Sunday, December 7, 2014

ஆக்காட்டி முதல் இதழ் - வாசிப்பின் பின்னரான குறிப்பு

ஆக்காட்டி முதல் இதழ்
வாசிப்பின் பின்னரான குறிப்பு
-முஸ்டீன்-

தபால் கிடைத்தது. ஐரோப்பாவில் இருந்து வரத் தாமதிக்காத ஆக்காட்டி பக்கத்து வீட்டாரிடமிருந்து கிடைக்கத் தாமதித்துப் போனதன் விளைவு இக்குறிப்பும் கொஞ்சம் தாமதமாயிற்று. முதலில் இதழை அனுப்பி வைத்தமைக்கு நன்றி.

முதல் இதழ் என்ற மனோநிலையில் இருந்து விடுபட்டு அலாதியாக வாசிக்கும்படி இருந்தது சிறப்பம்சம். ஏகப்பட்ட எழுத்துப்பிழைகளையும்விட்டு, நேர்த்தியில்லாத வடிவமைப்பில் சகிக்கவொனாத கோலத்தில் இதழைத் தந்துவிட்டு அக்குறைகளைச் சொல்லும் போது, இது எமது முதல் முயற்சி, அவசரத்தில் செய்தது அடுத்த இதழில் திருத்திக் கொள்கின்றோம் என்று நியாயம் கற்பிக்கும் அவசியமே ஆக்காட்டியின் முதல் இதழுக்கு இருக்கவில்லை. அது ரொம்பவும் ஆறுதல்.

இரண்டு கட்டுரைகளும் இரண்டு மதிப்புரைகளும் கவனம் பெறத்தக்கன. பாலுமகேந்திரா பற்றிய புரிதலை யமுனா ராஜேந்திரன் எழுத்துக்களுக்கூடாகவே அறிந்திருந்த எனக்கு உமாஜீயின் கட்டுரை மற்றுமொருவிதமான சுவை. பாலுமகேந்திராவின் படங்களை மீண்டும் ஒரு புதிய ரசனையோடு பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தை உமாஜீ விதைத்துவிட்டுள்ளமை அவரது எழுத்துக்களுக்குக் கிடைத்த வெற்றிதான். எனக்கு மட்டுமல்ல பலருக்கும் அவ்விதமான உணர்வு ஏற்பட்டிருக்கும் என்றே நம்புகின்றேன். அது போலவே ஆரன் அட்டபேக் பற்றிய செய்தி. முதன்முறையாக இது குறித்து அறிகின்றேன். மாதமொரு கடிதம் நானும் அனுப்பினால் என்ன என்றுதான் முகவரியைப் பார்த்துவிட்டு நான் சிந்தித்த விடயம். 

சிறைச்சாலை அனுபவம் எனக்கும் இருக்கின்றது. 2012ல் இருந்து நான் பதிப்பிக்கும் எல்லாம் சிறையில் இருந்து எழுதப்பட்டவைதான். வெளிவந்த மௌனப்போரும் புன்னகை ஆயுதமும் என்ற கவிதை நூலும், ஹராங்குட்டி சிறுகதைத் தொகுதியும் இந்த மாதம் வெளிவரவிருக்கின்ற இரத்தக்குளியல் (நாவல்) பிணந்தின்னிகள் (சிறுகதைகள்) வேப்பம்பழச் சுவையும் புழுதிவாசனையும் (கவிதைகள்) ஆகியனவும் கூட சிறையில் இருந்த போது எழுதியவைகள்தாம். கவிஞர் ஆரம் அட்டபேக் சிறையிலும் அமைதியாக இருக்கவில்லை எதற்கும் வளைந்து கொடுக்காத உறுதியுடன் இருக்கிறார் என்ற வரிகளைப் படித்தபோது நான் ஆச்சரியப்படவில்லை, தீரமிக்க எழுத்தாளன் அப்படித்தான் இருப்பான் அவனை வலுவான அதிகாரத்தால் அசைக்க முடியாது. என்பது முற்றிலும் உண்மை. அவரின் விடுதலைக்காக நான் பிரார்த்திக்கின்றேன் அதேவேளை என்னால் முடிந்த முயற்சிகளையும் செய்வேன். கட்டுரை எழுதிய நண்பர் சேனன் கவிஞர் ஆரம் அட்டபேக்கின் மகனைத் தொடர்புகொள்ளக் கூடிய ஒரு வழிமுறையை எனக்கு ஈமெய்ல் பண்ணுமாறு வேண்டிக் கொள்கின்றேன். (simproduction2002@gmail.com )

என்.கே. ரகுநாதனின் ஒரு பனஞ்சோலைக்கிராமத்தின் எழுச்சி என்ற நூலை தேடிப்படிக்கும்படி செய்திருப்பது அந்நூலுக்கான திறனாய்வுக் குறிப்புதான். சாதியத்தின் பாதிப்புக்கள் அவரைத் திமிர்கொண்டு எழுந்து நிற்க வைத்திருக்கின்றது. அடக்கப்படும்போதெல்லாம் திமிறிக் கொண்டெழும்போதுதான் வாழ்க்கையில் வெற்றியைச் சுவைக்க முடிகின்றது. எமது வாழ்வை அவ்வளவு எளிதில் யாரும் தோற்கடிக்கச் செய்திட அவகாசம் கொடுக்கக்கூடாது என்பதற்கான ஒரு நிகழ்காலச் சாட்சியமாக ரகுநாதன் நமக்கு முன்னால் நிற்கின்றார். அப்புத்தகத்தை முழுமையாகப் படித்துவிட்டுத்தான் நான் உறவாட முடியுமென்று நினைக்கின்றேன். 

 கவிதைகளைப் பொறுத்தமட்டில் இன்னும் கவனம் செலுத்தப்படவேண்டும் என்றுதான் தோன்றுகின்றது. குறிப்பாக கவிதைக்கான வடிவமைப்பு ஈர்க்கவில்லை. அடுத்த இதழில் ஈர்க்கும் படியான வடிவமைப்பில் கவிதைகளை ரசிக்கவேண்டும். கவனம் செலுத்தினால் நல்லது. 

 ஒரே முச்சில் படித்து முடித்தது கருணாகரன் அவர்களுடனான ஷோபாசக்தியின் நேர்காணலைத்தான். இந்நேர்காணலைப் படிக்கும் வரையும் கருணாகரன் புலிதான் என்று நினைத்திருந்தேன். எனது எண்ணத்தை அப்படியே மாற்றிவிட்டது கருணாகரனின் நியாமான கருத்துக்கள்தான். போலியாகப் புணையப்படுதல் என்ற எல்லைக்கப்பால் கருணாகரன் மனந்திறந்திருக்கிறார். தமிழ்க் கவியின் நேர்காணலை ஷோபாசக்தி பதிவு செய்த போது எழுந்த எதிர்மறைக் கருத்துக்கள் இந்த நேர்காணலுக்கு வரவில்லையென்பது ஆறுதல் தரும் விடயம். நேர்காணலை இத்தனை பக்கங்கள்தான் அதற்கு மேல் முடியாது என்ற நிலையிலிருந்து... அதாவது ஒருவரின் முழுமையாக கருத்தை பக்கங்களால் அளவிட்டு அதற்கு மேலால் உள்ளதைக் கத்தரித்து ஒருவரை நேர்கானல் என்ற யெரில் கொல்வதைவிட்டும் பல படிகள் முன்னேறி முழுமையான கருத்தாடலுக்கு வழிவகுத்தமைக்காக நிச்சயம் ஆக்காட்டிக்கு ஒரு சபாஷ். 

புலிகள் முற்றாகத் தோற்றதன் பின்னர்தான் பலருக்கு வாய் திறந்திருக்கிறது என்ற விமர்சனம் பொதுவாக இப்போது இருக்கின்றது. யோ.கர்ணனின் எழுத்துக்கள் குறித்து ஒரு நண்பருக்கு வாசிக்கும்படி சிபாரிசு செய்தேன். அவர் படித்துவிட்டு எதிர்மறையான விமர்சனத்தைத்தான் முன்வைத்தார். ஆயினும் சூழ்நிலை என்பதுதான் பலதையும் தீர்மானிக்கின்றது என்பதை நேர்காணல் மிக வலுவாகப் பதிவு செய்கின்றது. எதிர்த்தால் ஆதரவாளன் இல்லையென்றும் ஆதரித்தால் எதிரியில்லையென்றும் கற்பிதம் கொள்ளும் சூழலில் நியாயமான கருத்துக்களைப் பதிவு செய்யக் கொஞ்சம் யோசிக்கத்தான் வேண்டியிருக்கின்றது. வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பில் கருணாகரனுடன் ஒரு நீண்ட உறயாமலைச் செய்யவேண்டும் என்று நினைக்கின்றேன் முடிந்தால் தொடர்புகொள்ளுங்கள் (94 777 617 227 )

கருணாகரனின் செவ்வியை முன்னிறுத்தி சில விடயங்களை மனந்திறந்து பேசிட வேண்டும். வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் குறித்து அவர் சொன்னவிடயங்கள் அவதானிப்புக்குரியன. அடுத்தது கிழக்குப் புலிகள் குறித்தும் மக்கள் குறித்தும் அவரது கருத்து முக்கியமானது. பொதுவாக எல்லாம் ஓகே என்று மாறிமாறி அரசியல் வாதிகள் சால்வை போர்த்திக் கொள்வதால் பிரச்சினை முடிந்துவிட்டது என்றும் இனங்களுக்கிடையில் ஒற்றுமை மேலோங்கி விட்டது என்றும் நம்புவது மிகவும் தவறு. உள்ளே சூடு ஆறாத தனலாக இன்னும் இன்னும் கொதித்துக் கொண்டுதான் இருக்கின்றது. அது உண்மைதான். இந்தக் கருத்து சூடான விவாதத்துக்குரியது. அத்துடன் இந்தவிடயத்தில் அரசியல் வாதிகளை நம்பினால் அது ஒரு சதத்திற்கும் உதவப் போவதுமில்லை மக்கள் மனதில் மாற்றத்தைக் கொண்டுவரப்போவதுமில்லை.  எப்படிப் போனாலும் ஒரு மாற்றத்தை வேண்டி நிற்கும் ஏக்கப் பெருமூச்சுகள் அதிகம் என்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 
அடுத்த இதழையும் ஆர்வமாக எதிர்பார்க்வைக்கும் தரத்தில் ஆக்காட்டியின் எழுத்துக்கள் இருப்பதே முக்கியமான விடயம். உலக இலக்கியத்தரம் வாய்ந்த படைப்புக்களின் அறிமுகத்தினை ஆக்காட்டியும் செய்து தரட்டுமே என்பது எனது எதிர்பார்ப்பு. காரணம் அதைத் தரமாகச் செய்வதற்கு எம்மில் பலருக்கும் தைரியம் போதவில்லை. 

Saturday, December 6, 2014

யமுனா ராஜேந்திரன் பக்கமுள்ள நியாயம்

யமுனா ராஜேந்திரன் பக்கமுள்ள நியாயம்
- முஸ்டீன்-

கடந்த சில வாரங்களாக யமுனா ராஜேந்திரன் ஓர் எழுத்தாளராக வெளிப்படுத்தும் கோபமும் அதில் புதைந்திருக்கும் நியாயமும் இக் குறிப்பை எழுதத் தூண்டின.

படைப்புலகம் சார்ந்தும் பதிப்புலகம் பற்றியும்  யமுனா ராஜேந்திரன் வெளிப்படுத்தியிருக்கும் அம்சங்கள் நியாயமான சிந்தனையுள்ள ரோசமுள்ள யாரையும் ஒரு கணம்  நின்று சிந்திக்கத்தூண்டும். அன்மைக்காலமாக இலங்கை பதிப்புச்சூழலின் பலவீனங்கள் குறித்து சில  உரைகளிலும் சில குறிப்புக்களிலும் எனது மன ஆதங்கத்தினை வெளி;படுத்தியிருந்தேன். யமுனா ராஜேந்திரனின் குறிப்புக்களைப்டிக்கின்ற பொழுது ஒரு படைப்பாளனாக நான் சஞ்சலப்பட்டுப் போகிறேன். கொஞ்ச நாட்களுக்கு முன்னர் கவிஞர் சோலைக்கிளியோடு இது பற்றிய சில விடயங்களைப் பேசிக்கொண்டதாக ஞாபகம். 'அவர்கள் எல்லாம் யாவாரிகள் நஸ்டம் வராமல் பார்த்துக்கொள்வார்கள்.நம்மையெல்லாம் முதலீடாக பயன்படுத்தியும் கொள்வார்கள்.' என்ற கருத்துப்பட அவர் சொன்னதில் பொதிந்திருந்த மெல்லிய ஆதங்கம் யமுனா ராஜேந்திரனின் கட்டுரைகளில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஒரு திரைப்படத்தை அறிவுபூர்வமாக ரசிப்பதற்கு  எனக்கு கற்றுத்தந்தது யமுனா ராஜேந்திரனின் எழுத்துக்கள் தான். அவரின் நூலினை தந்து எனக்கு அறிமுகப்படுத்தியவர் சரிநிகர் எம் கே.எம். ஷகீப் அவர்கள் தான்.அந்த வகையில் எனது ரசனையில் பெருந்திருப்பம் ஒன்றினைத் தந்து விசாலித்த பார்வையை  விதைத்து என்னைச் செதுக்கிய ஆசானுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதிக்கு எதிராக எனது கண்டனக் குரலையும் பதிவு செய்வதில் மன நிறைவடைகிறேன்.

யமுனா மிக வேகமாக வாசிப்பவர்.2010ஆம் ஆண்டு கீற்று இணையதளத்தின் 6 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் இலங்கை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அரசியல் இன கலாசார ஒடுக்குமுறைகள் தொடர்பாக நான் ஆற்றிய உரை மிகுந்த சலசலப்பை உண்டு பண்ணியதன் பின்னர் சரியாகப் புரிந்துகொள்ளப்டாத அந்த உரையின் விரிவாக்கத்தினையும் உள்ளடக்கியதாக கீற்று மிக நீண்டதொரு நேர்காணலைச் செய்து பதிவேற்றி  பதினைந்தாவது நிமிடத்தில் தோழர் ரமேசின் அழைபேசியிற்கு தொடர்பினை ஏற்படுத்தியவர் யமுனா ராஜேந்திரன் தான். அதுதான் அவரோடு உறவாடிய முதல் சந்தர்ப்பம். அவரின் பேச்சில் இருந்த நிதானமும் அமைதியும் அவர்மீது மதிப்பைக் கூட்டின. இத்தனைக்கும் எமக்குள் எந்த அறிமுகமோ தொடர்போகிடையாது. ஆயினும் நியாயமான எதையும் அவர் விட்டுவிலகுவதில்லை என்பதற்கு நேர்காணல் குறித்து அவர் சொன்ன கருத்துக்கள் சான்றாக இருந்தது. அப்படிப்பட்ட ஒருவர் மிகவும் மனம் நொந்து போகும் வகையில் பதிப்பாளர்கள் நடந்து கொள்வது மிகவும் வேதனைக்குரியது.

ஏனையவர்களின் எழுத்துக்களைத்தான் விற்றுப் பிழைக்க முடியும் என்ற நிலையில் முழுமையான வியாபாரிகளாக அவர்கள் பரிமாணம்பெறுவது படைப்பாளிக்கு நிகழும் கொடுமைதான். தவிர்க்க ஏதேனும் மாற்றுவழிகள் உண்டா என்பதையும் ஆராய வேண்டி இருக்கின்றது. எல்லாமே வியாபாரமாகிப் போன பின்னர் இலாபத்தைப் பற்றி மட்டுமே கனவு காண முடியும். அதைத்தான் அவர்கள் செய்கின்றார்.

யமுனாவின் தரப்பு நியாயத்தைப் புரிந்து கொண்டு அவருக்காகக் குரல் கொடுக்க வேண்டியது நேர்மையான எழுத்தாளர்களின் கடமை என்றுதான் எனக்குத் தோன்றுகின்றது. ஒருமாபியாவாக காப்ரேட் சிந்தனையோடு பதிப்பகங்களும் பதிப்பாளர்களும் மாறிக் கொண்டிருப்பது ஆரோக்கியமானதல்ல. அனைவரும் கவனம் செலுத்தவேண்டிய ஒரு விடயமாகும்.
பின்னனொரு நாளில் ஆன்மாக்கள் ஊமையாகி
பணம் அனைத்தையும் பேசிக் கொண்டும் தீர்மானித்துக் கொண்டுமிருக்கும்.