கவிதை

ஊமை ராத்திரிகள்
  • இராப் பொழுதில்தான்  எல்லாம் நடக்கின்றன
  • விமானங்கள் காணாமல் போவதும் 
  • மனிதர்கள் காணாமல் போவதும்
  • இன்னும் பலவும்

  • தோண்டி எடுக்கப்படும் எலும்புக் கூடுகள்
  • உண்மையா சொல்லப் போகின்றன
  • மீட்கப்படும் விமானத்தின் பாகங்கள் போல ஊமையாய்
  • மனிதவுரிமைப் போராளிகள் போலவும்
  • அரசியல் தலைவர்கள் போலவும்
  • மௌனம் பெறுமதியான ஆடை
  • பாதுகாப்பானதும் கூட

  • மீண்டு வரும் வரலாறு
  • எல்லாவற்றையும் சொல்வதில்லை
  • மாட்டப்பட்ட கைவிலங்குகளையும்
  • பெரும் பூட்டுகள் தொங்கும் சிறைக் கதவுகளையும்
  • காணாமல் போன மனிதர்களையும்
  • பதிவு செய்யப்பட்ட இறுதி அறிக்கைகளையும் கூட

  • மீட்பர்களுக்கெல்லாம் தொன்டை அடைத்துக் கொள்ளும்
  • நீண்ட பிரச்சாரங்கள் வலுவிழக்கும்
  • தூக்கி விட்டுக் கொண்ட சட்டைக் கொலர்கள்
  • கசங்கிப் போய் வேறு திசை நோக்கும்
  • அப்போதும் கூட
  • காணாமல் போன விமானங்கள் மீதான வாதம் முடிவு பெற்றிருக்காது.

  • ஒன்றை அடைய இன்னொன்றை அழித்தல்
  • கட்டில் கதவு மேசை கதிரைகளுக்காகச் சாவும் மரங்கள்
  • நண்டுக் கூட்டினுள் அவிந்து போகும் கெழுத்தி மீன்கள்
  • தூண்டில் நுனியில் குத்தப்படும் உலுவான் புழுக்கள்
  • எல்லாவற்றினுள்ளும் அதே அரசியல்
  • மீன் படவில்லையென்பதற்காக
  • தூண்டில் இரை பத்திரப்படுத்தப்படுவதில்லைதானே,

  • பூமிக்கடியில் மறைக்கப்படும் யுரேனியம் செறிவூட்டும் நிலையங்களையும்
  • செவ்வாயில் நதிகள் ஓடி மறைந்த சுவடுகளில் திரியும் பூச்சிகளையும்
  • முதல் வானின் சுவரைத் தொட்டுப்பார்க்க விடப்படும் விண்ணோடங்களையும்
  • குறிபார்த்துச் சொன்ன விஞ்ஞானம் ஊமையாகிற்று
  • உளவாளிகளுக்குக் கண் தெரியவில்லை
  • செற்றலைட்டுகள் பார்வையிழந்திற்று

  • அரச தலைவர்கள் சிரித்துக் கொள்வார்கள்
  • கலங்கிய விழிகளோடு பத்திரிகைச் செய்திக்கான படம்
  • அமைதியாக இருங்கள்
  • இரண்டு சொட்டுக் கண்ணீருடன் ஒரு காட்சிப் பதிவு
  • விருதுகள் அருகில் செல்லவே அச்சப்படும்

  • இழுத்து வாருங்கள் விலங்கிடப்பட்ட மனிதர்களை
  • தலைநிமிர்ந்து நிற்க அனுமதிக்காதீர்கள்
  • உண்மைகளைச் சிறையிலடையுங்கள்
  • முழுமையாக அவமானப்படுத்தி விட்டு அமைதி கொள்ளுங்கள்
  • சத்தியத்திற்குத் தண்டனை கொடுங்கள்
  • கொன்று புதைத்து விடுங்கள்
  • முடியாதபட்சத்தில் 
  • நாக்கை அறுத்து
  • கண்களைக் குருடாக்கி
  • காதுகளைச் செவிடாக்கி
  • விரல்களையும் வெட்டிவிட்டு
  • விடுதலை செய்யுங்கள் 
  • சுதந்திரமாகத் திரியட்டும்
  • எல்லா இடங்களிலும் எல்லைகள் கடந்து வாழும் நீதியும் சட்டமும்

  • வெள்ளைக் கொடிகள் அசைந்து கொண்டே இருக்கும்
  • ஏற்றப்பட்ட வெள்ளைக் கொடிகள் அசைந்துதானே ஆக வேண்டும்

  • உலக அரசியலைப் புரிந்து கொள்ள
  • பக்குவம் காணாது
  • நிகழ்வுகளை விளங்கிக் கொள்ள
  • புத்தியும் போதாது
  • செய்தி இதுதானென்றால்
  • தலையைத் தலையை ஆட்டிக் கொள்ள
  • ஆட்களுக்கா பஞ்சம்

  • இராப் பொழுதில்தான்  எல்லாம் நடக்கின்றன
  • விமானங்கள் காணாமல் போவதும் 
  • மனிதர்கள் காணாமல் போவதும்
  • இன்னும் பலவும்


No comments:

Post a Comment