Wednesday, November 26, 2014

இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகள் 03


இலக்கியவாதிகள்:
ஜனூசின் குராலகி  கவிதை வீடியோ சீடி வெளியீட்டு விழாவின் போது இடம்பெற்ற சில நிகழ்வுகளே இக்குறிப்பை எழுதத் தூண்டின.

இலங்கை இலக்கியப் பரப்பில் யாருமே எழுத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் கிடையாது. இந்தியாவில்தான் கவிதையும் கதையும் பாட்டும் நாவலும் கட்டுரையும் தொழிலாகிவிட்டது. எல்லாவற்றிலும் காசு பார்க்க முடியும். பதிப்பகங்கள் கூட வியாபார மையங்களாகவே தம்மை மாற்றிக் கொண்டுள்ளன. பதித்பகங்களுக்கிடையே நடக்கும் போட்டியும் எழுத்தாளர்களுக்கிடையே எழும் போட்டியும் கூட படைப்பின் கணதியை முன்னிறுத்தி வருவது மிகவும் குறைவு. அதிகமானவை வருமானத்தின் அளவு தீர்மானிக்கும் பிரச்சனையாகவே அமைந்துவிடும் துர்பாக்கியமும் இல்லாமலில்லை. வருமானத்திற்கான போட்டியாகவே எழுத்தின் போட்டி அங்கு சூடுபிடித்து வெகுநாளாயிற்று. அதன் மூல கர்த்தாவாக சினமா இருப்பதும் எனது அவதானம். பிரபலம் என்பது கூட வருமானத்தின் அளவைத் தீர்மானிக்கும் மூல மந்திரமாகவே பார்க்கப்படும். அது அந்தச் சூழ்நிலைக்கும் அந்த மக்களுக்கும் சரி. ஆனால் நமக்கு??

நமது பதிப்புச் சூழல் மிகவும் வறுமைப்பட்டது பெரும்பாலும் படைப்பாளனே தனது படைப்பைப் பதிப்பிக்கும் செலவை முழுமையாகப் படைப்பாளியே சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது. இலங்கை தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் உதவியைப் பெற்று வெளியிட முடியும் ஆயினும் அது மட்டுப்படுத்தப்ட்டது. அல்லது புரவலர் புத்தகப் பூங்கா வெளியிட வேண்டும். மற்றபடி கொடகே  ஓரிரு வெளியீட்டுப்பணிகள் ஆங்காங்கே நடக்கும் மற்றபடி உள்ள அனைத்தையும் நான் சொல்லத் தேவையில்லை. இது இ;ப்படியே இருக்க எமது இலக்கியவாதிகளின் சோகக் கதையையும் கொஞ்சம் பார்த்தாக வேண்டும் அப்போதுதான் பின்னால் நான் சொல்ல வருகின்ற விடயங்களைப் புரிந்து கொள்ள முடியும். 
அன்மையில் யமுனா ராஜேந்திரன் ஒரு முகநூல் குறிப்பு போட்டிருந்தார் அதை அப்படியே தருகின்றேன். 
எனக்கு 99 வருஷம் 99 நாள் 99 நிமிஷம் 99 நாழிகையாக இருக்கிற கொடச்சல் கேள்வி இது. 99.99 சதவீதமான எழுத்தாளர்களும் படைப்பாளிகளும் தமது படைப்பைப் பற்றி பற்பலரும் பேசவேண்டும் என நினைக்கிறார்கள்இ ஸாரி ஆசைப்படுகிறார்கள். பிறிதொருவரது படைப்பு மிக நன்றாகவே இருக்கிறது என்று தோன்றினாலும் ஏன் அது பற்றி இவர்கள் 2 வரி மனம் திறந்து எழுதுவதில்லை? இவர்களால் சக மனிதனை நேசிக்க முடிவதில்லை என்பது எனது புரிதல். எனி எக்ஸ்பிளனேஷன் டியர்ஸ்
இதுதான் நமது நிலை. வாசித்துப் பிடித்துப் போன ஒன்றைப் பற்றி ஒரு குறிப்பு போடுவதே பெரிய விடயம். ஒரு பத்திரிகையில் அதன் அறிமுகக் குறிப்பு வரவேண்டுமானால் நூலின் 3 பிரதிகள் அனுப்ப வேண்டும். சின்னத் தீப்பெட்டி சைஸ்ல ஒரு அறிமுகக் குறிப்பு போட ஒருவன் மூன்று பிரதிகள்தான் கொடுக்க வேண்டும் என்பது மனிதபிமானற்றது. ஒரு பத்திரிகைக்... இது பற்றி பின்னர் பார்;போம். 
ஒரு படைப்பை வெளியிடுவதற்கு அவன் எடுக்கும் முயற்சிகள் எதையும் குறைத்து மதிப்பிட முடியாது. அதற்கு பின்னால் அவ்வளவு உழைப்பு இருக்கின்றது. அந்த  உழைப்பிற்பின் கஸ்டம் யாராவது எதையாவது இலவசமாகச் செய்து தரமாட்டார்களா என்று எதிர்பார்க்க வைக்கும். அப்படி இலவசமாக உதவுபவர்களை அப்படைப்பாளி மேலே தூக்கி வைத்திருப்பதையும் நாம் பரவலாக அவதானிக்க முடியும்.

ஒரு படைப்பாளியின் படைப்பு பற்றிய சரியான மதிப்பீட்டை மற்றுமொரு இலக்கியவாதியால்தான் சரியாகச் செய்ய முடியும். நமது சூழலைப் பொருத்த வரைக்கும் ஒரு வெளியீட்டு நிகழ்வென்பது பின்வருமாறு அமையும்.
எப்படியாவது கஸ்டப்பட்டு ஒரு படைப்பை முழுமைப்படுத்தி எடுத்துக் கொண்ட பின்னர் நான்கு தரப்பினரின் உதவியை பெரிதும் அவன் நாடுவான்.

01. செல்வந்தர்கள் : குறைந்தது ஆயிரம் ரூபாயாவது கொடுக்கக் கூடிய வர்த்தகர்கள் போன்ற வாசிப்பு இலக்கியம் படைப்பின் கனதி என்று எதையும் பெரிதும் அறியாத அவர்களின் பட்டியலைத் தயாரித்துக் கொள்வதும் அவர்களை அழைப்பதும். முதல் பிரதி சிறப்புப்பிரதி விஷேட பிரதி அதி விஷேட பிரதி என்று காசுத் தாள்களை இலக்கு வைத்து பிரதி பெறும் அதிதிகள் பட்டியலைத் தயாரித்துக் கொள்வது, அதன் மூலம் ஓரளவு செலவுகளையாவது ஈடுசெய்யலாம் என்ற ஒரேயொரு நப்பாசைதான், புரவலர் ஹாஸிம் ஒமர் ஐயாயிரம் ரூபாய் தரமாட்டார் என்றால் அவரை எந்தவொரு வெளியீட்டாளனும் முதல் பிரதிக்காகக் கண்டு கொள்ளவே மாட்டான். ஹாஸிம் பணத்திற்காக அழைக்கப்படாத ஒரு நிகழ்வு நான் தயாரித்த தீ நிழல் படத்தின் திரையிடும் நிகழ்வாகத்தான் இருக்கும் என்று நான் கருதுகின்றேன். பெருந் தொகை தரும் நபருக்கு முதல் பிரதி கொடுத்தல் என்ற நிலை தோன்றி வெகுநாளாயிற்று. வறுமைப்பட்ட படைப்பாளிகள் தம்மால் முடிந்த ஒரு சிறிய தொகையை வைத்து அந்தப்பிரதிகளைப் பெற்றுக் கொள்வார்கள். இளையவர்கள் பலரின் இலக்கியக் கூட்டங்களுக்கு செல்வந்தர்களைப் போல இவர்கள் அழைக்கப்படுவதில்லையாயினும் முக்கிய வெளியீட்டு நிகழ்வுகளுக்கு அவர்கள் பிரசன்னமாயிருப்பார்கள்.

02. அரசியல்வாதிகள் : ஒரு பிரபலத்துக்காக இவர்கள் அழைக்கப்படுவார்கள். இவர்களால் சாதாரணமான படைப்பாளிக்கு பெரிய பொருளாதார நன்மைகள் கிடைக்கமாட்டாது. அவர்களோடு ஏதோவோர் விதத்தில் தொடர்பு வைத்திருந்தால் மட்டுமே அவர்கள் நிகழ்வுக்கு வருவார்கள். இல்லாவிட்டால் வரமாட்டார்கள். அல்லது இவர்களைக் கொண்டு ஏதாவது அரசியல் லாபம் அடையக் கூடிய வகையில் களம் இருந்தால் வருவார்கள். அத்துடன் மிகவும் வேண்டப்பட்டவர்களின் நிகழ்வாக இருந்தால் அது அரசியல் வாதிகளிடமிருந்து பெரியதோர் தொகையைப் பெற்றுத்தரும். இது இப்படியே இருக்க  இவர்கள் வந்தால்தான் மூன்றாவது தரப்பினர் வருவார்கள். 

03. ஊடகவியலாளர்கள் : நம் நாட்டில் மிகவும் பாவப்பட்ட வர்க்கம். பெயரும் புகழும் ஒரு காலத்தில் ஓங்கியிருந்ததது ஆயினும் இப்போது ஓரளவு பிரபலம் என்பதைத் தவிர வேறு எதுவுமே மிச்சமில்லை. குறிப்பிட்ட ஒரு சிலர் மாத்திரமே தேடலும் வாசிப்பும் பன்முகச் சிந்தனையும் புத்தாக்க ஆற்றலுமிக்கவர்களாக இருக்கின்றார்கள் மற்றபடி 95 வீதமானவர்கள் குரல் வித்தை காட்டும் வித்தகர்கள் மாத்திரமே. சுய புத்தியுமில்லாத சொல்புத்தியுமில்லாத ஒழுக்கமில்லாத கேடுகெட்டதுகளும் ஊடகவியலாளர்கள் என்ற மகுடத்தோடு அலைவதுதான் மன வேதனை. இவர்களாலும் இலக்கியம் பெரிதாகச் செழிப்பதில்லை ஆனாலும் படைப்பு குறித்த செய்திகள் மக்கள்மயப்பட வேண்டுமாயின் படைப்பாளிகள் இவர்களின் தயவை வேண்டி நிற்பது தவிர்க்கவொன்னாதாகிற்று. இப்போது சமூக வலைத்தளங்களின் பரவல் இந்தத் தயவின் பாதியைக் குறைத்துவிட்டது எனலாம். முந்தியொரு காலத்தில் இருந்தார்கள் ஊடகவியலாளர்கள் இலக்கணம் சொல்ல அவர்கள் பெயரை உச்சரிக்கலாம். பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி எல்லாவற்றிலும். 

04. இலக்கியவாதிகள் :  விரும்பியோ விரும்பாமலோ ஒரு படைப்பு குறித்து தெளிவான மதிப்பீட்டை இவர்களிடமிருந்துதான் பெற முடியும். பேராசிரியர்கள் போலவோ அல்லது ஆய்வு செய்யும் மாணவர்கள் போலவோ இவர்கள் ஒரு நோக்கத்துக்காக மட்டும் செயற்பட்டு இளைப்பாறுவதில்லை, ஆய்வும் மதிப்பீடும் தேடலும் புதியவற்றை எப்போதுமே அப்டேட் செய்துகொண்டுமிருப்பார்கள் யமுனா ராஜேந்திரனையே இங்கு அழகிய உதாரணமாகக் கொள்ளலாம். வினைத்திறன் மிக்க சில படைப்பாளிகளாலேயே சரியான மதிப்பீடுகளும் செய்யப்படுகின்றன அவைதான் ஒரு படைப்பின் இருத்தலை மெய்ப்பிக்கும் வழி என்பதைப் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமானது கிடையாது. எப்போதோ ஒரு படைப்பைச் செய்துவிட்டு ஒருகாலத்தில் எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானையிருந்தது என்ற தோரனையில் செழிப்பற்றுப் போய் வரண்ட படைப்பாளிகளை விடவும் இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் படைப்பாளிகள் மிக முக்கியமானவர்கள். வயது ஏறஏற சில படைப்பாளிகளுக்கு மூளை வேலை செய்வதில்லை அப்படிப்பட்ட படைப்பாளிகளின் செயல்பாடுகள்தான் சில சமயங்களில் நம்மை அயர்ச்சிக்குள்ளாக்கும். ஒரு நிகழ்வில் அவர்களுக்கென்று ஏதாவது ஒரு பெயர் சொல்லும்படியான விடயதானம் கொடுக்கப்பட்டால் மட்டுமே அவர்கள் நிகழ்வுக்குப் பிரசன்னமாவார்கள். குறைந்தபட்சம் ஒரு வாழ்த்துரையேனும். 

அது தவிர படைப்பிலக்கியத்தில் நிதானமாக அறிவார்த்தமாக இயங்கிக் கொண்டிருப்பவர்கள் எப்போதும் நமது கவனத்தைப் பெறுவார்கள். அவர்கள் முகத்தாச்சினைக்கு மாப்ள கூட்டும் வேலையைச் செய்யமாட்டார்கள். ஒருவரின் எழுச்சியோ வீழ்ச்சியோ அவர்களைப் பாதிப்பதில்லை, அந்தப்படைப்பாளுமைகளின் தொடர்ச்சியான இயக்கத்துக்கு முன்னால் பம்மாத்துதாரிகள் நின்றுபிடிக்க முடியாது. சும்மா வளவளா பேர்வழிகளைப் போல யாரைப் பற்றியாவது புறனி கதைப்பதைவிட ஏதாவது ஒரு படைப்பைப்பற்றிய கருத்தாடலையே அங்கு செவியுற முடியும். முரண்பாட்டை முகத்திலடித்தாற் போலச் சொல்லிடும் தைரியம் அங்குதான் பிறக்கும். எஸ்.பொ.வும் கா.சிவத்தம்பியும் முரண்பட்டு நின்றார்களே! அது போலவும் எஸ்போ பகிரங்கமாக எல்லாவற்றையும் போட்டு உடைத்துக் கொண்டிருந்தாரே அது போலவும். (இதை எழுதிக் கொண்டிருக்கும் போது எஸ்போ அவுஸ்திரேலியாவில் காலமான செய்தி கிடைத்து துக்கமடைந்தேன் அவர் மரணிக்கும் போதும் ஒருவன் அவரைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கின்றானே என்று நினைத்த போது மிகுதியைத் தொடரும் மனநிலை இயல்பாய் வாய்த்தது)  நமது கருத்தியலை உரத்துச் சொல்ல எதற்கு இடக்கு மடக்கும் மறைமுகச் சொற்பாவனையும் இதுதான் பிரச்சினையென்று சொல்லிவிட்டு நிமிரும் படைப்பாளிகள் நம்மிடத்தில் மிகவும் குறைவு. இருப்பவர்களின் இயங்குதளமும் அவ்வளவு லேசுபட்டதல்ல அதை அவ்வளவு எளிதில் யாராலும் எதனாலும் தகர்த்தவிட முடியாது.
(நாங்களும் புத்திஜீவிதான் என்று மற்றவர்கள் நம்பும்படியாக எழுதும் நபர்களை இங்கு உள்ளடக்கவில்லை அது பற்றி எங்காவது பொருத்தமான ஒரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்)

இதெல்லாம் இப்படியே இருக்க தனது படைப்பொன்றின் வெளியீட்டைச் செய்கின்ற ஒருவன் இதில் யாரை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்க ஒரு கஸ்டமும் கிடையாது. 

02

அன்மையில் குரலாகி என்ற டிவீடி ஒன்றின் வெளியீட்டு விழா தபால் தலைமையகக் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. அன்பர் ஜனூஸ் தனது கவிதைகளை இலங்கையின் பல்வேறு ஒலி-ஒளி பரப்பாளர்களின் குரலில் அதைப்  பதிவு செய்திருந்தார். பல பிரபங்களின் குரல்களும் அதில் அடக்கம். ஜனூஸ் மீதிருந்த அன்பின் காரணமாக அவர் எடுக்கும் முயற்சி வெற்றி பெறவும்தான் அவர்கள் ஒத்துழைத்திருப்பார்கள் என்று கருதுகின்றேன். 

நிகழ்வுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக தொலைபேசி அழைப்பொன்றின் மூலமாக தனது வெளியீட்டுவிழாவுக்கு ஷாமிலாவையும் என்னையும் அழைத்தார். சில பல அசௌகரியங்களைத் தவிர்ந்து கொள்வதற்காக நிகழ்ச்சி நிரலைப் பார்த்துவிட்டு போகும் பழக்கத்தை இப்போது கடைப்பிடிப்பதால் அழைப்பிதழை ஈமெய்ல் பண்ணச் சொன்னேன். முதலாவது நிகழ்ச்சித் தொகுப்பு யார் என்று பார்த்தேன் அஹமட் எம் நஸீர் மற்றும் அனுஷா மொறாயஸ் என்று இருந்தது. மதிப்புக்குரிய அஷ்ரப் சிஹாப்தீன் எழுத்தாளர் உமா வரதராஜன் மற்றும்; முஷாரப் ஆகியோர் உரையாற்றுவதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹகீம் பிரதம அதிதி என்றும் இருந்தது. அதற்காகவே விழாவுக்குச் செல்ல முடிவெடுத்தேன். நடந்து கொண்டிருக்கும் ஜனாபதித் தேர்தல் இழுபறி குறித்து ஹகீம் ஏதாவது அறிவிப்புச் செய்யவார் என்பதற்காக மட்டுமே அவரின் பெயரைப் பார்த்து போகலாம் என்று முடிவெடுத்தேன். என்னுடன் ஒரு தலைசிறந்த வளவாளரும் சமூக ஆர்வலரும் வர்த்தப் பிரமுகருமான இல்யாஸ் பாபு அவர்களையும் அழைத்துச் சென்றிருந்தேன். 
இது இப்படியே இருக்க ஜனூஸ் பற்றிய எனது மதிப்பீட்டைப் பதிவதும் நல்லது.

அவரின் தாக்கத்தி கவிதை நூல் வெளியீட்டு விழாவினைத் தொகுத்து வழங்க ஷாமிலாவை அழைத்திருந்த போது தைபொய்ட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அசையக் கூடாது கட்டிலிலேயே இரண்டு மாதத்திற்கு இருக்க வேண்டும் என்று வைத்தியர் போட்ட உத்தரவையும் மீறி கடன்வாங்கிக் கொண்டு கொழும்பிலிருந்து சாய்ந்த மருதுக்குச் சென்றிருந்தாள். தாக்கத்தி கவிதைகளைப் படித்துவிட்டு ஜனூஸிற்கு கைப்பட ஒரு கடிதமும் எழுதி அனுப்பியிருந்தேன். அக்கடிதம் இருந்தால் அவரே  பதிவேற்றமும் செய்யட்டும். பின்னர் அவர் அனுப்பிய அவரது பெத்தம்மா என்ற குறும்படத்தைப் பார்த்தேன் அதன்பிறகு அவரதும் அவரது நண்பர்களதும் குறும்பட முயற்சிகளை அனுப்பியிருந்தார் அவை அனைத்தையும் பார்த்துவிட்டு எழுதலாம் என்று நினைத்தும் அமைதி காத்தேன் ஜனூஸ் நல்லதொரு படைப்பைத்தருவான் என்ற எதிர்பார்ப்பில்.
அப்படியிருக்கும் போதுதான் குரலாகி என்ற கவிதை டிவிடி வெளியீடு.
இது இப்படியே இருக்க 
கவிதை ஒளி ஒலி யாக்கம் பற்றிப் பார்த்துவிடுவோம்

கவிக்கோ அப்துர் ரஹ்மானின் ஆலாபனை அவரது குரலிலேயே ஒலிவடிவில் வந்திருந்தது 2000மாம் ஆண்டு அதைச் செவிமடுக்க முடிந்தது ஆயினும் எத்தனையாம் ஆண்டு வெளிவந்தது என்பது தெரியாது. 

2004 குவைத்தில் இருக்கும் போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நண்பர் தனது கவிதைகளுக்கு வீடியோ இணைப்புச் செய்து கொண்டிருந்தார்   அதை வெளியிட்டாரா இல்லையா என்பது தெரியாது. அவரது முயற்சிக்குப் பின்னர்தான் கவிதைக்கு விஷூவல் செய்யும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது

2005ல் அமுதம் என்ற விடியோ சஞ்சிகையின் முதல் இதழை குவைத் ஐஐசியின் அனுசரனையில் குவைத்திலேயே வெளியிட்டேன் அதில் சில கவிதைகளுக்கு விடியோ வடிவம் கொடுத்தேன் 2007 ஆகும் போது கிட்டத்தட்ட அமுதம் விடியோ சஞ்சிகைக்காக பதினைந்து கவிதைகள்வரை விடியோ இணைப்புச் செய்யப்பட்டன.

2006ஆம் ஆண்டு தேர்தெடுக்கப்பட்ட  பலஸ்தீனக் கவிதைகள் விஷூவலாக்கம் செய்யப்பட்டன அவற்றுக்கான கவிதைகள் பன்னாமத்துக் கவிராயர் மொழிபெயர்த்த காற்றின் மௌனம் என்ற தொகுதியிலிருந்தும் எம்.ஏ.நுஃமான் மொழியெர்த்த பலஸ்தீனக் கவிதைகள் தொகுதியிலிருந்தும் பெறப்பட்டன. இருபது கவிதைகள் அவ்வாறு வெளியிடப்பட்டன. அக்கவிதைகளுக்கான கனிசமான ஓவியங்களை ஓவியரும் கவிஞருமான எஸ்.நளீம், ரியோ ஸ்ரூடியோ மஹ்ரூப் ஈஸா லெப்பை, புதிரோவியன் ஏயெம் சமீம் மற்றும் வாழைச்சேனை அந்நூர் பாடசாலை மாணவ மாணவிகள் வரைந்திருந்திருந்தனர். இன்னும் கனிசமான படங்கள் அல்முஜ்தமஃ சஞ்சிகையிலிருந்தும் பெறப்பட்டன. இலங்கைச் சூழலில் அதுதான் முதலாவது விஷூவல் கவிதைத் தொகுப்பாக இருக்கவேண்டும் என்று நம்புகின்றேன்.  

2007 களில் சோலைக்கிளி, அஷ்ரப் ஷிஹாப்தீன், ஓட்டமாவடி அறபாத், எஸ்.நளீம், ஏஜியெம் ஸதக்கா, அக்கரைப்பற்று அக்பர் ஷபீக், முல்லை முஸ்ரிபா, பஹீமா ஜஹான், வை .அஹமது பாலைநகர் ஜிப்ரி, அஜ்வத் அலி போன்றவர்களின் இவ்விரு கவிதைகள் விஷூவலாக்கம் செய்யப்பட்டன ஆயினும் அவை தொகுப்பாக வெளிவரவில்லை, 

2008களில் கவிஞர் வைரமுத்துவின் கவிதைகள் பல விஷூவலாக்கம் செய்ய்பட்டன சன் ரீவி அல்லது ராஜ் ரீவியில் அவை ஒளிபரப்பாகின, தனிச் சீடியாக வெளிவந்ததா என்பது தெரியவில்லை.
https://www.youtube.com/watch?v=_L0GqXuhqas

ஐ.அலைவரிசை பிரவாகம் நிகழ்ச்சிக்காகவும் நேத்ரா தொலைக்காட்சியின் நான்காவது பரிமானம் அல்லது கோடை மழை நிகழ்ச்சிக்காக பல கவிதைகள் எம்.ஐ.ஜாபிர் அவர்களால் விஷூவலாக்கம் செய்யப்பட்டன

வசந்தம் தொலைக்காட்சி தூவானம் நிகழ்ச்சிக்காக கவிஞர் பொத்துவில் அஸ்மின் பல கவிதைகளை விஷூவலாக்கி இருந்தார். 

2012களில்  எனது மௌனப் போரும் புன்னகை ஆயுதமும் கவிதைத் தொகுயிலிருந்து மூன்று கவிதைகள் விஷூவலாக்கப்பட்டன,
01.https://www.youtube.com/watch?v=zMK4UrMhudg&list=UUsgb6uf9-Ula-yeAv59snqQ&index=60
02.https://www.youtube.com/watch?v=2jQbGQBPd7M&list=UUsgb6uf9-Ula-yeAv59snqQ&index=61
03.https://www.youtube.com/watch?v=uqdGCNFqd4s&list=UUsgb6uf9-Ula-yeAv59snqQ&index=62
2012ஆம் ஆண்டு ஜூலை ஷாமிலா செரீபின் நிலவின் கீறல்கள் என்ற தொகுதியில் 45 கவிதைகளும் முழுமையாக அவரது குரலிலேயே ஒலிப்திவு செய்யப்பட்டு மிக நேர்த்தியான ஒரு ஓடியோ புத்தகமாகவும் வெளிவந்தது. 
https://www.youtube.com/watch?v=6hn8TN86jvo&index=13&list=UUsgb6uf9-Ula-yeAv59snqQ
https://www.youtube.com/playlist?list=UUsgb6uf9-Ula-yeAv59snqQ
2012 நவம்பர் ஸர்மிலா செய்யதின் சிறகு முளைத்த பெண் கவிதைத் தொகுதியில் இருந்து இரண்டு கவிதைகள் விஷூவலாக்கப்பட்டன
01.https://www.youtube.com/watch?v=6miT8r3ZljA&index=4&list=UUsgb6uf9-Ula-yeAv59snqQ
02.https://www.youtube.com/watch?v=2Ld-OYb6BR0&index=5&list=UUsgb6uf9-Ula-yeAv59snqQ
2014 செப்தம்பர் முல்லை முஸ்ரிபாவின் சொல்லில் உறைந்து போதல் தொகுதியில் இருந்து இரண்டு கவிதைகள் விஷூவலாக்கப்பட்டன
01.https://www.youtube.com/watch?v=6-joW7eTcSA&list=UUsgb6uf9-Ula-yeAv59snqQ
02. https://www.youtube.com/watch?v=xXCptNsg5sM&list=UUsgb6uf9-Ula-yeAv59snqQ&index=2
2014 நவம்பர் ஜனூசின் குரலாகி எனும் பெயரில் அவரது கவிதைகள் விஷூவலாக்கப்பட்டு தனித் தொகுதியாக வெளிவந்துள்ளது.

ஜனூஸ் நிறைய சாதிக்க வேண்டும் எண்ணத்துடன் செயற்படுபவர் என்பது தெரிகின்றது ஆசைப்படும் அளவுக்கு தனது ஆளுமையை மெருகேற்றிக் கொள்ள அவ்வளவு முயற்சியெடுப்பதில்லை என்பதை  அரச திரைப்படப்பிரிவின் பயிற்சி நெறிக்காகத் தெரிவு செய்யப்பட்ட போதும் நான்கு மாதங்கள் நடந்த பயிற்சிக்கு நான்கு நாட்கள் மட்டுமே சமுகமளித்தன் மூலம் புரிந்து கொண்டேன். அத்துடன் பெத்தம்மா குறும்படத்தில் உள்ள குறைபாடுகள் அனைத்தையும் சுட்டியும் காட்டினேன். குறிப்பாக விடியோ ஜம்ப், அரச திரைப்படப்பிரிவின் பயிற்சியில் முழுமையாக அவர்கலந்து கொண்டிருந்தாலே போதும் படப்பிடிப்பு சாதனங்களைக் கையாளவும் ஒலி ஒளிச் செம்மையாக்கலில் புலமை பெறவும் அது உதவியிருக்கும். இலங்கை சினமாவின் மிகப் பிரபலமான இயக்குநர்கள், கேமரா மேன், மற்றும் தொழிநுட்ப வல்லுநர்கள் அளித்த பயிற்சி மிக நிறைவானது. சிங்களப் புலமை போதாமை என்பது ஒரு காரணமல்ல திரை மொழியே தனி மொழி அதற்கு இன்னொரு மொழி சப்டைட்டில் மாதிரித்தான் அந்தப்பயிற்சியின் எடிட்டிங் சம்பந்தப்பட்ட எட்டுவகுப்புக்களையும் புறக்கனிக்காது விட்டிருந்தால் குரலாகி மிக நேர்த்தியான விஷூவலாகி இருக்கும். பொடு போக்கு ஒரு கலைஞனை அழித்துவிடும். அவனது ஆசைகளை அது கனவாக்கிவிடும் அவன் சாதனைகளை அர்த்தமற்றதாக்கிவிடும். 

பெத்தம்மா என்பது எனக்குக் குறும்பட முயற்சியாகவே தெரிந்தது. சினமா தெரிந்த அனைவருக்கும் அது குறும்பட முயற்சியாகவே தெரியும் ஆயினும் அவரது பல குறிப்புகளில் அது திரைப்படம் என்றும், ஆவணப்படம் என்றும் குறும்படம் என்றும் பதிவு செய்யப்பட்டிருந்ததை அவதானித்து ஒரு முறை முகநூலிலும் ஓரிடத்தில் அவதானித்தபோது அது குறித்து கேள்வியும் எழுப்பியிருந்தேன். குரலாகி வெளியீட்டு நிகழ்விலும் அது ஆவணப்படம் என்றே பல முறை அறிவிக்கப்பட்டது. நமது படைப்பு குறித்து நமக்குத் தெளிவு இருக்க வேண்டும் நாம் என்ன செய்கின்றோம் என்பதில் நமக்கு தெளிவில்லாவிட்டால் பெறுமானமிழப்பது நாம்தான். ஒரு கலைஞன் அதுவும் காட்சியூடகத்தில் தடம் பதிக்கும் ஒருவன் தன்னை அப்டேட் பண்ணிக் கோண்டேதான் இருக்க வேண்டும். அவன் சினமாவில் தடம் பதித்தால் உலக சினமாவை நோக்கி நகர வேண்டும் உலகின் தரமான படைப்புக்களைத் தேடித் தேடிப்பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தத் துறை நம்மை விட்டும் வெகு தூரம் பயணித்துப் போய் துறைக்கும் நமக்குமிடையே பல மைல் தூரம் இடைவெளியேற்பட்டுவிடும்.

மிகவும் கஸ்ட்பட்டு பெருஞ் செலவு செய்து பிரியானி செய்யப் போய் அது குழைந்து புக்கையான பின்னரும் அதை பிரியானி என்று கொண்டாடுவது அர்த்தமற்றது என்பது எனது அபிப்பிராயம். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் கருத்துக்களம் நிகழ்வில் எமது சினமா முயற்சிகள் என்ற தலைப்பில் உரையாற்றும் போதும் இந்தவிடயத்தைச் சுட்டிக்காட்டினேன். நாம் கஸ்டப்படுகின்றோம் என்பதற்காக தரமற்றது தரமாகாது. நமது கஸ்டத்திற்கு அர்த்தம் வேண்டும். ஒரு முறை தவறலாம் இரு முறை தவறலாம் தொடர்ந்தும் தவறிக் கொண்டிருந்தால் நமது வீட்டுக்கு விருந்தாளிகள் வரமாட்டார்கள் நமது உணவைச் சுவைக்கமாட்டார்கள். ஆனாலும் அப்போதும் சீச்சீ அது பிரியாணிதான் என்று மார் தட்டிக் கொண்டிருந்தால் பிரியானிபற்றித் தெரியாத ஒருவனுக்கு அது மன்னுஸ்ஸல்வா மாதிரித் தோன்றலாம். தரம் மிகவும் முக்கியம் அதைப் பேணுவதில்தான் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும். சாதிக்கத் துடிக்கும் ஒருவனுக்கு இது மிக முக்கியமானது.
தன்னிலை சார் பலவீணங்களைக் களைந்து ஜனூஸ் அர்த்தமுள்ள ஒரு படைப்பாளியாக தடம் பதிக்க எனது வாழ்த்துக்கள்.

குரலாகி வெளியீட்டுவிழாவில் சனூஸ் முகமட் பெரோஸ் ஒரு விடயத்தைச் சொன்னார். மைக்கிற்கு முன்னால் மிக அமைதியாக தனக்குப் பக்கத்தில் இருக்கும் நண்பனுடன் பேசுவது போலப் பேச வேண்டும் சும்மா காட்டுக் கத்தல் கத்தக் கூடாது அப்படிக் கத்தினால் பைத்தியகாரன் என்பார்கள் ஆயினும் அதை நிகழ்ச்சித் தொகுப்பாளர் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. இடி இடித்து அடைமழை பெய்வது போல காதுக்குள் உங்கள் பலத்த கரகோசங்களுக்கு மத்தியில் அன்புடன் மேடைக்கு அழைக்கிறோம் என்று மேடையில் இருப்பவர்களையும் மீண்டும் மீண்டும் மேடைக்கு அழைத்து அப்பப்பா அந்த வார்த்தைகள் செக்கனுக்கு செக்கன் முழங்கியது கிராமப்புரத்து ஸ்போர்ட் மீட் ஒன்றில் ஹை லெவலில் ஸவுண்ட் வைக்க்பட்ட பழைய காலத்து கொரகொர ஸ்பீக்கருக்கு முன்னால் அமர்ந்து இருந்தமாதிரியான அசௌகரியத்தை ஏற்படுத்திற்று. ஜனூசின் விழாவின் முதல் தோழ்வி அந்த ஆண் அறிவிப்பாளர். அனூஷா மட்டுமே நிகழ்வைத் தொகுத்துவழங்கியிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். எஸ்.எழில் வேந்தன் தொகுத்து வழங்கும் எந்த நிகழ்வாயினும் அதற்கு அழையாமலேயே நான் சென்றுவிடுவேன் காரணம் அவரின் அலட்டல் இல்லாத அறிவிப்பும் தொகுத்து வழங்கும் நேர்த்தியும்தான். சீனி பாவிக்காமல் சுத்தமான கருப்பட்டி மட்டும் பாவித்துச் செய்த வட்டிலாப்பம் போல அப்படியொரு இனிமை.

நான் நினைக்கின்றேன் குறித்த அறிவிப்பாளருக்கு ஒரு படைப்பின் வெளியீட்டுவிழா என்றால் என்ன என்பது தெரியவே தெரியாது. 
அதற்கு அறிவிப்புச் செய்வது எப்படியென்பதே தெரியாது 
மேடை இங்கிதம் தெரியவே தெரியாது. நீதிபதி வக்கீலுடன் வாதாடுவதற்குச் சமமானது அவர் நடத்தை. அதைப் பற்றி  பின்னர் பார்ப்போம்.

எப்போதும் ஒரு விழாவிற்கு குறித்த படைப்பு பற்றி உரையாற்ற அழைக்கப்படுபவர் மேடையில் அமர்த்தப்படுவதுதான் சம்பிரதாயம். பிரதம அதிதிக்கு அடுத்த படியாக கௌரவப்படுத்தப்பட வேண்டியவர் அவர். ஜனூசின் நிகழ்ச்சி நிரலில் அஷ்ரப் சிஹாப்தீன், உமாவரத ராஜன், முஷாரப் ஆகியோர் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தனர், அரசியல் வாதிகளுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் அதிகமாக இருந்தது. பேச்சாளர்கள் மேடைக்கு அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டமையானது துரதிஷ்டவசமானது. ரவுப் ஹக்கீம் கூட ஜனூசைப் பற்றியோ அல்லது ஜனூசின் கவிதைபற்றியோ இனி எங்குமே பேசப் போவதுமில்லை ஞாபகப்படுத்தப் போவதுமில்லை. நிகழ்வு முடிந்த கையோடு அனைத்தையும் அவர் மறந்து போயிருப்பார். அரசியல் வாதியின் குணம் அத்தகையது. தன்னை வெல்ல வைத்த மக்களுக்குத் தான் அளித்த வாக்குறுதிகளையே மறந்து அந்தர் பல்டி அடிக்கும் அவர்களுக்கு இதெல்லாம் ஒரு விடயமே கிடையாது. ஆனால் படைப்பாளி அப்படியல்ல அவன் கலந்து ஒவ்வொரு நிகழ்விலும் தான் எழுதும் சந்தர்;ப்பங்களிலும் பொருத்தமானது தரமானது எனக்கண்டால் அதைச் சேர்த்துக் கொள்வான் அதை ஞாபகம் வைத்துக் கொள்வான், நினைவு கூர்வான் பதிவு செய்வான் இன்னும் பலருக்கும் அறிமுகம் செய்வான். 

ஆக அஷ்ரப் ஷிஹாப்தீன் தான் அவமதிக்கப்பட்டமைக்காக எழுந்து சென்றுவிட்டமையில் தவறேதும் இல்லை, தனது ஆதங்கத்தை முகநூலில் போட்டதில் தப்புமில்லை அது அவரது உரிமை. அது போல முஸாரப் அதை மேடையில் வாசித்துக் காட்டியதிலும் தவறு இருப்பதாக எனக்குப்படவில்லை, முஸார்ரப் படைப்பு குறித்தும் விஷூவல் குறித்தும் கருத்துச் சொல்லும் போது எனக்குப் பக்கத்தில் இருந்த கிராமத்தான் கலீபாவிடம் நான் சொன்னவிடயம் எனது கருத்து எதுவோ அதைத்தான் முஸர்ரப் வெளிப்படுத்துகின்றான். முஸர்ரப் படைப்பு குறித்துக் கூறிய கருத்துக்களை ஜீரணிக்க முடியாவிட்டால் அவனைப் பேசுவதற்கு அழைத்திருக்கக் கூடாது. அதில் சதியேதுமில்லை மேலே பதிவு செய்யப்பட்ட எனது கருத்துக்களை நிதானமாக வாசிக்கும் போது அதைப் புரிந்து கொள்ளலாம். 

முஸர்ரபின் தனிப்பட்ட நடத்தைகள் தொடர்பில் எனக்கு நிறையவே அதிருப்தி இருக்கின்றது. அதற்கு இதுவல்ல தளம் இது ஜனூசுக்குரியது. நானும் எல்லோரையும் போல ஒப்புக்காக பிரமாதம் என்று சொல்லிவிட்டுச் சென்றால் பிரச்சினையில்லை ஆனால் சரியான மதிப்பீட்டைச் சொன்னால் வில்லனாகவே பார்க்கப்படுவேன் என்ற முஸர்ரின் கூற்றில் பொதிந்திருக்கும் விடயத்தை ஜனூஸ் உள்வாங்கியிருக்க வேண்டும். ஆனால் அவர் அதிலிருந்து தவறிவிட்டார்.

எல்லாவற்றையும் குழப்பியடித்தது அறிவிப்பாளர்தான். அவரை இன்னுமொரு நிகழ்;வுக்கு யாரும் பரிந்துரை செய்ய முடியாதளவுக்கு
நடந்து கொண்ட விதம் அமைந்துவிட்டது. 2010ஆம் ஆண்டு சென்னையில் இடம்பெற்ற கீற்று இணையதளத்தின் ஆறாமாண்டு நிறைவு விழாவில் நான் விடுதலைப் புலிகள் குறித்துப் பேசிய பேச்சு நிலைமையைச் சிக்கலாக்கிய போது அறிவிப்பாளர் அடுத்து என்ன பேசுவது என்று திணறிக் கொண்டிருந்த போது மொத்த உணர்ச்சிகளையும் அடக்கிவிட்டு மேடைக்கேறி அதை உடனடியாகச் சமாளித்தவர் மனிதநேய மக்கள் கட்சிச் செயலாளர் தமீமுன் அன்சாரி. அவர் மட்டும் அன்று சமாளித்திருக்காவிட்டால் நடந்திருப்பதே வேறு. இதுதான் மிக முக்கியமான விடயம். ஆனால் இங்கு  அறிவிப்பாளர் கொடுத்த ஹெவி டோஸினால் திக்குமுக்காடிப்போன ஜனூஸ் மூன்று முறை ஒரே விடயத்தைத் திருப்பித் திருப்பிச் சொல்லும் அளவுக்கு ஆக்கிவிட்டது, அஸ்ரப் ஷிஹாப்தீனுக்கு எதிராக கருத்துரைக்க வைத்துவிட்டது, அதனால் அவருக்கு ஒரு நஷ்டமுமில்லை ஜனூசுக்கு லாபமுமில்லை, தடுமாற்றத்தில் ஜனூஸ் பாவித்த வார்த்தைகளை எடைபோட்டுப் பார்க்க வேண்டும்.. என்னால் இப்படிச் சொல்ல முடியும்

ஜனூஸ் உங்கள் பணத்தைச் செலவழித்து நேரத்தை முதலீடுசெய்து அயராது பாடுபட்டு வெளியீட்டு நிகழ்வு வரைக் கொண்டு வந்த உழைப்பின் அறுவடையை கவனயீனத்தால் பால்படுத்திக் கொண்டீர்கள். உங்கள் ஏற்புரையில் பேச வந்த எதனையும் உங்களால் பேச முடியாமற் போயிற்று, நன்றி தெரிவிக்க இருந்த பலரையும் விட்டுவிட்டீர்கள், அது உங்கள் மேடை. ஆயினும் அதில் உங்கள் கருத்தை நிதானமாகவும் பூரணமாகவும் முன்வைக்க முடியாமற் போயிற்று, யாரும் உங்களை வீழ்த்த சதிசெய்யவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும், காரணம் உங்களுக்காக தனது நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து வந்து உங்கள் கவிதைகளை தமது குரலில் வாசித்துத் தந்த யாருக்கும் நீங்கள் போக்குவரத்துச் செலவோ அல்லது குரலுக்கான கொடுப்பனவோ கொடுக்கவில்லை அவை இலவசமாகக் கிடைத்ததென்றால் நீங்கள் முன்னேற வேண்டும் சாதிக்க வேண்டும் என்ற அன்பினால்தான் அவர்கள் அர்;ப்பனத்தோடு செயற்பட்டார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அறிவிப்பாளர் பிரச்சினையைச் சமாளித்து சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டுவந்து பன்பான வார்த்தைகளைப் பிரயோகித்து நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்து அமைதிப்படுத்தி  சுமுகமாகச் செயற்பட்டிருந்தால் வெற்றிகரமான ஒரு விழாவாக நிறைவு பெற்றிருக்கும்... 12-B படம் போல. நீங்கள்  நிகழ்வுகளை ஒரு முறை மீட்டுப் பாருங்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டதை எடிட் பண்ணாமல் முழுமையாகப் பாருங்கள் அப்போது உங்களுக்கே எல்லாம் விளங்கும். அப்போது மன்னிப்புக் கேட்கத் தோன்றும் அப்படித் தோன்றினால் நான் சொல்லியிருப்பதில் நியாயம் இருக்கும் என்று அர்த்தம்.


அஸ்ரப் ஸிஹாப்தீனிடம் ஒரு பணிவான வேண்டுகோள் குரலாகி கவிதைத் டிவிடி பற்றி நீங்கள் ஆற்றவிருந்த உரை நிச்சயம் உங்களிடம் சொப்ட் கொப்பியாக இருக்கும் என்று நம்புகின்றேன் அதைத் தாங்கள் பதிவேற்றினால் நாங்கள் உரையை இழந் இடைவெளியை அதை வாசிப்பதைக் கொண்டு நிரப்பிக் கொள்வோம்.

No comments:

Post a Comment