Thursday, July 31, 2025

யூதர்களின் வருகை முஸ்லிம்களின் பிரச்சினையல்ல.

 யூதர்களின் வருகை முஸ்லிம்களின் பிரச்சினையல்ல.


ரகசிய செயற்பாடுகளும்: சமூக அமைதி, பொறுப்பு மற்றும் அரசியல் சிக்கல்கள்

அறிமுகம்

இலங்கை என்பது பன்முகமான கலாச்சார, மத, இனச் சமூகங்களைக் கொண்ட ஒரு தீவு. இந்தத் தன்மை நமது சமூக ஒற்றுமையையும், சமாதானத்தையும் சீராக வைத்திருக்கத் துணைபுரிகின்றது. ஆனால், சில சமயங்களில், வெளிநாட்டு சமூகங்களின் வருகை மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக எடுக்கும் அணுகுமுறைகள், சமூகத்தில் குழப்பங்களை உண்டாக்கக்கூடியதாகும். இந்நிலையில், யூத சமூகத்தினர் இலங்கையில் அதிகளவில் வருவதாகவும், அவர்கள் ரகசிய செயற்பாடுகளுக்கான மையங்களை அமைக்கின்றனர் என்ற வகையில் வெளியான கருத்துகள் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளன. 


மதவாதம் அல்லது தேசிய பாதுகாப்பு?

யாரும் எதையுமே உணர்வுப்பூர்வமாக மட்டுமே அணுகும்போது, உண்மை மறைக்கப்படும் ஆபத்து உள்ளது. யாருடைய வருகையோ, செயற்பாடுகளோ ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தாக இருக்கக்கூடுமானால், அதைப் பற்றிய சீரான விசாரணைகள் அரசு மற்றும் அதன் பாதுகாப்பு அமைப்புகளால் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், யாருடைய மதத்தையும் அடிப்படையாக்கொண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்தல், ஒரு சமூகத்தையே பழிவாங்கும் நிலைக்கு அழைத்துச் செல்லும் அபாயத்தை ஏற்படுத்தும்.


யூத சமூகத்தினர் குறித்து கவலை கொண்டோரும், அதனை ஆராய விரும்புகிறவர்களும் இருக்கலாம். ஆனால், இத்தகைய பிரச்சினைகளில் சட்டத்தின் அடிப்படையில் செயல்படுவது மட்டுமே நீதிக்குரிய வழியாகும். அதே போல் யூதர்களின் வருகையை முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு செயற்பாட்டுத் தளத்துக்குள் வைத்துப் பார்ப்போரும் இருக்கலாம்.


முஸ்லிம்கள் மீது தவறான சுமைகள்

இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு விடயம் இருக்கின்றது. யூதர்களின் வருகையை அல்லது அவர்களது செயற்பாடுகளை முஸ்லிம் சமுகத்துக்கு எதிரான விடயமாகக் கட்டமைக்கும் போக்கு. முஸ்லிம் சமூகத்தைக் குறிவைத்து இந்த விடயம் பரவலாக்கம் செய்யப்படும் முயற்சிகள் மிகவும் ஆபத்தானது. யூதர்களின் செயற்பாடுகள் குறித்து எழுந்துள்ள விமர்சனங்களை முஸ்லிம்களுடன் இணைத்து, கலவரமடையச் செய்யும் விடயம் ஆரோக்கியமானதல்ல. யூதர்கள் மீதான விமர்சனத்தை முஸ்லிம்கள் மீது திசைதிருப்பும் செயற்பாட்டை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. சில ஊடகங்கள் மற்றும் அரசியல் சக்திகள் இது தொடர்பில் பொறுப்பிலலாமல் செயற்பட்டுக் கொண்டிருப்பதைக் காணலாம். இது மிகவும் ஆபத்தான ஒரு போக்கு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். முஸ்லிம்கள் இந்த விவகாரத்தில் நேரடி தொடர்புடையவர்களாக இல்லாத போதிலும், அவர்களை இதில் வலிந்து இழுத்துவிடுகின்ற செயற்பாடுகளின் பின்னால் இருக்கின்ற உள் நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும், 


யூதர்களின் இலங்கைக்கான வருகையை ஒரு பெரும் பிரச்சினையாகச் சித்தரித்து அதை ஓர் ஆயுதமாக்கி அதை முஸ்லிம் சமுதாயத்தின் மீது தொங்க விடுவது சமூக ஒற்றுமைக்கு நிச்சயம் குந்தகம் விளைவிக்கும். இதுபோன்று ஒரு சமுதாயத்துக்கு மேலாகப் பிரச்சனை ஒன்றை கட்டித் தொங்கவிடுவது நேர்மையான விடயமும் கிடையாது. எனெனில் யூர்தர்களுக்கு எதிராக யார் எதைச் செய்தாலும் அது முஸ்லிம்களின் தலையோடு போய்விடும், அதைத்தான் சிலர் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். பின்னர் ஒரு கட்டத்தில் இந்நாட்டில் குந்தகம் விளைவிக்கும் குழப்படிகாரர்களாக முஸ்லிம் சமுதாயம்  வெளி உலகின் பார்வையில் கட்டமைக்கப்படும் அபாயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த விடயத்தை கூடுதல் கவனத்தோடு இலங்கையின் பாதுகாப்புத் தரப்பு அணுக வேண்டும்.


அரசியலாக்கம்: சமூக ஒற்றுமைக்கு ஒரு அச்சுறுத்தல்


ஒரு பிரச்சனையை அரசியல் ஆயுதமாக மாற்றுவது இலங்கையில் புதிதல்ல. ஆனால் இது எப்போதும் சமூக அமைதிக்கு எதிரான விளைவுகளைத்தான் ஏற்படுத்தியுள்ளது. யாருடைய வருகையும், செயற்பாடுகளும் பற்றிய உண்மைகளைப் புரிந்து கொள்வதற்கான பொறுப்பு அரசாங்கத்தின் மேலேயே உள்ளது. அந்த பொறுப்பை தவிர்த்து, ஒரு மதத்தினை குறி வைத்து அரசியல் செய்யும் போக்கு சமூக அமைதிக்கு தீங்கு விளைவிக்கும். வெளிநாட்டுப் பிரஜையொருவர் என்ன நோக்கத்துக்காக எமது நாட்டுக்குள் நுழைகின்றார் என்பதையும் யார் வருகின்றார் என்பதையும் கவனிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பன்றி அது மக்களின் பொறுப்பல்ல. ஒரு வெளிநாட்டுப் பிரஜை நாட்டுக்குள் நுழைவதை அனுமதிப்பதா அல்லது மறுப்பதா என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். அதை அரசியலாக்கி சாதாரன மக்களின் நிம்மதியைக் குழைக்கக் கூடாது. அது நாகரிமற்ற செயலாகும். 


மத சுதந்திரம் மற்றும் உணவுப்பழக்க வழக்கங்கள்

சைவம் சாப்பிடுகின்றவர்கள் புலால் இல்லாத உணவகங்களில் தமக்கான உணவைத் தேடுவார்கள். சிலர் அசைவம் சமைக்கும் கடைகளில் கூட சாப்பிட மாட்டார்கள். இஸ்லாமிய சமூகத்தினர் ஹலால் முறையில் உணவு உண்ணுகின்றனர். எந்த நாட்டுக்குச் சென்னறாலும் ஹலான முறையில் அறுக்கப்பட்ட பிராணியின் மாமிசம் என்பதை உறுதிப்படுத்துவதும் முஸ்லிம்களின் மதப் பிரகாராம் உண்பதற்குத் தடைசெய்யப்பட்ட எதுவும் கலப்படம் செய்யப்படாத உணவு என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதும் கூட முஸ்லிம்களுக்கு முக்கியமானது என்பது போல, யூத சமுதாயத்தினரும் 'காஷர்' எனப்படும் சமய உணவு நடைமுறையை பின்பற்றுகிறார்கள். இது ஒரு மதச்சார்பான நடைமுறை, யூத மதத்தின் படி அவர்கள் சாப்பிடுகின்ற பிராணிகளை யார் வேண்டுமானாலும் அறுக்கலாம் என்ற நடைமுறை கிடையாது. அப்படி அறுத்துச் சாப்பிட அவர்களுக்கு அனுமதி இல்லை. அதற்கென்றுள்ள 'ஷெச்சிடா' (ளூநஉhவைய) எனப்படும் யூத ரெப்பிகளால் சான்று அளிக்கப்பட்ட நபரே பிராணிகளை அறுக்க முடியும். இதை வைத்து அரசியல் செய்யத் தேவையில்லை அவரவர் மத நம்பிக்கைப் பிரகாரம் உணவுப் பழக்கவழக்கத்தை கடைப்பிடிப்பதை கேள்விக்குட்படுத்துவது அவர்களின் நம்பிக்கையில் நாம் அத்துமீறுவதைக் குறிக்கும். போயா தினங்களில் பிராணிகள் அறுக்கக் கூடாது என்பது பௌத்த நெறியைப் பின்பற்றும் மக்களின் நம்பிக்கை எனவே குறிப்பிட்ட விடயத்தைஅரசியலாக்கம் செய்ய வேண்டியதில்லை. ஒவ்வொரு மதத்திற்கும் தனது பாரம்பரியங்களை கடைப்பிடிக்கும் உரிமை உள்ளது. இது ஒரு ஜனநாயக சமூகத்தின் அடிப்படை அடையாளங்களில் ஒன்றாகவே அது கருதப்பட வேண்டும்.


சமூக ஒற்றுமைக்கான அறம்

இவ்வாறு பார்வையிடும்போது, எந்த சமூகத்தையும் விமர்சனங்களின் மையமாக மாற்றும் சிந்தனைகளும், உணர்வுப்பூர்வக் கோட்பாடுகளும் தவிர்க்கப்படவேண்டும். இலங்கையில் வாழும் ஒவ்வொரு சமூகமும், சமூக அமைதிக்காகப் பொறுப்புடன் நடக்க வேண்டும். வெளிநாட்டு சமூகங்களின் செயற்பாடுகள் தொடர்பான உண்மைகள் இருந்தால், அதனை அரசாங்கம் சட்டத் தரவுகளுடன் சீராக விசாரிக்க வேண்டும். உணர்வுப்பூர்வ கிளர்ச்சிகள், மத அடிப்படையிலான பாகுபாடுகள், மற்றும் அரசியல் வெற்றிக்காக சமூகங்களை திசைதிருப்புவது — அனைத்தும் நாடு எதிர்கொள்ளக்கூடிய மிகப் பெரிய அபாயங்களாகும்.


அமைதி, புரிதல் மற்றும் சட்டத்தின் முன்பாக ஒத்துழைப்பு என்பது நம் சமூகத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்காலத்திற்கு வழிகாட்டும் ஒளியாக இருக்கவேண்டும்.

கடந்த காலங்களில் நமது நாட்டில் ஹலால் அறுப்பு முறை அரசியலாக்கப் பட்ட பின்னணியில் நிகழ்ந்த சம்பவங்களை நாம் மறந்துவிடக் கூடாது. எனவே யூதர்களின் வருகை இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினை அல்ல என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.