Friday, January 19, 2018

புரவலர் ஹாஸிம் உமரும் அவரது விருந்துகளும்.

புரவலர் ஹாஸிம் உமரும் அவரது விருந்துகளும்.
சகிக்க முடியாத சில குறிப்புகள் - 01

புரவலர் ஹாஸிம் உமர் என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆயினும் சில விடயங்களை எனது அனுபவக் குறிப்புகளோடு இணைத்து எழுத நினைக்கின்றேன்.

ஹாஸிம் உமர் என்ற பெயர் எனக்குப் பத்திரிகை வாயிலாகவே முதன் முதலில் தெரிய வந்தது. அப்போது நான் சாதாரண தர மாணவனாக மள்வானையில் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலம். ஹாஸிம் உமர்பற்றி அடிக்கடி பத்திரிகையில் படங்கள் வரத்தொடங்கின. சில நாட்களில் அவரது படம் வராத பத்திரிகையே கிடையாது. அப்போதுதான் அவர் குறித்து தேடத் தெடங்கியிருந்தேன். அந்நேரம் நான் ஜாமியா நளீமிய்யாவில் உயர்தரத்தில் பயின்றுகொண்டிருந்தேன். அப்போது எனக்குக் கிடைத்த பதில் அவர் ஒரு கப்பலின் சொந்தக்காரர் சூர்யா அவருடைய நிறுவனம்தான். பின்னர் 2003 செப்தம்பர் 29 என்று நினைக்கின்றேன் மருதானை ஸாஹிராக் கல்லூரியில் இடம்பெற்ற 'காற்றுச் சுமந்துவரும் கனவுகள்' பாடல் அல்பம் வெளியீட்டு விழாவில் அவரை நேரில் கண்டேன். கைகுலுக்கிச் சலாமும் சொன்னேன். அதுதான் அவருடனான எனது முதல் சந்திப்பும் கூட ஐந்து செக்கன்கள் இருக்கும் அவ்வளவுதான். பின்னர் நிகழ்வுகள் இடம்பெறத் தொடங்கிய போது அவரைப் பற்றி மிக மோசமான ஒரு கருத்தை பின்னால் இருந்த ஒருவர் தனது நண்பருடன் பகிர்ந்து கொண்டிருந்தார். அவர் ஒரு புகழ்விரும்பி என்பதுதான் அதன் சாரம்சம்.

சகிக்கமுடியாத குறிப்பு -01

மேலே சொன்ன அந்த நபர் பிற்காலத்தில் எனக்கும் மிக அறிமுகமுhன ஒருவராக மாறி இருந்தார். இப்போதும் அவர் அப்படித்தான் இருக்கின்றார். என்னைக் கண்டால் ஆரத்தழுவிச் சிரிப்பார். அப்போதெல்லாம் அவர் புரவலர் பற்றிச் சொன்ன அந்த மோசமான கருத்தும் அழுத்தமான வாசகமும் எனக்குப் பட்டென்று ஞாபகம் வந்துவிடும்.  பின்னொருநாளில் ஹாசிம் உமர் அவர்கள் அளித்த விருந்தொன்றில் குறிப்பிட்ட அந்நபரும் கலந்துகொண்டிருந்தார். எனக்கு அவரை அங்கு கண்டது ஆச்சரியமாக இருந்தது. அவரிடம் ஒரு கேள்வி கேட்க விரும்பினேன் அதை அவரிடமே வெளிப்படுத்தினேன். கேளுங்கள் என்றார் ஒன்றல்ல இரண்டு என்றேன் 'நீங்கதான் வில்லங்கமான ஆள் ஆச்சே கேளுங்க' என்றார். அதற்கு மேலும் தாமதிக்காமல் அவரிடம் முதலாவது கேள்வியைத் தொடுத்தேன்.

கேள்வி 01: புரவலருக்கும் உங்களுக்குமிடையில் எந்தளவுக்கு நெருக்கம் இருக்கின்றது?
பதில் : இப்படி நெருக்கம் இருக்கின்றது (இரு கைவிரல்களையும் ஒன்றாகப் பிணைத்துக் காட்டினார்), ஹஹ்ஹஹா (என்று சிரிப்பு வேறு)

கேள்வி 02: புரலர் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன? 
பதில் : நல்ல மனிசன் எங்களைப் போன்ற மனிதர்களை மதிக்கத் தெரிந்தவர்
இன்னும் இரண்டு கேள்விகள் கேட்கட்டுமா என்றேன்

என்னவாப்பா இது விருந்துக்கு வந்த இடத்துவ இன்டர்விவ்வா, கேட்காம உடமாட்டிங்களே கேளுங்க என்றதும்

கேள்வி 03: 2003இல் சாஹிராக் கல்லூரியில் காற்றுச் சுமந்துவரும் கனவுகள் வெளியீட்டு விழாவில் நீங்கள் கலந்து கொண்டது !hபகமிருக்கா?
பதில் : ம்...ம்...ஹ்...ஹா...(பிறவி யோசிக்கிறார்...பின்னர்) ஹா பாட்டு சீடி ஞாபகமிருக்கு

கேள்வி 04: அதில் எனக்குப் பின்னால் இருந்து புரவலர் பற்றி உங்களுக்குப் பக்கத்தில் இருந்தவரிடம் நீங்கள் கருத்து ஞாபகமிருக்கா?
பதில்: ... (அவரின் முகம் மாறி இருந்தது. ... கொஞ்சம் யோசித்துவிட்டுச் சொன்னார்) இல்லியே ஞாபகமில்லியே என்னசொன்னேன்?
இப்போது உங்கள் கேள்விக்கான பதில் ஒன்றுதான் நீங்கள் என்ன பேசினீர்கள் என்பது எனக்கு இன்னும் ஞாபகமிருக்கின்றது, ஒரு போதும் அதை மறக்க முடியாது, சரி சரி விருந்தை என்ஜோய் பண்ணுங்க என்று கூறிவிட்டு நான் புரவலரின் அருகே சென்று ஒரு ஜோக் அடித்துவிட்டு எல்லோரும் சேர்ந்து சிரித்தோம்.

அதன் பின்னர் அவர் அவருக்கு சாப்பாடு எங்கே இறங்கி இருக்கப் போகின்றது. விருந்து முடிந்து எப்போது அவர் அங்கிருந்து கிளம்பினார் என்பது தெரியாது, அதன் பிறகு அவர் என்னைச் சந்தித்தால் ஒரு கள்ளச் சிரிப்புடன் கடந்து செல்லவே முயல்வார் நான் விட்டால்தானே, பின்னரும் பின்னரும் புரவலர் அந்நபரை விருந்துக்கு அழைத்தார் அவரும் வருவார் அதிலிருந்து அவருக்கு ஒரு உண்மை தெரிந்திருக்கும் நான் அவரைப் பற்றி எதையுமே போட்டுக் கொடுக்கவில்லை என்று. (போட்டுக் கொடுக்கும் பண்பு நம்மிடம் ஒரு போதும் இருப்பதில்லையே) 

கடைசியாக இரண்டாரு நாட்களுக்கு முன்னரும் அவரைச் சந்தித்தேன் அப்போது அவர் என்னை முன்னயமாதிரி நெருங்கி ஆரத் தழுவி 'யூ ஆர் கிரேட் பேர்சென்' என்றுவிட்டு 'என்னை மன்னிச்சிடுங்க,' என்றார். அப்போதும் புன்னகை மாறாமல் அவரிடம் சொன்னேன் 'நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டியது என்னிடமல்ல புரவலரிடம்,' என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டேன். 
சில வேளை ஹாசிம் உமர் அவர்கள் எனக்கு நெருக்கமானவராக மாறி இருக்காவிட்டால் அவர் போட்ட அந்தத் தப்பான கருத்தோடு நானும் பலருக்கும் அவரை அறிமுகப் படுத்தி இருக்கக் கூடும். அல்லது அந்தப் புரிதலோடே எனது காலத்தைக் கடத்தி இருக்கவும் கூடும். இது குறித்து இன்னும் ஒரு சமரி சொல்ல வேண்டும் அதைக் கடைசியில் சொல்கின்றேன்

கருத்துப் பறிமாறல் செய்கின்றவர்கள் சுற்றிஇருப்பவர்களைப் பற்றிய எந்தவிதமான பிரக்ஞையுமின்றி தமது மனதில் பட்டதை அப்படியே கக்கிவிடுவர் அது விசமாக இருந்தாலும் கூட, அத்தோடு அவர்கள் அதை மறந்தும் விடுவர், அதன் தாக்கம் பிறரில் எந்தளவுக்கு இருக்கும் என்பதை அறிவதுமில்லை உணர்வதுமில்லை. குறிப்பாக ஊடக இலக்கிய நண்பர்கள். 

இது போன்ற பல்வேறு நபர்கள் குறித்தவிடயங்களை எழுதுவது ஒருவகையில் நமது நண்பர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடும் அல்லது அல்லது அவர்களது கசடான பக்கத்தை அவர்களுக்கு காண்பிக்கக் கூடும். முடிந்தவரை நாகரீகமாக எழுத முனைகின்றேன். அதற்கு ஒரேயொரு காரணந்தான் அவர்கள் மாற வேண்டும் முகஸ்துதியை மறக்க வேண்டும். சில தகவல்களைச் சொல்லிச் செல்லும் போது அது இன்னார்தான் என்று புத்திசாலிகள் புரிந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. முடிந்தவரை நேரடியாக அத்தகையவர்களது அடையாளங்களை வெளிப்படுத்தாமல் இருக்கவே விரும்புகின்றேன். இது போன்ற ஒரு டஜன் கதை இருக்கின்றது அவை ஹாஸிம் உமர் என்ற மனிதனைப் புரிந்து கொள்ள உதவும்.
தொடரும்...

Sunday, January 14, 2018

இரண்டு பேர் : மயூரனும் மீநிலங்கோவும்

இரண்டு பேர்
மயூரனும் மீநிலங்கோவும் 

2006களில் ஆத்மாவின் ஏற்பாட்டில் திரைப்படங்கள் சம்பந்தமான ஒரு பயிற்சிப் பட்டரையில் தான் முதன் முதலாக மயூரனைச் சந்தித்தேன். அப்போதிருந்தே ஒரு நெருக்கமான உறவு இருந்தது. அதாவது அன்றாட நடப்புகள் சார்ந்து கருத்துப் பரிமாற்றம் செய்யும் போது ஒத்த சிந்தனையுடையவெளிப்பாடுகள் அந்த நெருக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.அப்போது வீரகேசரியில் பணிபுரிந்த கோபி கிருஷ்னாவை அடிக்கடி ஆமர் வீதில் சந்தித்து கதைத்துக் கொள்ளும் பொழுதுகளிலெல்லாம் மயூரனையும் சந்தித்துக்கொள்ளவும் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ளவும்  கிடைக்கும்.
  
தகவல் தொழிநுட்பம் சார்ந்து மிக எளியமுறையில் மயூரன் அளிக்கும் விளக்கங்கள் அதில் அடிப்படையறிவற்றவருக்கும் விளங்கும் தன்மையது. இலகுவான மொழியில் அப்படிப்பட்ட ஒரு புத்தகத்தை எழுத வேண்டும் என்ற ஆசையை பல முறை அவர் வெளிப்படுத்தி இருக்கின்றார். ஆயினும் அந்தப் பணியை முன்னெடுக்கும் கால அவகாசத்தை அவர் இன்னும் ஏற்படுத்திக் கொள்ளாமல் இருப்பதுதான் கவலையளிக்கின்றது. தொழிநுட்பத்துறை சார்ந்து தெளிவுகளைப் பெற நினைக்கும் நண்பர்கள் அல்லது ஒரு இணையதளத்தை உருவாக்கிக்கொள்ள விரும்பும் நண்பர்கள் தொடர்புகொள்ள வேண்டிய மிக நம்பிக்கையான ஒரு நபர் நிச்சமாக மயூரன்தான் என்று அடித்து உத்தரவாதப்படுத்திச் சொல்வேன். என்னிடம் யாராவது இது சார்ந்து கேட்டால் மயூரனைப் பரிந்துரைசெய்துவிட்டுக் கடந்து செல்வேன். ஏனெனில் இந்தத் துறைக்குள் மோடிமஸ்தான் வித்தைகாட்டும் நபர்கள் மிகமிக அதிகம் மயூரணுக்கு அந்த வித்தை வசப்படவில்லை என்று நினைக்கின்றேன். 

2007களில் நான் தயாரித்த தீ நிழல் திரைப்படத்தை 2008இன் இறுதியில்தான் முழுமைப்படுத்த முடிந்தது. பின்னர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்ட அத்திரைப்படம் திரைக்கு வராமலே முடங்கிப் போகும் நிலைவந்தபோது அந்தப் படைப்பு அமுங்கிப் போய்விடக்கூடாது என்பதற்காக அதனை 58 நிமிடங்களுக்குத்தான் மீளவும் சுருக்கி எடிட் பண்ண முடிந்தது. சட்டரீதியானபிரச்சினைகளை எதிர்கொள்ளக் கூடாது என்பதற்காக அதனை அந்தளவுக்கு சுருக்க வேண்டியேற்பட்டது. படைப்பை மக்கள் மன்றுக்கு எடுத்துச் செல்ல அந்த நேரம் எனக்குக் கை கொடுக்கும் என்றும் நம்பினேன். கொழும்பில் அமைச்சர் அமிர்அலியின் அமைச்சில் அஷ்ரஃப் சிஹாப்தீன் உதவியோடு நண்பர்களுக்காக அதைத் திரையிட்ட போது குறிப்பிட்ட எழுபது பேருக்கு மட்டும் அழைப்பு விடுத்திருந்தேன். இருவரைத் தவிர மற்ற அனைவரும் வந்திருந்தார்கள்.

எல்லா வேலைகளும் முடிந்து அனைவரும் சென்ற சென்றபின்னர் அங்கு ஒழுங்கின்ற வீசப்பட்ட வாழைப்பழத் தோல்களையும் கேக்துண்டுகளையும் பால்பெக்கற்றுகளையும் மயூரன் பொறுக்கி ஒரு இடத்தில் சேர்த்து சுத்தப்படுத்திக் கொண்டிருந்த போது எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அதைத் தொடர்ந்து செய்தார்  அப்போது அவர் சொன்ன ஒரு விடயம் ' மாசாலா சினமாப் புத்தியில் மூழ்கியிருக்கும் ஆக்களுக்கு மத்தியில் நல்ல சினமாவைப் படைத்திருக்கும் உங்கள் பணிக்கு என்னால் ஒத்துழைப்பு நல்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, ஆனால் இதைச் செய்தால் இந்தப் படைப்புக்காக உங்களுக்காக உதவி செய்த திருப்தியாவது கிடைக்குமே' உண்மையில் நான்நெகிழ்ந்து போனேன். இப்போது நினைக்கும் போதும் மிக்க உணர்வுபூர்வமாக இருக்கின்றது. அத்துடன் திரையிடலுக்குப் பின்னர் நடந்த கலந்துரையாடலில் மிக வெளிப்படையாக கருத்துக்களைப் பகிர்ந்த மயூரன் விடுபாடுகளைச் சுட்டிக்காட்டிவிட்டு 'ஓர் அநியாயத்தை எதிர்ப்பதற்குத் துணிவுள்ள முஸ்டீனுக்கு எல்லாவித அநியாயங்களையும் எதிர்பதற்கான துணிவிருக்கும், ஓர் அநியாயம் எந்தவடிவில் இருந்தாலும் எதிர்க்கும் ஒருவனால்தான் எல்லாவித அநியாயங்களையும் எதிர்க்கும் திராணியுள்ளவனாகத் திகழ முடியும், ஆக இந்தத் திரைப்படம் யாருக்கும் எதிரானாதல்ல ஒரு சமுகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரானது என்று எடுத்துக் கொள்வோம்' இந்தக் கூற்று ஒரு போதும் என்னால் மறக்க முடியாத ஒன்றாகிவிட்டது. இப்படிப்பட்ட மேம்பட்ட மனநிலை வாய்க்கப்பெறுதல் என்பது மிகவும் முக்கியமான அப்படிப்பட்ட மனிதர்களும் மிகவும் குறைவுதானே.

அடுத்தது மயூரனின் வாசிப்பும் தேடலும். கடவுள் என்ற நபரை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனிதனாக மேம்பட்ட வாசிப்பையும் தெளிந்த சிந்தனையையும் கொண்டிருக்கும் அவருக்கு எல்லாவிடயங்கள் தொடர்பிலும் கரன்ட்லி அப்டேப் இருக்கும். தமிழ்மிரர்இலக்கியப்பக்கம் செய்யம் போது மயூரனிடம் சில கேள்விகள் கேட்டேன் இன்று வரை அவர் பதில் தரவில்லை பதில் தர வேண்டும் என்பதற்காக மீண்டும் அதே கேள்விகள் கீழே!
01. உங்களை நீங்கள் எப்படிப் புரிந்து வைத்திருக்கின்றீர்கள்?
02.உண்மையான நண்பர்களை எப்படி அடையாளம் காண்பீர்கள்?
03. இலக்கியவாதிகளுக்கிடையே நிலவும் நட்பு எத்தகையது?
04. அன்மைக்கால புத்தகவரவுகளில் உங்கள் வாசிப்புக்குட்பட்டதில் உங்களைக் கவர்ந்த புத்தகள் சிலதைச் சொல்லுங்களே?
05. உங்கள் பார்வையில் சிறந் படைப்பாளிகள் மூவரைச் சொல்லுங்கள்?
06. நன்றியோடு யாரையெல்லாம் நினைவுகூருகின்றீர்கள்?
07. இப்போது வருகின்ற சிறு சஞ்சிகைகள் பற்றிய அபிப்பிராயம்?
08. இலக்கிய உலகின் ஜாம்பவான்கள் என்று சிலர் திரிகின்றார்களே அவர்களைப்பற்றி?
09. ஐவு யில் தொழிற்றுறை தேர்ச்சியுள்ள நீங்கள் பல்துறை ஆர்வலராக எப்படிச் செயற்படமுடிகின்றது?
10. இலங்கையின் தமிழ் சினமா மெல்ல உயிர்பெறுவதாகத் தெரிகின்றதே உங்கள்அவதானம்?
11. உங்களின் வெளிப்படையான கருத்துக்களை மற்றவர்கள்எப்படி எடுத்துக்கெள்கின்றார்கள்?
12. சமுகவியல் செயற்பாடு  இலக்கிய ஆர்வம் என்று ஒரு தெிவானஅடையாளமாக உங்களால் எப்படி மாறமுடிந்தது?
13. மயுரன்என்றால் பல்துறைசார் சார் தேடலுள்ள எளிமையானமனிதன் என்ற அடையாளப்படுத்தலை எப்படி எடுத்துக் கொள்கின்றீர்கள்?
14. இலங்கையின் பத்திரிகைகளில் இலக்கியப்பக்கங்கள் உங்கள் பார்வையில் எப்படி?
15. அன்மைக்கால உங்களின் செற்பாடுகள்பற்றி?
16. நம்நாட்டு அரசியல் போக்கு எந்தளவுக்கு இலக்கியத்தில் பிரதிபலிக்கின்றது?
17. நம்நாட்டுப் படைப்பாளிகளுக்கு சர்வதேச  அரசியல்வெளிபற்றிய புரிதல் எந்தவுக்கு இருப்பதாக உணர்கின்றீர்கள்?

பெருவாரியான களச் செயற்பாடுகளில் மயூரனை நான் அவதானித்திருக்கின்றேன். வெறும் பேச்சு வகையறாக்களில் இருந்து அவரைப் வேறுபடுத்திக் காட்டும் முக்கியமான பிரிகோடு அது. 

2010ல் இந்தியாவின் கீற்று இணைய தளத்தின் 6வது ஆண்டு நிறைவு விழாவில் ஒரு பேச்சாளராகக் நானம் கலந்துகொண்டு பேச அது சர்ச்சைகளைக் கிளப்பிட அதன் தாக்கத்தை கீற்று பதிவு செய்த நீண்ட நேர்காணல் மேலும் என்னை வெளிப்படுத்த மயுரன் தொடர்பு கொண்டு இலக்கியப் பேரவையில் ஒரு கலந்தரையாடலையும் ஏற்பாடு செய்திருந்தார் அது வெள்ளவத்தையில் இடம்பெற்றது. அதற்குப்பிறகு அவ்வப்போது மயூரனைச் சந்தித்துக்கொள்ள முடிந்தது. ஹபறனையில் இருந்து கொழும்பு வரை எனது வாகனத்தில் அவரையும் அழைத்துக் கொண்டு வந்த பயணத்தில் ஒரு செக்கனைக் கூட வேஸ்ட் பண்ணாமல் அவித்த கச்சான்கொட்டைகளைக் கொறித்துத் தள்ளியபடி கதைத்துக் கொண்டு வந்த தருனம் எங்களுக்குள் பேசுவதற்கு எவ்வளவு விசயங்கள் இருக்கின்றன என்பதைத்தான் அறிவித்தது. மயூரனைக் காணும் போதெல்லாம் நான் கேட்கும் ஒற்றைக் கேள்வி 

எப்போது திருமணச் சாப்பாடு தரப் போகின்றீர்கள் என்பதுதான்.
மயூரன் அந்தச் சாப்பாட்டை எனக்கு இன்னும் தரவில்லை!
 மீநிலங்கோ

மீநிலங்கோ இதுவரை நான் சந்திக்காத ஒருவர் ஆனால் வாராவாரம் அவரது கட்டுரைகளை தமிழ்மிரரில் வாசிக்கத் தவறுவதில்லை. அவற்றை வாசிக்கும் போது எனது எழுத்தை நானே மீளப் படிப்பது போன்று தோன்றும். அந்தளவுக்கு எனக்குள் இருக்கும் சிந்தனைகளின் வெளிப்பாடாகவும் பார்வைக் கோணமாகவும் அவரது கட்டுரைகள் இருப்பதால் இயல்பாக அவை என்னில் ஈர்ப்புச் செய்வது வாஸ்தவம்தானே.

அதிகாரம் பற்றிய பார்வையும் உலக இயக்கத்துக்குப் பின்னால் இருக்கின்ற பலம்பொருந்திய கைகள் பற்றியும் தெளிவில்லாமல் பல்வேறு உலகவிடயங்கள் நாட்டு நடப்புகள் வெளிநாட்டுப் பூசல்கள் பற்றியெல்லாம் எழுதப்பட்ட பல கட்டுரைகளை பலரும் எழுதி வாசித்துவிட்டு காரித் துப்பியுமிருக்கின்றேன். அவர்களிடம் தேடலுமில்லை புரிதலுமில்லை சிந்தனையுமில்லை. ஆனால் மீநிலங்கோ கட்டுரைகளுக்காக தன்னை மிகவும் தயார் படுத்துகின்றார். தகவல்களைத் திறம்படத் தேர்வுசெய்து வகைபிரித்து எல்லா விடயதானங்களோடும் இணைப்புச் செய்து அவற்றை தெளிவாக முன்வைக்கும் பாங்கு அவரது கடினமான உழைப்பையும் ஈடுபாட்டையும் அடையாளப்படுத்தப்போதுமானது. 

ஏகாதிபத்தியம் என்ற ஒன்றை சரியாக விளங்கிக் கொள்ளாத மன்னாங்கட்டிகளால் உலக அரசியல் பற்றி எதையும் வியாக்கியானஞ் செய்ய முடியாது. அத்தகு மன்னாங்கட்டிகளின் பார்வை கொப்பி கட் பேஸ்ட்தான் ஏதாவது இங்லிஷ் கட்டுரை தமிழில் அவரது பெயருடன் வெளிவரும் அத்தகு மனிதர்களுக்கு மீநிலங்கோவிடம் கிலாசுக்குச் செல்லுமாறு பரிந்துரை செய்கின்றேன். நமக்குப் பிடிக்காவிட்டாலும் உண்மைகளைச் சொல்லுதல் எழுதுதல் பரப்புதல் என்பது தூய்மையான மனபெற்றமைக்குச் சான்று, விபச்சார எழுத்தில் இருந்து அத்தகையவர்கள் வெகுதூரத்தில் இருப்பார்கள். அப்படியொரு தூரத்தில்தான் இவர் இருக்கின்றார்.

ஒரு நாளை முழுமையாக ஒதுக்கி அவருடன் கதைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசை என் மனதில் இருக்கின்றது. எப்போதாவது அது சாத்தியப்படும் என்றும் நம்புகின்றேன். அப்போது எங்களுக்கிடையில் பகிர்ந்து கொள்ளவும் தெரிந்து தெளிந்துகொள்ளவும் நிறைய விசயங்கள் இருக்கும். 

ஒரு திறமையான சரியான ஆளைத் தேடிப்பிடித்து பொறுப்பை ஒப்படைத்து திருப்தி காண்கின்ற தமிழ்மிரரின் பிரதம ஆசிரியர் நண்பர் மதனுக்கு ஒன்றுக்கு இரண்டு சல்யூட். ஏனெனில் தெளிந்த நீரோடை போன்று  பயணிக்க மதனும் தயாராக இருக்கின்றார் என்பதால்தான் இத்தகு திறமைசாலிகளைத் தேடிக்கண்டுபிடித்து வாய்ப்புக்கொடுக்க முடிகின்றது. நண்பா என் பணிமென்மேலும் சிறக்கட்டும்.

மீநிலங்கோ மென்மெலும் தேடலுடன் எப்போதும் எழுத வேண்டும் அதற்கான வாய்ப்பையும் அவகாசத்தையும் ஆற்றலையும் ஆளுமையையும் ஆரோக்கியத்தையும் அமைதியையும் காலம் அவருக்குப் பரிசளிக்க வேண்டும் என்று காலத்திடமே பிரார்த்திக்கின்றேன். ஏனெனில் காலந்தான் எல்லாம். மீநிலங்கோவின் கட்டுரைகளை நண்பர்கள் கட்டாயம் படிக்க வேண்டுமென்று நான் பரிந்துரைக்கின்றேன்.

மீநிலங்கோவுக்கும் மயூரனுக்கும் இடையில் இத்தகு உலக அரசியல் சார்ந்த விடயங்களில் நிச்சயம் நிறையவே ஒற்றுமைகளும் ஒத்தகருத்தும் இருக்கும் என்பது எனது புரிதல். அவர்கள் சந்தித்துக் கொள்ளும் போது பேசுவதற்கும் பகிர்வதற்கும் விடயதானங்களுக்குப் பஞ்சமே இருக்காது என்றும் நம்புகின்றேன். இத்தகு சிந்தனைத் தெளிவுள்ள நண்பர்கள் சிலர் சேர்ந்து மாதத்தில் ஒருமுறை சந்தித்து அரட்டை அடித்து அதைப் பதிவு செய்து எழுத்தாக்கிவிட்டால் நிச்சயம் பல்வேறு பயணுள்ள கதவுகளை அவை திறந்து கொடுக்கும் அத்தகையொரு தொடர்சந்திப்பை சாத்தியப்படுத்தும் வழிமுறைகள் குறித்து யோசிக்கத் தோன்றுகின்றது. 

இலக்கியம் அரசியல் சினமா சமுவியல் போரியல் யுத்தம் புரட்சி மாற்றம் பொருளாதாரம் அழகியல் இறையியல் சூழலியல்  விவசாயம் நடைமுறைப் பிரச்சினைகள் வாசித்த புத்தகங்கள், எதிர்கொண்ட அனுபவங்கள் எதிர்பார்ப்புகள் எண்ணங்கள் சிந்தனைகள்  அவற்றைச் சாத்தியப்படுத்தும் வழிமுறைகள் என்று பல்வேறு தளங்களிலும் அனுபங்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு பத்துப் பேர் ஒன்றினைவது ஒரு புரட்சிக்கு வித்திடுவதற்கு ஒப்பானதுதானே