Tuesday, July 31, 2012

கேர்ணலின் வாக்குமூலம்


கேர்ணலின் வாக்குமூலம்

கேர்ணல் லத்தீப் என்றால் அறியாதவர்களே இல்லை. அவர் ஒரு முரண்பாட்டின் சின்னம். அவரோடு யாரும் கதைப்பதில்லை. ஐந்து நேரமும் மழையானாலும் வெயிலானாலும் புயலானாலும் அவர் தொழுகைக்காக பள்ளியில் இருப்பார். அவரை சந்திக்க யாரும் வருவதில்லை. அப்படித்தான் சந்திக்க வேண்டுமானாலும் தொழுகை முடிந்து, எல்லோரும் சென்றுவிட்ட பின்னரும் கூட, பள்ளிவாயலின் உள்ளே, ஒரு தூணில் சாய்ந்து ஒருவர் யோசித்துக் கொண்டிருப்பார், அவரைத் தெரியாதவர் கூட இலகுவாக அடையாளம் காணலாம். அஸர்த் தொழுதுவிட்டால் நீண்ட நேரம் அவர் ஒரு மூலையில் தியானத்தில் இருப்பது போல இருப்பார். இப்போது அவருக்கு அந்த அமைதி தேவைப்பட்டிருக்கிறது. 
கேர்ணலைப் பற்றி எனக்கு நிறையக் கதைகள் கிடைத்தன. அவற்றில் எல்லாம் அவர் மிகமிகப் பயங்கரமான மனிதர். எனக்கு அந்த ஒரு நொடியில் சிந்திக்கத் தூண்டியது, 'அவர் பயங்கரமான மனிதர்' என்பதுதான். ஏன் அவர் பயங்கரமான மனிதர்? எப்படி அவர் அப்படி மாறினார்? அப்படி என்ன செய்து விட்டார்? அவரின் பயங்கரத்திற்கு பின்னால் ஏதும் நியாயம் இருக்குமா? சில வேளை எனது சமூகம் அவரைப் புரிந்துகொள்ள வில்லையா? அவரைச் சந்தித்துக் கதைத்துவிட வேண்டும் என்ற ஆவல் என்னுள் வேரூன்றியது.
அதற்கு முன்னர் அவரை நான் சந்திப்பது குறித்து, விசயம் அறிந்தவர்களிடம் ஆலோசனை கேட்டேன். எல்லோரும் சொன்ன ஒரே பதில். 'உனக்கெதற்கு தேவையில்லாத வேலை' அவர்கள் பதில் என்னைக் கொஞ்சம் சிந்திக்க வைத்தது. ஆயினும் அவரைச் சந்தித்து எல்லோரும் உங்களை பயங்கர மனிதனாக சொல்கிறார்களே ஏன்? என்று கேட்க வேண்டும் என  மனதில் தோன்றியது. சந்திப்பதென்று முடிவெடுத்தேன். அவர் பெயர் தெரிந்தளவுக்கு அவர் முகம் தெரியாது. கொஞ்சம் விசாரித்ததில் அவரை வாழைச்சேனை ஜூம்ஆ பள்ளிவாயலில் அஸர்த் தொழுகையின் பின்னர் சந்திக்கலாம் என்ற செய்தி உறுதியாகக் கிடைத்தது. தொழுகைக்கு விரைந்தேன். எல்லோரும் தொழுதுவிட்டு வெளியேறினார்கள். ஏற்கனவே எனக்குச் சொல்லப்பட்ட தூண் சமாச்சாரத்தை வைத்து நோட்டமிட்டுக் கொண்டிருந்தேன், எல்லோரும் சென்றுவிட்டபின்னரும் ஒருவர் கைகளிரண்டிலும் முகத்தைப் புதைத்தபடி தரையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் பார்வை எங்கும் அலைபாயவில்லை. மிகவும் சாவகாசமாக அமர்ந்திருந்த அவர் அதே அமைதியுடன் மெதுவாக எழுந்து கொண்டார், தன்னைச் சூழ உள்ள எதைப்பற்றியும் யாரைப்பற்றியும் கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாதவராக அமைதி குழையாமல் மெதுவாகவே சென்று தூணோடு சாய்ந்து அமர்ந்து கொண்டார். 
அவரை அடையாளப்படுத்திக்கொள்வது அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. முகமன் கூறி அவருக்கு முன்னால் அமர்ந்தேன். சத்தமேதுமில்லாமல் பார்த்தார். அந்த வெற்றுப் பார்வையை இலகுவாக என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. என்னை அறிமுகப்படுத்திக்கொண்டவனாக 
'உங்களோடு கதைக்க வேண்டும் முடியுமா?' என்று கேட்டேன். 
'என்னோடு கதைப்பதற்கு ஒன்றுமேஇல்லை' என்றார். 
அவர் என்னோடு கதைப்பதற்கு தயாரில்லை என்பதை அவரது முகபாவனை சுட்டிக் காட்டியது. அவரது பார்வை 'என்னை அமைதியாக இருக்கவிடு' என்பது போல என்னை மன்றாடி வேண்டியது. கொஞ்ச நேரம் அமைதி நிலவியது. அதைக் குழைத்தேன். 
'ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவர் மண்ணுக்குள்ளே புதைந்து போன சேதி தெரியுமா?' பாடலைப் படித்தேன்.
அவர் என்னை விநோதமாகப் பார்த்தார், தமிழ் சினமாவில் வரும் பாடல்வரிகளை பள்ளிவாசலில் படித்தது பாவமான காரியமாகக்கூட தோன்றியிருக்கலாம், அதனால் அவர் என்னை அழுத்தமாகப் பார்த்திருக்கலாம், அல்லது தன்னைப் பார்த்து ஒருவன் நக்கலடிப்பது போல இப்படிப் பாடுகிறானே என்று நினைத்தபடி பார்த்திருக்கலாம், பார்வை என்னைவிட்டும் விலகவில்லை, அவர் பார்த்துக்கொண்டேயிருக்க நான், 
'கேர்ணல்...' என் உச்சரிப்பில் தனித்துவமான அழுத்தம் இருந்தது. அந்தப் பெயர் கொண்டு அவர்  நீண்ட நாட்களுக்குப் பின் அழைக்கப்படுவது அவரில் பரவசத்தை உண்டு பண்ணியிருக்க வேண்டும். சாய்ந்து அமர்ந்தார். 
'இப்போது உங்களுக்கு தேவைப்படும் அமைதி ஒன்றுமில்லாதவனுக்கு ஒருபோதும் தேவைப்படாது. உங்கள் முகத்தில் கவலையும் கைசேதமும், தெரிகிறது. மரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ஒருவனின் இருப்பு போன்றது உங்கள் இருப்பு... இந்த உலகமே போலி, நன்றி கெட்டது, என்று முடிவெடுத்தவன் எப்படி இருப்பானோ அப்படித்தான் எனக்கு நீங்களும் தெரிகின்றீர்கள். துரோகம் என்றால் என்னவென்பதை பலமுறை அனுபவித்த ஒருவனின் வேதனையின் படிமங்கள் உங்கள் முகத்தில் தெரிகிறது. இப்போது நீங்கள் பேசாவிட்டால் காலமெல்லாம் நீங்கள் மகா மோசமானவன்தான். சரி அப்படியே மோசமானவனாக இருந்து விட்டுப் போகட்டும் ஆனால் உங்களின் செயற்பாடுகளுக்கு பின் உங்களுக்கு ஒரு காரணமும் நியாயமும் இருக்க வேண்டும். அதைப் பற்றியாவது சொல்லுங்களேன். சில வேளை அது வரலாறாக கூடுமல்லவா?' என்றேன். 
எனது பேச்சு அவரை சிந்திக்க வைத்தது. அவர் என்னை நம்பினார். அவரது முகத்தில் மாறுதல் தென்பட்டது. மூச்சை பெரிதாக இழுத்து விட்டார். அவர் கண்கள் கலங்கின. கண்ணீர் எட்டிப்பார்த்தது. அவர் நொறுங்கிப் போனார். 
'உண்மைதான் உண்மைதான்' அழுதார் தேம்பித் தேம்பி அழுதார். அவர் சிறுபிள்ளை போல அழுதார். அவரால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நீண்ட நாள் தேக்கிவைத்திருந்த கண்ணீர். 
நன்றாக அழட்டும். அவர் அழுது முடித்து ஓய்விற்கு வந்ததும் அவரே கதைப்பார் என்று எதிர்பார்த்திருந்தேன். அரை மணித்தியாலம் அழுதார். அவர் சட்டை நனைந்திருந்தது. அது உண்மையான கண்ணீர். அது அவரை ஆறுதல்படுத்தும். அவர் நெஞ்சை அது அமைதிபடுத்தும். 
கண்களைத் துடைத்துக்கொண்டார். மீண்டும் பெரிதாக மூச்சை இழுத்து விட்டார். என்னை ஆழமாய்ப் பார்த்தார். அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. அவர் முகத்தில் சாந்தம் தென்பட்டது. எனது கைகளைப் பற்றிக்கொண்டார். 
'நமது உரையாடலைப் பதிவு செய்யலாமா' என்றேன். 
எதைப்பற்றிய யோசனையுமின்றி தலையசைத்து அனுமதித்தார். 
ரெக்கோர்டரை இயக்கினேன். அது அனைத்தையும் அவரது வாக்குமூலமாக உள்வாங்கத் தொடங்கியது. 
'ஏன் உங்களை இந்த ஊர் ஒரு கெட்டவனாக பார்க்கிறது. 
'அறுபத்தொன்பது கொலைகள் செய்தவனை வேறு எப்படிச் சொல்லும்' 
'அறுபத்தொன்பதா? ... ஏன்? என்ன நடந்தது?'
'ஒவ்வொன்றும் பசுமையாக ஞாபகமிருக்கிறது. அதில் பத்துப் பேர் அப்பாவிகள். பதினொரு பேர் எமது தவறுகளால் விளைந்தது. மிகுதி எல்லாம் நியாயமானது. எங்கள் எதிரிகளுடையது...' 
'யார் உங்களின் எதிரிகள்...? 
புலிகள் ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்யத் துவங்கியது முதலும் முஸ்லிம்களைக் கொல்லத் துவங்கியது முதலும் அவர்கள் எமது எதிரிகள். அவர்களுக்கு எவ்வளவோ உதவி செய்த எங்களைச் துரோகிகள் என்றார்கள். எங்கள் மக்களைக் கொன்றார்கள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க என்னால் முடியவில்லை. அவர்களை எதிர்க்கத் தொடங்கினோம். எதிர்ப்பதென்றால் சும்மா விசயமில்லை என்பது பின்னர் விளங்கியது. எங்களை அவர்களிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஆயுதங்கள் தேவைப்பட்டன. ஆயுதம் வாங்க பணம் தேவைப்பட்டது. பின்னர் அவர்களுக்கு நாங்கள் பலமான எதிரிகளானோம். எங்களைக் குறி வைத்து கொல்லத் தொடங்கினார்கள். நாங்களும் அவர்களை குறிவைத்துக் கொல்லத் தொடங்கினோம். ஒரு கட்டத்திற்குப் பின்னர் எமக்கு ஆதரவளிப்போர், தகவல் தருவோர், எம்மைச் சார்ந்திருப்போர் எமது உறுப்பினர்கள் என்று வேட்டையாடத் தொடங்கினர். அதுபோல் நாமும் அவர்களது உறுப்பினர்கள், தகவளாளிகள், பணம் கொடுப்போர், அவர்களுக்கு உதவுபவர்கள் எல்லோரும் இனம் மதம் கடந்து எங்களுக்கு எதிரிகளாயினர், அவர்களையும் நாம் தாக்கினோம். நேரடியாக பெரும் யுத்தம் செய்ய எங்களால் முடியவில்லை. அந்தளவுக்கு பலமுமில்லை, தந்திரமாகத் தான் நாங்கள் அவர்களை எதிர்த்தோம், அழித்தோம். அவர்களுக்கு இராணுவத்தை எதிர்கொள்வதை விட எங்களை எதிர்கொள்வது பெரும் சவாலாக இருந்தது. எங்களிடம் பதினைந்து துப்பாக்கிகள் தான் இருந்தது. எங்களது பலம் இவ்வளவு தான் என்று தெரிந்தால் ஒரே நாளில் எங்களை அழித்துவிடுவார்கள். அதனால் ஆலோசனை செய்தோம். அப்போது இந்தியா இராணுவம் புலிகளுடன் பலமாகப் போரடிக் கொண்டிருந்த நேரம். நாங்கள் முடிவெடுத்தோம் பாகிஸ்தானில் இருந்து ஆயிரம் நவீன துப்பாக்கிகளும், ஆயுதங்களும் வந்திருப்பதாகவும், ஐந்நூறு பேர் பயிற்சிக்கு போயிருப்பதாகவும், இருநூறு பேர் பயிற்சி முடித்துக்கொண்டு வந்திருப்பதாயும் அவர்களுக்கு நம்பகமான வழிகளில் செய்தி அனுப்பினோம். அது திருப்திகரமான முறையில் வேலை செய்தது. ஒரு ரீட்டாவோடும் பத்து பதினைந்து தோட்டாவோடும் எல்லையில் தைரியமாக நின்றோம். பாகிஸ்தான் ஆயுதமும் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற வீரர்களும் அவர்களை கடுமையாக அச்சுறுத்தியிருக்க வேண்டும். அவர்கள் பதுங்கினார்கள். அது உண்மையா என்பதை மேலும் மேலும் உறுதிப்படுத்திக்கொள்ள முனைந்தார்கள். அது பொய் என்று கண்டுபிடித்தால் வரும் பிரச்சினையின் பாரதூரத்தை நாம் புரிந்து கொண்டோம். உடனடியாக பெரிய ஒரு தாக்குதல் நடத்தி அவர்களை இன்னும் அச்சம் கொள்ள வைக்க வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டது. அதுவும் அவர்களின் எல்லைக்குள் புகுந்து செய்யத் தீர்மானித்தோம்.
 எங்களுக்கு இரண்டு சவால்கள். ஒன்று இராணுவம், அவர்கள் கண்ணில் பட்டாலும் எங்களைச் சுடுவார்கள். அடுத்து புலிகள், அவர்கள் கண்ணில் பட்டாலும் சுடுவார்கள். புலிகள் மட்டுமல்ல தமிழ் டீம் எது கண்டாலும் சுடும். பெரிய ஒபரேஷன் செய்வது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. இரண்டு மாதங்கள் தகவல் எடுத்தோம். ஆனாலும் அடிக்கடி கள நிலவரங்கள் மாறிக் கொண்டிருந்ததால் சரியாக எதையும் திட்டமிட முடியவில்லை. கும்புறு மூலையில் வைத்து ஆமியை அடிக்க சாமான்கள் நகர்த்தப் போகிறார்கள் என்று செய்தி கிடைத்தது. நாங்கள் முடிவெடுத்தோம். அதை மடக்கிப் பிடிப்பது என்று. பேத்தாலையில் இருந்து வாழைச்சேனையூடாக மீராவோடை போய் அங்கிருந்து கும்புறு மூலை நோக்கி நகர்வது என்பது அவர்கள் திட்டம். 
சாமான் நகர்த்துபவர்கள் போராடத் தயாராக இருக்க மாட்டார்கள். எப்படியாவது ஆயுதங்களைக் கவனமாக நகர்த்தி தாக்குதல் அணியிடம் ஒப்படைப்பார்கள். அவர்களை மீராவோடையில் வைத்து திசைதிருப்பி ஆற்றால் செல்லச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து இரண்டு தோணிகளையும் தயார் நிலையில் வைத்திருந்தோம். தமிழ் ஆட்;களே தகவல் தந்தார்கள். அவங்க முஸ்லிம் ஆட்களை வைத்து தகவல் எடுக்குக்கும் போது எங்களுக்கு தமிழாக்கள வச்சு தகவல் எடுக்கிறது பெரிய வேலையாகத் தெரியல, எல்லாத்தையும் கவனமாக அவதானிச்சோம். 
பேத்தாலையில் இருந்து வெளிக்கிட்டு திட்டமிட்டபடி சென்றார்கள். மூன்று மூன்று பேராக மொத்தம் பன்னிரெண்டு பேர். நாங்கள் எதிர்ப்பார்த்ததை விட மிகப் புத்திசாலித்தனமாக நகர்த்தினார்கள். ஓட்டமாவடியில் வைத்தே திசை திருப்பினோம். உடனடியாக இன்னும் மூன்று தோணிகளைத் தயார்படுத்தினோம். தோணிக்காரர்களை அவர்கள் எதிர் கொள்ளும் வண்ணம் உலாவ விட்டோம், நாம் எதிர்ப்பார்த்தபடி அவர்கள் மீராவோடையில் இருந்து ஆற்றைப் பயன்படுத்தத் தீர்மானித்தார்கள். எம்மால் தயார்படுத்தப்பட்டிருந்த தோணிகளையே பயன்படுத்தினார்கள். தோணிக்காரர்களும் அங்கால ஆமி நிக்கான் என்று அவர்களை எமது பொறிக்குள் கொண்டு வந்தார்கள். அவர்களைப் பிடிப்பது அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை. 
பன்னிரெண்டு பேரையும் பிடித்தோம். ஆயுதங்களைக் கைப்பற்றினோம். அவர்களைக் கட்டிவைத்தோம். நிறைய ஆயுதங்கள், பத்துத் துப்பாக்கிகள். நிறையக் குண்டுகள், எல்லாவற்றையும் பாதுகாப்பாக எமது வீடுகளுக்கு நகர்த்தினோம். ஒருவனை மட்டும் உயிரோடு கண்ணைக் கட்டிக் கொண்டுபோய் இரவு வேளையில் பேத்தாளையில் விட்டோம். அவனிடம் நிறைய செய்திகள் அனுப்பினோம். 
அவர்களின் ஆயுதங்களை ஒன்றாகப் பரத்தி விட்டுச்சொன்னோம். இதெல்லாம் நமக்குத் தேவையில்லை. நம்மிடம் இருக்கும் பாகிஸ்தான் ஆயுதங்களே போதும். இதெல்லாம் தூக்கி ஆற்றில் எறிவோம். அப்போது தான் என்னை கேர்ணல் என்று அழைத்தார்கள். அன்றிலிருந்து நான் பாகிஸ்தான் கேர்ணல் ஆனேன். மற்ற பதினொரு பேரையும் என் கையாலேயே கொன்றேன். அவர்களுக்காக தோட்டாக்களை வீணாக்க நாங்கள் விரும்பவில்லை. ஆற்றில் மரங்கள் வளர்ந்து பெரும்பரப்பாக இருந்த புட்டிக்குள் புதைத்துவிட்டு நாங்கள் வெற்றியோடு சென்றோம். 
உயிரோடு போனவன் நிகழ்வுகளை அப்படியே சொல்லியிருப்பான். அதன் பின்னர் மிக நீண்டகாலமாக அவர்கள் எப்படி ஆயுதங்களை நகர்த்துகிறார்கள் என்பது எங்களுக்கு தெரியவில்லை. அத்துடன் இன்னொரு செய்தியையும் அனுப்பினோம். இனி எங்கள் ஆட்கள் மீது கை வைத்தால் நாங்களும் உங்கள் ஆட்கள் மீது கை வைப்போம் என்ற எச்சரிக்கையாக அது போனது. அதன் பின்னர் சிறிது காலம் கொஞ்சம் நிம்மதியாகத் திரிந்தோம். அவர்கள் ஊர்ப்பக்கம் வருவதில்லை. ஆனால் அந்த நிகழ்வுக்குப் பின்னர் ஊருக்குள் இருக்கும் நிறைய முஸ்லிம் தகவலாளிகளை அவர்கள் பணம் கொடுத்து உருவாக்கினார்கள். அதைக் கண்டுபிடிக்க எங்களுக்கு நீண்ட காலம் எடுத்தது. பணத்திற்காக அவர்கள் எங்களைக் காட்டிக் கொடுத்தார்கள். அப்படிக் காட்டிக்கொடுத்தவர்களின் வீடுகளை கொள்ளையடித்தோம். மிக அபாயமானவர்களை கொலை செய்தோம். ஏறாவூர், காத்தான்குடியில் இருந்தும் தொடர்புகளை வலுப்படுத்தினோம். 
ஒருமுறை காத்தான்குடியில் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் ஆறு பேரைப் பிடித்தோம். அந்த ஆறு பேரையும் எவ்வளவு விசாரணை செய்தும் எங்களுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அவர்களில் ஒருவனை உயிருடன் விட்டோம். அப்போது அந்த அறுவரில் ஒருவன் கேட்டான் 'அண்ணே நீங்க யார்?' என்று. எங்களில் ஒருவன் சொன்னான். 'நாங்களாடா பாகிஸ்தான் ஜிகாத்டா... காக்கா மார்ர மேல்ல கை வெச்சா என்ன நடக்கும் எண்டு போய்ச் சொல்லு, பாகிஸ்தான் ஜிஹாத் இனி சும்மா இருக்காது என்டும் சொல்லு' ஆறு பேரில் ஒருவன் கொண்டு சென்ற செய்தி நன்றாக வேலை செய்தது. அத்துடன் அறுவரில் ஒருவனை மட்டும் உயிரோடு வைத்துக்கொண்டு மற்றவர்களை விடுவிக்கப்படப்போவனின் முன்னால் அறுத்துக் கொன்றோம். துப்பாக்கியைப் பயன்படுத்துவதில் அதன் சத்தம் எங்களைக் காட்டிக் கொடுத்துவிடும் என்பதால் அதைப் பெரும்பாலும் பயன்படுத்தாமல் வைத்திருந்தோம். அப்போது உயிரோடு இருந்தவன் சொன்னான். அந்த நாலு பேரும் அப்பாவிகள் என்று. நாங்கள் இருவர் மட்டும் தான் புலி என்றான். எங்களுக்குக் கவலையும் கோபமும் வந்தது. அவனை அடித்தே கொன்றோம். ஐந்து அப்பாவிகளை முதன் முறையாக கொன்றது வேதனையை உண்டு பண்ணியது. அதன் பின்னர் தகவல்களை மிகக் கவனமாக பரிசீலனை செய்தோம். எமது நடவடிக்கைகளில் நிதானம் வந்தது. இராணுவ அறிவு தேவைப்பட்டது. ஒரே நேரத்தில் இரண்டு எதிரிகளைச் சமாளிப்பது கடினம் என்பதால் இராணுவத்துடன் தொடர்புகளை வலுப்படுத்தினோம். 
'ஜிஹாத்துக்காரனுகள் என்றால் மிகப் பொல்லாதவர்கள்' என்ற நிலைப்பாடு எல்லா இயக்கங்களிலும் பரவின. இராணுவத்திடம் மாட்டினாலும் ஜிஹாத்துகாரன்களிடம் மாட்டிவிடக் கூடாது என்பதில் புலிகள் மிகமிக கவனமாக இருந்தார்கள். இஞ்ச புலி என்டு சொல்றது மத்த டீமுகளையும் சேத்துத்தான், எங்கட செயற்பாடுகள் மட்டக்களப்பைத் தாண்டி அம்பாரை திருகோணமலை என்று பரந்தது. அதற்கு இராணுவத்துட தொடர்புகள் பேருதவி புரிந்தன. 
சில அரசியல்வாதிகள் எமக்கு புதிய வகை ஆயுதங்கள் கிடைக்க ஏற்பாடு செய்தார்கள். அது மிகவும் பேருதவியாக இருந்தது. ஆனால் கவலையாக இருக்கிறது. அவர்களின் சுயநலன்களுக்காக எங்களைப் பயன்படுத்தினார்கள். பின்னர் தூக்கி எரிந்தார்கள். எங்கள் வேலைகளுக்காக கட்டுக்கட்டாகப் பணம் தந்தார்கள். நாங்கள் அவர்களுக்காக பாவம் செய்து விட்டோம். எங்கள் போராட்டமும் தொய்வு நிலைக்கு வந்தது. நிறையப் போராட்டக் குழுக்கள் தோன்றின. யார் யாரோ தோற்றுவித்தார்கள். புலிகளே தோற்றுவித்து நிறைய முஸ்லிம் குழுக்களை பணமும் ஆயுதமும் கொடுத்து பயிற்றுவித்தார்கள். எங்களுக்குள் நாங்கள் மோதிக்கொள்ளும் நிர்ப்பந்தம் வந்தது. இராணுவத்துடன் சேர்ந்த பலர் எங்களை எதிரிகளாக்கிக் கொன்றார்கள். ஒரு கட்டத்தில் எல்லா இயக்கங்களையும் அச்சுறுத்திய 'பாகிஸ்தான் ஆயுதங்களும், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற வீரர்களும்' பலனற்றுப் போயினர். அது பொய் என்பதைப் புலிகள்  கண்டுபிடிக்க நீண்ட காலம் எடுத்தது. 
அதன் பின்னர் வேகமாக எங்களின் உறுப்பினர்களைக் கொன்றார்கள். காட்டிக்கொடுக்கும் கயவர்கள் எல்லாமே சோனி! கஞ்சா யாவாரத்துக்கும், கள்ள மர யாவாரத்திற்கும், கள்ள மாட்டு யாவாரத்திற்கும், மீன்பிடிக்க கடலுக்குப் போக தடையில்லாமல் இருப்பதற்கும், இந்தச் சோனிகள் எங்களைக் காட்டிக் கொடுத்தார்கள். இப்படிப்பட்ட 'புண்டாமக்களின்' வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தோம். சிலரைச் நாயைச் சுடுர மாதிரி சுட்டுக் கொன்றோம். எதுவும் பலனளிக்கவில்லை. ஒருவன் இல்லாட்டி இன்னொருவன் காட்டிக் கொடுத்தான். அதை எங்களால் நீண்ட காலம் சமாளிக்க முடியவில்லை. 
எங்களுடன் இருந்தவர்களுக்கு பெரிதாக எதையும் செய்ய எங்களால் முடியவில்லை. நிறையப் பேர் தங்கள் வசமிருந்த ஆயுதங்களை பணத்திற்காக விற்கத் தொடங்கினார்கள், சிக்கல் பெரிசாச்சு, அதனால் ஆயுதங்களை விற்றவர்களை குற்றவாளிகளாகப் பார்க்கவும் முடியவில்லை. எல்லாம் மாறியது. எல்லாருக்கும் நல்ல காலம் பிறந்தது. எல்லோரும் பணக்காரர் ஆனார்கள். நாங்க கொஞ்சப் பேர் ஒன்டுக்கும் வழியில்லாமப் போனோம், எங்களால் ஆயுதம் வித்து பொழப்பு நடத்த முடியல அத விட சாகிறது நல்லம் என்டு பட்டது, வார எல்லாக் கஷ்டத்தையும் பொறுத்துக் கொண்டு வாழ்றது என்டு முடிவெடுத்தோம், அப்படியே வாழத் தொடங்கினோம். 
ஒரு நாள் நான் வீதியில் வரும் போது என்னைக் காட்டி ஒருவன் மற்றவனிடம் சொன்னான். 'இந்தா போரான் ஊர நாசமாக்கிய களிசர' எனக்கு கோபம் வந்தது. அவனிடம் போனேன் அவன் நினைத்தான் அவன் சொன்னது எனக்கு கேட்காது என்று. அவன் அருகே நின்று கேட்டேன். 
'புன்டா மகனே இப்ப என்னடா சொன்னாய்' 
'நான் ஒன்டும் சொல்லல்லை' என்றான். 
'எனக்குக் கேட்டதுடா வேசாமகனே நீங்க ராவையில பொண்டாட்டிமாரோடு பயமில்லாம ஓக்கிறத்துக்கு நாங்க ஊர் எல்லையில விடிய விடிய தூக்கமில்லாம காவலுக்கு நின்டதுக்கு இப்ப கதைக்கிறீங்க... சொல்லுடா என்ன புன்டயடா நான் நாசமாக்கின பரவேசமகனே.. சொல்லுடா... சொல்லுடா.. நாயச் சுடுர மாதிரி சுட்டுத் தள்ளிப் போடுவன் ராஸ்கல்...' எனது எந்த கேள்விக்கும் அவன் பதில் சொல்லவில்லை. 
அவர்கள் இருவருமே வாத்திமார்கள். அந்த நிகழ்வு என்னை மிகவும் சிந்திக்கத் தூண்டியது. இரவெல்லாம் தூக்கம் வரவில்லை. எனது மனைவி மக்கள் இவர்களுக்கு நான் என்ன செய்து விட்டேன்?. அன்றிலிருந்து ஒவ்வொருவரினதும் தராதரங்களைப் பார்த்தேன். என்னை விட எல்லோரும் நான்றாய்த்தான் இருந்தார்கள். அவர்கள் படித்திருந்தார்கள். உத்தியோகம் பார்த்தார்கள். வீடு வாசல் இருந்தது. மூன்று வேளையும் நிம்மதியாய்ச் சாப்பிட்டார்கள். இப்படியெல்லாம் இருந்து கொண்டு எங்களை களிசரை என்கிறார்கள். இவர்கள் நல்லா இருப்பதற்காக நாங்கள் எமது முழு வாழ்வையும் நாசமாக்கிக் கொண்டோம். எங்கள் பிள்ளைகளுக்கு கல்வியைக் கொடுக்கவில்லை. ஆயுதங்களைக் கொடுத்திருந்தோம். 
அப்போது தோன்றிய யோசனையால்தான் அனைத்தையும் விட்டுத் தூரமாகினேன். ஒரு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டேன். அது என்னை அமைதிப்படுத்தியது. எனது பிள்ளைகள் யாரையும் படிப்பிக்காமல் விட்டது நான் செய்த பெரிய தவறு. என்னைப் போல அவர்களையும் ஆயுதங்களுடன் எல்லையில் நிறுத்தியது அதை விடத் தவறு. ஒரு நாள் ஆத்திரத்துடன் எனது மகனிடம் சொன்னேன். 
'இந்த சமூகத்துக்கு நீ எதிரிடா உனக்கு எதையும் செய்யாமல் எல்லாவற்றையும் இந்த சமூகத்துக்கே செய்துவிட்டேன். நீ வாழ்வதற்குத் தேவையானதை இந்த சமூகத்திடம் இருந்தே பெற்றுக்கொள். இந்த சமூகத்துக்காக ஒரு நாளும் நன்மை செய்து விடாதே. இந்த சமூகம் உனக்கு ஒரு நாளும் நல்ல பெயர் தராது. நீ சாகும் வரை கெட்டவன் என்றே அழைக்கப்படுவாய். அதற்கு எனது பெயரையும் சேர்த்தே பயன்படுத்துவார்கள்' அதை அவன் வலுவாய் பற்றிப்பிடித்தான். அவன் செய்வது சரி என்று தான் எனக்குப் பட்டது. ஆனால் இப்போது கவலைப்படுகிறேன். நான் தவறு செய்து விட்டதாய். ஆத்திரத்தில் அவனுக்கு பிழையான வழியைக் காட்டிவிட்டதாய்  எனக்கு மன நிம்மதி தேவைப்பட்டது. யாரோடும் கதைக்கப் பிடிக்கவில்லை. கடைசியில்  சில ஆயுதங்களை வாழ்வதற்காக விற்றேன். சிலதை பொறுப்பாக இருந்தவர்களிடம் ஒப்படைத்தேன். எனது அமைதிக்காக பள்ளிவாசலைத் தேர்ந்தெடுத்தேன். அது எனக்கு நிம்மதியைத் தருகிறது. உலகில் செய்த பாவங்களுக்காக எனக்கு இங்கு தண்டனை கிடைக்கப் போவதில்லை. பாவமன்னிப்பாவது கிடைக்கலாமில்லையா? அது தான் பள்ளிவாசல் ஒரே துணை...' 
கேர்ணல் லத்தீப் தெளிவாக இருந்தார். 
அவர் மிகவும் நொந்து போயிருந்தார். 
அவரது இதயம் வேகமாக இயங்கியது. 
அவரது முகத்தில் ஒரு பிரகாசம் தென்பட்டது. 
எவ்வளவு பிரச்சினைகளுடன் இந்த மனிதன் வாழ்கிறான் என்று தோன்றியது. 
அவரைப் பார்த்துக் கேட்டேன். 
'உங்களுக்கு ஒரு அச்சுறுத்தலும் இல்லையா?' 
ஒரு ஏளனப் புன்னகையுடன் 
'மரணத்திற்காகத்தானே காத்திருக்கிறேன். என்னைப் புலியும் கொல்ல மாட்டான். ஆமியும் கொல்லமாட்டான். ஒரு சோனிதான் கொல்லுவான். எனக்குத் தெரியும் நான் ஏன் சாகிறேன் என்று... அவனுக்குத் தெரியாது, அவன் ஏன் என்னைக் கொல்கிறான் என்று... ஒன்று தம்பி நிச்சயம் என்னை துப்பாக்கித்தான் கொல்லும். சூரியன் மறைந்ததில் இருந்து அது உதிப்பதற்குள் எனது மரணம் நிகழும். அது விதி நானே இப்படி நடக்கும் என்று எழுதும்படி வாழ்ந்து விட்டேன். இறைவனும் அதைத் தடுக்க மாட்டான்'. 
'கொஞ்சம் கவனமாக இருக்கலாம் தானே' 
சிரிக்கிறார் சிரித்துக்கொண்டே இருக்கிறார். 
'எதற்காக? யாருக்காக? எதைப் பாதுகாப்பதற்காக? ஒன்றுமில்லை, எல்லாம் முடிந்து போயிற்று நான் எனக்கே பிரயோசனமில்லாதவன். இந்த கேடுகெட்ட சமூகத்துக்காக எல்லாவற்றையும் தொலைத்த ஒரு அதிஷ்டமில்லாதவன் ஒரு நல்ல மகனையாவது வளர்த்தெடுக்க எனக்கு அவகாசமில்லாமல் போயிட்டு அது எனது தலையெழுத்து நான் இப்படியே இருந்து சாக வேண்டியதுதான். ஒரு நாள் எனது மரணம் வீதி ஓரத்தில் நிகழும் எனது பிணம் ஊரார் புதினம் பார்க்கும் படி கிடக்கும்'. 
அவர் வார்த்தைகளில் உறுதி தொனித்தது. 
மரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு ஞானியின் தெளிவு அவரை ஆட்கொண்டிருந்தது. 
அவரின் இப்போதைய திருப்தி தொழுவதிலும் பள்ளிவாசலில் அமைதியாக அமர்ந்திருப்பதிலும் மரணத்தை எதிர்பார்த்து வீதியில் நடப்பதிலும் தான் இருந்தது. 
அவர் மரணத்தை அச்சத்தோடு எதிர்பார்க்கவில்லை. தைரியத்தோடே அதை எதிர்கொள்ள காத்திருந்தார். 
'என்னிடம் நிறையக் கேள்விகள் இருக்கின்றன. அவற்றுக்கு நீங்கள் தெளிவாக பதில் சொல்ல வேண்டும். இப்போதல்ல இறைவன் நாடினால் இன்னொரு நாள்' 
தலையசைத்தார். 
'இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்' என்றார். 
ஒரு தகவலுக்காக சொன்னேன். 
'உங்களோடு சம்பந்தப்பட்டவர்களின் பெயர் விபரம், இப்போது  அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? உங்களுக்கு தெரிந்த வகையில் இங்கு யார் யாரிடம் ஆயுதம் இருக்கிறது? யார் யாரெல்லாம் ஆயுத வியாபாரம் செய்கிறார்கள்? இந்த சமூகத்தின் நலனுக்காக நீங்கள் சொல்ல வேண்டும். அது எதிர்கால சந்ததிக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை நாம் பரிசளிக்க உதவும் சொல்வீர்களா?' 
அவர் யோசித்துக்கொண்டிருந்தார். 
'உங்களைப் போல் இன்னொரு கேர்ணல் இந்த சமூகத்தில் உருவாகி விடக் கூடாது என்று நினைக்கிறேன்' 'கட்டாயம் கட்டாயம் சொல்கிறேன்' என்றவர் உடனே 
'இதெல்லாம் திரட்டி வேலை செய்யப் போனால் உன்னைக் கொன்று விடுவார்களே' 
'உங்களைப் போல் தான் நானும் மரணத்துக்கு அஞ்சவில்லை. எனது தந்தையும் வீரச் சாவடைந்தார். நானும் வீரச் சாவுதான் அடைய வேண்டும் என்று எழுதியிருந்தால் அதை யார் மாற்ற முடியும். எனது ஆயுதம் இதுதான். இன்னும் இது போன்று பல்வேறு ஆயுதங்கள் இருக்கின்றன' 
என்று பேனையையும் ரெகோடரையும் கெமராவையும் காட்டினேன். 
நீண்ட காலத்திற்குப் பின் அவர் மனம் விட்டுச் சிரித்தார். 
'இதனால் உயிரைக் கொல்ல முடியாது. ஆனால் தலை விதியை மட்டுமல்ல ஒரு சமூகத்தையே மாற்ற முடியும். இரத்தம் சிந்தாமல்' என்றேன் 
'உலகம் மாறி விட்டது நீங்களாவது புத்திசாலிகளாக இருங்கள். எங்களைப் போல வழி தவறிவிடாதீர்கள்' 
'எனக்கு முதல் உங்கள் மரணம் நிகழ்ந்தால் நிச்சயம் அதில் நான் கலந்து கொள்வேன் அதை வீடியோவும் எடுப்பேன்' 
'தம்பி வேண்டாம் நான் ஒரு நல்ல முன்னுதாரணமாக இருந்தால் பரவாயில்லை. நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று மரணச் சடங்கில் நீ கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கக் கூடாதென்று' 
'அதை இறைவன் தீர்மானிக்கட்டும்' விடைபெற்றேன். 
எனது சமூகம் இன்னும் எத்தனை கேர்ணல்களைச் சுமந்து நிற்கிறதோ என்று மனது கனத்துப் போனது. இதெல்லாம் மாறும்  நிச்சயம் மாற்றப்படனும்,
தூரத்தில் இருந்து விமர்சிப்பவர்கள் இதையெல்லாம் சீர்திருத்தக் கூடாதா கேள்விகளுக்கு மேல் கேள்விகளும் பதில்களுமாய் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது.
0  0   0
மீண்டுமொரு நாள் கேர்ணலை சந்தித்தேன், எனக்காக அவர் நிறையத் தகவல்களைச் சேகரித்து வைத்திருந்தார் அனைத்தையும் அவர் குரலிலேயே பதிவு செய்து கொண்டேன்.
விடைபெற்றுக் கொண்ட போது என்னைக் கட்டித் தழுவி 'முஸாபஹா' செய்து கொண்டார். 
மறுநாள் அதிகாலை செய்தி வந்தது. 
சுபஹத் தொழுகைக்காக சென்று கொண்டிருந்த கேர்ணல் லத்தீபை வீதியில் யாரோ சுட்டுக் கொன்று விட்டார்களாம். அவர் சொன்னது போல் அவரது பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொண்டான் போலும் அவர் ஜனாசாவில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. 
இந்த ஆயுதங்களுக்கு முடிவு கட்டாமல் ஓய்வதில்லை என்றும் முடிவெடுத்துக்கொண்டேன். 
சில மாதங்களின் பின்னர் கேள்விப்பட்டேன் 
கேர்ணல் லத்தீபின் மகனின் கொள்ளைக் கோஷ்டி ஆயுதங்களுடன் பிடிபட்டதாம் என்று, 
நான் நினைத்துக்கொண்டேன், அவர் பெயரைச் சொல்லியே அவர் மகன் தூற்றப்படுவான் என்று அவர் சொன்னது உண்மையானது. 
இந்த சமூகத்தால் பராமறிக்கப்பட முடியாத அவர் மகனை அரசாங்கம் பராமறிக்கப் பொறுப்பேற்றுக்கொண்ட திருப்தி. 

நான் கேர்ணலின் பதிவு செய்யப்பட்ட உரையாடலை மீண்டுமொரு முறை கேட்டு எழுதத் தொடங்கினேன்.

Tuesday, July 24, 2012

ஹராங்குட்டி



பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.... 

என்று தொடங்கி அல்குர்ஆனின் ஓதல் ஒலி அழகான மெல்லிய ராகத்தில் அதிகாலைப் பொழுதின் அமைதிக்கு கூடுதல் இதம் சேர்த்து வியாபித்துப் பரவியது. கிராஅத்தின் ஈர்ப்பு அவனை அப்படியே கண்களை மூடி ரசிக்க வைத்தது. 
சுபஹூத் தொழுகையை முடித்துவிட்டு மிக நீண்ட பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த அவனை அந்த ஓதல் ஒலி ஒரு அமைதியான பிரதேசத்திற்கு அழைத்துச் சென்ற மாதிரி இருந்தது. ஒருவித சிலிர்ப்பு அவனுள் பரவியது. அதை ஆழமாக அனுபவித்து உணர்ந்தான். அவனது கண்கள் கலங்கின கண்ணீர் பொலபொலவென்று கொட்டியது. ஏன் அழுகின்றான் என்பது கூட அவனுக்கு விளங்கவில்லை. சம்பந்தமில்லாது சம்பந்தமில்லாது பலகாட்சிகள் ஒன்று விட்டு ஒன்றாக மனத்திரையில் தோன்றி மறைந்தன.
 எல்லாவற்றுக்கும் நிறைய காரண காரியங்கள் இருந்தன. ஆனபோது அது எல்லாமும் அவனது மனதில் பதியவில்லை. எதுவும் அவனில் சலனத்தை உண்டுபண்ணவில்லை. 
அவர்கள் ஓதிக்கொண்டிருந்த அரபு வாசகங்களின் அர்த்தத்தினை மனதில் உருவகப்படுத்தத் தொடங்கியபோது அவனுக்காகவே போல 
'உங்களில் சிலரைக் கொண்டு நாம் அநியாயங்களை தடுக்கவிட்டால் இந்த பூமி குழப்பங்களால் நிறைந்து சீர்கெட்டுவிடும். 
அவனது மனது இறையச்சத்தால் கனத்துப் போனது இடுப்பில் மறைந்து இருந்த துப்பாக்கியை ஒருமுறை தடவிப் பார்த்துக் கொண்டான். 
மெதுவாகத் தலையை திருப்பி ஓதிக் கொண்டிருந்த மாணவர்களை உற்று நோக்கினான். 
யாரையோ தேடினான் போலும், தேடிய நபரைக் காணவில்லை. அவன் பார்வை வெறுமையாய் மீண்டது.

வெள்ளை சார்ந்த லுங்கி கட்டி, வெள்ளை நிறத்தில் நீண்ட ஜூப்பா அணிந்து, வெள்ளைத் தலைபாகை கட்டி, நீண்டு பின்னால் தொங்கிய தலைப்பாகையின் ஒரு பகுதியை அப்படியே கழுத்து ஓரத்தால் எடுத்து தோளைத் தாண்டி மார்புப் பகுதியில் தொங்கவிட்டபடி முன்னும் பின்னுமாய் இருந்த இருப்பிலேயே உடலை அசைத்தபடி ஓதிக் கொண்டிருந்த மௌலவி மாணவர்களின் அந்த ஒருமித்த அழகு கண்கொள்ளாக் காட்சியாக விரிந்தது. ராகமெடுத்து உயர்ந்த தொனியில் ஓதிக் கொண்டிருந்த மௌலவி மாணவர்களின் முகத்தை அர்த்தத்தோடு தனித்தனியாக அவன் உற்று நோக்கினான். அவனுக்கு ஏதோ தேவைப்படுகிறது. அது இன்னும் சரியாக கிளிக் ஆகவில்லை. 
அப்போது தான் அவன் முகம் பிரகாசமாகியது. அழகான ஒரு சிறுவன் தளர்ந்த நடையோடு பள்ளியினுள் நுழைந்தான் அலட்சியமாகக் குர்ஆனைத் தூக்கிக்கொண்டு வெறுப்போடு எல்லோருடனும் அமர்ந்தான். எந்த உணர்வுமற்று சுருதியற்ற தொனியில் குர்ஆனை ஓதத் தொடங்கினான். அந்த மௌலவி மாணவனையே அவதானித்தபடி மெதுவாக எழுந்து வெளியேறிச் சென்றான். 

அதிகாலை இளந் தென்றலின் குளிர் அவனுக்கு இதமாக இருந்திருக்க வேண்டும். ஒரு நீண்டமூச்சை இழுத்து விட்டான். 

அந்தப் பள்ளிவாயல் மிகவும் கம்பீரமாக இருந்தது. அழகான தோற்றம், அதையொட்டி ஒரு அரபுக் கலாசாலை அதில் இருநூறு மாணவர்கள். இஸ்லாம் மார்க்கத்தைக் கற்பதற்காக நாட்டின் நாலாப் பாகங்களிலிருந்தும் அங்கே தமது பிள்ளைகளைக் கொண்டு வந்து விட்டிருந்தார்கள் பெற்றோர். அவர்கள் கற்பனை கொண்டிருந்தார்கள். 
எல்லாமும் சரியாக நடப்பதாயும் தம் பிள்ளைகள் சத்தியத்தில் நிலைத்திருப்பதாயும் தமது பிள்ளைகள் நாளையொரு நாள் சமயப் பிரச்சாரர்கள் என்றும், போதகர்கள் என்றும், தூய்மையான சூழலில் அவர்கள் வளர்க்கப்படுவதாயும், கருத்துக்கள் உறுதியான போது களங்கத்தை அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை. மதபோதகர்களை மக்கள் அப்படித்தான் கௌரவப்படுத்தினார்கள். 

ஆயினும் அவர்களுக்கான உரிய இடம் சரியாகக் கொடுபடவில்லை. ஏழு வருடங்கள் இஸ்லாமிய சட்டக்கலை தர்க்கவியல், பெருமானார் போதனைகள், இறைவனின் திருமறையான அல்குர்ஆன் இஸ்லாமிய வரலாறு என பல்துறைசார் விடயங்களை கற்பதற்கு மூலமான அரபு மொழியையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது அடிப்படை அதற்காகவே அதிக காலத்தை அவர்கள் செலவிட்டார்கள். இப்படி ஏழு வருடங்களும் கற்றுத் தேறுபவர்கள் வெகு சொற்பமான தொகைதான். அவர்களில் மிகத் தரமானவர்கள் பத்தில் இரண்டு பேர் என்று கணக்கீடு செய்யலாம். 

மற்ற எல்லா மௌலவிகளும் டம்மி பீஸ்தான் ஆழ்ந்த அறிவும் கிடையாது. தெளிவும் கிடையாது. அரபு மொழியில் கூட புலமை கிடையாது, ஏதோ சமூகத்தில் பிழைப்பு நடாத்துவதற்காக பள்ளிவாசல்களில் தஞ்சமடைந்து பெரிய தாடியும் வைத்துக்கொண்டு மார்க்கப் போதனை என்ற பெயரில் கழுத்தறுக்கும் பேர்வழிகள். அவர்களால் துளியளவு மாற்றத்தையும் செய்ய முடியாது. பேசிக் கொண்டே இருப்பார்கள். அதற்கு அவர்களுக்கு சம்பளம் கிடைக்கும். ஒழுக்கத்திலும் ரொம்பவே போதாது. போதனை செய்வது மட்டும் தான் தமது பணி அவற்றை வாழ்வில் அமுல்படுத்துவது. அதெல்லாம் இரண்டாம் பட்சமான அம்சம். 

இன்னும் ஆழமாகச் சொன்னால் சமூகத்தில் தன்னை அந்தஸ்துள்ள மனிதர்களாய் நிலை நிறுத்திக் கொள்வதற்கு அவர்களுக்கு ஒரேயொரு வழி இருக்கிறது. ஏதாவது ஒரு இஸ்லாமிய இயக்கத்தில் அங்கத்துவம் பெற்று அந்த இயக்கத்தை வளர்க்கத் தம் பிரதேசத்தில் தொண்டு செய்வது. இவர்களை வைத்தே அந்த இஸ்லாமிய இயக்கம் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடும் கம்பனியாகி விடும் இதெல்லாம் ஊர் அறியாத உச்ச ரகசியம் ஆனால் பரகசியமானது. பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பது போல. 

யாரோ ஒரு அரபு நாட்டுப் பரோபகாரி கொடுத்த நன்கொடையில் ஊர் ஊராக அந்த இயக்கம் கிணறு வெட்டும், வீடு கட்டும், உணவுப் பொதிகள் பங்குவைக்கும் அவசர நிலைமைகளில் சாப்பாடு கொடுக்கும், குர்பானி கொடுக்கும் இதற்கெல்லாம் சம்பளமில்லாது செயற்படும் அதிகாரிகளாக இந்த மௌலவிகளும் அவர் பின்னால் இருக்கும் தொண்டர்களும் பயன்படுத்தப்படுவார்கள் அனைத்துத் திட்டங்களிலும் நூற்றில் குறிப்பிட்டதொரு பகுதி லாபம் இருக்கும் அனுபவிக்கும் உரிமை இஸ்லாமிய இயக்கம் என்ற கம்பனிக்கு மட்டுமே உரித்து. எல்லா சேவைகளும் செய்து முடித்த பின்னர், அவர்கள் அனைவரும் சேர்ந்து சமூகத்திற்கு ஒரு சான்றிதழ் கொடுப்பார்கள்
'எவ்வளவுதான் செய்தாலும் நன்றிகெட்ட மக்கள் 
உண்மையான மாற்றத்தை விரும்பும் தியாக மனப்பாங்கு கொண்ட ஒழுக்கமான மௌலவிகளுக்கு இப்படிப்பட்டவர்கள் செய்யும் வேலைகளால் எப்போதும் இடைஞ்சல்தான். கெட்டபெயர் அந்த நல்ல மனிதர்களையும் சேர்த்தே பதம் பார்த்துவிடுகிறது. பாவம் அந்த நல்லவர்கள் இறைவனிடம் பாரத்தை சுமத்திவிட்டு அமைதிகாப்பார்கள்.

அவனைப்பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும், அவன் ஒரு வித்தியாசமான பேர்வழி, அவனுக்கு யார் மீதும் வெறுப்பு கிடையாது அது போல எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளவும் மாட்டான். சில விடயங்களுக்காக  அவன் நியாயமாகக் கோபப்படுவான். அவனது கோபம் எல்லை கடந்து விட்டால் துப்பாக்கியைத் தூக்கி சரிபார்த்து தயார்படுத்தி இடுப்பில் செருகிக் கொண்டு சென்று விடுவான். பெரிய பிரச்சினைக்குத் சிறிய செலவில் தீர்வு கண்டுவிட்டு அதாவது முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, அமைதியாகவே அவன் தன் காரியங்களில் மிகவும் இயல்பாக ஈடுபடுவான். அவன் மிகவும் நிதானமானவன். சமய விடயங்களில் மிகவும் பேணுதலானவன். சமூக விவகாரங்களில் முன்னணியில் நிற்பான். அவனைப் புரிந்து கொள்ளவே முடியாது. ஒரு சாந்த சொரூபி. அமைதியான எரிமலை, தென்றல் போல உலாவரும் புயல். இன்று பள்ளிவாசலில் மையங் கொண்டிருக்கிறது. நிச்சயமாக ஏதோவோர் பலமான காரணம் இருக்கும். அவன் விசயத்தில் யாரும் எதையும் அவ்வளவில் எளிதில் தீர்மானித்து விடவும் முடியாது. அனுமானித்து விடவும் முடியாது. 

பள்ளிவாயலின் வெளிச் சூழலையும் அதனோடு இணைந்திருந்த அரபுக் கலாசாலையின் வெளிச் சூழலையும் அவன் அங்குலம் அங்குலமாக அளவீடு செய்து கொண்டிருந்தான். 
ஒரு துல்லியமான திட்டமிடலின் வெளிப்பாடும் கூர்மையும் அவன் கண்களில் தெரிந்தது. அனைத்தையும் தீர்மானித்து விட்டுதான் களத்தைத் துணிவான். அவன் இயல்பு அப்படி, பெரும்பாலும் அவனைத் தனிமையில்தான் காணமுடியும். 

மௌலவி மாணவர்கள் அல்குர்ஆனை ஓதி முடித்திருக்க வேண்டும் பள்ளிவாயலில் சிரிப்பொலி வெளியேயும் எதிரொலித்தது. அவன் எட்டிப் பார்த்தான், அவர்கள் அனைவரும் வரிசையாக விடுதிக்குச் செல்லத் தயாரானார்கள் போலும், 
அப்போது அவன் உள்ளே நுழைந்து பார்வையைப் படர விட்டான்,  
சோர்வோடு எதையும் அலட்டிக்கொள்ளது வெற்றுப் பார்வைகளை வீசியபடி இருந்த அந்த மாணவனிடம் சென்று அமர்ந்தான். 
அந்த மாணவனின் கண்கள் பிரகாசமாகின. முகம் சோர்வைக் களைத்தெறிந்து பொழிவு பெற்றது. எதிர்பார்ப்புகளுடன் அவனை உற்றுநோக்கிய மாணவனின் கரங்களைப் பற்றியபடி கேட்டான். 
எங்கே அவன்? 
'உள்ளே இருப்பதாக பார்வையால் பதில் சொன்னான் மௌலவி மாணவன்.
'இன்னும் பிரச்சினையா? இது அவன்
'ஆமாம் என்று தலையசைத்தான்.
மிகவும் மோசமானவர்கள் எத்தனை பேர்? என்று கேட்க. ஒரு விரலைக்காட்டி ஒருவர்தான் என்று பதிலளித்தான். அவன் பார்வையை ஒரு முறை சுழல விட்டான். 
தம்பி நீயும் உள்ளே போ எல்லோரும் போய்விட்டார்கள். என்றதும் அந்த மௌலவி மாணவனும் எழுந்து உள்ளே செல்லத் தயாரானபோது 
'நீ எதற்கும் கவலைப்படாதே எல்லாம் நல்லபடி முடியும்' என்றான் 
அந்த மௌலவி மாணவனும் தலையசைத்தபடி மகிழ்வுடன் சென்றான். 
மெதுவாக எழுந்து அவன் பள்ளியை விட்டு வெளியே சென்றான். பெருமூச்சுடன் சலனமற்ற முகத்துடன் நேரம் பார்த்தான்.

நேரம் காலை ஆறு முப்பது ஆகியிருந்தது. சூரியன் அப்போதுதான் மெதுவாகப் எட்டிப் பார்த்தது. நேராகச் சென்று ஒரு கடையில் அமர்ந்து குடிப்பதற்கு தேயிலை கொண்டுவருமாறு பணித்துவிட்டு ஒரு ரொட்டியை எடுத்து மெதுவாகக் கடித்து அதை அசைபோட்டபடி அன்று இரவு வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தை எடுத்துப் படித்தான்.
ஓரினச் சேர்க்கைக்கு ஒத்துழைப்பு - இஸ்லாத்தை இலக்கு வைக்கும் அந்நிய சக்திகள் 
என்பதுதான் அதன் தலைப்பு. 
இஸ்லாம் முற்றாகத் தடைசெய்த ஓரினச் சேர்க்கைக்கு ஒத்துழைப்பு நல்க இன்று முஸ்லிம் சமூகத்தின் இளைஞர் யுவதிகள் திட்டமிட்டு உள்வாங்கப்பட்டு ஓரினச் சேர்க்கை செய்வது அவரவர் உரிமை என்ற அடிப்படையில் மூளைச் சலவை செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கு சில மௌலவிமாரின் ஒத்துழைப்பும் குறிப்பிட்டதொரு யூத நிறுவனத்தால் பெறப்பட்டுள்ளது.. 
என்று நிறையத் தகவல்களை வழங்கி சமூகத்தை விழிப்பூட்டல் செய்யும் பிரகாரம் அந்தத் துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டிருந்தது. அதன் கீழ் பிரதேச ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் இஸ்லாமிய தஃவா இயக்கங்கள் என்று உரிமையும் கோரப்பட்டிருந்தது. ஆனபோதும் விநியோகிப்பதற்கு மட்டும் தைரியமில்லாது போயிற்று போல அதனால்தான் எங்கும் வீசப்பட்ட நிலையில் மக்கள் பொறுக்கியெடுத்து வாசித்தார்கள். 

எதுவும் பண்ண முடியாது. ஓரினச் சேர்க்கை அவர்கள் உரிமை என்று வெளிநாட்டுப் பணத்தில் பிழைப்பு நடாத்தும் ஒரு ஊதாரி சொன்னான். 
என்னதான் நியாயப்படுத்தினாலும் எதையும் சகித்துக்கொள்ள முடியவில்லை போலும் அவனால் மிகவும் கோபமாக இருக்கிறான் என்பதை புருவங்களின் சுழிப்பில் மட்டுமே விளங்க முடியும். 
அந்தளவுக்குப் பழகிப்போயிருந்தான். 
உணர்ச்சிகள் எதையும் முகத்தில் காட்டாமல் அப்படியே மறைத்துப் போகுமளவுக்கு 
அவனைப் பொறுத்தவரைக்கும் எப்போதுமே ஒரு அப்பாவிதான். 
அவனால் யாருக்கும் எந்தத் தொல்லையும் கிடையாது. யாருக்கும் எந்த இடைஞ்சலும் கிடையாது அப்படியொரு அமைதி. 
ரொட்டியும் சாப்பிட்டு, தேயிலையும் குடித்து அங்கிருந்து வெளியேற அவனுக்கு நாற்பது நிமிடங்கள் எடுத்திருந்தது. வெள்ளிக்கிழமை என்பதால் பஸார் சன நடமாற்ற மற்றிருந்தது. ஆங்காங்கே இருந்த ஹோட்டல்கள் மட்டும் திறந்திருந்தன. 
அவன் அப்படியே ஒரு நோட்டம் விட்டவாறு மீண்டும் பள்ளிவாசலினுள் நுழைந்தான். 
வுழுச் செய்து கொண்டான். 
இரண்டு ரக்அத்து ழுஹா தொழுதான். மீண்டும் எழுந்தான். இன்னும் இரண்டு ரக்அத்துகள் இஸ்திஹாரா தொழுதான். 
நீண்ட பிரார்த்தனையில் ஈடுபட்டான். 
அவனது கண்கள் கலங்கி கண்ணீர் சொரிய வானை நோக்கி ஏந்தப்பட்ட கரங்களும் வானை நோக்கிய பார்வையும், இறைவனைச் சரணடையும் ஒருவன் இப்படித்தான் இருப்பான் என்பதற்கு விளக்கம் சொல்வது போலிருந்தது, அதற்கு அவனும் ஒரு பொருத்தமான உதாரணமாகியிருந்தான். 
பிரார்த்தனையின் பின்னர் அவனது உள்ளம் சாந்தி அடைந்திருக்க வேண்டும். பள்ளவாயிலை நோட்டமிட்டான். வெளிப் சப்தங்களுக்கு காது கொடுத்தான். மொளலவி மாணவர்களின் சிரிப்பொலியும் கதைச் சப்தமும் குதூகல ஓசையால் ஒலித்தது. அவர்கள் சந்தோஷமாயிருக்கிறார்கள். அதற்காக நகைச்சுவைகள் சொல்லி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருமித்த சிரிப்பொலி அப்படித்தான் எண்ணத் தூண்டியது. 
மத்ரசாவிலிருந்து நீண்ட தாடியுடன் ஒரு மௌலவி வந்தார். நேராக அவன் அருகே வந்தவர் அழுது வீங்கியிருந்த அவனது முகத்தைப் பார்த்தபடி அவனருகே அமர்ந்து கொண்டார். அவன் சுறுசுறுப்பானவள் மௌலவியின் கரங்களைப் பற்றினான் மௌலவி எதுவும் புரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். தனது சட்டைப்பையில் இருந்த துண்டுப் பிரசுரத்தை எடுத்து அவரிடம் நீட்டினான். அவரும் அதைப் பார்த்தார். 
'நான் வாசித்தேன்' என்றார் 
'என்ன மௌலவி நடக்குது இந்த சமூகத்தில் 
'அல்குப்ரு மில்லதுன் வாஹிதா – எல்லா காபிர்களும் ஒரே அணியில் இருப்பார்கள். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழித்துவிடுவதில் அவர்கள் தமக்கிடையே ஒத்துழைப்பாக இருப்பார்கள். முஸ்லிம்களுக் கெதிராக அவர்கள் தமது முரண்பாடுகளை மறந்து ஒன்று படுவார்கள் 
'இதன் சூத்திரதாரி யார் மௌலவி 
'வேறு யார் யூதர்கள் தான் இஸ்லாத்தை அழிக்க உலகளாவிய அளவில் அவர்கள்தான் செயற்படுகின்றார்கள். நமது நாட்டில் உள்ள இந்த இயக்கத்துக்கும் அவர்கள் தான் பணம் கொடுக்கிறார்கள்.  அந்த பணத்தைப் பெற்றுக் கொண்டுதான் இஸ்லாம் ஹராமாக்கிய எல்லாவற்றையும் மக்கள் மத்தியில் பரப்புகிறார்கள் இதையெல்லாம் சமூகம் தட்டிக் கேட்காததால் தான் எல்லோரும் மிஞ்சிப் போகிறார்கள். 
'ஓரினச் சேர்க்கைக்கும் இந்த அமைப்புக்கும் என்ன சம்பந்தம் மௌலவி
'இந்த இயக்கம் ஆணும், ஆணும், பெண்ணும், பெண்ணும் திருமணம் செய்யலாம் உறவு கொள்ளலாம் என்று மக்கள் மத்தியில் போதிக்கிறது. அதற்கு அமெரிக்க யூதர் அமையம் பணம் கொடுக்கிறது. அமெரிக்காவும், யூதர்களும எப்போதும் முஸ்லிம்களின் எதிரிகள் தான். அவர்களுக்கு எதிராக நாம் போராட வேண்டும். அல்லாஹ் கட்டமைத்து வைத்துள்ள எல்லா ஒழுங்குகளையும் சிதைத்து மனிதர்களின் அழிவின் பக்கம் அழைத்துச் செல்வதுதான் அவர்களின் நோக்கமும் இலக்கும். 
'சரி மௌலவி இந்த விசயம் எப்படி தெரியவந்தது. 
அதுதான் அல்லாஹ் செய்த மாபெரும் கிருபை இஸ்லாத்துக்கு எதிராக முஸ்லிம்களே பணம் பெற்றுக்கொண்டு செயற்படுகின்றார்கள் அவர்களே அந்த தன்னினச் சேர்க்கையை நியாயப்படுத்தும் நிறுவனத்துக்கு தமது சமூகத்தின் இளைஞர்களையும் யுவதிகளையும் செமினார் என்று அழைத்துச் சென்று இது போன்ற இஸ்லாத்துக்கு விரோதமான கருத்துக்களை அவர்கள் மனதில் விதைத்து வழிகெடுக்க முயற்சி செய்கிறார்கள். அல்லாஹ் அதைத் தடுத்து விட்டான். 
'மௌலவி ஓரினச் சேர்க்கை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? 
'நபி லூத் அலைஹிஸலாம் அவர்களுடைய சமூகம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டால் தான் அந்த சமூகத்தை அப்படியே தலைகீழாகப் புரட்டி அல்லாஹ் அழித்தான். அந்தளவு மோசமான செயலது. 
'இப்போதுள்ள சூழலில் நமது சமூகத்தில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது மௌலவி? 
'என்னைப்பொறுத்தவரைக்கும் அவனை நடு வீதியில் வைத்துச் சுட்டுக்கொல்ல வேண்டும். என்ன செய்வது இந்த நாட்டில் அப்படிச் செய்ய முடியாதே' 
மௌலவி ஆதங்கப்பட்டார். 
'ஓரினச் சேர்;ககை ஹரமானது என்பதை எப்படி மௌலவி ஊருக்குப் தெரியப்படுத்தலாம்?
'இன்றைக்கு குத்பாப் பேருரை இது பற்றியதுதான். மக்களை இந்த யூத சதியில் இருந்து பாதுகாப்பது பற்றி தான் இன்று குத்பா செய்யப் போகிறேன். நம்மால் முடிந்ததைத் தான் நாம் செய்யலாம். 
'இந்தத் தீமையை எப்படித் தடுக்கலாம் மௌலவி 
ஓவ்வொருவரும் அவரது பலத்தைப் பொறுத்து தீமையைத் தடுக்கும்படி முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லாம் சொல்லி இருக்கிறார்கள். ஒரு தீமையைக் கரங்களால் தடுக்க முடிந்தால் கரங்கலால் தடுக்க வேண்டும். அல்லது பேசி வார்த்தைகளால் தடுக்கும் பலமிருந்தால், அப்படி முடிந்தால் வார்த்தைகளால் தடுக்க வேண்டும். எதற்கும் பலமில்லா விட்டால் மனதால் வெறுத்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும். அதுதான் இஸ்லாம் நமக்குக் காட்டும் ஒரே வழிமுறை.
மௌலவியின் போதனைகளை அப்படியே உள்வாங்கிய அவனது முகம் சிவந்து போயிருந்தது. 
சற்று முன்னர் இறை சந்நிதானத்தில் சிரம் தாழ்த்தி அழுது வீங்கிய அவன் கண்களில் தீட்சன்யமாய்த் தெரிந்தது.
அவன் மௌலவியின் கரங்களைப் இறுகப் பற்றினான்.
மௌலவி அவனை வியப்போடு பார்த்தார் 
அவன் சொன்னான். 
'மௌலவி நான் ஒரு பாவி! நான் ஒரு கொலைகாரன் ஒரு உயிரைப் பறித்து பெரும் பாவியாகிவிட்டேன் என்றான். ஆச்சரியத்துடன் உற்று நோக்கிய மௌலவி கேட்டார், 
'அப்படி என்ன செய்து விட்டாய்? ஏன் கொன்றாய்...? 
'தன்னினச் சேர்க்கையில் ஈடுபட்ட ஒருவனைக் கொன்று விட்டேன். எனக்கு மன்னிப்பு இருக்கிறதா? 
'தம்பி கவலைப்படாதே நீ ஒரு பாவியைத்தான் அழித்திருக்கிறாய்? நீ சமூகத்திற்கு நன்மை தான் செய்திருக்கிறாய். நீ அல்லாஹ்விடம் தொழுது அழுது மன்னிப்புக் கேள். அவன் உன்னை நிச்சயம் மன்னிப்பான்.
'அது சரி மௌலவி இந்த மத்ரஸாக்களில் மாணவர்களை இப்படி தன்னினச் சேர்க்கைக்கு பெரிய ஹஸ்ரத் மார் பயன்படுத்துவதாக ஒரு செய்தி கேள்விப்பட்டேன். உண்மையா? 
அவர் அதிர்ந்து போனார். 
'மத்ரசாக்களிலா அந்த ஹராம் அல்லாஹ்வின் போதனையை படிப்பிக்கும் இடத்திலுமா? 
அவர் கேள்விகளில் ஆச்சரியம் தொனித்தது. 
'ஆமாம் மௌலவி பெரும்பாலும் எல்லா மத்ரசாக்களிலும் மௌலவிமார் அங்குள்ள மாணவர்களை தன்னினச் சேர்க்கைக்குப் பயன்படுத்துவதாக நான் நிறையக் கேள்விப்பட்டேன். அப்படி பாதிக்கப்பட்ட பல மாணவர்கள் மத்ரசாக்களை விட்டும் ஓடி இருக்கிறார்கள். இப்படி பாதிக்கப்பட்டு மனமுடைந்து போன உங்கள் மத்ரசாவின் ஒரு மாணவன் தற்கொலை செய்ய முற்பட்ட போது நானே அவனைப் பாதுகாத்தும் இருக்கிறேன். இப்படியான செயல்களை எப்படி மௌலவி தடுக்கலாம்? 
'எங்கள் மத்ரஸாவிலா...? 
கேள்வியோடு மௌலவி விரைத்துப் போய் இருந்தார் அவரால் எந்தப் பதிலும் சொல்ல இயலவில்லை அவன் சொன்னான். 
'மௌலவி இப்படி செய்பவர்களை நடுரோட்டில் வைத்துச் சுட்டுக் கொல்லலாம் தானே! இந்தப் பாவத்தை எனது சக்திக்கு உட்பட்டுத் தடுக்கலாம் தானே. நான் செய்யும் அந்தக் கொலை சமூகத்துக்கு நன்மை தானே. எனக்கு மன்னிப்பும் இருக்கிறது தானே! 
அவன் சொல்லிக்கொண்டே போனான். அவர் அவனுக்குச் சொன்ன போதனைகளில் சாரம்சமாய் அனைத்தையும் சொல்லி முடித்துவிட்டு இருப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்தான். 
மௌலவியின் நெற்றிப் பொட்டில் வைத்தான். 
'எத்தனை மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடி இருக்கிறாய்? இனி மேலும் நீ உயிரோடு இருக்கத் தேவையில்லை. 
விசையை அழுத்தினான் 
'டப்' என்று ஒரு சிறு சப்தம் கேட்டது. 
இரத்தம் எங்கும் தெரிக்க மிம்பர் மேடைக்கு முன்னால் மௌலவி நீண்ட தாடி குருதியில் நனைய வெள்ளை ஜூப்பா சிவப்பாக மாற சரிந்து விழுந்தார் பள்ளிவாயலின் நடுவே
காற்று போல அவன் மறைந்தான்.
மொத்த ஊரும் பள்ளிவாயலில் கூடியது. மௌலவியை யாரோ பள்ளிவாசலில் வைத்து சுட்டுக் கொன்று விட்டார்களாம் என்ற செய்தி பரபரப்பாய் பரவியது. பொலிசாரும் விரைந்தார்கள் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பமாகின எந்தப் பயனுமில்லை. ஒரு தடயமும் இல்லை. குருதியில் நனைந்தபடி மௌலவியின் ஜூப்பா பையிலிருந்து சில பேப்பர்களை எடுத்தார்கள். அதில் அரபியிலும் தமிழிலுமாக ஏதோ எழுதியிருந்தது. இன்றுமொரு மௌலவியிடம் அதைக்கொடுத்து என்னவென்று கேட்டார்கள். 
அவரும் அதைப் பார்த்து விட்டு 
'இன்று வெள்ளிக்கிழமை இவர்தான் குத்பா பிரசங்கம் செய்ய வேண்டும். அந்தப் பிரசங்கம் தான் இது. என்றார். 
'என்ன தலைப்பில் இருக்கிறது. 
என்று பொலிஸ் அதிகாரி கேட்டார். 
'ஓரினச் சேர்க்கை சம்பந்தமாகவும் அதைத் தடுப்பதற்கும் அமெரிக்க மற்றும் யூத சதிகளுக்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்று திரள வேண்டியதன் அவசியம் பற்றியும் அதில் எழுதப்பட்டிருக்கிறது. என்றார் 
பொலிஸ் அதிகாரி பல கோணங்களிலும் விசாரணைகளை முடுக்கிவிட்டார். ஆன பலன் ஒன்றுமில்லை முகத்தைத் தொங்கப் போட்டபடி வெளியேறினார். 
ஒருவன் சொன்னான் 
'மௌலவி அமெரிக்கா மற்றும் யூதர்களுக்கு எதிராகத்தான் இன்று குத்பா செய்ய இருந்தாராம். அதனால்தான் அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். நிச்சயம் இதன் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் இருக்கும். 
பல்லாயிரம் பேரில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவன் மெதுவாக சிரித்துக் கொண்டான். ஒவ்வொருவர் கருத்தையும் ஆழமாக உள்வாங்கினான். இன்னொருவர் சொன்னார் 
'தன்னினச் சேர்க்கை செய்பவர்கள் பற்றி மௌலவி கடுமையாக சாடி குத்பாப் பேருரை நிகழ்த்த இருந்திருக்கிறார். அதனால் தான் யாரோ கொலை செய்திருக்கிறார்கள். இரவு இது சம்பந்தமாக நோட்டீஸ் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. அப்படிப்பார்த்தால் அந்த இயக்கம் தான் மௌலவியைக் கொண்டிருக்க வேண்டும். எல்லோரும் எங்கோ தூரத்தில் நின்று யோசித்தார்கள்.
இஸ்லாத்தின் பெயரால் தஃவா இயக்கம் நடாத்தும் எல்லோரும் தமது ஒற்றுமையை வெளிப்படுத்தினார்கள். பத்திரிகைக்கு செய்தி சேகரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாது தமது மேதாவித் தனத்தை நிலை நிறுத்தும் வண்ணம் கருத்தும் சொன்னார்கள். 
எல்லோர் முகமும் சோகத்தாலும் அச்சத்தாலும் சந்தேகத்தாலும் வாடிக் கறுத்துப் போய் இருந்தது. என்ன நடந்திருக்கும் என்பதை அவர்களால் அனுமானிக்க முடியவில்லை. குழப்பத்தைத் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. 
சுற்றிலும் பரவியிருந்த இரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த உடலை எல்லோரும் அச்சத்தோடு நோக்கினர். 
ஏன் கொல்லப்பட்டார் என்று மட்டும் யாரும் தெரிந்திருக்க வில்லை. அவரின் மாணவர்கள் ஆச்சரியத்தோடு அவர் உடலைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

காலை முழுவதும் சோர்ந்த முகத்தோடு இருந்த மாணவன் மலர்ந்த முகத்துடன் அகோரமாய்ச் சரிந்து கிடந்த அவர் உடலை மலர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தான். அவன் சொன்னான் பக்கத்தில் இருந்த ஒருவரிடம் 
'மௌலவி ஒரு குற்றமும் செய்யாவிட்டால் ஏன் அவரை இப்படி பள்ளிவாயல் நடுவே அதுவும் வெள்ளிக்கிழமை இவ்வளவு கொடூரமாய்க் சுட்டுக் கொல்ல வேண்டும்? அவர் ஏதோ பெரிய தப்பு செய்திருக்கிறார் போல. 
அவன் சொல்லி முடிப்பதற்குள் ஒருவர் சொன்னார் 
'அதானே சும்மா ஏன் கொல்லப் போகிறார்கள்' 
மக்கள் மத்தியில் அதிர்ந்து பரவியது செய்தி. 
மக்கள் மனதில் கேள்விகள் பதிலை அன்மித்தது போல.  அமெரிக்காவையும், யூதர்களையும் விட்டுவிட்டு கொல்லப்பட்ட மௌலவியைச் சூழப் பதில் தேடத் தொடங்கினர். 
இன்னுமொரு முற்போக்குவாதி சொன்னான். 'யூதனுமில்லை மன்னாங்கட்டியுமில்லை இவரு எங்காவது போய் படுத்திருப்பாறு அதான் பள்ளில வெச்சே மண்டைல போட்டிருக்கானுங்கள் மௌலவி மாரும் மக்களும் படிப்பின பெறட்டும் என்டு
வெள்ளிக்கிழமை குத்பாப் பிரசங்கத்திற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. 
மௌலவியின் உடலை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக் கொண்டு சென்றார்கள். 
பள்ளிவாயலில் சனத்திரள் வழமையை விட ஜூம்ஆவுக்காக நிறையத் தொடங்கியது. 
பள்ளிவாயலின் பிரதான கதீப் குத்பாவுக்காக தயாராகிக் கொண்டிருந்தார். 
அவர் கைத்தொலை பேசி அலறியது. 
'அஸ்ஸலாமு அலைக்கும் மௌலவி! நான் ஹாலிக் மௌலவி பேசுரன் 
'வலைக்கும் ஸலாம் சொல்லுங்க மௌலவி
'விசயம் கேள்விப்பட்டேன் உங்களுக்கு யாராவது கோல் பண்ணினாங்களா? 
'என்ன விசயமா மௌலவி? 
'மத்ரஸா புள்ளையளோட லிவாத்ல ஈடுபட்டதால தான் அவர சுட்டதாம். அடுத்து என்னையும் சுடப்போராங்களாம் அதுக்குப் பிறகு உங்களயும் சுடப் போராங்களாம்... இனிப் பள்ளிக்குல்ல வச்சிதான் சுடுவாங்களாம். ....'
'எனக்கு யாரும் கோல் பண்ணல. யார் பண்ணினாங்கண்டு சொன்னாங்களா? 
'யாருண்டு தெரியா நம்பரும் விழல்ல... நான் ஹஜ்ஜூ டீம் ஒன்றக் கூட்டிட்டு போறத்துக்கு ரெடியா இருக்கன் போயிட்டு வந்து பேசுவம்.. 
'சரி மௌலவி' 
'அடுத்தது இன்டைக்கு குத்பா என்ன பன்னனும் என்டு உங்க ரூம்ல ஒரு கவர் இருக்காம் அதுல இருக்கர மாதிரி குத்பா செய்யட்டாம். மௌலவி ஹஜ்ஜ முடிச்சுட்டு வந்து நேர்ல சந்திக்கிறன். எல்லாத்தையும் கவனமா ஹேன்ட்ல் பண்ணுங்க. 
அந்த மௌலவி தொலைபேசியை வைத்திருக்க வேண்டும். 
இந்த மௌலவி வியர்த்து விருவிருத்துப் போனார். நேராக அவர் தனது அறைக்கு விரைந்து சென்று கதவைத் திறந்தார். ஆயினும் அது மூடி இருந்தது. வேகவேகமாக சாவியைத் தேடி எடுத்து கதவைத் திறந்தார். அவர் மேசை மீது வெள்ளை நிறத்தில் ஒரு கடித உறை. அவசர அவசரமாக உரையைப் பிரித்து உள்ளே அழகாக மடிக்கப்பட்டிருந்த சில தாள்களை எடுத்தார். 
பரபரப்புடன் படித்தார். 
தனது நெற்றி வியர்வையை ஒற்றியெடுத்தபடி இடிந்து போய் கதிரையில் சரிந்தார். 
அவர் மனதின் படபடப்பு முகத்தில் தெரிந்தது. 
நெஞ்சு அடைத்துக் கொண்டிருக்க வேண்டும். மார்பை தடவியபடி தொலைபேசியை எடுத்து அதில் குறிப்பிடப்பட்டிருந்த இலக்கத்தை சுழற்றினார்.
மறுமுனையில் ஹலோ என்றதும்
'மௌலவி நான் பைசல் மௌலவி பேசுறன். உங்கள் ரூம்ல... 
அதிர்ச்சி செய்தியாய்ச் சொல்லிக் கொண்டிருந்தார். 

பள்ளிவாயலில் கூட்டம் குறைந்தபாடில்லை. ஒரு பரபரப்பான நாள் எல்லோரும் ஆளுக்கொரு கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள். உண்மை என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. கூட்டம் கூட்டமாக நின்று எல்லோரும் ஆலோசித்தார்கள். கருத்துச் சொன்னார்கள். இறந்து போன மௌலவிக்கு சார்பாகவும் எதிராகவும், நடுநிலையாகவும் கருத்துகள் பறந்தன. 
மௌலவி ஏன் கொல்லப்பட்டார்? 
அதற்கு பள்ளிவாசலை தேர்ந்தெடுக்க காரணம் என்ன? யார் இதைச் செய்திருப்பார்கள்? 
வெளிப்படையாய் எதுவும் தெரிந்தபாடில்லை. ஏதோவோர் காரணி அதுவும் பலத்ததொரு காரணி இருக்கிறது. அது என்னவென்று தான் தெரியவில்லை. 
குத்பாவுக்கு வழமையை விட அதிகமான கூட்டம். வாழ்வில் பள்ளிக்கே வராதவனெல்லாம் கூட ஒரு தொப்பியை மாட்டிக் கொண்டு பள்ளிவாயல் முன்றலில் நிற்க இனிமையான குரலில் பாங்கொலி எங்கும் பரவியது. 
மக்களின் பரபரப்பு இன்னும் அடங்கியதாக இல்லை. இன்றைய குத்பா நிச்சயம் இந்த மரணம் பற்றியதாகவே இருக்குமென்பது மட்டும் எல்லோரினதும் எதிர்ப்பார்ப்பு.
 மக்கள் மிம்பரையே வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்கள். 
மௌலவி மிம்பரில் ஏறினார். 
அவர் முகத்தில் அச்சம் அப்பியிருந்தது. அடிக்கடி எச்சில் விழுங்கினார். எல்லா வார்த்தைகளும் தட்டுத்தடுமாறி வந்தன. அவரால் பேச முடியவில்லை. நாவரண்டு பிரண்டது. 
ஒரு பீரங்கிப் பேச்சாளன் வெற்று வேட்டாக மாறியிருந்தார் அவர் கண்களில் மரணபயம் தெரிந்தது. 
எவனோ ஒருவன் தன்னையும் துப்பாக்கியுடன் குறிவைத்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதன் விளைவு என்பதை அவரைத் தவிர வேறு யாரும் அறிந்திருக்கவில்லை. 
கொல்லப்பட்ட மௌலவியின் மரணம் அவரை சோகங் கொள்ளச் செய்திருப்பதால் பேச முடியாமல் தவிப்பதாய் மக்கள் நினைத்தனர். 
0 0 0
வீதியோரமாய் பள்ளியை நோக்கி ஒரு முதியவர் நடந்து கொண்டிருந்தார். 
அவரைப் பார்த்து ஒருவன் கேட்டான். 
'என்ன மாமா பிரச்சினையாம்?
'ஓ! மகன் யாரோ ஒரு ஹராங்குட்டி மௌலவிய பள்ளிவாசலில் சுட்டுப் போட்டானாம்
'என்ன மாமா, ஹராங்குட்டி மௌலவியையா? 
'இல்லடா மன எவனோ ஒரு ஹராங்குட்டி...  நம்மட மௌலவிய... சுட்டுப் போட்டானாம்...
oooooo

Monday, July 9, 2012

ரவுப் ஹஸீர் பற்றியும் அவர்; கவிதைகள் பற்றியும் ஒரு ரசனைக் குறிப்புத் தொடர். பகுதி 01



2003ஆம்  ஆண்டு நவம்பர் மாதம் மாகொல பாத்திமா கார்டன் பள்ளிவாசவில் தொழுகையை முடித்துக் கொண்டு தொலை பேசி அழைப்புக்காகக் காத்திருந்தேன். 

அக்கினிச் சுவாசம் எனும் பாடல் அல்பம் ஒன்றினைச் செய்வதற்காக ஜாமியா நளீமிய்யாவிலிருந்து ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் விடுமுறை எடுத்துக் கொண்டு இப்படி  ஒவ்வொரு பிரமுகராகச் சந்திப்பது வழக்கம். 

எப்படி ஒவ்வொரு பிரமுகராகச் சந்திப்பது வழக்கம்?

அக்கினிச் சுவாசம் அல்பத்திற்காக எனக்கு பத்துப் பாடல்கள் தேவை 01.எஸ்.நளீம் 02.ஏபிஎம்.இத்ரீஸ் 03.அஸ்ரப் ஷிஹாப்தீன் 04. பாலைநகர் ஜிப்ரி 05. எம்கேஎம்.ஷகீப் 06.பஹீமா ஜஹான் 07.முல்லை முஸ்ரிபா 08.பைஸல் ஐயூப் 09.ரவுப் ஹஸீர் அடுத்து அதில் ஒன்றுஅஜ்வத் அலி மற்றும் நான் 
ஆகியோர்தான் பாடல் எழுதுவதாக இருந்தது அதற்காக ஹஸீரைச் சந்திப்பதற்காக அவர் வீவரைச் சென்றுதான் அவரின் அழைப்புக்காக காத்திருந்தேன். நான் மாகொலைக்குச்சென்றிருந்த சமயம் அவர் இன்னும் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை.

ஹஸீர் நல்லா உணர்வு பூர்வமா கவிதை எழுதுவார் அதனால் அவரிடம் ஒரு பாடல் கொடுத்துப் பாருங்கோ என்று சொன்னது அஸ்ரப் ஷிஹாப்தீன்தான் 
அதிலிருந்து ஹஸீர் மீது ஒரு இனம் புரியாத பற்று.

அவர் வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதால் என்னை அவரது வீட்டில் இருக்கச் சொல்லி தகவல் கிடைத்ததும் அவர் வீட்டில் அவரது வருகைக்காகக் காத்திருந்தேன். 

காத்திருக்க வைத்தமைக்காக மன்னிப்புக் கோரினார் வந்த விசயத்தைப்பற்றி முழுமையாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார். ஒரே ஒரு பாடல் எழுதச் சொல்லி மெட்டும் கொடுத்தேன் மிகவும் சுவாரஸ்யத்துடனும் உட்சாகத்துடனும் அதை வாங்கிக் கொன்டு இலக்கியம் பற்றி நீண்ட நேரம் கலந்துரையாடினார், விரைவாகப் பாடலை எழுதித்தருவதாக வாக்களித்தார்
முஸ்லிம் சமூகம் குறித்தும் நீண்ட நேரம் உரையாடினார் அன்று பகல் போசனமும் அவர் வீட்டில்தான். அந்தச் சுவையான உணவுக்காக அன்று அவர் மனைவிக்குப்பாராட்டுச் சொல்லக் கிடைக்கவில்லை அதற்காக இப்போது நன்றியோடு அந்தச்சுவையான உணவுக்காக ஆயிமாயிரம் நன்றிகள் அந்தத் தாய்க்கு உரித்தாகட்டும். அதன் பின்னர் ஹஸீரோடு அடிக்கடி கதைத்துக் கொண்டேன்.

2004 ஆகியது தேர்தல் வந்து தொடர்புகளைத் துண்டித்து விட்டது. 

பாடல் அல்பத்திற்காக பாட்டு எழுதித் தருமாறு வேண்டியதில் பைசல் ஐயூப் உடனடியாக அனுப்பிவைத்தார் பஹீமா ஜஹானும் குறித்த நேரத்திற்குத் தந்தார் ஜிப்ரி பல முறை பொய் சொல்லி  பின்னர் என் கரைச்சல் தாங்காமல்  எழுதியாயிற்று, மற்றவர்கள்யாராலும் பாடல் தர முடியாமற போயிற்று, ஹஸீரும் தரவில்லை...

எனக்குப் பொல்லாத கோபம் வந்தது. இவர்கள் யாருமே பாடல் தரவில்லை என்பதற்காகஅல்பம் வெளியிடும் முயற்சியைக் கைவிடும் எண்ணமில்லை

நேராக கோல் பேஸ் போனேன் இதமான காற்று அழைகளின் இனிய சங்கீதம் மெதுமெதுவாக ஆறுபாடல்களை எழுதி முடித்தேன் பின்னர் கனதியான வேலைப்பலு யாருடனும் தொடர்பு கொள்ளமுடியவில்லை,
அல்பம் வேலைகளும் மெதுமெதுவாக நிறைவுபெற்றது 

2004.09.24 வெள்ளிக்கிழமை – கொழும்பு ஸாஹிரா கல்லூரி – அக்கினிச் சுவாசம் வெளியீட்டு விழா

ஜாமியா நழீமியா நிருவாகம் அதிரடி முடிவெடுத்திருந்தது, இந்த வெளியீட்டுவிழாவுக்குப் போகின்றவர்களை நழீமிய்யாவை விட்டும் விலக்குவதாக அறிவித்தது. அது எனது வகுப்புத் தோழர்களுக்காகன நேரடிக் கட்டளையாகவும் இருந்தது. எல்லாம் குழம்பிப் போனது இது குறித்து நிறைய எழுத வேண்டும் பின்னர் பார்ப்போம்.

ரவுப் ஹஸீருக்குத்தான் அக்கினிச் சுவாசத்தின் முதல் பிரதி கொடுப்பதாக இருந்தது, கட்டாயம் வருவேன் என்று சொன்னவர் வரவே இல்லை.

2012 கம்பன் விழாவில் சடுதியாக சந்திக்கக் கிடைத்தது, பெரிதாகப் பேசிக்கொள்ள அவகாசம் கிடைக்கவில்லை

2012.05.17 கொழும்புத் தமிழ்ச் சங்கம் - மௌனப் போரும் புன்னகை ஆயுதமும் எனது கவிதை நூல் வெளியீட்டு விழா

ஹஸீருக்கு அழைப்பிதழ் அனுப்ப அவகாசம் கிடைக்கவில்லை ஆனாலும் அவர் வந்திருந்தார். எனக்கு சந்தோசமாக இருந்தது, தகவலறிந்து வருகை தந்த அவர் மீது நல்லபிப்பிராயம் அதிகரித்தது.

2012.06.17 கொழும்புத் தமிழ்ச் சங்கம் - நிலவின் கீறல்கள் எனது மனைவியின் கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா 

ஹஸீருக்கு கடைசி நேரத்தில் அலைபேசி  மூலம்தான் அழைப்பு விடுக்க முடிந்து அப்போது அவர் சொன்ன பதில் 'நிகழ்வுக்கு இரண்டு மணித்துளிகளுக்கு முன்னால் அறிவித்தாலும் போதும் நான் வந்து விடுவேன்' அது போல அவரும் வந்தார் அவர் மீது எனக்கு இன்னும் நல்லபிப்பிராயம் அதிகரித்தது. 

2012.06.30 கொழும்புத் தமிழ்ச் சங்கம் அஸ்ரப் ஸிஹாப்தீனின் ஒரு சுரங்கைப் பேரீச்சம் பழங்கள் மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதி  வெளியீட்டு விழா

ஹஸீர் கவிதை படிப்பதாக இருந்தது அதனால் அதைப் பார்க்கும் கேட்கும் ஆர்வம் மிகுதியாக இருந்தது, அதனால் ஒலிப்பதிவு செய்யக் கூட மறந்து போனேன், 
ஏற்கனவே மத்தளம் என்று அவர் முஸ்லிம் சமூகத்தின் அவல நிலைகளை முன்வைத்துப்  பாடிய கவிதையொன்றை நவமணிப் பத்திரிகையில் படித்த ஞாபகம் அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும் என்று தோன்றியது, அவ்வளவு அழகாக சமூகத்தின் அவலநிலையைப் படம் பிடித்துக் காட்டியிருந்தார். 

சமூகத்தின் மீதான பற்று போலவே தமிழ் மீதும் அவருக்கிருக்கும் பற்று பலர் அறியாதது, அவரே எழுதிய குறிப்பொன்று 'நான் எனது மகளை தமிழ் மொழியில் உயர்தரம் கற்க வைத்துள்ளேன் தமிழையும் ஒரு படமாக எடுக்க ஆர்வமூட்டியுள்ளேன்' இப்போதுள்ள ஆங்கில மோகத்தில் ஹஸீரின் இந்த நிலைப்பாடு போற்றத் தக்கது காரணகாரியங்கள் இல்லாமல் ஆயிரம் பேர் தமிழில்கற்கலாம், தமிழுக்காக, தாய்மொழிக்காக, அதில் புலமை வேண்டும் என்பதற்காக லட்சியத்துடன் கற்பிக்கும் தந்தையும் தந்தையின் லட்சியத்தை அப்படியே மதித்து மனதார ஏற்றுக் கொண்ட மகளையும் பத்தோடு பதினொன்றாகக் கருதிட முடியாது, இப்படிப்பட்ட ஹஸீர் அன்று கவிதை பாடினார் மெய் சிலிர்த்துப் போனேன், அவர் கோபம் ஆத்திரம் எல்லாமும் நியாயமானது, 

இந்தக் கவிதை பற்றியும் ஹஸீர் பற்றியும் அடுத்த பகுதியில் இன்னும் சுவாரஷ்மான தகவல்களுடன் சந்திப்போம் இன்ஷாஅல்லாஹ்.

-முஸ்டீன்-