சிறுகதை

ஒரேயொரு எதிர்பார்ப்பு ---------------------------------------------------------------------------------- ஆங்கிலத்தில் : புத்ததாஸ ஹேவகே தமிழில்: அஷ்ரஃப் சிஹாப்தீன் இன்றைய நாள் அழகாகத்தான் இருக்கிறது. தோட்டத்துப் புற்களில் மழைத்துளிகள் அமர்ந்திருந்து பிரகாசித்துக் கொண்டிருந்தன. எல்லாப் பூச் செடிகளும் வஞ்சக மின்றிப் பூத்துக் குலுங்கின. மாணவர்கள் மரங்களின் கீழும் மைதானத்திலும் அங்கும் இங்குமாக பலதும் பத்தும் பேசி மகிழ்ந்த படியிருந்தனர். ஆசிரிய கலாசாலைக்குள் நுழைந்ததும் அவர்கள் ஒரு புது வழிக்குத்; தங்களை மாற்றிக் கொண்டனர். பல மாணவ ஆசிரியர் கள் தங்களது பாடசாலை வாழ்வுக்குத் திரும்பியது போன்ற மகிழ்ச்சி யில் திளைத்திருந்தார்கள். இதுதான் ஆசிரிய கலாசாலைகள் வழங்கும் புதுமையான அனுபவம். விழா ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒரு மணித்தியாலம் இருந்தது. கலாசாலை ஊழியர்கள் யாரும் இன்னும் சமுகமளித்தி ருக்கவில்லை. காரியாலய அறைக்குள் தனியே இருந்த கலாசாலை அதிபர் சோம்பலாய் உணர்ந்தார். தனது அறையிலிருந்து வெளியே வந்து தாழ்வாரத்தில் நின்று அங்குமிங்கும் தனது பார்வையைச் சுழல விட்டார். இரண்டு மலைகளுக்கிடையில் விளையாட்டு மைதானம் அமைந்திருந்தது. ஒரு மலையில் விரிவுரை மண்டபங்களும் காரியாலயமும் இருந்தன. மற்றைய மலைப் பகுதியில் சிற்றுண்டிச் சாலை, பெண்கள் விடுதி மற்றும் உணவுச்சாலை ஆகியன அமைக்கப்பட்டிருந்தன. மைதானத்தின் ஒரு எல்லையில் ஆண்கள் விடுதியும் நூலகமும் விரிவுரை மண்டபங்களும் இருந்தன. மைதானத்தின் ஒரு பகுதி திறந்த வெளி. எனவே கலாசாலையை நோக்கி யார் வந்தாலும் இலகுவில் அடையாளம் கண்டு விடலாம். லேசான ஒரு மழைத் தூறல் ஆரம்பித்தது. ஆனால் அங்கு மிங்குமாகக் கதைத்துக் கொண்டிருந்த மாணவர்கள் கலைந்து செல்லவில்லை. தூறல் மழை பூக்களை இன்னும் பிரகாசமாக்கி, புற்களை மேலும் பசுமையாகத் தோன்றச் செய்தது. பிரதான மண்டபத்தின் சோடனைகளை முடித்துக் கொண்ட ஆசிரிய மாணவர்கள் அதிபரைத் தாண்டி மைதானத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். இந்த வருடம் கலாசாலையில் பல விழாக்கள் நடந்துள்ளன. தற்போது நடைபெறப் போவது புதிய மாணவர்களின் வருகையைத் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்ட விழா. புதிய மாணவர்களை இரண்டு வாரங்களாகப் பகிடிவதை செய்த பிறகு அதை முடித்து வைக்குமுகமாகவும் புதியவர்களை வரவேற்குமுகமாகவும் இரண்டாம் மூன்றாம் வருட மாணவர்கள் ஏற்பாடு செய்யும் விழா இது. மாணவர்களின் பல்வேறு திறமைகளை நன்கு அறிந்து கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பாக இது அமைவதால் ஏனைய விழாக்களை விட அதிபருக்கு இந்த விழாவில் அதிகம் விருப்பமிருந்தது. மழைத்தூறலிலும் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தா லும் அதிபருக்குச் சற்று மனதுக்குச் சஞ்சலமாக இருந்தது. அதிபர் தனது கடமைகளில் மிகவும் நாட்டமுடையவர். ஆசிரிய கலாசாலைதான் அவரது மகிழ்ச்சியான உலகம். ஆனால் தனிமையில் இருக்கும் போது மட்டும் அந்த மகிழ்ச்சி வடிந்து போய்விடும். ஒரு தம்பதி தமது மகனையும் மகளையும் கூட்டிக் கொண்டு அதிபரைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தனர். ஓர் ஆசிரியை அவருக்கு அருகில் தாமதித்து நின்று புன்னகைத்தார். ஆனால் அதிபர் அந்தப் புன்னகைக்கு எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை. அத்தம்பதியினருடன் சென்ற இரண்டு பிள்ளைகளும் அதிபரின் மனதை வீரசேனவின் நினைவுக்குள் இழுத்து விட்டுச் சென்றனர். வீரசேனவை அதிபர் மணந்திருந்தால் இந்நேரம் மூத்த மகனுக்கோ மகளுக்கோ பதினெட்டு வயதாக இருந்திருக்கும். வீரசேனவின் வாழ்க்கை சீரழிந்தமையை நினைக்குந்தோறெல்லாம் ஒரு குற்றவுணர்வு அவரைக் கொடுமைப்படுத்துவதுண்டு. அவரா லேயே வீரசேன குடியில் மூழ்கிப்போனார். அவரது நண்பிகள் அவரைக் குறை சொன்னார்கள்:- 'பல்கலைக் கழகத்தின் கெட்டிக்காரப் பையனை நீ நாசமாக்கி விட்டாய்...' வீரசேன பற்றிக் கிடைக்கும் செய்திகளைப் பொறுக்க முடியாமல் அவர் ஒரு நாள் வீரசேனவைப் பார்க்கச் சென்றார். அவரைக் கண்டதும் வீரசேன ஆச்சரியப்பட்டதுடன் அவசரமாகப் பக்கத்திலிருந்த சாராயப் போத்தலை மறைத்துக் கொண்டார். 'எங்களுக்கு டசன் கணக்கிலா பிள்ளைகள் இருக்கிறார்கள். குடும்பத்துக்கே ஒரு பெண்ணும் ஓர் ஆணும்தான். நீ குடும்பத்தின் கௌரவத்தைக் கெடுத்துவிடக் கூடாது. உன்னை முன்னுக்குக் கொண்டு வந்திருக்கிறோம்;. உனது நலன் கருதிச் சொத்துக்களை வைத்திருக்கிறோம். நீ யாரோடு வாழ்வது என்பதை நாங்கள்தான் தீர்மானிப் போம். அந்த முட்டாள் பையன் வீரசேனவுடனான காதலை நீ விடவில்லையென்றால் நான் உங்கள் இருவரையும் கொன்று போடுவேன்...' தந்தையாரின் தொடர்ந்த வற்புறுத்தலினால் அவர் பலவீனமடைந்து போனார். அவருக்கு என்ன செய்வதென்று தெரிய வில்லை. அவரது சகோதரன் ஒரு விளையாட்டுப் பிள்ளையாக இருந்தான். பல பெண்பிள்ளைகளுடன் பழகினாலும் பெற்றோரின் விருப்பத்துக்கு இணங்க நடந்து கொண்டான். இரண்டு வகையான அழுத்தங்களுக்குள் அவர் தடுமாறிக் கொண்டிருந்தார். காலம் இதற்கு ஒரு பதில் சொல்லட்டும் என்று அமைதியாக இருந்தார். இவையெல்லாம் இருபது வருடங்களுக்கு முன் நடந்து போனவை. அவரது சகோதரனின் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தாயார் திடீரென நோயில் இறந்து போனார். வீரசேன என்ன ஆனார் என்பது அவருக்குத் தெரியவில்லை. பென்னம் பெரிய வீட்டில் நலம் குன்றிய தந்தையுடனும் வேலைக் காரப் பெண்ணுடனும் தனித்து வாழவேண்டி ஏற்பட்டுப் போனது. அதுவே காலம் அவருக்குக் கொடுத்த ஒரே தீர்வாக இருந்தது. கடந்த காலத்தை நினைக்கும் போதெல்லாம் வாழ்க்கை தன்னை ஏமாற்றி விட்டதாக அவர் உணர்ந்தார். உடனே, நடக்க விருக்கும் விழாவில் கலந்து கொள்ள இருப்பதை நினைத்துத் தன்னை மகிழ்ச்சிபூர்வமாக மாற்றிக் கொண்டார். மைதானத்திலும் மரங்களின் கீழும் நின்று பேசிக் கொண்டிருந்த மாணவர்கள் ஒன்று சேர ஆரம்பித்தார்கள். அவர் திரும்ப நினைக்கையில் மைதானத்தை இணைக்கும் கிறவல் பாதையில் ஓர் உருவம் தூரத்தே தடுமாறியபடி வருவதை அவதானித்தார். அந்த உருவம் மைதானத்துக்குள் கால் வைத்ததும் ஆளைச் சடுதியாக அடையாளம் கண்டு கொண்டார். அவருக்கு வீட்டு வேலைக்காரப் பெண் மீது கடும் கோபம் வந்தது. அவள் இன்று மிகவும் கவனமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா? அவள் அவளது கடமையைச் சரியாகச் செய்யவில்லை! 'பியசேன....!' அதிபர் காரியாலயச் சிற்றூழியனை அதே கோபத்துடன் அழைத்தார். 'மேடம்....' சட்டென ஓடிவந்த அவனது கண்கள் மைதானத்தில் நடந்து வருவம் உருவத்தில் பதிந்தது.... 'அது... உங்கள் அப்பா மேடம்....' 'சிரிமான்னவுடன் போ... அவரை வீட்டில் கொண்டு போய் அடைத்துப் போடு... அவர் இங்கே நிகழ்ச்சிக்கு வந்தால் நான் அவமானத்தால் செத்து விடுவேன்....' - சொல்லி விட்டு வேகமாகக் காரியாலயத்துக்குள் நுழைந்தார். பியசேனவும் சிரிமான்னவும் விரைவாகக் காரியத்தில் இறங்கினார்கள். இதற்கிடையில் மைதானத்தின் மத்திக்குக் கிழவர் வந்து விட்டார். பியசேன அவரை மேலும் நகராத படி தடுத்துக் கொண்டிருக்க சிரிமான்ன கலாசாலை வாகனத்தைக் கொண்டு வந்து பக்கத்தில் நிறுத்தினான். பியசேன கிழவரின் கையைப் பற்றினான். 'அய்யா... இப்படி வாருங்கள்...' கிழவர் கையை உதறி விடுவிப்பதில் கவனமாயிருந்தார். 'நீங்கள் எங்கே போகப் போகிறீர்கள்?' 'ஆசிரிய கலாசாலைக்கு... இன்றைக்கு ஒரு விழா இருக் கிறது....!' கிழவராக இருந்தாலும் பியசேன சமாளிக்கச் சிரமப்பட் டான். சிரிமான்ன வாகனத்தின் கதவைத் திறந்து விட்டு, இருவரு மாகக் கிழவரை அள்ளி உள்ளே போடப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தார்கள். 'சண்டாளப் பயல்களே... நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்னை விட்டு விடுங்கள்!' கிழவர் இழுபறிப் பட்டுத் தரையில் சாய்ந்தார். மைதானத்தின் குறுக்கே சென்று கொண்டிருந்த புதிய மாணவ மாணவிகளுக்கும் ஆசிரிய ஆசிரியைகளுக்கும் அது ஒரு புதிரான காட்சியாக இருந்தது. 'என்ன இது... என்ன பிரச்சினை... யார் இந்த மனிதன்....?' அவர்கள் கேட்கத் தொடங்கினார்கள். 'இது ஒரு பைத்தியம்.... இவரை வாகனத்தில் ஏற்றுவதற்கு நீங்களும் கொஞ்சம் உதவி செய்யுங்களேன்...' அடுத்த சில வினாடிகளில் எல்லோருமாகச் சேர்ந்து கிழவரை அள்ளி வாகனத்துக்குள் திணித்தார்கள். கதவு மூடப்பட்டு வாகனம் நகர்ந்து வேகம் பிடிக்கத் தொடங்கியது. 'பைத்தியம்... நானா பைத்தியம்.... வேசை மக்களே... நான் யாரென்று உங்களுக்குத் தெரியுமாடா?... உங்களுக்குத் தெரியுமாடா.. எனது மகள்தான் கலாசாலையின் அதிபர்... பொறுங்கள்... அவள் வீட்டுக்கு வந்தததும் உங்களுக்கு நான் நல்ல பாடம் படிப்பிப்பேன்... அவள் உங்களைத் தண்ணியில்லாத காட்டுக்கு மாற்றுவாள்...!' கிழவர் கோபத்தில் சத்தம் போட்டுக் கொண்டிருந்த போதும் பியசேனவும் சிரிமான்னவும் அமைதி காத்தார்கள். அவர்களிடமிருந்து எந்த வித எதிர்க் குரலும் வராதபடியால் கிழவர் ஒரு கட்டத்தில் தனது பேச்சை நிறுத்திக் கொண்டு தன் கரங்களை உயர்த்திப் பார்வையைச் செலுத்தினார். இழுபறிப்பட்டதன் காரணமாக சக்தியற்றுப் போன அவரது கரங்களில் சில இடங்களில் கன்றிப் போயும் சில இடங்களில் கீறல்களுமாய் இருந்தன. அவரது கரங்களில் நோவு இருந்தது. அவர் தன்னிரக்கத்துடன் மெதுவான குரலில் பேசத் தொடங்கினார். 'இதோ பாருங்கள்... நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்று எனது கரங்களைப் பாருங்கள். நீங்கள் எனது பிள்ளைகள் மாதிரி... நான் உங்களுக்கு என்ன குற்றம் செய்தேன்...' தனது கரங்களைச் சுட்டிக்காட்டி அவர்கள் இருவரிடமும் கேட்டார். அவரது துயரம் கலந்த வார்த்தைகள் அவர்மீது பியசேன வுக்கு அனுதாபத்தைக் கூட்டியது. அவரைப் பார்க்காமலேயே சொன்னான். 'எங்களால் அதற்கு எதுவும் செய்ய இயலாது...' 'எனது மகள் ஆசிரிய கலாசாலையின் அதிபர். இலங்கை யின் மிகப் பெரிய ஆங்கில மொழி ஆசிரிய கலாசாலை இது. விழாவில் எனது மகள் தனது சிறப்புக் கதிரையில் உட்கார்ந்திருப்பதைப் பார்க்க எனக்கு எவ்வளவு ஆசையிருந் தது தெரியுமா...? அதனால்தான் வீட்டு ஜன்னலுக்குள்ளால் ஏறிக் குதித்து இவ்வளவு தூரம் நடந்து வந்தேன்... மிகவும் சிரமப்பட்டு நடையாகவே மைதானம் வரை வந்தேன்... ஆனால் ஒரு சின்னத் தூரத்தைக் கடக்க நீங்கள்தான் விடவில்லை....' - கிழவர் பேசிக் கொண்டேயிருந்தார். வாகனம் நகரத்தை நெருங்கியது. கிழவரின் முகத்தில் ஒரு திடீர்ச் சந்தோசம் பரவிற்று. 'என் பிள்ளைகளே... கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்... என்னை அதோ அந்தப் பெரிய கட்டடத்துக்கு முன்னால் இறக்கி விடுகிறீர்களா...?' கிழவரின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள சிரிமான்ன விரும்பினான். கட்டடத்தின் அருகே வாகனத்தைத் தரிக்கச் செய்தான். 'இந்த நாட்டின் மிகப் பெரிய கம்பனி இது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கம்பனிக்குப் பெரியவன் என் மகன்தான்.' கிழவர் வாகனத்தின் கண்ணாடி ஜன்னலூடாக முகத்தை நீட்டிப் பார்த்தார். கட்டடத்தின் கீழ்த்தளம் மட்டும் கண்ணில் பட்டது. 'பிள்ளைகளே.... எனது மகனுடைய காரியாலயத்தில் என்னைக் கொண்டு விடுங்கள்...' 'இல்லையில்லை... எங்களால் முடியாது. உங்களை அங்கு அழைத்துச் சென்றால் எங்களைத்தான் குற்றம் சுமத்து வார்கள்...' 'அப்படியென்றால் வாகனத்தின் கதவைத் திறந்து விடுங்கள். எனது மகனின் காரியாலயம் இருக்கும் தளத் துக்குச் சென்று பார்க்க வேண்டும். இந்த வாகனத்துக் குள்ளிருந்து இந்தப் பெரிய கட்டடத்தையும் பார்க்க முடியாது...' மிகவும் தாழ்மையுடன் கிழவர் அவர்களைக் கேட்டார். சிரிமான்ன பியசேனவின் முகத்தைப் பார்த்தான். பியசேன சொன்னான்:- 'நாம் போவோம்;.' சிரிமான்ன வாகனத்தை உயிர்ப்பித்தான்.கிழவருக்குக் கோபம் உச்சத்துக்கு வந்தது. 'முட்டாள் பயல்களே... வேசை மக்களே... உயர்ந்த இடத்தில் இருக்கும் தனது பிள்ளைகளைப் பற்றி ஒரு தந்தைக்கு எவ்வளவு அதீதமான ஆசையிருக்கும் என்று உங்களுக்குத் தெரியாதா... நீங்கள்தான் உண்மையான வேசைப் பிள்ளைகள்... நீங்கள் நாசமாய்ப் போவீர்கள்!' மிகப் பொறுமையுடன் சிரிமான்னவும் பியசேனவும் கிழவரின் கடும் சொற்களைத் தாங்கிக் கொண்டார்கள். வேகமாக வாகனத்தைச் செலுத்தி வீட்டையடைந்தார்கள். கிழவரைப் பலாத்காரமாகத் தரையில் இழுத்துச் சென்று அறைக்குள் தள்ளிக் கதவை அடைத்து விட்டுத் திரும்பிச் சென்றார்கள். 000000000000000000000000000000 புத்ததாஸ ஹேவகே பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியரான புத்ததாஸ ஹேவகே பி. 1952) எல்பிட்டிய, பிட்டிகலயைச் சேர்ந்தவர். ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் நாவல், சிறுகதைகள், தொலைக்காட்சி நாடகம் என இலக்கியப் பங்களித்தவர். ளுயளெயசய ளுநஎயநெடi (1982)இ ஆரடர யுhயளயஅய டீழனொயறநடய (1993) ஆகியன சிங்களத்தில் வெளியான இவரது சிறுகதைத் தொகுதிகளாகும். லுயயவாசயஎயமய ஆinளைளர (1992) என்பது சிங்கள மொழி நாவல். ஆங்கிலத்தில் வுhந ளூயனழறள ழக Niபாவ (1981)இ வுhந niபாவ ழக வாந ளடயரபாவநச (1998) என்ற இரு சிறுகதைத் தொகுதி களையும் வுhந ஏiஉவiஅள (1995) என்ற பெயரில் ஒரு நாவலையும் எழுதியுள்ளார். தொலைக்காட்சி நாடகப் பிரதிகளை எழுதுவதில் திறமையுள்ளவர். இவரது 'நுமயபெமைய' (1994) என்ற தொலைக்காட்சி நாடகம் ஐ.டி.என். தொலைக்காட்சி நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்றது. தவிர இலங்கை ரூபவாஹினியில் ஒளிபரப்பான நெடுந்தொடர் களும் விருதுகளைப் பெற்றுள்ளன. 'ஒரேயொரு எதிர்பார்ப்பு' என்ற இச்சிறுகதை வுhந niபாவ ழக வாந ளடயரபாவநச (1998) தொகுதி யிலிருந்து பெறப்பட்டது. 000000000000000000000000 அஷ்ரஃப் சிஹாப்தீன் 1960ஆம் ஆண்டு ஓட்டமாவடியில் பிறந்த இவர் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு துறைகளுக்கும் பெரிதும் பங்களிப்புக்களைச் செய்து வருகின்றார். அன்மைக்காலமாக மொழி பெயர்ப்புத் துறையில் தமிழுக்கு ஆற்றும் பங்கு குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது. அரேபியச் சிறுகதைகளை முதன் முதலில் தமிழுக்குக் கொண்டு வந்த பெருமையும் இவரையே சாரும். தமிழுக்கு மொழி பெயர்த்த தொகுதிகளில் குறிப்பிடத்தக்க இடத்தில் 'ஒரு குடம் கண்ணீர்' 'ஒரு சுரங்கைப் பேரீச்சம் பழம்' 'பட்டாம் பூச்சிக் கனவுகள்' என்பன இருக்கின்றன. இவர் குறித்த விரிவான குறிப்பு வரண்ட மண்ணில் ஒற்றை மழைத்துளி எனும் இன்றைய இலக்கியப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment