Thursday, December 24, 2015

உமா வரதராஜனுடன்

 தமிழ் மிரர் இலக்கியப் பக்கத்தின் நேர் மறை 15 கேள்விகளுக்கான பதில்கள்
------------------------------

01. உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
  நிரந்தரமற்றது .நேற்றிருந்த  நான்  இன்றில்லை .இன்றைய    நான்  நாளை  இதே  போல்  இரேன் .

02. நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?
        முரண்பாடுகளற்ற  வாழ்க்கை என்பது  சலனமற்ற  கடல் . எவருடனும் ,எவற்றுடனும்  ஒருவனுக்கு  கேள்விகள் ,விமர்சனங்கள் ,விசாரணைகள்  முரண்பாடுகள்  இல்லையென்றால்  அவன்  இந்த  உலகத்தின்  மகா  நடிகன் என்று  அர்த்தம் .ஓர்  ஒத்தோடியாக  இல்லாமல் அனைவருடனும்  முரண் படவே  விரும்புகிறேன் .

03. இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?
ஜால்ராக்களுக்கும்  கூஜாக்களுக்கும்  நிகழும் அட்டைக்கத்திச்  சண்டை  போன்ற   முரண்பாடுகளை எல்லாம்  நான்  கணக்கிலெடுப்பதில்லை . ஒரு  வெங்கட்சாமிநாதனுக்கும்  ஒரு  நுஹ்மானுக்கும்  ஏற்பட்ட  இலக்கிய கருத்து  முரண்பாட்டில்  ஆழம்  இருந்தது ;அர்த்தம்  இருந்தது .

04. உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
நிறையப்  பேர்கள்  எழுதியிருக்கின்றனர் . அப்போது  படித்து  அப்போதே நன்றி  சொல்லி  அடுத்த  கணமே மறந்து  விடுவேன் .

05. நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
நான் இந்த எழுத்துலகுக்கு வந்து  சுமார் 42 ஆண்டுகள்  ஆகின்றன .நீலாவணன்  அவர்களின்  'வழி ' கவிதைத்  தொகுதி  வெளியீட்டில்  'மேளத்தை'க்  கையிலெடுத்தவன் .அதன்  பிறகு வருஷத்துக்கு  சராசரி   நூல்  விமர்சனக்  கூட்டங்கள்  நான்கிலாவது   கட்டுரைகள் படித்திருப்பேன் .சிலரைப்  பற்றி அச்சு  ஊடகங்களில் கட்டுரைகள்  கூட  எழுதியிருக்கிறேன் . குத்து  மதிப்பாக 175 பேர்களைப்  பற்றி எழுதியிருக்கிறேன்  என்று  சொல்லலாம் .

06. யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்?
        என்  தாயை .

07. இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
        அகராதியை .....
 தூக்கி  வைத்துப்  படிக்கும்  போது  கைகள்  வலிப்பதால்  .

08. இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
ஆஷாடபூதித்  தனங்களை  அறவே  ஒதுக்கித்  தள்ளிய கிறுக்குத்தனம்  கொண்ட  இலக்கியவாதிகளையும்  கலைஞர்களையுமே  எனக்கு  மிகவும்  பிடிக்கும் .அந்த  வகையில்  என்னை  மிகவும்  கவர்ந்தவை 'சாதத்  ஹசன்  மண்ட்டோ ஜளுயயனயவ ர்யளயn ஆயவெழஸ படைப்புகள்' .

09. உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
சுபமங்களா . அதன்  ஆசிரியர் கோமல்  ஸ்வாமிநாதனின் மறைவுடன்  அந்த  சஞ்சிகையும்  மரித்து  விட்டது .

10. உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
மன உந்துதல்  இருந்தாலொழிய  நான்  எழுதுவதில்லை . எனக்குப்  பிடித்தவர்கள்  கேட்டுக்  கொண்டால்  மாத்திரமே  பிரசுரத்துக்கு  அனுப்புவேன் . இலங்கையில்  ஓர்  எழுத்தாளன்  தன்  படைப்புகளுக்கு  விலை  நிர்ணயிப்பது  என்பது  சுவாரஸ்யமான,ஈஸ்ட்மன்  கலர்க்  கனவு .
 
11. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
கவிஞர்  வைரமுத்து  அதனைப்  பெற்றுத்  தருவதாக  சூளுரைத்துள்ளார் . அந்த  நன்னாளில்  பட்டாடை  உடுத்தி ,பாற்சோறு  உண்டு அது  பற்றிப்  பேசலாம்  .

12. உங்களக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
தமிழ்  என்னைத்  திணற  வைத்துக்  கொண்டிருக்கிறது . நான்  பயன்  படுத்தும்  ஆங்கிலம் ,சிங்களம் ,மலையாளம்  மற்றவர்களைத்  திணற  வைத்துக்  கொண்டிருக்கிறது .

13. முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
அங்கேயுள்ள  சுயமோகிகளையும் ,மனநோயாளிகளையும் ,போட்டோ கிராபர்களாகி  விட்ட  முன்னாள்  எழுத்தாளர்களையும் ஒதுக்கி விட்டுக்  கடந்து  செல்ல நாம்  முதலில்  கற்றுக்  கொள்ள  வேண்டும் . அது  சாத்தியமானால் பரவலாகப்  பேர், புகழ்  பெற்ற  எழுத்தாளர்களை  விடவும், மிகவும்  கூர்மையான கரங்களை  அங்கே  நாம்  கண்டடைய  முடியும் .

14. உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
வரிகள்  தேவையில்லை .சில  சொற்கள்  போதும் . ஒரு  மனிதன் -இரு  வீடுகள் - பல  உலகங்கள் .

15. எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
அந்த  இலக்கியவாதியின்  முகத்தில்  குத்துவதில்லை என்று  நான்  தீர்மானித்துப்  பல  நாட்கள்  ஆகின்றன . இயற்கையிலேயே  அவருடைய  முகம்  சீல்  குத்தப் பட்ட  தபால்  தலை போலிருப்பதால் இந்த முடிவு .

Thursday, November 12, 2015

நேர் மறை 15 கேள்விகளுக்கு ஆர்.எம்.நௌசாத் (தீரன்) பதில்கள்


தமிழ்மிரர் 06 நவம்பர் 2015

01. உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?


என் பட்டோலைகளை  மீசானில்  போட்டுள்ளேன். காலம் மறு தட்டில்  படிக் கற்களை வைத்துக் கொண்டிருக்கிறது. எடை போட தாமதமாகும்


02. நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?

ஒரே ஒருவருடன்.... நபசுல் அம்மாராவுடன் மட்டுமே.


03. இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?
இலக்கிய மேடைகளில்  அவர்களின்  ஓரங்க ஈரங்க நாடகக்  கூத்துக்கள் என்னை  மிகவும்  கவர்வதுண்டு,

04. உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
இதற்குப் பிறகு  எழதவே  மாட்டார்களா.!!!

05. நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
விரல் விட்டு எண்ணி விடலாம்

06. யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்
தீரன் என்ற உள் மனிதனை

07. இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
நட்டுமை நாவலை  வாசிக்கும் போது 

08. இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
நட்டுமை நாவலை  வாசிக்கும் போது

09. உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
தூது

10. உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
சாகித்திய விருதுக்காக  ரூபா 55000- தந்தார்கள்

11. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
நாய்க்கு  ஏன்  தோல் தேங்காய்..?

12. உங்களக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
பழங்கால  சுரியானி  மொழியில்..

13. முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
ஒவ்வொரு  இணையக்  கடையாக ஏறி ஒன்றும்  வாங்கப் பிடிக்காமல் இறங்கிக் கொண்டிருக்கிறேன் ..

14. உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
சரியாக கேட்டீர்கள் ஐந்தாறு  வரிகளில் என்று-  ஆறே பேர்தாம். நான்-- மனைவி- மூன்று பிள்ளைகள்—ஒரு  வரிப் பூனைகுட்டி

15. எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
தானே  அச்சடித்த தனது  நூல் வெளியீட்டு  விழா  அழைப்பிதழில் தன பெயருக்கு முன்னால்   பிரபல எழுத்தாளர் என்ற அடைமொழி சேர்த்தவனை  இப்போதும்  தேடிக் கொண்டிருக்கிறேன் ...

சாகித்ய விருதுக் குளறுபடி

சாகித்ய விருதுக் குளறுபடி 
மனத்தில் பட்டது - 04

சாகித்ய விருதுகளில் பல்வேறு குளறுபடிகள் இன்று நேற்றல்ல நெடுநாள் தொடரும் ஒரு விடயம். ஆங்காங்கே புகைந்துகொண்டிருக்கும் தில்லாலங்கடி வேலைகளை யாராவது மொத்தமாகப் போட்டு உடைக்க மாட்டார்களா என்று நியாயமாகச் சிந்திக்கும் உள்ளங்கள் இன்னும் குமுறிக் கொண்டே இருக்கின்றன. அந்தக் குமுறல் அர்த்தமிழந்து போகாது. ஒரு நாள் பிரளமாகும் அப்போது எல்லா உடைசல்களும் தெளிவாகத் தெரியத்தான் வரும்.
இம்முறை கிழக்கு மாகாண சபைக்கான சாகித்திய விருதுகளிலும் அதே குளறுபடிகள் இருப்பதாகத் தெரிகின்றது. விருது என்பது திறமைக்கானது. அது முகத்தாட்சனைக்கு அல்லது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டுத்தான் கொடுக்கப்பட வேண்டும். தெரிவில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். விருதுக்கான நூல்களைத் தெரியும் நடுவர்கள் ஒன்றாக இருந்து கலந்துரையாடி முடிவுகளை எடு;க்க வேண்டும். எந்த அடிப்படையில் விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டது என்பதை நடுவர்கள் பொது மன்றிற்குக் கொண்டு வர வேண்டும். தெரிவுக்கு முன்னர் நடுவர்களைப் பகிரங்கப் படுத்துவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன ஆயினும் முடிவுகள் வெளியாகும் தருனத்தில் நடுவர்களைப் பகிரங்கப்படுத்துவது தொடர்பில் ஆலோசிக்க வேண்டும். முடிவுகள் ஒற்றைத் தன்மை வாய்ந்ததாக இல்லாமல் வாதப்பிரதிவாதங்களுக்கு உட்பட்டதாக இருத்தல் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படல் வேண்டும்.
பெரும்பாலும் நீதி என்பதை விருதுக்கு நூல்களைத் தெரிவு செய்யும் நபர்கள் தவறவிட்டுவிடுகின்றார்கள். அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகள், இன மத வேறுபாடுகள் என்பன தெரிவில் தாக்கம் செலுத்துவதை கடந்தகால பல்வேறு முடிவுகள் பாலர் வகுப்புப் பிள்ளைக்குப் போதிப்பது போலத் தெளிவாகப் போதிக்கின்றன. இதெல்லாம் ஏன் என்று கேள்வி கேட்டால் பதில் கிடைக்காமல் போகும் என்றா நினைக்கின்றீர்கள்?
இந்த விடயங்களை எல்லாம் புலனாய்வு செய்துதான் விமர்சிக்க வேண்டும் என்பதில்லை. அப்படிச் செய்யும் போது பல நடுவர்கள் நடுத்தெருக்கு கொண்டுவரப்பட்டு கடுஞ்சொற்களால் பந்தாடப்படுவார்கள். அந்தத் தகவல்களைத் தேடி எடுப்பது உன்று அவ்வளவு கஷ்டமான விடயமும் கிடையாது. 
பல பொழுதுகளில் விருதுக்கான புத்தகளைத் தெரிவு செய்வதற்காகப் பணிக்கப்படும் நடுவர்கள் அதற்குத் தகுதியானவர்களாக இருப்பதில்லை. அவர்களின் இலக்கிய அறிவு, வாசிப்பு வீதம், தேடல், சிந்தனை வீரியம், புரிந்து கொள்ளும் தன்மை, எல்லாவற்றையும் தாண்டி நீதியாகச் செயற்படும் பண்பு என்பன எல்லாம் கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும். 
தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட இரண்டு இனக் குழுமங்களும் மூன்று மதப்பிரிவினரும் இலக்கியம் படைக்கின்றார்கள். தமிழ் மொழியின் இலக்கியத் தரத்தை தூக்கி நிறுத்துவது சிறந்த படைப்புத்தான். அப்படிப்பட்ட சிறந்த படைப்பாளனுக்கே விருது போய்ச் சேர வேண்டும். அதைவிடுத்து இன வேறுபாடும் மத வேறுபாடும் விருதில் தாக்கம் செலுத்தக் கூடாது. அப்படித் தாக்கம் செலுத்தினால் அது தாய்த் தமிழுக்குத்தான் இழுக்கு. தரமற்ற படைப்புக்கு விருதினைப் பரிந்துரை செய்யும் நபர்கள் தாய்த் தமிழின் மீது தினிக்கும் அவமானத்தைப் பயந்து கொள்ளட்டும். வரலாறு தெளிவான நீரோடை போன்றது குப்பைகளை ஒருநாள் கரையில் ஒதுவிடும். அப்படி இல்லாவிட்டால் புரூட்டஸ் நீயுமா என்ற கதையெல்லாம் காலம்தாண்டி நூற்றாண்டுகள் கடந்து நம்மை வந்து சேர்ந்திருக்காது. 
தரமற்ற ஒரேயொரு நாவல் போட்டிக்கு வந்தால் அதற்கு எப்படி விருது கொடுப்பது? தரமான படைப்பென்றால் யாரும் முடிவுகளை விமர்சிக்கப் போவதில்லை தரம் கெட்டுப்போகும் போதுதான் விமர்சனமே எழுகின்றது. அந்த விமர்கங்களுக்குப் பதில் சொல்ல வேண்டியது உரிய அதிகாரிகளின் பொறுப்பு. அவர்கள் அவ்வளவு எளிதில் தமது பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. 
இம்முறை கிழக்கு மாகாணசபை சாகித்திய விருதுத் தெரிவிலும் பல்வேறு குளப்பகௌ; கலந்திருப்பதாகத் தெரிகின்றது. உத்தியோகபூர்வ முடிவுகள் எதைச் சொல்கின்றன என்று கருத்துக்கள் பதிவு செய்யப்படுதல் வேண்டும் இதற்காக புலனாய்வு செய்யும் நிர்பந்தத்தை கிழக்கு மாகாண கலைகலாசார பண்பாட்டலுவல்கள் அமைச்சு ஏற்படுத்தாது என்று நம்புகின்றேன். அத்துடன் திறந்த வெளியை நாங்கள் வைத்திருக்கின்றோம். தாராளமாக எழுதுங்கள்.

அக்கினிச் சுவாசம் - நினைவுகள் - தொடர் 01

அக்கினிச் சுவாசம்
நினைவுகள் - தொடர் 01
2002ஆம் ஆண்டு ஜாமியா நளீமிய்யாவில் நான் இரண்டாம் வருட மாணவன். இந்த வருடம் எனது தந்தையின் ஞாபகார்த்தமாக ஒரு அமைப்பைத் தோற்றுவிக்கும் போது எனக்கு வயது 19 தான். ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து இரண்டு வருடங்கள் கழித்து விழுந்த விதைதான் அக்கினிச் சுவாசம் என்ற பாடல் அல்பம்.
2015 செப்தம்பர் 24ஆம் திகதியோடு எமது முதலாவது படைப்பான அக்கினிச் சுவாசம் பாடல் அல்பம் வெளி வந்து பதினொரு வருடங்கள் ஆகிவிட்டது. நேற்று போல இருக்கின்றது.
இதில் பல நபர்களை நினைவுகூர வேண்டி இருக்கின்றது அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் பதிவு செய்வதுதான் இப்போதைக்கு நாம் செய்யும் நன்றிக்கடன். அத்துடன் இந்தப் படைப்புக்காக நாம் பட்ட அனுபவங்களை அப்படியே பதிவு செய்யவும் முயல்கின்றோம். அது இனிமையானதோ அல்லது கசப்பானதோ உள்ளதை உள்ளபடி எமது இந்த உழைப்பில் தோள் கொடுத்த ‪சூ‎முதற்_பிரிவினர்‬
01. அஷ்ஷெய்ஹ் ரஹ்மான் ஹசன் மற்றும் ட்ரிம் ஆர்ட்ஸ் நிறுவனம்
02. அஷ்ஷெய்ஹ் அஜ்வத் அலி
03. அஷ்ஷெய்ஹ் நுஸைர் நௌபர்
04. மூமினா ஆப்தீன்
05. பாரிஸ் நாநா
06. எஸ்.பி.ராஜன் மற்றும் சீ.சுதர்சன் (ப்ரண்ட்ஸ் இசைக்குழு)
07. நஜ்முந்நிஸா ஆப்தீன்
08. ஜூமானா அலி அக்பர்
09. காலித் ஹாஜியார்
10. அஷ்ஷெய்ஹ் பஸ்ரி
‪சூ‎இரண்டாவது_பிரிவினர்‬
11. அஷ்ஷெய்ஹ் முஹம்மத் - மருதமுனை
12. சலீம் ஹாஜியார்
13. ஹஸன் சேர்
14. இர்ஷாத் ஏ காதர்
15. மள்வானை தாருல் அர்கம்
16. இஜ்லான் சேர்
17. இஸ்மத் நாநா
18. மீள்பார்வை பத்திரிகை நண்பர்கள் - ரவுப் ஸெய்ன்இ சிராஜ் மஷூர்இ அஸார்
19. டொக்டர் ஸைபுல் இஸ்லாம்
20. றஹீம் நாநா – காத்தான்குடி வாஹினி ஸ்ரூடியோ
21. றியால்தீன் ஓட்டமாவடி
22. முகைதீன் குட்டி இஸ்மாயீல்
23. அஷ்ஷெய்ஹ் அல்தாப் பாரூக் மற்றும் குடும்பத்தினர்
24. ஏ.எம். பரீத் காவத்தமுனை
‪சூ‎மூன்றாவது_பிரிவினர்‬
25. நவ்சாத் பாஸா அக்கரைப்பற்று (முஸ்லிம் குரல்)
26. பஹீமா ஜஹான்
27. பைசல் அய்யூப்
28. பாலைநகர் ஜிப்ரி
29. முபாரிஸ்
30. சுபா
31. பிரியா மூர்த்தி
32. அஷ்ஷெய்ஹ் ஹாபிஸ்
33. அஸ்மின்
34. அஷ்ரப் சேர்
35. மஸீதா
36. பர்வீன்
37. சபா பானு
38. சப்னா பானு
39. எம் . ஐ .எம் .றியால் மற்றும் ஓட்டமாவடி டீ ஏ சகோதரர்கள்
40. அஷ்ஷெய்ஹ் இல்லியாஸ்
41. கொழும்பு ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்கச் செயலாளர் (2004)
42. எனது வகுப்புத் தோழர்கள் (ஜாமியா நளீமிய்யா – 2000ஃ2007)
‪சூ‎நான்காவது_பிரிவினர்‬
43. அஷ்ரப் சிஹாப்தீன்
44. எஸ்.நளீம்
45. முல்லை முஸ்ரிபா
46. ரவுப் ஹஸீர்
47. எம்.கே.எம்.ஸகீப்
48. எம்.பௌசர்
49. அஷ்ஷெய்ஹ் ஏ.பீ.எம்.இத்ரீஸ்
50. சேகு இஸ்ஸதீன் - முன்னாள் ஊடகப் பிரதியமைச்சர்
51. அஷ்ஷெய் அகார் முஹம்மத் மற்றும் ஜாமியா நளீமிய்யா நிருவாகம்
52. மர்ஹூம் அன்வர் இஸ்மாயீல் எம்பி
53. முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்
பதினொரு வருடங்களுக்கு முந்திய ஞாபகங்களில் இருந்து இவற்றைத் தொகுத்து இருக்கின்றேன். பெரும்பாலும் விடுபாடுகள் இருக்க வாய்ப்பில்லை இருப்பினும் யாரேனும் விடுபட்டிருந்தால் அவர்களையும் நிச்சயம்இணைத்துக் கொள்வேன்.

Thursday, November 5, 2015

அஷ்ரப் சிஹாப்தீனுடன் ஒரு நிமிடம்


றேர் மறை 15 கேள்விகள்

01. உங்களைப் பற்றியஉங்களின் மதிப்பீடுஎன்ன?
எனது பலவீனங்களைப் புரிந்து வைத்திருக்கிறேன்.

02. நீங்கள் எத்தனைபேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?
நமக்குநாமேமுரண்பட்டுக்கொள்ளும் போதுஆங்காங்கேசிலருடன் அவ்வப்போதுமுரண் பட்டுக்கொள்ளவேண்டித்தான் இருக்கிறது. ஆனால் எத்தனைபேர் என்றுகணக்குச் சொல்லமுடியவில்லை.

03. இலக்கியவாதிகளுக்கிடையேயானமுரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்தநிகழ்வுஎது? 
இலக்கியவாதிகளுக்கிடையிலான முரண்பாடுகள் கவரும் விதமாகவா இருக்கிறது?

04. உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர்விபரங்களுடன்?
ஏன்னைப் பற்றித் தனியேயாரும் எழுதியதுகிடையாது. எனதுஅறபுச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு நூலான'ஒருசுறங்கைப் பேரீச்சம் பழங்கள்'தொகுதிக்குமதிப்புரைவழங்கியசகோதரிலரீனாஅப்துல் ஹக் அதில் ஒருபகுதியில் என்னைப் பற்றியும் எழுதியுள்ளார். அதையேஎனதுஅறிமுகத்தையாராவதுகேட்டால் அனுப்பியும் வைக்கிறேன்.

05. நீங்கள் யார் யாரைப் பற்றிஅல்லதுபடைப்புக்களைப் பற்றிஎழுதியிருக்கின்றீர்கள்?
'யாத்ரா'சஞ்சிகைகளைப் பார்த்தீர்களானால் பலரைப் பற்றியும் நான் எழுதியிருப்பதைக் காணலாம். அதுபட்டியல் வரும். யுhத்ராவைஒலிச் சஞ்சிகையாகமாற்றியபிறகும் கூட அதில் சிலரைநேர்கண்டிருக்கிறேன். இப்போதும் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் இலக்கியமஞ்சரிநிகழ்ச்சியிலும் இலக்கியவாதிகளைநேர் கண்டு (அவர்களைப் பற்றியமுக்கியவிபரங்களை) ஒலிபரப்பிவருகிறேன்.தவிரபலரது நூல்களைப் பற்றியும் எழுதியிருக்கிறேன். புட்டியல் தரவ hய்ப்புமில்லை,அவற்றைநான் குறித்துவைத்துக் கொள்வதுமில்லை.

06. யாரைமிகவும் மதிக்கின்றீர்கள்?
தன்னையேஎல்லோரும் புகழவேண்டும்,தான் சொல்வதேவேதவாக்கு,நான் எழுதுவதே இலக்கியம்,என்னுடையசிஷ்யக் குஞ்சுகளே சிறந்தவர்கள்,மாலையும் மரியாதைக்கும் பொருத்தமுள்ளவன் நான் மட்டுமேஎன்றெல்லாம் நினைக்கும் குப்பைமனிதர்களைத் தவிரமற்றவர்கள் அனைவரையும் பிடிக்கும்.

07. இதெல்லாம் ஒருபுத்தகமாஎன்றுஎதைவாசிக்கும் போதுதோன்றியது?
ஒருபுத்தகத்தைப் பற்றித்தான் கேட்கிறீர்கள். என்னிடம் அவ்வாறானபுத்தகங்கள் ஒருகும்பம் கிடக்குது. அவற்றையாருக்கும் வாசிக்கக் கொடுக்கும் எண்ணம் கூட எனக்குக் கிடையாது.

08. இதுவல்லவோபுத்தகம் என்றுஎதைவாசிக்கும் போதுதோன்றியது?
எச்.ஏ.எல். கிரெய்க் எழுதி - அல் அஸூமத் மொழிபெயர்த்த'பிலால்'

09. உங்களுக்குப் பிடித்த இலக்கியசஞ்சிகை?
எனக்குப் பிடித்த இலக்கியசஞ்சிகையாத்ரா!

10. உங்கள் எழுத்தின் பொருளாதாரமதிப்புஎன்ன? ஒருகவிதைக்கு,சிறுகதைக்கு,ஆய்வுக்குஅல்லதுவேறேதுமொருபடைப்புக்கானவிலைஎன்ன? 
எனக்கு இலக்கியத்தைப் பொருளாதாரரீதியாகமதிப்பிடத் தெரியவில்லை.

11. இலக்கியத்துக்கானநோபல் பரிசுபற்றியதங்களின் அபிப்பிராயம்?
நோபல் பரிசுக்குப் பின்னும் அரசியல் என்றஒன்று இருந்தாலும் தெரிவுசெய்யப்படுபவைமோசமானவைஎன்றுசொல்லமுடியாதுஎன்றுஎண்ணுகிறேன்.

12. உங்களுக்குஎன்னென்னமொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
எனக்குஒருமொழியிலுமேபாண்டித்தியம் கிடையாது.

13. முகநூல்,வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
கிள்ளி எடுக்கவும்! அள்ளி வீசவும்!

14. உங்களின் குடும்பம் பற்றிமிகச் சுருக்கமாகஐந்தாறுவரிகளில்?
நான்,மனைவி,மகள், இரு மகன்கள்,மருமகன்!

15. எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்தவேண்டும் என்றுதோன்றும்?
ஒரு சில முகங்கள் இருக்கின்றன. குத்தினால் ஏழுமுறை கையைக் கழுவிக் கொள்ளலாம்தான். ஆனால் காலமெல்லாம் நினைவில் வந்து அருவருப்புத் தரும் என்பதால் சும்மா இருக்கிறேன்.

மனதிற்பட்டது - 03 - நல்ல சிந்தனையும் அழகிய கற்பனையும்

நல்ல சிந்தனையும் அழகிய கற்பனையும்
(தமிழ் மிரர் இலக்கியப் பக்கத்தில் தொடராய் வரும் பத்தியெழுத்து: 30 oct 2015)

யாத்ரா சஞ்சிகையின் இறுதியாக வந்த இதழில் நவீன கவிதைகள் எழுதுவதற்குப் பயன்படும் சில சொற்களை அட்டவனைப்படுத்தி வழிகாட்டியிருந்தார்கள். அதைப்பார்த்துவிட்டு நான் வாய்விட்டுச் சிரித்தேன், எல்லோராலும் அதைப் பார்த்துச் சிரிக்க முடியாது. சிலருக்கு அதைப் பார்த்ததும் மூக்கும் கண்களும் சிவந்திருக்கும். இதை எழுதியவன் ரெத்த வாந்தியெடுத்துச் சாவட்டும் என்று சாபமும் விட்டிருப்பார்கள். குறிப்பாகப் பெண்ணியக் கவிதை என்று வாந்தியெடுக்கும் சில அம்மணிகள்.

எல்லோருக்கும் எழுத்துச் சுதந்திரம் இருக்கின்றது. அவரவர் இஷ்டப்படி எது வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் அது டயறியாக இருந்தால் நல்லது. அப்போதுதான் யாரும் அதைப் புரட்டிப்பார்க்க மாட்டார்கள். ஆனால் பொதுமக்கள் உலாவும் வெளிக்கு அது வந்துவிட்டால் அதற்கான பார்வையும் புரிதலும் வேறுபட்டவை. அதனாலேயே பிறர் வாசிக்க வேண்டும் என்ற நினைப்போடு எழுதும் நபர்கள் தமது எழுத்தில் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். 

யாருக்கும் விளங்காவிட்டால் அதுதான் நவீன மண்ணாங்கட்டி. அந்த மண்ணாங்கட்டியை கவிதை என்றோ கருத்து என்றோ அடையாளப்படுத்தி முகநூலில் தொங்கவிட்டு முதல் லைக் மற்றும் முதல் கொமெண்ட் ஆகியவற்றைத் தாமே இட்டுக் கொண்டு பெருமைப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை போலத் தெரிகின்றது. இந்தக் கொடுமையெல்லாம் பார்க்க வேண்டாம் என்றுதான் பல வல்லவர்கள் நேரகாலத்தோடு போய்ச் சேர்ந்துவிட்டார்கள். 

எழுத்து வல்லமை என்பது மிக முக்கியமான அம்சம். சிலருக்கு நல்ல சிந்தனை வசப்பட்டிருக்கும். அந்தச் சிந்தனைக் கவர்ச்சி நம்மை ஈர்ப்போடு வாசிக்கத் தூண்டும். நமக்குள் அந்த எழுத்து பல்வேறு உணர்வுகளைத் தட்டியெழுப்பும். நமது சிந்தனையைத் தூண்டிவிடும். ஒரு பிரளயத்தை உண்டுபன்னி நம்மையெல்லாம் அள்ளிச் செல்லும். அந்த எழுத்தில் தொனிக்கும் தூய்மை நம்மைச் சுத்தப்படுத்துவது போன்ற பணியைச் செய்யும். அது அவ்வளவு எளிதில் அமைந்துவிடுவதுமில்லை. அப்படியானவர்கள் உலகின் பக்கமிருந்து எதனையும் எதிர்பார்ப்பதுமில்லை. அமைதியான தெளிவான நதிபோல அது ஓடிக் கொண்டே இருக்கும். ஓர் ஆன்மீகத் தளத்தில் தியானத்தில் இருந்து வெளியேறியது போன்ற உணர்வை வெகு இயல்பாக ஏற்படுத்தி விட்டிருக்கும்.

சிலரின் எழுத்தில் இருக்கும் கற்பனை நம்மை அதிசயிக்கச் செய்யும். இப்படியெல்லாம் கற்பனை செய்ய முடியுமா என்று நம்மை ஆர்வத்தோடு தன் பின்னால் கட்டியிழுத்துச் செல்லும். அதன் லயிப்பில் நாம் அமிழ்ந்து போவோம். அவ்வெழுத்துக்கள் பரவசமூட்டி இன்புறச் செய்யும். அந்த இன்பம் சிறகடித்துப் பறக்க வைக்கும் எழுத்திக் கோர்வை அழகுக்குள் நாமும் சிக்குண்டு சின்னாபின்னமாகிப் போய்விடுவோம். அந்தக் கற்பனை பழரசம் அருந்துவது போன்ற உணர்வையும் ஒரு மாயைக்குள் சிக்கிப் போராடி வெளியேறியது போன்ற தோற்றத்தையும் வெகு இயல்பாக உருவாக்கி விட்டிருக்கும். குடும்பத்தோடு போன ஒரு நாள் உல்லாசப் பயணம் போல.

எழுத்து அவரவர் குணவியல்போடு ஒன்றித்து எழுவது. மிகச் சிலருக்கே நல்ல சிந்தனையும் அழகிய கற்பனையும் வாய்க்கப்பெற்ற எழுத்து கை கூடும். அவர்கள் முற்றிலும் வித்தியாசமானவர்கள். சில்லறைத் தனமான எழுத்து அசிங்கங்களிலில் இருந்து விலகிப் பாதை அமைத்துக் கொண்டவர்களாக இருப்பர். அவர்கள் மலிவு விலைக்குள் ஒரு போதும் சிக்கிக் கொள்ளவே மாட்டார்கள். தம்மைத்தாமே புகழ்ந்து தள்ளவோ அல்லது தமது ஸ்தானம் எத்தகையது என்பதை பிறர்க்குப் பாடம் நடாத்திப் பதிய வைக்கவோ முயல மாட்டார்கள். அவர்களிடம் புன்னகை இருக்கும், சிரிப்பும் இருக்கும் ஆனால் பல்லுத் தெரியும் இழிப்பு இருக்காது. 

தரமான ஒரு படைப்பு யாரிடமும் சிபாரிசுக்காக அலையாமல் காலத்தைவென்று நிலைத்து நிற்கும். யாருடைய காழ்புனர்வும் பொறாமையும் அதன் ஸ்தானத்தை மழுங்கடித்திடாது. கிறிஸ்துவுக்கு முன்னர் எத்தனையோ நூற்றாண்டுகள் முந்திய ஏதோவோர் மொழியில் எழுதப்பட்ட எத்தனை புத்தகங்களை இப்போது நாம் அழகு தமிழில் படிக்கவில்லையா!!

நல்ல சிந்தனையும் அழகிய கற்பனையும் எப்போதும் வாழும்.

சோ.பத்மநாதனுடன் ஒரு நிமிடம்


நேர்மறை 15 கேள்விகளுக்கான அவரின் பதில்கள்

1. உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
நான் பேர்னாட் ஷோவின் ரசிகன்.  அவரை ஒரு நிருபர் கேட்டார்.  உலகில் மிக முக்கியமான மூவரைச் சொல்லுங்கள் என்று .  ஷோ சொன்னார்: முதலாவது சேர்ச்சில், இரண்டாவது ஸ்டாலின், மூன்றாமவர் பேரைச் சொல்லத் தன்னடக்கம் தடுக்கிறது!'.

2. நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?
இது எதிர்மறையாக கேள்வி.   இளம் வயதில் அரச சேவையில்  - மேலதிகாரிகளோடு முரண்பட்டிருக்கிறேன்.  வயதாக ஆக முரண்படாமல் இணக்கமாக சமூகத்தில் பழகக் கற்றிருக்கிறேன்.

3. இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது? 
மஹாகவியும் முருகையனும் செய்த 'கவிதைச் சமர்' நினைவில் நிற்கிறது.  'மார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல்' என்று வெங்கட் சாமிநாதன் எழுதியதற்கு எம்.ஏ.நுஃமான் எழுதிய மறுப்பு பிரசித்தமானது.  ஒரு காலத்தில் எங்கள் போர்கள் காணிகளின் எல்லை (வேலி)களில் நடந்தன.  அந்தப் பயிற்சி இன்று காணி பிடுங்கும் படையினரோடு மோத மக்களுக்கு உதவுகிறது.


4. உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
கல்வயல் குமாரசாமி மல்லிகை முகங்களுக்கு எழுதினார். கந்தையா ஸ்ரீகணேசன் ஞானத்தில்  நீண்டதொரு கட்டுரை எழுதியிருக்கிறார். கோகிலா மகேந்திரன் பல சந்தர்ப்பங்களில் பேசியும் எழுதியும் உள்ளார். பேராசிரியர் சிவலிங்கராஜா அமரர்கள் ஏ.ஜே.கனகரத்தினா, கவிஞர் க.சச்சிதானந்தன்,  பேராசிரியர் மௌனகுரு, ஓவியர் ஆசை இராசையா,  கவிஞர்கள் ஜெயசீலன், ஜின்னாஹ் ஷரிபுத்தீன், இ.சு.முரளீதரன், பா.மகாலிங்கசிவம் என வரிசை நீளும்.

5. நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
குழந்தை ம.சண்முகலிங்கம், செங்கை ஆழியான், முருகையன், நீலவாணன், சத்தியசீலன் ஆகியோர் படைப்புலகம் பற்றி எழுதியிருக்கிறேன்.

6. யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்?
கி.ராஜநாராயணன், அ.முத்துலிங்கம், இருவரையும் உச்சிமேற்கொள்கிறேன்.

7. இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
அப்டித் தோன்றியதில்லை.

8. இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
Chinua Achebe  இன்“Things Fall Apart”, Antoine Saint- Exuperi எழுதிய 'குட்டி இளவரசன்' ஆகிய நூல்களை வாசிக்கும்போது அந்த உணர்வு ஏற்பட்டதுண்டு.

9. உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
ஏனக்குப் பிடித்த சஞ்சிகைகள் அற்பாயுசில் நின்றுவிடுகின்றன.

10. உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமொரு படைப்புக்கான விலை என்ன? 
இந்த நாட்டில் எழுத்துக்கு ஏது பொருளாதார மதிப்பு? 'கவிதை காலித்தால் ஊரென்ன காசா கொடுக்கிறது?' என்று பாடினார் மஹாகவி

11. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்? 
ஆங்கிலம், ஃப்ரெஞ்ச் போன்ற மொழிகளில் ஒரு படைப்பு வந்தால் நோபெல் கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.  இந்நிலைமை சரியல்ல.

12. உங்களுக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
தமிழ், ஆங்கிலம், ஓரளவு சிங்களம், கொஞ்சம் ஃப்ரெஞ்ச்

13. முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
'துழரசயெடளைஅ ளை டுவைநசயவரசந in ய hரசசல' என்பர். ஊடகங்களில் அவசரம் இருக்கும் அளவுக்கு ஆழம் இல்லை.  'இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும்' படைக்கிறார்கள்.  புறநடைகள் இருக்கலாம்.  முகநூலின் வருகையோடு நம் எழுத்தாளர்கள் போராளிகளாகிவிட்டார்கள்.

14. உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
இல்லத்தை நிர்வகிக்கும் மனைவி, வளர்ந்து ஆளாகிவிட்ட மக்கள் நால்வர், கடைக்குட்டி பெண்.  ஆண்களுள் ஒருவர் மட்டும் இலங்கையில்.

15. எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
ஓங்கிக் குத்துவதால் கை தான் வலிக்கும்.

மனதிற்பட்டது - 02 - ப.ஆப்டீன் என்ற பேரமைதி

(தமிழ் மிரர் இலக்கியப் பக்கத்தில் தொடராய் வரும் பத்தியெழுத்து: 23 நவம்பர் 2015)


இருபது வருடங்களுக்கு மேலாக ஒரே இடத்தில் ஆங்கிலப்பாடம் படிப்பித்து இலக்கிய ஆர்வமுள்ள மாணவர்களைத் தட்டிக் கொடுத்து, நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்து, வாசிக்க வைத்து, வாசித்தவைகளை ஒரு மாலைப் பொழுதில் அமர்ந்து கலந்தரையாடி இலக்கியத்தை விதைத்தவர் ப.ஆப்டீன்.

இலக்கியமும் விதை போன்றதுதான். நிலமறிந்து விதைத்துவிட்டால் மட்டும் போதாது, முளைவிடும் கலப்பகுதியில் அவற்றைத் திறம்படப் பராமரிக்கவும் வேண்டும். நல்ல அறுவடை வேண்டுமானால் விசக்கிருமிகள், கெட்ட புழுக்கள், கொடிய பூச்சிகள் போன்றவற்றின் கொடிய தாக்குதல்களில் இருந்து கண்ணும் கருத்துமாக பாதுகாப்பாக்கவும் வேண்டும். அப்படிப் பாதுகாப்பாளனாகச் செயற்படுபவன் காரிய கெட்டிக்காரனாகவும் இருக்கவும் வேண்டும். நல்ல திறம் படைத்தவனாக இருக்கவும் வேண்டும். அப்படித் திறம் படைத்த ஒருவராகத்தான் ப.ஆப்டீன் வாழ்ந்தார்.

படைப்பிலக்கியவாதியின் திறம் என்பது வெறும் எழுத்தால் மட்டும் தீர்மானிக்கப்படுவதன்று. அவனது இயல்பு மற்றும் குணாம்சங்கள் அதில் கூடுதல் தாக்கம் செலுத்தும். மற்றவர்களுடன் அவன் பழகும் விதம் நடந்துகொள்ளும் விதம் சக படைப்பாளியைக் கையாலும் விதம் என்று எல்லாமும்தான் அவனது திறத்தின் கனதியைத் தீர்மானிக்கின்றன. 1937 நவம்பர் 11ஆம் திகதி பிறந்த ப. ஆப்டீன் அவர்கள் இராவின் ராகங்கள(1987);, நாம் பயணித்த புகைவண்டி(2002),கொங்கானி(2014) ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் கருக் கொண்ட மேகங்கள்(1999), மலையூற்றுக்கள் ஆகிய நாவல்களையும் பேராசிரியர் நந்தியும் மலையகமும் என்ற ஆய்வையும் தந்தவர். இத்தனையையும் தந்துவிட்டு அவர் அமைதியாகவே இருந்தார். அவரது அமைதியும் அடக்கமும்தான் அவர்மீது அளவிலாத பற்றை நம் மீது ஏற்படுத்துகின்றன.

ஆர்ப்பாட்டமுள்ள இலக்கியக் கலகக் காரர்கள் பலருக்கு ப.ஆப்டீனைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் ஆப்டீனைப் பற்றியோ அல்லது அவரது படைப்பிலக்கியம் பற்றியோ தேடி அல்லது பேசிக் கூட இருக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்களெல்லாம் இப்போது ஆகாயத்திலேயோ அல்லது பூமிக்கடியிலயோ இருந்து நவீன இலக்கியம் படைத்துக் கொண்டிருப்பார்கள், அல்லது யாரைப்பற்றியாவது குறைகழுவிக் கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்ட இலக்கிய ஆர்ப்பாட்டக்காரர்களின் ஆர்ப்பரிப்புக்களையெல்லாம் தாண்டி அவர்களின் மாபெரும், அதிசிறந்த அதி அற்புதமான என்ற சான்றிதழ்களுக்காக காத்திருக்காது ஓதுங்கிக் கொண்டவர்களில் ஆப்டீன் சேரும் ஒருவர். 

ஆப்டீன் சேரிடம் ஆங்கிலமும் இலக்கியமும் பயின்றவன் நான். சப்தமிட்டு எதற்காககவும் அதட்டத் தெரியாதவர். மள்வானையில் யதாமா பாடசாலைதான் எங்கள் இலக்கியத் தோட்டம். அங்கு அவர் இலக்கியத்தை எமக்குள் விதைத்து  சிறந்த அறுவடைக்காகக் பராமரித்தார். நீர்கொழும்பைச் சேர்ந்த ரிஸ்வான் என்பவர் ஆப்டீன் சேரின் ஆசிர்வாதத்துடன் ஒரு கவிதைத் தொகுதியை 2000மாம் ஆண்டுகளில் வெளியிட்டார். நான் கொஞ்சம் தாமதம். 
காசுக்குப் பறக்கும் கலாபூஞ்சனங்களுக்கு இடையே காலம் தாழ்த்தி அவரது திறமைக்கும் ஆற்றலுக்குமாக 2012ஆம் ஆண்டுதான் கலாபூசணம் விருது அவரைச் சேர்ந்து பெருமைபெற்றது. அவர் எந்தச் சால்வைக்காகவும் ஓடவுமில்லை பாயவுமில்லை. யாரையும் காக்காய் பிடித்து இலக்கியத் தம்பட்டம் அடித்துக் கொள்ளவுமில்லை. அவர் பாட்டில் அவர் பணியைச் செய்தார். இப்போது அவருக்காக நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்கின்றோம். 

மலாய் சமுகத்தின் வரலாற்றை மையப்படுத்தி ஒரு நாவலை எழுதும் முயற்சியில் இறுதித் தருனத்தில் அவர் ஈபட்டிருந்தாகவும் தகவல் கிடைக்கின்றது, அத்துடன் இன்னும் சில சிறுகதைகளும் குறு நாவல்களும் புத்தக வடிவம் பெறாமல் இருக்கின்றன. அவற்றைப் பதிப்பிப்பதோடு அவர் தமிழ் இலக்கிய உலகுக்குச் செய்த பங்களிப்பின் பெறுமதியை வரலாற்றில் பதிவு செய்வதுமே அவருக்கு எழுத்துலகில் நாம் செய்ய முடியுமான சிறிய உபகாரம்.

எதிர்வரும் 25ஆம் திகதி காலை கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் அவருக்கான ஒரு நினைவுக்கூட்டம் நடாத்த இருப்பதாக மேமன் கவி தந்த தகவலையும் இங்கு பதிவு செய்து கொண்டு அவரின் மறுவுலக வாழ்க்கையின் ஈடேற்றத்திற்காகப் பிரார்த்திக்கிறேன்.


Friday, October 23, 2015

நேர் மறை - கவிஞர் சோலைக்கிளி பதில்கள்

தமிழ்மிரர் பத்திரிகை-  இலக்கியப் பக்கத்தின் நேர் மறை பகுதிக்காக கவிஞர் சோலைக்கிளி 15 கேள்விகளுக்கு அளித்த பதில்கள்


01. உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
காலம் உருட்டி விட்ட ஒரு மண்ணாங்கட்டி .

02. நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?
ஒருவருடன் அது நான்தான் .

03. இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?
அவர்களின் தாடிகளும் மீசைகளும்

04. உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
நினைவில் இல்லை .

05. நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
இயற்கையைப்பற்றி ,மண் ,மழை ,மலை ,கடல் நதி கரப்பான்பூச்சி என்று .

06. யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்?
மீனுக்காக ஏங்கி நிற்கும் கொக்கை .அதனிடம் வன்முறை இல்லை .

07. இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
பல பாட்டுப்புத்தகங்கள்

07. இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
என் மனைவி .

09. உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
இயற்கை
10. உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
அப்படி என்றால் இந்த உலகத்தை விற்றுத் தந்தாலும் போதாதே

11. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
பலர் கனவு காணும் கன்னிப்பெண்

12. உங்களுக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
இந்த உலகத்தில் இருக்கின்ற அத்தனை படைப்புகளின் மொழிகளிலும் .

13. முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
ஒரு சமையல் அறை க்குள் கிடக்கின்ற ,உப்பு ,மிளகாய் ,வெங்காயக் கோது ,சீனி ,காய் கறி, மிளகு மாதிரி

14. உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
இனிய குடும்பம் ,நான் எழுதப் போனால் ,தூ ங்கி உதவி செய்யும் மனைவி ,நான் ,பிள்ளைகள் ,வாசல் பெருக்கும் தும்புத்தடி என்று பலர் .

15. எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
அப்படிச் செய் யப்போனால் ,இந்த இரு கைகளும் போதாது .ஆயிரம் முகங்கள் ,ஒருத்தனுக்கே பல முகங்கள் .

மனதிற் பட்டது – 01


(தமிழ்மிரர் பத்திரிகையில் வரும் பத்தி 16.10.2015)

இந்த உலகம் ஒரு மாயக் கோலம். அதில் எல்லாவற்றையும் மிகைத்த இலக்கியவாதி இறைவன்தான். கற்பனையில் சிந்தனையில் படைப்பில் என்று எல்லாவற்றிலும் புதுமை செய்ய அவனால் மட்டுமே முடிகின்றது. வீட்டுக்குள் ஊர்ந்து திரிகின்ற சின்னஞ்சிறு பூச்சியில் இருந்து அழிந்து போன டைனோசர் வரை எல்லாமே நமது கற்பனைக்கு அருகிலும் வராதவை. கர்வம் கொள்ளும் அதிகாரம் கடவுளுக்கு மட்டுமே இருக்கின்றது. ஏனெனில் அவன் மகத்தான படைப்பாளி. மகத்தான படைப்பாளி என்றால் மமதை இருக்கத்தானே செய்யும்.

எழுத்து ஒரு காலத்தில் தவம். அதனால்தான் படைப்புக்க வரமாகி வரலாற்றில் நிலைபெற்றது. ஆனால் இப்போது அப்படியில்லை. அதனால்தான் இலக்கியப் படைப்புக்களில் சிலவைதான் நின்று நிலைபெறுகின்றன. படைப்புக்கள் மலிவாகக் கிடைக்கின்றன என்பதற்காக அனைத்தையும் ரசிக்க முடிவதில்லை. நம்மால் ரசிக்க முடிந்ததைத்தான் பிறரோடும் பகிர்ந்துகொள்ளத் தோன்றும். எனக்கு அப்படித் தோன்றுவதைத்தான் பொது ரசனைக்கு என்னால் முன்வைக்க முடிகின்றது.
இலக்கியப் படைப்பாளன் ஒரு காலத்தில் கட்டி ஆண்ட உலகம் இப்போது இல்லை. எல்லோருக்கும் எல்லாம் மலிவு விலையில் கிடைக்கத் தொடங்கிற்று. அதுவும்ஒரு வகையில் நல்ல அறிகுறிதான். அவசர அவசரமாக எல்லோரது தரத்தையும் உள நோக்கத்தையும் அவற்றில் தெளிவாக நாம் கண்டு கொள்ளலாம். அவரவர் எழுத்து ஏதோவோரு விதத்தில் அவர்களின் உள்ளத்தின் மாயத் தோற்றங்களைப் படம்பிடித்து நமது கண்ணுக்குக் காட்சியாக்கிச் செல்கின்றது. அவற்றில் புதைந்து கிடப்பதைப் புரிந்து கொள்ளுவதும் விளங்கிக் கொள்வதும் அவரவர் சிந்தனை ரசனை என்ற இரண்டு விடயங்களிலும் தங்கியிருக்கின்றது. அதில் தப்பித்தலும் மாட்டிக் கொள்ளுதலும் கூட அடங்கியிருக்கின்றது.

எல்லோருக்கும் எல்லாம் வசப்படுவதில்லை. எல்லோரையும் மடையன் என்று சொல்லிக் கொண்டு அதி புத்திசாலியாகத் தம்மைக் கருதிக் கொண்டவர்கள் இப்போது பேசுபொருளாக இல்லை. இது இலக்கியப் படைப்பாளிகளுக்கும் பொருந்தும். ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொன்று முடியுமாக இருக்கும். அவரைப் போல நானும் இருந்தால் என்ன என்று சிந்தித்து அதில் முயற்சித்து நம்மைத் தொலைப்பதைவிட நமக்குள் இருப்பதைக் கொண்டு நாம் நம்மைத்தேடி அடைந்து கொள்வதுதான் நமது அடையாளமாக வரலாற்றில் பதியும்.

இலக்கியவாதிகள் தம்மை நிலை நிறுத்திக் கொள்வதிலேயே ஓடிக் களைத்துப் போவார்கள். இறுதியில் அவர்களுக்கு மிஞ்சுவது அந்தக் களைப்பு மட்டும்தான். பாவம் அவர்கள். எவ்வளவு வயது போனாலும் சிலரால் இதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. 

யாருக்கும் யாரும் முதுகு சொறிந்துவிடுவதால் நிலைபெற்றுவிடுவதில்லை. ஒருவனைத் தூக்கி நிறுத்துவது அவனது எழுத்து. அவனது எழுத்துக்குப் பலம் அவனது ஆளுமை, அந்த ஆளுமைக்கு வலிமை சேர்ப்பது பணிவும் எளிமையும்தான். எழுத்து வனிகப் பண்டமாக மாறிக் கொண்டிருக்கின்றது. படைப்பாளனும் வனிகப் பண்டமாக அடையாளப்படுத்தப்படும் நிலை தூரத்தில் இல்லை போல் தெரிகின்றது. அப்படியாகிவிட்டால் அது மெஷின். எழுத்து மெஷின்.ஒரு காலம் வரும் அப்போது படைப்பாளுமைகளுக்காக நாம் தவமிருக்கவும் நேரலாம்.

பல பொழுதுகளில் கேள்விகளுக்கான பதில்களில்தான் இலக்கியவாதிகள் தம்மை யார் என்று காட்டுகின்றார்கள். பதிலில் பிரதிபலிப்பது அவர்களது சிந்தையும் திறமையும் நடைமுறையும்தான் இங்கும் நேர்மறையாக பதினைந்து கேள்விகள் ஒவ்வொரு கேள்விக்குள்ளும் ஒவ்வொரு பொறி இருக்கின்றது. அதில் சிக்கிக் கொள்ளமால் அவர்களாக எத்தனை பேர் வெளிப்படுகின்றார்கள் என்பதை எல்லோரும் பார்க்கத்தானே போகின்றீர்கள். 
வழமையான இலக்கியப் பக்கம் என்ற நிலையிலிருந்து சின்னதாய் ஒரு மாறுதலை நோக்கி நகரும் நோக்கங்களோடு வரண்ட மண்ணில் பெய்த ஒற்றை மழைத்துளியாக இப்பக்கம் இருக்கும் என்ற நம்பிக்கையோடு
-முஸ்டீன்- 

Saturday, September 12, 2015

ஸர்மிளா ஸெய்யித் புரட்ட நினைக்கும் மலை - 04

ஸர்மிளா ஸெய்யித் புரட்ட நினைக்கும் மலை  - 04
- முஸ்டீன் -

ஒருவர் சமுகத்தில் அறியப்படுவதற்கு பல்வேறு முறைகள் இருக்கின்றன. தம்மையும் சமுகம் மதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், தாங்களும் பெரிய மனிதர்கள்தான் என்று நிலைநிறுத்திக் கொள்ளப் பாடுபடுகின்றவர்கள் அவரவர்க்குப் பொருத்தமான சாதகமான முறைகளினூடு பயணப்பட்டு அதில் திருப்தி கண்டவர்களுமுண்டு மூக்குடைந்தவர்களும் உண்டு இத்தகையவர்கள் தமது இருப்பைக் காண்பிப்பதற்காகவே கருத்தச் சொல்லும் அறிவாளிகளாக அல்லது கோமாளிகளாக இருப்பர். எல்லோரையும் அரவனைத்து அனைவர்க்கும் பிடித்தமான நல்லவர்களாக இருக்கவே பெரும்பாலானவர்கள் ஆசைப்படுவார்கள். இத்தகையவர்கள்தான் சமுகத்தின் ஆன்மாவையே அசைக்கவல்ல சைலண்ட் டெரெரிஸ்ட்கள். மிகுந்த அச்சுறுத்தலுக்குரியர்களும் இவர்கள்தான். ஏனையவர்களின் விவகாரங்களில் தலையிடுபவர்களாகவே பெரும்பாலும் தம்மை நிலைநிறுத்திக் கொள்வர். 

சிலரை மக்கள் அந்நியப்படுத்தி முகவரியே இல்லாது செய்துவிடுவார்கள். சிலரைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடி எல்லோருக்கும் தெரிந்தவர்களாக மாற்றிவிடுவார்கள். சிலரை எழும்ப விடாமல் துரத்திக் கொண்டிருப்பார்கள். அது சர்ச்சைகையின்பாற்பட்ட விடயதானங்களில் சம்பந்தப்பட்டதாக இருக்கும். மக்களுக்கு மத்தியில் அறிமுகம் தேவையே இல்லையென்று ஒதுங்கி நிற்பவர்களையும் கூட சில வேளைகளில் அவர்களின்  சர்ச்சைக்குரிய கூற்றுக்கள் மக்களுக்கிடையே முரண்பாட்டை விதைத்து பேசுபொருளாக்கிவிடும். இது சிலரை வாழ வைக்கும் சிலரை அழித்துவிடும். சிலர் அழிவின் விளிம்பை நோக்கி பலவந்தமாகத் துரத்தப்பட்டாலும் வீழ்ந்துவிடமாட்டார்கள். தம்மை நிலைநிறுத்த போராடிக் கொண்டே இருப்பார்கள். கடைசிவரையும் பாதுகாப்பாக ஒதுங்குவதற்கு விடாமல் வைக்கற்போர் நாய்கள் போல சிலர் அங்கேயே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவசியமின்றியும் காரணமின்றியும் குரைத்துக் கொண்டிருப்பார்கள். சில பொழுதுகளில் ஆதரவு போன்று குரைத்தாலும் அதில் ஒரு எதிர்ப்பு தொக்கி நிற்கும். இத்தகையவர்களால் மக்களை நோக்கி எறிகணைத் தாக்குதல் நடாத்தும் நிர்ப்பந்தத்திற்குள் அந்த விளிம்பில் இருப்பவர்கள் தள்ளப்படுவார்கள். சில பொழுதுகளில் அது சாதகமான விளைவுகளையும் பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தி விடுவதுண்டு. 

சர்மிளாவின் கருத்துக்கள் மீதான தாக்குதல் மற்றும் சர்மிளாவின் கருத்துக்களால் மேற்கொள்ளப்படுத் தாக்குதல் என்ற இரண்டு விடயங்களையும் மேற்சொன்ன விடத்தின் அடிப்படையில் நின்றுதான் பார்க்க வேண்டியிருக்கின்றது. எனது அவதானிப்பில் சர்மிளாவுக்கு கருத்துச் சொல்லுமளவுக்கு இருக்கும் அறிவு அதைப் பொருத்தமான விதத்தில் மக்கள் மன்றிற்குக் கொண்டு சேர்ப்பித்துப் புரியவைப்பதில் தோற்றுத்தான் போகின்றது. ஒருவனுக்கு ஒரு விடயம் புரியவில்லையென்றால் அது  அவன்மீதுள்ள பிரச்சினையல்ல மாறாக கருத்தைச் சொல்பவரின்பால் உள்ள பிரச்சினை. அவனுக்குப் புரியும்விதமாகச் சொல்லவில்லை என்றுதான் அர்த்தம். இந்த இடத்தில் இருக்கும் பிரச்சினையும் அப்படித்தான். முஸ்லிம் சமுதாயத்தில் நடைமுறையில் இருக்கும் பல்வேறு விடயதானங்களைக் கேள்விக்குட்படுத்த வெறும் உணச்சிபூர்வமான கோபம் அல்லது அக்கறை மட்டும் போதாது. அதை உரிய விதத்தில் சரியான தளத்தை நோக்கி நகர்த்துவதில்தான் வெற்றி இருக்கின்றது. இந்த இடத்தில் பொருத்தமான சொற்கள் வந்துவிழவில்லையென்றால் மேலும் மேலும் எதிர்மறைப் புரிதலே மேம்படும். அது பிரச்சினையைக் கூர்மையாக்கும். 

அடுத்தது ஒரு விடயத்தைக் கருத்தாகக் கூறி ஆதங்கப்படுதல் அதையே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாக முன்வைத்தல் ஆகிய இரண்டு விடயங்களுக்கும் பாரிய வித்தியாசம் இருக்கின்றது. 

உதாரணத்திற்கு ஹிஜாப் அல்லது பர்தா மற்றும் அபாயா பற்றிய சர்மிளாவின் கூற்றுக்கள். அதையும் இரண்டு விதமானப் பார்க்கலாம். சர்மிளா தனது நேர்காணல் ஒன்றில் முன் வைத்த கருத்துக்கள் கீழே

'என் மூன்று சகோதரிகளையும் சந்திக்க நேர்ந்தவர்கள் வாயடைத்து நின்றார்கள். தங்கைகள் இஸ்லாமியப் பெண்கள் என்று சொல்லப்படக்கூடியவர்களின் பிரதியுருவங்களாக இருந்தார்கள். பெண் குழந்தையின் சிறுபராயங்களை அனுபவிக்கத் தராதஇ சிறுமியை அவளது ஏழு வயது முதலே பெண்ணாகப் பார்க்கிற ஊரில் நான் வளர்ந்த விதம் முற்றிலும் வியப்பூட்டக்கூடியது. என்னை மாற்றவும் எனது சுதந்திரக் குணாதிசயங்களைக் கட்டுப்படுத்தவும் பெற்றோரும் உறவினரும் எடுத்த எந்த முயற்சியும் பயனளிக்கவில்லை. எனது சுதந்திரத்திற்காகக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டிருக்கிறேன். இருட்டறையில் பூட்டப்பட்டிருக்கிறேன். மரத்தில் கட்டிவைக்கப்பட்டிருக்கிறேன்

பன்னிரெண்டு வயதிலும் முட்டிக்கால்  தெரியும் சட்டையும் இரட்டை ஜடையுமாக சைக்கிளோட்டித் திரிந்த என்னைப் பார்த்து மொத்த ஊருமே வியப்பில் ஆழ்ந்து கிடந்தது

குர்ஆன் ஓதுவதற்கு கால்கள் வரையும் நீண்ட உடையும் பர்தாவும் அணிய முடியாதென்று அடம்பிடித்து முட்டிக்கால் சிவக்க அடிபட்டவள் 

பையனைப் போலவே நான் வளர்ந்தேன். ஏறாவூர் முற்றிலும் இஸ்லாமியச் சூழல் கொண்டது. பச்சிளம் பருவத்தில் குர்ஆன் மதரஸாவுக்கு கால்களை மறைக்கும்படியான நீண்ட உடைகளை அணிய முடியாதென்றதிலிருந்து பர்தா வரைக்கும் சர்ச்சைக்குரியவளாகவே வளர்ந்தேன். ஒழுக்கம்இ மதக் கட்டுப்பாடு என்ற வேலிகளால் சிறைப்பட்ட ஏறாவூரில் பையனைக்கூட பொத்திப் பொத்தியே வளர்த்தார்கள். ஒரு பையனுக்கு சைக்கிள் வாங்கித் தருவதற்கு அவன் பத்தாம் வகுப்புச் சித்தியடையும் வரைக்கும் காத்திருக்கச் செய்வதே பெரும்பாலான பெற்றோர்கள் செய்யக்கூடிய காரியமாக அப்போதைய காலம் இருந்தது. இந்த வேலிகளை நான் ஒருபோதும் பொருட்படுத்தியவள் கிடையாது.'

முதலாவது விடயம் : ஒரு கருத்தாகப் பார்த்தால் அதில் ஒன்றுமேயில்லை. சிறுபராயத்தில் சர்மிளா எப்படியிருந்தாள் என்பதைச் சொல்கின்றது. நான் சிறுபராயத்தில் இப்படித்தான் இருந்தேன் என்று சொல்லிவிட்டுச் செல்கின்றது. சாதாரணமாக ஒருவர் 
'கள்ளி கடுமையான ஆளாகத்தான் இருந்திருக்கின்றாள் பாருங்கோ' 
என்று சொல்வதோடு இது முடிந்துவிடும். இளமைக்காலக் குதூகலம் எஞ்சிநிற்கும் அவ்வளவுதான்.

இரண்டாவது விடயம் : தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாக இதை நோக்கினால் கட்டாயம் ஒவ்வொரு சொல்லையும் சத்திரசிகிச்சை செய்தாகவேண்டும். அப்படிச் செய்யும் போது பல முரண்பாடுகளைக் கண்டுகொள்ள முடியும். எதிர்மறையாகக் கேள்விக்குட்படுத்தி அசர வைக்க முடியும். ஒரு சட்டத்தரணியின் மூளையோடு சத்திரசிகிச்சை செய்யும் போது மேலும்மேலும் கருத்துக்குரியவர் பந்தாடப்பட வாய்ப்பிருக்கின்றது. பிரச்சினை அல்லது அதற்கான தீர்வு என்று வந்துவிட்டால் சத்திர சிகிச்சையைத் தவிர வேறு வழியில்லை. அப்படித்தான் உலக மக்கள் பழக்கப்பட்டிருக்கின்றார்கள். வாதப் பிரதி வாதங்களின் பின்னர்தான் முடிவுகள் எட்டப்பட்டிருக்கின்றன அதுதானே நியதி.

சர்மிளா சிறு வயது முதலே சுதந்திரத்துக்காகப் போராடி இருக்கின்றாள் அந்தப் பேபாராட்டத்தில் கடுiமாகத் தண்டிக்கப்பட்டிருக்கின்றாள், இருட்டறையில் அடைக்கப்பட்டிருக்கின்றாள் அவள் சொல்லவரும் சுதந்திரம் என்ன? என்ற கேள்விக்கான பதிலாக கீழ்வரும் விடங்களையே எவரும்முன்வைப்பர்.
* கால்கள் வரையும் நீண்ட உடையும் பர்தாவும் அணிய மறுத்தல்
* ஒழுக்கம், மதக் கட்டுப்பாடு என்ற வேலிகளால் சிறைப்பட்ட வாழ்வைத் தகர்த்தல்
* பையனைப் போலச் சுற்றித்திரிதல்

இந்த இடத்தில் சர்மிளாவின் கருத்துக்கள் பலருக்கும் கோபமூட்டவிளைகின்றன. அந்தக் கோபம் பின்வரும் முடிவை எடுக்கத் தூண்டும். ஏனெனில் அங்கு விழுந்துள்ள சொற்கள் அப்படித்தான் செய்தி சொல்லும். அதுசொல்லும் செய்தியைத்தான் பகுப்பாய்ந்து பார்க்க முடியும். புதிதாக விளக்கம் சொல்ல புதிய கோணத்தில் பார்க்க அங்கு ஒன்றுமே இல்லை. இத்தகைய எதிர்ப்பைக் கூர்மையாக்கிக் கொண்டே இருப்பதுதான் சர்மிளாவின் எதிர்பார்ப்பாக இருக்குமோ என்று பலரையும் மௌனியாக்கும் விடயம் இது.

குழந்தைப் பருவத்து நிகழ்வுகளாக எதிர்பார்ப்புகளாக மேலே சொன் இவைகள்தான்  சர்மிளா எதிர்பர்க்கும் சுதந்திரம் என்ற தளத்தில் இப்போதும் பிடிவாதமாக இருந்தால்  இந்த சமுகம் ஒரு போதும் அவளை அரவனைத்துச் செல்லத் தயாராக இராது. அவளுக்குள் புதைந்து கிடக்கும் ஆற்றலும் ஆளுமையும் அறிவும் சிந்தனையும் இந்தச் சமுகத்துக்குப் பயன்தரத் தேவையில்லை. அப்படியொரு நபர் நமக்கு நன்மை செய்யத் தேவையில்லை என்ற உறுதியான நிலையில் இருந்து இந்த மக்கள் விடுபடப்போவதில்லை. அப்படி விடுபடாவிட்டால் சர்மிளாவுக்கான எதிர்ப்பு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அந்த எதிர்ப்பையெல்லாம் கவணத்தில் கொள்ளாது புறந்தள்ளுபவள் என்றால் சர்மிளா புரட்ட நினைக்கும் மலையை ஒரு காலத்திலும் புரட்ட முடியாது. மலையும் அப்படியேதான் இருக்கும் சர்மிளாவும் போராடிக் கொண்டேதான் இருப்பாள் 

சர்மிளாவின் குழந்தைப்பருவ நிகழ்வுகளுக்கூடாக சர்மிளாவை விளங்கிக் கொள்ள முடியும் என்ற செய்தியைத்தான், எல்லோருக்குமாகச் சொள்கின்றாள் என்றால் அதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமேயில்லை. அவள் பற்றிய வாதங்களில் இருந்துதவிர்ந்து நேரத்தை வேறெதற்கும் பயன்படுத்தலாம். 

இதெல்லாம் அப்படியே இருக்க சர்மிளாவுக்குள் இருக்கும்  குழப்பத்தையும் தெளிவையும் பேசியாக வேண்டும். உம்மத் என்ற நாவலில் தொனிக்கும் கருத்துக்கள் மற்றும் வேறு சில பேட்டிகளில் தொனிக்கும் கருத்துக்கள் என்று ஒரு திறந்த கருத்தாடலுக்குள் நுளையும் போது அந்தக் குழப்பத்தை நான் விளங்கிக் கொண்ட விதம் பின் வருமாறு அமையும். 

தொடரும்...

Sunday, September 6, 2015

பெண்ணியச் சந்திப்பு – பகுதி 12 (இறுதிப் பகுதி).......................... ஊடறு + மலையகப் பெண்கள்

அவதான மற்றும் அனுபவக் குறிப்புத் தொடர்
-முஸ்டீன்-

நேரம் அதிகாலையைத் தொட்டுவிட்டது, இனிக் கொஞ்சம் தூங்கினால் நல்லது போன்று தோன்றியதும் கண்களை மூடியதுதான் தெரியும் அப்படியே தூக்கம் அரவணைத்துக் கொண்டது.  குட்டியன் மேலே ஏறிக் கூத்துப் போடத் தொடங்கியதும்தான் விடிந்து விட்டதே தெரிந்தது. ஆயினும் சூரியன் இன்னும் உதித்திருக்கவில்லை. இதமான குளிரில் இன்னும் கொஞ்சம் தூங்கினால் நன்றாகத்தானிருக்கும் ஆயினும் அது கை கூடக்கூடியதல்லவே. பக்கத்தில் ஷாமிலாவைக் காணவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் மிகவும் இயலாமையோடு சோர்ந்து போய் வந்தாள். இயற்கை அவளைச் சோதித்திருந்தது. இந்தச் சோதனைக்காலத்தில் கிள்ளிப் போட்ட தேயிலைக் கொழுந்து போல விரைவிலேயே வாடிவதங்கிப் போய்விடுவாள். சிலருக்கு அது பெரிய சமாச்சாரமே கிடையாது. ஆனால் சிலருக்கு மரண வேதனை. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறுவிதமான உடலியல் இயல்பு அதற்கொப்பதான் எல்லாமே அமையும். இறைவன் ஏன் அப்படியொரு தன்மையை பெண்களுக்கு அளித்தான் என்பதற்கு விஞ்ஞான பூர்வமாகவும் சரி சமய ரீதியாகவும் சரி எனக்கு இன்னும் சரியான தெளிவு கிடைக்கவேயில்லை. அல்குர்ஆன் மாதவிடாய் என்பது ஒரு வலி, வேதனை, கஸ்டமானது, அதிலிருந்து அவர்கள் சுத்தமாகும் வரை அவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள் என்று ஆலோசனை வழங்குகின்றது அதற்கப்பால் எந்த விளக்கத்தையும் காரணத்தையும் நமக்குச் சொல்லவில்லை.  ஆனாலும் அது இயல்பானது, இயற்கையானது வழமையானது மாற்ற முடியாதது எல்லோருக்கும் தெரிந்தது. அதைப் பற்றிக் கதைப்பதே ஒரு வெட்கங்கெட்ட நிகழ்வு போன்று பார்க்கும் சூழலும் இருக்கின்றது அது போல இது பற்றியெல்லாம் எழுதுவதுதான் பெண்ணியம் என்றும் இதைப்பற்றிக் கவிதைகளில் கொண்டுவந்தால் அவை பெண்ணியக் கவிதையென்றும் நினைத்துக் கொண்டு ஒரு கூட்டம் வாழும் சூழலும் இருக்கின்றது. எனது பார்வையில் இந்த இரு தரப்பாரும் சமமானவர்களே. இரண்டுமே மித மிஞ்சிய போக்கு. இயற்கையை இயற்கையாகவும் இயல்பாகவும் எடுத்துக் கொள்ளத் தெரியாதவர்கள். இதில் பேசுவதற்கு பெரிதாக ஒன்றுமில்லை  ஆனாலும் பெண்கள் மீது ஒரு பரிதாபம் என்னையறியாமலேயே வருவதைத் தவிர்க்க முடிவதில்லை. 

இன்றைய முழுநாள் நிகழ்வையும் எப்படிச் சமாளிக்கப் போகின்றாளோ என்ற எண்ணமே என்னில் மேலோங்கியிருந்தது.
யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த சின்னஞ்சிறுசுகளின் வடலியடைப்பு நிகழ்வு இனிமையான அனுபவத்தைத் தர அன்றைய நிகழ்வுக்கு நண்பர் மயூரன் உட்பட பலர் வந்திருந்தார்கள். நாச்சியாதீவு பர்வீனும் வருவதற்கு முயற்சிப்பதாகச் சொன்னார் ஆனால் அவருக்கு அச்சந்தர்ப்பம் கிடைக்கவில்லை போலும். கலை நிகழ்வை முடித்துவிட்டு மாணவர்கள் பகல் வேளையாகும் போது யாழ்ப்பாணம் செல்வதாக இருந்தது. அவர்களுடன் ஓவியாவும், நர்மதாவும் இணைந்து கொண்டார்கள். அவ்ரகளை அங்கு வரவேற்று உபசரிக்க சரோஜா சிவச்சந்திரன் அம்மா ஏற்பாடுகளைச் செய்திருந்தார். இலங்கையர்கள் பற்றிய தப்பான அபிப்பிராயத்தை சில கசப்பான புரிதல்கள் மூலம் விதைத்துக் கொள்ளக் கூடாது என்பதில் கூடுதல் கரிசனை கொண்டு செயற்பட்டமையை மறக்க முடியாது. சில வேளைகளில் கோபமேலீட்டால் நாம் என்ன பேசுகின்றோம் என்பது சிலருக்குத் தெரிவதில்லை. அது அவர்களின் பலவீனம், அந்தப் பலவீனத்துக்காக அவர்களை வெறுத்து ஒதுக்க முடியாது. ஆனால் பக்குவமாக எடுத்துச் சொல்லலாம் என்பது எனது அவதானமும் நிலைப்பாடும். ஒவ்வொருவரையும் அவரவர் இயல்புகளோடு அங்கீகரிப்பது அல்லது ஏற்றுக் கொள்வதுதானே உண்மையான அன்புக்கும் நட்புக்கும் சிறந்தது.

அத்தனை வேதனையையும் வலியையும் தாங்கிக்கொண்டு இன்றைய நிகழ்வை எப்படியாவது வெற்றிகரமாக முடித்துவிட வேண்டும் என்பதிலேயே ஷாமிலா குறியாக இருந்தாள். அரங்கிற்குச் சென்ற போது எந்த மாறுதலையும் அவள் சின்னதாகக் கூட முகத்தில் காட்டவுமில்லை வெளிப்படுத்தவுமில்லை. வெகு இயல்பாகவே இருப்பதாக நடித்தாள். அந்த நடிப்பு அற்புதமானது. இரண்டாம் நாள் நிகழ்வு அனைவருக்குமானது ஆயினும் உள்ளே அமர்ந்து பார்க்கும் பாக்கியத்தை எனது மகன் தட்டிப்பறித்துக் கொண்டான். ஆயினும் வெளியே இருந்து செவிமடுக்கும் சந்தர்ப்பத்தையாவது தந்தானே என்று ஆறுதல் கொள்ள வேண்டியிருந்தது. 

லறீனா அப்துல் ஹக்கின் இனிமையான பாடல் என்னை உள்ளே வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றது. பாடல் முடியும் வரை குட்டியனும் அமைதியாகத்தான் இருந்தான். அன்றுதான் தெரியும் லறீனாவுக்குப் பாடவும் வரும் என்ற விடயம். பின்னர் ஷாமிலாவின் பேச்சு. அவள் பேச ஆரம்பிக்கும் போதே மகன் சத்தம் போட்டான் பழையபடி வெளியில் நின்று செவிமடுக்கும் பணியை ஆரம்பித்தேன். எந்த்த தொய்வும் இல்லாமல் மழைபெய்து விட்டபின்னர் நீர்வீழ்ச்சியில் விழுந்து நொறுங்கிச் சிதறும் நீர்த்துளிகள் போல சொற்கள் தெளிவாக வந்து விழுந்து கொண்டிருந்தன. அவ்வளவு நேர்த்தியான முன்வைப்புக்காக ஷாமிலா இலங்கை வானொலிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவளைப் புடம்போட்ட தளம் அதுதான். அல்லது அந்தத் தளத்திற்குத்தான் அதிக பங்கிருக்கின்றது.

வெளியே யாழினி போட்டோ பிடித்துக் கொண்டிருந்தாள். மிகச் சுறுசுறுப்பாக
இயங்கிக் கொண்டிருக்கும் சின்னப் பெண். நிகழ்வின் பல்வேறு தேவைகளையும் தகவல்களையும் நிறைவாக அளிப்பதற்காக ஏற்பாட்டளர்களில் ஒரு நபர் என்ற எண்ணம் அவளை அப்படி இயங்கச் செய்திருக்க வேண்டும். இத்தனைபொறுப்புக்குள்ளும் போட்டோவும் எடுத்துக் கொள்கின்றாளே என்று நான்  கிண்டலடித்தபோது கூட மிக லாவகமாக புன்னகைத்து அதே தமாசுடன் பதில் தந்துவிட்டு இயல்பாகச் செயற்பட்டாள். இப்படி பலரை அங்கு அடையாளம் காண முடியுமாக இருந்தது. பலரை அன்றுதான் முதன்முதலாக நேரில் சந்திக்கின்றேன். இன்னும் சிலரை அன்றுதான் அறிமுகமாகிக் கொள்ளக் கிடைத்தது. எல்லோருடனும் நிறையக் கருத்துக்கள் பரிமாற வேண்டும் என்று நினைத்தாலும் அதற்கான வாய்ப்புகள் குறைவாகவே கிடைத்தது. நளினி அக்கா கம்பீரமாக எதையும் போட்டுடைக்கும் பண்பு கொண்டவர் என்பதை அன்றுதான் நேரில் அவதானிக்கக் கிடைத்தது. 

சில விடயங்களில் ஏற்படும் கருத்து முரண்பாடுகள் என்பது இல்பானது ஆனால் அதை எதிர்கொள்ளுதல் அல்லது எதிர்வாதத்தை முன்வைத்தல் என்பதில்தான் விடயமே தங்கியிருக்கின்றது. பல பெண்களுக்கு டக்கென்று உணர்ச்சிவசப்படும் அளவுக்கு, ஆளுமையை வளர்த்துக்கொள்ள முடியாமல் போனதால்தான் சென்சிட்டிவ் ஆன பல விடயங்கள் எதிர்மறை விளைவுகளைத் தந்துவிட்டுச் செல்கின்றன. 

ஷாமிலா வெளியே வந்த போது நிகழ்வுகளை உள்ளே சென்று பார்க்கலாமா என்று நினைக்கும் போதே அவள் 'கொஞ்சம் கஸ்டமாக இருக்கின்றது ரூமுக்குப் போனால் சற்று ஆறுதலாக இருக்கும்' என்றாள். நாம் பயணிக்க இருக்கும் ரயில்  வேறு நள்ளிரவை அன்மித்துத் தாமதமாகியே வரும். ஏனெனில் எமக்கான புகையிரதம் இரவு பதினொரு மணிக்குத்தான் ஹட்டன் நகரை வந்தடையும் அதுவரை  இருந்துதானாக வேண்டுமே என்று நினைக்கும் போது இன்னும் கொஞ்சம் யோசனையாக இருந்தது.  இரண்டு நாளும் முழுமையாக நிகழ்வில் கலந்து கொள்வதற்கு ஏற்றவிதத்தில்தான் ஆசனப்பதிவு ஒரு மாதத்துக்கு முன்னரே செய்யப்பட்டது ஆயினும் பதுளையில் இருந்து ஆறுமணிக்கே புறப்படும் எக்ஸ்பிரஸ் இவ்வளவு தாமதமாகும் என்ற விடயம் முன்னரே தெரியாமல் போய்விட்டது. இப்போது திடீரென்று ஏற்பட்ட இக்கட்டான நிலையில் எல்லாமே தடுமாற்றத்திற்குள்ளாகிவிட்டது. 

அடுத்து என்ன செய்வது என்ற யோசனைக்குத் தீர்வாக சரோஜா சிவச்சந்திரன் அம்மாதான் நல்லதொரு யோசனையை முன்வைத்தார். நள்ளிரவு வரைக் காத்திருந்து குளிரில் குழந்தையை அவஸ்தைக்குள்ளாக்குவதைவிட தங்களுடன் புறப்படுவது நல்லதாகப்படுவதாகச் சொன்னார். நிலைமையைப் பொறுத்து அவசர அவசரமாக எல்லோருக்கும் சொல்லிக் கொண்டு கிளம்பும் போது பலர் விடுபட்டுப் போனார்கள். ஆயினும் பின்னர் ஆறுதலாகக் கதைத்துக் கொள்ளலாம் என்ற திருப்தியுடன் கொழும்புக்குப் பயணப்பட்டோம். திட்டமிட்டபடி இரண்டாம்நாள் நிகழ்வில் முழுமையாகக் கலந்து கொள்ளக் கிடைக்கவில்லையே என்ற கவலை மனதில் குடிகொண்டது. ஆனாலும் தவிர்க்கவொனாத நிலையினை நினைத்து ஆறுதல்பட வேண்டியிருந்தது. பொதுவாக இப்போதுள்ள பலரைப் போல ஒரு நிகழ்வுக்கு வந்து தத்தமது உரைகளை முடித்துவிட்டு குட்பைய் சொல்லிவிட்டுச் செல்லும்  ரகமாக யாரும் புரிந்து கொள்ளக் கூடுமோ என்ற எண்ணம் ஒரு பக்கம் உதைத்துக் கொண்டிருந்தது. ஆயினும் அப்போதைய அவஸ்தையில் அது பெரிதாகத் தோற்றவில்லை. இருந்தாலும் வெளிப்படையாகச் சொல்லிவிட்டுக் கிளம்புவதைத்தான் சரியெனக் கண்டதால் ஒரு ஆறுதல்.

இந்தப் பெண்ணியச் சந்திப்பில் பெற்றுக் கொண்ட உறவுகள் ஒவ்வொருவர்க்கும் மிகவும் முக்கியமாதாகவும் பெறுமதியானதாகவும் அமையும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஏனெனில் அத்தகையதொரு உறவுப்பரிமாறலைத்தான் நான் அவதனித்தேன். அது ஒவ்வொருவர்க்கும் மத்தியில் புதுமையான அன்பினைக் கொண்டு கட்டிப்போட்டதையும் அவதானித்தேன். அதில் போலி இல்லை. வெறுமனே போலியாகச் சிரித்துவிட்டுக் கடந்து செல்லும், சமகால இலக்கிய ஜாம்பவான்களாகத் தம்மைக் கருதிக் கொள்ளும் சிலரைப் போல இல்லை என்றுமட்டும் உறுதியாகத் தெரிந்தது.

உள்ளூர் அதிதிகளை எப்படியும் சந்தித்துக் கொள்ளலாம். அதற்கு நிறைய வழிமுறைகள் இருக்கவே செய்கின்றன. னால் வெளிநாட்டு அதிதிகளைப் பொருத்தமட்டில் மீண்டும் சந்தித்தல் அவ்வளவு சாத்தியமானதல்ல. அவர்கள் புறப்படுவதற்கு முன்னர் கொழும்பில் எமது வீட்டில் மீண்டும் சந்திக்கலாம் என்ற ஏற்பாடுகளோடு பயணப்படும் போது எதையோ இழந்து செல்கின்ற எண்ணம் பரவிக் கொண்டிருந்தது.

அந்தச் சந்திப்பை அர்த்தமுள்ளதாக்க என்ன செய்யலாம் என்ற எண்ணம் எனக்குள் ஓடத் தொடங்கியது. 
அவர்கள் நிச்சயம் என்னிடம் சில கேள்விகள் கேட்பார்கள்.

அவர்களிடம் இருந்து வெளிப்படும் அக்கேள்விகளில் மிக முக்கியமானது இறுதி யுத்தம் பற்றியதாகவே இருக்கும். வரலாற்று நிகழ்வுகளோடு ஒப்பிட்டு ஆதாரங்களோடு ஒவ்வொரு சம்பவத்தையும் தெளிவுபடுத்தினால் மட்டுமே அதை அவர்கள் விளங்கிக் கொள்வார்கள். ஜீரணிக்கக் கஷ்டமான அல்லது இதற்கு முதல் கேள்விப்பட்டிராத சங்கதிகளைத்தான் நான் அவர்களுக்குச் சொல்லப்போகின்றேன். அந்த நினைவுகளோடு அவர்களின் உணர்வுகளைத்தான் இறுதியில் வாசிக்கவேண்டியிருக்கும். அப்போது மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடாத்திய பெண்கள் சந்திப்பின் பயனாய்க் கிடைத்த உறவுகளின் கனதி கட்டாயம் பதிவு செய்யப்படவேண்டியதொன்றாகவே தென்படும். 
அவர்களுக்கும் 
எனக்கும்.

-டொட் -


Monday, June 29, 2015

பெண்ணியச் சந்திப்பு – பகுதி 11............. ஊடறு + மலையகப் பெண்கள்

அவதான மற்றும் அனுபவக் குறிப்புத் தொடர்
-முஸ்டீன்-

ஷாமிலா வாசிக்கத் தொடங்கியபோதே நான் டைமரை ஒன் பண்ணி விட்டேன். முழுமையாக வாசித்து முடிக்கும் போது பதினெட்டு நிமிடங்கள் போய் இருந்தது. மொத்த நிமிடக் கணக்கைச் சொன்ன போது ஷாமிலா அலறியடித்துக் கொண்டு ஐயையோ அவங்க நமக்குத் தந்திருப்பது பதினைந்து நிமிடங்கள்தானே. ஒரு மாதத்துக்கு முதலே பதினைந்து நிமிடம் என்று அறிவுறுத்திய பின்னர் மூன்று நிமிடங்களை மேலதிகமாக எடுத்துக் கொள்வது எப்படி நியாயமாகும். என்று புலம்பிக் கொண்டிருக்கும் போதுதான்  அந்த ஐடியா தோன்றியது..

முன்கூட்டியே மூன்று நிமிடங்களை மேலதிகமாக எடுத்துக் கொள்வேன் என்று அறிவிப்புச் செய்து விட்டு கட்டுரையை வாசிக்கின்றேன். அப்போது பிரச்சினை இருக்காது. அல்லது இதைவிடக் கொஞ்சம் வேகமாக வாசித்தால் அவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித்துவிடலாம். என்ன செய்ய என்று சாமிலா கேட்கும் போது முதலாவது அம்சத்தைத் தெரிவு செய் என்று சொன்னேன். வேகமாக வாசிப்பது சிலருக்குக் கிரகிப்பது கஸ்டமாக இருக்கலாம் அதனால் இயல்பாக வாசிப்பது நல்லது அல்லது கட்டுரையில் தேவையற்றவை எனக் கருதும் விடயங்களை நீக்கிவிடலாம் என்றேன். மிக ரத்திணச் சுருக்கமாகத்தான் விடயதானங்களைச் சொல்லியிருக்கின்றேன் என்று ஷாமிலா சொன்ன போது தரப்பட்ட நேரத்துக்குள் தனது பேச்சை முடிக்க நினைக்கும் அந்தப் பண்பு பற்றிய எண்ணவோட்டமே என்னை மேவி நின்றது. 

பலருக்கும் வரையறுக்கப்பட்ட நேரம் குறித்து எந்தவிதமான பொறுப்புணர்வும் இருப்பதில்லை. எந்தவொரு நிகழ்வுக்கும் இத்தனை நிமிடங்கள் என்று நேர வரையறை பொதுவாக இருக்கும். பேச்சாளர்களுக்கு தலைப்புக் கொடுக்கும் போதே நேரத்தின் அளவையும் கொடுத்துவிடுவதன் நோக்கமே எப்பேர்ப்பட்ட பிரபஞ்சத்தின் அளவு தலைப்பாயினும் குறிப்பிட்ட நேரத்துக்குள் விடயத்தைச் சொல்லி முடிக்க வேண்டும் என்பதற்காகவே. அதைவிடுத்து தரப்பட்ட நேரத்துக்குள் தனது பேச்சை முடிக்க முடியாது போனால் அவரெல்லாம் என்ன பெரிய பேச்சாளராக இருந்தும் என்ன...!!

சிலருக்கு நேரத்தைப் பற்றிக் கவலையே கிடையாது. தாம் என்ன தயார்படுத்தினோமோ அதைச் சொல்லிவிட்டுத்தான் அடுத்த வேலை, உங்கள் நேரம் முடிந்துவிட்டது என்று எத்தனை துண்டுகள் அனுப்பினாலும் அதை அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை. அப்படிப்பட்டவர்களை எதிர்கொள்ள நேர்கையில்தான் மைக்கினுடைய சவுண்ட்டைக் கட் பண்ணி விடத் தோனும். சத்தம் இல்லாது வாயைச் சப்பிக் கொண்டிருந்தால் அவர்களாகவே போய் அமர்ந்து கொள்வார்கள். அப்படி சில இலக்கியக் கூட்டங்களில் நடந்துமிருக்கின்றது. இலக்கியவாதிகள் எழுத்தாளர்கள் மட்டுமல்ல பேராசியர்கள் கூட இந்த விடயத்தில் அரசியல் மேடைப் பேச்சாளர்கள்போல அவ்வப்போது சில இடங்களில் மாறிப் போவதும் உண்டு. நல்லவேளை பெண்கள் சந்திப்பில் அவ்வாறான துரதிஷ்டங்கள் நிகழும் வாய்ப்புகள் கருக்கொள்ளும் போதே தலைமைதாங்கும் நபர் அதைப் பக்குவமாகக் கையாண்டதாக ஷாமிலா குறிப்பிட்டபோதுதான் நேரம் குறித்த அவளது கவலையின் உள்ளார்ந்த அவதானத்தைப் புரிந்து கொள்ள முடிமாக இருந்தது. அந்தக் காது கடிச்சான் குஞ்சுகளோடு சாமிலாவை ஒரு முறை ஒப்பீடு செய்து பார்த்தேன், என்னையறியாமலேயே சிரித்துவிட்டேன். 

ம்ம் ஷாமிலா, ரெண்டொரு நிமிடம் முன்னப் பின்னே ஆகுவதில் தப்பில்லை. ரெண்டொரு நிமிடம்தான், அதுவே நாலஞ்சி நிமிசங்களாக இருந்தால் தப்புதான்.

றஞ்சி இந்தவிடயத்தில் அதிக கவணம் செலுத்தியிருப்பார் போல. நேரத்துக்குள் நிகழ்வை நிறைவு செய்யாவிட்டால் மறுநாள் அரங்கில் உரையாளர்களும் கதிரைகளும் மட்டும்தான் அரங்கில் இருக்க வேண்டி நேரலாம். 

எல்லோரும் தூங்கியிருந்தார்கள். நேரம் இரண்டு மணியையும் தாண்டியிருந்தது. இதமான குளிர் போர்வைக்குள் சுருண்ட குட்டியனை அசையாமல் கட்டிப்போட்டிருந்தது. முதல் நாள் நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு  அன்றே சிலர் கிளம்பியிருந்தார்கள். ஆயினும் துரதிஷ்டவசமாக அவர்களால் அன்றைய காலநிலையை வெற்றிகொள்ள முடியாமல்போகவே அவர்களும் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலேயே தங்குவதற்கு முடிவெடுத்திருந்தமை பாரியதோர் எதிர்பாராத நிருவாகச் சிக்கலைத் தோற்றுவித்திருந்ததையும் அதை வெற்றிகரமாக எதிர் கொள்வதற் காக றஞ்சி, சந்திரலேகா, மற்றும் கிங்ஸ்லி ஆகியோர் அத்தனை குழப்பங் களுக்குள்ளும் பம்பரமாக இயங்கிக் கொண்டிருந்ததையும், முகம் சுளிக்காமல் விருந்தினர்கள் திருப்தியுறும் வகையில் அவர்களுக்கான வசதிகளைச் செய்து கொடுப்பதற்காகக் பரிமாறிக் கொண்ட கருத்துக்களும் எனது காதிலும் விழுந்திருந்து. அப்போது அதன் கனதியை என்னால் உணர்வதற்கு வாய்ப்பிருக்கவில்லை. ஆனால் நித்திரை கொள்வதற்கு முன்னர் இந்நிகழ்வு மனத்திரையில் சிம்மாசனமிட்டு ரகளை பண்ணிக் கொண்டெ இருந்தது. 

இரவுக்கு ஒரு மகிமை இருக்கின்றது. பொதுவாக நித்திரைக்குச் செல்லும்போதுதான் இரவு தன் மகிமையை வெளிப்படுத்தும். அதாவது அன்றைய தினத்தில் வெகுவாக நம்மைப் பாதித்த சம்பத்தின் அல்லது பேச்சுக்களின் அல்லது நிகழ்வுகளின் சாரத்தை இரவு நமக்குள் தூவி விடும். அந்த நினைவலைகளில் பலர் மிதந்து மறைவார்கள், சிலரை நாம் மனதில் இருத்திப் பாராட்டுவோம், சிலரை வெறுத்து ஒதுக்கிவிடுவோம், சலருக்குச் சாபமும் கொடுப்போம் , சிலரை மட்டும் மனதார வாழத்துவோம். இரவு ஒருவனில் நிகழ்த்தும் சித்துவிளையாட்டு இது. றஞ்சி மற்றும் சந்திலேகா தோழர் கிங்ஸ்லி ஆகியோர் மீது மதிப்பும் மரியாதையும் அதிகரித்த மற்றுமோர் சந்தர்ப்பம் இது. எப்போதுமே இரவு தூங்கச் செல்லும் போது அன்றைய நிகழ்வுகள் குறித்து ஒரு முறை சுயவிசாரனை செய்து கொள்ளும்படி இஸ்லாமும் வலியுறுத்துவதால் எப்போதும் அதில் கூடுல் அக்கறை செலுத்துவேன். 

யாருடைய மனமேனும் நோகும்படி நான் நடந்து கொண்டேனா, இன்றைய பொழுதில் நான் பிரயோகித்த வார்த்தைகள் எத்தகையைவை, அவை யாருக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்குமா என்று மீட்டிப் பார்க்கத் தோன்றாத மனிதர்கள் தமது மனசாட்சியைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்று இந்தப் பெண்ணியச் சந்திப்புக்காக வந்து கலந்து கொண்டவர்களில் சிலரின் செயற்பாடுகள்தான் சற்றுக் கவலையை ஏற்படுத்தியிருந்தது. இப்படி ஒரு சுயவிசாரணையைச் செய்து கொள்ளும்போதே அவரவர்க்குத் தெரியும் அவரவர் விட்ட பிழைகள் அல்லது எல்லாமே. சரி தவறு உட்பட.

நிகழ்வுகள் வெற்றிபெறுதல் என்பதற்குப் பின்னால் எத்தனை பாரிய உழைப்பிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் அங்கு யாருமில்லை. ஏனெனில் எல்லோரும் ஏதோவொருவிதத்தில் ஏதாவதொரு நிகழ்வை ஏற்பாடு செய்து அதின் பின்னால் நின்று உழைத்தே இருப்பார்கள். ஆனாலும் சில பொழுதுகளில் பொதுப்புத்திக்கு அதெல்லாம் மறைபட்டுப் போவதுமுண்டு. யார் கையில் இதெல்லாம் உண்டு....

நேரம் அதிகாலையைத் தொட்டுவிட்டது, இனிக் கொஞ்சம் தூங்கினால் நல்லது போன்று தோன்றியது.

தொடரும்...

Sunday, June 21, 2015

பெண்ணியச் சந்திப்பு – பகுதி 10 ..............ஊடறு + மலையகப் பெண்கள்

அவதான மற்றும் அனுபவக் குறிப்புத் தொடர்
-முஸ்டீன்-

ஓவியா மற்றும் நர்மதாவின் யாழ்ப்பாண விஜயம் குறித்த அறிவிப்பு உண்டுபன்னிய சலசலப்புக்கு நான் ஒரு பார்வையாளனாக மட்டுமே இருக்க முடிந்தது. ஓவியாவைப் பொருத்தமட்டில் இலங்கைக்கான விஜயம் என்பதே யாழ்ப்பாணம் மற்றும் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளுக்குச் சென்று வருதல் என்பதாகவே இருந்தது.

யுத்த பூமி என்றால் அது வடக்குதான் என்ற மனோநிலையைத்தான்  பல வெளிநாட்டு அதிதிகளிடம் காண்கின்றேன் யுத்த பூமிக்கான விஜயம் என்றால் அது யாழ்ப்பாணத்திற்குப் போய் வரவேண்டும் என்பதாகவே இருக்கின்றது. ஆயினும் கிழக்கை யுத்தபூமியாகக் கருதி அங்கும் விஜயம் செய்யும் மனோநிலை எப்படி வெளிநாட்டு அதிதிகள் பலருக்கும் இல்லாமல் போனது என்பது எனக்கு இன்னும் புரியாத புதிர்தான். இறுதி யுத்தம் ஆரம்பித்ததே கிழக்கில் இருந்துதான்.

2006 ஜூலை இறுதியில்  மூதூரில் தொடங்கி 2008 மார்ச் வரை மிகப்பலமான யுத்தம் கிழக்கில் இடம்பெற்றது. கிழக்கில் 2008 ஏப்ரலில் மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றது அதன்பின்னர் வடக்கு யுத்தம் சூடுபிடித்தது. 2008 மே தொடக்கம் 2009 மே வரை ஒரு வருட காலம் வடக்கில் இறுதி யுத்தம் இடம்பெற்றது. அரச படைகளுக்கு  கிழக்கை முழுமையாக மீட்டெடுக்க எடுத்த காலப்பிரிவிலும் பார்க்க வடக்கை மீட்க எடுத்த காலப்பிரிவு குறுகியதாகும். ஆன போதும் யுத்தம் என்றால் முள்ளிவாய்க்கால் அவலம் மட்டுமே எல்லோர் மனதிலும் பதிந்துவிட்டமை கிழக்கு மக்கள் பட்ட துன்பங்களை அப்படியே ஒதுக்கிவிட்டது போலத் தோன்றுகின்றது. எப்படிப்போனாலும் எங்கு நடந்தாலும் யுத்தம் என்பதன் விளைவுகள் எப்போதும் ஒரே மாதிரித்தான் இருக்கும் நாடு, தேசம், இனம், மொழி, நிறம், சமயம் கடந்து அதன் விளைவுகள் ஒன்றிலிருந்து ஒன்று மாறாதது. மனித அவலம் மட்டுமே இறுதி அறுவடை. எஞ்சி நிற்பது கண்ணீர் மட்டுமே.

இனிவரும் காலங்களில் இறுதி யுத்தம் பற்றி அறிய ஆவல் உள்ளவர்கள் மூதூர், வெருகல், மாவிலாறு, கொக்கட்டிச் சோலை, வவுனதீவு, வாகரை, தொப்பிகல, தீவுச்சேனை போன்ற பகுதிகளுக்கும் சென்று வாருங்கள் என்ற விண்ணப்பத்தை மட்டுமே என்னால் முன்வைக்க முடியும் அப்போதுதான் அவலத்தின் மொத்த வடிவத்தையும் பார்க்க முடியும்.

ஊடறு மற்றும் மலையகப் பெண்கள் இணைந்து நடாத்தும் இந்தச் சந்திப்பிலும் வந்திருக்கும் அதிதிகள் யுத்தப்பகுதிகளுக்கான விஜயம் என்றால் யாழ் விஜயம் என்ற அடிப்படையிலேயே ஏற்கனவே நிரற்படுத்தப்பட்ட நிகழ்சி பற்றியும் உரையாடலில் அறியக் கிடைத்தது. ஆனால் இங்கு எனக்குள் பல கேள்விச் சிக்கலைத் தோற்றுவித்தது என்னவென்றால் ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளும் போது அந்நிகழ்வில் முழுமையாகக் கலந்து கொள்ளும் போதுதானே பிரச்சினைகள் குறித்த முழுமயான தெளிவு கிடைக்கும். அப்படியிருக்கும் போது இடையே அந்நிகழ்வில் இருந்து விலகி இன்னுமொரு நிகழ்ச்சி நிரல் போட்டுக் கொள்வது என்பது அந்நிகழ்வைப் புறக்கனிப்பது போன்றதுதானே இந்தக் கேள்வியை வெளிப்படையாகக் கேட்க எனக்குச் சங்கடமாக இருந்தது. இந்நிகழ்வுக்கென்று வந்துவிட்டு அதை அப்படியேபாதியில் விட்டுச் செல்லுதல் அவ்வளவு திருப்திகரமான ஒன்றாக எனக்குப்படவில்லை. நான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக இருந்திருந்தால் அதில் மிகவும் கறாராக இருந்திருப்பேன். இந்நிகழ்வுக்காகவே கொழும்பில் இருந்து வந்த எனது மனைவி அதில் முழுமையாகப் பங்கு பற்ற வேண்டும். மற்றவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதைத் தெளிவாக உள்வாங்கவும் வேண்டும் என்பதால்தான் ஆண்களுக்கு அனுமதியில்லாத முதல் நாளில் அவளையும் குட்டியனையும் கொஞ்ச நேரம் அங்கேயே விட்டுவிட்டு நான் வெளியே செல்ல முடிந்தது. இந்த இடத்தில் எந்தத்தீர்மானமும் எடுக்கக்கூடிய தீர்க்கமான நிலையில் உள்ள நபர் அல்ல நான். எல்லாத் தரப்பையும் சமநிலையில் பேணி அனைவரையும் ஏதோவோர் விதத்தில் திருப்திப்படுத்தும் வண்ணம் செயற்பட வேண்டிய அவசியம் இருந்தது. அதைப் புதிய மாதவி மிகத் தெளிவாக வெளிப்படையாக வெளிப்படுத்தினார்.

'எனக்கு ஓவியாவும் முக்கியம் ரஞ்சியும் முக்கியம், அந்த அடிப்படையில் நியாயத்தை மட்டும் என்னால் உள்வாங்க முடிகின்றது யாருக்கும் பாதிப்பில்லாமல் முடிவெடுக்க வேண்டியது நீங்கள்தான்'
ஆளையாள் குற்றம் சொல்லி அந்த இடத்தில் எந்தப் பிரயோசனமும் இருக்கப் போவதில்லை என்பதால் என்னால் முடிந்த உதவி அல்லது பங்களிப்பு என்ன என்பதை மட்டும் நான் வெளிப்படுத்தினேன். போக்குவரத்தில் எனது அனுபவத்தைப் பின்னணியாகக் கொண்டு யதார்த்தத்தை விளங்கப்படுத்தினேன். அந்த இடத்தில் வடக்கிற்கான விஜயம் என்பதன் மீது ஓவியா கொண்டிருந்த உறுதியை என்னால் உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. அதன் அவசியத்தை என்னால் மிகத் தெளிவாக உணரவும் முடிந்தது. கொட்டகலயில் இருந்து யாழ்ப்பாணத்திற்குப் பயணப்படுதல் என்பது அவ்வளவு எளிய போக்குவரத்து வசதிகளைக் கொண்ட பொறிமுறை கிடையாது. கொழும்பில் இருந்து என்றால் நினைத்தவுடன் பயணப்படலாம் அது ஒரு விசயமே கிடையாது. அவ்வளவு எளிது.

இந்த இடத்தில் புரிதல் மற்றும் ஒழுங்கு படுத்தல் பிரச்சினை இருந்தது போல, நட்பும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டே இருந்தது. இப்படி ஆயிரம் பிரச்சினைகள் இதைவிட வீரியமிக்கதாக வந்தாலும் அவர்களுக்கிடையில் ஒரு போதும் பிரிவு வரப்போவதில்லை. அப்படியொரு பிரிவுக்கு வித்திடும் பலம் அப்பிரச்சினைகளுக்குக் கிடையாது. அவ்வளவு பலமானதாக தன்னை நிரூபித்திருந்தது அவர்களின் நட்பு. கோபம் கூட செல்லமாகிப் போகும் நீண்ட நாட்களுக்குப் பின்னர் அவர்கள் மீண்டும் சந்தித்துக் கொள்ளும் போது.

இந்த முரண்களையெல்லாம் உள்வாங்கியபடி அன்றைய இரவு மௌனமாகக் கரைந்து கொண்டிருக்கும் போதுதான் எனது அறைக்குள் நான் நுளைந்தேன். அங்கே குட்டியன் அப்போதுதான் உறங்கிப் போய் இருந்தான். ஷாமிலாவுக்கு தனது உரையை வாசித்துப் பார்க்க அவகாசமும் கிடைத்திருந்தது.
ஷாமிலா வாசிக்கத் தொடங்கியபோதே நான் டைமரை ஒன் பண்ணி விட்டேன். முழுமையாக வாசித்து முடிக்கும் போது பதினெட்டு நிமிடங்கள் போய் இருந்தது. மொத்த நிமிடக் கணக்கைச் சொன்ன போது ஷாமிலா அலறியடித்துக் கொண்டு ஐயையோ அவங்க நமக்குத் தந்திருப்பது பதினைந்து நிமிடங்கள்தானே. ஒரு மாதத்துக்கு முதலே பதினைந்து நிமிடம் என்று அறிவுறுத்திய பின்னர் மூன்று நிமிடங்களை மேலதிகமாக எடுத்துக் கொள்வது எப்படி நியாயமாகும். என்று புலம்பிக் கொண்டிருக்கும் போதுதான்  அந்த ஐடியா தோன்றியது..

தொடரும்...

Tuesday, June 16, 2015

பெண்ணியச் சந்திப்பு – பகுதி 09 ................. ஊடறு + மலையகப் பெண்கள்


அவதான மற்றும் அனுபவக் குறிப்புத் தொடர்
-முஸ்டீன்-

மாலையான போது ஓவியா, நர்மதா,ரஜிணி உள்ளிட்டவர்கள் வேனில் எனக்காகக் காத்திருந்தார்கள். தோழர் கிங்ஸ்லிதான் வாகன ஏற்பாடுகளைச் செய்திருந்தார் என்ற படியால் மலையகத்து வாகனச் சாரதிகளிடம் ஒன்றுக்குப் பத்துமுறை கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளும் வாடகைப்பணம் தொடர்பில் நான் எதுவும் பேசவில்லை. மேல்கொத்மலைத் திட்டம், தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டு வசதிகள் மற்றும் லயன் வீடுகள் உட்பட அவர்களின் வாழ்க்கை மேம்பாடு குறித்தெல்லாம் பேசிக்கொண்டே டெவோன் நீர்வீழ்ச்சியை அடைந்தோம். பார்வையை அவ்வளவாக அது ஈர்க்கவில்லை. மனதைக் கிரங்கடிக்கும் அழகும் அங்கில்லை ஆயினும் ஒரு நீர் வீழ்ச்சி மெல்லிய கோடு போல இருக்கின்றது. சில வேளை அதை மிக அருகாகச் சென்று அதன் சாரலில் நனையுமளவுக்கேனும் ஏதாவது வசதி வாய்ப்புக்கள் செய்யப்பட்டிருப்பின் அந்த இன்பமே தனிதான். மனதுக்கு நெருக்கமானதொன்றாக அதை உணரச் செய்ய அரசுக்கு அக்கறையில்லை போலும்.

இயற்கை அழகும் பசுமையும் எப்போதும் இறுகிய மனதைச் சற்றுத் தளர்த்தி விடுவதில் வெற்றிபெறக் கூடியவை. மலையகத்தில் தாரளாமாக அந்த அழகு கொட்டிக் கிடக்கின்றது. ஆனால் எனக்கு ஆச்சரியமான விடயம் இந்த அழகும் பசுமையும் ஏன் இங்குள்ள சாரதிகளின் மனதினைத் தளர்த்தி கொஞ்சமேனும் நியாயத்தையும் கருனையையும் விதைக்கவில்லை என்பதுதான். கொஞ்ச தூரம் அப்படியே சுற்றிவிட்டு வந்திறங்க சாரதி இரெண்டாயிரத்து ஐந்நூறு என்று ஒற்றைக்காலில் நின்றான். இந்தப் பிரச்சினை எழும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் கேட்ட தொகை மிகவும் அநியாயமானது. அதறற்காக அவனுடன் நான் சண்டை போட முடியாது. நர்மதாவும் ஓவியாவும் அதை எதிர்பார்க்கவில்லை அதிர்ந்து போனார்கள். 

டொலரில் கணக்குப் பார்த்து சிறிய தொகைதான் என்று பணத்தை அள்ளி இறைத்து இவர்களைக் கெடுத்து வைத்திருப்பது வெள்ளைக்காரன்தான். மிகப் பெரிய ஏமாளிகள் என்றால் அது வெள்ளைக்காரர்களாகத்தான் இருக்கும். கேட்கும் தொகையைக் கொடுத்துவிட்டு நடைபோட்டுக் கொண்டே இருப்பான். எனக்கு ஆசை இந்த வாகனச் சாரதிகள் எல்லாம் சைனாக் காரனிடம் மாட்டிக் கொள்ள வேண்டும் என்பதுதான். இப்போது நாங்கள் போய் வந்த பயணத்திற்கு ஐநூறு ரூபாய்க்கு மேல் அம்பது சதமும் கொடுத்திருக்க மாட்டான். தெரியாத பாசை அவனுடன் மல்லுக்கட்ட இவர்களால் முடியாது. கொழும்பு பெட்டாஹ் மார்க்கட்டில் சைனாக்காரன் பன்னும் அட்டகாசங்களைக் கண்டுகண்டு சிரித்தே அலுத்துவிட்டது. 

ஒரு அக்கப்போரை முடித்து  அதிருப்தியுடன் ரெண்டாயிரம் ரூபாய் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. மீட்டர் டெக்சி சிஸ்டம் வந்தால் மட்டுமே இப்படிப்பட்ட ஆட்களுக்கு பாடம் புகட்ட முடியும். எரிபொருட்களின் விலையை அரசு எவ்வளவு குறைத்தாலும் அதன பயனை மக்கள் அனுபவிக்கக் கிடைப்பதில்லை இப்படிப்பட்ட நபர்களால்தான். மலையக மக்கள் கொண்டிருக்கும் அன்பிலும் பற்றிலும் ஓரளவு தாக்கம் செலுத்தும் வகையில் இந்தச் சாரதிகள் நடந்துகொள்வது மிகவும் வேதனையானது. வாழ்க்கைக் கஷ்டம் என்பதற்காக  கிடைக்கும் சந்தர்ப்பத்தில் மொத்தமாகப் பிடுங்கிக் கொள்ள நினைக்கும் மனோநிலை மிகவும் அபாயகரமானது. இப்படிப்பட்ட குணமுள்ளவர்கள் அரசியல் வாதியானால்தான் மக்களுக்குச் சாபக்கேடு ஆரம்பிக்கின்றது. அதைத்தான் மலையக அரசியல்வாதிகள் இன்றுவரையும் நிருபிக்கின்றார்கள். 

எல்லோரும் இரவுணக்காகச் சென்று கொண்டிருந்தார்கள். இந்திய விருந்தாளிகளுக்கு இடியப்பம் தேடிக் களைத்துப் போனோம். கொழும்பில் எத்தனை மனியானாலும் எப்பொதும் எல்லாம் கிடைக்கும். ஆனால் இங்கு அப்படியில்லை. எல்லாம் நேரத்திற்குத்தான். அடுத்தது உணவு முறைகளும் பெரிதும் மாற்றமானது. ஹோட்டல்களை வைத்துத்தான் அந்த முடிவுக்கு வந்தேன். அங்குள்ள மெனு அதைப் பறைசாற்றியது.

சாமிலாவைக் குட்டியன் வதைத்து எடுத்திருப்பான். வரவர அவனது எடை அதிகரித்துக் கொண்டே செல்வதால் அவனைத் தூக்கிச் சுமப்பது அவளுக்குச் சிரமமானது. சரோஜா அம்மாவுடனும் பாரதியுடனும் அவர்கள் வெளியே சென்றிருப்பது அந்தச் சிரமத்தை ஓரளவுக்குக் குறைத்துவிடும். 

முதல் நாள் நிகழ்வுகள் முழுமையாக நிறைவு பெற்றிருந்தது. சந்திரலேகாவின் முகத்திலும் ரஞ்சியின் முகத்திலும் தெரிந்த திருப்தி நிகழ்வு வெற்றிகரமானது என்று எடுத்துக்கொள்ள வைத்தது. இரவுணவுக்குப் பின்னர் எல்லோரும் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றோம். அன்றைய நிகழ்வுகள் குறித்தும் அதன் போக்குகள் குறித்தும் அலசிக் கொண்டார்கள் நான் ஒரு பார்வையாளனாக அவ்விடத்தில் அவர்களின் பேச்சையே அவதானித்துக் கொண்டிருந்தேன். அதற்கிடையில் குட்டியன் வந்து அட்டகாசம் பண்ணத் தொடங்கினான். அவன் எல்லோரிடத்தும் தாவிக் கொண்டிருந்தான். றஞ்சி சுவிஸ் சொக்கலட்டுகளும் இன்னும் சில இனிப்புகளும் கொண்டு வந்தார். குட்டியனுக்கு அதிலெல்லாம் பெரிதாக ஈர்ப்பு கிடையாது ஆனால் நான் லேசுமாசான ஆள் கிடையாது. சொக்கலட் என்றால் அப்படியொரு பிரியம். அது போலதான் இனிப்புப் பண்டங்கள். 

குட்டியனுக்கான சொக்கலட்டுகளை றஞ்சி அக்கா என்னிடம் பொறுப்பளிக்கும் சாமிலா விநோதமகப் பார்த்துச் சிரித்துக் கொண்டாள். பூனையிடம் பொரித்த மீனைப் பகிர்தளிக்கக் கொடுப்பது போன்றது அந்நிகழ்வு என்பதை றஞ்சி அறிந்திருக்க வாய்ப்பில்லை. எல்லாம் சிரிப்போடும் கலகலப்போடும் மாறிய போதுதான் நிலைமையை மாற்றிவிட்டது ஓவியா மற்றும் நர்மதாவின் யாழ்ப்பாண விஜயம் குறித்த அறிவிப்பு......

தொடரும்...

Thursday, June 11, 2015

ஸர்மிளா ஸெய்யித் புரட்ட நினைக்கும் மலை - 03

- முஸ்டீன் - 

தென்மாகான சபையில் பாலியல் தொழிலாளர்களுக்கு சட்ட அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்று கோரி ஒரு பிரேரனையை ஒரு சிங்கள மாகாண சபை உறுப்பினர் முன்வைக்கின்றார் அப்பிரேரனை குறித்து பலரிடமும் பீபீசி கருத்துக்களைப் பெற முயன்றது. அதிகமானவர்கள் அதை மறுத்துவிட்டதாக அறியக் கிடைக்கின்றது. அப்படியிருக்கும் போதுதான் அப்பிரேரணை குறித்த தனது கருத்துக்களை சர்மிளா செய்யித் பீபீசியிடம் முன்வைக்கின்றார். அப்பேட்டியை முழுமயாக விடிவெள்ளி பத்திரிகை வெளியிட்டிருந்தது. அதைத் திரும்பத் திரும்ப பல தடவைகளில் வாசித்து வௌ;வேறு கோணங்களில் விளங்க முயற்சித்தன் படி எனக்குத் தோன்றியது ஒன்றுதான்.

பீபீசியின் கேள்விக்கு சர்மிளா இப்படி பதில் அளிக்கத் தொடங்கியிருந்தால் இன்று எந்தப் பிரச்சினையும்வந்திருக்காது. 'இஸ்லாம் விபச்சாரத்தை முற்றாகத் தடை செய்திருக்கின்றது. அதை நெருங்கவும் வேண்டாம் என்று சொல்கின்றது. அந்த வகையில் ஒரு முஸ்லிம் பெண்ணாக நான் இது குறித்து கருத்துரைப்பதை தவிர்ப்பதுதான் சரி. ஆனாலும் ஒரு சமூகவியல் செயற்பாட்டாளராக நோக்கும்போது குறித்த மாகாண சபை உறுப்பினரின் பிரேரணை...' 

இந்தத் தொடக்கத்தில் விட்ட பிழை இறுதியில் சர்மிளா விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கவேண்டும் என்று குரல் கொடுக்கின்றார் என்று ஆகிப் போனது. ஒரு மயிரிழையில் எல்லாம் மாறிப்போனது. சமுகத்தில் சிலர்  அவசரப்பட்டு எடுத்த சில தீர்மானங்கள் சில முட்டாள்கள் நடந்து கொண்ட விதம் எல்லாம் இந்தப் பிரச்சினையை உடன்பாட்டு ரீதியில் அல்லாமல் முரண்பாட்டு ரீதியிலேயே பிடிவாதத்துடன் எதிர்கொள்ளும்படி சர்மிளாவைத் தூண்டிற்று. 

அடுத்த நாள் பீபீசியில் சர்மிளா உரத்துச் சொன்ன எந்த நியாயப்படுத்தல்களும் மக்களின் செவிகளில் விழவே இல்லை. இந்தப் பிரச்சினையில் சர்மிளா கொண்டிருந்த பிடிவாதம்தான் தொடர்ந்தும் சர்ச்சையைக் கூர்மைப்படுத்தும் நிலைக்குக் கொண்டு சென்றது என்பது ஒரு பக்கம், உட்சாக மடையர்களின் தலைகால் புரியாத எதிர்ப்பு சமமான மறுபக்கம் என்பது எனது அவதானம். 

இதை விட மிகவும் சர்சைக்குரிய கருத்துக்களை அதுவும்  இஸ்லாமிய அடிப்படைகளையே புரட்டிப் போடும் அளவுக்குச் கண்டனத்திற்குரிய கருத்துக்களைக் கொண்டு கவிதை எழுதியவர்தான்  சாய்ந்தமருதைச் சேர்ந்த இஸ்ஸத் ரிஹானா எனப்படும் அனார். லெஸ்பியன் முறை பாலுறவை ஆதரித்து எழுதியவர், கணவனை விட்டுவிட்டு அடுத்தவன் மீது ஆசைப்படுவதில் தப்பில்லை என்று பகிரங்கமாக எழுதியவர். (இவரின் கணவர் இன்னொரு எழுத்தாளரின் மனைவியை தனது படுக்கையறைக்கு வருமாறு அழைத்த விவகாரத்தில் அவருக்கு எதிராக வத்தளை பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாடு இன்னும் நிலுவையில் இருக்கின்றது) அனார் விபச்சாரத்தையும் தாண்டி இஸ்லாத்தின் ஆன்மாவில் ஓங்கிக் குத்தியவர். இறைவனையே தான் தண்டிக்க வேண்டும் என்று பகிரங்கமாக மேடையில் பேசியவர் உதாரணத்திற்கு

'...எல்லாவிதக் கட்டாயத் தினிப்புக்களில் இருந்தும் வெளியேற விரும்பினேன். யாரையேனும் இதற்காக தண்டிக்க வேண்டுமென நினைத்தேன், குறைந்தபட்சமாகக் கடவுளையேனும்...'
(அனார் - இலங்கை - தாயகம் கடந்த தமிழ் - தொகுப்பு மாலன் - பக் 160)

இப்பேர்ப்பட்ட கருத்துக்களையே மூக்கு மசிறு அளவுக்கேனும் கணக்கெடுக்காத  முஸ்லிம் மக்கள் கூட்டம் சர்மிளாவின் மீது ஏன் இந்தக் காட்டுப் பாச்சல் பாய்கின்றது என்று ஒரு கணம் நான் சிந்தித்துத்துப் பார்த்தேன். அந்த அரசியலின் பின்புலம் இன்னும் எனக்குச் சரியாகப் புரியவில்லை. இந்த இடத்தில் எனது மக்களை நோக்கித்தான் என்னால் கேள்விகளைத் தொடுக்க முடியும். எனது மக்களின் வழிகாட்டிகள் என்று தொப்பியும் தாடியுமாக மிம்பர் மேடைகளில்  முழங்கும் ஆலிம் சாக்களை நோக்கித்தான் எனது சாட்டையைத் திருப்ப முடியும். சமயத்துக்கு ஒவ்வாத ஒரு கருத்துக்காகப் போரட்டக் களத்தில் குதிப்பதென்றால் அப்படி ஒவ்வாத எல்லாக் கருத்துக்களுக்காகவும் அது நடைபெற்று இருக்க வேண்டும். இனால் இங்கு அப்படியொன்று நடைபெறவில்லை. அப்படியானால் அதற்குப் பின்னால் இருப்பது என்ன?  எனது சிறு புத்திக்கு இப்படிப் படுகின்றுது . 

அவர்களின் அறியாமையும் தேடலின்மையும் சோடாக் கேஸ் போன்று சீறிப் பாய்ந்து சற்று நேரத்தில் அடங்கிப் போகும் தன்மையும், சீசன் போராளிகளாய் மாறி தாமும் இன்னும் உயிருடன் இருக்கின்றோம் என்பதைப் பறைசாற்றிவிட்டு ஓய்ந்து போகும் வெறும் உணர்ச்சி வசப்படும் உயிருள்ள பிணங்களாயும் அவர்கள் இருப்பதுதான். இந்தப் பிணங்களையே கொதித்தெழச் செய்ததில் சர்மிளாவின் பிடிவாதத்திற்கு பெரும் பங்கு இருக்கின்றது. 

ஏன் சர்மிளா இந்த விடயத்தில் அவ்வளவு பிடிவாதமாக இருந்தாள்? என்ற கேள்விக்கு கட்டாயம் பதில்  தேடியாக வேண்டும். முதல் நாள் பேட்டியில் இருந்த வேகம் பிரச்சினையாகிவிட்டபின்னர் மறுநாள் தன்னை நியாயப்படுத்துவதிலும் சரணடையாமல் தப்பித்துக் கொள்வதிலும் உயர்ந்த பட்ச  கரிசனை கலந்திருப்பதாய் வெளிப்பட்டது ஆச்சரியமானதல்ல. நிலைமையைப் பூதாகரப்படுத்தியது பேட்டியில் தொனித்த கருத்துக்கள்  மட்டுமல்ல சர்மிளாவின் பிடிவாதமும்தான்.

இந்நிகழ்வுக்குச் சில நாட்களுக்கு முன்னர்தான் சிறகு முளைத்த பெண் என்ற கவிதைத் தொகுதி வெளிவருகின்றது. அத்தொகுதியில் உள்ள இரண்டு கவிதைகள் வெளியீட்டின் போது திரையிடப்பட்டன அவற்றை நானே காட்சி வடிவமாகச் செய்து கொடுத்துமிருந்தேன். வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல சங்கடங்களும் எதிர்பார்ப்புகளும் ஆசைகளும் கனவுகளும் கவிதைகளாகி இருப்பதையும் அவதானிக்கலாம். கiவிதைகளில் சில இடங்களில் தொனிக்கும் விடயதானங்களில் எனக்கு முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அவைகுறித்து நோக்குவதல்ல இங்குள்ள பிரதான விடயம். பொதுவாக பெண்ணுடலை முன்னிறுத்திய கவிதைகளை விட்டும் தூரமாக நிற்கவே நான் விரும்புவேன். எனது வாழ்வில் நேர்ந்த ஒNயொரு அவலம் ஒரு பதிலடிக்காக குறிப்பிட்ட வகையறா கவிதைகள் அடங்கிய சில தொகுதிகளை வாசிக்கக் கிடைத்ததுதான். ஆனால் சர்மிளாவின் கவிதைகளில் அந்தளவுக்கு அஜீரணம் இல்லை. சில இடங்களில் மட்டும் நெருடல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லைதான். சில விடயங்களை எழுதுபவரின் தனிப்பட்ட வாழ்வோடு சம்பந்தப்படுத்தி யோசிக்கும் மனித மூளை நிறைய இடங்களில் தடமாறி விழத்தான் செய்யும். இதுவா? அதுவா? அப்படியிருக்குமோ அல்லது இப்படியிருக்குமோ என்று தனது புத்திக்கொப்ப ஏதேனுமொரு பிடிமானத்தைத் தேடி ஓடும் இந்த இயல்புக்கு அவரேதான் பொறுப்பாக முடியும். 

இந்த மனித இயல்பைக் கடந்து ஒருவரின் எழுத்துலகில் நகர்வது என்பது எந்தளவுக்குச் சாத்தியம் என்று எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் ஒருவர் எழுதுவது எல்லாமே அவரது வாழ்வில் நடந்ததாக அல்லது அவரே அதற்குரியவராகக் கருதும் ஒரு சின்ன இடைவெளியில் ஏன் பிறரின் வாழ்வில் நேர்ந்ததை தனக்குப் போல எழுதியிருக்கக் கூடாது என்று எண்ணத் தோன்றுவதில் இருந்து தூரச் செல்வதில்தான் ஒருவரின் எழுத்தில் தொனிக்கம் பல விடயங்களை உள்வாங்குவதில் ஒரு நியாயத் தன்மையைத் தோற்றுவிக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. மற்றவர்களுக்கு இதில் வேறு கருத்துக்கள் இருக்கலாம்.

சர்மிளாவின் எழுத்துக்கள்  குறித்து அடுத்த பகுதியில் பார்க்கலாம். எந்தத்தனிப்பட்ட நிலைப்பாடுகளுக்கும் அப்பால் நின்று அவற்றைப் பார்க்க முயல்கின்றேன்.

தனிமனித ஒழுக்கம் என்பதில் இருந்து எழுத்துப் பிறல்தல் மட்டுமல்ல வார்த்தையும் நடத்தையும்தான்...
தொடரும்...