Thursday, April 3, 2014

கண்ணைக் கொத்தப் பார்க்கும் காக்கா

கண்ணைக் கொத்தப் பார்க்கும் காக்கா

கொழும்பில்  பயணம் செய்வதில் உள்ள கொடுமையை உணர்ந்து கொள்ள வேண்டுமாயின் ஒரு பகல் பொழுதில் ஆமர் வீதியில் இருந்து வெள்ளவத்தைக்குச் சென்று திரும்பி வந்து பார்க்க வேண்டும், அதுவும் கொழுத்தும் வெயிலில் 155ஆம் இலக்க பஸ்ஸில், ஒரு முறை போய் வந்தால் போதும் வெறுப்பின் உச்சத்தில் யாரைக் கண்டாலும் கோபம் வரும். அப்படியொரு சூடு உடலின் ஒவ்வொரு அணுவிலும் குடியிருக்கும். பயணம் நரக நெருப்பின் ஒரு துளி என்று முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. நான் நினைத்திருந்தேன் கொழுத்தும் வெயிலில் தாங்கொனா உஷ்னத்தின் கொடுமைக்கு மத்தியில் பாலைவனத்தில் ஒட்டகத்தில் பிரயாணம் செய்வதன் கொடுமையை உணர்த்தவே நபிகளார் அப்படிச் சொல்லி இருப்பார்கள் என்று, ஆனால் அது அப்படியல்ல என்பதை பட்டப்பகலில் கொழும்பில் பயணம் செய்து பார்த்தபோது புரிந்தது. சில விடயங்கள் பற்றி எவ்வளவுதான் அறிந்து கொண்டாலும் பேவினாலும் வாசித்தாலும் அனுபவ பூர்வமாக உணர்ந்து கொள்ளும் போது அது விஷேடமான அம்சமாகின்றது. ஏசி வாகனத்தில் குளுகுளுப்பாகச் செல்லும் மனிதர்களுக்கு நெரிசலில் காத்து நிற்கும் கொடுமையையும் கொஞ்சம் பெற்றோல் விரயமாகும் துரதிஸ்டத்தையும் தவிர வேறு துன்பங்கள் கிடையாது. ஆனால் ஏனையவர்கள் பாவம்.

வாகன நெரிசலுக்குள் சிக்கிக் கொள்ளக் கூடாதென்று பல கிலோமீட்டர்களை கொழுத்தும் வெயிலில் நடந்தே கடந்துவிடும் தண்டனையை எப்போதேனும் யாரேனும் அனுபவித்ததுண்டா? அண்மையில் மாடறுக்கக் கூடாதென்று சில காவி உடுத்த எருமை மாடுகள் நடுவீதியை மறித்து நடாத்திய ஆர்ப்பாட்டத்தினால் ஏற்பட்ட வாகன நெரிசலில் அகப்பட்டு அவதிப்பட்டு இரண்டு மணித்தியாலங்களுக்கு மெல் காத்திருந்து இறுதியில் முடியாமல் போக கொள்ளுப்பிட்டிச் சந்தியிலிருந்து குனசிங்கபுர வரை நடந்து வந்தேன், கிட்டத்தட்ட மூன்றரைக் கிலோ மீட்டர்கள். இதற்கு முன்னர் ஒரு முறை பெருவெள்ளம் காரணமாக வாகனப் போக்குவரத்து தடைப்பட்டு கதுருவெலயிலிருந்து ஓட்டமாவடி வரை ஐந்தாறு கிலோமீட்டர்கள் நீங்கலாக கிட்டத்தட்ட அறுபது கிலோமீட்டர்கள் கவிஞர் எஸ்.நளீமுடன் நடந்து கடந்ததுதான் பெரிய அனுபவம். மிகவும் சுவாரஷ்யம் நிறைந்த அது தொடர்பான பதிவு தனியாக உள்ளது. இதனோடு ஒப்பிடும் போது அது பறவாயில்லை என்று தோன்றுகின்றது.  கோட்டை ரயில்வே ஸ்டேஸனுக்கு முன்னால் மொக்கனுகள் நடுவீதியில் நின்று கத்திக் கொண்டு நின்றார்கள், புத்தர் பெருமான் மட்டும் இவன்கள் போடும் ஆட்டத்தைக் கண்டிருந்தால் உடனடியாக அரச பதவியை ஏற்று அனைத்து மொட்டைகளையும் கழுவேற்றிக் கொன்றிருப்பார். 

அலுப்போடு நடைபோட்டு எங்காவது இருக்கும் மரத்தின் கீழ் கொஞ்ச நேரம் இளைப்பாறும் போதுதான் அந்தக் காக்காய்களைக் காணமுடியும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காக்கா என்று அன்போடு அழைப்பது அண்ணனைதான். ஆனால் கிழக்கிற்கு வெளியே காக்கா என்பது காகத்தை, அப்போதிருந்தே காக்கா என்று அழைப்பவர்களை நக்கலடித்து நக்கலடித்தே இப்போது அண்ணனை காக்கா என்று அழைப்பதற்கு யாரும் தயாரில்லாத நிலையைத் தோற்றுவித்துவிட்டார்கள். காக்கா இறந்து நாநாவாகிப் போனது. நாநா என்பது பெஷன் சொல்லாகவும் மாறிப் போய் தமிழ் சிங்கள மக்கள் கூட நாநா என்றே இப்போது அழைக்கப்பழகிவிட்டனர். ஆனால் காயல்பட்டணத்தில் இன்னும் காக்கா வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. நாநா என்பது அங்கு அந்நியம். இது அப்படியே இருக்கட்டும்.

கொழும்பிலுள்ள காகங்களுக்குப் பயமென்பதே கிடையாது. ஒரு பத்து வருடங்களுக்கு முந்திய போதைப் பொருள் வியாபாரிகள் போலவும் மூடை தூக்கும் நாட்டாமிகள் போலவும் தெனாவட்டுடன் நம்மை எதிர்கொள்ளப் பழகிவிட்டன. அது மட்டுமல்லாது அச்சுருத்தவும் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்றன. கிராமத்துக் காகங்களுக்குச் சும்மா கையை அசைத்தாலே போதும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று மறு திசையில் பறந்து மறையும். சில காகங்களை முறைத்துப் பார்த்ததாலே பறந்து போய்விடும். உள்ளூர் அரசியல்வாதிமாதிரி இந்தக் காகங்களும் பயத்தை உள்ளே மறைத்து வைத்துக் கொண்டு பந்தாக் காட்டப் படித்துக் கொண்டன போலும். 

நமது கண்ணுக்கு முன்னால் கைக்கெட்டிய தூரத்தில் அதுவும் ஆயாசமாக அமர்ந்திருக்கும். நாம் கண்ணை இமைக்க கொஞ்சம் மறந்தாலும் போதும் கொத்திக் கொண்டு போய்விடும் அளவுக்கு நம்மை முறைத்துப் பார்க்கும். நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் போல. அவர்களும் அப்படித்தான் மக்கள் கொஞ்சம் அசந்தால் போதும் ஜட்டியைக் கூட அவிழ்த்துச் சென்று பேரம் பேசி விற்றுவிடுவார்கள். அபிவிருத்திக்கென ஐம்பது சதம் கொடுத்தாலும் அதில் முப்பது சத்ததைக் களவெடுத்துக் கொண்டு மிகுதியில் ஏதாவது செய்து ஊரை ஏமாற்றிவிடுவார்கள். அவற்றை உணர்ந்து கொள்வதற்கு அவகாசமே இருக்காது. அப்படியொரு ராஜதந்திரக் களவும் கொள்ளையும். பொலிசாரின் கண்ணில் இவர்கள் விரலைவிட்டு ஆட்டுவது போலத்தான். 

எல்லா இடங்களிலும் சுவர்களை ஆக்கிரமித்திருக்கும் தேர்தல் காலப் போஸ்டர்கள் போலத்தான் கொழும்புக் காகங்கள். ஓரிடத்தையும் மிச்சம் வைக்காது எச்சம் போட்டுத் தமது இருப்பை நிறுவி வைத்திருப்பர்.  மக்கள்தான் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் தலையில் மட்டுமல்ல தட்டிலும் எஞ்சுவது எச்சம் மட்டுமே! 

கொழும்பில் மக்களுக்கு மட்டுமல்ல காக்கைகளுக்கும் இருப்பிடப் பிரச்சினைதான் பெரிய பிரச்சினை. பல்வேறு பகுதிகளில் இருந்தும் கொழும்பின் கவர்ச்சிக்கு மயங்கி வந்து சேர்ந்த மக்கள் கூட்டம் போல ஒரு காக்கைகள் கூட்டமும் இருக்கத்தான் செய்கின்றது. வீதிகளைவிட வாகனங்களின் தொகை அதிகரித்து ஏறுகோணத்தில் செல்லும் சிக்கல் போலத்தான் போதியளவு மரங்கள் இன்றி அதிகரித்துவிட்ட தொகையுடன் அகதிகளாக தங்குவதற்கு சரியான இடமின்றி அலையும் காகங்களைப் பார்க்கும் போது பரிதாபமாக இருக்கும். 

நகர அபிவிருத்தி என்ற பெயரில் வெட்டப்படும் பெரிய மரங்களும் பல காகங்களின் பூர்வீக இருப்பிடம்தான் என்பதை பலர் அவதானிக்கத் தவறிவிடுகின்றார்கள். வெட்டப்பட்ட பெரிய மரங்களுக்குப் பகரமாக நடப்படும் சிறிய மரங்கள் எப்போது அந்த இடைவெளியை நிரப்புமோ தெரியாது. அது வரைக்கும் வீடிழந்து அந்தரத்தில் அழையும் வாழ்க்கைதான் அவைகளுக்குச் சொந்தம். ஒரு பௌத்த நாட்டின் தலை நகரத்தில் காகங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எந்தவொரு தீவிர பௌத்த பூதங்களும் கண்டுகொள்ளவில்லை. இதற்காக பாதுகாப்புச் செயலாளரிடம் மனுக் கொடுக்க முடியுமா? 

கொழும்பில் இடிக்கப்பட்டு வீடிழந்த பலருக்கு இன்னும் முழுமையாக மாற்றீடுகள் வழங்கி முடிக்கப்படவில்லை. அப்படியிருக்கும் போது காகங்களின் பிச்சினைகளை யார்தான் கண்டு கொள்ளப் போகின்றார்கள். காகங்கள் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் கூட நீதிமன்றத்தை நாடி தீர்வு கேட்டிருக்கும். சேரிப்புற மக்களைப் போல அவைகட்கும் கல்விக்கான வாய்ப்புகள் ஏதுமில்லாததால் கிடைப்பதோடு திருப்திப்பட்டுக் கொள்கின்றன போலும். அப்படித்தான் புறக் கோட்டை பஸ் நிலையத்தில் ஒரு இரும்புக் கம்பிக்கு மேல் இரண்டு காகங்கள் தமது ஒற்றைக் குஞ்சுடன் சோகமாக அமர்ந்திருப்பதைக் கண்டேன். பாவம் அவை தமது மற்றுமொரு பிள்ளையை இழந்த சோகத்திலும் கூடிழந்த சோகத்திலும் ஆழ்ந்திருந்திருக்கவும் கூடும். யுத்தம் விதைத்த வடுக்களைப் போல இதுவும் இன்னும் நெஞ்சைப் பிழிந்துகொண்டுதான் இருக்கிறது. 

பெரிய அரச மரம் பக்கத்தில் இருந்தும் அதில் அமர அந்தக் காகங்கள் அனுமதிக்கப்படவில்லைபோலும். நமது பிரதேச மற்றும் இனத்துவ அரசியலின் தாக்கத்தினால் அவற்றின் மாசு மறுவில்லாத சூழலும் கெட்டுப்போய் விட்டது போலும். அங்கும் புறக்கனிப்பு. இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சகித்துக்கொள்ள முடியவில்லை ஏன் என்றுதான் தெரியவில்லை. காகங்களின் வாழ்க்கையும் பரிதாபங்களால் ஆட்கொள்ளப்பட்டு அலைக்கழிக்கப்படும் நிகழ்வு இன்னும் ஒரு தளத்திலேனும் கண்டு கொள்ளப்படவில்லை. அதற்காகன கவனயீர்ப்புப் போராட்டமாகத்தான் அன்மையில் பெருந்தொகையான காகங்கள் மொத்தமாகச் செத்து மடிந்தனவோ தெரியவில்லை. அப்படியும் கூட அவற்றின் பிரச்சினைகளின் பக்கம் யாரும் கரிசனை கொள்ளவில்லை. போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் எதுவுமே இங்கு எதையும் சாதிக்கவில்லை வெறும் சாவுகளைத் தவிர. அவைபெற்றுத்தந்தது இழப்பு மட்டும்தான். அந்த வழிமுறையும் அவைகட்டு பலனளிக்கவில்லையாயின் வேறு எதைத்தான் தேர்வு செய்வது. ஒரேயொரு பொருத்தமான தெரிவு மௌனம். ஆயினும் அது பொருத்தமா?

காகங்களுக்கு மட்டுமல்ல இப்போது குடியிருப்புப் பிரச்சினை. நிறையப் பறவைகளுக்கும்தான். அவைகளின் பிரச்சினை எப்போதாவது எங்காவது இடித்தால் அதையும் எழுதி வைப்போம். இல்லாவிட்டால் நமது இலக்கிப் பேச்சாளர்கள் போல காகங்களின் பிரச்சினையைப் பேச வந்து கொக்குகளினதும் கழிவு நீரில் வாழ்ந்து கொண்டிருக்கும் வாத்துகளினதும் பிரச்சினைகளைப் பற்றிப் பேசிவிட்டுப் போவதாக அமைந்துவிடும். அப்படிப் பேசினால் போல என்ன மக்கத்துச் சால்வையும் போர்த்தி எழுத்தாளச் செம்மல் பட்டமும் கொடுக்கவும் முதுகு சொரியவும் நிறையப் பேர் இருக்கிறார்களே. பரஸ்பரம்..   அதனால் தள்ளி நின்று காகங்களுக்காக இப்போது பரிதாப்ப படுவோம். காரணம் இது காகங்களுக்கான நேரம். 

தெற்காசியாவின் உயர்ந் கோபுரமாகக் கட்டப்படப்போகும் தாமரைக் கோபுரத்தின் அவசியமற்ற ஒரு பகுதியிலேனும் இந்தக் காகங்கள் ஒரு கூடு கட்டிக் கொள்ள அனுமதிக்கப்படுமாயின். அதுவே பெரிய வெற்றி. யாராNனும் ஒரு அமைச்சர் அதற்கும் பற்றுச் சீட்டு சமர்ப்பித்து பொதுநிதியிலிருந்து ஏப்பம் விடாமல் இருந்தால் சரி. 

எவ்வளவு விலையுயர்ந்த உணவைச் சாப்பிட்டாலும் கக்கூசுக்குச் சென்று கழிவை யாரும் பத்திரப்படுத்தி வைப்பதில்லைதானே, ஆனால் நமது அரசியல் வாதிகள் அந்தக் கழிவுகளைத்தான் சாமி அறையிலும் தொழுகை அறையிலும் காரியாலயத்திலும் நிறையச் சேமித்து காட்சிக்கு வைத்துள்ளார்கள்.

கவணம் கைவிடப்பட்ட காகங்கள் கண்ணைக் கொத்திப் போடும்.

No comments:

Post a Comment