Friday, August 9, 2019

தீவிரவாதம் பயங்கரவாதமாகி நுழைந்த ஓட்டை

(இக்கட்டுரை ஜூன், கனடா “தாய்வீடு” மற்றும் ஜூலை, “ஞானம்” இதழிலும் பிரசுரமானது)


இலங்கையின் ஒரு தசாப்த சமாதான சூழ்நிலைக்கு சடுதியாக விழுந்த அடி தேசத்தின் மூலை முடுக்கெங்கும் அச்சத்தை விதைத்து இயல்பு நிலையைக் குழப்பி மக்களின் நிம்மதியைச் சூரையாடி இனவாதப் பிசாசுகளைத் தட்டியெழுப்பிவிட்டு அனைத்து விளைவுகளையும் காலத்திடம் ஒப்படைத்துவிட்டு மறைந்துவிட்டது. அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கும் போது எழுத்தும் தனது முழுமையான சுதந்திரத்தை இழந்தேவிடுகின்றது என்பதை உள்வாங்கிக் கொண்டு இக்கட்டுரை எழுதப்படுகின்றது.

பயங்கரவாதம் எங்கெல்லாம் நிலைகொள்கின்றதோ அங்கெல்லாம் உள்ளக வேலைத்திட்டமொன்று மக்களின் எண்ணங்களைத் திசை திருப்பி தனது காரியத்தைச் சாதிக்க முனைகின்றது என்பதைதான் அர்த்தமாகக்கொள்ள வேண்டியிருக்கின்றது. கடந்த 21ஆம்திகதி இலங்கையில் நடாத்தப்பட்ட தாக்குதல் குறித்து மிக முக்கியமான நான்கு பரப்புகளை அடையாளப்படுத்தி எழுதலாம்

01. வஹாப்வாதம் மற்றும் தாக்குதலுடன் தொடர்புடைய தேசிய தௌஹீத் ஜமாஅத் மற்றும் அதன் அங்கத்தவர்கள் ஏனைய துணைப்பயங்கரவாத அமைப்புகளின் சிந்தனை

02. தாக்குதலில் ஈடுபட்ட குழு தொடர்பாக முஸ்லிம் அமைப்புகளால் பாதுகாப்புத் தரப்புக்கு முறையான தகவல் அளிக்கப்பட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அத்தோடு இந்தியா வழங்கிய புலனாய்வுத் தகவலுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாதது ஏன்?

03. பயங்கரவாதத் தாக்குதல் நடாத்தப்படுவதற்கான சூழ்நிலை எப்படி உருவாகி இருந்தது, அரசு ஏன் அதைப் பொருட்படுத்தவில்லை?

04. இந்தத் தாகுதலுக்கு யார் பொறுப்புக் கூறுவது

01.

இந்தப்பரப்பை விளங்கிக் கொள்வதற்கு வஹாபிசம் பற்றிய புரிதல் மிகவும் அவசியமானது. சவுதியில் மன்னராட்சி நிறுவப்பட்ட பின்னர் மத்திய கிழக்கில் மீண்டும் ஒருமித்த இஸ்லாமிய ஆட்சிக் கனவுகள் சுமந்து யாரும் வெளிப்பட்டுவிடக் கூடாதென்ற தொலைநோக்கில் மத்தியகிழக்கின் ஆட்சிப்பிராந்தியங்கள் இரண்டாம் உலக மகாயுத்த காலத்தோடு பிரிக்கப்பட்டு தமக்குத் தோதான ஆட்சியாளர்கள் அரியாசனங்களைப் பெற்றபின்னர் கிடைத்த பொக்கிசம்தான் எண்ணெய்வளம், 1967களில் சவுதி மன்னர் பைசல் மேற்குக்கு எதிராக எடுத்த முடிவுகள் அவரை நஞ்சூட்டிக் கொலைசெய்யும் வரைக் கொண்டு சென்றது. அதன்பின்னர் மத்தியகிழக்கின் மத்தியதளமாக ஈரான் தேர்வுசெய்யப்பட்டு மன்னர் (சாஹ்) ரிழா முஹம்மத் பஹ்லவியின் நெருங்கிய நட்புடன் மேற்கின் எல்லாத் திட்டங்களும் முன்னெடுக்கப்படுகையில் 1979இல் ரூஹூல்லா எனப்படும் கொமெய்னியின் நெறிப்படுத்தலில் ஈரானியப் புரட்சி வெற்றிபெற்றது. அதைத் தோற்கடிக்க எடுக்கப்பட்ட எல்லா முயற்சிகளும் தோற்றுப் போன பின்னர் சுன்னி-ஷீயா பிளவை முன்னிறுத்தி அரபு நாடுகளின் துனையோடு பாரசீக நாட்டின் மீது நீண்ட யுத்தம் சத்தாம் ஹூஸைன் தலைமையில் திணிக்கப்பட்டது. அதன் பின்னர் ஷியா என்ற பதத்தை சர்வதேச அளவில் சிதைக்கும் சிற்தனைக் குழுவின் அவசியம் உணரப்பட்ட போது நிறுவப்பட்ட கருத்தியல்தான் வஹாபிசம். 1980களுக்குப் பின்னர்தான் அது ஒரு டீசயனெ ஆக மாற்றப்பட்டு தொன்டர்களை உள்வாங்கும் அமைப்புமுறைச் செயற்பாடாக முன்னெடுக்கப்பட்டது அதற்காக சவுதியின் ரியால்கள் தர்மம் என்ற பெயரில் வாரியிறைக்கப்பட்டன இஸ்லாமிய இயக்கங்கள் உருவாக்கப்பட்டு அது மிகவும் நுணுக்கமாக நிறுவனமயப்படுத்தப்பட்டது. 

வஹாப்வாதத்துக்கு எளிய வரைவிலக்கணம் சொல்வதாக இருந்தால் 'சவுதிசார் மன்னராட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக இஸ்லாத்தின் அடிப்படைகளை உள்வாங்கி திறம்பட்ட புலனாய்வுச் சக்திகளால் வடிவமைக்கப்பட்ட பிரிவினைக் கூறுகளையும் முரண்பாட்டுக் கையாள்கையையும் கொண்ட ஓர் எதிர்மறைத் தன்மைக் கோட்பாடு' என்று சொல்லலாம். (வேறுபட்டகருத்துகளும் இருக்கலாம்)

வஹாப்வாதம் ஒருகாலத்திலும் கேள்விக்குட்படுத்தப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்த கொள்கை வகுப்பாளர்கள் அதை 'ஏகத்துவம்' அல்லது 'ஓர் இறைக் கொள்கை' (தௌஹீத்) என்ற  இஸ்லாத்தின் அடிப்படை மீது கட்டமைத்தனர் அதாவது வஹாப் வாதத்தைக் கேள்விக்குட்படுத்துவது என்பது இஸ்லாத்தின் அடிப்படை மூலமான ஓர் இறைக் கொள்கையை கேள்விக்குட்படுத்துவதற்கு நிகரானது. அதையும் மீறி கேள்விக்குட்படுத்துபவன் ஏகத்துவத்துக்கு எதிரானவன், ஏகத்துவத்துக்கு எதிரானவன் இஸ்லாமில் இருக்க முடியாத எதிரி, என்று அது தீவிரமாக வேறூன்றியது. தனக்கான தொண்டர்களை உள்வாங்க இந்தத் தீவிரச் சிந்தனை சிறப்பான முறையில் செயற்பட்டது. ஆனால் ஏகத்துவக் கொள்ளையின்பால் ஈர்க்கப்படும் ஆழச் சிந்தித்து கேள்விக்குட்படுத்தும் திறனில்லாத எந்தவொரு குடிமகனாலும் வஹாபியத்தின் ஆக்கிரமிப்பை விளங்கிக்கொள்ளவோ புரிந்துகொள்ளவோ முடியாது. அவன் நிச்சயம் புணர்வாழ்வளிக்கப்படவேண்டியவன். (அதைத்தான் இப்போது சின்ஜியான் மாநிலத்தில் சீனா நிர்ப்பந்தமாக அடக்குமுறைக் கரங்கொண்டு செய்கின்றது- எந்தச் சமரசமும் செய்துகொள்ளாமல். சீனா கைக்கொள்ளும் எல்லை மீறிய வழிமுறை தொடர்பில் வாதப்பிரதிவாதமுண்டு.)

எந்தவொரு தீவிரச் சிந்தனையும் ஒற்றுமையாக இருப்பது கிடையாது அதனால் 'என்னுடைய கருத்தியலோடு உனக்கு உடன்பாடில்லை என்றால் பிரிந்து போ' என்று தொடங்கிய 'பிரிவு' வஹாப்வாத்தின் செம்மையான இயங்கு தளத்தை நிறுவியது. இந்தியாவிலும் இலங்கையிலும் ஒரே அமைப்பாக இயங்கிய தொஹீத் இயக்கங்கள் பிரிந்து போதல் என்ற செயற்பாட்டுக்கு இஸ்லாத்தினை மட்டுமே முன்னிறுத்தின. எதிர்காலத்தில் ஏற்படப் போகும் பிளவுகளும் இஸ்லாத்தினை முன்னிறுத்தியே நிகழும் இந்தப் பிரிவினை இஸ்லாத்தின் வணக்கவழிபாடுகளில் உள்ள சின்னச் சின்ன முரண்பாடுகளை வாதப்பொருளாக்கி மனிதர்களைக் கூறுபோட்டு தனக்குத் தேவையான மூளைகளையும் உணர்ச்சியாளர்களையும் தூய இஸ்லாமின் பெயரிலும்  ஏகத்துவத்தின் பெயரிலும் உள்வாங்கிக் கொண்டே இருந்தது. வருத்தப்பட வேண்டிய விடயம் யாதெனில் இராணுவப் புலனாய்வுச் செயற்பாட்டாளர்களால் மாத்திரமே உள்வாங்கக் கூடிய செயற்பாட்டுக் கட்டைமைப்பின் கூறுகளை பொதுமக்களால் அவ்வளவு எளிதில் விளங்க முடியாது. உச்சகட்ட இஸ்லாமியத் தீவிர சிந்தனை கொண்ட செயற்பாட்டாளர்கள்; அடுத்த கட்டம் பயங்கரவாதிகளாக மாறுவதுதான். வஹாப்வாத்தின் பின்னணியில் உருவாகும் ஒவ்வொரு இஸ்லாமியப் பயங்கரவாதிக்குப் பின்னாலும் நிச்சயம் சவுதி ரியால்கள் இருக்கவே செய்யும். (இதுவே செச்சனியா, டாகெஸ்தான், ஈராக், சிரியா விவகாரத்திலும் தாக்கம் செழுத்தியது) 

தற்கொலைக் குண்டுதாரியான சஹ்ரான் முன்னர் தலைமை வகித்த தேசிய தௌஹீத் ஜமாஅத், அது போன்று இப்போது தடைசெய்யப்பட்டிருக்கும் ஜமாஅத்தே மில்லத்து இப்றாஹீம், விலாயத்தே சிலான் போன்ற அனைத்தும் வஹாப்வாதத்தின் இறுதிக் கூறான சஹாதத்தை அடைவதற்கான இலகு வழியாக இஸ்திஸ்ஹாத் தாக்குதலைப் பயன்படுத்துதல் (புனிதத் தியாகியாக மரணித்து சுவனத்தை அடைந்துகொள்ள தற்கொடைத் தாக்குதலை மேற்கொள்ளல்) என்ற எல்லையில் வந்து நின்றனர். இங்கு கவனிக்க வேண்டியஅ ம்சம் 'தற்கொலை' என்ற சொற்பிரயோகத்தில் இருந்து அது 'தற்கொடை' (தன்னை இஸ்லாத்துக்காகத் தியாகம் செய்தல்) என்று திறம்பட மூலைச்சலவை செய்யப்பட்டவர்களாக இருப்பர். சொத்து செல்வம் பதவி புகழ் எதனையும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள மாட்டார்கள். மனிதன் ஆசை கொள்ளும் இவை எவற்றின் மீதும் பற்றில்லாத ஒருவன் எவ்வளவு தாக்கமிகு சக்தியாக இருப்பான் என்பதைத் தெளிவுபடுத்தத் தேவையில்லை. (பயங்கரவாதத்தைத் தேர்வு கொள்ளும் அனைத்து மதங்களும் தமது தொண்டர்களை 'இறை சேவை' என்ற மையப்புள்ளியில் வைத்துத்தான் இயக்குகின்றன)

02.

சமுதாயத்தின் பொது அலகில் இருந்து பிரிந்து பிரிந்து பிரச்சினைகளை மட்டுமே பேசுபொருளாக்கி ஏனைய முஸ்லிம்களை கேள்விக்குட்படுத்தி அவர்களை தலைகுனியச் செய்ய நியாயமான காரணங்களைத் தேர்வு செய்து தொடுக்கப்படும் தொடர்கருத்தியல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இவர்கள் பிரச்சினையாகவே தென்பட்டார்கள் அதனால் வஹாப்வாதத்தின் கூறுகளுக்குள் சிக்கிக்கொள்ளாத ஏனைய இயக்கங்கள் இவர்களை அபாயகரமானவர்களாகச் சித்தரித்து சட்டத்துக்கு முன் நிறுத்தி இவர்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்தி தமக்குச் சவாலாக அமையாத வண்ணம் பார்த்துக்கொள்வதற்காகவே தற்கொலைதாரி சஹ்ரான் உட்பட்டவர்கள் பற்றி இலங்கையின் பாதுகாப்பு தரப்பிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. 

முறைப்பாட்டில் இணைக்கபட்ட அடுத்த முக்கியமான ஆவணம் சஹ்ரானுடைய ஆவேசமான பேச்சு. 'பௌத்தர்களே! ஒன்றை மட்டும் மனதில் இருத்திக் கொள்ளுங்கள் இறையில்லங்கள் மீது நீங்கள் கைவைத்திருக்கின்றீர்கள் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் குண்டுகளைக் கட்டிக்கொண்டு வந்து நீஞ்கள் எதிர்பாராதவண்ணம் உங்களைக் கொன்று குவிப்பார்கள்' 
இந்த வார்த்தைகள் பாதுகாப்பு தரப்பால் அவ்வளவு சீரியசான பேச்சாக எடுத்துக் கொள்ளப்படாமல் இருப்பதற்கு மற்றுமொரு முக்கிய காரணம் அப்பேச்சை வெறும் உணர்ச்சியூட்டும் பேச்சாக மட்டும் கருதிக்கொண்டதுதான். 

2017 ஆம் ஆண்டு சஹ்ரான் குழுவினரால் காத்தான்குடியில் முன்னெடுக்கப்பட்ட வாள்வெட்டுதாக்குதல் சம்பவத்தில் முக்கிய சந்தேக நபராகக் கொள்ளப்பட்ட போது காத்தான்குடி பொலிசார் இது குறித்த விசாரனைகளை முன்னெடுக்கையில் சஹ்ரான் தலைமறைவாகி இருந்தமை மேற்கொண்டு சட்டத்தின் பிடியில் அவர்களைக் கொண்டு வந்து நிறுத்துவதற்கான நிலைமை பெலிசாருக்கு இல்லாமல் போனது. அப்போதே பொலிசார் தீவிரமாகத் தேடி இருக்க வேண்டும். தம்மால் முடியாதபோது சீஐடி விசாரனைக்கேனும் கோப்புகளைச் சமர்ப்பித்திருக்கவேண்டும். 

2017 தொடக்கம் 2019 வரையான இரண்டு வருட காலப் பகுதியில் சஹ்ரானின் தலைமறைவு வாழ்க்கை மேலும் பாதுகாப்பான முறையில் தகவல் வெளியே கசிந்திடாதபடி தொடர்புகளை மேற்கொள்ளவும் தயார்படுத்தல்களை முன்னெடுக்கவும் சிறப்பான அவகாசத்தை வழங்கியது. இக்குறிப்பிட்டகாலப் பகுதியில் இவர்கள் குறித்த முறையான தரம்வாய்ந்த எத்தகைய புலானாய்வுத் தகவல்களையும் இந்தியாவால் வழங்க முடியவில்லை. அதே நேரத்தில் இலங்கையில் புலானாய்வு அமைப்புகள் எதுவுமே இவர்களை இவ்வளவு சீரியசாக எடுத்துக்  கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. அதை தாக்குதலின் பின்னர் தனது பதவியை ராஜிமானாச் செய்த பாதுகாப்புச் செயலாளரின் வார்த்தைகளே உறுதிப்படுத்துகின்றன. 'தாக்குதல் பற்றிய அறிவுறுத்தல் கிடைப்பெற்றிருந்தபோதும் இந்தளவுக்கான தாக்குதலை நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை' என்றார். ஆனால் இறுதிக்கட்டத்தில் இந்தியா வழங்கிய தாக்குதல் பற்றிய புலனாய்வுத்தகவலை சரியான முறையில் செயற்படுத்தி இருந்தால் இந்தத் தாக்குதலைத் தவிர்த்திருக்கலாம் என்றும்  அதிகாரம் கொண்ட ஜனாபதி ஒரு பக்கமும் பிரதமர் இன்னொருபக்கமும் நின்றதனால் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாமல் போனது என்றும் சொல்லப்படும் வாதங்கள் எற்கத்தக்கனவல்ல. 

பொதுவாகப் பிறநாட்டுப் புலனாய்வுத்தகவல்கள் கிடைக்கப்பெறும் போது அதை மறுநாளே ஆய்வுக்குட்படுத்துவதுதான் பாதுகாப்புத் தரப்பினரின் பொறுப்பு அப்பொறுப்பு சரியாக நிறைவேற்றப்பட்டதா என்ற கேள்விக்கு முன்வைக்கப்படும் பதில்கள் காத்திரமானதாகத் தெரியவில்லை. அதற்குப் பிரதான காரணம் 2009 யுத்த முடிவின் பின்னர் கிடைத்த சமாதானத்தின் முழுமையான வாசனையை அனைவரும் தாராளமாக நுகர்ந்தனர் அந்த நுகர்ச்சி எது குறித்தும் யாரையும் அச்சம் கொள்ளச் செய்யவில்லை. மற்றபடி அரசியல் பிரிவினைகள் என்பது பாதுகாப்பில் தாக்கம் செலுத்த முடியாது. ஏnனில் 2002ஆம் ஆண்டு இதை மிகவும் கடினமான நிலையில் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா அம்மையார்  ஒருகட்சியையும் பிதமர் ரணில் விக்ரமசிங்க வேறோர் கட்சியைச் சேர்ந்தவராகவே இருந்தார்கள். அப்போது நாட்டில் சமாதானம் இருக்கவில்லை இரு தலைவர்களின் கட்சி பேதங்களுக்கு மத்தியில் சமாதானப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அப்போது எவ்வகையிலும் தேசியபாதுகாப்புக்கு குந்தகம் நேர பாதுகாப்பு தரப்பு இடமளிக்கவில்லை. இக்காலப்பகுதியில் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டமையையும் கருத்தில் கொள்ள வேண்டும். 

இந்தியா வழங்கிய புலனாய்வுத் தகவல் பிரமுகர் பாதுகாப்புப் பிரிவினர்க்கு கவனத்தில் எடுக்கும்படி அறிவித்தமையோடு நின்றுவிட்டதற்கும் மேலே சொன்ன 'இந்தளவுக்கு எதிர்பார்க்கவில்லை' என்ற விடயமே அடிப்படைக்காரணம்

03. 

ஏப்ரல் 21 தாக்குதல்கள் எடுத்த எடுப்பில் தீர்மானிக்கப்பட்டு நடாத்தப்படவில்லை. அந்தத் தாக்குதலைச் செய்யவைக்கும் அளவுக்கு அவர்களை இட்டுச் சென்ற காரணிளையும் ஆராயவேண்டும்  அதுதான் எதிர்காலத்தை சிறந்த முறையில் நேர்கொள்ள உதவும். 
யுத்தம் முடிந்து நான்கு வருடங்களின் பின்னர் பரவலாக முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும் கலாசாரத்தையும் வழிபாட்டுத்தளங்களையும் மையப்படுத்தி மேற்காள்ளப் பட்ட தாக்குதல்கள் தீவிர பௌத்த இனச் சிந்;தனைச் சாயம் பூசப்பட்டு முன்னெடுக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டமையும் அதை அரசு பெரிதாகப் பொருட்படுத்தாத நிலைமையினையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அளுத்கமை மற்றும் தர்காநகர் ஆகிய ஊர்களில் முஸ்லிம்களின் வர்த்தக மையங்கள் மட்டும் இலக்கு வைக்கப்பட்டு கலவர சூழ்நிலையில் எரிக்கப்பட்டமையும் வீடுகள் சேதமாக்கப்பட்டு உயிர்சேதம் விளைந்தமையும் மஹிந்த அரசு காலத்தில் இடம்பெற்றபோது முஸ்லிம்கள் பாதுகாப்பில்லாத தன்மையை உணரவேண்டியேற்பட்டது அதனடியாகவே ஆட்சிமாற்றமும் 2015இல் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்தது. அதன் பின்னர் 2018ல் கண்டி-திகன பகுதியில் இஸ்லாமியர்களின் வர்த்தகத் தளங்களும் வீடுகளும் இலக்கு வைக்கப்பட்டன. எல்லாம் முடிந்த பின்னர் பாதுகாப்புத் தரப்பு பலரைக் கைது செய்தது. ஆயினும் கலவரத்தைத் தடுக்க ஆவண செய்யவில்லை என்பது பொதுவான மக்கள் அபிப்பிராயம். இப்போதுள்ள அரசாங்கத்தின் காலப்பிரிவில் இடம்பெற்ற இத்தாக்குதல் எந்தக் கட்சி அரசமைத்தாலும் சிறுபான்மை முஸ்லிம்களு;ககுப் பாதுகாப்பில்லை என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கப்போதுமானதாக இருந்தது. அதனடியாகத்தான் தற்கொலைக்குண்டுதாரி சஹ்ரானின் உணர்சியூட்டும் ஆவேசமான பேச்சு வெளிப்படுகின்றது சிலரால் சரிகாணப்படுகின்றது. அது பௌத்தத்தை இலக்கு வைத்தே மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. அவ்வுரை சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படுகின்றது. ஆக சஹ்ரானை வளர்த்துவிட்டதில் இந்நிகழ்வுகளுக்குப் பின்னணியில் இருந்த அனைவருக்கும் பங்கிருக்கின்றது என்பதே உண்மை.

வன்முறையைத் தூண்டும் அச்சுருத்தல் மிகுந்த சஹ்ரானின் பேச்சு இக்காலப்பகுதியில் எடுபடாமல் போனதற்கு மற்றுமொரு காரணம் இருக்கின்றது. உலக அளவில் பலம்பொருந்திய அமைப்பாகக் கருதப்பட்ட தனி அரசு நடாத்திய விடுதலைப் புலிகள் இயக்கத்தையே இந்நாட்டில் முற்றுமுழுதாக அழித்தொழித்த பின்னர் இதெல்லாம் எம்மாத்திரம் என்ற தம்மீதுள்ள அபரிமிதமான நம்பிக்கைதான் இவர்களையும் பொருட்படுத்தாமல் இருக்கச் செய்தது. அதுதான் வவுனதீவில் இரு பொலிசார் கொல்லப்பட்ட போது பிழையான திசையில் புலிகளை மையப்படுத்தியே விசாரனைகளைச் செய்ய வைத்திருந்தது. சம்பந்தமில்லாத நபர்களை கைது செய்து அவர்களே குற்றவாளிகள் என நம்பவும் வைத்தது. ஆக முழுக்க முழுக்க இலங்கைப் படைத்தரப்பும் சரி, பொலிஸ் தரப்பும் சரி, சரியான கோணத்தில் தயார்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதை மறுக்கவியலாது. 

மூன்று தசாப்தங்கள் இந்நாட்டைப் பீடையாகப் பிடித்திருந்த யுத்தம் முடிவுற்ற தருவாயில் கிடைத்த நாட்டைக் கட்டியெழுப்பும் அருமையான சந்தர்ப்பந்தையும் சகவாழ்வை உறுதிப்படுத்தும் சிறப்பான சூழலையும் இந்நாட்டின் இனவாதம் வீணாக்கிவிட்;டதென்றே கருத வேண்டும். தாக்குதலின் பின்னர் இப்போது வரையும் நாட்டில் விதைக்கப்பட்டிருக்கும் இனம்புரியாத அச்சத்தை மீளவும் இனவாதம் கையாளத் தொடங்கியிருக்கின்றது. அது மேலும் மேலும் சகவாழ்வை சீரழித்து சஹ்ரான் பயங்கரவாதிகளை சரிகாணும் இளைஞர்களை உருவாக்கிவிடவல்லது. 2012இல் அரசு கடைப்பிடித்த பொருட்படுத்தாமை இப்போதும் தொடருமாயின் இந்நாட்டினை பயங்கரவாத்தின் சாபம் இன்னும் பல தசாப்தங்களுக்குச் சீரழித்து விடும் என்பதைப் பொறுப்புடன் புரிந்துகொள்ள வேண்டும்.

தாக்குதல்தாரிகளைத் தயார்படுத்தும் மிக இலகுவான சாதக நிலையினை மேற்படி சூழலே எற்படுத்தியிருந்தது. ஒருவரை மூளைச்சளவை செய்ய இது போன்ற களம் மிகவும் தோதானது. ஏனெனில் கண்ணுக்கு முன்னால் முகாமிட்டிருக்கும் அபாயத்தைக் காட்டி அச்சுருத்தி எதிர்காலத்தை இருளாக உணரச் செய்வதற்கு பௌத்த மேலாதிக்க இனவாதச் செயற்பாடுகளும் அச்செயற்பாட்டாளர்களால் ஊடகங்களுக்கு அளிக்கப்படும் வீரப் பேச்சுகளுமே போதுமானவை. இன்னும் இலகுவாகச் சொல்வதானால் தற்கொலைப் பயங்கரவாதிகளை உருவாக்குவதற்கான உற்பத்திச் செலவு இந்தச் சூழலில் மிகவும் குறைவானது. அரசாங்கம் இதை மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும். ஏனெனில் புதிதான தளத்தில் பயங்கரவாதிகளை  முதன்முறையாக உருவாக்கி எடுப்பது மட்டும்தான் மிகவும் சிரமமானது. உருவாகிவிட்டபின்னர் அதை வளர்ப்பதும் பரிபாலிப்பதும் அவ்வளவு சிரமமானதல்ல அத்துடன் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க இன்னுமொரு பயங்கரவாதம் போதுமானது.

04.

 தற்கொலை செய்பவன் இஸ்லாத்தைச் சார்ந்தவனில்லை, ஓர் உயிரை அநியாயமாகக் கொல்பவன் முழுமனித சமுதாயத்தையும் கொன்றவனாவான், எனவே அவன் இஸ்லாத்தில் இல்லை, இந்தப்பயங்கரவாத மிலேச்சத்தனமான தாக்குதல் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதல்ல எனவே குண்டுதாரிக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை என்று இலங்கை முஸ்லிம் சமுதாயம் தனது பொறுப்புக்கூறலில் இருந்து இலகுவாகத் தப்பித்துக்கொள்ள முடியாது. முஸ்லிம் சமுதாயம் இஸ்லாம் என்ற சமயத்தின் கூறுகளிலேயே தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது என்றால் அதன் எந்தப் பகுதி பலவீனமாக இருக்கின்றது என்பதைச் சரிபார்த்து அதைப் பலப்படுத்தி இருக்க வேண்டும். பயங்கரவாதம் வசதியாக நுழைந்துகொள்ளவும் தன்னை அல்லாஹ்வின் பெயரால் தயார்படுத்திக் கொண்டு 'அல்லாஹூ அக்பர்' என்று வெடித்துச் சிதறும் வரை திறந்திருந்த கதவுகள் எதிர்மறையான விளைவைத் தந்தவுடன் வசதியாக நலுவிக்கொள்ள முடியாது. எனவே பயங்கரவாதம் அனுமதிக்கப்படாத இஸ்லாத்தில் அது இருப்புக்கொள்ளும் எனச் சந்தேகிக்கும் அனைத்து ஓட்டைகளையும் அடைக்க வேண்டிய பொறுப்பு அதன் சமூகத்துக்கு இருக்கின்றது. 

வஹாபியத்தின் அனைத்துக் கூறுகளையும் தமிழ்நாட்டிலிருந்து ஏகத்துவத்தின் பெயரால் இலங்கைக்கு ஏற்றுமதி செய்த அனைத்து இயக்கங்கங்களும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும். ஏகத்துவ இயக்கங்களை இந்த வஹாபியத்தின் பிடியிலிருந்து மீட்டெடுக்காவிட்டால் தமிழ்நாடு தனது நிம்தியை விரைவில் இழப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும்.

தாக்குதல்தாரிகள் பயங்கரவாதத்தைத் தேர்வு செய்ய மற்றுமொரு காரணி இனவாதம். இனவாதத்தை கண்டுகொள்ளாமல் விட்டமைக்காக அரசுக்கும் அரச இயந்திரத்துக்கும் இராணுவப் பாதுகாப்புத் துறைக்கும் பொலிஸ் மற்றும் சட்ட அமுக்லாக்கல் பிரிவினருக்கும் பொறுப்புக் கூறவேண்டிய முக்கியகடப்பாடு இருக்கின்றது. அத்துடன் இதற்குள் இன்னுமொரு விடயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சிங்களத் இனத்தீவிரத் தரப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கையின் இஸ்லாமியச் சமுதாயத்தை அரச அதிகார எல்லைக்குள் முரண்பாடுகளைத் தவிர்த்து ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் வடிவமைத்து ஒழுங்குபடுத்தியிருக்க வேண்டும். அது அரசுக்கு முடியாத காரியமுமல்ல. அதற்கு இயலுமையுள்ள புத்திஜீவிகளையும் சிந்தனைச் செயற்பாட்டு வடிவமைப்பாளர்களையும் இனங்கண்டு அவர்களைப் பயன்படுத்தியிருக்கவேண்டும். ஒரு சிறுபான்மைச் சமூகம் தனது இருப்பை அச்சத்துக்குள்ளானதாகக் கருதாதவகையிலும் பெரும்பான்மை சமுகம் அவர்களைக் கொண்டு தனக்கான இனவாத சூழலைக் கட்டமைக்காதவகையிலும் சமரசம் செய்துகொள்ளத் தக்க வகையில் அது வடிவமைக்கப்பட்டால் இந்தளவுக்கு நிலைமை கைமீறிப் போய் இருக்காது. (இந்தியாவில் இந்துப் பெரும்பான்மை, இந்துத்துவா கட்டமைக்கும் தளம், மற்றும் அங்குள்ள சிறுபான்மைச் சமுதாயங்கள் ஆகிய அம்சங்கள் அனைத்திலும் இந்தியா இந்த விடயத்தை அமுல்படுத்தலாம். அதுதான் ஒரு நாட்டின் நிம்மதியை உறுதிப்படுத்தும்.)

'இலங்கையில் யார் மீதும் தாக்குதல் நடாத்த வேண்டிய தேவை பௌத்தர்களுக்கு இல்லை, பௌத்தன் பின்னால் இருந்து கல்லெறிபவன் அல்ல, எதையும் தீக்கிரையாக்கும் அவசியம் பௌத்தர்களுக்கு இல்லை' என்று உபதேசம் செய்யும் இலங்கை பௌத்தர்களுக்கு ஒரு முக்கியமான பொறுப்பு இருக்கின்றது. அவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாட்டில் அவர்களுக்குத் தெரியாமல் கடந்தகாலத்தில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர் உட்பட்டசிறுபான்மைச் சமுதாயத்தின்மீது வன்முறையைப் பிரயோகித்தது யார் என்பதை அடையாளப்படுத்திட வேண்டும். ஏனெனில் வன்முறையாளர்கள் வேற்றுக்கிரகத்தில் இருந்து வருவதற்கு சாத்தியமில்லை. அதனால் இலங்கையின் பெரும்பான்மைக்கும் பொறுப்புக் கூறலில் பங்குண்டு.

இறுதியாக
01. பௌத்த தீவிர சிந்தனைகொண்ட இனவாத சக்திகளால் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு ஏன் சமபந்தமே இல்லாத கிறிஸ்தவ சமுதாயம் பயங்கரவாதிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு இலக்காகக் கொள்ளப்பட வேண்டும்?
02. நட்சத்திர ஹோட்டல்களுக்கும் - கிறிஸ்தவ வழிபாட்டுத்தளங்களும் ஏன் இலக்குகளாகக் கொள்ளப்பட வேண்டும்? இதற்குப் பின்னால் உள்ள தொடர்பு என்ன?
03. ISIS அல்லது (ISIL)  பயங்கரவாத அமைப்பு இதற்கு ஏன் உரிமைகோர வேண்டும் அதற்குப் பின்னால் உள்ள மறைகரம் என்ன? தொடர்புகள் எவ்வாறு கட்டமைக்கப்பட்டன?
04. இந்தியா இறுதிக்கட்டத்தில் தகவல் வழங்குமளவுக்கான தகவல் மூலம் எங்கிருந்து எப்படிப்பெறப்பட்டது?
05. சீன-இந்திய – அமெரிக்க பொருளாதார மற்றும் பிராந்திய வல்லமையைத் தக்கவைத்தல் செயற்பாட்டுக்கும் இந்தத் தாக்குதலுக்குமான தொடர்புகள் இருக்குமா?
06. இலங்கையின் வடகடல் பகுதி தொடங்கி மேற்கு ஊடாக தென் எல்லை வரைப் பரந்திருக்கும் எண்ணெய் மற்றும் இயற்கை வாயுவை எடுப்பதற்கான சர்வதேச நிறுவனத்தைத் தீர்மானிப்பதற்கான சர்வதேச டெண்டர் மே 09 இல் முடிவுற இருக்கும் நிலையில்  இடம்பெற்ற இந்தாக்குதல் எதைச்சொல்ல வருகின்றது?
07. தற்கொலைத் தாக்குதல் எந்தவிதமான இரண்டாம்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுமில்லாமல் அவசரஅவசரமாக மேற்கொள்ளப்பட்டமைக்கான பின்புலம் என்ன? (மிக மிக விரிவாகவும் அவதானமாகவும் ஆராயப்பட வேண்டியபகுதி)
08. ISIS அல்லது (ISIL) ஆட்கொள்ள நினைக்கும் இலங்கை மற்றும் இந்தியப் பிராந்தியத்தில் இனிவரும் நாட்கள் எப்படிப்பட்டவை
என்பன குறித்து விரிவாக அலச வேண்டும் அதன் பின்னர்தான் உயிர்த்த ஞாயிறன்று இலங்கையின் நட்சத்திர ஹோட்டல்களிலும் தேவாலயங்களிலும் நடாத்தப்பட்ட மனிதாபிமானமற்ற மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதலை நாம் புரிந்துகொள்ள முடியும்.

Wednesday, May 29, 2019

மலையகத்து அறிவாளி

(நேற்று எனது முகநூல் விருப்புப் பக்கத்தில் இட்ட பதிவு)

இன்று அலைபேசியக்கு புதிய இலக்கமொன்றிலிருந்து அழைப்பொன்று வந்தது. அவர் ஒரு மலையகத்தின் தொழில் அதிபர் அவருடனான உரையாடலின் சுருக்கம் மட்டுமே இது.

முகநூலில் கடந்தவாரம் இனவாதமாக்கப்பட்டு வாதிக்கபட்ட விடயம் தொடர்பில் அவர் மிகத் தெளிவாகப் பேசினார்.

#அவர்: - குறித்த ஒரு பகுதியில் 25 பேர் வரை எனது பகுதிப் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளீர்கள் அது உண்மையா?
#நான் : - ஆம் உண்மை
#அவர் : - அவர்கள் பற்றிய சரியான விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியுமா?

#நான் : - நீங்களே இரண்டு பேரை நியமித்தால் சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் அல்லது அவர்களையே அழைத்துப் பேசுவதற்கான ஒரு பொறிமுறையை நீங்களே நிறுவிக்கொள்ளவும் முடியும். பொலிசாரின் உதவியை இன்னின்ன முறையில் பெற்றுக் கொள்ள முடியும்

#அவர் : - சரி ஒரு பதினைந்து பேருக்கு நான் முழுமையான பன உவியைச் செய்கின்றேன். அவர்கள் வேறு தொழில் ஒன்றைத் தொடங்கவும் தமது வாழ்க்கை மேம்படுத்திக் கொள்ளவும் இச்சீரழிவில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவும் நான் உதவுகின்றேன் அதை எப்படிச் செய்யலாம் என்று உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கின்றதா?
#நான் : -
01. முதலில் அவர்களுக்கு என்ன தொழில் செய்ய முடியும் என்பதை இனங்கான வேண்டும். சுயதொழிலில் ஈடுபடும் ஆர்வமிருப்பின் அதிலுள்ள இயலுமையைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் அதற்கான முதலீடு எவ்வளவு என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அல்லது வேறு தொழில் நிறுவனங்களில் தொழில் செய்ய இயலுமாயின் உத்தரவாதப்படுத்தப்பட்ட தொழில் ஒன்றை அவர்களின் விருப்ப்புக்கேற்ப பெற்றுக்கொடுக்கவும் முடியும்.
02. அவர்களுக்கு உடனடியாகத் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் இருப்பின் அதை நிவர்த்தி செய்ய வேண்டும்
03. இப்போதுள்ள நிலைபற்றிய எவ்வித உளவியல் தாக்கத்தையும் அவர்கள் எதிர்கொள்ளாவண்ணம் கரிசனையுடன் அவர்களது குடும்பத்தவர்களிடம் பாரப்படுத்தப்படல் வேண்டும்.
04. உளவாற்றுப்படுத்தலினை பொறுப்புள்ள ஒரு தரமான உளஆற்றுப்படுத்துனர் ஊடாக வழங்க வேண்டும்.

#அவர் : - சரி இந்தத் திட்டத்தை உங்களால் பொறுப்பெடுத்துச் செய்யமுடியுமா? உங்களுக்கு அதற்குரிய ஊதியத்தைத் தருகின்றேன்

#நான் :-மன்னிக்க வேண்டும் அதை என்னால் பொறுப்பெடுக்க முடியாது ஆனால் இன்னின்ன நபர்கள் அதைப் பொறுப்புடனும் நேர்மையுடனும் செய்யக் கூடியவர்கள் (சில மலையக ஊடக நண்பர்களின் பெயர்களை அவருக்குப் பரிந்துரைத்தேன்). அவர்களோடு நீங்களே கூடப் பேசலாம்.

#அவர் : - நேரமிருந்தால் எனது அலுவலகத்துக்கு வர முடியுமா இன்னும் சில ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்

#நான் :-தாராளமாக. ஆனால் நான் ப்ரீயாக இருக்கும் நேரம் நீங்களும் ப்ரீயாக இருக்க வேண்டுமே.

ஒரு பொறுப்புள்ள தனவந்தராக அவர் தனது கடமைச்யைச் செய்யும் அழகு கண்டு வியந்து நிற்கின்றேன். 
சப்பைக்கட்டுக் கட்டிய ஊடகவியலாளர்களும் அமைச்சர்களும் இத்தகைய பொறுப்போடு செயற்பட்டிருந்தால்....

இனவாத முட்டுக்கொடுப்பு ஐந்து சதத்துக்கும் உதவாத வெறும் உணர்வுகளை மட்டுமே ஏற்படுத்திவிட்டு மறையும் என்பதை ஊடக ஜாம்பவான்கள் விளங்கிக் கொள்ளட்டும்.

பித்தளை மனிதன் செம்பு மனிதன் என்று உதார் விட்டவர்களுக்கும் அவருக்கு சொம்பு தூக்கியவர்களுக்கும் சேர்த்து இப்பதிவை சமர்ப்பிக்கின்றேன்.