஆயினும் நிகழ்வுக்குச் சமுகளித்த பின்னர்தான் தெரிந்தது அது அவரது நெடுநாள்கனவான சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டுவிழா என்பது. ஆயினும் அந்த நிகழ்வில் எனக்குப் பேசக் கிடைக்கவில்லை. அந்த உரையினை இவ்விடத்தில் இணைத்துக் கொள்வதும் பொருத்தம்.
அந்தச் சூரியனின் உருவம் மறைந்துவிட்டது, ஆனால் அதன் ஒளி இன்னும் சுடர்விட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. ஒரு இலக்கியவாதி மரணித்துவிட்டால் அவன் மட்டுமே மரணித்துப் போகின்றான். அவனது படைப்புக்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். அவனது படைப்புக்களின் வீரியம் மரணித்த அவனது நினைவுகளை மீட்டு மீணடும் அவனை வாழ வைக்கின்றன. ஒரு படைப்பாளியை சக படைப்பாளிதான் மரணத்தின் பின்பும் வாழ வைக்க முடியும். துரதிஷ்டவசமாக பல படைப்பாளிகள் வாழ்ந்து மறைந்த சுவடுகளே இல்லை. அவர்கள் நினைவுகூரப் படுவதும் இல்லை. அதிஷ்டவசமாக அவனது படைப்புக்கள்தான் ஓரளவுக்கு அவனை நினைவுறுத்திக் கொண்டே இருக்கும். அதைத் தாண்டி ஒருவன் நினைவுப் பெருவெளியில் வாழ்வதானால் அவனது நடத்தையும் பழக்கவழக்கமும்தான் அதைத் தீர்மானிக்கின்றன. நன்னடத்தையும் மற்றவர்களைக் கௌரவப்படுத்திப்பழகும் குணமும் மற்றவர்களை மதிக்கும் இயல்பும் உள்ள ஒருவன் அதிகமதிகம் படைப்புக்களைச் செய்யாத போதும் கூட பிரறால் எப்போதும் மதிக்கப்படும் தார்மீக நிலைப்பாட்டை காலம் நிச்சயம் ஏற்படுத்தி வைக்கும்.
இப்போது சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இலக்கியவாதிகளில் எத்தனை பேரை அவர்களின் மரணத்தின் பின்னும் எதிர்கால சந்ததி பேசும் என்பது எனக்குத் தெரியாது. பிடித்தவர்களை தூக்குதலும் பிடிக்காதவர்களைத் தூற்றுதலும் என்று இப்போது கடைப்பிடிக்கப்படும் கொள்கையைச் சுமந்திருப்பவர்களை நாம் அடையாளப்படுத்திக் கொள்ளாமலும் இல்லை. சிபாரிசு சிபாரிசு என்று எல்லாவற்றிலும் சிபாரிசு. அந்த சிபாரிசு ஒரு போதும் ஒருவனைத் தூக்கி நிறுத்தப் போவதில்லை. ஷம்ஸைப் பற்றிப் பேசுங்கள் ஷம்ஸைப் பற்றி நினைவுகூருங்கள் என்று யார் சிபாரிசு செய்கின்றார். அவரைப் பற்றி நல்லதாக புகழ்ந்து பேசுங்கள் என்று யாரும் யாரையும் வலியுறுத்தத் தேவையில்லை, ஷம்ஸைப் பற்றிப் பேசுங்கள் என்றால் அவருடைய நல்ல குணங்களும் வஞ்சகமில்லாத நடத்தையும் சமுகப் பற்றும்தான் அவரைத் தூக்கி நிறுத்தும், அப்படியான பேச்சுக்களைத்தான் நாம் கேட்கமுடியும்.
அல்லாமா இக்பால் எங்கோ பிறந்த ஏதோவொரு மொழிக் கலைஞன் ஆயினும் அவர் இலங்கையிலும் நினைவுகூரப்படுகின்றார் என்றால் அவரது படைப்புக்கள் நம்மிலும் தாக்கம் செலுத்துகின்றது என்றால். அவரை நமக்கு மிக நெருக்கமானவராக எம்மால் உணர முடியுமாக இருந்தால் அம்மனிதனுக்கு காலம் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பு அத்தகையது. எம்.எச்.எம்.ஷம்ஸ் அவர்களும் அப்படித்தான். ஓர் இலக்கியவாதி என்பதற்கப்பால் அவர் ஓரு நல்ல பண்பான மனிதர். அதுதான் இன்றும் அவரைப் பேச வைக்கின்றது.
ஷம்ஸ் பல வகையிலும் எனக்கு ஆசான். எல்லோருக்கும் போல எனக்கும் வெள்ளைச் சிறகடிக்கம் வெண்புறாதான் அவரை அறிமுகப்படுத்தியது. அப்பாடல் எங்கேனும் ஒலித்து என காதில் விழுந்து விட்டால் ஓடோடிச் சென்று அதைக் கேட்டு முடித்த பின்னர்தான் அவ்விடத்தைவிட்டும் அகலும் பழக்கம் எனக்குள்ளும் இருந்தது. அத்தோடு பத்திரிகைளில் அவரது எழுத்துக்கள் அவர்பால் ஈர்ப்புக் கொள்ளச் செய்தன. இவையெல்லவற்றையும் தாண்டி பாடசாலை நாட்களில் சனி ஞாயிறு மற்றும் பாடசாலை விடுமுறை நாட்கள் தவிர நான் ஷம்ஸை நினைக்காத ஒரு நாளேனும் இருக்காது. அதற்குக் காரணம் இருக்கின்றது. எமது பாடசாலைக் கீதத்தை எழுதியது அவர்தான்.
மள்வானை அல் யத்தாமா சர்வதேசப் பாடசாலை 1994ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதன் கீதத்தை கணிதப் பாட ஆசிரியரான ஷரிபுத்தீன் அவர்களின் வேண்டுதலின் பேரில் எம்எச்எம் ஷம்ஸ் அவர்கள்தான் எழுதினார்கள். அதுமட்டுமல்ல அதற்கு மெட்டிட்டு அவரே தன் குரலில் பாடி இசையும் அமைத்து ஒலிப்புதிவு செய்து எமது பாடசாலைக்கு அனுப்பியிருந்தார்.அந்த ஆளுமையை நேரில் சந்திக்கும் வாய்ப்பு ஒரு பேறாக கருதும் அளவுக்கு என்னில் விதைக்கப்பட்டிருந்தது.
இலக்கியம் தொடர்பான ஒரு செயலமர்வு விஷேடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது ஒரு விஹேட மாணவர் மன்றம் போல இருந்தது. அதற்காக மூன்று மணித்தியாலங்களை எமது பாடசாலை நிருவாகம் அவருக்காக ஒதுக்கியிருந்தது. ஒரு தனி நபருக்காக இவ்வளவு நேரம் ஒதுக்குகிறதென்னறால் ஷம்ஸ் என்ற ஆளுமையின் வசீகரம் எத்தகையது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
அன்றைய மன்றத்தின் ஒரேயொரு ஹீரோ ஷம்ஸ்தான். கதை சொன்னார், கவிதை சொன்னார், பல்வேறு ஹைக்கூக் கவிதைகளைச் சொன்னார், இன்னும் பல்வேறு உலகத் தகவல்கள் சொன்னார். பாட்டுப் பாடினார், இசைத்துப் பாடினார், வெண்புறாவே பாடலை கண்ணை மூடிக் கொண்டு ரசிக்கும்படி செய்தார், எல்லோரும் அவரை வியப்புடனேயே பார்த்துக் கொண்டிருந்தோம், எங்கள் பாடசலைக் கீத்ததையும் இறுதியாகப் பாடிவிட்டு ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள் என்று கேள்வி நேரத்தை அறிவித்தார்.
யாரும் எழும்பிக் கேள்வி கேட்கவில்லை அப்போது ஷம்ஸ் சிரித்துக் கொண்டே
கேள்விகள் எதுவும் கேட்காத அதிசயமான மாணவர் சமூகத்தை இன்றுதான் பார்க்கின்றேன்
என்றதும் உடனே நான் எழுந்து நின்றேன்.
எல்லோரும் என்னை மிகவும் ஏளனமாக் பார்த்தார்கள், அவர்களின் பார்வையைத் தவிர்த்துவிட்டு நான் ஷம்ஸை மட்டுமே நோக்கினேன்,
"நான் கொஞ்சம் வாசிக்கும் பழக்கமுள்ளவன் எனது வாசிப்பை எப்படி ஒழுங்கு படுத்திக் கொள்வது?" என்று கேட்டேன்
"அப்படி என்னென்ன இதுவரை வாசித்திருக்கின்றீர்கள்?" என்று அவர் மாறிக் கேட்டதும்
பலரும் சிரித்தார்கள் அந்தச் சிரிப்பொலி அடங்க இரண்டொரு நிமிடங்களானது. அவர் இரு கைகளையும் உயர்த்தி அமைதியாக இருக்கப் பணித்தார்.
"நீங்க சொல்லுங்க மகன்" என்றார்.
அம்புலிமாமாவில் தொடங்கி கோகுலம், ராணி காமிக்ஸ், சுஜாதா சுபா ராஜேஸ்குமார், ராஜேந்திர குமார், குப்புசாமி, மொழிவானன் என்று மர்மநாவல்கள் மற்றும் புராணங்கள், காப்பியங்கள், இதிகாசங்கள், பின்னர் சாண்டில்யன் டொக்டர் மு.வரதராசன், கல்கி, புதுமைப்பித்தன், வைரமுத்து, கண்ணதாசன், மு.மேத்தா, அப்துல் ரகுமான், என்று கடைசியாக சுந்தர ராமசாமியில் வந்து நின்றேன். அவ்வளவையும் சொல்லி முடிக்க பத்து நிமிடங்களுக்கு மேல் போயிருந்தது. ஷம்ஸ் எழுந்து வந்து என்னைக் கட்டித் தழுவிக் கொண்டார். எல்லோர் முன்னிலையிலும் எனை அழைத்துச் சென்று
"எனது இத்தனை வருட அனுபவத்தில் வாசிப்பில் முதிர்ந்த சிறுவனை இன்றுதான் பார்க்கின்றேன்" எல்லோரும் அவருக்காகக் கை தட்டுங்கள் என்றார். சிரித்து அவமானப் படுத்த நினைத்த அத்தனை பேருக்கும் அவர் அப்படித்தான் பதில் கொடுத்தார். எனக்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது. அதன் பின்னர் வாசிப்பை எப்படி ஒழுங்கு படுத்திக் கொள்ளலாம் என்று என்னையே பார்த்துக் கொண்டு ஆழமாகப் பேசினார்.
என்னிடம் எழுதுமாறு சொன்னார் எப்படி எழுதுவது என்று கேட்டேன் உங்கள் வாசிப்பனுபவம் உங்களை எழுத வைக்கும் நீங்கள் எழுதும் முதலாவது படைப்பை எனக்கு அனுப்பி வையுங்கள் நான் அதைப் பிரசுரிப்பேன் என்றார். எனக்குச் சில புத்தகங்களை அன்பளிப்புச் செய்தார் இன்னும் சில புத்தகங்களை அனுப்பி வைப்பதாகச் சொன்னார். அதன்படி அனுப்பியும் வைத்தார்.
நிகழ்வுகள் எல்லாம் முடிந்த பின்னர் என்னிடம்
"வாசி வாசி நன்றாக வாசி அதுதான் உன்னைத் தூக்கி நிறுத்தும், இதே வேகத்தில் வாசித்துக் கொண்டெ இரு ஒரு நாள் உன் எழுத்துக்கள் இந்தச் சமுதாயத்தில் சாட்டையடியாய் விழும் எதற்கும் அஞ்சாத பண்புடையோனாய் எழுது கோள் தூக்கு இன்றே எழுதத் தொடங்கு என்றார் அவருக்கு நான் வாரந்தோரும் கடிதம் எழுதினேன் ஒரு கடிதத்திற்கேனும் அவர் பதில் எழுதாமல் இருந்ததில்லை, விடுதியில் எங்களுக்கு வரும் கடிதங்களைப் படித்துவிட்டுத்தான் தருவார்கள் அதன் பிரகாரம் முயின் சேர் நீர் கொழும்பைச் சேர்ந்தவர், விடுதியின் மேலதிகாரி ஒரு வாசிக சாலையை நிலையத்தில் உருவாக்க எனக்கு அத்தனை உதவிகளையும் செய்தார் இன்றும் ஷம்ஸ் அவர்கள் கையெழுத்திட்டு அனுப்பி வைத்த நிறையப் புத்தகங்கள் அந்த வாசிக சாலையில் இருக்கின்றன.
நீண்ட நாட்களின் பின் எனது முதலாவது கவிதையை அனுப்பி வைத்தேன் 1998ம் ஆண்டு என்று நினைக்கின்றேன். தினகரன் புதுப் புனல் பகுதியில் மள்வானை முஸ்டீன் என்ற பெயரில் வெளிவந்திருந்தது.
ஷம்ஸ்தான் என்னைப் பட்டைதீட்டினார். எழுது என்று அவர் அன்று சொல்லி ஊக்கப்படுத்தாது விட்டிருந்தால் நான் ஒரு வாசகனாக மட்டுமே இருந்துவிட்டுப் போய் இருப்பேனோ என்று கூடத் தோன்றும்.
பத்தாம் வகுப்பு இறுதிக் காலத்தில் ஒரு மர்ம நாவல் எழுதிக் கொண்டிருந்தேன் அதை ஷம்ஸ் அவர்கட்கு அது குறித்து அறிவித்தேன். அவர் எழுதிய பதில் இன்றும் பசுமையாக நினைவில் இருக்கின்றது.
துப்பறியும் தொடர் எழுதுவதற்கு ஆயிரம் பேர் இருக்கின்றார்கள். அது போல ஆயிரம் துப்பறியும் நாவல்களை ஒன்றினைத்து ஒரு நாவல் போடலாம் காரணம் எல்லாம் ஒரே சரக்குதான், நீங்கள் சமுகத்தின் பக்கம் உங்கள் சிந்தனையைத் திருப்புங்கள் அந்தப் பிரச்சினைகளை எழுத்தாக்கம் செய்யுங்கள், எழுத வேண்டும்
என்றும் துப்பறியும் புலனாய்வு நாவல்களினை வாசித்ததன் தாக்கமும்தான் அப்படி எழுதத் தூண்டின. ஆனால் ஷம்ஸ் அதை ஆற்றுப்படுத்திய விதம் இன்றும் பசுமையாக நினைவுகளில் இருக்கின்றது. அரைவாசியோடு அந்த மர்மநாவல் முடிச்சவிழ்க்கப்படாமலேயே நிறுத்தப்பட்டது. இதே கருத்துக்களைத்தான் அக்கரைப்பற்று அக்பர் ஷபீக் என்ற எனது நண்பன் இஸ்லாமியப் பார்வையின் பக்கம் திசை திருப்பினான். ஷம்ஸ் எதுவும் சொல்லாமலேயே விட்டிருக்கலாம் அல்லது மேதாவித்தனம் காட்டியிருக்கலாம் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதுதான் ஷம்ஸ். அவர் ஆழமாக மனதில் பதிந்துவிடும்படியான பதில் என்னைத் திசை திருப்பியது.
ஷம்ஸ் அவர்கட்கு எனது வயதினர் இரண்டாவது தலைமுறை என்று நினைக்கின்றேன். மூன்றாவது தலைமுறைக்குக் ஷம்ஸ் என்ற ஆளுமையை அறிமுகப்படுத்த வேண்டியது எமது தலையாயக் கடமையென்று கருதுகின்றேன். அதைச் செய்ய எனது சம வயதினர்கள் எத்தனை பேர் தயார் என்பது நமக்கு முன்னால் உள்ள கேள்விக்குறி.
ஜாமியா நளீமிய்யாவில் இருக்கும் போதுதான் அவரின் கிராமத்துக் கனவுகள் படித்தேன். அதற்கு எதிராக கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் மௌலானா என்பவர் தனியாக ஒரு விமர்சனப் புத்தகமே போட்டார். ஆயினும் அந்தக் கருத்துச் சுதந்திரத்தில் அவர் கிராமத்துக் கணவுகள் நாவலை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்திருந்தால் பாராட்டியிருக்கலாம் ஆயினும் அதைச் செய்யாமல் வேறு எதையோ செய்துவிட்டுச் சென்றார் அதற்கெல்லாம் ஆட்டம் காணும் ஆளுமையாக ஷம்ஸ் இருக்கவில்லை. என்னைப் பொருத்தவரைக்கும் ஷம்ஸ் எப்போதும் எனது மனதில் இருப்பார் இலக்கியவாதியின் பணி என்ன என்பதையும் எழுத்தாற்றல் மிக்க ஒருவனின் முதன்மைத் தெரிவு எது என்பதையும் தெளிவுறுத்தியபடி.
இது போன்று இன்னும் சுவாரஷ்யமான பல விடயங்களைப் பேச ஆவல் இருக்கின்றது ஆயினும் நேரமிருக்காது இளைய சமுதாயத்தில் ஒருவரை எப்படி வழிநடாத்திச் செல்லும் போக்கை ஷம்ஸ் கடைப்பிடித்தார் என்பதைப் பற்றி தனியாகப் பேச வேண்டும் இன்னுமோர் சந்தர்ப்பம் வாய்த்தால் அதைப் பேசுவோம்.
அனைவருக்கும் நன்றி
வளவையின் மடியினிலே
என்னைப் புடம் போட்ட இலக்கிய ஆசான்களில் ஒருவரான எம்.எச்.எம் ஷம்ஸ் அவர்களின் சிறுகதைத் தொகுதியான வளவையின் மடியினிலே காலந்தாழ்த்தியாவது வெளி வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. கொழும்பிலிருந்து ரம்புக்கனை
(இந்தப் பதிவு விரைவில் அப்லோட் பண்ணப்படும்.)
No comments:
Post a Comment