Saturday, November 29, 2014

இரண்டாவது கிறீஸ் பேயும் ஜனாதிபதித் தேர்தலும்

இரண்டாவது கிறீஸ் பேயும் ஜனாதிபதித் தேர்தலும்
முஸ்டீன்
மக்கள்  சொல்கிறார்கள் என்று காதிற்பட்டது
இக்கட்டுரையைப் பிரசுரித்த அனைத்து இணைய தளங்களுக்கும் நன்றி
01.www.sonakar.com
02.www.vidiyal.lk
03. muslimkural.com
04.keetru.com
05. berunews.wordpress.com
06.www.no1tamilnews.com
07.www.jaffnamuslim.com
08.msgtoall.blogspot.com
09.thalgaspitiyaonlinenews.blogspot.com

இனவாதத்தின் பெயரால் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் அது சிங்களவாதத்தினதும் பௌத்த தர்மத்தினதும் பெயரால் இலகுவாகக் கை கூடக் கூடியது. அதைப் பலமாக நம்பிய இரண்டு செம்மல்கள் இந்நாட்டில் இருக்கிறார்கள். தரப்படுத்தி நோக்குகையில் முதலிடத்தில் சம்பிக்க ரணவக்க இரண்டாமிடத்தில் விமல் வீரவன்ச. இந்த இரண்டு பேருக்கும் பெரிய சரித்திரம் ஏதும் கிடையாது. ஆனால் தரித்திரம்படிந்த நீண்ட இருண்ட பாதை இருக்கிறது சில கதைகளும் இருக்கின்றன. 

இலங்கையில் ஒருவர் இரண்டு முறை மாத்திரமே ஜனாதிபதியாக முடியும் என்ற யாப்பின் விதியை ஜே.ஆர். ஜெயவர்தன வரைந்து சென்றுவிட்டமை இவர்களுக்கு ஜனாதிபதியாகும் ஆசையைத் தூண்டிவிட்டது. 2005ம் ஆண்டு பெரும் போராட்டத்தின் மத்தியில் மஹிந்தராஜபக்ஷ ஜனாதிபதியானார். எக்காரணம் கொண்டும் ரணில்விக்ரமசிங்க ஜனாதிபதியாகி விடக்கூடாது என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடிவாதம் வடக்கு கிழக்கில் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கக் கூடாது என்ற தடையுத்தரவைப் பிறப்பிக்கத் தூண்டியது. அது வடக்கில் பெருவெற்றியளித்தது. அண்டன் பால சிங்கம் கூட ரனில் ஒரு நரி ஐயா நரி என்று ஜேர்மனியில் உரையாற்றும் அளவுக்கு அந்த வெறுப்பு வெளிப்படையாகத் தெரிந்தது. 2002ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டார நாயக்காவின் இறுக்கமான பிடிக்குள் இருந்து தம்மை ரட்சிக்க வந்த மீட்பராக ரணிலைக் கொண்ட விடுதலைப் புலிகள், இரண்டு வருடங்களுக்குள் வில்லனாகவே முடிவுகட்டிக் கொண்டதன் விளைவுதான் சின்னஞ் சிறிய வாக்கு வித்தியாசத்தில் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கியது. ரணிலின் ஆயுட்காலக் கனவில் மண்வாரி இரைத்தது. ரணில் இனி எப்போதைக்குமே ஜனாதிபதியாக முடியாது என்பதை நிதர்சனமாக்கியவர் மகிந்தராஜபக்ஷதான். 

2010 ஜனாதிபதித் தேர்தலில் ரணில் ஜனாதிபதி வேட்பாளராகக் கூட நிற்க முடியாதபடி புலிகள் விட்ட சாபம் தொடர்ந்தது. 2009ம் ஆண்டு எல்லா சவால்களையுத் தாண்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தமையானது அவரை அசைக்க முடியாத வீர புருஷராக்கியது. யுத்தவெற்றி சிங்களத்தின் வெற்றியாகவும் பௌத்தத்தின் வெற்றியாகவும் 'மே புதின்கே தேஷய' எனும் பதாதையை தேசமெங்கும் பாதையை மறித்து தூக்கிக் கட்டுமளவுக்கு ஒரு அலையை இலகுவாக விதைத்;துவிட்டிருந்தது. இந்த அடிப்படையில்தான் 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகக் கனவு கானும் உத்வேகத்தை சம்பிக்க ரணவக்கவுக்குள்ளும் விமல் வீரவன்சவுக்குள்ளும் துளிர்க்க விட்டிருந்தது. 

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் ஒரு ஹீரோவையும் ஒரு வில்லனையும் ஒரு ஜோக்கரையும் இரண்டு துனை நடிகர்களையும் அடையாளப் படுத்திக் காட்டியிருந்தது. முறையே அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்க, சரத்பொன்சேகா, சம்பிக்க ரணவக்க மற்றும் விமல் வீரவன்ச. வில்லனும், ஜோக்கரும் இனி ஹீரோவாகிட முடியாது என்பதை அதீத கற்பிதமாகக் கொண்டு துணை நடிகர்கள் இருவரும் ஹீரோவாகும் ஆசையைக் கூர்மைப்படுத்தத் தொடங்கினார்கள். 

யுத்தத்தை முடித்து வைத்தமைக்காக மக்கள் அளித்த பரிசு மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு சற்று குறைவான பலத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குரித்தாக்கியதாகும். அதனால் அதிகம் திருப்திப்பட்டவர்கள் அதாவது மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காமையால் இடதுசாரிகளைவிடவும் அதிகம் குஷி கொண்டவர்கள் அந்தத் துணை நடிகர்கள் இருவரும்தான். அதற்குக் காரணம் இருக்கிறது. 

இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ 2016ம் ஆண்டோடு முன்னாள் ஜனாதிபதியாகிவிடுவார். அந்த இடைவெளியில் தான் ஜனாதிபதியாகலாம் என்று இருவருமே சமாந்திரமாகக் கனவு கண்ட வேளைதான் ரவுப் ஹகீம் அனைத்திலும் மண்அள்ளிப் போட்டார். ரவுப் ஹகீம் அதைச் செய்வதற்கு முன்னர் ரங்கா மற்றும் பிரபா கனேசன் ஆகிய இரண்டு தமிழர்கள் கனகச்சிதமாக மகிந்தவுக்கான ஆதரவுக் கதவுகளை அப்போதே திறந்து வசதி செய்துவிட்டிருந்தனர். ஹகீம் ஆதரவுக்கரம் நீட்டியிருக்காவிட்டாலும் கூட முஸ்லிம் காங்கிரசில் இருந்த சிலர் அதைச் செய்திருப்பார்கள். 

அரசுக்கு ஆதரவு  என்ற நிலைப்பாட்டை ஹகீம் எடுத்தவுடன் (அதுவும் திடீரென்றல்ல நீண்ட பல சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர்தான்) வில்லங்கம் புதுவடிவில் உருவானது. ஜே ஆரின் இரும்புப் பூட்டுக்கு புதுச்சாவி போட்டுத் திறந்தார் மஹிந்த. மூன்றாவது முறையாகவும் ஒருவர் ஜனாதிபதியாகலாம்  என்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் சட்டமூலமாக்கினார். 

ஒருவர் முன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாகலாம் என்ற தீர்மானத்தை சாடைமாடையாகக் காற்றில் கசியவிட்டபோது அதைப் பலமாக எதிர்க்கும் ஒரு கூட்டணியை இரண்டு துணை நடிகர்களும் பக்குவமாகத் தனிப்பட்ட முறையில் உருவாக்கிப் பலப்படுத்திக் கொண்டிருந்தனர். அதன் பிரதான நோக்கமே எப்படியும் 2016ம் ஆண்டோடு மஹிந்த யுகம் இயல்பாகவே முடிவுக்கு வந்துவிடும் அதன் பின்னர் ஜனாதிபதி ஆசனத்தை தாம் அலங்கரிக்கலாம்   அதனால் மஹிந்தவின் மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாகும திட்டத்தை முறியுடிக்க பகீரதப் பிரயத்தனம் செய்தனர். ஹகீம் ரணிலுக்கு டாட்டா காட்டியவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுதியானது. அதன் பின்னர் இருவரும் எதிர்க்கும் திட்டத்தை அப்படியே குப்பைவாளியில் போட்டுவிட்டனர். அத்துடன் ஜனாதிபதிக்கு நல்ல பிள்ளையாகவும் நடிக்கத் தலைப்பட்டனர். அதன் படிமங்களையும் பகிரங்கக் காட்சிகளையும் முழுநாடும் கண்டுகளித்தது.

துணை நடிகர்கள் இருவரினதும் இந்த நகர்வுகள் குறித்த சில தரவுகள் ஜனாதிபதிக்குக் கிடைக்கப் பெற்றமையால்தான்  இரண்டு துணைநடிகர்களுக்கும் கனதியான பொறுப்பை அளித்ததாகவும் மக்கள்தான் வீதிகளில் கதைத்துக் கொண்டார்கள். அத்துடன் ஜனாதிபதி இனவாதம் பேசவுமில்லை மதவாதம் பேசவுமில்லை. அவரின் ஒரே பேச்சு 'ஒரே நாடு ஒரே மக்கள்' . அதே வேளை மதவாதம் பேசும் பொறுப்பை கச்சிதமாகச் செய்தவர் செம்மல் சம்பிக்க ரணவக்க. இனவாதத்தை கனகச்சிதமாகக் பேசியவர் தியாகச் செம்மல் விமல்வீரவன்ச. இந்த இருவரினதும் மதவாத மற்றும் இனவாதப் பேச்சுக்களை ஜனாதிபதி கண்டு கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் வீதிகளில் வெளிப்பட்டது. ஆயினும் ஏன் ஜனாதிபதி இப்படிப்பட்ட இருவருக்கும் முக்கிய அமைச்சுக்கள் அளித்து கௌரவப்படுத்தினார்? என்பதுதான் பலருக்கும் புரியவில்லை. இப்போது கொஞ்சம் புரிந்திருக்கும்.

மூன்றாவது முறையும் மகிந்த ராஜபக்ஷதான் ஜனாதிபதி எனும் தீர்மானம் உறுதியானது. ஆயினும் சம்பிக்கவின் கனவு மட்டும் உள்ளார மெதுமெதுவாகப் பலம் பெறத் தொடங்கியது. அதற்கான ஒரே ஆயுதம் பௌத்த தீவிர மதவாதப் பாதை. அதை மேலும் மேலும் கூர்மைப்படுத்தி உசுப்பேற்றுவதன் மூலம்தான் இலகுவாக வெற்றியடைய முடியும் என்று சம்பிக்க நம்பினார். அவரின் ஆசையினை 2022லாவது நிறைவேற்றிக்கொள்ள வரையப் பெற்ற புது அத்தியாயம்தான்,! பொ து ப ல சே னா  என்ற இரண்டாவது கிறீஸ் யக்கா

இடையில் அவருக்கு ஒரு சிறிய ஆசையும் இருந்தது அதுதான் சில வேளை 2016களில் தான் பலம் பெற்றிருந்தால் மஹிந்தவை எதிர்த்துக் களத்தில் குதிப்பது. அதற்கான பௌத்த மதவாத அலையை நாடளாவிய ரீதியில் கிளப்பிவிடும் பணியை பொதுபலசேனா எனும் பூதம் செய்தது. ஐயாயிரம் பிக்குகளை ஒன்று சேர்த்து ஒரு பெரும் மாநாடு நடாத்துவது என்ற தீர்மானம் எட்டப்பட்டது, அதற்கான வேலைகள் முடுக்கிவிடப்பட்ட போதுதான் பௌத்தத்தை அரசியலில் மூலதனமாக்கும் அந்த அத்தியாயத்தின் இயக்குநர் யார் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்ட ஜனாதிபதி ஒரு அதிரடி முடிவெடுத்தார். 

பௌத்த மதவாத அலை ஏதோவோர் விதத்தில் தேசத்தில் ஓர் எழுச்சியை உண்டுபன்னும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பொது பல சேனா வீரியம் பெற்று எழத் தொடங்கியது. அந்த எழுச்சி என்ற எலிப் பொறிக்குள் வைக்கப்பட்ட தேங்காய்த் துண்டாக முஸ்லிம் சமுகம் இருந்தது. ஹலால் என்ற முதல் எலியைப் பிடித்துக் காட்டி பௌத்த மதவாதிகளையும் சிங்கள இனவாதிகளையும் கிளர்ச்சி கொள்ளச் செய்து முதல் அத்தியாயத்தை அட்டகாவமாக ஆரம்பித்தது பொதுபல சேனா. அரசு எதிர்பார்க்காத   அந்த எழுச்சியைக் கட்டுப்படுத்த ராஜதந்திரம்தான் தேவைப்பட்டது. அதற்காகக் களத்தில் இறக்கப்பட்ட ஹீரோதான் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ.

பாதுகாப்புச் செயலாளர் மதி நுட்பத்துடன் செயல்பட்டார். அதன் விளைவுதான் பொதுபல சேனாவுக்கு உத்வேகமளிக்கும் நம்பத்தகு கருமவீரராக அவர் தென்பட்டார். சம்பிக்க பல்வேறுபட்ட லட்சியங்களுடன் உருவாக்கிய பௌத்த அலையை கோட்டா லாவகமாகச் சுருட்டித் தன் பைக்குள் வைத்துக் கொண்டார். பொதுபல சேனாவுக்குப் பரந்த வெளியைத் திறந்து கொடுத்தார். சுதந்திரச் செயற்பாட்டின் உச்ச ருசியை அவர்கள் ருசித்துப்பார்த்தனர். சம்பிக்கவை விட கோட்டா சூப்பர் என்ற திருப்திகரமான முடிவுக்கு வந்தார்கள் பொதுபல சேனா புத்திஜீவிகள். அதனால் சம்பிக்கவை ஒரேயடியாக ஓரங்கட்டி விட்டார்கள். அத்தோடு ஐயாயிரம் பிக்குகளை ஒன்றிணைத்து நடாத்தப்பட இருந்த மாநாடும் காலவரையறையின்றி பிற்போடப்ப்டடது.

பிற சமுகங்களால் கோட்டா பல்வேறுபட்ட சந்தேகக் கனைகளால் துளைத்ததெடுக்கப்பட்டார். பொதுபலசேனாவின்  நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று கொஞ்சம் சீரியசாக நடிக்கத் துவங்கிய கோட்டாவை புதிரோடும் கவலையோடும் சந்தேகத்தோடும் பரிதாபத்தோடும் ஐயத்தோடும் மக்கள் பார்த்தார்கள். ஆறுதலோடும் சிலர் பார்த்தார்கள் என்பதும் முக்கியமான விடயம். 

அனைத்தையும் சமாளிக்க அந்நியன் ரேன்ஜில் நடிக்க வேண்டிய பொறுப்பை கனகச்சிதமாகத் செய்யத் தொடங்கினார். பொதுபலசேனாவை சந்தேகத்தோடு பார்க்க வேண்டாம் என்று தேசத்து மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். காலியில் அதிதியாகக் கலந்து கொண்டு பொது பல சேனாவின் வாசஸ்தளத்தை திறந்து வைத்து ஒரு குழப்பத்தை உண்டுபண்ணிவிட்டார்.  அது மர்மங்களோடு நீடித்தது. அதைச் சமாளிக்க ஒரு மத நிகழ்வில் கலந்து கொள்ள விடுக்கப்பட்ட அழைப்பையேதான் ஏற்றுக் கொண்டதாக ஓடக அறிக்கை விட்டார். அதன் மூலம் பொதுபல சேனாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் தான் இல்லையென்பதை நிறுவ முயன்றார். முஸ்லிம் தரப்பை சமாதானப்படுத்த பல்வேறு நியாயப்படுத்தல்களையும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளையும் அவர் செய்து முடித்தார். அவர் கொடுத்த ஆறுதலின் சூட்டை அடுத்த நாளே ஒரு பள்ளிவாசல் மீதான கல்வீச்சு தகர்த்தது. 

இது இப்படியிருக்கும் போது பொதுபலசேனா இன்னுமொரு அதிரடி அத்தியாயத்தை ஆரம்பித்தது, தமக்கு நெருங்கிய நம்பிக்கையாளர்களைக் கொண்டு மகாசேன இயக்கத்தை உருவாக்கியது, மகாசேன என்பது கிறீஸ் மனிதன் மாதிரி முகரியில்லாத ஒரு பேய், அது எப்போது எங்கே எப்படி வெளிப்படும் என்பதை அனுமானிக்க முடியாது. அதன் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை ஆரம்பித்தது, பர்மாவுக்கான விஜயத்தை ஞான சாரர் மேற்கொண்டு அசின் விராதுவைச் சந்தித்தார். அடுத்த இலக்குபற்றி விபரித்தார், இனவாதத்தையும் மத வாதத்தையும் எப்படி முழுவீச்சீல் பயன்படுத்துவது என்பது பற்றி அவருடைய அனுபவங்களைக் கேட்டறிந்து கொண்டார். அசின் விராதுவுக்கு இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டு பிக்குகள் மாநாட்டில் உரையாற்றுமாறும் அழைப்பு விடுத்தார். அசின் விராது அதை ஏற்றுக் கொண்டார். பௌத்த தீவிர வாதத்தின் இளவரசனாக அவரை தீவிர பௌத்த மதப் பற்றாளர்கள் கருதுவதை யாரும் மறுக்க முடியாது.   

ஞான சாரர் இலங்கை மீண்டு 969 என்ற மியன்மாரின் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாக வைகுண்டமேறி விளக்கமளித்தார். ரோஹிங்யாவில் முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டதை அவர் சரி கண்டார். அந்த வெறித்தனத்தை நியாயப்படுத்தினார். அசின் விராது நமக்கும் ஹீரோ என்பதைக் கட்டமைக்கும் பணியில் தொடர்ந்தும் ஈடுபட்டார். அசின் விராது தேரரை உலகின் பயங்கரவாத முகமாக டைம்ஸ் சஞ்சிகை பகிரங்கமாகச் சித்தரித்து அட்டைப்படத்தில் அவரின் படத்தையும் பிரசுரித்தது. 2002களில் குஜராத் இனக்கலவரம் நடந்து முடிந்த கையோடு நரேந்திர மோடிக்கு பல நாடுகள் கதவடைத்தது போல பயங்கரவாத நடவடிக்கையின் உரைவிடம் என்ற அடிப்படையில் அசின் விராதுவுக்கும் பல நாடுகள் கதவடைத்துவிட்ட நிலையில் 2014 செப்தம்பர் 27 இலங்கை அவரை வரேவற்று அதியுயர் பாதுகாப்பளித்துக் கௌரவப்படுத்தியது. 
  
அதே நேரம் பிற்போடப்பட்டிருந்த பொதுபல சேனாவின் ஐயாயிரம் பிக்குகளை ஒன்றினைத்து மாநாடு நடாத்தும் நோக்கம் மிகப் பிரமாண்டமாக வெற்றிகரமாக நிறைவேறியது. பலத்த பாதுகாப்புடன் கொழும்பு சுகததாச அரங்கில் அது நடைபெறும் போது ஜனாதிபதி நாட்டில் இருக்கவில்லை. அது நல்லதொரு ராஜதந்திரம், முக்கியமான நிகழ்வுகள் நாட்டில் இடம்பெறும்போது தலைவர் நாட்டில் இருப்பதில்லை அவை நடந்து முடிந்த பின்னர்தான் அவர் நாட்டுக்கு வருவார். 2009 மே யுத்தம் முடியும் தறுவாயிலும் அவர் நாட்டில் இல்லை அளுத்கம கலவரத்தின் போதும் அவர் நாட்டில் இல்லை விராது தேரர் வருகை தந்த போதும் அவர் இல்லை. எதிர்காலத்திலும் பல நிகழ்வுகளின் போது அவர் இருக்கமாட்டார்.

விராது தேரரின் வருகைக்குப் பின்னர் ஞானசாரர் அடக்கி வாசிக்கப் பழகிக் கொண்டார். அது ஒரு பெரும் பாய்சலுக்கான பதுங்கல், முழுவீச்சோடு மீண்டும் எழ எடுத்துக் கொள்ளும் அவகாசம், மொத்தத்தில் பாரிய திட்டமிடலுக்கும் தயார்படுத்தலுக்குமான ஓய்வு. அளுத்கம கலவரத்தன்று அபசரணாய் பேசிய அவர் ராஜபக்ஷேகளுக்கு மூளை இல்லை என்ற தொனியில் கருத்துரைத்தார் நாங்கள் நினைத்தால் நடப்பதே வேறு என்று எச்சரிக்கைவிடுத்தார். எவனாவது மடையன் நீதி அமைச்சை ஒரு முஸ்லிமிடம் கொடுப்பானா? என்று பகிரங்கமாகக் கேள்வி எழுப்பினார். தாங்கள் ராஜபக்ஷேக்களுக்கும் அஞ்சுபவர்களல்ல என்ற விடயத்தை மக்களுக்குள் விதைக்க முயன்றார். அவரது நாக்கு கொஞ்ச நேரம் கடிவாளத்தை இழந்துவிட்டது. அது தாறுமாறாக அங்குமிங்கும் அக்பட்டதையெல்லாம் இடித்துக்கொண்டு ஓடி ஒரு இடத்தில் மூச்சு வாங்கும் போது கணக்குப் பிழைத்துப் போய் இருந்தது. இப்போது மஹிந்தவைவிடச் சிறந்த ஜனாதிபதி வேறு யாருமில்லை என்று அந்தர் பல்டி அடிக்குமளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. 

எல்லாம் இப்படியிருக்க குய்மோ முய்யோ என்று கூப்பாடு போட்ட முல்லாக்கள் எல்லோரும் வாய் பொத்தி மௌனிகளானதோடு விராதுவின் வருகை கூட எவ்விதக் கண்டனக் குரல்களுமின்றி பெருவெற்றியளித்த நிகழ்வாக மாறிப் போனது அதன் உள்ளார்ந்து புதைந்திருக்கும் அச்சம் பௌத்த பயங்கரவாதச் சிந்தனைக்கு முதலீடாகி விடக்கூடாது என்பது மக்களின் பிரார்த்தனை. மொத்தத்தில் விராது இங்கு வரப் போகின்றார் என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை, பக்கா பிளேன் சர்ப்பிரைஸ் அது குறித்த பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் வாய்திறக்கவில்லை.

இது இப்படியே இருக்கும் போது 7வது ஜனாதிபதித்தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்டது. சுதந்திரக்கட்சியின் ஒரு பெருந்தூன் சரிந்து எதிரணியில் விழுந்தது. அதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இனி இந்த நாடகத்தில் நடிக்க முடியாது என்று ஏற்கனவே ஒதுங்கிவிட்ட மற்றுமொரு இனவாதக்கட்சியான ஜாதிக ஹெல உறுமய புதிய அத்தியாயத்தைத் துவக்கியுள்ளது. மதில் மேல் பூனையாக இன்னும் பலரும் உட்கார்ந்து கொண்டிருக்கையில் கிறீஸ் யக்கா வாயடைத்துப் போய் அமைதி காக்கிறது. அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டு விட்டோமோ என்ற சிந்தனையில் மூழ்கியிருப்பதாக சம்புத்தத்வ ஜயந்தி மாவத்தைப் பக்கமிருந்து கிடைக்கும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

மஹிந்தவா? மைத்திரியா? என்ற கேள்விக்கு 2015 ஜனவரி 09 காலையில் பதில் கிடைக்கும். அதுவரைக்கும் இரண்டாவது கிறீஸ் பேய் மரத்திலேயே இருக்குமா அல்லது திடீரென்று பாயுமா?

இனியுள்ள காலங்களில் சில விடயங்களைக் மக்கள் புரிந்து கொள்வார்கள். 
இனியும் வீதியில் மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை இலங்கையின் அனைத்துப் புலனாய்வுப் பிரிவினர்களும்தான் அவதானிக்க வேண்டும். 
மக்கள் வீதியில் கதைப்பது எனது காதிற் பட்டால் நிச்சயம் அடுத்த கட்டுரை எழுதலாம்.

Wednesday, November 26, 2014

இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகள் 03


இலக்கியவாதிகள்:
ஜனூசின் குராலகி  கவிதை வீடியோ சீடி வெளியீட்டு விழாவின் போது இடம்பெற்ற சில நிகழ்வுகளே இக்குறிப்பை எழுதத் தூண்டின.

இலங்கை இலக்கியப் பரப்பில் யாருமே எழுத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் கிடையாது. இந்தியாவில்தான் கவிதையும் கதையும் பாட்டும் நாவலும் கட்டுரையும் தொழிலாகிவிட்டது. எல்லாவற்றிலும் காசு பார்க்க முடியும். பதிப்பகங்கள் கூட வியாபார மையங்களாகவே தம்மை மாற்றிக் கொண்டுள்ளன. பதித்பகங்களுக்கிடையே நடக்கும் போட்டியும் எழுத்தாளர்களுக்கிடையே எழும் போட்டியும் கூட படைப்பின் கணதியை முன்னிறுத்தி வருவது மிகவும் குறைவு. அதிகமானவை வருமானத்தின் அளவு தீர்மானிக்கும் பிரச்சனையாகவே அமைந்துவிடும் துர்பாக்கியமும் இல்லாமலில்லை. வருமானத்திற்கான போட்டியாகவே எழுத்தின் போட்டி அங்கு சூடுபிடித்து வெகுநாளாயிற்று. அதன் மூல கர்த்தாவாக சினமா இருப்பதும் எனது அவதானம். பிரபலம் என்பது கூட வருமானத்தின் அளவைத் தீர்மானிக்கும் மூல மந்திரமாகவே பார்க்கப்படும். அது அந்தச் சூழ்நிலைக்கும் அந்த மக்களுக்கும் சரி. ஆனால் நமக்கு??

நமது பதிப்புச் சூழல் மிகவும் வறுமைப்பட்டது பெரும்பாலும் படைப்பாளனே தனது படைப்பைப் பதிப்பிக்கும் செலவை முழுமையாகப் படைப்பாளியே சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது. இலங்கை தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் உதவியைப் பெற்று வெளியிட முடியும் ஆயினும் அது மட்டுப்படுத்தப்ட்டது. அல்லது புரவலர் புத்தகப் பூங்கா வெளியிட வேண்டும். மற்றபடி கொடகே  ஓரிரு வெளியீட்டுப்பணிகள் ஆங்காங்கே நடக்கும் மற்றபடி உள்ள அனைத்தையும் நான் சொல்லத் தேவையில்லை. இது இ;ப்படியே இருக்க எமது இலக்கியவாதிகளின் சோகக் கதையையும் கொஞ்சம் பார்த்தாக வேண்டும் அப்போதுதான் பின்னால் நான் சொல்ல வருகின்ற விடயங்களைப் புரிந்து கொள்ள முடியும். 
அன்மையில் யமுனா ராஜேந்திரன் ஒரு முகநூல் குறிப்பு போட்டிருந்தார் அதை அப்படியே தருகின்றேன். 
எனக்கு 99 வருஷம் 99 நாள் 99 நிமிஷம் 99 நாழிகையாக இருக்கிற கொடச்சல் கேள்வி இது. 99.99 சதவீதமான எழுத்தாளர்களும் படைப்பாளிகளும் தமது படைப்பைப் பற்றி பற்பலரும் பேசவேண்டும் என நினைக்கிறார்கள்இ ஸாரி ஆசைப்படுகிறார்கள். பிறிதொருவரது படைப்பு மிக நன்றாகவே இருக்கிறது என்று தோன்றினாலும் ஏன் அது பற்றி இவர்கள் 2 வரி மனம் திறந்து எழுதுவதில்லை? இவர்களால் சக மனிதனை நேசிக்க முடிவதில்லை என்பது எனது புரிதல். எனி எக்ஸ்பிளனேஷன் டியர்ஸ்
இதுதான் நமது நிலை. வாசித்துப் பிடித்துப் போன ஒன்றைப் பற்றி ஒரு குறிப்பு போடுவதே பெரிய விடயம். ஒரு பத்திரிகையில் அதன் அறிமுகக் குறிப்பு வரவேண்டுமானால் நூலின் 3 பிரதிகள் அனுப்ப வேண்டும். சின்னத் தீப்பெட்டி சைஸ்ல ஒரு அறிமுகக் குறிப்பு போட ஒருவன் மூன்று பிரதிகள்தான் கொடுக்க வேண்டும் என்பது மனிதபிமானற்றது. ஒரு பத்திரிகைக்... இது பற்றி பின்னர் பார்;போம். 
ஒரு படைப்பை வெளியிடுவதற்கு அவன் எடுக்கும் முயற்சிகள் எதையும் குறைத்து மதிப்பிட முடியாது. அதற்கு பின்னால் அவ்வளவு உழைப்பு இருக்கின்றது. அந்த  உழைப்பிற்பின் கஸ்டம் யாராவது எதையாவது இலவசமாகச் செய்து தரமாட்டார்களா என்று எதிர்பார்க்க வைக்கும். அப்படி இலவசமாக உதவுபவர்களை அப்படைப்பாளி மேலே தூக்கி வைத்திருப்பதையும் நாம் பரவலாக அவதானிக்க முடியும்.

ஒரு படைப்பாளியின் படைப்பு பற்றிய சரியான மதிப்பீட்டை மற்றுமொரு இலக்கியவாதியால்தான் சரியாகச் செய்ய முடியும். நமது சூழலைப் பொருத்த வரைக்கும் ஒரு வெளியீட்டு நிகழ்வென்பது பின்வருமாறு அமையும்.
எப்படியாவது கஸ்டப்பட்டு ஒரு படைப்பை முழுமைப்படுத்தி எடுத்துக் கொண்ட பின்னர் நான்கு தரப்பினரின் உதவியை பெரிதும் அவன் நாடுவான்.

01. செல்வந்தர்கள் : குறைந்தது ஆயிரம் ரூபாயாவது கொடுக்கக் கூடிய வர்த்தகர்கள் போன்ற வாசிப்பு இலக்கியம் படைப்பின் கனதி என்று எதையும் பெரிதும் அறியாத அவர்களின் பட்டியலைத் தயாரித்துக் கொள்வதும் அவர்களை அழைப்பதும். முதல் பிரதி சிறப்புப்பிரதி விஷேட பிரதி அதி விஷேட பிரதி என்று காசுத் தாள்களை இலக்கு வைத்து பிரதி பெறும் அதிதிகள் பட்டியலைத் தயாரித்துக் கொள்வது, அதன் மூலம் ஓரளவு செலவுகளையாவது ஈடுசெய்யலாம் என்ற ஒரேயொரு நப்பாசைதான், புரவலர் ஹாஸிம் ஒமர் ஐயாயிரம் ரூபாய் தரமாட்டார் என்றால் அவரை எந்தவொரு வெளியீட்டாளனும் முதல் பிரதிக்காகக் கண்டு கொள்ளவே மாட்டான். ஹாஸிம் பணத்திற்காக அழைக்கப்படாத ஒரு நிகழ்வு நான் தயாரித்த தீ நிழல் படத்தின் திரையிடும் நிகழ்வாகத்தான் இருக்கும் என்று நான் கருதுகின்றேன். பெருந் தொகை தரும் நபருக்கு முதல் பிரதி கொடுத்தல் என்ற நிலை தோன்றி வெகுநாளாயிற்று. வறுமைப்பட்ட படைப்பாளிகள் தம்மால் முடிந்த ஒரு சிறிய தொகையை வைத்து அந்தப்பிரதிகளைப் பெற்றுக் கொள்வார்கள். இளையவர்கள் பலரின் இலக்கியக் கூட்டங்களுக்கு செல்வந்தர்களைப் போல இவர்கள் அழைக்கப்படுவதில்லையாயினும் முக்கிய வெளியீட்டு நிகழ்வுகளுக்கு அவர்கள் பிரசன்னமாயிருப்பார்கள்.

02. அரசியல்வாதிகள் : ஒரு பிரபலத்துக்காக இவர்கள் அழைக்கப்படுவார்கள். இவர்களால் சாதாரணமான படைப்பாளிக்கு பெரிய பொருளாதார நன்மைகள் கிடைக்கமாட்டாது. அவர்களோடு ஏதோவோர் விதத்தில் தொடர்பு வைத்திருந்தால் மட்டுமே அவர்கள் நிகழ்வுக்கு வருவார்கள். இல்லாவிட்டால் வரமாட்டார்கள். அல்லது இவர்களைக் கொண்டு ஏதாவது அரசியல் லாபம் அடையக் கூடிய வகையில் களம் இருந்தால் வருவார்கள். அத்துடன் மிகவும் வேண்டப்பட்டவர்களின் நிகழ்வாக இருந்தால் அது அரசியல் வாதிகளிடமிருந்து பெரியதோர் தொகையைப் பெற்றுத்தரும். இது இப்படியே இருக்க  இவர்கள் வந்தால்தான் மூன்றாவது தரப்பினர் வருவார்கள். 

03. ஊடகவியலாளர்கள் : நம் நாட்டில் மிகவும் பாவப்பட்ட வர்க்கம். பெயரும் புகழும் ஒரு காலத்தில் ஓங்கியிருந்ததது ஆயினும் இப்போது ஓரளவு பிரபலம் என்பதைத் தவிர வேறு எதுவுமே மிச்சமில்லை. குறிப்பிட்ட ஒரு சிலர் மாத்திரமே தேடலும் வாசிப்பும் பன்முகச் சிந்தனையும் புத்தாக்க ஆற்றலுமிக்கவர்களாக இருக்கின்றார்கள் மற்றபடி 95 வீதமானவர்கள் குரல் வித்தை காட்டும் வித்தகர்கள் மாத்திரமே. சுய புத்தியுமில்லாத சொல்புத்தியுமில்லாத ஒழுக்கமில்லாத கேடுகெட்டதுகளும் ஊடகவியலாளர்கள் என்ற மகுடத்தோடு அலைவதுதான் மன வேதனை. இவர்களாலும் இலக்கியம் பெரிதாகச் செழிப்பதில்லை ஆனாலும் படைப்பு குறித்த செய்திகள் மக்கள்மயப்பட வேண்டுமாயின் படைப்பாளிகள் இவர்களின் தயவை வேண்டி நிற்பது தவிர்க்கவொன்னாதாகிற்று. இப்போது சமூக வலைத்தளங்களின் பரவல் இந்தத் தயவின் பாதியைக் குறைத்துவிட்டது எனலாம். முந்தியொரு காலத்தில் இருந்தார்கள் ஊடகவியலாளர்கள் இலக்கணம் சொல்ல அவர்கள் பெயரை உச்சரிக்கலாம். பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி எல்லாவற்றிலும். 

04. இலக்கியவாதிகள் :  விரும்பியோ விரும்பாமலோ ஒரு படைப்பு குறித்து தெளிவான மதிப்பீட்டை இவர்களிடமிருந்துதான் பெற முடியும். பேராசிரியர்கள் போலவோ அல்லது ஆய்வு செய்யும் மாணவர்கள் போலவோ இவர்கள் ஒரு நோக்கத்துக்காக மட்டும் செயற்பட்டு இளைப்பாறுவதில்லை, ஆய்வும் மதிப்பீடும் தேடலும் புதியவற்றை எப்போதுமே அப்டேட் செய்துகொண்டுமிருப்பார்கள் யமுனா ராஜேந்திரனையே இங்கு அழகிய உதாரணமாகக் கொள்ளலாம். வினைத்திறன் மிக்க சில படைப்பாளிகளாலேயே சரியான மதிப்பீடுகளும் செய்யப்படுகின்றன அவைதான் ஒரு படைப்பின் இருத்தலை மெய்ப்பிக்கும் வழி என்பதைப் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமானது கிடையாது. எப்போதோ ஒரு படைப்பைச் செய்துவிட்டு ஒருகாலத்தில் எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானையிருந்தது என்ற தோரனையில் செழிப்பற்றுப் போய் வரண்ட படைப்பாளிகளை விடவும் இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் படைப்பாளிகள் மிக முக்கியமானவர்கள். வயது ஏறஏற சில படைப்பாளிகளுக்கு மூளை வேலை செய்வதில்லை அப்படிப்பட்ட படைப்பாளிகளின் செயல்பாடுகள்தான் சில சமயங்களில் நம்மை அயர்ச்சிக்குள்ளாக்கும். ஒரு நிகழ்வில் அவர்களுக்கென்று ஏதாவது ஒரு பெயர் சொல்லும்படியான விடயதானம் கொடுக்கப்பட்டால் மட்டுமே அவர்கள் நிகழ்வுக்குப் பிரசன்னமாவார்கள். குறைந்தபட்சம் ஒரு வாழ்த்துரையேனும். 

அது தவிர படைப்பிலக்கியத்தில் நிதானமாக அறிவார்த்தமாக இயங்கிக் கொண்டிருப்பவர்கள் எப்போதும் நமது கவனத்தைப் பெறுவார்கள். அவர்கள் முகத்தாச்சினைக்கு மாப்ள கூட்டும் வேலையைச் செய்யமாட்டார்கள். ஒருவரின் எழுச்சியோ வீழ்ச்சியோ அவர்களைப் பாதிப்பதில்லை, அந்தப்படைப்பாளுமைகளின் தொடர்ச்சியான இயக்கத்துக்கு முன்னால் பம்மாத்துதாரிகள் நின்றுபிடிக்க முடியாது. சும்மா வளவளா பேர்வழிகளைப் போல யாரைப் பற்றியாவது புறனி கதைப்பதைவிட ஏதாவது ஒரு படைப்பைப்பற்றிய கருத்தாடலையே அங்கு செவியுற முடியும். முரண்பாட்டை முகத்திலடித்தாற் போலச் சொல்லிடும் தைரியம் அங்குதான் பிறக்கும். எஸ்.பொ.வும் கா.சிவத்தம்பியும் முரண்பட்டு நின்றார்களே! அது போலவும் எஸ்போ பகிரங்கமாக எல்லாவற்றையும் போட்டு உடைத்துக் கொண்டிருந்தாரே அது போலவும். (இதை எழுதிக் கொண்டிருக்கும் போது எஸ்போ அவுஸ்திரேலியாவில் காலமான செய்தி கிடைத்து துக்கமடைந்தேன் அவர் மரணிக்கும் போதும் ஒருவன் அவரைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கின்றானே என்று நினைத்த போது மிகுதியைத் தொடரும் மனநிலை இயல்பாய் வாய்த்தது)  நமது கருத்தியலை உரத்துச் சொல்ல எதற்கு இடக்கு மடக்கும் மறைமுகச் சொற்பாவனையும் இதுதான் பிரச்சினையென்று சொல்லிவிட்டு நிமிரும் படைப்பாளிகள் நம்மிடத்தில் மிகவும் குறைவு. இருப்பவர்களின் இயங்குதளமும் அவ்வளவு லேசுபட்டதல்ல அதை அவ்வளவு எளிதில் யாராலும் எதனாலும் தகர்த்தவிட முடியாது.
(நாங்களும் புத்திஜீவிதான் என்று மற்றவர்கள் நம்பும்படியாக எழுதும் நபர்களை இங்கு உள்ளடக்கவில்லை அது பற்றி எங்காவது பொருத்தமான ஒரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்)

இதெல்லாம் இப்படியே இருக்க தனது படைப்பொன்றின் வெளியீட்டைச் செய்கின்ற ஒருவன் இதில் யாரை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்க ஒரு கஸ்டமும் கிடையாது. 

02

அன்மையில் குரலாகி என்ற டிவீடி ஒன்றின் வெளியீட்டு விழா தபால் தலைமையகக் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. அன்பர் ஜனூஸ் தனது கவிதைகளை இலங்கையின் பல்வேறு ஒலி-ஒளி பரப்பாளர்களின் குரலில் அதைப்  பதிவு செய்திருந்தார். பல பிரபங்களின் குரல்களும் அதில் அடக்கம். ஜனூஸ் மீதிருந்த அன்பின் காரணமாக அவர் எடுக்கும் முயற்சி வெற்றி பெறவும்தான் அவர்கள் ஒத்துழைத்திருப்பார்கள் என்று கருதுகின்றேன். 

நிகழ்வுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக தொலைபேசி அழைப்பொன்றின் மூலமாக தனது வெளியீட்டுவிழாவுக்கு ஷாமிலாவையும் என்னையும் அழைத்தார். சில பல அசௌகரியங்களைத் தவிர்ந்து கொள்வதற்காக நிகழ்ச்சி நிரலைப் பார்த்துவிட்டு போகும் பழக்கத்தை இப்போது கடைப்பிடிப்பதால் அழைப்பிதழை ஈமெய்ல் பண்ணச் சொன்னேன். முதலாவது நிகழ்ச்சித் தொகுப்பு யார் என்று பார்த்தேன் அஹமட் எம் நஸீர் மற்றும் அனுஷா மொறாயஸ் என்று இருந்தது. மதிப்புக்குரிய அஷ்ரப் சிஹாப்தீன் எழுத்தாளர் உமா வரதராஜன் மற்றும்; முஷாரப் ஆகியோர் உரையாற்றுவதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹகீம் பிரதம அதிதி என்றும் இருந்தது. அதற்காகவே விழாவுக்குச் செல்ல முடிவெடுத்தேன். நடந்து கொண்டிருக்கும் ஜனாபதித் தேர்தல் இழுபறி குறித்து ஹகீம் ஏதாவது அறிவிப்புச் செய்யவார் என்பதற்காக மட்டுமே அவரின் பெயரைப் பார்த்து போகலாம் என்று முடிவெடுத்தேன். என்னுடன் ஒரு தலைசிறந்த வளவாளரும் சமூக ஆர்வலரும் வர்த்தப் பிரமுகருமான இல்யாஸ் பாபு அவர்களையும் அழைத்துச் சென்றிருந்தேன். 
இது இப்படியே இருக்க ஜனூஸ் பற்றிய எனது மதிப்பீட்டைப் பதிவதும் நல்லது.

அவரின் தாக்கத்தி கவிதை நூல் வெளியீட்டு விழாவினைத் தொகுத்து வழங்க ஷாமிலாவை அழைத்திருந்த போது தைபொய்ட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அசையக் கூடாது கட்டிலிலேயே இரண்டு மாதத்திற்கு இருக்க வேண்டும் என்று வைத்தியர் போட்ட உத்தரவையும் மீறி கடன்வாங்கிக் கொண்டு கொழும்பிலிருந்து சாய்ந்த மருதுக்குச் சென்றிருந்தாள். தாக்கத்தி கவிதைகளைப் படித்துவிட்டு ஜனூஸிற்கு கைப்பட ஒரு கடிதமும் எழுதி அனுப்பியிருந்தேன். அக்கடிதம் இருந்தால் அவரே  பதிவேற்றமும் செய்யட்டும். பின்னர் அவர் அனுப்பிய அவரது பெத்தம்மா என்ற குறும்படத்தைப் பார்த்தேன் அதன்பிறகு அவரதும் அவரது நண்பர்களதும் குறும்பட முயற்சிகளை அனுப்பியிருந்தார் அவை அனைத்தையும் பார்த்துவிட்டு எழுதலாம் என்று நினைத்தும் அமைதி காத்தேன் ஜனூஸ் நல்லதொரு படைப்பைத்தருவான் என்ற எதிர்பார்ப்பில்.
அப்படியிருக்கும் போதுதான் குரலாகி என்ற கவிதை டிவிடி வெளியீடு.
இது இப்படியே இருக்க 
கவிதை ஒளி ஒலி யாக்கம் பற்றிப் பார்த்துவிடுவோம்

கவிக்கோ அப்துர் ரஹ்மானின் ஆலாபனை அவரது குரலிலேயே ஒலிவடிவில் வந்திருந்தது 2000மாம் ஆண்டு அதைச் செவிமடுக்க முடிந்தது ஆயினும் எத்தனையாம் ஆண்டு வெளிவந்தது என்பது தெரியாது. 

2004 குவைத்தில் இருக்கும் போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நண்பர் தனது கவிதைகளுக்கு வீடியோ இணைப்புச் செய்து கொண்டிருந்தார்   அதை வெளியிட்டாரா இல்லையா என்பது தெரியாது. அவரது முயற்சிக்குப் பின்னர்தான் கவிதைக்கு விஷூவல் செய்யும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது

2005ல் அமுதம் என்ற விடியோ சஞ்சிகையின் முதல் இதழை குவைத் ஐஐசியின் அனுசரனையில் குவைத்திலேயே வெளியிட்டேன் அதில் சில கவிதைகளுக்கு விடியோ வடிவம் கொடுத்தேன் 2007 ஆகும் போது கிட்டத்தட்ட அமுதம் விடியோ சஞ்சிகைக்காக பதினைந்து கவிதைகள்வரை விடியோ இணைப்புச் செய்யப்பட்டன.

2006ஆம் ஆண்டு தேர்தெடுக்கப்பட்ட  பலஸ்தீனக் கவிதைகள் விஷூவலாக்கம் செய்யப்பட்டன அவற்றுக்கான கவிதைகள் பன்னாமத்துக் கவிராயர் மொழிபெயர்த்த காற்றின் மௌனம் என்ற தொகுதியிலிருந்தும் எம்.ஏ.நுஃமான் மொழியெர்த்த பலஸ்தீனக் கவிதைகள் தொகுதியிலிருந்தும் பெறப்பட்டன. இருபது கவிதைகள் அவ்வாறு வெளியிடப்பட்டன. அக்கவிதைகளுக்கான கனிசமான ஓவியங்களை ஓவியரும் கவிஞருமான எஸ்.நளீம், ரியோ ஸ்ரூடியோ மஹ்ரூப் ஈஸா லெப்பை, புதிரோவியன் ஏயெம் சமீம் மற்றும் வாழைச்சேனை அந்நூர் பாடசாலை மாணவ மாணவிகள் வரைந்திருந்திருந்தனர். இன்னும் கனிசமான படங்கள் அல்முஜ்தமஃ சஞ்சிகையிலிருந்தும் பெறப்பட்டன. இலங்கைச் சூழலில் அதுதான் முதலாவது விஷூவல் கவிதைத் தொகுப்பாக இருக்கவேண்டும் என்று நம்புகின்றேன்.  

2007 களில் சோலைக்கிளி, அஷ்ரப் ஷிஹாப்தீன், ஓட்டமாவடி அறபாத், எஸ்.நளீம், ஏஜியெம் ஸதக்கா, அக்கரைப்பற்று அக்பர் ஷபீக், முல்லை முஸ்ரிபா, பஹீமா ஜஹான், வை .அஹமது பாலைநகர் ஜிப்ரி, அஜ்வத் அலி போன்றவர்களின் இவ்விரு கவிதைகள் விஷூவலாக்கம் செய்யப்பட்டன ஆயினும் அவை தொகுப்பாக வெளிவரவில்லை, 

2008களில் கவிஞர் வைரமுத்துவின் கவிதைகள் பல விஷூவலாக்கம் செய்ய்பட்டன சன் ரீவி அல்லது ராஜ் ரீவியில் அவை ஒளிபரப்பாகின, தனிச் சீடியாக வெளிவந்ததா என்பது தெரியவில்லை.
https://www.youtube.com/watch?v=_L0GqXuhqas

ஐ.அலைவரிசை பிரவாகம் நிகழ்ச்சிக்காகவும் நேத்ரா தொலைக்காட்சியின் நான்காவது பரிமானம் அல்லது கோடை மழை நிகழ்ச்சிக்காக பல கவிதைகள் எம்.ஐ.ஜாபிர் அவர்களால் விஷூவலாக்கம் செய்யப்பட்டன

வசந்தம் தொலைக்காட்சி தூவானம் நிகழ்ச்சிக்காக கவிஞர் பொத்துவில் அஸ்மின் பல கவிதைகளை விஷூவலாக்கி இருந்தார். 

2012களில்  எனது மௌனப் போரும் புன்னகை ஆயுதமும் கவிதைத் தொகுயிலிருந்து மூன்று கவிதைகள் விஷூவலாக்கப்பட்டன,
01.https://www.youtube.com/watch?v=zMK4UrMhudg&list=UUsgb6uf9-Ula-yeAv59snqQ&index=60
02.https://www.youtube.com/watch?v=2jQbGQBPd7M&list=UUsgb6uf9-Ula-yeAv59snqQ&index=61
03.https://www.youtube.com/watch?v=uqdGCNFqd4s&list=UUsgb6uf9-Ula-yeAv59snqQ&index=62
2012ஆம் ஆண்டு ஜூலை ஷாமிலா செரீபின் நிலவின் கீறல்கள் என்ற தொகுதியில் 45 கவிதைகளும் முழுமையாக அவரது குரலிலேயே ஒலிப்திவு செய்யப்பட்டு மிக நேர்த்தியான ஒரு ஓடியோ புத்தகமாகவும் வெளிவந்தது. 
https://www.youtube.com/watch?v=6hn8TN86jvo&index=13&list=UUsgb6uf9-Ula-yeAv59snqQ
https://www.youtube.com/playlist?list=UUsgb6uf9-Ula-yeAv59snqQ
2012 நவம்பர் ஸர்மிலா செய்யதின் சிறகு முளைத்த பெண் கவிதைத் தொகுதியில் இருந்து இரண்டு கவிதைகள் விஷூவலாக்கப்பட்டன
01.https://www.youtube.com/watch?v=6miT8r3ZljA&index=4&list=UUsgb6uf9-Ula-yeAv59snqQ
02.https://www.youtube.com/watch?v=2Ld-OYb6BR0&index=5&list=UUsgb6uf9-Ula-yeAv59snqQ
2014 செப்தம்பர் முல்லை முஸ்ரிபாவின் சொல்லில் உறைந்து போதல் தொகுதியில் இருந்து இரண்டு கவிதைகள் விஷூவலாக்கப்பட்டன
01.https://www.youtube.com/watch?v=6-joW7eTcSA&list=UUsgb6uf9-Ula-yeAv59snqQ
02. https://www.youtube.com/watch?v=xXCptNsg5sM&list=UUsgb6uf9-Ula-yeAv59snqQ&index=2
2014 நவம்பர் ஜனூசின் குரலாகி எனும் பெயரில் அவரது கவிதைகள் விஷூவலாக்கப்பட்டு தனித் தொகுதியாக வெளிவந்துள்ளது.

ஜனூஸ் நிறைய சாதிக்க வேண்டும் எண்ணத்துடன் செயற்படுபவர் என்பது தெரிகின்றது ஆசைப்படும் அளவுக்கு தனது ஆளுமையை மெருகேற்றிக் கொள்ள அவ்வளவு முயற்சியெடுப்பதில்லை என்பதை  அரச திரைப்படப்பிரிவின் பயிற்சி நெறிக்காகத் தெரிவு செய்யப்பட்ட போதும் நான்கு மாதங்கள் நடந்த பயிற்சிக்கு நான்கு நாட்கள் மட்டுமே சமுகமளித்தன் மூலம் புரிந்து கொண்டேன். அத்துடன் பெத்தம்மா குறும்படத்தில் உள்ள குறைபாடுகள் அனைத்தையும் சுட்டியும் காட்டினேன். குறிப்பாக விடியோ ஜம்ப், அரச திரைப்படப்பிரிவின் பயிற்சியில் முழுமையாக அவர்கலந்து கொண்டிருந்தாலே போதும் படப்பிடிப்பு சாதனங்களைக் கையாளவும் ஒலி ஒளிச் செம்மையாக்கலில் புலமை பெறவும் அது உதவியிருக்கும். இலங்கை சினமாவின் மிகப் பிரபலமான இயக்குநர்கள், கேமரா மேன், மற்றும் தொழிநுட்ப வல்லுநர்கள் அளித்த பயிற்சி மிக நிறைவானது. சிங்களப் புலமை போதாமை என்பது ஒரு காரணமல்ல திரை மொழியே தனி மொழி அதற்கு இன்னொரு மொழி சப்டைட்டில் மாதிரித்தான் அந்தப்பயிற்சியின் எடிட்டிங் சம்பந்தப்பட்ட எட்டுவகுப்புக்களையும் புறக்கனிக்காது விட்டிருந்தால் குரலாகி மிக நேர்த்தியான விஷூவலாகி இருக்கும். பொடு போக்கு ஒரு கலைஞனை அழித்துவிடும். அவனது ஆசைகளை அது கனவாக்கிவிடும் அவன் சாதனைகளை அர்த்தமற்றதாக்கிவிடும். 

பெத்தம்மா என்பது எனக்குக் குறும்பட முயற்சியாகவே தெரிந்தது. சினமா தெரிந்த அனைவருக்கும் அது குறும்பட முயற்சியாகவே தெரியும் ஆயினும் அவரது பல குறிப்புகளில் அது திரைப்படம் என்றும், ஆவணப்படம் என்றும் குறும்படம் என்றும் பதிவு செய்யப்பட்டிருந்ததை அவதானித்து ஒரு முறை முகநூலிலும் ஓரிடத்தில் அவதானித்தபோது அது குறித்து கேள்வியும் எழுப்பியிருந்தேன். குரலாகி வெளியீட்டு நிகழ்விலும் அது ஆவணப்படம் என்றே பல முறை அறிவிக்கப்பட்டது. நமது படைப்பு குறித்து நமக்குத் தெளிவு இருக்க வேண்டும் நாம் என்ன செய்கின்றோம் என்பதில் நமக்கு தெளிவில்லாவிட்டால் பெறுமானமிழப்பது நாம்தான். ஒரு கலைஞன் அதுவும் காட்சியூடகத்தில் தடம் பதிக்கும் ஒருவன் தன்னை அப்டேட் பண்ணிக் கோண்டேதான் இருக்க வேண்டும். அவன் சினமாவில் தடம் பதித்தால் உலக சினமாவை நோக்கி நகர வேண்டும் உலகின் தரமான படைப்புக்களைத் தேடித் தேடிப்பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தத் துறை நம்மை விட்டும் வெகு தூரம் பயணித்துப் போய் துறைக்கும் நமக்குமிடையே பல மைல் தூரம் இடைவெளியேற்பட்டுவிடும்.

மிகவும் கஸ்ட்பட்டு பெருஞ் செலவு செய்து பிரியானி செய்யப் போய் அது குழைந்து புக்கையான பின்னரும் அதை பிரியானி என்று கொண்டாடுவது அர்த்தமற்றது என்பது எனது அபிப்பிராயம். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் கருத்துக்களம் நிகழ்வில் எமது சினமா முயற்சிகள் என்ற தலைப்பில் உரையாற்றும் போதும் இந்தவிடயத்தைச் சுட்டிக்காட்டினேன். நாம் கஸ்டப்படுகின்றோம் என்பதற்காக தரமற்றது தரமாகாது. நமது கஸ்டத்திற்கு அர்த்தம் வேண்டும். ஒரு முறை தவறலாம் இரு முறை தவறலாம் தொடர்ந்தும் தவறிக் கொண்டிருந்தால் நமது வீட்டுக்கு விருந்தாளிகள் வரமாட்டார்கள் நமது உணவைச் சுவைக்கமாட்டார்கள். ஆனாலும் அப்போதும் சீச்சீ அது பிரியாணிதான் என்று மார் தட்டிக் கொண்டிருந்தால் பிரியானிபற்றித் தெரியாத ஒருவனுக்கு அது மன்னுஸ்ஸல்வா மாதிரித் தோன்றலாம். தரம் மிகவும் முக்கியம் அதைப் பேணுவதில்தான் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும். சாதிக்கத் துடிக்கும் ஒருவனுக்கு இது மிக முக்கியமானது.
தன்னிலை சார் பலவீணங்களைக் களைந்து ஜனூஸ் அர்த்தமுள்ள ஒரு படைப்பாளியாக தடம் பதிக்க எனது வாழ்த்துக்கள்.

குரலாகி வெளியீட்டுவிழாவில் சனூஸ் முகமட் பெரோஸ் ஒரு விடயத்தைச் சொன்னார். மைக்கிற்கு முன்னால் மிக அமைதியாக தனக்குப் பக்கத்தில் இருக்கும் நண்பனுடன் பேசுவது போலப் பேச வேண்டும் சும்மா காட்டுக் கத்தல் கத்தக் கூடாது அப்படிக் கத்தினால் பைத்தியகாரன் என்பார்கள் ஆயினும் அதை நிகழ்ச்சித் தொகுப்பாளர் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. இடி இடித்து அடைமழை பெய்வது போல காதுக்குள் உங்கள் பலத்த கரகோசங்களுக்கு மத்தியில் அன்புடன் மேடைக்கு அழைக்கிறோம் என்று மேடையில் இருப்பவர்களையும் மீண்டும் மீண்டும் மேடைக்கு அழைத்து அப்பப்பா அந்த வார்த்தைகள் செக்கனுக்கு செக்கன் முழங்கியது கிராமப்புரத்து ஸ்போர்ட் மீட் ஒன்றில் ஹை லெவலில் ஸவுண்ட் வைக்க்பட்ட பழைய காலத்து கொரகொர ஸ்பீக்கருக்கு முன்னால் அமர்ந்து இருந்தமாதிரியான அசௌகரியத்தை ஏற்படுத்திற்று. ஜனூசின் விழாவின் முதல் தோழ்வி அந்த ஆண் அறிவிப்பாளர். அனூஷா மட்டுமே நிகழ்வைத் தொகுத்துவழங்கியிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். எஸ்.எழில் வேந்தன் தொகுத்து வழங்கும் எந்த நிகழ்வாயினும் அதற்கு அழையாமலேயே நான் சென்றுவிடுவேன் காரணம் அவரின் அலட்டல் இல்லாத அறிவிப்பும் தொகுத்து வழங்கும் நேர்த்தியும்தான். சீனி பாவிக்காமல் சுத்தமான கருப்பட்டி மட்டும் பாவித்துச் செய்த வட்டிலாப்பம் போல அப்படியொரு இனிமை.

நான் நினைக்கின்றேன் குறித்த அறிவிப்பாளருக்கு ஒரு படைப்பின் வெளியீட்டுவிழா என்றால் என்ன என்பது தெரியவே தெரியாது. 
அதற்கு அறிவிப்புச் செய்வது எப்படியென்பதே தெரியாது 
மேடை இங்கிதம் தெரியவே தெரியாது. நீதிபதி வக்கீலுடன் வாதாடுவதற்குச் சமமானது அவர் நடத்தை. அதைப் பற்றி  பின்னர் பார்ப்போம்.

எப்போதும் ஒரு விழாவிற்கு குறித்த படைப்பு பற்றி உரையாற்ற அழைக்கப்படுபவர் மேடையில் அமர்த்தப்படுவதுதான் சம்பிரதாயம். பிரதம அதிதிக்கு அடுத்த படியாக கௌரவப்படுத்தப்பட வேண்டியவர் அவர். ஜனூசின் நிகழ்ச்சி நிரலில் அஷ்ரப் சிஹாப்தீன், உமாவரத ராஜன், முஷாரப் ஆகியோர் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தனர், அரசியல் வாதிகளுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் அதிகமாக இருந்தது. பேச்சாளர்கள் மேடைக்கு அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டமையானது துரதிஷ்டவசமானது. ரவுப் ஹக்கீம் கூட ஜனூசைப் பற்றியோ அல்லது ஜனூசின் கவிதைபற்றியோ இனி எங்குமே பேசப் போவதுமில்லை ஞாபகப்படுத்தப் போவதுமில்லை. நிகழ்வு முடிந்த கையோடு அனைத்தையும் அவர் மறந்து போயிருப்பார். அரசியல் வாதியின் குணம் அத்தகையது. தன்னை வெல்ல வைத்த மக்களுக்குத் தான் அளித்த வாக்குறுதிகளையே மறந்து அந்தர் பல்டி அடிக்கும் அவர்களுக்கு இதெல்லாம் ஒரு விடயமே கிடையாது. ஆனால் படைப்பாளி அப்படியல்ல அவன் கலந்து ஒவ்வொரு நிகழ்விலும் தான் எழுதும் சந்தர்;ப்பங்களிலும் பொருத்தமானது தரமானது எனக்கண்டால் அதைச் சேர்த்துக் கொள்வான் அதை ஞாபகம் வைத்துக் கொள்வான், நினைவு கூர்வான் பதிவு செய்வான் இன்னும் பலருக்கும் அறிமுகம் செய்வான். 

ஆக அஷ்ரப் ஷிஹாப்தீன் தான் அவமதிக்கப்பட்டமைக்காக எழுந்து சென்றுவிட்டமையில் தவறேதும் இல்லை, தனது ஆதங்கத்தை முகநூலில் போட்டதில் தப்புமில்லை அது அவரது உரிமை. அது போல முஸாரப் அதை மேடையில் வாசித்துக் காட்டியதிலும் தவறு இருப்பதாக எனக்குப்படவில்லை, முஸார்ரப் படைப்பு குறித்தும் விஷூவல் குறித்தும் கருத்துச் சொல்லும் போது எனக்குப் பக்கத்தில் இருந்த கிராமத்தான் கலீபாவிடம் நான் சொன்னவிடயம் எனது கருத்து எதுவோ அதைத்தான் முஸர்ரப் வெளிப்படுத்துகின்றான். முஸர்ரப் படைப்பு குறித்துக் கூறிய கருத்துக்களை ஜீரணிக்க முடியாவிட்டால் அவனைப் பேசுவதற்கு அழைத்திருக்கக் கூடாது. அதில் சதியேதுமில்லை மேலே பதிவு செய்யப்பட்ட எனது கருத்துக்களை நிதானமாக வாசிக்கும் போது அதைப் புரிந்து கொள்ளலாம். 

முஸர்ரபின் தனிப்பட்ட நடத்தைகள் தொடர்பில் எனக்கு நிறையவே அதிருப்தி இருக்கின்றது. அதற்கு இதுவல்ல தளம் இது ஜனூசுக்குரியது. நானும் எல்லோரையும் போல ஒப்புக்காக பிரமாதம் என்று சொல்லிவிட்டுச் சென்றால் பிரச்சினையில்லை ஆனால் சரியான மதிப்பீட்டைச் சொன்னால் வில்லனாகவே பார்க்கப்படுவேன் என்ற முஸர்ரின் கூற்றில் பொதிந்திருக்கும் விடயத்தை ஜனூஸ் உள்வாங்கியிருக்க வேண்டும். ஆனால் அவர் அதிலிருந்து தவறிவிட்டார்.

எல்லாவற்றையும் குழப்பியடித்தது அறிவிப்பாளர்தான். அவரை இன்னுமொரு நிகழ்;வுக்கு யாரும் பரிந்துரை செய்ய முடியாதளவுக்கு
நடந்து கொண்ட விதம் அமைந்துவிட்டது. 2010ஆம் ஆண்டு சென்னையில் இடம்பெற்ற கீற்று இணையதளத்தின் ஆறாமாண்டு நிறைவு விழாவில் நான் விடுதலைப் புலிகள் குறித்துப் பேசிய பேச்சு நிலைமையைச் சிக்கலாக்கிய போது அறிவிப்பாளர் அடுத்து என்ன பேசுவது என்று திணறிக் கொண்டிருந்த போது மொத்த உணர்ச்சிகளையும் அடக்கிவிட்டு மேடைக்கேறி அதை உடனடியாகச் சமாளித்தவர் மனிதநேய மக்கள் கட்சிச் செயலாளர் தமீமுன் அன்சாரி. அவர் மட்டும் அன்று சமாளித்திருக்காவிட்டால் நடந்திருப்பதே வேறு. இதுதான் மிக முக்கியமான விடயம். ஆனால் இங்கு  அறிவிப்பாளர் கொடுத்த ஹெவி டோஸினால் திக்குமுக்காடிப்போன ஜனூஸ் மூன்று முறை ஒரே விடயத்தைத் திருப்பித் திருப்பிச் சொல்லும் அளவுக்கு ஆக்கிவிட்டது, அஸ்ரப் ஷிஹாப்தீனுக்கு எதிராக கருத்துரைக்க வைத்துவிட்டது, அதனால் அவருக்கு ஒரு நஷ்டமுமில்லை ஜனூசுக்கு லாபமுமில்லை, தடுமாற்றத்தில் ஜனூஸ் பாவித்த வார்த்தைகளை எடைபோட்டுப் பார்க்க வேண்டும்.. என்னால் இப்படிச் சொல்ல முடியும்

ஜனூஸ் உங்கள் பணத்தைச் செலவழித்து நேரத்தை முதலீடுசெய்து அயராது பாடுபட்டு வெளியீட்டு நிகழ்வு வரைக் கொண்டு வந்த உழைப்பின் அறுவடையை கவனயீனத்தால் பால்படுத்திக் கொண்டீர்கள். உங்கள் ஏற்புரையில் பேச வந்த எதனையும் உங்களால் பேச முடியாமற் போயிற்று, நன்றி தெரிவிக்க இருந்த பலரையும் விட்டுவிட்டீர்கள், அது உங்கள் மேடை. ஆயினும் அதில் உங்கள் கருத்தை நிதானமாகவும் பூரணமாகவும் முன்வைக்க முடியாமற் போயிற்று, யாரும் உங்களை வீழ்த்த சதிசெய்யவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும், காரணம் உங்களுக்காக தனது நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து வந்து உங்கள் கவிதைகளை தமது குரலில் வாசித்துத் தந்த யாருக்கும் நீங்கள் போக்குவரத்துச் செலவோ அல்லது குரலுக்கான கொடுப்பனவோ கொடுக்கவில்லை அவை இலவசமாகக் கிடைத்ததென்றால் நீங்கள் முன்னேற வேண்டும் சாதிக்க வேண்டும் என்ற அன்பினால்தான் அவர்கள் அர்;ப்பனத்தோடு செயற்பட்டார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அறிவிப்பாளர் பிரச்சினையைச் சமாளித்து சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டுவந்து பன்பான வார்த்தைகளைப் பிரயோகித்து நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்து அமைதிப்படுத்தி  சுமுகமாகச் செயற்பட்டிருந்தால் வெற்றிகரமான ஒரு விழாவாக நிறைவு பெற்றிருக்கும்... 12-B படம் போல. நீங்கள்  நிகழ்வுகளை ஒரு முறை மீட்டுப் பாருங்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டதை எடிட் பண்ணாமல் முழுமையாகப் பாருங்கள் அப்போது உங்களுக்கே எல்லாம் விளங்கும். அப்போது மன்னிப்புக் கேட்கத் தோன்றும் அப்படித் தோன்றினால் நான் சொல்லியிருப்பதில் நியாயம் இருக்கும் என்று அர்த்தம்.


அஸ்ரப் ஸிஹாப்தீனிடம் ஒரு பணிவான வேண்டுகோள் குரலாகி கவிதைத் டிவிடி பற்றி நீங்கள் ஆற்றவிருந்த உரை நிச்சயம் உங்களிடம் சொப்ட் கொப்பியாக இருக்கும் என்று நம்புகின்றேன் அதைத் தாங்கள் பதிவேற்றினால் நாங்கள் உரையை இழந் இடைவெளியை அதை வாசிப்பதைக் கொண்டு நிரப்பிக் கொள்வோம்.

Monday, November 17, 2014

எனது நினைவுகளில் எம்.எச்.எம்.ஷம்ஸ்

எனது நினைவுகளில் எம்.எச்.எம்.ஷம்ஸ்

2014/11/03 அன்று எம்.எச்.எம். ஷம்ஸின் வளவையின் மடியினிலே சிறுகதைத் தொகுதி வெளியீட்டுவிழா நிகழ்ந்தது. நிகழ்வுக்கு முதல் நாள் நண்பர் பர்வீன் தொடர்பு கொண்டு செய்தியை எத்திவைத்தார். தன்னால் நிகழ்வில் கலந்துகொள்ள முடியாது போகும் என்றும், தனது இடைவெளியை நிரப்ப முடியுமா என்றும் கேட்டார் அப்போது நான் நினைத்துக் கொண்டது ஷம்ஸின் நினைவு தினமாக இருக்கும் என்பதுதான். ஷம்ஸைப் பற்றி ஒரு ஐந்து நிமிடம் என்னால் பேச முடியும் என்றேன். ஆயினும் நிகழ்வுக்குச் சமுகளித்த பின்னர்தான் தெரிந்தது அது அவரது நெடுநாள்கனவான சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டுவிழா என்பது. ஆயினும் அந்த நிகழ்வில் எனக்குப் பேசக் கிடைக்கவில்லை. அந்த உரையினை இவ்விடத்தில் இணைத்துக் கொள்வதும் பொருத்தம்.

அந்தச் சூரியனின் உருவம் மறைந்துவிட்டது, ஆனால் அதன் ஒளி இன்னும் சுடர்விட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. ஒரு இலக்கியவாதி மரணித்துவிட்டால் அவன் மட்டுமே மரணித்துப் போகின்றான். அவனது படைப்புக்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். அவனது படைப்புக்களின் வீரியம் மரணித்த அவனது நினைவுகளை மீட்டு மீணடும் அவனை வாழ வைக்கின்றன. ஒரு படைப்பாளியை சக படைப்பாளிதான் மரணத்தின் பின்பும் வாழ வைக்க முடியும். துரதிஷ்டவசமாக பல படைப்பாளிகள் வாழ்ந்து மறைந்த சுவடுகளே இல்லை. அவர்கள் நினைவுகூரப் படுவதும் இல்லை. அதிஷ்டவசமாக அவனது படைப்புக்கள்தான் ஓரளவுக்கு அவனை நினைவுறுத்திக் கொண்டே இருக்கும். அதைத் தாண்டி ஒருவன் நினைவுப் பெருவெளியில் வாழ்வதானால் அவனது நடத்தையும் பழக்கவழக்கமும்தான் அதைத் தீர்மானிக்கின்றன. நன்னடத்தையும் மற்றவர்களைக் கௌரவப்படுத்திப்பழகும் குணமும் மற்றவர்களை மதிக்கும் இயல்பும் உள்ள ஒருவன் அதிகமதிகம் படைப்புக்களைச் செய்யாத போதும் கூட பிரறால் எப்போதும் மதிக்கப்படும் தார்மீக நிலைப்பாட்டை காலம் நிச்சயம் ஏற்படுத்தி வைக்கும். 

இப்போது சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இலக்கியவாதிகளில் எத்தனை பேரை அவர்களின் மரணத்தின் பின்னும் எதிர்கால சந்ததி பேசும் என்பது எனக்குத் தெரியாது. பிடித்தவர்களை தூக்குதலும் பிடிக்காதவர்களைத் தூற்றுதலும் என்று இப்போது கடைப்பிடிக்கப்படும் கொள்கையைச் சுமந்திருப்பவர்களை நாம் அடையாளப்படுத்திக் கொள்ளாமலும் இல்லை. சிபாரிசு சிபாரிசு என்று எல்லாவற்றிலும் சிபாரிசு. அந்த சிபாரிசு ஒரு போதும் ஒருவனைத் தூக்கி நிறுத்தப் போவதில்லை. ஷம்ஸைப் பற்றிப் பேசுங்கள் ஷம்ஸைப் பற்றி நினைவுகூருங்கள் என்று யார் சிபாரிசு செய்கின்றார். அவரைப் பற்றி நல்லதாக புகழ்ந்து பேசுங்கள் என்று யாரும் யாரையும் வலியுறுத்தத் தேவையில்லை, ஷம்ஸைப் பற்றிப் பேசுங்கள் என்றால் அவருடைய நல்ல குணங்களும் வஞ்சகமில்லாத நடத்தையும் சமுகப் பற்றும்தான் அவரைத் தூக்கி நிறுத்தும், அப்படியான பேச்சுக்களைத்தான் நாம் கேட்கமுடியும். 

அல்லாமா இக்பால் எங்கோ பிறந்த ஏதோவொரு மொழிக் கலைஞன் ஆயினும் அவர் இலங்கையிலும் நினைவுகூரப்படுகின்றார் என்றால் அவரது படைப்புக்கள் நம்மிலும் தாக்கம் செலுத்துகின்றது என்றால். அவரை நமக்கு மிக நெருக்கமானவராக எம்மால் உணர முடியுமாக இருந்தால் அம்மனிதனுக்கு காலம் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பு அத்தகையது. எம்.எச்.எம்.ஷம்ஸ் அவர்களும் அப்படித்தான். ஓர் இலக்கியவாதி என்பதற்கப்பால் அவர் ஓரு நல்ல பண்பான மனிதர். அதுதான் இன்றும் அவரைப் பேச வைக்கின்றது. 

ஷம்ஸ் பல வகையிலும் எனக்கு ஆசான். எல்லோருக்கும் போல எனக்கும் வெள்ளைச் சிறகடிக்கம் வெண்புறாதான் அவரை அறிமுகப்படுத்தியது. அப்பாடல் எங்கேனும் ஒலித்து என காதில் விழுந்து விட்டால் ஓடோடிச் சென்று அதைக் கேட்டு முடித்த பின்னர்தான் அவ்விடத்தைவிட்டும் அகலும் பழக்கம் எனக்குள்ளும் இருந்தது. அத்தோடு பத்திரிகைளில் அவரது எழுத்துக்கள் அவர்பால் ஈர்ப்புக் கொள்ளச் செய்தன. இவையெல்லவற்றையும் தாண்டி பாடசாலை நாட்களில் சனி ஞாயிறு மற்றும் பாடசாலை விடுமுறை நாட்கள் தவிர நான் ஷம்ஸை நினைக்காத ஒரு நாளேனும் இருக்காது. அதற்குக் காரணம் இருக்கின்றது. எமது பாடசாலைக் கீதத்தை எழுதியது அவர்தான். 

மள்வானை அல் யத்தாமா சர்வதேசப் பாடசாலை 1994ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதன் கீதத்தை கணிதப் பாட ஆசிரியரான ஷரிபுத்தீன் அவர்களின் வேண்டுதலின் பேரில் எம்எச்எம் ஷம்ஸ் அவர்கள்தான் எழுதினார்கள். அதுமட்டுமல்ல அதற்கு மெட்டிட்டு அவரே தன் குரலில் பாடி இசையும் அமைத்து ஒலிப்புதிவு செய்து எமது பாடசாலைக்கு அனுப்பியிருந்தார்.அந்த ஆளுமையை நேரில் சந்திக்கும் வாய்ப்பு ஒரு பேறாக கருதும் அளவுக்கு என்னில் விதைக்கப்பட்டிருந்தது.  

இலக்கியம் தொடர்பான ஒரு செயலமர்வு விஷேடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது ஒரு விஹேட மாணவர் மன்றம் போல இருந்தது. அதற்காக மூன்று மணித்தியாலங்களை எமது பாடசாலை நிருவாகம் அவருக்காக ஒதுக்கியிருந்தது. ஒரு தனி நபருக்காக இவ்வளவு நேரம் ஒதுக்குகிறதென்னறால் ஷம்ஸ் என்ற ஆளுமையின் வசீகரம் எத்தகையது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். 

அன்றைய மன்றத்தின் ஒரேயொரு ஹீரோ ஷம்ஸ்தான். கதை சொன்னார், கவிதை சொன்னார், பல்வேறு ஹைக்கூக் கவிதைகளைச் சொன்னார், இன்னும் பல்வேறு உலகத் தகவல்கள் சொன்னார். பாட்டுப் பாடினார், இசைத்துப் பாடினார், வெண்புறாவே பாடலை கண்ணை மூடிக் கொண்டு ரசிக்கும்படி செய்தார், எல்லோரும் அவரை வியப்புடனேயே பார்த்துக் கொண்டிருந்தோம், எங்கள் பாடசலைக் கீத்ததையும் இறுதியாகப் பாடிவிட்டு ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள் என்று கேள்வி நேரத்தை அறிவித்தார். 

யாரும் எழும்பிக் கேள்வி கேட்கவில்லை அப்போது ஷம்ஸ் சிரித்துக் கொண்டே 

கேள்விகள் எதுவும் கேட்காத அதிசயமான மாணவர் சமூகத்தை இன்றுதான் பார்க்கின்றேன் 

என்றதும் உடனே நான் எழுந்து நின்றேன்.

எல்லோரும் என்னை மிகவும் ஏளனமாக் பார்த்தார்கள், அவர்களின் பார்வையைத் தவிர்த்துவிட்டு நான் ஷம்ஸை மட்டுமே நோக்கினேன்,

"நான் கொஞ்சம் வாசிக்கும் பழக்கமுள்ளவன் எனது வாசிப்பை எப்படி ஒழுங்கு படுத்திக் கொள்வது?" என்று கேட்டேன்

"அப்படி என்னென்ன இதுவரை வாசித்திருக்கின்றீர்கள்?" என்று அவர் மாறிக் கேட்டதும்
பலரும் சிரித்தார்கள் அந்தச் சிரிப்பொலி அடங்க இரண்டொரு நிமிடங்களானது. அவர் இரு கைகளையும் உயர்த்தி அமைதியாக இருக்கப் பணித்தார். 

"நீங்க சொல்லுங்க மகன்" என்றார். 

அம்புலிமாமாவில் தொடங்கி கோகுலம், ராணி காமிக்ஸ், சுஜாதா சுபா ராஜேஸ்குமார், ராஜேந்திர குமார், குப்புசாமி, மொழிவானன் என்று மர்மநாவல்கள் மற்றும் புராணங்கள், காப்பியங்கள், இதிகாசங்கள், பின்னர்  சாண்டில்யன் டொக்டர் மு.வரதராசன், கல்கி, புதுமைப்பித்தன், வைரமுத்து, கண்ணதாசன், மு.மேத்தா, அப்துல் ரகுமான், என்று கடைசியாக சுந்தர ராமசாமியில் வந்து நின்றேன். அவ்வளவையும் சொல்லி முடிக்க பத்து நிமிடங்களுக்கு மேல் போயிருந்தது. ஷம்ஸ் எழுந்து வந்து என்னைக் கட்டித் தழுவிக் கொண்டார். எல்லோர் முன்னிலையிலும் எனை அழைத்துச் சென்று

"எனது இத்தனை வருட அனுபவத்தில் வாசிப்பில் முதிர்ந்த சிறுவனை இன்றுதான் பார்க்கின்றேன்" எல்லோரும் அவருக்காகக் கை தட்டுங்கள் என்றார். சிரித்து அவமானப் படுத்த நினைத்த அத்தனை பேருக்கும் அவர் அப்படித்தான் பதில் கொடுத்தார். எனக்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது. அதன் பின்னர் வாசிப்பை எப்படி ஒழுங்கு படுத்திக் கொள்ளலாம் என்று என்னையே பார்த்துக் கொண்டு ஆழமாகப் பேசினார்.

என்னிடம் எழுதுமாறு சொன்னார் எப்படி எழுதுவது என்று கேட்டேன் உங்கள் வாசிப்பனுபவம் உங்களை எழுத வைக்கும் நீங்கள் எழுதும் முதலாவது படைப்பை  எனக்கு அனுப்பி வையுங்கள் நான் அதைப் பிரசுரிப்பேன் என்றார். எனக்குச் சில புத்தகங்களை அன்பளிப்புச் செய்தார் இன்னும் சில புத்தகங்களை அனுப்பி வைப்பதாகச் சொன்னார். அதன்படி அனுப்பியும் வைத்தார். 

நிகழ்வுகள் எல்லாம் முடிந்த பின்னர் என்னிடம் 

"வாசி வாசி நன்றாக வாசி அதுதான் உன்னைத் தூக்கி நிறுத்தும், இதே வேகத்தில் வாசித்துக் கொண்டெ இரு ஒரு நாள் உன் எழுத்துக்கள் இந்தச் சமுதாயத்தில் சாட்டையடியாய் விழும் எதற்கும் அஞ்சாத பண்புடையோனாய் எழுது கோள் தூக்கு இன்றே எழுதத் தொடங்கு என்றார்  அவருக்கு நான் வாரந்தோரும் கடிதம் எழுதினேன் ஒரு கடிதத்திற்கேனும் அவர் பதில் எழுதாமல் இருந்ததில்லை, விடுதியில் எங்களுக்கு வரும் கடிதங்களைப் படித்துவிட்டுத்தான் தருவார்கள் அதன் பிரகாரம் முயின் சேர் நீர் கொழும்பைச் சேர்ந்தவர், விடுதியின் மேலதிகாரி ஒரு வாசிக சாலையை நிலையத்தில் உருவாக்க எனக்கு அத்தனை உதவிகளையும் செய்தார் இன்றும் ஷம்ஸ் அவர்கள் கையெழுத்திட்டு அனுப்பி வைத்த நிறையப் புத்தகங்கள் அந்த வாசிக சாலையில் இருக்கின்றன. 

நீண்ட நாட்களின் பின் எனது முதலாவது கவிதையை அனுப்பி வைத்தேன் 1998ம் ஆண்டு என்று நினைக்கின்றேன். தினகரன் புதுப் புனல் பகுதியில் மள்வானை முஸ்டீன் என்ற பெயரில் வெளிவந்திருந்தது. 

ஷம்ஸ்தான் என்னைப் பட்டைதீட்டினார். எழுது என்று அவர் அன்று சொல்லி ஊக்கப்படுத்தாது விட்டிருந்தால் நான் ஒரு வாசகனாக மட்டுமே இருந்துவிட்டுப் போய் இருப்பேனோ என்று கூடத் தோன்றும். 

பத்தாம் வகுப்பு இறுதிக் காலத்தில் ஒரு மர்ம நாவல் எழுதிக் கொண்டிருந்தேன் அதை ஷம்ஸ் அவர்கட்கு அது குறித்து அறிவித்தேன். அவர் எழுதிய பதில் இன்றும் பசுமையாக நினைவில் இருக்கின்றது. 

துப்பறியும் தொடர் எழுதுவதற்கு ஆயிரம் பேர் இருக்கின்றார்கள். அது போல ஆயிரம் துப்பறியும் நாவல்களை ஒன்றினைத்து ஒரு நாவல் போடலாம் காரணம் எல்லாம் ஒரே சரக்குதான், நீங்கள் சமுகத்தின் பக்கம் உங்கள் சிந்தனையைத் திருப்புங்கள் அந்தப் பிரச்சினைகளை எழுத்தாக்கம் செய்யுங்கள், எழுத வேண்டும் 
என்றும் துப்பறியும் புலனாய்வு நாவல்களினை வாசித்ததன் தாக்கமும்தான் அப்படி எழுதத் தூண்டின. ஆனால் ஷம்ஸ் அதை ஆற்றுப்படுத்திய விதம் இன்றும் பசுமையாக நினைவுகளில் இருக்கின்றது. அரைவாசியோடு அந்த மர்மநாவல் முடிச்சவிழ்க்கப்படாமலேயே நிறுத்தப்பட்டது. இதே கருத்துக்களைத்தான் அக்கரைப்பற்று அக்பர் ஷபீக் என்ற எனது நண்பன் இஸ்லாமியப் பார்வையின் பக்கம் திசை திருப்பினான். ஷம்ஸ் எதுவும் சொல்லாமலேயே விட்டிருக்கலாம் அல்லது மேதாவித்தனம் காட்டியிருக்கலாம் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதுதான் ஷம்ஸ். அவர் ஆழமாக மனதில் பதிந்துவிடும்படியான பதில் என்னைத் திசை திருப்பியது.  

ஷம்ஸ் அவர்கட்கு எனது வயதினர் இரண்டாவது தலைமுறை  என்று நினைக்கின்றேன். மூன்றாவது தலைமுறைக்குக் ஷம்ஸ் என்ற ஆளுமையை அறிமுகப்படுத்த வேண்டியது எமது தலையாயக் கடமையென்று கருதுகின்றேன். அதைச் செய்ய எனது சம வயதினர்கள் எத்தனை பேர் தயார் என்பது நமக்கு முன்னால் உள்ள கேள்விக்குறி.

ஜாமியா நளீமிய்யாவில் இருக்கும் போதுதான் அவரின் கிராமத்துக் கனவுகள் படித்தேன். அதற்கு எதிராக கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் மௌலானா என்பவர் தனியாக ஒரு விமர்சனப் புத்தகமே போட்டார். ஆயினும் அந்தக் கருத்துச் சுதந்திரத்தில் அவர் கிராமத்துக் கணவுகள் நாவலை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்திருந்தால் பாராட்டியிருக்கலாம் ஆயினும் அதைச் செய்யாமல் வேறு எதையோ செய்துவிட்டுச் சென்றார் அதற்கெல்லாம் ஆட்டம் காணும் ஆளுமையாக ஷம்ஸ் இருக்கவில்லை. என்னைப் பொருத்தவரைக்கும் ஷம்ஸ் எப்போதும் எனது மனதில் இருப்பார் இலக்கியவாதியின் பணி என்ன என்பதையும் எழுத்தாற்றல் மிக்க ஒருவனின் முதன்மைத் தெரிவு எது என்பதையும் தெளிவுறுத்தியபடி.


இது போன்று இன்னும் சுவாரஷ்யமான பல விடயங்களைப்  பேச ஆவல் இருக்கின்றது ஆயினும் நேரமிருக்காது இளைய சமுதாயத்தில் ஒருவரை எப்படி வழிநடாத்திச் செல்லும் போக்கை ஷம்ஸ் கடைப்பிடித்தார் என்பதைப் பற்றி தனியாகப் பேச வேண்டும் இன்னுமோர் சந்தர்ப்பம் வாய்த்தால் அதைப் பேசுவோம்.
அனைவருக்கும் நன்றி 

வளவையின் மடியினிலே
என்னைப் புடம் போட்ட இலக்கிய ஆசான்களில் ஒருவரான எம்.எச்.எம் ஷம்ஸ் அவர்களின் சிறுகதைத் தொகுதியான வளவையின் மடியினிலே காலந்தாழ்த்தியாவது வெளி வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. கொழும்பிலிருந்து ரம்புக்கனை

(இந்தப் பதிவு விரைவில் அப்லோட் பண்ணப்படும்.)

Sunday, November 16, 2014

கருணாகரன் அவர்களின் நினைவுகளும் கனவுகளும் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை

காலத்தால் அழியாத பணி செய்து களித்திருத்தல்,
ஞாலத்தில் பினி நீக்கப் பணி செய்தல்
பிறர் பாராட்டும் கைதட்டும் பாரா  வண்ணம்,
உயிரைப் பணயமாய் வைத்திங்கு வாழ்ந்து கழிதல் 
பணமாய்த் தின்னப் பிணமாய் அலைந்து
வளமாய் வாழப் பிணங்கள் தின்று ரணமாய் ஆன வாழ்வு பல
வாழ்வில் புரியாத சூட்சுமங்கள் பலகோடி
மனிதர் மனங்களில் பதிந்து பதுங்கியிருக்கும் சூழ்ச்சி மயமும் பல கோடி
புன்னகையை நம்பவும் கண்ணீரைக் கண்டு கவலை கொள்ளவும் 
பாழாய்ப் போன மனது எங்கு பழகிக்  கொண்டதோ
இந்தப் பாழாய்ப் போன மனது எங்கு பழகிக் கொண்டதோ

எனது சிறுகதைத் தொகுதி வெளியீட்டுவிழாவின் போது இந்த வரிகளைச் சொல்லித்தான் ஆரம்பித்தேன். 
இன்றும் அதே வரிகளுடன் ஆரம்பிக்கவேண்டியேற்பட்டிற்று. காரணம் இருக்கிறது இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது அதை நீங்களும் உணர்ந்து கொள்வீர்கள்.

எழுதுவது ஒரு கடினமான பனி 
அதை விடக் கடினமானது அதைத் தட்டச்சுசெய்து பக்கவடிவமைப்பு செய்து அச்சுப்பிழைகள் திருத்தி, திருப்தியோடு பார்ப்பது,
அதைவிடக்கடினமானது அச்சேற்றி புத்தகமாகப் பார்ப்பது,
அதைவிடக் கடினமானது அதனை வெளியிட்டுவைக்க ஒரு விழா ஏற்பாடு செய்வது 
அதைவிடக் கடினமானதுஅவ்விழாவுக்கு ஆட்களை அழைப்பது, 
இதெல்லாவற்றையும் விட வலுகடினமானது புத்தகங்கள் அனைத்தையும் விற்றுத் தீர்ப்பது,

120 பக்கங்களுள்ள இத்தொகுப்பில் 40 கட்டுரைகள் வரை இருக்கின்றன. ஆங்காங்கே ஓரிரு அச்சுப்புபிழைகள் அது பெருங்குற்றமன்று. ஒப்புநோக்குவதில் நேர்ந்த தவறு மன்னிக்கத்தக்கதுதானே. 
மற்றபடி இத்தொகுப்பில் ஒரு பயணத்தை மேற்கொண்டுவிட்டு எனது மனப்பதிவுகளைப் பகிர்ந்து கொள்ள நாடுகின்றேன். 


ஒரே வரியில் சொல்வதானால் கருணாகரன் அவர்களின் நினைவுகளும் கனவுகளும் அவருக்கு மட்டுமானதல்ல அது எல்லோருக்குமானது. அவர் பகிர்ந்து கொள்ளும் நினைவுகள் மிக முக்கியமானவை, புங்குடு தீவைப் பற்றிப் பேசுகையில் நான் எனது ஊருக்குச் சென்று வாழ்ந்து வருமாறு பால்ய கால பசுமையான நினைவுகளுக்குள் தூக்கியெறியப்படுகின்றேன். ஒரு எழுத்தின் வெற்றிக்கு இது முக்கியமான பண்பு. அவர் சொல்லும் காடுகளுக்குள் நானும் புகுந்து நறுவிலி மரத்தின் கிளையொன்றைக் கஸ்டப்பட்டு உடைத்து அதன் கொழுந்து இலைகளைப் பறித்துச் சுவைத்துப் பார்க்கிறேன். அதன்புளிப்புச் சுவையில் அப்படியே மயங்கி காடு முழுக்க ஓடித்திரிகின்றேன். தவுட்டம் பழங்களைப்யும் தண்ணிச் சோற்றுப் பழங்களையும் பறித்து உண்டு மகிழ்கின்றேன். மைக்காய் பறித்து கைகளில் வைத்துப் பிசைந்து எனது கரங்களை நிறமாற்றிக்கொள்கின்றேன். 

கவிஞர் சோலைக்கிளியின் பத்திகளில்தான் இப்படியான நினைவுகளுக்குள் நான் அள்ளிவீசப்படுவதுண்டு அது போல வே.சு.கருணாகரண் அவர்களும் நமது நினைவுகளை மீட்டு நம்மிடம் பத்திரமாக ஒப்படைக்கின்றார். இந்த எழுத்துக்கள் ஊடாகத்தான் நான் புங்குடுதீவைத் தரிசித்தேன். அந்த மண்ணின் வாழ்வியல் அழகும் ஒழுங்கும் வரலாறும் இயற்கையும் மக்களும் மிக நெருக்கமாக என்னோடு இருப்பதை உணர்ந்தேன். புங்குடு தீவிற்கும் வேலனைக்கும் இடையில் கடற்பரப்பில் மூன்று மைல் தூரத்திற்கு பாலமமைத்த பெரியவானரும் சின்னவாணரும் மறக்கமுடியாத பாத்திரங்களாக மனதில் உலாவரத் தொடங்கினார்கள். இப்படிப்பல பாத்திரங்களை நமக்கு முன்னால் மிக எளிதாக அறிமுகப்படுத்திவிட்டு அவர்களிடம் கற்றுக் கொள்ள பல விடயங்கள் இருக்கின்றன என்பதை மௌனமாகச் சுட்டிவிட்டு நகர்கின்றார் கருணாகரன் அவர்கள். 

கவிஞர் சு.வி. யைத் தெரியாதவர்கள் இருக்க மாட்டீர்கள். என்று நினைக்கின்றேன். அவரை மறந்து போயிருந்தால் இந்தப் புத்தகம் பல வடிவங்களில் அவரை நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றது. முன்னால் அவருக்க சமர்ப்பண வரிகள் இருப்பதால் மட்டுமல்ல புத்தகத்தின் பெரும்பாலான இடங்களில் சுவியின் மீதும் நாம் இடறிவிழ வேண்டித்தான் இருக்கிறது.

எப்பேர்ப்பட்ட விடயங்களையெல்லாம் மறந்து ஒன்றுமே நடக்காதது போல அமைதியாக கடலை கொரித்துக் கொண்டிருப்பவர்கள் நாம். இந்த பாலாய்ப்போன பண்பு உலகில் பாதிக்கப்பட்ட எந்த இனத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தவில்லை ஆனால் என்னவோ தெரியவில்லை தமிழன் அதற்கு அடிமையாகிவிட்டான். கமுக்கமாக இருக்கப் பழகிக் கொண்டான். அச்சம் அடிமைப்படுத்திய இனம் உலகில் இருக்கிறதென்றால் அது இப்போதைக்கு தமிழன் மட்டும்தான். துவக்குகள் வெடிக்கத் துவங்கியது முதல் விழுந்த பிணங்களுக்கும் கலைந்த குடும்பங்களுக்கும் இழந்த பெறுமானங்களுக்கும் பெறுமதியென்ன என்பதைத் தீர்மானிக்க காலம் போதாது. அந்த வெடியோசை வெறும் மண்ணை மட்டும் விட்டுத் துரத்தவில்லை, 

கலையை கலாசாரத்தை பண்பாட்டை மொழியை ரசனையை பக்தியை ஆன்மீகத்தை அன்பை அழுகையை புன்னகையை நேசத்தை தோழமையை  பகைமையை எதிரியை நண்பனை நட்பை என்று அதன் பட்டியலை நீட்டிக்கொண்டே செல்லாம் ஒரு போதும் இழக்கக் கூடாத ரோசத்தைக் கூடவா அடியோடு சாய்த்துவிட்டது என்று எண்ணத் தோன்றும் அந்த எண்ணங்கள் நம்மில் விதைத்திருப்பது வெறும் கனவுகளை மட்டும்தான் அதுவும் காவுகொள்ளப்பட்ட கனவுகள். இன்னும் உயிர்ப்போடு இருப்பது அந்தக் கனவுகள் மட்டும்தான். அந்தக் கனவுகளின் பல்வேறு பரிமானங்களையும் ஏக்கங்களையும் பரிதவிப்புக்களையும் எதிர்பார்க்கைகளையும் மனதிற்குள் போட்டு அவித்துக் கொண்டு புழுங்கிக் கொண்டிருக்காமல் இங்கு கொஞ்சமாகக் கொட்டித் தீர்த்திருக்கிறார். 

அந்தக் கனவுகளுக்குள் புதையுண்டு கிடக்கும் ஏராளமான விடயங்கள் நம்மை சிந்திக்கத் தூண்டுகின்றன. அவர் வெளிப்படுத்திய கனவுகளுக்குள் தொக்கி நிற்கும் விடயங்களை ஆழமாக எழுத வெளிப்படையாக எழுத ஆக்ரோஷமாக வெளிப்படுத்த முடியாமல் பல இடங்களில் பேனை மௌனித்துப் போயிருப்பதை நான் அவதானித்தேன். அந்த மௌனத்திற்கு அர்த்தம் இருக்கும் ஆனால் ஒரு ரோஷக்காரனால் அந்த மௌனத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் போகும் என்பது எனது அபிப்பிராயம். 


துப்பாக்கி வெடித்த எல்லாத் தேசங்களிலும் நிகழ்ந்த துர்ப்பாக்கியம் ஏற்படுத்திய வெற்றிடமும் வெறுமையும் இங்கும் வெகு இயல்பாக எல்லாவற்றிலும் எதிரொலிக்கத்தான் செய்திருக்கிறது. அது விதைத்த எதிர்பார்ப்புகள் கனதி மிக்க பொழுதுகளை அவாவி நிற்பதிலும் 
நிராசைகள் அதிகமாகி ஒன்றினைந்து நம்மை அயர்ச்சியாக்கவதிலும் வென்றுவிடுகின்றன என்பதை சொல்லித்தானாக வேண்டும். 

பல தொழிற்சாலைகள் குறித்துக் கருணாகரன் அவர்கள் இங்கு பதிவு செய்கின்றார். அந்தப் பதிவுகள் வெறும் பதிவுகளாக மட்டும் இல்லை. அவை சொல்லவரும் செய்திகள் மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டிவை. ஒரு யுத்தம் எப்படிப்பட்ட அழிவுகளை நமக்குள் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புக்களை வெறும் புள்ளிவிபரங்கள் மட்டும்தான் சொல்லும் என்பதில்லை. ஏன் கனவுகள் கூடச் சொல்லும் நமது எதிர்பார்ப்புகள் கூடச் சொல்லும் வலிகளை வேதனைகளை இழப்புக்களைப் பற்றியெல்லாம் பட்டியல் போடும் நமக்கு வாழ்வியல் ஆதாரங்களின் மீது எப்படிக் கோரக்கரங்கள் ஆகோரமாய்ச் சித்திரம் வரையும் என்பதையும் சிற்பம் செதுக்கும் என்பதையும் அதை வரலாறாக்கும் என்பதையும் நமக்கு முன் லாவகமாக முன்வைத்துச் செல்லும் அரவது கனவுகளுக்கு நான் மதிப்பளிக்கின்றேன்.  வன்கரம் கொண்டு நசுக்கப்படும் எல்லாமும் ஒரு எல்லைவரைத்தான் பயணிக்க முடியும் என்பதை இந்த இடத்தில் ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன். 

அழிந்து போன தொழிற்சாலைகள் மீள் நிர்மானம் என்றபெயரால் அபிவிருத்தியென்ற பெயரால் ஆக்கிரமிக்கப்படும் அபாயங்களைப் புரிந்து கொள்ள நமக்கு இன்னும் நிறைய அவகாசம் தேவைப்படுகின்றது என்பதை வருத்தத்தோடு எத்திவைக்க விரும்புகின்றேன். கருணாகரன் அவர்களின் பதிவுகளுக்குள் புதைத்திருக்கும் ஆழமான எதிர்பார்ப்புகளை நாம் விளங்கிக் கொள்ளும் போது ஒர் ஆத்மார்த்தமான திருப்தியும் அமைதியும் உள்ளத்தின் ஓரத்தே அவாவோடு மையங்கொள்வதைத் தவிர்க்கவொனாது. 

யாழ் பகுதியைச் சூழவுள்ள பல தீவுகளைப் பற்றிய பல்வேறு குறிப்புக்களை இந்நூலில் கண்டு கொள்ள முடியும். அவை வரலாற்றையும் மண்ணையும் வளத்தையும் சொல்லிவிட்டுக் களத்தையும் சுட்டிக்காட்டுகின்றது. நிலமறிந்து விதை போடு என்பார்கள் அதற்குத் தேவையான அடிப்படை வழிகாட்டுதல்களை மேலோட்டமாகச் சொல்லிச் செல்லும் பல கட்டுரைகள் இங்கு இடம்பெற்றிருப்பதை வாசிக்கும் போது நீங்களும் அறிந்து கொள்வீர்கள். மண்ணை வளப்படுத்தும் எண்ணம் ஒருவனுக்குள் குடிகொண்டுவிட்டதென்றால் அவன் பசுமையைக் காதலிக்கத் தொடங்குவான் அந்தக் காதலின் அழுத்தம் அவனுள் இயற்கையின் மீதான பிரியத்தை இன்னும் அதிகப்படுத்தும் அந்தப்பிரியம் இறுதியில் பசுமையின் பால் கொண்டு சென்றுவிடும். இந்தச் சுழற்சி வெகுவாக திரு கருணாகரன் அவர்களுக்குள் நிகழ்ந்துவிட்டிருப்பதன் பிரதிபலிப்புக்கள்தான் அவரை மரநடுகையின் பக்கம் கவனம் செலுத்தச் செய்திருக்கின்றன. அவர் நட்டிய மரங்கள் இன்றும் பலருக்கும் பல விதத்திலும் பயன் நல்கிக்கொண்டிருப்பதை இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்கள். 

ஒருவன் மரம் நடத் தொடங்கிவிட்டால் போதும் அவன் வாழும் சூழலில் பெரு மாற்றங்கள் நிகழவும் மண் வளம் பெறவும் ஏதுவான காரணகள் தோற்றம் பெற்றுவிட்டதாக நாம் முடிவு செய்யலாம் . காரணம் அது ஆக்கப்பணி, பிறருக்காகச் செய்யப்படும் தூரநோக்குள்ள செயற்பாடு. நகரத்து வாழ்வுள் அமிழ்ந்து நம்மிடமிருந்து காணாமல் போனதொரு பண்பு அது. அதை மீண்டும் உயிர்ப்பித்து எடுப்பதென்றால் பூர்வீகத்தை நோக்கி நகர வேண்டிய தேவை ஏற்படுகின்றது நம்மில் எத்தனை பேர் அதற்குத் தயார். பிறந்த மண்ணை நோக்கி நகர்தல் என்பது இப்போது  அரசியல் சார்ந்த ஒரு விடயமாக முக்கிய திருப்பம் ஒன்றைப் பெற்றிருக்கும் தருணத்தில் அது குறித்துப் பேசுகின்றோம்


வெடிகுண்டு ஓசையைக் கேட்டு வெருண்டு இடம்பெயர்ந்தும் புலம்பெயர்ந்தும் போன பறவைகள் ஏன் இன்னும் எங்கள் வீட்டு முற்றங்களுக்குத் திரும்பி வரவில்லை
என்று கருணாகரன் அவர்கள் கேட்பதில் தொக்கி நிற்கும் விடயம் அதுதான். வீட்டு முற்றங்களில் மீண்டும் கொஞ்சிக்குலாவும் காலம் ஒன்றை எதிர்பார்க்கும் கணத்தில் 


எங்கள் மண்ணில் நாங்கள் மன்னர்கள்
எங்கள் வாழ்வில் குறுக்கிட எவறுமில்லை
எங்கள் வயல்கள் எங்களுடையவை
எங்கள் தெருக்கள் எங்களுடையன

என்ற சுவியின் வரிகளும்

இதம் தருமனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட்டாலும் 
பதந் திரு இரண்டும் மாறிப் பழி மிகுந்திழிவுற்றாலும்
சுதந்திர தேவி நின்னை தொழுதிடல் மறக்கிலேன்

என்ற பாரதியின் வரிகளும்

நமக்குச் சொல்வது! 

நமக்கான விடியல், நமக்கான மண், நமக்கான சுதந்திரம்,
நினைவுகளை அறுவடை செய்து கனவுகளை விதையுங்கள் 
நாளைய சந்ததி நிம்மதிப் பெருமூச்சுவிட
நன்றி

Saturday, November 15, 2014

கிராமத்தான் கலீபாவின் நழுவி கவிதை தொடர்பில் இரண்டு நிகழ்வுகளில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு

கிராமத்தான் கலீபாவின் நழுவி கவிதை தொடர்பில் இரண்டு நிகழ்வுகளில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு

கவிதைச் செயற்பாடும் அது சார்ந்தவையும் மிகவும் அலாதியானவை. அதற்கென்று ஒரு நல்ல மனதும் தன்மையும் வாய்க்கவேண்டும். நல்ல மனதுள்ள பலர் அமைதியாகப் படைப்புச் செயற்பாட்டில் ஆழமாகச் செயற்படும் போது கவிதைத் தளத்திலும் அதன் நேர்மறை மாற்றங்களை நாம் அவதானிக்க முடியும். ஒருவரின் ரசனை மட்டத்தின் அளவுக்கேற்பதான் அவரின் எழுத்துக்கள் வெளிப்படும். ஆகாயம் வரைக் குதித்தாலும் வரண்ட எழுத்துக்கள் வரலாற்றில் நின்று நிலைப்பதில்லை. கிராமத்தான் கலீபாவுக்கு செழிப்பான எழுத்துக்களின் வாசல் திறந்திருக்கிறது, அவர் அதில் தோய்ந்தெழுந்து படைப்பு வீரியத்தால் தன்னை நிலைப்படுத்திக் கொள்வார் என்ற எதிர்பார்ப்புகளுடன் சில விடயங்களையும் பகிர்ந்து கொள்ள நாடுகின்றேன்.

இன்று நண்பர் கிராமத்தான் கலீபாவின் முதலாவது கவிதைப் புத்தகம் வெளிவருகின்ற இச்சந்தர்ப்பத்தில் எனக்குக் தரப்பட்ட பணி நூல் அறிமுகம். வெறுமனே புத்தகத்தைக் காட்டி இதுதான் புத்தகம் இது இப்படிப்பட்டது அப்படிப்பட்டது என்று சொல்லாமலும், உரையாற்ற வந்திருப்பவர்களின் பணியினையும் நானே எடுத்துக் கொள்ளாமலும் சில விடயங்களையும் இணைத்தே இந்நூலை அறிமுகம் செய்ய நாடுகின்றேன். அந்த வகையில் மனதைக் கவரும் வகையில் அமைந்திருக்கும் அட்டைப்பட வடிவமைப்பும் அதற்காகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிறமும் கொஞ்சம் தூக்கலாக இருப்பதை நாம் அனைவரும் நிச்சயம் ஏற்றுக் கொள்வோம்.அட்டைப்படமே மிகத் தெளிவாக இது காதல் அத்தியாயம் என்பதைப்பறைசாற்றி நிற்பதையும் எம்மால் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. வடிவமைப்பு விவகாரத்தில் அஷ்ரப் ஷிஹாப்தீன் மேமன்கவி போன்றவர்கள் அதிக சிரத்தையெடுத்துக் கொள்வார்கள். இந்தப்படம் முகநூலில் இடப்பட்டபோதே நானும் மனைவியும் அது குறித்துப் பேசிக்கொண்டோம். அது போல நிச்சயமாக மேமன்கவியவர்கள் கலீபாவுடன் இந்த அட்டைபடம் தொடர்பில் கலந்துரையாடி இருப்பார் வாழ்த்தி  இருப்பார் புகழந்து இருப்பார் என்று திடமாக நம்புகின்றேன். பொதுவாக இலக்கியவாதிகளுக்குள் அவருக்குத்தான் அதில் அக்கறை அதிகம்

பின்னட்டையில் கலீபாவின் படத்துடன் தர்கா நகர் தேசிய கல்வியற்கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதியான தாஜூல் உலூம் கலைவாதி கலீல் அவர்களின் குறிப்பு இடம்பெற்றுள்ளது. கிராமத்தான் பற்றி அவர் தனது புரிதலைப் பகிர்ந்து கொண்டுள்ளார். ஒப்பு நோக்குநர் அதைப் படித்துப் பார்க்கவேயில்லை என்பதற்கு அதில் மலிந்து கிடக்கும் எழுத்துப் பிழைகள் சான்று. பொதுவாக பட்டம் பேர் புகழ் அனைத்தையும் சொல்லி ஒருவரை அழைப்பதில் எனக்கு சங்கடம் இருக்கின்றது. தனிப்பட்ட ரீதியில் அது எனக்கு விருப்பமில்லாத ஒன்று. ஒருவர் இருக்கும் போது அவரது முன்நிலையில் மட்டுமே நாம் அவரது பட்டம் புகழ் என்று அனைத்தையும் சொல்லி அழைக்கிறோம் அது அவருக்குக் கொடுக்கப்படும் மரியாதை என்றும் நம்புகின்றோம். 
அதேவேளை அவர் இல்லாத இடத்தில் அவரைப்பற்றிப் பேசும் போது நாம் அவரது பட்டங்களைச் சொல்லி அவரைக் கௌரவப்படுத்தி அழைப்பதில்லை. இதை நான் பல தடவை பலரிடமும் அவதானித்திருக்கிறேன். ஒருவர் மீது நமக்கு உண்மையான அன்பு இருந்தால் அவர்மீதுள்ள மரியாதை அவர் இல்லாத இடத்தில்தான் அதிகமாக வெளிப்படும். துரதிஸ்டம் இலக்கிய உலகில் அது இல்லை. வெறுமனே கலைவாதி கலீல் என்று போட்டிருந்தால் கூடப் போதுமானது என்று நான் கருதுகின்றேன். அவர் விருப்பம் எதுவென்று  எனக்குத் தெரியவில்லை. இப்போதுள்ள இளையவர்கள் மட்டுமல்ல பழையவர்களும் முகத்தில் புகழ்வதில் குறை வைப்பதில்லை.

அழகிய மஞ்சல் நிற மப்ளிடோ தாளில் 84 பக்கங்களில் எட்டுக்குறிப்புக்களுடனும் 36 கவிதைகளுடனும் முந்நூறு ரூபாய் பெறுமதியில் அச்சாகியிருக்கின்றது நழுவி. பேனா பதிப்பகம் இதனை வெளியிட்டிருககின்றது. 
குறிப்பு ஒன்று: புத்தகம் பற்றிய தகவல்கள்
குறிப்பு இரண்டு: பால்ய நண்பனுக்கான சமர்;பணம்
குறிப்பு மூன்று: பீ.ரீ.அப்துல் மஜீத், அஹமது பைசல், எம்.எஸ்.அப்துல் மலிக், கிண்ணியா அமீர் அலி ஆகியோருக்கான நன்றி நவிழல்
குறிப்பு நான்கு: மருதூர் ஏ.மஜீத் அவர்களின் வாழ்த்துடன் கூடிய கிராமத்தானின் கவிதைகள் பற்றிய அவரது கருத்துக்கள்
குறிப்பு ஐந்து: கலாபூசணம் ஏ.எம்.எம்.அலியின் ரசனைக் குறிப்பு
குறிப்பு ஆறு : கிண்ணியா அமீர் அலியின் ரசனைக் குறிப்பு
குறிப்பு ஏழு: ஒரு சித்திரப் பூச்சியின் சிறகடிப்பு என்ற தலைப்பில் கிராமத்தான் கலீபாவின் கவர்ச்சிகரமான நறுக்கியெடுத்த வார்த்தைகளாலான இருபக்கக் குறிப்பு
குறிப்பு எட்டு: பதிப்புரை.

அனைத்தையும் அமைதியாகப் படித்து முடித்த பின்னர் எனக்குப் தோன்றிய ஒரேயொரு விடயம் சித்திரப் பூச்சி மட்டும் மேலதிகமாக இன்னும் இரண்டு பக்கங்களுக்குச் சிறகடித்திருந்தாலே போதும். அது வே மிக அழகாக அமைந்திருக்கும். ஏனைய சில குறிப்புக்கள் அவசியமே பட்டிருக்காது. இதைச் சொல்லும் போது பலருக்கும் கோபம் வரக் கூடும். ஆயினும் என்ன செய்வது எனக்குத் தோன்றுவதைச் சொல்லிவிடுவது எனது இயல்பாயிற்றே. உண்மையில் முன்னுக்குப் பின்னுக்கெல்லாம் குறிப்பு எழுதித்தருமாறு ஒருவரிடம் கேட்பது அவருக்குக் கொடுக்கப்படும் மரியாதையின் நிமித்தமே. அந்த மரியாதை பலரும் புகழ்ந்து விடுவதிலேயே கழிப்பதையே அவதானித்திருக்கிறேன்.  அவ்வாறு குறிப்பெழுதக் கொடுப்பது அவருக்களிக்கப்படும் கௌரவம். அந்தக் கௌரவத்தை வெறும் வார்த்தைகளால் புகழ்ந்துவிட்டுத் தம்மை நிலை நிறுத்திக் கொள்ளும் உபாயத்தை பல உரைகளில் அவதானித்திருக்கிறேன். இங்கும் எழுதப்பட்டுள்ள உரைகளை நீங்கள் படித்துப் பாருங்கள். அதற்காக இங்கு உள்ள உரைகளைக் குற்றம் சொல்லவரவில்லை. ஆனால் மனதை இடிக்கும் ஒரு விடயத்தை போட்டு உடைக்காமல் விட்டுவிடவும் முடியவில்லை. அது பதிப்புரை பற்றியது.

கிண்ணியா பேனா பதிப்பகம் சார்பாக ஜே.பிரோஸ்கான் பதிப்புரை எழுதியிருக்கின்றார். அதில் எனக்கு இடிக்கின்ற விடயங்களைச் சொல்லிக் காட்டியாக வேண்டும். கலீபாவின் நழுவி கவிதைத் தொகுதி குறிப்பிட்ட பதிப்பகத்தின் பதின்மூன்றாவது வெளியீடு. கலீபா தனது கவிதைத் தொகுதி பேனா பதிப்பகம் ஊடாகவே வெளிவர வேண்டும் என்று விருப்பப்பட்டதாக இரண்டு இடங்களில் சொல்கின்றார். என்னமோ குறிப்பிட்ட பதிப்பகமே தனது புத்தகத்தைப் பதிப்பிக்க வேண்டுமென்று கெஞ்சிக் கேட்டது போல நமக்குத் தோன்றுகின்றது. பொதுவாக நம்நாட்டுப் பதிப்புச் சூழலில் புரவலர் புத்தகப்பூங்கா பலரின் புத்தகங்களை தனது செலவில் வெளியிட்டு வைத்துள்ளது. ஆனால் இங்கு நழுவி கவிதைத் தொகுதிக்காக நிச்சயமாக மொத்தத் தொகையையும் கலீபாவேதான் செலவு செய்திருப்பார் என்று திடமாக நம்புகின்றேன். அப்படித்தானே கலீபா?

அப்படி இருக்கும் போது இந்தப் பதிப்புரை கேலிகுரியதாகின்றது. ஒரு படைப்பாளனின் உழைப்பிலும் பணத்திலும் பதிப்பகங்கள் இலவசமாகத் தம்மைத் தாமே  புகழ்ந்து மதிப்புக்குரியவர்களாகக் கட்டமைத்துக் கொள்ளும் போலியை  வன்மையாகக் கண்டிக்கத் தோன்றுகின்றது. இந்தியாவைப் போல இங்கு எழுத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் கிடையாது. தானே எழுதி தானே பணம் செலவு செய்து அச்சிட்டு தானே வெளியீட்டு நிகழ்வுக்கும் செலவு செய்து இங்கு நாம் குடிக்கும் ஒவ்வொரு மிடறு நீருக்கும் கலீபாவே தனது பணத்தில் ஏற்பாடு செய்திருப்பார். இப்படிப்பட்ட துரதிஸ்ட நிலையில்தான் எழுத்தாளன் தனது புத்தகத்தைப் பொது வெளிக்குக் கொண்டு வருகின்றான். அதை விஸேட பிரதி என்ற யெரில் எவரும் காணாதபடி வெறும் கவரை வைத்துவிட்டு புத்தகத்தை வாங்கிச் செல்லும் சில பேர்வழிகளையும் சுமந்துகொண்டதுதான் நமது இலக்கியப் பரப்பு என்பதை மிகக் குறுகிய காலத்தில் நான் புரிந்து கொண்டேன். ஒவ்வொரு வெளியீட்டு விழாவும் இந்த அவலத்தைச் சுமந்துதான் நிகழ்ந்து முடிகின்றது. நூல் அறிமுகத்தில் ஏன் இதெல்லாம் சொல்கின்றேன் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் ஒரு எழுத்தாளன் தனது படைப்பை பொருளாதார ரீதியில் வெற்றியடைச் செய்ய முடியாத துரதிஸ்டமான நிலையில்தான் இங்கு இருக்கின்றான் என்பதை பல தடவைகள் அவதானித்தன் வெளிப்பாடாகவே அவற்றைச் சொல்லத் தோன்றியது.

இந்த நூலை ஆகா ஓகோ என்று புகழ்ந் தள்ளிவிட்டு கலீபாவையும் நன்றாகப் புகழ்ந்து தள்விட்டு அற்புதமான புத்தகம் வாங்கிப்படியுங்கள் என்று கூறிவிட்டுப் போக மனது இடம் தரவில்லை, கல்வியில் மிக உயர்ந்நத நிலையில் இருக்கின்றவரல்லர் இந்தக் கிராமத்தான் கலீபா. மரத்தைக் கட்டில்களாகவும் கதிரைகளாகவும் புத்தக அலுமாரிகளாகவும் இன்னும் பலவாகவும் செதுக்குகின்ற ஒரு சிற்பிதான் இந்தக் கலீபா, அரது தொழிலே அழகியல் நேர்த்தியும் ரசனையும் மிக்கது. அப்படிப்பட்ட ரசனை உணர்வுகளுக்குள் தினம் தினம் வாழும் அவர் எழுதிய கவிதைகள் தரமான இடத்தை அடையவேண்டும், இன்னும் தரமான படைப்புக்களைத் தரவேண்டும் வெறுமனே காதல் மட்டுமல்ல கவிதைக்குரிய சமாச்சாரம் என்பதைப் புரிந்து கொண்டு தரமான பல கவிதைகளை அவர் எழுத வேண்டும் என்ற ஆதங்கத்தை இங்கு வெளிப்படுத்துகின்றேன். 

கவிதைகள் குறித்துப் பேசுவதற்கு இங்கு நண்பர் நாச்சியாதீவு பர்வீன் வந்திருக்கின்றார், அது போல பேராசிரியர் துரைமனோகரன் வந்திருக்கிறார், அவர்கள் கலீபாவின் கவிதைகளின் ஆழ அகலம் குறித்துப் பேசுவார்கள். பர்வீனின் உரை நிச்சயம் மிகக் கனதி மிக்கதாக இருக்கும். எனவே அந்தப் பகுதியை நான் தொடத் தேவையில்லை. 
வகவக் கவியரங்கிலே ஒரு பரிகாரி பற்றிய நெடுங்கவிதையொன்றை கலீபா வாசித்தார். அது மிகவும் நல்ல கவிதை அது போல பல கவிதைகள் இதில் இருக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனேன். ஆயினும் அப்படிப்பட்ட பல கவிதைகளை அவர் இன்னொரு தொகுப்பாகக்கூட வைத்திருக்காலாம். காதலும் காதலியும் அவரை தனித் தொகுதி போடவைக்கும் அளவுக்கு மிஞ்சிப் போய்விட்டார்கள், பொத்துவிலுக்குப் புகழ் சேர்க்க இன்னுமொரு எழுத்தாளன் புறப்பட்டுவிட்டான். அந்த மண்ணின் இயற்கையோடும், பண்பாடு பாரம்பரியங்களோடும், மக்களோடும் மீண்டும் ஒரு கவிதைத் தொகுயினூடாக அவரின் இன்னுமொரு புதிய பரிமானத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் விடைபெற முன்னர் இத்தொகுதி பொருளாதார ரீதியிலும் வெற்றியடைய வேண்டுமென வாழ்த்துகின்றேன். 

இந்த உரைதான் கொழும்பு வை எம்எம்ஏ மண்டபத்தில் கலீபாவின் நழுவி கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் நான் பேசியது. அது போல இன்று அவரது ஊரிலேயே அதே தொகுதியின் அறிமுக விழாவிலும் பேசுமாறு அவர் அழைத்திருக்கின்றார். அதுவும் அவரது கவிதைகளைப் பற்றி. திறனாய்வு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் பொத்துவில் சூழல் எப்படியிருக்கும் என்று நான் மதிப்பிட்டு இருந்தேனோ அதையே இங்கு காண்கின்றேன். இந்த விழாவில் நான் அதிகம் பேசினால் அல்லது இந்த நேரத்தில் கவிதைகள் குறித்து அளவோடு Nசினால் கூட அது அவ்வளவு பொருத்தமானதாக இருக்கும் என்று கருதவில்லை எனவே கலீபாவின் கவிதைகள் குறித்து எனது சின்னஞ் சிறிய ரசனைக் குறிப்பை மட்டும் முன் வைக்க நாடுகின்றேன்.

இந்த விழாவில் நான் கலந்து கொள்வேன் என்று  கருதியே இருக்கவில்லை, ஆயினும் அந்த சந்தர்ப்பம் அமைந்துவிட்டது. இந்தக் கடற்கரையும் இந்த மணல் மேடுகளும் பற்றைகளும் செடிகளும் கொடிகளும்தான் கலீபாவின் கவிதைகளில் அவரின் காதலியிலும் காதலிலும் புதைந்து எழுகின்றது. பொதுவாக காதல் கவிதைகளை ரசிக்கும் போக்கு என்னிடம் இல்லை. அப்படி ரசிக்கத் தோன்றாத ஒன்றைப் பற்றி சும்மா போலியாக வெறும் வார்த்தைகளால் ஆகா ஓகோ என்று புகழ்ந்துவிட்டுச் செல்ல நான் தயாரில்லை.   ஆனால் அந்தக் காதலுக்குள்ளாலும் பல செய்திகளை நகர்த்த முடியும், அதை ஓரளவு கலீபா செய்திருக்கின்றார். எனது வாசிப்புக்குட்பட்டவகையில் அது  போதாது. கலீபாவுக்குள் ஆற்றல் மிகு எழுத்துக்கள் இருக்கின்றன. அவ்வப்போது அவற்றை முகநூலில் அவதானிக்க முடியுமாக இருக்கின்றது. அதிகம் அதிகம் படித்துக் கொண்டே இருந்தால் நமது எழுத்துக்களும் செழுமையடைந்து கொண்டே செல்லும் கலீபா இன்னுமின்னும் அதிகமாக வாசிக்க வேண்டும் அதன் பயனை எழுதும் போது நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். 

மனதில் ஊற்றெடுக்கும் விடயங்களுக்கு வெறும் கவிதை மட்டும்தான் வடிவமன்று, இன்னுமுள்ள  இதர இலக்கிய வடிவங்களிலும் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள் அதுவும் உங்களுக்குக் கை கூடும். கொழும்பு வெளியீட்டு விழாவில் பேராசிரியர் துரை மனோகரன் சொன்னது போல உங்களுக்குள் ஒரு பாடலாசிரியனும் ஒளிந்து கொண்டிருக்கிறான். கவிதை தவிர்ந்த ஏனைய வடிவங்களிலும் உங்களால் நிலைத்த நிற்க முடியும், இந்த மண்ணிலேயே பல்லாயிரம் விடயங்கள் புதைந்து கிடக்கின்றன. அவற்றைத் தோண்டியெடுத்து உயிர்ப்பித்துக் காட்டுங்கள். நிச்சயம் அவை செழுமைமிக்கவையாக மின்னும். ஒன்றை புதுமையாகவும் நேர்த்தியாகவும் அழகுபடுத்த உங்களுக்குச் சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை, சதாவும் நேர்த்தியில் பொழுதைக் கழிக்கும் உங்களுக்கு அது மிகவும் கடினமானதுமல்ல, உங்கள் எழுத்துக்களை பல்வேறு வடிவங்களில்; எதிர்பார்க்கிறோம் என்ற செய்தியைச் சொல்லி விடைபெறுகின்றேன் நன்றி. வஸ்ஸலாம்.

Sunday, November 2, 2014

தடம் தொலைத்த தடையங்கள்



கவிதை வரவுகள் அதிகம், சொல்ல நினைத்ததை மில இலகுவாகச் சொல்லிவிட்டு நிமிர சுலபமாக வசப்படும் ஊடகம் இதுதான் என்பதால் அதிகம் பேர் பயன்படுத்தும் வசதிமிக்கதாயிற்று. பிரகாசக் கவி எம்.பீ.அன்வரின் இந்தப் புத்தகத்தை எனக்குக் கிடைக்கச் செய்தவர் தம்பி தாஜ் அஸ்ரீ ஊடாக சகோதரர் மனாப் அவர்கள்தான். நீண்ட நாட்களுக்குப் பின்னர் தான் படிப்பதற்கு அவகாசம் கிடைத்தது. பொதுவாக அங்கொன்றும் இங்கொன்றமாகப் பகிரப்படும் இவரின் சில கவிதைகளையே ஏற்கனவே படிக்கக் கிடைத்தது.  ஆயினும் முழுத் தொகுப்பாகப் பார்க்கும் போதுதான் ஒரே நிறுவையில் ஒருவரின் கனதி நமக்குமத் தென்படும். 

மிக நேர்த்தியான அச்சும் பார்க்கத் தூண்டும் பக்க வடிவமைப்பும் எழுத்துருக்களின் தேர்வும் அட்டைப்பட நிறமும் தெரிவுசெய்யப்பட்ட தாளும் அருமை. அந்த நேர்த்தியில் ஒரே மூச்சில் படித்து முடிப்பதே ஓர் இனிமையான அனுபவம்தான். அன்வருக்கு கவிதை எழுத வருகின்றது என்பதுதான் முக்கியமான விடயம், பெரிதும் மரணத்தைப் பற்றியும் நிலையாமை பற்றியும்தான் இவர் எழுதியிருக்கின்றார், தனக்கென ஓர் கவிதை வடிவத்தைத் தேர்வு செய்திருப்பதும், தான் சொல்ல வந்த விடயங்களைச் சொல்லி முடித்திருப்பதும் ஒரு வெற்றிதான்.

தேர்ந்த வாசிப்புதான் எழுத்தைச் செழுமைப்படுத்தும் என்பதை அன்வர் இன்னும் உறுதியாக மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். பன்முகத் தேடல் இருக்கும் உங்களுக்கு விடயதானங்களுக்கப் பஞ்சமில்லை ஆதலால் இன்னும் நீண்ட தூரம் பணயம் செய்யத்தக்க ஆற்றல் உங்களுக்கு இருக்கிறது என்பதே திருப்திகரமான செய்தி, மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் ஆர்வத்தை விதைக்கும் வண்ணம் அமைவதுதான் கவிதையொன்றின் வெற்றியென்று நான் கருதுகின்றேன். அத்துடன் ஒரு தரமான கவிதை அப்படியே முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியோ மனதில் பதிந்து போகும் தன்மை இருப்பதாக நான் உணர்கின்றேன். அல்லது அதன் கருத்தாவது மனதில் தங்கி நிற்கும். எனது வாசிப்பனுவத்தில் நான் தெளிந்த உண்மை இது. 

அற்புதம் அபாரம் ஆஹா ஓஹோவென்று பொய்யாகப் புகழ்ந்துரைக்க என்னால் ஒரு போதும் முடிவதில்லை, அத்தடன் ஒப்புக்காக ரெண்டு வார்த்தைகளைச் சொல்லிவிட்டுச் செல்வதிலும்கூட உடன்பாடில்லை, எனது ரசனைக்கு என்ன படுகின்றதோ அதைச் சொல்லிவிடும் குணம் இன்னும் என்னைவிட்டுப் போகவில்லை, ஒரு புத்தகத்தை வெளியிடுவதன் பின்னால் மறைந்திருக்கும் உழைப்பையும் கஸ்டங்களை மிக இலகுவாக என்னாலும் உணர்ந்துகொள்ள முடியும், நாம் கஸ்டப்படுகின்றோம் என்பதற்காக பொன்குஞ்சென்று கொண்டாடும் தன்மையில் இருந்து விடுபட்டு ஒரு வாசகனாக நின்று திரும்பிப் பார்க்கும் போதுதான் எந்த இடத்தில் நாம் இருக்கின்றோம் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். உங்கள் தொகுதியை ஒரு வாசகனாக நின்று ஒரு முறை படித்துப்பாருங்கள், அது இன்னும் உங்களைக் கூர்மைப்படுத்த நிச்சயம் உதவும். 

புதிய களங்களைக் கைவசம் நிறையவே கொண்டிருக்கும் உங்கள் பார்வை இன்னும் விசாலித்து இதைவிடவும் பன்மடங்கு சிறந்த மற்றுமோர் தொகுதியை எங்கள் வாசிப்புக்கு விருந்தாக்கி தமிழ் இலக்கிய உலகுக்கு பங்களிப்புச் செய்ய எனதுமனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் பலரும் வாசித்துப் பயன் பெறட்டும் என்று உங்களின் தடம் தொலைத்த தடயங்களை கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்கு அன்பளிப்புச் செய்கின்றேன்.