Saturday, February 6, 2021

எதிர்காலம் பற்றிய எச்சரிக்கை

 எதிர்காலம் பற்றிய எச்சரிக்கை

-முஸ்டீன்-

சர்வதேச அரசியல் நகர்வு என்பது வெறுமனே தன்பாட்டில் நகர்ந்துகொண்டிருக்கும் ஒன்றல்ல. ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னாலும் உலக அதிகாரத்தைத் தன் கையில் வைத்திருக்க நினைக்கும் ஒவ்வொரு குழுவினதும் ஏதாவது ஒரு நிகழ்ச்சிநிரல் இருந்தேயாகும். பாதுகப்புக் கற்கைநெறியை மட்டுப்படுத்தப்பட்ட 'குளோல் சேர்கில் சிஸ்டத்தில்' படிக்கின்ற ஒவ்வாரு புலனாய்வுத் துறை அவதானிப்பாளனுக்கும் ஆய்வாளனுக்குமுள்ள விடுபட்டுப்போகாத சவால் இந்த நகர்வுகளுக்குப் பின்னால் உள்ள சக்திகளை அடையாளங்காண்பதாகும். 

உலகைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் விடப்படும் ஓட்டைகள் அல்லது திட்டத்தில் உள்ள குறைபாடுகள் அல்லது பூரணப்படுத்தலில் உள்ள விடுபாடுகள் என்ற புள்ளியினூடாகவே தேடல் செய்வோர் நுழைகின்றனர். முன்னொரு காலத்தில் அந்த நுழைவு மிகவும் சிக்கலுக்குரியதாக இருந்தது. ஆனால் இப்போதுள்ள நவீன தொழிநுட்ப வளர்ச்சி எதிரிக்குப் பக்கத்தில் நின்று கொண்டே அவனுக்கெதிரான திட்டமிடலை இலகுவாகச் செய்துவிட்டு ஆதாரங்களும் அடையாளங்களும் இன்றி நகர்ந்துவிட முடியும். தொழிநுட்ப அறிவு மிகுந்த மதிநுட்ப மூளைக்குச் சொந்தக்காரனால் மட்டுமே சில அடிப்படைகளைப் பிடிக்க முடியும் மற்றபடி விடைதெரியாத கேள்வி போன்றே அது நிலைபெற்றுவிடும்.

இலங்கையைப் பொறுத்தமட்டில் இது சர்வதேச பூகோள நகர்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமையப்பெற்றிருக்கின்றது. துரதிஸ்ட வசமாக இந்நாட்டின் பூகோள கேந்திர முக்கியத்துவத்தை உரிய முறையில் நிறுவி அதன் பலத்தை நிலைநாட்டும் சரியான அரசியல் தலைமை இதுவரையில் நமக்குக் கிடைக்கவில்லை. இந்நாட்டின் உயிர்துடிப்பும் முக்கியத்துவமும் கடல்பரப்பிலேயே தங்கியுள்ளது. கடற்பரப்பை வலுப்படுத்திட இதுவரை நம்நாடு போதிய கவனம் எடுக்கவே இல்லை. பாதுகாப்பு ஒரு பக்கம் இருக்கட்டும் இந்நாட்டின் கடற்பரப்பில் என்னென்ன வளம் கொட்டிக்கிடக்கின்றது என்பதையே நமக்கு வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுதான் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டியிருக்கின்றது. ஏனெனில் நமது கடற்பரப்பில் என்ன இருக்கின்றது என்பதே இன்னும் நமக்குத் தெரியவில்லை. இந்தத் துரதிஸ்டத்தில் கடல்வளப் பாதுகாப்பூடாக நமது நாட்டின் இருப்பை ஸ்திரப்படுத்த நாம் யோசிக்க நீண்ட காலம் செல்லும்.

குறைந்தபட்சம் களவள ஆய்வுக்கு நமது நாடு போதிய முக்கியத்துவம் இதுவரையில் அளிக்கவில்லை. யுத்தம் இல்லாத இந்நிலையில் இந்த ஆய்வுக்கு கடற்படையைப்பயன்படுத்துவதும் அவர்களைப் பயிற்றுவிப்பதும் பயன்தரத்தக்கது. கடற்பரப்பு முழுமையாக நமது கட்டுப்பாட்டுக்குள்ளும் நூறுவீத பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தலுக்குள்ளும் வந்துவிட்டால் அடுத்த கட்டம் சர்வதேசக் கடற்பரப்பு மீதான ஆதிக்கத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கு பாரிய பொருளாதாரத் தேவைப்பாடு இருக்கின்றது. ஆனால் நாம் வீணாக நிதியைச் செலவு செலவு செய்துகொண்டிருக்கின்றோம் உதாரணமாக ஓர் அமைச்சருக்கோ அல்லது ராஜாங்க அமைச்சருக்கோ ஐந்து செயலாளர்கள் முழு வசதியுடனும் நியமிக்கப்படுகின்றார்கள். அவ்வளவு செயலாளர்கள் அவசியமே இல்லை இப்போதுள்ள அமைச்சரக்ள எண்ணிக்கை ஒவ்வொருவர்க்கும் இரண்டு செயலாளர்களை நீக்கி அவர்களுக்கு வீணாகச் செலவு செய்யும் பணத்தை மீதப்படுத்தினால் குறைந்தது ஒரு வருடத்தில் 168 கோடி ரூபாய் மீதப்படுத்தலாம் ஒரு ஆட்சிக்காலத்தில் 840 கோடி இவை எமது கண்களுக்குப் புலப்படும் வீண் செலவு இது தவிர இன்னும் பல பில்லியன்கள் வீணாக அதிகாரிகளுக்கான சலுகைகள் என்ற அடிப்படையில் பயனின்றி விரயமாகின்றது. ஒரு ஆட்சிக்காலத்தில் அதை மிச்சப்படுத்தினால் வருடத்திற்கொரு சிறிய ரக விமான தாங்கிக் கப்பலே வாங்க முடியும்.

நாட்டின்பாதுகாப்பைப் பற்றிக்கவலைப்படாமல் லஞ்சம் வாங்கிக் கொண்டு சட்டவிரோத செயல்களை அதன் பங்காளர்களாக மாறி அனுமதிக்கும் ஒரு வட்டம் இருக்கும் வரை  அந்தப் பேச்சு வீணானதுதான்.

கடற்பிராந்தியம் ஏன் முக்கியத்துவமடைகின்றதென்றால் அதற்குப்பின்னால் உள்ள சர்வதேச வகிபங்கும் தேவைப்பாடும் அத்தகையது இது அப்படியே இருக்கட்டும். நம்நாட்டுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் ஊடாக கனவுகளைச் சிதறடிக்கும் செயற்பாட்டுக்குப் பின்னால் இருக்கின்ற இலக்கு என்ன என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும். 

ஒருகாலத்தில் விடுதலைப் புலிகள் தனி நாடு கோரிய விடுதலை இயக்கமாகத் தொடங்கி பயங்கரவாத இயக்கமாக பரிணாமமடைகின்றது அதன் முடிவு எழுதப்படடு பத்துவருடங்களின் பின் முஸ்லிம்களைப் பயன்படுத்தி சர்வதே பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் தற்கொலைத் தாக்குதலில்தான் தொடங்கியது. அதன் தொடர்ச்சி எவ்வாறுஅமையும் என்பது இன்னும் நமக்குப் புலப்படவில்லை. இஸ்லாத்தின் பெயரிலான பயங்கரவாதம் அச்சுறுத்தல் இன்னும் இங்கு முடிவுறவில்லை. 

இப்போது சர்வதேச அளவில் இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களை போராட்ட சிந்தனைக்குள் இழுத்து, பின்னர் அவர்களை தமது நலன்களுக்கப் பயன்படுத்திக் கொள்வது அவ்வளவு கஸ்டமான காரியம் கிடையாது. தலிபான்களை உருவாக்கியதும் அல்காயிதாவை உருவாக்கியதும் ஐஎஸ்ஐஎஸ் உருவாகியதும் இந்தப் பின்னணியில்தான். அது முடிவல்ல இன்னும் தொடரும். முழு உலக அசைவும் மொசாட்டின் விரல்களிடையேதான் வசப்பட்டிருக்கின்றது என்ற திருப்தி வரும்வரை அது அப்படித்தான் இருக்கும். 

நட்பு நாடுகள் என்ற வட்டம் இந்தக் கோணத்தின் இன்னொரு பகுதியில் இருந்து நோக்கப்பட வேண்டும். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தளங்களைக் கட்டுப்படுத்தும் நீண்டகால நட்புடன் இணைந்த திட்டங்கள் திடீரென்று இராணுவ அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கத்துடன் அபிவிருத்திக்கான முதலீடுகளாக வந்தடைகின்ற போது இலக்கு வைத்துக் காததிருப்பவன் நிச்சயமாக அமைதியாக இருக்கப்போவதில்லை. பிராந்திய அதிகாரம் என்ற விடத்துக்குள் மறைந்திருக்கும் தனது பிடியை இறுக வைக்கும் நிலைப்பாட்டை மேற்சொன்ன முதலீட்டு வட்டம் ராஜதந்திரமாகச் செய்ய முயற்சிக்கும் அது அவ்வளவு வசப்படாத போது சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதனூடாக உதவிக்கு இன்னொரு கரம் தேவைப்படும் நிலையை உருவாக்கவல்லது. இப்போது இலங்கை என்ற கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்புக்கும் கடற்பரப்புக்கும் நடந்திருப்பது அதுதான். இப்போதைக்கு வெளிப்படையாகத் தெரியும் அது பயங்கரவாதம் குறிப்பாக இஸ்லாத்தின் பெயரிலான பயங்கரவாதம்.

இன்னும் இலகுவாக இந்த விடயத்தை விளங்கிக் கொள்ள வரலாற்றில் இருந்து சிறிய உதாரணத்தைச் சொல்ல முடியும். கொலனிய நாடுகள் பலவீண நாடுகளை ஆக்கிரமித்து அங்கிருக்கும் தோற்ற மக்களை அடிமைகளாகவும் மிகவும் மலிவான கூலிகளாகவும் பயன்படுத்தினார்கள் அது தமது பொருளாதார நலன்களை  மேம்படுத்திக்கொள்வதற்காகச் செய்யதது. ஆபிரிக்கர்கள் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் கொண்டு செல்லப்பட்டது போலவும். இந்தியர்கள் மொரீசியஸ், இலங்கை, மலேசியா என்று மலிவான கூலிகளாக அள்ளிச் செல்லப்பட்டதும் அந்தந்தக் காலத்துக்குப் பயன்படுத்த முடியுமான வளங்களை அதிகாரம் பயன்படுத்தும். இப்போது அவ்வதிகாரம் இதே மலிவான கூலிகளை சர்வதேசப் பயங்கரவாதத்துக்காகப் பயன்படுத்துகின்றது. 

இங்கு அமுல்படுத்தப்படும் திட்டங்களில் ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொரு கென்சப்ட் பிரயோகிக்கப்படும் தலிபான்கள் உருவர்கப்பட்ட போது இஸ்லாமிய நாடு, அல்காயிதா உருவாக்கப்பட்ட போது இஸ்லாத்துக்கெதிராக அனைத்து அதிகாரங்களையும் சக்திகளைம் சிதைத்தல், ஐசிஸ் உருவாக்கப்பட்டபோது கறுப்பு ஆடை அணிந்த மஹ்தியின் இராணுவம் என அந்தக் கென்சப்ட் பல்வேறு முறையில் மார்கெட் பண்ணப்பட்டது. ஆனால் துரதிஸ்டவசமாக அவை தோற்றுவிட்டன. இப்போது ஐசிசை உருவாக்கப் பயன்பட்ட மஹ்தியின் படை என்ற கென்சப்ட்டில் அப்டேட் வேர்சன் வரப்போகின்றது. அதுதான் ஜைஸ் அல் அத்ல்.

இப்றாஹிமிய மதங்களின்; நம்பிக்கைப்படி இந்த உலகம் அழிந்துவிடும் பின்னர் அவர்கள் எழுப்பப்பட்டு அவர்களுக்கு சுவர்க்கம் நரகம் வழங்கப்படும். உலக அழிவுக்கு முன்னர் ஏஞ்சல் ஒப் பீஸ் வருவார் என்பதும் ஜீசஸ் வருவார் என்பதும் இறுதி ஆட்சியாளராக மஹ்தி அலைஹிசலாம் வருவார்கள் என்பதும் யூத, கிறித்தவ, முஸ்லிம்களின் நம்பிக்கை அதன்பிரகாரம் நடக்கின்ற அதிகாரப் போராட்டம் காலாகாலமாக மதத்தின் பெயரால் இடம்பெற்று வருகின்ற யுத்தங்களுக்கும் அதிகாரத் தக்கவைப்புகளுடனும் ஒப்பிடும் ஆச்சரியமானதோ புதியதோ அல்ல.

யூதர்களின் சமாதானத்தின் தூவரின் வருகையை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்கின்றனர் அது தஜ்ஜால் என்பது தெளிவு. அதேபோன்று கிறித்தவர்களின் 'ஜீசஸ் கமிங் சூன்' என்ற நம்பிக்கையையும் முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்கின்றனர். இயேசு மீண்டும் வருவார் அவர் தமது இறுதி இமாமான மஹ்தியுடன் இணைந்துகொள்வார்  இருவரும் இணைந்து யூதர்களின் ஏஞ்சல் ஒப் பீஸ் என்ற தஜ்ஜாலைக் கொன்று உலகைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவார்கள். மஹ்தியே இறுதியாக உலகை ஆளப் போகும் ஆட்சியாளர் என்பது கொஞ்சமும் தகர்க்கமுடியாத முஸ்லிம்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையில் இருந்துதான் அதிகாரப் போராட்டம் உலக பயங்கரவாதத்துக்கான உக்திகளைக் கண்டுபிடித்து அமுல்படுத்தி வருகின்றது.

ஜைஸ் அல் அத்ல் என்பது நபிகள் சல்லல்லாகு அலைகிவசல்லம் மஹ்தி அலைஹிசலாமின் படைக்கு நேரடியாகச் சூட்டிய பெயர். நீதியின் படையணி அல்லது நீதியின் இராணுவம் என்பது இதன் அர்த்தம். அடுத்து உலகம் எதிர்கொள்ளப் போகும் முக்கிய ஹொட் நியுஸ் இதிலிருந்துதான் உருவாகும். இங்குள்ள தெளிவுபடுத்தப்பட வேண்டிய சந்தேகம் யார் இதை வெற்றிகரமாக பயங்கரவாதச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப் போகின்றார் என்பதிலும் அல்லது நம்பிக்கைப்படி மஹ்தியின் படை வந்துவிட்டால் அடுத்து என்னவாகப் போகின்றது என்பதிலும்தான் தங்கியிருக்கின்றது.

இலங்கைக்கும் இதற்குமிடையிலான தொடர்பு மிகவும் முக்கியமானது. ஏனெனில் முன்னர் சொல்லிய பல விடயங்களுக்கான தயார்படுத்தல்களைச் செய்வதற்கு உலகில் மிகவும் பாதுகாப்பான இடம் ஒவ்வொரு கொள்கைவகுப்பாளருக்கும் திட்டமிடளாளருக்கும் தேவைப்படும். துருக்கிக்கு எதிரான வளங்களைத்திரட்டவும் திட்டமிடவும் இலங்கை பயன்படுத்தப்பட்டது நம்மில் எத்தனை பேருக்கத் தெரியும். ஏனெனில் இந்நாட்டில் சுற்றுலாப் பயணிகளை யாருமே சந்தேகத்தோடு பார்ப்பதில்லை. அவர்கள் இந்நாட்டின் கௌரவமான நபர்களகவே கருதப்படுகின்றார்கள். அவர்களிடமிருந்து திருப்திகரமான ஒரு பொருளாதார உதவி கிடைத்தால் மிக சிம்பிளாக இந்நாட்டில் உள்ள சிங்களவரும் சரி, தமிழரும் சரி முஸ்லிமும் சரி நாட்டைக் காட்டிக் கொடுப்பதை அவர்களையறியாமலேயே செய்துவிடுவார்கள். வடகொரியாவில் சர்வதேச சக்திகளின் எதுவுமே எடுபடாமல் இருப்பதற்கு முக்கிய காரணமே அங்கு அந்நியர்கள் நினைத்தபடி உலாவ முடியாது. ரஸ்யாவில் உங்கள் பார்வையில் ஒரு தடுமாற்றம் இருந்தாலே போதுமான புலனாய்வுத்துறையின் கண்கானிப்புக் கீழ் உங்களையறியாமல் வந்துவிடுவீர்கள். ஆனால் இங்கு ரஸ்யர்கள் வந்தால் அவர்களை இம்மியளவும் சந்தேகங்கொண்டு பார்க்கமாட்டோம் சுற்றுலாப்பயணிகளாகவே எமது மாறாத பார்வை இருக்கும். இந்த வாய்ப்பைத்தான் அனைவரும் பயன்படுத்துகின்றார்கள். ஏனெனில் சுற்றலாத்துறை வருமானம் நமது நாட்டின் பொருளாதார ஜீவ நாடி.

ஜைஸ் அல் அத்ல என்ற பெயரில் உண்மையான மஹ்தியின் படைக்குப் பதிலாக வருகின்ற படை நிச்சயம் அடுத்துவரும் இரண்டு தசாப்தங்களுக்கு உலகை மிகப் பயங்கரமாக உலுக்கப் போகும் பயங்கரவாத அச்சுறுத்தல் மிகுந்த சிந்தனைத்தளமாகவ இருக்கும். அதற்குள் முஸ்லிம்கள் மிகவும் இலகுவாக உள்ளீர்க்கப்படுவார்கள். அந்த சிந்தனையில் இருந்து வருகின்ற ட்ரைல் வேர்சன்தான் 'சுப்பர் முஸ்லிம்' 

'சுப்பர் முஸ்லிம்' என்ற பெயர் இன்னும் கொஞ்சக் காலத்தில் எல்லாருக்கும் பரிச்சயமான பெயராகிவிடும். உலகப் பிரச்சனைக்கான தயார் படுத்தல் இனி இலங்கையில் மேவி நிற்கின்ற இனவாதச் செயற்பாடுகளால் இலகுவாக பொலிஷ் பண்ணபட்டுவிடும் என்பதில் சந்தேகம் கிடையாது. இதன் ஆரம்பம் பற்றியோ அதன் நகர்வு பற்றியோ பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில் ஏனெனில் ஐஎஸ்ஐஎஸ் என்ற பெயரால் சஹ்ரானைப் பயன்படுத்திச் செய்ய எத்தனிக்கப்பட்ட அனைத்தும் இனி இந்தச் சிந்தனைத்தளத்தில் மிக இலகுவாகச் சாத்தியப்படுத்தக்கூடிய நிலவரத்தை இப்போதுள்ள நாட்டு நிலவரம் உருவாக்கிக் கொடுத்துவிட்டது. 

இந்தச் செயற்றளம் தொடர்பில் இலங்கைச் சூழலில் பத்திரிகைகள் வெளிப்படுத்துகின்ற கருத்துகள் ஆய்வுத்தன்மையோ ஆழமான அவதானமோ அற்றவை. மேலோட்டமாக வெறுமனே இனவாத அடிப்படைகளை மட்டும் கொண்டு செய்யப்படுகின்ற பூச்சு வேலையாகவே கொள்ள முடியும்.

அடுத்துவரும் கலாங்களில் இந்தச் சிந்தனைப்பரப்பு என்னவிதமான தாக்கங்களை ஏற்படுத்த முடியும் என்பது குறித்து எனது மேலோட்டமான தேடலின் சிறுகுறிப்புகளை மட்டும் இங்கு பதிவு செய்வது ஆபத்தகளில் இருந்து பாதுகாத்தக்கெர்ள இலகுவாக இருக்கும். ஏனெனில் நான் இது குறித்து ஆழமாகத் தேடி ஆய்வு செய்து எனது நேரத்தை அதற்காகச் செலவு செய்ய முடியாத நிலையில் சமூகத்தையும் பாதுகாப்பு தரப்பையும் பகிரங்கமாக இவற்றின்பால் கவனங்கொள்ளும்படி வேண்டுதல் விடுப்பதற்காக மட்டுமே இப்பதிவு அமைகின்றது. இதை சீரியசாக எடுத்துக் கொள்வதும் கண்டுகொள்ளாமல் கடந்துசெல்வதும் அவரவரைப் பொறுத்தது.

01. முஸ்லிம் சமுகத்துக்கு வெளியில் இருந்து இந்தப் பரப்பை விளங்கிக் கொள்ள முடியாது. 

02. இந்நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு உடனடி அச்சுறுத்தல் தேடலின் ஆரம்ப காலத்தில் அனுமானிக்க முடியாமல் இருந்தது ஆனால் இப்போது நிலமை அவ்வாறல்ல. இனவாதச் செயற்பாடாக நிறுவப்படுகின்ற ஜனாசா எரிப்பு ஏற்படுத்திய தாக்கம் அவ்வளவு இலகுவானதல்ல.

03. நேரடியாக ஆயும் ஏந்திப் போராடும் ஒரு குழுவாக அடையாளப்படுத்த முடியாது. தொழிநுட்பம் சார்ந்த செயற்பாட்டுத்தளம் மிகவும் நேர்த்தியாகக் கையாளக் கூடிய நபர்களால் வழிநடாத்தப்படுவதாகவே நான் உணர்கின்றேன்.

04. இந்தியாவில் இருந்து முகநூல் வாயிலாக இதே பெயருடன் செயற்படுகின்ற நபர்கள் அல்லது சமூகசவலைத்தளப் பக்கங்கள் வெறுமனே கவனக் கலைப்பான்களே தவிர அவை இந்தச் செயற்பாட்டுத்தளத்தின் நேரடிப் பங்காளர்களல்ல. அவர்களை மாத்திரம் உற்றுக் கவனித்தால் சில பொறிகள் கிடைக்கும் அதை வைத்து எப்படிப் பயணிப்பது என்தற்கு கூடுதல் சமய அறிவு தேவைப்படும். இந்த்திட்டமிடல் வெளிப்படையாக மெஜிக் செய்வதற்கு நிகரானது. ஆர்ஏடப்ளியு பயன்படுத்தும் ஒரு ஸ்டடஜி. புரிந்துகொள்வது சிக்கலானது புரிந்துகொண்டால் பிடித்துப் பயணிப்பது குழப்பங்களுக்கு மத்தியில் தெளிவாகத் தெரியும்.

05. தொடர்பாடலுக்கு மாத்திரம் சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தி எதிரிகளை மொத்தமாகத் தாக்கும் பொறிமுறையைக் கையாளும் நிலைக்குச் செல்லக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது. அடையாளப்படுத்தலை முதலில் செய்து முடித்தல் ஜேர்மனியில் ஹிட்லரின் காலத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்னர் அவர்களைக் கொன்றவர்களைப் பழிவாங்கப் பயன்படுத்தப்பட்ட பொறிமுறைதான் இதன் மூல வேர்சன். அப்போதிருந்த அவர்கள் தகவல் சேகரிக்கப்ப பயன்படுத்திய செயற்றளத்தை இப்போதுள்ள சமூகவலைத்தளங்கள் மிக இலகுவாகச் செய்துகொடுத்துக் கொண்டிருக்கின்றன.

06. முஸ்லிம் சமூகத்தின் இருப்பு சவாலாக இருக்கின்ற பிற இனவாதச் செயற்பாட்டாளர்களாகக் கருதப்படுகின்றவர்களை பயங்கரவாதத் செயற்பாடுகளால் அனுகும் அபாயம் நிகழக்கூடும். ஏனெனில் ஒருவரைத் தயார்படுத்தல் என்பது மிகவும் முக்கியமானது. எந்த அடிப்படையில் தயார்படுத்தல் நிகழ்கின்றது என்பதன் அடிப்படையில் அது மையங்கொள்ளும் கிறித்தவம் ஒரு காலத்தில் வைத்திருந்த உள்ளக அமுக்கக் குழுக்களுக்கு நிகரான சிந்தனை மாற்றக் குறிப்புகளை காணக்கிடைக்கின்றமை இந்த அபாயத்தை உணர்த்தப் போதுமானது.

07. அச்சம் விளைவித்தல் மிக முக்கியமானதாக இருக்கும். ஏனெனில் எல்லாரும் திரும்பிப் பார்க்கும் வண்ணம் செய்யப்படும் நிகழ்வுகளுக்கு மாத்திரமே இப்போதுள்ள அவசர சோசியல் மீடியா உலகில் விளம்பரப்படுத்தல் கிடைக்கும். அந்தத் தளத்தை வெகுவாகப் பயன்படுத்தும் போது திட்டமிடல் சூத்திரதாரிகளாகச் செயற்படும் யாரையும் இலக்குவைத்து எளிதில் நெருங்க முடியாது. 

08. கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் தம்மை அர்ப்பணித்து கொண்ட கொள்கைக்காக அர்ப்பணிப்போடு செயற்படுதல் என்றால் அது எப்பஎடி இருக்கும் என்பதைக் கற்பனை பண்ணிப் பாருங்கள். ஆர் எஸ்எஸ் அப்படித் தேர்தெடுக்கப்பட்ட நபர்களைப் பயிற்றுவிக்கும் விதத்துக்கும் இங்கு தேடலின் போது கிடைக்கும் மிக சொற்பமான குறிப்புகளுக்கும் பாரிய வேறுபாடுகள் இல்லை. எனவே தெர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் இந்த உலகில் ஏற்படுத்தும் ஆபத்து மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

09. ஆட்கவர்ச்சி இங்கு முக்கியமானது. இது கூட்டுச் செயற்பாடாக நிச்சயம் அமைய வாய்ப்புகள் குறைவு சில வேளை அப்படி இருக்கவும் கூடும். அது நிச்சயம் பொதுமக்களின் குறிப்பாக முஸ்லிம் மக்களின் மன உலைச்சலுக்கு ஒத்தடம் கொடுப்பது போன்ற ஒரு படிமத்தை ஏற்படுத்தும் அடிப்படையினைக் கொண்ட செயற்றளத்தில் இருந்து ஆட்கவர்ச்சியை இலக்கு வைக்கும். ஆட்கள் கவரப்படுதல் ரகசிய வேலைத்திட்மாக இருக்காது. எனெனில் ஐசிஸ் இதில் கடைசி கட்டத்தில் தோற்றுப் போனது. எனவே அதே வழிமுறை நிச்சயம் இங்கு பின்பற்றப்பட வாய்ப்பு மிகவும் குறைவு.

10. வாழ்க்கையில் தோற்றுப் போன உணர்வுடன் ஓரமாகத் தொடங்கும் இளைஞர்கள் அவர்களுக்குரிய வாய்ப்பை மிக இலகுவாகப் பெற்றுக் கொள்வார்கள். அவர்களே செயற்றளத்தின் முக்கிய பங்காற்றுகையர்களாகத் திகழ்வர். அணையப் போகும் சுடர் ஒருமுறை ஜோராக எரிந்து காட்டுமே. எப்படியும் அனாவசியமாகப் போகின்ற ஒன்றை ஏதாவது ஒரு பயன்பாட்டுக்குப் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிதல். 

11. இலகு இலக்குகளை அல்லது எளிதான சவால்களை முன்னரே எதிர்கொள்ளல். ஓநாய்கள் என்ற சிம்பல் மிகவும் முக்கியமானது. இது ஒரு முக்கியமான தொடர்பாடல் முறையும் கூட. இராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தபோது தமது நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் போராடியவர்களின் தொடர்பாடல் முழுமையாக அமெரிக்கப் படைகளால் உள்வாங்கப்பட்டது. ஆனால் பலூஜா தாக்குதலில் அவர்களால் அதை உள்வாங்க முடியவில்லை காரணம் அங்கு போராட்டக் களத்தில் இருந்தவர்கள் புதிய தொடர்பாடல் முறையில் தகவல் பரிமாற்றம் செய்தனர். அது பகிரங்மாக இருந்தது. ஆனால் அவ்வளவு எளிதில் அதைப் புரிந்துகொள்ள முடியாது. இஸ்ரேலிய உளவுத்துறை அதை கண்டுபிடித்தது. அதிலிருந்து மேம்பட்ட தனித்த இலக்கைக் குறி வைத்தல் அதைத்தான் இப்போது மொசாட் இரானில் அமுல்படுத்துகின்றது. சுப்பர் முஸ்லிம் கதையாடலுக்குள் இந்தக் குறியீடுகள் தென்படுதல் மிகப் பெரிய ஆபத்துகளை உணர்த்தப் போதுமானவை.

12. போதை மாத்திரைகளுக்கு இளைஞர்கள் குறிப்பாக பாடசாலை மாணவர்களில் கல்வியில் நாட்டமற்றவர்கள் இதற்கு அடிமையாக்கப்படுதல் அவ்வளவு எளிதில் கடந்து போக முடியாது. நளிவுற்றவற்றவனை சுப்பர் முஸ்லிமாக மாற்றுதல் என்ற வேலைத்திட்டம் ஒரு சமூக செயற்பாடும்கூட. போதை மாத்திரைகளின் விநியோகத்துக்குப் பின்னால் இருக்கின்ற சர்வதேச சக்தி அல்லது விநியோகஸ்தன் யார் என்பதைக் கண்டுபிடிப்பது முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடாகும். அங்கிருந்து பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும். குறிப்பாக முஸ்லிம்பகுதிகளை இலக்க வைத்து விநியோகிக்கப்படும் போதை மாத்திரை விற்பனை வலையத்தை வெறுமன போதைப் பொருள் விற்பனையாக மட்டும் பார்க்கத் தலைப்படக்கூடாது. அது எதிர்கால பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கான மலிவான கூலிகளை அடிமைகளாகத் தயார்படுத்தும் வேலைத்திட்டமாகும்.

13. மார்க்க உபதேசம் செய்யும் தரமற்ற அனைவர் மீதும் இரண்டு கண்களை நேரடியாகவும் ஒரு கண்ணை மறைமுகமாகவும் வைக்க வேண்டிய கடப்பாடு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள நினைக்கின்ற சமூகத்துக்கு மிகவும் முக்கியமானது. அரசாங்கம் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பொறுப்பற்று விலகிச் செல்ல முனைகின்ற சமூகம் அதன் பின்னர் வருகின்ற விளைவுகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

14. வேண்டாத விடயங்களைப் பேசுபொருளாக்கி அனைத்தையும் முஸ்லிம் சமூகத்தின் மீதான இனவாத அடக்குமுறைச் சயெற்பாடுகளாகச் சித்தரிக்கச் செய்கின்ற செயன்முறையில் சிறிய சிறிய விடயங்களை பொதுத்தளத்துக்கு வாதத்துக்கென்று உருவாக்குபவன் மீதும் அதனைக் காவிச் செல்கின்றவன் அதை சமூக மயப்படுத்துபவர்கள் என்ற இந்த மூன்று தரப்பிலும் அரச புலனாய்வுத்துறை கூடுதல் சிரத்தையெடுத்துக் கொள்ள வேண்டும். வெறுமனே பிரபல்யத்துக்காக அல்லது மதப்பற்றையும் இனப்பற்றையும் வெளிப்படுத்துவதற்காக அவர்கள் செயற்படாமல் யாரோ ஒருவரின் அஜந்தாவுக்கு இயங்குகின்றவர்களாக இருக்கவும் கூடும் குறிப்பாக தேசப்பிரேமிகள். இத்தகைய தேசப்பிரேமிகள் தேசவிரோதிகள் என்ற தெளிவு இல்லாதவிடத்து ஆபத்தை நாமாக தக்கவைத்துக்கொண்டதாக முடியும்.

15. அரசியல் ரீதியிலும் சமய ரீதியிலும் முஸ்லிம் சமூகம் தன்னை மீள ஒழுங்குபடுத்திக் கொள்ளாவிட்டால் இந்தப்பீடை அதைத் தாக்குவது மிகவும் எளிதானது. புத்தியுள்ள சிந்திக்கக் கூடிய இளைய தலைமுறை இளைஞர்களில் இருந்து முஸ்லிம்கள் தங்களின் தலைமைத்துவத்தைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். ஆபத்து பலவீணமான பகுதியால் இலகுவாக நுழையும் முஸ்லிம் சமூகத்தின் அரசியலும் சமயமும் மிகப் பலவீணமான இரு வாயில்களாகும். பயங்கரவாத சக்திகள் மார்க்கத்தின் பெயரால் இருப்புக்கொண்டு அரசியலின் பாதுகாப்புடன் சுதந்திரமாக இயங்கும் நிலையைத்தவிர்க்க மேற்கூறிய மாற்றம் மிகவும் முக்கியமானது.

இறுதியாக சுந்தரமான இந்நாடு மனிதர்களை மனிதர்களாக மதித்து பலமான இராணுவ கடல் பாதுகாப்புக் கட்டமைப்போடு தன்னை நிலைநிறுத்திக் கொண்டு இம்மண்ணின் சகவாழ்வைச் சிதைக்கின்ற அனைத்து நச்சுச் செடிகளையும் முளையிலேயே பிடுங்கி எறியத் தயாராக இருக்க வேண்டும். நிம்மதி என்பது இனம் மாதம் சார்ந்தது அல்ல அது மனித விழுமியங்களினதும் ஒருவரின் தனித்துவத்தையும் கலாசாரத்தையும் சுயமரியாதையையும் மதித்தலில் இருந்து துளிர் விடுகின்றது. அதுதான் ஆரோக்கியமானதும் பாதுகாப்பதுமான நாட்டை உருவாக்கத் துணைசெய்யும்.



Monday, May 4, 2020

புலிப் பகைவன்

-முஸ்டீன்-

அதிகாலைக் குளிர் நடுக்கத்தைப் பரிசளித்துக் கொண்டிருந்த போது குவைத் -ஈராக் எல்லைப் பகுதி பரபரப்பாக இருந்தது. குவைத்தின் அமெரிக்க இராணுவ மத்திய முகாமிலிருந்து இன்னும் சற்று நேரத்தில் அமெரிக்க ரோந்துப் படைகள் வந்துவிடும் அதனைப் பின்பற்றி வாகனத்தொடரணி தனது பயணத்தை ஈராக்கை நோக்கி ஆரம்பித்துவிடும் அமெரிக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் பல்வேறு பணிகளைச் செய்வதற்காக உயிரைப் பணயமாக வைத்த அறுநூறு ஊழியர்கள் மரண அமைதியுடன் இருந்தார்கள். பெரிய சம்பளத்துக்காக ஒரு வருட ஒப்பந்தத்தை அவர்கள் செய்திருந்தாலும் அந்தப்பயணந்தான் அவர்களின் இறுதிப் பயணம் என்ற எண்ணம் அனைவருக்குள்ளும் ஒரேமாதிரியாகத் தோன்றி ஓடிக்கொண்டிருந்தது. யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. யாரும் யாரையும் முகம் நோக்கவுமில்லை. பன்னிரெண்டு மாத ஒப்பந்தத்தில் ஆறுமாதப்பணம் முன் கூட்டியே கிடைத்துவிட்டது. அதனால் கிடைத்த சிறிய ஆறுதல் மட்டுமே அவர்களை சுவாசிக்கச் செய்தது. ஆபத்து நிறைந்த பாலைவனப் பயணம். எந்த நேரத்தில் எந்த வண்டி எந்தப்பக்கம் இருந்து தாக்கப்படும் என்பது பற்றி யாருக்கும் தெரியாது.

கன்வேய்க்குப் பொறுப்பான அமெரிக்க இராணுவ அதிகாரி செல்லத் தயாராக இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை ஒவ்வொன்றாக இறுதி செய்துகொண்டிருந்தார். இரண்டு ஹெலிகள் மிகவும் தாழ்வாகப் பறந்து சென்றன. அதனைத் தொடர்ந்து டாங்கிகள் நகரத் தொடங்கின. எல்லா வாகனங்களும் தேவையானளவு இடைவெளிவிட்டு சமவேகத்தில் பயணத்தை ஆரம்பித்த போது ஒரு மனிதக் குரல் கூடக் கேட்கவில்லை. இதற்கு மேலும் என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. பக்கத்தில் இருந்த ராணுவச் சிப்பாயிடம் எதையாவது பேசலாம் என்றால் வெடிக்கத் தயாரான துப்பாக்கியை அவன் சின்சியராக இறுகப் பற்றியிருந்த விதத்தைப் பார்த்ததும் அமைதியாக இருந்துவிட்டேன். அவனது கவனத்தைக் குழைத்த பாவம் எனக்கெதற்கு

அழகான ஈழ தேசத்தில் விடுதலைப்புலிகளால் திணிக்கப்பட்டு அனுபவிக்காத மரண பயத்தையா இங்கு அனுபவித்துவிடப் போகின்றோம் என்ற திமிர் என்னை இயல்பாக இருக்கச் செய்தது. மட்டக்களப்பில் பிரதான பாதையைத் தவிர அனைத்துப் பகுதிகளும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் மும்முரமான யுத்தம் நேரங்காலம் இல்லாமல் நடந்துகொண்டேதான் இருந்தது. அப்போது பிரதான வீதியால் செல்லும் இராணுவ கண்வேயின் வாகனங்களை எண்ணிக் கொண்டிருந்த சிறுவயது அனுபவத்தோடு இப்போதைய நிலையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது எனக்குச் சிரிப்பாக இருந்தது. வாகனத் தொடரணி தாக்கப்படுதல் என்பது ராணுவப் பார்வையில் பெருத்த அவமானமும் தோல்வியுமாகும். அதனால் தொடரணி சென்று முடியும் வரை மணித்தியாலக் கணக்கில் வீதியோரத்தில் கொளுத்தும் வெயிலில் தலையைக் கீழே தொங்கவிட்டபடி மக்களை நிறுத்திவைக்கச் செய்த அச்சம் சாமானியமானதல்ல. காலம் செல்லச் செல்ல விடுதலைப்புலிகள் விதைத்த அச்சத்துக்குள் நானும் அடிமையாக வாழ்ந்துகொண்டிருந்ததை உணர்ந்த போது மொத்தமாக எங்களில் யாருக்கும் குரல் இருக்கவில்லை. எனது குரல் எங்கே போனது அதை எப்படி இழந்தேன் என்று தேடத் தொடங்கியபோது நான் உணர்ந்த அவமானம் என்னை துரத்தித் துரத்தி அடித்தது. எனது குரலை நான் கண்டு பிடித்து அதை ஒலிக்கச் செய்த போது எல்லோரும் அந்நியமாகப் பாரத்தார்கள் விடுதலைப்புலிகள் தமக்கு எதிராக ஒலிக்கும் அந்தக் குரலை நிரந்தமாக அடக்கிவிட முனைந்தார்கள் அந்தப் போராட்டத்தில் எதிர்த்து நிற்க முடியாமல் நான் தோற்றுப்போய் பின்வாங்கி துப்பாக்கிச் சூட்டை வாங்கிக்கொண்டு உயிரைப் பாதுகாப்பதற்காக ஓடிப்போய் பதுங்கிய இடம் குவைத். பதுங்கினால் பாயத்தானே வேண்டும். அந்தப் பாய்ச்சலுக்காக என்னை நிறையவே தயார்படுத்த வேண்டியிருந்தது. என்னைத் தயார்படுத்திக் கொள்ளும் பாதையில் ஓர் அங்கமாக உளவுப் பணியைத் தேர்வு செய்து யார்யாருக்கோவெல்லாம்   உளவாளியாக இருந்து இன்னும் ஓடிக்கொண்டிருக்கின்றேன். ஏனெனில் மீளவும் நாட்டுக்குச் சென்று புலிகளுக்கு கிலி கொடுக்கும் சக்தியாக நான் செயற்பட வேண்டுமல்லவா. அதனால் ஒருவன் புலி என்று தெரிந்து விட்டால் அவனை நான் எந்த தேசத்திலும் சும்மா விடுவதில்லை.

இப்போது அமெரிக்க இராணுவத்தின் பாதுகாப்பு எல்லைக்குள் இருந்துகொண்டு அவர்களின் எதிரிகளுக்கு உதவி செய்து செய்துகொண்டிருக்கின்றேன். எனக்கென்று வகுக்கப்பட்ட பயணம் வெறும் இருபது நாட்களுக்கானது. ஓர் உளவுப் பணி நிமித்தம் செய்து கொண்ட ஒப்பந்தப்பிரகாரம் அந்தக் கால எல்லைக்குள் எனக்கு வழங்கப்பட்ட தகவல் பறிமாற்றப் பணியைச் செவ்வனே செய்துவிட்டு அங்கிருந்து கிடைக்கும் தகவலை நேரடியாகப் பெற்றுக்கொண்டு எவ்வகையிலும் கசிந்திடாபடி மீளவும் நான் திரும்பி வரவேண்டும். ஏதாவது இசகுபிசகாகினால் எனது உயிருக்கு துளியும் உத்தரவாதம் கிடையாது. உடனடியாகச் சுட்டுத்தள்ளிவிட்டு உலகப் பயங்கரவாதியின் இறப்பை உலகுக்கு பிரகடனப்படுத்துவார்கள். அல்லது நிச்சயமாக குவாந்தனாமோ சிறைதான் கிடைக்கும்.
'அம்மார் வெரி கெயார்புல்' என்று கொண்வே கொமாண்டர் என் தோளை அழுத்தித் தட்டும்போதே  இரண்டு அமெரிக்கச் சிப்பாய்கள் எனது பாதுகாப்பில் கரிசனை கொள்ளத் தாயாராகி இரு பக்கத்திலும் நின்றார்கள்.

உலகத்துக்குப் பச்சைப் பொய்யைச் சொல்லி விட்டு ஆக்கிரமிப்புச் செய்திருக்கும் அமெரிக்கப்படைகளுக்கு எதிராகப் போராடும் ஈராக்கின் தேசியவாதிகள் தமது தகவல் பரிமாற்றத்துக்கு அமெரிக்கப்படைகளையே பயன்படுத்தும் ஆச்சரியமான வழிமுறையை தம்மை உலக வல்லரசாக்கி மார்தட்டிக்கொள்ளும் அவர்கள் கடைசி வரையும் கண்டுபிடிக்கவே இல்லை. அவர்களுக்கு எதிரான செய்தியை அவர்களது பாதுகாப்புடன் சுமந்து செல்லும் நான் இந்தப் பயணகாலத்தில் அவர்களால் கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டிய நபராகவும் இருந்தேன். அவ்வளவுதான் அவர்களது புத்திசாலித்தனம். பொய்யும் புரட்டும் புத்திசாலித்தனமாக மாறிவிடுவதுமில்லைதானே.

பயணத்தின் பாதுகாப்பை மீளவும் உறுதிப்படுத்த ஹெலிகள் சென்ற வழியேதிரும்பின. குவைத்தின் எல்லை தாண்டி கெண்வேய் ஈராக் எல்லைக்குள் நுழைந்தது. குறுகிய தூரம்தான் ஆயினும் நீண்ட பயணம். கிட்டத்தட்ட அச்சுறுத்தலான பயணப்பாதை முடிந்துவிட்டது என்ற நிம்மதி எல்லோருக்குளள்ளும் வந்துவிட்டிருந்து. இன்னும் சற்று நேரத்தில் அமெரிக்கப் படைகளின் ஈராக் பாதுகாப்பு மையத்தினுள்ளே சென்று விடுவோம் என்ற நம்பிக்கையில் பிறந்த அமைதிதான் அது. ஆனால் இந்த அமைதியும் அச்சமும் என்னைவிட்டும் சற்று விலகியே இருந்தன.
பாலைவனப் பகுதி முடிந்து குடியிருப்புப் பகுதியை அன்மித்த போதுதான் அந்த விபரீதம் மிக வேகமாக நடந்தேறியது. எங்கிருந்து தாக்கப்படுகின்றது என்பது புரியாமலேயே தமக்கு வசதியான பக்கமெங்கும் சுட்டுத்தள்ளிய இராணுவத்தின் வெடியோசையிலேயே பதட்டமும் பயமும் அப்பட்டமாக வெளிப்பட்டது. அதற்குள் நான்கு டேங்கர்கள் செயலிழந்து புகைந்து கொண்டிருந்தன. பத்து ட்ரக் வண்டிகளாவது முற்றாகத் தாக்குதலைச் சந்தித்திருந்தன. எல்லாத் திசைகளிலும் சிதறிய உடல்களுக்கு மத்தியில் காயப்பட்டவர்களின் அவலப் புலம்பல் இன்னும் திகிலை சூடாக அடிமனதுக்கு ஏற்றிக் கொண்டிருந்தது. துல்லியமான திட்டமிட்ட தேர்வு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமான இலக்குத் தப்பாத தாக்குதல். வாகனங்களின் வேகமும் இடைவெளியளவும் மிகவும் திறம்படக் கணிக்கப்பட்ட தாக்குதலை முறியடிப்பதற்கான எவ்விதமான அவகாசமும் இல்லை. அனுமானிப்பதற்கிடையில் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டிருந்தன. மிகத் தூரத்தில் இருந்து இயக்கப்பட்ட சக்திவாய்ந்த நிலக்கண்ணிவெடிகளை பறந்து திரிந்த ஹெலிகளால் அடையாளங்காண முடியாமல் போனதில் ஆச்சரியமில்லை. ஆயினும் படைவீரர்கள் தமது அதிர்ச்சியையும் அச்சத்தiயும் போக்க துப்பாக்கி மூலம் இலக்கின்றித் தாறுமாறாகச் சுட்டுக் களைப்படைந்த போது ஆச்சரியமாக இருந்தது. எல்லா நாட்டிலும் போராட்டக்காரர்களை எதிர்த்துப் போராடும் இராணுவம் முட்டாளாக்கப்படும் போது மக்களின் வரிப்பணம் இப்படித்தான் வீணாக்கப்படுகின்றது. அதை யாரும் பொருட்படுத்துவதேயில்லை.

குறுகிய இடைவெளிக்குள் மீட்பு படையணியும் முதலுதவிப் படையணியும் வேகமாக வந்துசேர்ந்தன. அனைவரும் பொசிஷன் எடுத்து அடுத்த தாக்குதலை எதிர்பார்த்துத் தயாராக இருந்தனர். ஊழியர்கள் ஏற்றப்பட்டடிருந்த ஒரேயொரு வண்டி தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தது. அதுவும் அந்த வாகனச் சாரதியின் அவசரத்தினாலும் கலவரப்பட்டபுத்தியாலும் நேர்ந்த அவலம் என்பது பார்க்கும் போதே தெரிந்தது. நானும் வேகவேகமாக இறங்கி காயப்பட்டவர்களைக் காப்பாற்றும் முதலுதவி அணிக்கு ஒத்தாசைகள் வழங்கத் தொடங்கினேன். 'அம்மா அம்மா' என்று தேன் தமிழில் ஒரு புலம்பல் ஒலி தெளிவாக என்காதில் ஒலித்தது. அந்தத் திசையை நோக்கி நகர்ந்து உரிய நபரை இனங்கான்பது யுத்தகளத்தில் தன் ஆறுயிர் நண்பனின் உயிரைக் காக்கத் தன்னைத் தியாகம் செய்தல் போன்றேதான் இருந்து. அவனைப் பத்திரமாக இழுத்துச் சென்று பாதுகாப்பை உறுதிப்படுத்திவிட்டு நிமிரும் போது அவன் எனது கையை இறுகப் பற்றி உடைந்த அரபியில் கதைக்க முற்பட்டபோது 'தமிழில் கதை' என்றதும் அவனுக்கு உயிர் பிழைத்து விடுவோம் என்ற நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியிருந்து. எனது கரங்களை இறுகப் பற்றிக் கொண்டான். அவனை அம்பியூலன்சுக்கு மாற்றி முதலுதவிகளை வழங்கிக் காயங்களுக்குக் கட்டுப்போட்டு வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு கண்விழிக்கும்வரை பக்கத்தில் இருந்து 'பயப்படத் தேவயில்ல, உயிருக்கு ஒரு ஆபத்துமில்ல சரியோ' என்று பொய் சொல்லும் போது அவனது கண்கள் கலங்கியிருந்தன.

அவனால் மெதுவாகப் பேச முடிந்தது. 'அண்ணே நான் செத்துவிடுவன் போலக் கிடக்கு' என்ற போதே அவனால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 'திடீர்னு வர்ர சிக்கலான அவசர நிலமயச் சமாளிக்கப் போதுமான மருத்துவ வசதி இந்த முகாம்ல இல்ல, அதனால கொஞ்சம் சிரமமாகத்தான் இரிக்கும் கொஞ்சம் பொறுத்துக்க' என்றதும் அதுதான் தனது மரணத்துக்கான உத்தரவாதமாகக் கண்டான். அதன் பின்னர் அவனது வார்த்தைகள் உடைந்து உடைந்து வெளிப்பட்டன. அவனது சிந்தனைகள் மரணத்தை ஏற்றுக்கொள்ள உணர்வுகளைத் தயார்படுத்திக் கொண்டிருந்தன. அவனது யோசனையை வேறு பக்கம் மாற்றுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. அவனது கடவுச் சீட்டை எடுத்து பெயரைப் பார்த்தேன். முஹம்மது அலி முஹம்மது ஹூஸைன் என்றிருந்தது. அவனது பேச்சுக்கும் பெயருக்கும் சம்பந்தமிருக்கவில்லை முகத்தில் எவ்வித மாறுதலையும் காட்டிக்கொள்ளாமல் அவனுடன் உரையாட ஆரம்பித்தேன்.
'உன்ட பேரென்ன?'
'குசைன்'
'அதில்ல உண்மையான பேரென்ன? உண்மையாகப் பேசு அப்பதான் என்னால உனக்கு உதவ முடியும். நானும் இலங்கதான், மட்டக்களப்பு'
'சொரி அண்ண, என்ட பேர் சிந்துஜன், நானும் மட்டக்களப்புதான். சமாதானகாலத்துல பேர மாத்தி குவைத்துக்கு வந்துட்டன். ஒரு சிங்கள ஆளுக்கிட்டக் கதச்சி முஸ்லிமாள்தான் இந்தப் பாஸ்போர்ட் எடுத்துத் தந்தாரு'
'அப்ப நீ இயக்கமா'
அவன் தலையை மட்டும் அசைத்தான் அவனுக்கு முன்னால் மரணம் நின்றுகொண்டிருந்தது. ஆயினும் அவன் சொல்லும் தகவல்கள் உண்மைதான் என்று நம்ப முடியாது. பெயர்மாற்றிக்கொண்டு எதற்காக அவன் இங்கு வந்தான்? நாட்டிலிருந்து வெளியேற வேண்டிய அவசியம் என்ன வந்தது? சிலவேளை இவனும் புலிகளின் உளவுப் பிரிவு உறுப்பினனா? அவன் உளவுப்பிரிவு உறுப்பினன் என்றால் நிச்சயமாக எடுத்தோம் கவுத்தோம் என்று காரியம் செய்திருக்க மாட்டான் அவனது பின்னணி குறித்து கவனம் ஓடிக் கொண்டிருந்தது. பேச்சுக் கொடுப்பதென்று முடிவு செய்தேன். படுகாயம் பட்ட அவனிடம் கிட்டத்தட்ட விசாரனைக்கொப்பான கதையாடல் மனசுக்குக் கஸ்டமாக இருந்தது. புலிகள் மீதான வெறுப்பும் ஆத்திரமும் அப்படியே என் கண் முன்னால் பேருருவமாக எழுந்து நிற்க அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவனது முகத்தில் ஓங்கிக் குத்துவோமா என்று கூட ஒரு கணம் யோசித்தேன். என்னுடைய பகைவன் எனது காலடியில் வீழ்ந்து கிடக்கின்றான் அவனைக் கொல்வதுதான் எனக்கு அமைதியைத் தரக்கூடும் என்று யோசிக்கும் போது எனது கரங்களை அவன் இறுகப் பற்றியிருந்தான்.
'அண்ணே நான் செத்துட்டா என் பொனத்த இங்கேயே புதைக்கச் சொல்லுங்க, அண்ணே நீங்க ரெண்டு வேல செய்யனுமண்ணே, இந்த ஆறு மாசத்துச் சம்பளத்த இயக்கத்துக்குத் தாரதா சொல்லி இருந்தன் 'ருமைத்தியா' 'கத்தா' மூனு பள்ளிக்குப் பக்கத்துல 'பக்காலா' போட்டிருக்கிற நாதனுக்கிட்டரெண்டாயிரம் 'தினார்' காசிரிக்கி அத எடுத்து 'முர்காப்' 'ஐபிசி பில்டிங்'  பக்கத்துல 'சிட்டி சலூன்'ல என் பங்குன்னு சொல்லிக் குடுத்திருங்க அப்பிடியே என் சாவப் பத்தியும் சொல்லிருங்க கம்பனி 'இன்சூரன்ஸ்' காசு தரும் அத எங்கம்மாக்கிட்டக் குடுத்துவிடுங்க, அவக்கு ஆஸ்துமா இருக்கு பிளீஸ் அண்ண, நீங்க கடவுள் மாதிரி அண்ணே'
'இல்லடா பயப்படாத உன்னக் காப்பாத்திருவாங்க' என்று நான் சொல்லும் போது அவனது கண்களில் கண்ணீர் பொசிந்தது. அவன் சாவுக்காக அச்சப்படவில்லை இதுவரை எதற்காகவும் அழுதவிழிகளுமல்ல போன்று தெரிந்தது. ஆயுதம் தூக்கியவன் எதற்காக அழுதிருக்கின்றான் இரும்புத் துப்பாக்கி மாதிரி விரைப்பாக வளைந்துகொடுக்காது கண்கலங்காது கம்பீரமாக மனசையும் உணர்வுகளையும் கொன்றுவிட்டு மலை மாதிரி இருப்பவன்தான் போராளி என்ற பிரமைக்குள் எல்லோரையும் போல அவனும் பீடிக்கப்பட்டுத்தான் இருப்பான். எத்தனை மரணங்களைத் தாண்டி நான் பயணப்பட்டிருக்கின்றேன் எங்காவது கண்கள் கலங்கியதா எனக்கு! வாழ்க்கையில் பல உணர்வுகளைத் தொலைத்துக் கொண்டிருக்கும் போலி விறைப்புக் காட்டுகின்ற துப்பாக்கி மனிதர்கள்.
நான் யாரென்பதை வெளிப்படுத்திவிட்டு இனி இராணுவத் தோரணை உரையாடல் மட்டும்தான் சரியெனப்பட்டது. அவனிடம் உண்மையைச் சொல்லுவோமா என்று யோசிக்கும் போதே அவன் எனது கரங்களை அழுத்தினான்.
'அண்ணே, நான் பொழைக்க மாட்டன் போலத் தெரீது, என் அம்மாக்கிட்ட என் சாவச் சொல்லிராதீங்க' அவன் தனது மரணத்தை ஆத்மார்த்தமாக உணரத் தொடங்கிவிட்டான். குண்டு வெடிப்பில் சிக்கினால் ஏற்படும் மரணங்கள் வித்தியாசமானவைதான். ஒருவனை மிகவும் திடமாக வைத்திருந்து நம்பமுடியாத விரைப்போடு பலவீனப்படுத்திக் கொன்றுவிடும். மரணத்தை கம்பீரமாக எதிர்கொள்ள ஒரு ராணுவ வீரனால்தான் முடியும். அந்த வீரக்களை அவனது முகத்தில் பிரதிபலிக்கத் தொடங்கியது.
'சரி அதெல்லாம் விடு என்னால் முடிந்தளவுக்கு உன் எதிர்பார்ப்புகள நிறைவேற்றுவன், நீ ஏன் கள்ளப் பாஸ்போர்ட்ல நாட்ட விட்டு வந்தாய்'
'மட்டக்களப்பு ஜெயில்ல இருந்து அன்புமணியோட தப்பின எட்டுப்பேர்ல நானும் ஒருத்தன், அதுக்குப் பிறகு சமாதானம் அம்மான் செய்த துரோகம் உயிருக்கு உத்தரவாதமில்ல அதனால தப்பி வந்துட்டன் வன்னியில இருந்து தொடர்பப் பேணி இங்க புலனாய்வு பிரிவிலதான் இருந்தன், என் சாவுக்கு மாவீரன் பாட்டிசைக்க ஆள் இல்லாமப் போயிட்டண்ணே'
'அந்தக் கவலய விடு உன் வித்துடலுக்கு முடிந்தளவு சரியான இறுதி மரியாதையைச் செய்ய முயல்கின்றேன்' ஏதோவொரு நம்பிக்கையில் என்னைப் பார்த்தான். அந்தப் பார்வையில் நான் யார் என்ற கேள்வி தொக்கி நின்றது பதில் அவனுக்குப் பயனற்றது ஏனெனில் இப்போது அவனுக்கு நான்தான் எல்லாமே என்ற நிலை.
'உலகத்துல கடைசி வரையும் ரகசியம் என்டு ஒன்டு இல்ல எனெ அண்ணே'
'ஏன் அப்டிச் சொல்றாய்?'
'இதுவரைக்கும் யாரென்டே தெரியாமல் வாழ்ந்த நான் இப்ப எல்லா உண்மையையும் யாரென்டே தெரியாத உங்கக்கிட்டச் சொல்லிக்கிட்ருக்கன் பாருங்கோ'
'அதான் வாழ்க்க, ஒரு புள்ளியில் முடியும் போது எதிரியென்டாலும் நம்பித்தானாகனும், அது செரி இங்க உங்கட தேடுதலுக்குள்ள இருக்கின்ற ஆட்கள்ட பெயர்களச் சொல்லு'
அவன் மிகவும் முடியாமல் அவதிப்பட்டான் அதிகமாக குருதி வெளியேறி இருந்தது. அவனது உடல் சூடு குறைந்து கொண்டே சென்றது. இன்னும் விஷேட மருத்துவக்குழு வந்து சேரவில்லை. அது வரைக்கும் அவன் தாங்கமாட்டான் என்று எனக்குத் தெரிந்தது. எனது கேள்வி அவனுக்குள் என்ன உணர்வை ஏற்படுத்தியதோ தெரியவில்லை சித்திரவதைப்பட்டு உண்மையைக் கடித்துக் கொண்டிருக்கும் திமிர்பிடித்த வீரனின் உரம் அவனது முகத்தில் பிரதிபலித்தது.
'ப்ளீஸ் சொல்லுடா, ஏன்னா நானும் நீங்க தேடும் ஆட்கள் பட்டியலில் இருக்கலாம்னு எனக்குத் தெரியும்' என்று அவனைப் பார்த்துப் புன்னகைத்தேன்.
அவன் அமைதிக்கு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டான். அவனால் பேசுவது மிகவும் சிரமமாக இருந்தது. பின்னர் என்ன நினைத்ததானோ தெரியவில்லை என்னை ஆழமாக உற்றுப் பார்த்தான்.
'நீ பயப்படாத நீ கேட்ட விசயங்கள எப்பிடியும் நம்பிக்கையாகச் செய்து முடிப்பன். அத நீ தாராளமா நம்பலாம். எனக்குச் சொந்த இடம் ஓட்டமாவடி' என்று சொல்லிவிட்டு அவனை நிதானமாகப் பார்த்தேன்.
அவனது நம்பிக்கையின் இறுதிப் பிடியாக இருந்த என்னிடம் உண்மையைச் சொல்வதில் தப்பில்லை என்று கருதினான் போலும். அதை விடத் தெளிவாகச் சொல்வதானால் அவன் என்னை முழுமையாக நம்பினான். அந்த நம்பிக்கையை பார்வையால் எனை நோக்கி முழுமையாகப் பாய்ச்சினான். அதை என்னால் உணர முடிந்தது. அவனது தலையை இதமாகத் தடவிக் கொடுத்தேன்.
அவன் ஒவ்வொரு சொல்லாக அடுக்கினான் அதன் ஒலியும் சுருதியும் குறைந்து கொண்டே சென்றது.
'ஒரு டிசம்பர்ல... உங்களுக்கு ...சூடு பட்டிச்சா ...அண்ணா'
நான் தலையசைத்தேன். அவன் புன்னகைத்துக் கொண்டான்.
'மு..க..ம...ட்' ஒவ்வொரு எழுத்தாக மிகச் சிரமத்தோடு உச்சரித்தான்  பார்வையால் பேசினான் ஆம் என்று தலையசைத்தேன் அப்படியே குணிந்து காதினுள் 'இப்போது அம்மார்' என்றேன் அவனது கைகள் எனது கையைப் இறுகப் பற்றிக் கொண்டிருந்தன, மீண்டும் அவனது கண்களில் இருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர் வந்தது. 'அ....ம்...' என்றதோடு புன்னகை பூத்தபடி என்கரங்களை மிக அழுத்தி இறுக்கினான்.
அவன்மீது எனக்கிருந்த கொலைவெறி ஒரு கணத்தில் எங்கு போனதென்றே தெரியவில்லை. மனிதம் எல்லாவற்றையும் வென்று அமைதியாக என்னைச் சூழ்ந்து நின்று கொண்டிருந்தது. பகைவன் எதிரி நண்பன் எல்லாமே வெறுமையாகி நின்ற பயனற்ற பொழுதில் விஷேட வைத்திய குழு இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுமென்ற அறிவித்தல் கேட்டது.

0 0 0

குறிப்பு 01: ருமைத்தியா கத்தா மூனு பள்ளிக்குப் பக்கத்துல பக்காலா போட்டிருக்கிற நாதனுக்கிட்டரெண்டாயிரம் தினார் பற்றி விசாரித்த போது அப்படி ஒரு தீனார் கூட தன்னிடமில்லை என்று வாதிடும்போதே அவன் சொல்லும் பொய் பளிச்செனத் தெரிந்தது.
குறிப்பு 02: முர்காப் ஐபிசி பில்டிங்  பக்கத்தில் இருந்த சிட்டி சலூனில் அவனது மரணச் செய்தியைச் சொல்லி ஒருவாரத்தின் பின் எதேச்சையாக அங்கு எட்டிப் பார்த்தேன் அவனுடைய படத்துக்குப் பக்கத்தில் எண்ணெய் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
குறிப்பு 03: சரியாக நான்கு வருடங்கள் பாதுகாத்த அவனது காப்புறுதிப் பணம் ஐந்து லட்சம் ரூபாயோடு அவனது அம்மாவின் இருப்பிடத்தைத் தேடிக் கண்டடைந்த போது அக்கம் பக்கத்தில் உள்ள சனங்கள் சுடுகாட்டுப் பக்கம் வழிகாட்டினார்கள். மருந்துவாங்கப் பணம் இல்லாமலேயே ஆஸ்த்துமாவினால் இறந்து விட்டிருந்தாள்.
குறிப்பு 04 : அப்போது நிறையப் புதிய பணக்காரர்களும் பல துரோகிகளும் இருந்தார்கள் மாவீரர்கள் என்று எந்த நினைவிடமும் இல்லாதிருந்தது.

Thursday, January 23, 2020

கொழும்புக்குப் பொருத்தமான தமிழ் வேட்பாளர் யார்?



-முஸ்டீன் முஹம்மத்-

நம்நாட்டின் வடக்கு , கிழக்கு மாகாணங்களில் இலங்கைத் தமிழர் செறிந்து வாழும் பகுதிகளில் மட்டுமே தமிழ்க் கட்சிகள் செயற்பாட்டுத் தளத்தை நிறுவியிருந்தன மலையககக் கட்சிகள் கொழும்பு உட்பட இந்திய வம்சாவழித் தமிழ்ர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தமது அரசியல் செய்பாட்டுத் தளத்தை நிறுவிக் கொண்டன. இலங்கைத் தமிழரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் இந்தியத் தமிழர் பகுதிகளில் அரசியல் நடவடிக்கையில் இடையீடு செய்வதில்லை அதுபோன்றே மலையகக் கட்சிகளும் இலங்கைத்தமிழர் பகுதிகளில் அரைசியல் தலையீடுகளைச் செய்வதில்லை. இலங்கைத் தமிழர் ஓரளவுக்குச் செறிந்து வாழும் கொழும்பில் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது வரையிலும் அரசியல் செயற்பாட்டுத்தளத்தை தேர்தலை இலக்கு வைத்து செய்ததில்லை. ஆனால் இந்த எழுதப்படாத ஒப்பந்தமும் புரிதலும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுடன் முடிவுக்கு வந்துவிடும். இந்தப் புரிதல் அரிசயலில் கல்லெறிந்தவர் மனோகனேசன்தான். மட்டக்களப்பில் தனக்கான அமைப்பாளரை அவர் நியமித்து அதை ஆரம்பித்து வைத்தார். அப்படியே இந்தியத் தமிழர் புறக்கணிக்கப்படுவதாக வடக்கில் எழுந்த கருத்தியல் அலை கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தாக்கம் செழுத்தாமலும் இல்லை.

கொழும்பை மட்டுமே மனோ நம்பியிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை கடந்த அனைத்துப் பாராளுமன்றத் தேர்தல்களும் நிரூபித்து நிற்கின்றன. அத்துடன் மணோ ஒரு சாதாரண அரசியல்வாதி மட்டுமே. அவர் மக்களின் அரசியல் சிந்தனையில் தாக்கம்செழுத்தும் அல்லது மாற்றத்தை உண்டுபண்ணும் நபரும் கிடையாது அந்தளவுக்கு கணதியான அறிவுஜீவியும் கிடையாது அதுவே அவரது தோல்வியை அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் உறுதி செய்யப் போகின்றது. ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் களமிறங்கும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் களமிறங்குவதற்கு உள்ளும் புறமும் இருக்கின்ற சில தடைகள் பற்றியும் அலச வேண்டிய தேவை இருக்கின்றது. அதாவது கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனதுபிரதிநிதித்துவத்தை முதல் முறையாகப் பெறுவதாக இருந்தால் அதன் பிரதான வேட்பாளர் சக்திமிக்கவராகவும் தலைமைத்துவப் பண்புமிக்கவராகவும் நிச்சயம் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வீ.தவராசாதான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் கே.வி.தவராசா கொழும்பை மையப்படுத்தி அரசியலில் குதித்தால் மணோகனேசன் புத்திசாலியாக இருந்தால் எடுக்க வேண்டிய இரண்டு முடிவுகள், ஒன்று ஒதுங்கிக் கொள்வது அல்லது தவராசாவின் வெற்றிக்குத் துணை நிற்பது. ஆயினும் மனோ புத்திசாலி அல்ல அவர் திரும்பவும் யானைச் சின்னத்துக்குள் தன்னைப் புதைத்தே வெளிப்படுவார். அது தவராசாவுக்கு குறிப்பிடத் தக்க சவாலாக அமையும் ஆனாலும் அந்தச் சவாலை இலகுவாகச் சமாளிக்கும் தலைமைத்துவ ஆற்றல் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவுக்கு வெகுவாக இருக்கின்றது. அவரது வெற்றிக்குத் தடையாக அந்தச் சவால் இருக்கப் போவதில்லை. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைக்குள் அல்லது தமிழரசுக் கட்சிக்குள் இருந்து எழுகின்ற சவாலை தவராசா எப்படிச் சமாளிக்கப் போகின்றார் என்பதில்தான் பல முக்கிய விடயங்கள் தங்கியிருக்கின்றன.

அவருக்குக் கட்சிக்குள் இருக்கும் முதன்மையான சவால் சட்டத்தரணி சுமந்திரன்தான். ஏனெனில் தவராசா கட்சிக்குள் அரசியல் ரீதியில் ஒரு பாராளுமன்றப் பிரதிநிதியாக வந்துவிடக் கூடாது என்பதில் மிகக் கண்ணும் கருத்துமாக இருப்பவர் சுமந்திரன்தான். அடுத்த தேர்தலில் கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடுவது தொடர்பான முடிவுகளை எட்டுவதற்கு ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் சுமந்திரனது வாதம் பொதுமைப்படுத்தியதாக நிச்சயம் அமையும். கூட்டமைப்பு கொழும்பில் தேர்தலில் போட்டியிட்டால்  கொழும்புத் தமிழ்ப் பிரதிநித்துவம் கிடைக்காது என்ற வாதத்தை நிச்சயம் வலியுறுத்தத் தவற மாட்டார். ஏனெனில் மனோகணேசன் ஒரு போதும் சுமந்திரனுக்குச் சவாலாக வரப்போவதில்லை அதனால் மனோ அவருக்குப் பொருட்டே கிடையாது. தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்படும் என்ற அச்சத்தை விதைத்து தவராசாவை போட்டியிடாமல் தவிர்ந்துகொள்ளச் செய்வதே அவரது இலக்காக இருக்கும். ஒரு சென்சிட்டிவ்வான விடயத்தைக் கொண்டுதான் தவராசாவைத் தனக்கு நிகரான போட்டித்தளத்தில் இருந்து ஒதுக்க முடியும் என்பதை சுமந்திரன் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றார். தவராசா மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய இடமும் இதுதான்.

எனது அவதானத்தின் படி தமிழ் மக்களுக்கு தலைமைத்துவத்தை வழங்கக் கூடிய மிகச் சிறந்த அடுத்த தெரிவாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாதான் இருக்கின்றார். அதற்கடுத்த இடத்தில் சட்டத்தரணி காண்டீபன் இருக்கின்றார். இவர்கள் கொண்டிருக்கும் தலைமைத்துவப் பண்பு என்பு மக்கள்மயப்பட்டது மக்களுக்கானது. தமிழர்களுக்கான சரியான தலைமைத்துவத்தை நிறுவவிடாது போடப்படும் தடைகளில் இருந்து வெளிப்படத்துடிப்பவர் சுமந்திரன்தான் என்பது மறைக்கப்பட்ட விடயமுமல்ல. ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் தழிரசுக் கட்சியினதும் தலைவராக சுமந்திரன்தான் வரவேண்டும் என்பது ரணில் விக்ரமசிங்கவின் அலாதியான விருப்பம். அந்த விருப்பம் இலங்கைச் சூழலில் தீர்மாணிக்கப்பட்டதுமல்ல அது குறித்து அலசுவது இக்கட்டுரையின் நோக்கமுமல்ல. ஆனால் தமிழ் மக்களின் ஏகத் தலைவராக சுமந்திரனைக் கொண்டு வந்து நிறுத்த எடுக்கப்படும் முயற்சிகள் மிகவும் அபாயகரமானவை என்பதைத் தமிழ் மக்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது மக்களை உண்மையாக நேசிக்கும் ஒவ்வொருவரினதும் கடமையாகும். இதே நேரத்தில் சுமந்திரன் மிகச் சிறந்த மனித உரிமைகளுக்கான குரல் என்பதிலும் அந்தக் குரல் நியாயமாக பல இடங்களில் ஒலித்தது என்பதிலும் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. மக்களுக்கான தலைமைத்துவம் என்றும் அடுத்த தலைவர் யார் என்றும் கேள்வி வருகின்ற போது அதற்குச் சுமந்திரன் சரிப்பட்டு வரமாட்டார் என்பதுதான் எனது அவதானம்.

அடுத்த தேர்தலில் தவராசா கொழும்பு மாவட்டத்தில் இறங்கினால் கூட்டமைப்பு நிச்சயம் தனக்கான ஒற்றைப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ளும். தவராசா வெற்றிபெற்றால் மனோ நிச்சயம் தோற்றே ஆக வேண்டும். ஒரு தலைவனுக்குள்ள முக்கிய பண்பு தனது மக்கள் பகிரங்க அழுத்தத்துக்கு முகங்கொடுத்து அச்சங்கொண்டு ஒதுங்கி நிங்கும் போது எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது நலன்களைக் கருத்தில் கொள்ளாமல் களத்தில் மூர்க்கத்துடனும் தெளிவுடனும் குதித்து அவதாகமாகச் செயற்படுவது யுத்த காலத்தில் இருந்து அதன் பிற்பட்ட காலத்திலும் பயங்கரவாதக் காட்சிகள் அரங்கேறியபோதும் தவராசா வெளிப்பட்டு நின்ற விதம் மிகவும் முக்கியமானது. தனக்கான நலன் எதையுமே கருத்தில் கொள்ளாமல் அவர் மனிதம்கொண்ட பேரியக்கமாக மக்களுக்காகக் காரியமாற்றினார். எனவே தவராசாவை முன்கொண்டு செல்வது மக்களின் கடமையும் பொறுப்புமாகும்.
தேர்தல் அரசியல் என்று வருகின்ற போது அதைச் சமாளிக்கும் அல்லது அதைக் கையாளும் குறுக்குப் புத்தி தவராசாவுக்கு இல்லாமல் இருப்பது மட்டுமே அடுத்த மாபெரும் சவால். ஏனெனில் இப்போதை நம்நாட்டு தேர்தல் அரசியல் கணவான் அரசியல் கிடையாது. எனவே இதை எதிர்கொள்வதுக்குத் தகுந்த தேர்தல் அரசியல் வல்லுநர்களின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற்றுக் கொள்ளும் போது தவராசா வெற்றி பெறுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடும். வாக்குகளைச் சேகரிக்கும் உபாயங்கள், ஊடகங்களைக் கையாளவும் சமூக ஊடகங்களைக் கையாளவும் தனித்துவமான திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் இலக்கியவாதிகள், கலைஞர்கள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள், இளைஞர் யுவதிகள் என்று அனைத்துத் தரப்பையும் மையப்படுத்திய தேர்தல் அரசியலுக்கான திட்டமிடல் திறம்ப மேற்கொள்ளப்பட வேண்டும். அதில் துறைசார்ந்த அனுபவசாலிகளின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு பொது வேலைத்திட்டத்தை வகுக்க வேண்டும்
தேரதல் அறிவிக்கப்படும் வரை காத்திராமல் இப்போதே அதற்கான செய்பாட்டுத் தளத்தை நிறுவிட வேண்டிய அவசியமும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வீ.தவராசாவுக்கு இருக்கின்றது. அதே போன்று வடக்கை மையப்படுத்திய தேர்தல் அரசியலில் சட்டத்தரணி காண்டீபன் தனது வெற்றியை எவ்வகையிலாவது உறுதிப்படுத்திட வேண்டியதும் அவசியமாகும் இது குறித்து பிரிதொரு கட்டுரையில் அலசலாம்.

மக்களுக்கான நியாயமான குரல் நிச்சயம் உரத்து ஒலிக்க வேண்டிய கட்டாயங்கள் நிறைந்த காலகட்டத்தில் சிறுபான்மை மக்கள் இருப்பதை நாம் அனைவரும் அவதானத்தில் இருத்த வேண்டும்.