Sunday, April 29, 2012

வாழ்க்கை என்ற வண்டி




மனதில் தோன்றும் போது
எல்லாமும் அர்த்தம்
பெற்று விடுகிறது.

இந்த வண்டிக்கு
ஒரு வருடமாகிறது
நகர்ந்தும் நகராமலும்
மணல் பாதைகள்
மலை மேடுகள்
பெரும் பள்ளங்கள்
அடர்ந்த காடுகள்
அலை கடலோரங்கள்
அலைந்து திரிந்து
அலுத்துப்போயிற்று.
ஆனாலும் வாழ்க்கை
இன்னும் உயிர்ப்போடுதான்.

மனைவி என்ற
அச்சாணியின்
இறுக்கமான பற்றுதலோடும்
நகர்ந்தும் நகராமலும்
ஆத்ம சுகம்

அவள் தான் எல்லாம்
என்றாகிப் போன பின்னர் 
வண்டி நகர்ந்தாலென்ன?
நகராவிட்டால் தான் என்ன?

Tuesday, April 24, 2012

குருடர்கள் யானை பார்த்த கதை -முஸ்டீன்-



இருபதாம் நூற்றாண்டின் இறுதித் தருணங்களில் பாடசாலை மாணவனாக இருக்கும் போது வகுப்பறையில் ஆசிரியர் சொன்ன கதைதான் இது. பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்த கதை. தெரியாதவர்கள் ஒருவராவது இருக்கக்கூடும் என்பதால் மீண்டும் ஒருமுறை இந்தக் கதையைச் சொல்கிறேன்.

குருடர்கள் சிலர் யாணை பார்க்கப் புறப்பட்டார்கள். யாணை பார்த்த பின்னர் அவர்கள் யானை எப்படியானது என்பதைப் பற்றி விவரணஞ் செய்தார்கள். ஒருவன் யானை சுவர் போன்றது என்றான், மற்றவன் அதை மறுத்து யானை சுளகு போன்றது என்றான். அடுத்தவன் இல்லை இல்லை யானை துடைப்பம் போன்றது என்றான். இப்படி ஆளுக்கொரு கதை. சுவர் போன்றது என்று சொன்னவன் ஸ்பரிசித்தது யானையின் வயிற்றுப் பகுதியை, சுளகு என்று சொன்னவன் ஸ்பரிசித்தது யானையின் காதை, துடைப்பம் போன்றது என்று சொன்னவன் ஸ்பரிசித்தது யானையின் வாலை, எனவே எதையும் அரைகுறையாகப் பார்க்காமல் முழுமையாகப் பார்க்க வேண்டும் என்று  கூறிய ஆசிரியர் புத்தி சொல்லத் தொடங்கினார். அவர் சொன்ன புத்திகள் எல்லாம் மறந்து விட்டன. ஆனால் யானைக் கதை மனதில் நின்று வம்பு செய்தது, அதில் எனக்கு நிறையக் குறைகள் தென்பட்டன பின்னர் அதை அப்படியே ஓரத்தில் போட்டு விட்டேன்.

புத்தாயிரம் பிறந்தது, 21ஆம் நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டின ஏதோவோர் பத்திரிகையில் யானைக் கதையை மீண்டும் படித்தேன். புத்தாயிரத்தை எப்படிக் கொண்டாடவும் திட்டமிடவும் பயன்படுத்தவும் வேண்டும் என்று எழுதத் தொடங்கி இடையே யானைக் கதையும் இருந்தது, அவர் எழுதிய அனைத்தும் மறந்து விட்டது யானைக்கதை மட்டும் மனதில் நின்றது. அந்தக்கதையில் ஏதோ சிக்கல் இருக்கிறது, அது என்ன என்பதை அந்நேரத்தில் உள்ளம் உணர்த்தியது, ஆயினும் சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்க  மூளை தாயாரில்லாது இருந்தது.

2012ஆம் ஆண்டு பிறந்தது எனக்கு ஒருமுறை எஸ்.பொ.வை படிக்க வேண்டும் என்று தோன்றியது கா.சிவத்தம்பி மரணித்த பின்னர் எஸ்.பொவைப் படிக்கும் போது வித்தியாசமாக ஏதும் எனக்குத் தோன்றுகிறதா? என்பதுதான் மனதில் அடிக்கோடிட்ட விசயம். அவரது எழுத்துக்களை உணர்வுடன் படித்தேன் அவை நிறையச் செய்திகளை என்னுள் விதைத்துச் சென்றன. தேவை: உண்மையின் உபாசகர்கள் என்ற அவரின் கட்டுரையைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் அவரும் யானைக் கதை சொன்னார். வாசிப்பதை அப்படியே நிறுத்தினேன் மூளை யோசிக்க நீண்ட நேரத்தை ஒதுக்கித் தந்தது காரணம் நான் எஸ்பொவை நான் மீண்டும் படிக்கும் போது அது புதிய சூழல், இலங்கையின் ஆயுத விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டு அபிவிருத்தியென்ற முழக்கம் ஓங்கியொலித்துக் கொண்டிருந்தது. நான் சிறைச்சாலையில் இருந்தேன்.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கம் செய்வதற்காக சர்வதேசத்தின், குறிப்பாக இந்தியாவிலுள்ள தமிழீழவிடுதலைப் புலி ஆதரவாளர்களுடன் நெருக்கமாகச் செயல்பட்டேன் என்றும் அதற்காக இலங்கையில் செயற்பாட்டுத் தளத்தை நிறுவ முயன்றேன் என்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் என்னைக் கைது செய்தார்கள். அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவினை பாதுகாப்பு அமைச்சிடமிருந்து பெற்று சிறையில் தள்ளினார்கள். அதற்கு வலு சேர்க்கும் விதமாக கிளிநொச்சியில் வைத்து எனது நண்பர் ஒருவரும் கைது செய்யப்பட்டர். அவர் தங்கியிருந்த வீடு பிரபாகரனின் புதல்வர் சாள்ஸ் அண்டனி யுத்தகாலத்தில் தங்கியிருந்த வீடாம்... இவையெல்லாம் கைது செய்தவர்களுக்கு வாய்ப்பாகப் போக, சிறைச்சாலை எனக்கு நீண்ட நிம்மதியையும் ஓய்வையும் தந்தது.

நீதிமன்றை முழுமையாகநம்பினேன், எல்லாவற்றையும் தைரியமாக எதிர்கொள்ளத் துணிந்தேன், கடைசியில் ஒரு கொலைக் குற்றச்சாட்டுடன் இன்னும் என் மீதான வழக்கு உயர்நீதிமன்றில் போய்க் கொண்டிருக்கிறது. சிறைச்சாலை அதிகாரிகளைப் பார்த்துச் சொன்னேன் 
'ஒருபூனையைப் பிடித்து புலியென்று அடைத்து வைத்திருக்கிறார்கள்;' என்று. 
எல்லோரும் சிரித்தார்கள், அவர்களால் இன மத குல மொழி பேதம் கடந்து சிரிக்க மட்டுமே முடிந்தது. சரி இனி விசயத்திற்கு வருவோம்.

நிறைய வாசித்து மகிழ நீண்ட காலத்திற்குப் பின்னர் கிடைத்த நேரத்தை சரியாகப் பயன்படுத்துவதுதானே ஒரு போராளிக்கும் புத்திசாலிக்கும் அழகு. அதற்காக நான் ஒன்றும் புலி வீரனும் கிடையாது, அதிபுத்திசாலியும் கிடையாது. எல்லாவற்றையும் மறந்து யானைக் கதை ஆட்டிலெறி தாக்குதல் களம் போலவும் மல்டி பெரல் அடி பெற்ற நிலம் போலவும் உள்ளம் அதிர்ந்து மௌனிக்க, எல்லாம் வெட்ட வெளியாகி பொட்டல் நிலமாகித் தெரிந்தது. எல்லாச் சிந்தனைகளும் எண்ணங்களும் உணர்வுகளும் அமைதி கொண்டன.

குருடன் யானை பார்க்கப் போனான். இது எப்படிச் சரியாகும். அவன் குருடன், எப்படி அவனால் யானை பார்க்க முடிந்தது? இது பிழையான விசயமல்லவோ, அப்படியிருக்க எல்லோரும் இதை குருடன் யானை பார்த்தான் என்றே எழுதுகின்றார்கள், சொல்கிறார்கள். சரி அதை, யானை பற்றி அறியப் போனார்கள் என்று நாம் மாற்றிக் கொள்வோம். அல்லது இலகுவாக விளங்கிக் கொள்வதற்காக 'பார்த்தல்' என்ற சொல் எடுத்தாளப்பட்டது என்று  அதைப் பெரிது படுத்தாது விட்டுவிடுவோம். யானையைப் பற்றி ஸ்பரிசித்துச் சொன்ன எல்லாக் குருடர்களும் மடையர்களா? அல்லது விசயம் தெரியாதவர்களா? குறைபுத்திக்காரர்களா?. எஸ்.பொவைப் போல 'அது அவர்களின் தவறல்ல அதாவது சுவர் போல என்றதோ சுளகு போல என்றதோ துடைப்பம் போல என்றதோ, அது அவர்களின் ஸ்பரிசம். அவர்கள் விளங்கிக் கொண்ட விதம் அப்படி' என்று மன்னித்துவிட என்னால் முடியவில்லை. மடையர்களின் கருத்தை மன்னித்து ஏற்றுக் கொள்ளலாமோ? மன்னிக்கலாம் ஆனால் எப்படி அதை ஏற்றுக் கொள்ள முடியும்?

யானை பற்றிய தேடல் செய்த குருடர்களில் ஒருவராவது புத்திசாலி இல்லையா? அல்லது ஒரு புத்திசாலிக் குருடன் கூட யானை 'பார்க்கப்' போகவில்லையா? எல்லாக் குருடனும் ஒரு பகுதியைத்தானா ஸ்பரிசிக்க வேண்டும். யானையின் காதைப் பிடித்தவன் சுளகு என்றான், செவியைப் பிடிக்கும் போது அதைத் தடவி உருவகப்படுத்திக் கொள்ளும் போது காதின் தொடர்ச்சியாக வரும் தலை, தந்தம், தும்பிக்கை எதையும் அவன் தடவிப் பார்க்க வில்லையா? சரி அவன்தான் அறிவில்லாதவன் மடையன். மற்றவன் கூட அந்தப் பெரிய யானையின் வாலை மட்டும்தானா ஸ்பரிசிக்க வேண்டும்? அதன் மேனியைத் தடவியவன் முன்னும் பின்னும் மேலும் கீழும் தடவ வாய்ப்பிருந்ததே அவனாலும் அதைச் செய்ய முடியாமற் போயிற்றா? ஆனாலும்; ஒரு விடயம் புரிந்தது, யானைக் கதை பொதுவாக முழுமையாகச் செய்யப்படாத ஒரு விடயத்தை அரைகுறையாக விளக்கும் செயற்பாட்டிற்கு உதாரணமாக பயன்படுத்தப் படுகின்ற முழுமை பெறாத அவசரத்தில் எடுத்தாளப்பட்டவொன்று, அப்போது யாரும் எதிர்க் கேள்வி கேட்காததால் பல முறைகளிலும் பிரயோகிக்கப்படலாயிற்று, இப்போதுள்ள நமது சட்டங்கள்போல.

யானையை ஸ்பரிசித்தவர்கள் அறிவிழிகள் என்று ஒரே வசனத்தில் நிராகரித்தாலும் அதற்குள்ளால் நாம் ஏதோவொன்றை நியாயப்படுத்திக் கொள்கின்றோம். அதுதான் அவனது அறிவுமட்டம், அதனால் மன்னித்து விடுவோம், என்று நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்கின்றோம். அறிவிலிகள் பார்த்த யானை கூட இப்படித்தான் இருக்கும் சுளகு போலவும் சுவர் போலவும். அதற்கு குருடன் பார்க்கத் தேவையில்லை. இந்தக் கதையில் குருடனைப் பார்க்க வைத்த பெருமை நமக்குத்தான் உண்டு,

மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் எனது தம்பியொருவன் கேட்டான். அண்ணா உனக்கு குருடன் பார்த்த யானைக் கதை தெரியுமா? என்று. நான் ஆம் என்றேன். மீண்டும் அதே வேகத்தில் அவன் திருப்பிக் கேட்டான், குருடன் எப்படி பார்க்க முடியும்? என்று!. என்னிடம் விளக்கக் குறிப்புகள் இல்லை போலியான வார்த்தைகளால் அவனின் நியாயமான கேள்வியை வலுவிழக்கச் செய்ய நான் தயாரில்லை. 'அதுதானே குருடன் எப்படி பார்க்க முடியும்?' என்றேன். அவனுக்கோ ஏக திருப்தி. நான் கதை சொல்ல முன்னமே அவன் கதையை அறிந்திருக்கவும் கூடும் அல்லது தலைப்பே அவனது சிந்தனையைக் கிளறிவிட்டிருக்கவும் கூடும். என்ற பல்வேறு எண்ணங்கள் எனக்குள் முகாமிட்டது. சிலவேளை அவனுக்கு கதையே தெரியாமல் இருக்கவும் கூடும், ஏதோ... நான் உரையாடிக் கொண்டிருப்பது புத்தாயிரத்தில் பிறந்த ஒருவனுடன் அல்லவா என்னைவிட அவனது அறிவு வீச்சு கனதியாய்த்தான் இருக்கும்.

இப்போது நானும் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும், நான் கைது செய்யப்பட்ட விசயமும் யானை. நிறையக் குருடர்கள், அவர்கள் பல வடிவங்களில் புலனாய்வுக்காரர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமைக் காவலர்கள், மனித உரிமைப் போராளிகள், போலிசார், அரசாங்கம், பொதுமக்கள், எல்லாவற்றையும் தாண்டி எனது நண்பர்களும் உறவினர்களும், ஆகி தமது ஸ்பரிசத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். என்னைக் குத்திக் கிழிப்பதில்தான் எத்தனை சுகம் அவர்களுக்கு. 

சென்னைக்குப் போயிருந்த போது ஒரு நீண்ட உரையாடலுக்குப் பின்னர் அறிவுமதி சொன்னார் 'தம்பி கவனமாக இரு உன்னை நான் விளங்கிக் கொள்கின்றேன், நீ எங்கு போய் நிற்பாய் என்று விளங்குகிறது, உனக்கு நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டும் நீ நிறையச் செய்ய வேண்டியிருக்கு, உன்னைச் சூழ நிறைய மாயக் கண்கள் இருக்கின்றன. அவற்றை நீ அடையாளம் காணமுடியாது. அவற்றைக் கண்டு கொள்வது உனது புத்திசாலித்தனம். உனக்கு நான் என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்'

அவுஸ்திரேலியாவிருந்து ஒருவர் வந்தார். அவரது பெயர் பிரோள் குரோசோவ். அவர் வந்தது வியாபார நிமித்தம். அவருடனான நீண்ட உரையாடலுக்குப் பின்னர் சொன்னார், சகோதரனே கவனமாக இரு காற்றைப் போல செயற்படு, காற்றின் அசைவை உணர முடியும் அடையாளத்தைக் காண முடியாது. உலகின் எல்லாவற்றையும் யாரோ எங்கிருந்தோ  தீர்மானிக்கிறார்கள் அவர்களின் அனைத்திற்கும் நாம் அசைந்தாக வேண்டும் என்றும் எதிர் பார்க்கிறார்கள். சர்வதேசம் என்பது என்னையும் உன்னையும் ஒதுக்கிவிட்டு திட்டமிடவில்லை, எனவேதான் கவனம் தேவை. வாழும் காலம் பெறுமதியானது அதைக் கவனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உனக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்.

உலகின் இரண்டு துருவங்களில் உள்ள மனிதர்கள் ஆனால் ஒரே சிந்தனை. மொழி, இனம், சமயம் கடந்து நல்ல உள்ளங்கள் எப்போதும் ஒரே மாதிரியாய்தான் சிந்திக்கும். இப்போது எனக்கு எங்கிருந்தோ பல்லாயிரம் பேரின் தைரியம் ஒருமித்து என்னில் குடிகொண்டது போன்ற உணர்வு. எதைப் பற்றிய பயமும் கொஞ்சம் கூட இல்லாத தன்மை, நான் யார்? இந்த உலகில் எனது பணியென்ன? எப்படிப்பட்ட ஒரு செயற்பாட்டுத் தளத்தை நான் தேர்ந்தெடுக்க வேண்டும்? எனது சிந்தணையை எப்படிக் கட்டமைக்க வேண்டும்? எப்படியான நபர்களை எனது இயங்கு தளத்தினுள் அனுமதிக்க வேண்டும்? இப்படி நிறையக் கேள்விகள் என்னை தொடர்ந்து பதில் தேடத் தூண்டிக் கொண்டே இருக்கின்றன.

மற்ற மனிதர்களைப் போல நான் ஒரு வரட்டுத்தளத்தில் நின்று கொண்டு எங்கெங்கோ இருந்து கிள்ளியெடுத்தவைகளைக் கோர்த்துக் கொண்டு அனுபவப்பட்டது மாதிரி கதை சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. அது போல யாரோ எழுதியவைகளைப் படித்துவிட்டு உணர்ச்சிவசப்பட்டு உந்தித்தள்ளப்பட்டு களத்தைத் துணியாது மடமையில் காரியமாற்றவும் தயாரில்லை. என்னைச் சூழ என்ன நடக்கிறது என்பதைத் தெளிவாகவே நான் புரிந்து கொள்கின்றேன். எனவே எனது செயற்பாட்டுத் தளத்தைத் தீர்மானிப்பது ஒன்றும் கஷ்டமான காரியம் கிடையாது. சிறை வாழ்க்கை கற்றுத் தந்தவை மிக ஏறாளம். எனக்கு மிகவும் திருப்தியாய் ஒன்று புரிந்தது  நான் மரணிக்கச் சித்தமாக இருக்க வேண்டும் அது வரைக்கும் நானும் எனது செயற்பாடுகளும் யானை, பார்ப்பவர்களைப் பற்றிக் கவலையில்லை அவர்கள் குருடர்கள்.
21.01.2012- 22.00 மணி
முஸ்டீன்


Friday, April 20, 2012

மௌனப் போரும் புன்னகை ஆயுதமும்





அமைதியாகத் தொடரும் ஆக்கிரமிப்பு
அமாவாசையில் தீட்டப்பட்ட திட்டம்,
அது அப்படித்தான் இப்போதைக்கு ஜொலிக்கிறது.
சூரியஸ்தமனத்தில் வீரியம் பெறும்
கொள்கை கோட்பாடுகள்,
விடியலோடு மௌனம் போர்த்திக் கொள்ளும்.

ஒரு பாம்பின் நகர்வு,
பதித்திருப்பது ஒற்றைத்தடம்,
சத்தமில்லாத நகர்வுகளுக்கு பின்னால்
பொதிந்திருக்கும் அர்த்தங்கள்
அவ்வளவு எளிதில் புலப்படாது,
எஞ்சியிருக்கும் தடயங்கள்தான் சான்று.
புயலுக்கு முன்னரும் பின்னரும்
நிலவுகின்ற அமைதி சொல்லும் செய்தி
மிகவும் கனதியான அர்த்தம் பொதிந்தது.

தேசப்படத்தில்
எல்லைகளுக்கு இடப்படும்
புதிய கோடுகள்,
தசாப்தங்கள் கடந்து
அடிமையாக்கும் கை விலங்குகள்,


மௌனமான மாயப் பரப்பினுள்
சிதைக்கப்பட்ட பாரம்பரியங்கள்
எஞ்சியிருப்பதும் ஆச்சரியம்தான்,
துப்பாக்கிகள் தூங்கிக்கொள்ள
பேனைகள் விழித்துக் கொண்டன!
சத்தமிட்டு அடக்கிவிடுவது
அராஜகமாகி விடுவதனால்தான்,
புன்னகைத்து அடிமையாக்கும் வினோதம்
அன்றாடங்களில் சங்கமித்து விடுகிறது.

ஒருவருக்கும் தெரியாத புதிய பாஷை
ஏற்படுத்தப் போகும் ஈர்ப்பும்,
உளமாற அள்ளித் தெளிக்கப்படும் அன்பும்,
ஆறத் தழுவியபடி சொரியப்படும் புன்னகையும்,
கண்ணீரைத் துடைத்து விடும் கரங்களும்,
ஆறுதலுக்காய் வீசப்படும் சொற்களும்,
பெயர்த்தெடுக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டவை.

ஒரு மாலைப் பொழுதிற்குள்
ஈர்த்தெடுத்த மனங்களை,
போலியாய் புனையப்பட்ட
பாசக் கயிற்றினால்
எப்போதைக்கும் கட்டிப்போட்டிட வேண்டாம்.

'நாளைகள் உனக்கில்லை
இன்றுமட்டுமே உனக்கானது'
யாரோ சொன்ன தத்துவம் உண்மைதான்!
இன்றைய புன்னகைகள்
நாளைய உனது விரோதிகள்,
இன்று உனக்குச் சாவு
நாளை உனக்கு அழிவு,
இன்றுகளும் நாளைகளும்
இப்படித்தான் செய்தி சொல்கின்றன.

எல்லா யதார்த்தங்களையும் தாண்டி
இன்று அடிமையாக்கப்பட்ட போதில்,
நேற்றைய அந்த விரோதி
நாளை உரத்துச் சொல்வான்,
'விரைவில் எல்லோருக்கும் விடுதலை' என்று
அப்போதும் கூட
மானங்கெட்ட கரங்கள்,
மரத்துப் போன மனது அமைதிகாக்க
கண்ணீரைத் துடைக்க நீளும்.

புல்லரித்துப் போய் புதிரோடு
பார்த்துக் கொண்டிருப்பதை தவிர,
தெரிவுகள் ஒன்றுமே இல்லாத
சூனியப் பகுதியொன்றில்,
மௌனமான அந்தப் போர் தொடரும்
புன்னகை ஆயுதங்கள் சுமந்தபடி.

நூல் வெளியீடு