Sunday, November 16, 2014

கருணாகரன் அவர்களின் நினைவுகளும் கனவுகளும் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை

காலத்தால் அழியாத பணி செய்து களித்திருத்தல்,
ஞாலத்தில் பினி நீக்கப் பணி செய்தல்
பிறர் பாராட்டும் கைதட்டும் பாரா  வண்ணம்,
உயிரைப் பணயமாய் வைத்திங்கு வாழ்ந்து கழிதல் 
பணமாய்த் தின்னப் பிணமாய் அலைந்து
வளமாய் வாழப் பிணங்கள் தின்று ரணமாய் ஆன வாழ்வு பல
வாழ்வில் புரியாத சூட்சுமங்கள் பலகோடி
மனிதர் மனங்களில் பதிந்து பதுங்கியிருக்கும் சூழ்ச்சி மயமும் பல கோடி
புன்னகையை நம்பவும் கண்ணீரைக் கண்டு கவலை கொள்ளவும் 
பாழாய்ப் போன மனது எங்கு பழகிக்  கொண்டதோ
இந்தப் பாழாய்ப் போன மனது எங்கு பழகிக் கொண்டதோ

எனது சிறுகதைத் தொகுதி வெளியீட்டுவிழாவின் போது இந்த வரிகளைச் சொல்லித்தான் ஆரம்பித்தேன். 
இன்றும் அதே வரிகளுடன் ஆரம்பிக்கவேண்டியேற்பட்டிற்று. காரணம் இருக்கிறது இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது அதை நீங்களும் உணர்ந்து கொள்வீர்கள்.

எழுதுவது ஒரு கடினமான பனி 
அதை விடக் கடினமானது அதைத் தட்டச்சுசெய்து பக்கவடிவமைப்பு செய்து அச்சுப்பிழைகள் திருத்தி, திருப்தியோடு பார்ப்பது,
அதைவிடக்கடினமானது அச்சேற்றி புத்தகமாகப் பார்ப்பது,
அதைவிடக் கடினமானது அதனை வெளியிட்டுவைக்க ஒரு விழா ஏற்பாடு செய்வது 
அதைவிடக் கடினமானதுஅவ்விழாவுக்கு ஆட்களை அழைப்பது, 
இதெல்லாவற்றையும் விட வலுகடினமானது புத்தகங்கள் அனைத்தையும் விற்றுத் தீர்ப்பது,

120 பக்கங்களுள்ள இத்தொகுப்பில் 40 கட்டுரைகள் வரை இருக்கின்றன. ஆங்காங்கே ஓரிரு அச்சுப்புபிழைகள் அது பெருங்குற்றமன்று. ஒப்புநோக்குவதில் நேர்ந்த தவறு மன்னிக்கத்தக்கதுதானே. 
மற்றபடி இத்தொகுப்பில் ஒரு பயணத்தை மேற்கொண்டுவிட்டு எனது மனப்பதிவுகளைப் பகிர்ந்து கொள்ள நாடுகின்றேன். 


ஒரே வரியில் சொல்வதானால் கருணாகரன் அவர்களின் நினைவுகளும் கனவுகளும் அவருக்கு மட்டுமானதல்ல அது எல்லோருக்குமானது. அவர் பகிர்ந்து கொள்ளும் நினைவுகள் மிக முக்கியமானவை, புங்குடு தீவைப் பற்றிப் பேசுகையில் நான் எனது ஊருக்குச் சென்று வாழ்ந்து வருமாறு பால்ய கால பசுமையான நினைவுகளுக்குள் தூக்கியெறியப்படுகின்றேன். ஒரு எழுத்தின் வெற்றிக்கு இது முக்கியமான பண்பு. அவர் சொல்லும் காடுகளுக்குள் நானும் புகுந்து நறுவிலி மரத்தின் கிளையொன்றைக் கஸ்டப்பட்டு உடைத்து அதன் கொழுந்து இலைகளைப் பறித்துச் சுவைத்துப் பார்க்கிறேன். அதன்புளிப்புச் சுவையில் அப்படியே மயங்கி காடு முழுக்க ஓடித்திரிகின்றேன். தவுட்டம் பழங்களைப்யும் தண்ணிச் சோற்றுப் பழங்களையும் பறித்து உண்டு மகிழ்கின்றேன். மைக்காய் பறித்து கைகளில் வைத்துப் பிசைந்து எனது கரங்களை நிறமாற்றிக்கொள்கின்றேன். 

கவிஞர் சோலைக்கிளியின் பத்திகளில்தான் இப்படியான நினைவுகளுக்குள் நான் அள்ளிவீசப்படுவதுண்டு அது போல வே.சு.கருணாகரண் அவர்களும் நமது நினைவுகளை மீட்டு நம்மிடம் பத்திரமாக ஒப்படைக்கின்றார். இந்த எழுத்துக்கள் ஊடாகத்தான் நான் புங்குடுதீவைத் தரிசித்தேன். அந்த மண்ணின் வாழ்வியல் அழகும் ஒழுங்கும் வரலாறும் இயற்கையும் மக்களும் மிக நெருக்கமாக என்னோடு இருப்பதை உணர்ந்தேன். புங்குடு தீவிற்கும் வேலனைக்கும் இடையில் கடற்பரப்பில் மூன்று மைல் தூரத்திற்கு பாலமமைத்த பெரியவானரும் சின்னவாணரும் மறக்கமுடியாத பாத்திரங்களாக மனதில் உலாவரத் தொடங்கினார்கள். இப்படிப்பல பாத்திரங்களை நமக்கு முன்னால் மிக எளிதாக அறிமுகப்படுத்திவிட்டு அவர்களிடம் கற்றுக் கொள்ள பல விடயங்கள் இருக்கின்றன என்பதை மௌனமாகச் சுட்டிவிட்டு நகர்கின்றார் கருணாகரன் அவர்கள். 

கவிஞர் சு.வி. யைத் தெரியாதவர்கள் இருக்க மாட்டீர்கள். என்று நினைக்கின்றேன். அவரை மறந்து போயிருந்தால் இந்தப் புத்தகம் பல வடிவங்களில் அவரை நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றது. முன்னால் அவருக்க சமர்ப்பண வரிகள் இருப்பதால் மட்டுமல்ல புத்தகத்தின் பெரும்பாலான இடங்களில் சுவியின் மீதும் நாம் இடறிவிழ வேண்டித்தான் இருக்கிறது.

எப்பேர்ப்பட்ட விடயங்களையெல்லாம் மறந்து ஒன்றுமே நடக்காதது போல அமைதியாக கடலை கொரித்துக் கொண்டிருப்பவர்கள் நாம். இந்த பாலாய்ப்போன பண்பு உலகில் பாதிக்கப்பட்ட எந்த இனத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தவில்லை ஆனால் என்னவோ தெரியவில்லை தமிழன் அதற்கு அடிமையாகிவிட்டான். கமுக்கமாக இருக்கப் பழகிக் கொண்டான். அச்சம் அடிமைப்படுத்திய இனம் உலகில் இருக்கிறதென்றால் அது இப்போதைக்கு தமிழன் மட்டும்தான். துவக்குகள் வெடிக்கத் துவங்கியது முதல் விழுந்த பிணங்களுக்கும் கலைந்த குடும்பங்களுக்கும் இழந்த பெறுமானங்களுக்கும் பெறுமதியென்ன என்பதைத் தீர்மானிக்க காலம் போதாது. அந்த வெடியோசை வெறும் மண்ணை மட்டும் விட்டுத் துரத்தவில்லை, 

கலையை கலாசாரத்தை பண்பாட்டை மொழியை ரசனையை பக்தியை ஆன்மீகத்தை அன்பை அழுகையை புன்னகையை நேசத்தை தோழமையை  பகைமையை எதிரியை நண்பனை நட்பை என்று அதன் பட்டியலை நீட்டிக்கொண்டே செல்லாம் ஒரு போதும் இழக்கக் கூடாத ரோசத்தைக் கூடவா அடியோடு சாய்த்துவிட்டது என்று எண்ணத் தோன்றும் அந்த எண்ணங்கள் நம்மில் விதைத்திருப்பது வெறும் கனவுகளை மட்டும்தான் அதுவும் காவுகொள்ளப்பட்ட கனவுகள். இன்னும் உயிர்ப்போடு இருப்பது அந்தக் கனவுகள் மட்டும்தான். அந்தக் கனவுகளின் பல்வேறு பரிமானங்களையும் ஏக்கங்களையும் பரிதவிப்புக்களையும் எதிர்பார்க்கைகளையும் மனதிற்குள் போட்டு அவித்துக் கொண்டு புழுங்கிக் கொண்டிருக்காமல் இங்கு கொஞ்சமாகக் கொட்டித் தீர்த்திருக்கிறார். 

அந்தக் கனவுகளுக்குள் புதையுண்டு கிடக்கும் ஏராளமான விடயங்கள் நம்மை சிந்திக்கத் தூண்டுகின்றன. அவர் வெளிப்படுத்திய கனவுகளுக்குள் தொக்கி நிற்கும் விடயங்களை ஆழமாக எழுத வெளிப்படையாக எழுத ஆக்ரோஷமாக வெளிப்படுத்த முடியாமல் பல இடங்களில் பேனை மௌனித்துப் போயிருப்பதை நான் அவதானித்தேன். அந்த மௌனத்திற்கு அர்த்தம் இருக்கும் ஆனால் ஒரு ரோஷக்காரனால் அந்த மௌனத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் போகும் என்பது எனது அபிப்பிராயம். 


துப்பாக்கி வெடித்த எல்லாத் தேசங்களிலும் நிகழ்ந்த துர்ப்பாக்கியம் ஏற்படுத்திய வெற்றிடமும் வெறுமையும் இங்கும் வெகு இயல்பாக எல்லாவற்றிலும் எதிரொலிக்கத்தான் செய்திருக்கிறது. அது விதைத்த எதிர்பார்ப்புகள் கனதி மிக்க பொழுதுகளை அவாவி நிற்பதிலும் 
நிராசைகள் அதிகமாகி ஒன்றினைந்து நம்மை அயர்ச்சியாக்கவதிலும் வென்றுவிடுகின்றன என்பதை சொல்லித்தானாக வேண்டும். 

பல தொழிற்சாலைகள் குறித்துக் கருணாகரன் அவர்கள் இங்கு பதிவு செய்கின்றார். அந்தப் பதிவுகள் வெறும் பதிவுகளாக மட்டும் இல்லை. அவை சொல்லவரும் செய்திகள் மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டிவை. ஒரு யுத்தம் எப்படிப்பட்ட அழிவுகளை நமக்குள் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புக்களை வெறும் புள்ளிவிபரங்கள் மட்டும்தான் சொல்லும் என்பதில்லை. ஏன் கனவுகள் கூடச் சொல்லும் நமது எதிர்பார்ப்புகள் கூடச் சொல்லும் வலிகளை வேதனைகளை இழப்புக்களைப் பற்றியெல்லாம் பட்டியல் போடும் நமக்கு வாழ்வியல் ஆதாரங்களின் மீது எப்படிக் கோரக்கரங்கள் ஆகோரமாய்ச் சித்திரம் வரையும் என்பதையும் சிற்பம் செதுக்கும் என்பதையும் அதை வரலாறாக்கும் என்பதையும் நமக்கு முன் லாவகமாக முன்வைத்துச் செல்லும் அரவது கனவுகளுக்கு நான் மதிப்பளிக்கின்றேன்.  வன்கரம் கொண்டு நசுக்கப்படும் எல்லாமும் ஒரு எல்லைவரைத்தான் பயணிக்க முடியும் என்பதை இந்த இடத்தில் ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன். 

அழிந்து போன தொழிற்சாலைகள் மீள் நிர்மானம் என்றபெயரால் அபிவிருத்தியென்ற பெயரால் ஆக்கிரமிக்கப்படும் அபாயங்களைப் புரிந்து கொள்ள நமக்கு இன்னும் நிறைய அவகாசம் தேவைப்படுகின்றது என்பதை வருத்தத்தோடு எத்திவைக்க விரும்புகின்றேன். கருணாகரன் அவர்களின் பதிவுகளுக்குள் புதைத்திருக்கும் ஆழமான எதிர்பார்ப்புகளை நாம் விளங்கிக் கொள்ளும் போது ஒர் ஆத்மார்த்தமான திருப்தியும் அமைதியும் உள்ளத்தின் ஓரத்தே அவாவோடு மையங்கொள்வதைத் தவிர்க்கவொனாது. 

யாழ் பகுதியைச் சூழவுள்ள பல தீவுகளைப் பற்றிய பல்வேறு குறிப்புக்களை இந்நூலில் கண்டு கொள்ள முடியும். அவை வரலாற்றையும் மண்ணையும் வளத்தையும் சொல்லிவிட்டுக் களத்தையும் சுட்டிக்காட்டுகின்றது. நிலமறிந்து விதை போடு என்பார்கள் அதற்குத் தேவையான அடிப்படை வழிகாட்டுதல்களை மேலோட்டமாகச் சொல்லிச் செல்லும் பல கட்டுரைகள் இங்கு இடம்பெற்றிருப்பதை வாசிக்கும் போது நீங்களும் அறிந்து கொள்வீர்கள். மண்ணை வளப்படுத்தும் எண்ணம் ஒருவனுக்குள் குடிகொண்டுவிட்டதென்றால் அவன் பசுமையைக் காதலிக்கத் தொடங்குவான் அந்தக் காதலின் அழுத்தம் அவனுள் இயற்கையின் மீதான பிரியத்தை இன்னும் அதிகப்படுத்தும் அந்தப்பிரியம் இறுதியில் பசுமையின் பால் கொண்டு சென்றுவிடும். இந்தச் சுழற்சி வெகுவாக திரு கருணாகரன் அவர்களுக்குள் நிகழ்ந்துவிட்டிருப்பதன் பிரதிபலிப்புக்கள்தான் அவரை மரநடுகையின் பக்கம் கவனம் செலுத்தச் செய்திருக்கின்றன. அவர் நட்டிய மரங்கள் இன்றும் பலருக்கும் பல விதத்திலும் பயன் நல்கிக்கொண்டிருப்பதை இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்கள். 

ஒருவன் மரம் நடத் தொடங்கிவிட்டால் போதும் அவன் வாழும் சூழலில் பெரு மாற்றங்கள் நிகழவும் மண் வளம் பெறவும் ஏதுவான காரணகள் தோற்றம் பெற்றுவிட்டதாக நாம் முடிவு செய்யலாம் . காரணம் அது ஆக்கப்பணி, பிறருக்காகச் செய்யப்படும் தூரநோக்குள்ள செயற்பாடு. நகரத்து வாழ்வுள் அமிழ்ந்து நம்மிடமிருந்து காணாமல் போனதொரு பண்பு அது. அதை மீண்டும் உயிர்ப்பித்து எடுப்பதென்றால் பூர்வீகத்தை நோக்கி நகர வேண்டிய தேவை ஏற்படுகின்றது நம்மில் எத்தனை பேர் அதற்குத் தயார். பிறந்த மண்ணை நோக்கி நகர்தல் என்பது இப்போது  அரசியல் சார்ந்த ஒரு விடயமாக முக்கிய திருப்பம் ஒன்றைப் பெற்றிருக்கும் தருணத்தில் அது குறித்துப் பேசுகின்றோம்


வெடிகுண்டு ஓசையைக் கேட்டு வெருண்டு இடம்பெயர்ந்தும் புலம்பெயர்ந்தும் போன பறவைகள் ஏன் இன்னும் எங்கள் வீட்டு முற்றங்களுக்குத் திரும்பி வரவில்லை
என்று கருணாகரன் அவர்கள் கேட்பதில் தொக்கி நிற்கும் விடயம் அதுதான். வீட்டு முற்றங்களில் மீண்டும் கொஞ்சிக்குலாவும் காலம் ஒன்றை எதிர்பார்க்கும் கணத்தில் 


எங்கள் மண்ணில் நாங்கள் மன்னர்கள்
எங்கள் வாழ்வில் குறுக்கிட எவறுமில்லை
எங்கள் வயல்கள் எங்களுடையவை
எங்கள் தெருக்கள் எங்களுடையன

என்ற சுவியின் வரிகளும்

இதம் தருமனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட்டாலும் 
பதந் திரு இரண்டும் மாறிப் பழி மிகுந்திழிவுற்றாலும்
சுதந்திர தேவி நின்னை தொழுதிடல் மறக்கிலேன்

என்ற பாரதியின் வரிகளும்

நமக்குச் சொல்வது! 

நமக்கான விடியல், நமக்கான மண், நமக்கான சுதந்திரம்,
நினைவுகளை அறுவடை செய்து கனவுகளை விதையுங்கள் 
நாளைய சந்ததி நிம்மதிப் பெருமூச்சுவிட
நன்றி

No comments:

Post a Comment