Saturday, November 1, 2014

சிரட்டை மண்ணிலிருந்து பேனாவால் பேசுதல்


நம் நாட்டுப்படைப்பாளிகளையும் அவர்களின் படைப்புக்களையும் பற்றி எழுதுவது என்பது மிகவும் அரிதாக நம்மால் செய்யப்படுகின்ற ஒரு பணி என்றே கருதுகின்றேன். இப்போதெல்லாம் வாசித்துவிட்டு ஒரு குறிப்பாவது எழுதுவதற்கு நேரம் கிடைக்கின்றதே என்பது பெரிய ஆறுதல்தான். நண்பர் பர்வீனைச் சந்தித்த போது தன்னுடைய சிரட்டையும் மண்ணும் எனும் கவிதைத் தொகுதியையும்  வஸீம் அக்ரமுடன் இணைந்து தொகுத்த வேலிகளைத் தாண்டும் வேர்கள் என்ற அநுராதபுர மாவட்டக் தமிழ்க் கவிதைகள் தொகுதி -01 என்ற புத்தகத்தையும் தந்தார் அவையிரண்டையும் பிரயாணத்தில் கிடைத்த அவகாசத்திலேயே படித்துமுடித்தேனாயினும் குறிப்பெழுத அவகாசம் கிடைக்கவில்லை. 

இலவசமாகக் கிடைக்கும் புத்தகங்களைப் படித்துவிட்டு ஒரு குறிப்பாவது எழுதாவிட்டால் நன்றிகெட்ட மனிதர்களின் பட்டியலில் நம்மையும் சேர்த்துவிடுவார்கள். அதையும் தாண்டி இலக்கிய உலக நண்பர்களில் வெகு சிலரே நம்மைக் கவர்ந்துவிடுவதோடு நெருங்கிய நட்பினையும் குடும்ப உறவுக்கொப்பான தொடர்பினையும் கொண்டிருப்பர். அது தவிர, தெளிவான புரிதலைக் கொண்டிருத்தல் என்பதும் மிகவும் அரிது. அந்தப் புரிதல் எல்லா விமர்சனங்களையும் தாண்டி ஒரு சீரான பாதையில் பயணிக்கும், அந்தப் புரிதலை எந்தப் புறனியும் கெடுத்துவிடுவதில்லை. அந்த உறவு எல்லாவித எதிர்பார்ப்புகளையும் தாண்டி வகைப்படுத்தமுடியாத ஓர் அன்புடன் தொடரும்.  

பர்வீனின் இரண்டாவது கவிதைத் தொகுதியான மனவெளியின் பிரதி வெளியீட்டு விழாவுக்காக வீட்டுக்கே வந்து அழைப்பிதழைத் தந்துவிட்டுப் போனார், ஆயினும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் அவ்விழா இடம்பெற்ற அதே தினம் miscarriage  ஆகியதால் DNCE செய்யவேண்டியேற்பட்டது அவ்வளவு இக்கட்டில் இருக்கும் போதும் பரிவீனின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற வருத்தத்தைத்தான் வைத்தியசாலையில் வைத்து நானும் மனைவியும் பகிர்ந்து கொண்டோம். 

பின்னர் ஒரு முறை வீட்டுக்கு வரும் போது அவருடைய பேனாவால் பேசுகின்றேன் என்ற மத்தியகிழக்கு அனுபவங்கள் தொடர்பாக அவர் மல்லிகையில் எழுதிய பத்திகளின் தொகுப்பையும் கொண்டு வந்திருந்தார். மல்லிகைப் பந்தல் வெளியீடான அதை மிக அன்மையில்தான் படித்து முடித்தேன் அப்போதும் ரசனையை எழுத்துக்களால் கட்டிப் போட அவகாசம் வாய்க்கவில்லை. இப்போது கிடைத்திருக்கும் அவகாசத்தை அதற்குப் பயன்படுத்தநாடிய போதும், அவரின்  மனவெளியின் பிரதியையும் படித்துவிட்டே முழுமையான ஒரு பதிவைச் செய்ய என்று நினைத்தேன். ஆயினும் அது கிடைக்கவில்லை அதை பிரிதொரு சந்தர்ப்பத்தில் செய்யலாமென்று விட்டுவிட்டேன்.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் பிராந்திய இலக்கிய பற்றிய இரண்டு நாள் நிகழ்வு இடம்பெற்ற போது பர்வீன் அதில் ஒரு தொகுப்புரை செய்தார், அந்த உரையின் நேர்த்திதான் பர்வீனை எங்காவது பேச வைத்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் விதைத்திருந்தன. நண்பர் கிராமத்தான் கலீபாவின் நழுவி கவிதைப் புத்தக வெளியீட்டு விழாவில் பர்வீனையும் பேச வைக்க வேண்டுமென பர்வீனின் அனுமதியைப் பெறாமலேயே பரிந்துரை செய்து அழைப்பிதழும் அச்சிட்ட பின்னர்தான் அவருக்கு என்னால் அதை எத்திவைக்க முடியுமாக இருந்தது. பெருமனதோடு நாச்சியாதீவிலிருந்து கொழும்புக்கு வந்து அருமையாகாப் பேசிவிட்டுச் சென்றார். பேராசிரியர் துரை மனோகரன் பேசிய சில விடயங்களை பர்வீன் மிக வலுவாக எதிர்த்துக் கருத்துக்களை முன்வைத்தது என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது. ஆக பர்வீன் நல்ல பேச்சாளனும் கூட, அந்தப் பேச்சுப் பிரதியும் மிக முக்கியமானது.

பர்வீனின் கவிதைகள் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. காரணம் என்னைவிட அவர் மிக நன்றாக எழுதுகின்றார். என்னைவிட நன்றாக எழுதும் அவரது கவிதைகளை ரசிக்கவே பெரிதும் முடிகின்றது. வடக்கு முஸ்லிம்கள் ஒருமாதத் திட்டமிடலில் 1990 ஒக்;டோபர் 15 தொடக்கம் 1990 நவம்பர் 17 வரை நான்கு கட்டங்களாக தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு அகதிகளாக்கப்பட்ட துரதிஸ்டத்தை முன்னிறுத்தி கவிதையாவது எழுதுவதற்கு ஆளில்லையே என்ற வேதனை என்னை ஆட்கொண்டிருந்தது. வடக்கு முஸ்லிம்கள் தொடர்பான ஆய்வு இதழுக்கு கட்டுரை எழுதும் போதும் சரி இரண்டு கவிதைகள் தேவைப்பட்ட போதும் சரி  வடக்கு முஸ்லிம்கள் தொடர்பாக எழுதப்பட்டவைகள் குறைவு என்றுதான் எண்ணத் தோன்றியது. முல்லை முஸ்ரிபா, கiவாதி கலீல், யாழ் அஸீம் போன்று இன்னும் சிலரே எழுதினார்கள். ஆயினும் வடபுலத்துக்கு அப்பால் இன்னும் சிலர் எழுதினார்கள் அதில் நாச்சியாதீவு பர்வீனும் ஒருவர் எனும் போது மனதிற்கு இதம்.  விடுதலைப் புலிகள் அரசோச்சிய காலத்தில் அவர்களின் துப்பாக்கிகளுக்கு எல்லோரும் பயந்து கொண்டிருந்த காலத்தில் வடக்கு மக்களின் துரத்தியடிப்பைப் பற்றி பகிரங்கமாகத் தெளிவாக எழுத நிறையப் பேருக்கு துணிவிருக்கவில்லை என்பதையும் இங்கு பதிவு செய்தாக வேண்டும். முல்லை முஸ்ரிபாவின் இருத்தலுக்கான அழைப்பு கூட வெளியேற்றப்பட்டு பதிமூன்று வருடங்களுக்குப் பின்னர்தான்  2003ல் வெளிவந்தது. நிஃமதுல்லாவின் வா ஊருக்குப் போவோம் என்பதையும் மறுதலிக்க முடியாது. பர்வீன் கூட வா ஊருக்குப் போய்வருவோம் என்ற தலைப்பில் ஒரு கவிதையை 2001களில் எழுயிருக்கிறார். அதுவும் மண்ணை நோக்கியும் நமக்காகக் காத்திருக்கும் நமது மண்ணுக்கு ஒரு முறை சென்று பழைய நினைவுகளை மீட்டி எடுத்து பத்திரப்படுத்துவோம் என்று காதலியை அழைப்பதைப் போல உள்ளது. 

பர்வீன் வடக்கு முஸ்லிம்கள் பற்றியும் அகதி வாழ்க்கை பற்றியும் எழுதியதை இந்தப் பின்னணிகளில் இருந்து விதந்துரைக்காமல் இருக்க முடியாது. வடக்கு முஸ்லிம்களுக்காக எழுதப்பட்ட கவிதைகளைத் தொகுக்கவேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் விதைத்ததும் பர்வீனின் கவிதையை வாசித்த அந்தப் பொழுதுதான். இதெல்லாம் யாராவது செய்வார்கள் என்று விட்டு நகர்ந்துவிட முடியாது. நாமாவது செய்வோமே என்பதோடுதான் கடந்து போக வேண்டியிருக்கின்றது. 

காதலை மட்டுமே வரிந்கட்டிக் கொண்டு வித்தைகாட்டும் பொழுதுகளில்தான் பர்வீனும் தனது கவிதைகளை விதைக்கத் தொடங்குகின்றார், வெறுமனே காதலுக்குள் மட்டும் தன்னைக்கட்டிப் போடாமல் மண்மீதான ஈர்;ப்பிலும் சமுக விவகாரங்களிலும், அக்கறையோடு கவனம் செலுத்தியிருப்பதையும் அவதானிக்க முடியுமாக இருக்கிறது. 

பர்வீனின் முதல் கவிதைத் தொகுப்பை அச்சாக்கம் பதிப்பு நேர்த்தி வடிவமைப்பு என்று பார்க்கும் போது எனக்குச் சொல்லத் தோன்றுவது ஒன்றுதான். காலையில் முகம் கழுவாத ஒரு சின்னப் பிள்ளையின் தோற்றம்தான் மனதிற் தெரிகின்றது. 2005ஆம் ஆண்டில் மிக நேர்த்தியாகச் செய்யக்கூடடிய அனைத்து வசதிகளுமிருந்தும் பர்வீன் அதைப் பயன்படுத்தவில்லையோ என்று சின்னதாய் ஒரு கோபம் வருகின்றது. வாசிப்பை இனிமையான அனுபவமாக மாற்றுவதில் பதிப்பு நேர்த்தியும் முக்கிய பங்காற்றுகின்றது. பின்னர் வந்த வெளியீடுகள் அந்தத் தவறைச் செய்திருக்கவில்லை. அனுபவம்தான் எல்லாவற்றுக்கும் முக்கியமானது. அதனால் சிரட்டையும் மண்ணையும் அந்தக் குறைபாடுகளைச் சொல்லிக் கிண்டிக் கொண்டிருக்காமல் நகர்வது புத்திசாலித்தனம்.

பேனாவால் பேசுகின்றேன் முன்னுரையில் கெக்கிராவ ஸஹானா சொல்லியிருப்பது – பர்வீனுக்கு  கவிதையைவிட உரைநடை நன்றாக வாய்க்கிறது – 

அதை என்னால் இப்படிச் சொல்ல முடியும் பர்வீனுக்கு கவிதையுடன் உரைநடையும் நன்றாக வாய்க்கிறது. அன்மையில் முகநூலில் படித்த சில கவிதைகள் பர்வீன் புதிய களங்களை நோக்கி நகர்வதைச் சுட்டி நிற்கின்றது. காதலையும் தாண்டி பேசுவதற்கு ஆயிரம் விடயங்கள் இருக்கின்றன என்பதையும் யுத்தத்தைத் தாண்டி இன்னும் பல்லாயிரம் விடயங்கள் இருக்கின்றன என்பதையும் உணர்ந்து கொண்டாலே போதும் மானுட வாழ்வியலையும் அழகியலையும் நோக்கி வெகு இயல்பாக எம்மால் நகர முடியும். அதற்கு கவிதை மட்டும்தான் சாதனம் கிடையாது.

மத்திய கிழக்கில் ஒரு வருட அனுவம் எனக்கும் இருக்கின்றது. துப்பாக்கிகளுக்கு முன்னால் நின்றுபிடிக்க முடியாத கோழைத்தனத்தால் அல்லது பலவீனத்தால் நாட்டை விட்டு ஓடி ஒழிந்து கொள்ள கிடைத்த இடம் குவைத், ஒரு தொழிலுக்காக நான் சென்றிருந்தால் நிறைய அனுபவங்களைப் பெற்றிருக்கலாம், ஆயினும் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை பர்வீனுக்குக் கிடைத்திருக்கிறது. 

எம்.கே.எம்.ஷகீப் மத்திய கிழக்கில் இருந்த போது எழுதிய பத்தி எழுத்துக்களை அப்படியே தொகுத்து ஒரு பைலில் போட்டு வைத்திருந்தார். சட்டவிரோதமாக அறைக்குள் நுளைந்து எல்லையில்லாத் தொல்லை தரும் ஒரு எலியைப் பிடிப்பதற்கே எடுக்கும் முயற்சிகளையும் தமிழ்ப்பட ஹீரோமதிரி அது அனைத்துச் சதித்திட்டங்களில் இருந்தும் தன்னைக் காத்துக் கொள்வதையும் வைத்து அவர் எழுதியிருந்தது இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. பதினொரு வருடங்களுக்கு முன்னர் 2003களில் மூதூரில் அவரது வீட்டில் வைத்துப் படித்த ஞாபகம். அது புத்தகமாகியதா இல்லையா என்பது தெரியாது, கட்டாயம் அது புத்தகமாக ஆகியிருக்க வேண்டும் மீண்டும் தேடிப்ப படிக்க வேண்டும் அதை. அப்படி அற்புதமான எழுத்துக்கள். அதன்  பின்னர் மத்திய கிழக்கு அனுபவங்களை பர்வீனிடமிருந்து உள்வாங்குகின்றேன். 

ஒவ்வொரு விடயமும் புதுமையான அனுபவங்களாய்த்தான் விரிந்து செல்கின்றது. துப்பாக்கிகளை தைரியமாக எதிர்கொள்ளும் அளவுக்கு என்னுள் தைரியத்தை விதைத்ததும் அந்தப் பாலைவன மண்தான். அதன் பின்னர் நான் நாட்டுக்குத் திரும்பிய போது நெஞ்சு நிமிர்த்தித் தெருக்களில் தனியாக நடக்க முடிந்தது. அது போல வாழ்க்கையென்றால் என்ன என்பதை கத்தார் பர்வீனுக்கு மிகத் தெளிவாகவே பல்வேறு பரிமானங்களில் நின்று படிப்பித்திருக்கின்றது. 

மிக அன்மையில்தான் தெரியும் விஜேந்திரன் பர்வீனுக்கு ஏற்கனவே அறிமுகமான நபர் என்பது. புஸ்பகுமார பற்றியும் அவரின் மரணம் பற்றியும் நான் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கேன், ஆயினும் பர்வீன் அந்த மரணத்தால் துயருற்றிரு;பபதும் அதைப் பதிவு செய்திருப்பதும் படிக்கும் போது வௌ;வேறு விதமான சோகத்தை அள்ளிவீசிவிட்டுச் செல்கின்றது. நாட்டின் அந்நியச் செலாவனியை உயர்த்தப் பாடுபட்ட ஒருவன் விபத்தில் இறந்த போது நிர்கதிக்குள்ளாகி இருக்கும் அவனது குடும்பத்திற்கு அரசாங்கம் ஏதேனும் செய்ததா என்பது கூட அன்மையில் ஒரு பேசு பொருளாக விஜேந்திரனும் நானும் பர்வீனும் எதேச்சையாகச் சந்தித்துக் கொண்ட போது மாறியிருந்தது. அப்படியானால் புஸ்பா அய்யாவின் மரணம் எத்தகைய சோகத்தை அவரின் முகமறியா ஒருவனுள்ளும் ஏற்படுத்தியிருக்கிறது! வகைதொகையில்லாத மரணங்களைக் கண்டு அலுத்துப் போனவன் நான். சில பிரேதங்களைக் காறித் துப்பத் தோன்றும், சிலது நமக்குள் டொன் கணக்கான பாரத்தைச் சுமத்திவிட்டுச் செல்லும். பர்வீனின் ஆறு மணித்துளிகளை அந்தச் சோகம் முழுமையாக ஆக்கிரமித்தென்றால் அங்கு ஒரு சிங்களவன் இறந்து போகவில்லை ஒரு மனிதன் இறந்து போயிருக்கிறான்.

ஒரு இலக்கியவாதி பரிச்சயமில்லாத தேசமாயினும் ஒவ்வொரு விடயத்தையும் எப்படிப் பார்ப்பான் என்பதைத்தான் பர்வீனின் எழுத்துக்களில் தரிசிக்க முடிகின்றது. பர்வீனையும் புரிந்து கொள்ள முடிகின்றது. கத்தாரில் இடம்பெறும் கவியரங்கு, நாடகம் மற்றும் விவாத அரங்கு பற்றிய அவரின் குறிப்புகள் நம்மைப் பொறாமைப்படச் செய்வன. நமது இலக்கிய நிகழ்வுகளையும் அதில் கலந்து கொள்வோரின் தொகையையும் கருத்தில் கொண்டு கவலை கொள்ளச் செய்யும் சந்தர்ப்பங்களே நம்மிடம் அதிகம். 

எல்லாத் தலைப்புக்களுடனும் இணைந்து பர்வீனும் தனது பால்ய மற்றும் பழைய நினைசுகளைக் கொண்டு பயணித்திருப்பது இதன் சிறப்பம்சம். எங்குமே நம்மை சோர்வடையச் செய்யவில்லையென்பதால் அவை இணைகின்ற சந்தர்ப்பங்கள் சுவாரஸ்யமகவே இருக்கின்றன.  பேனாவால் பேசுகின்றேன் குறித்து இன்னும் எழுதலாம் ஆயினும் கிடைத்திருக்கும் நேரத்தில் இப்போதைக்கு இவ்வளவுதான். 

பர்வீன் இன்னும் நிறைய எழுதுங்கள், ஏனெனில் பேனாவால் பேசுகின்றேன் தொடர்ச்சியாக வாசிக்க வைக்கும் தன்மையினைக் கொண்டிருக்கிறது, கதைகள் போல ஆர்வத்தைத் தூண்டிக் கொண்டே நகர்கின்றன. வாழத்துக்கள் பர்வீன்.

No comments:

Post a Comment