Tuesday, December 11, 2018

புரிதலும் நேர்மை என்ற எல்லையும்.

பின்னிணைப்பு – 05
புரிதலும் நேர்மை என்ற எல்லையும்.
(எனது இரண்டாவது சிறுகதைத் தொகுதியான பிணந் தின்னிகள் சிறுகதைத் தொகுதியில் எழுதிய பின்னிணைப்பு)

என்னைப் பற்றிய பிம்பத்தைக் கட்டமைப்பவர்கள் இரு வகையினர் ஒன்று என்னை நேசிப்போர் அடுத்தது  என்னை வெறுப்பவர்கள். என்னை வெறுப்பவர்களைப் பற்றி எப்போதும் நான் கவலைப்பட்டது கிடையாது ஆனால் அவர்கள் விடயத்தில் அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் இருப்பேன். நேசிப்பவர்களிலும் இரு வகையினர் இருக்கின்றார்கள். ஒரு பிரிவினர் தமது நேசத்தை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் வெளிக்காட்டிவிடுவார்கள் மற்றய பிரிவினர் நேசத்தை வெளிக்காட்டாமல் அப்படியே உள்ளுக்குள்ளேயே பத்திரமாக வைத்துக் கொள்வார்கள். அவர்களது ஆறுதலான நம்பிக்கை தரும் உறுதியான பேச்சும் அவர்களது புன்னகையுந்தான் எப்போதும் அவர்களை அடையாளப்படுத்தும் சாதனமாக இருக்கும். ஆகவேதான் நேசிப்பவர்கள் விடயத்தில் நான் மிகவும் அக்கறையுடன் செயற்பட முனைகின்றேன். எல்லா மனிதர்களுக்கும் போல எனக்கும் அன்பு பாசம் கோபம் ஆத்திரம் வெறுப்பு விருப்பு சில வேளைகளில் அவசரம் எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன. அதனால் நான்
பழகிப்பார் பாசம் புரியும்
பகைத்துப் பார் வீரம் தெரியும் தெரியும்
என்று யாரோ சொன்ன ஒரு நல்ல விடயத்தை எனக்காகவும் வரிந்து கொள்கின்றேன். அதில் அவ்வளவு அர்த்தம் இருக்கின்றது.

எனக்கு எல்லாவிதமான நண்பர்களும் இருக்கிறார்கள். இஸ்லாம், இந்து, கிறிஸ்தவம், பௌத்தம், மதச்சார்பற்றவன் என்று எல்லைகள் கடந்து  அந்த வட்டம் மிக நீண்ட தூரத்திற்குப் பயணிக்கின்றது,  உற்ற நண்பர்களாக வெகு சிலரையே நான் தேர்வு செய்து கொள்கின்றேன்.   அவர்களுக்காக உயிரையும் கொடுக்க நான் தயாராகவே இருப்பேன். ஏனெனில் உண்மையான நேசம் அத்தகையது, எனதும் பண்பும் அத்தகையதே. எதையுமே எதிர்கொள்ளுதலும் சிரமமான விடயம் கிடையாது, ஆனால் துரோகம் செய்து முதுகில் குத்தி காரியம் சாதிக்க நினைக்கும் ஒருவனை ஒரு போதும் என்னால் மன்னிக்க முடிவதில்லை. அப்போது எனது கோபத்தை அவர்களால் நிச்சயம் எதிர்கொள்ள முடியாது. அதைவிட அப்படிப்பட்டவன் என்னைக் கொன்று போடுவதுதான் சிறந்தது. அதுதான் அவனுக்குப் பாதுகாப்பு.

நான் கெமராவையும் பேனையையும் சுமந்திருக்கின்றேன் என்பதால் என்னைக் கையாலாகதவர்கள் பட்டியலில் சேர்த்துவிடவேன்டாம் என்று அவர்களை நான் மிகவும் பணிவாக வேண்டுகின்றேன், ஏனெனில் ஒரு துப்பாக்கியைத் தூக்க அவ்வளவு நேரம் போகாது. முறுக்கேறிய புஜத்தின் முஷ்டியை மடக்கி இதயம் வெடிக்க ஒரு குத்துக் குத்துவதும் அவ்வளவு பெரிய கஸ்டமான காரியம் கிடையாது, சில விசாரணைகளின் போது என்னை எதிர்கொண்டவர்களுக்குத்  தெரியும் அந்தக் குத்து எத்தகையது என்பது. என் காலைச் சுற்றியிருக்கும் சில வெள்ளாளங் குட்டிகளுக்கு இன்னும் சிறிது காலம் அவகாசம் கொடுத்திருக்கின்றேன். அந்த அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவைகளாக விலகிச் சென்றுவிட வேண்டும். இல்லாவிட்டால் அவைகளுக்காகப் பச்சாதாபப்படத்தான் முடியும்.

இலக்கியம் படைத்தல் என்பது எனக்குப் பொழுது போக்கு, நான் வெளிப்படுத்த நினைக்கும் விடயங்களை ஏதேனுமொரு வடிவத்தில் எழுதுகின்றேன். எனது பொழுது போக்கு சிலருக்குப் பிடிக்கவில்லையென்பதற்காக அதை நான் விட்டுவிட முடியுமா?

நன்றி கெட்ட மனிதர்களை அதிகம் சந்தித்திருக்கிறேன். சிலரை நாம் நேசிப்பதற்குப் பெரிய காரணங்கள் ஏதும் இருக்காது ஆனால் அவர்களைப் பிடித்திருக்கும். உதாரணமான அஷ்ரப் சிஹாப்தீன். இப்போதும் துடிப்புடன் இயங்கிக் கொண்டிருப்பவர். எங்கள் ஊரின் நல்லதொரு இலக்கியவாதி. அவர் குடிவரவு குடியகழ்வுத் தினைக்களத்தில் ஓர் அதிகாரியாகப் பணிபுரியும் போது கொழும்புக்கு வரும் ஊர்ச் சனங்களில் அவரையண்டி உதவி பெறாதவர்கள் மிகவும் குறைவு. கொழும்புக்கு வந்து அவருடைய வீட்டில் சாப்பிடாதவர்கள் மிகவும் குறைவு. அவருடைய கடைசித் தம்பி ஜாமியா நளீமிய்யாவில் எனது வகுப்புத் தோழனாக இருந்தான். பெரும்பாலும் வெள்ளிக் கிழமை பேருவளையில் இருந்து கொழும்புக்குக் கிளம்பி விடுவோம். நளீமிய்யாவில் இருந்த நான்கு வருடகாலத்தில் பெரும்பான்மையான சனி ஞாயிறு நாட்களும் விடுமுறை தினங்களில் அதிக நாட்களும் அவருடைய வீட்டில் கழிந்திருக்கின்றன. அவரை மிக நெருக்கமாக நான் அவதானித்திருக்கின்றேன். அவர் கோபப்படும் போது, அன்பை வெளிப்படுத்தும் போது,  பணி நிமித்தம் டென்ஷனாகும் போது, யாரையாவது கடிந்துகொள்ளும் போது, இலக்கியம் பேசும் போது, இலக்கியவாதிகளை அரவனைக்கும் போது, படைப்பாளிகளை விமர்சிக்கும் போது, படைப்புகள் குறித்து விமர்சிக்கும் போது, அவை குறித்துக் கலந்துரையாடும் போது, ஊர் விடயங்களைப் பற்றி அக்கறையோடு அலசும் போது என்று பலதளங்களில் அந்த அவதானம் இருந்தது.   அந்த அவதானத்தின் பயனாய் நான் எடுத்த ஒரேயொரு முடிவு எடுத்த எடுப்பில் அவரைப் புரிந்து கொள்ள முடியாது என்பதுதான். அவருடைய கோபத்தில் எப்போதும் நியாயம் இருந்ததை நான் கண்டிருக்கின்றேன். சில நேரங்களில் அவரது புரிதல் தவறாக இருந்து நாம் சரியன தகவலை கொண்டு அவரை மறுத்துரைக்கும் போது அதை அப்படியே ஏற்றுக் கொள்வார். தனது நிலைப்பாடு தவறென்றால் அதை மாற்றிக் கொள்ளும் பண்பு நம்மில் எத்தனை பேரிடம் இருக்கின்றது? சில விடயங்கள் குறித்து அவரோடு விவாதிக்கும் போது நான் உயர்தரம் கற்கும் மாணவன், சி;ன்னப் பையன் என்று சிம்பிளாக மறுதலித்துவிட்டுச் சென்றிருக்க முடியும் ஆயினும் அவர் அப்படி ஒரு போதும் செய்ததில்லை. அவரது கருத்துக்கு எதிரானவாதம் என்றாலுங்கூட காது கொடுத்துக் கேட்பார். அப்படி நெருக்கமாக நான் அவதானித்துப் புரிந்து கொண்ட அஷ்ரஃப் சிஹாப்தீன் என்ற பிரமாதத்தை ஒருவரால் என்னில் பிழையாகத் தினித்துவிட முடியுமா? அதனால்தான் அவரை விட்டுக்கொடுக்க முடிவதில்லை. ஒரு மனிதனுக்குள்ள எல்லாவிதப் பலவீணங்களோடும் அவரை நான் அங்கீகரிக்கின்றேன் அந்த உவப்பும் விருப்பும் எனது மரணம் வரை இருக்கும் அதனை யாராலும் மாற்றிட முடியாது.

அவரது வீட்டில் சாப்பிட்டவர்களில் பலரும் அவருக்கு முதுகில் குத்தினார்கள். குடிவரவு குடியகழ்வுப் திணைக்களத்தில் அவர் பணி புரிந்த காலத்தில் ஒரு பிரச்சினையில் சிக்கிய போது அவரைத் தாறுமாறாக விமர்சித்தார்கள். அரசியல் ரீதியாக அவரது சகோதரர் அமீர் அலி அவர்களைப் பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு அஷ்ரப் ஷிஹாப்தீனை வேதனைப்படுத்தினார்கள். பல்வேறு விடயங்களைப் புணைந்துரைத்து தாங்கள் கண்கண்ட சாட்சிகள் போன்று கதை சொன்னார்கள். தாங்கள் சொன்ன கதைகள் பொய்த்துப் போய்விடக் கூடாது என்பதற்காக அடிக்கடி அதைப் பிரச்சாரம் செய்தார்கள். தாங்கள் அறியாத உண்மைகளையெல்லாம் பொய்களால் அலங்கரித்து உண்மைக்கு மிக நெருக்கமாக அவற்றைக் கொண்டுபோய் நிறுத்தி பிறரை நம்பச் செய்யும் முயற்சியில் பிடிவாதமாக நின்றார்கள்.  எனக்கு அப்போதெல்லாம் அவர் மிகவும் மௌனமாக அவற்றை எதிர்கொண்டார். முறையான நீதிமன்றப் பொறிமுறையூடாக தன் மீதான குற்றச்சாட்டை வெற்றி கொண்டார். தன்னை நியாயப்படுத்தி அவர் ஊர்ஊராகச் சென்று  அப்போதும் அவரை மென்று துப்பிய வாய்களால் சும்மா இருக்க முடியவில்லை. தெருவோரத்தில் மேய்ந்து திரிந்து சாக்கடையோரத்தில் படுத்தபடி மேய்ந்தவற்றை அசைபோடும் கட்டாக்காலி மாடுகள் போன்று அவர்கள் சதாவும் அவரைத் தூற்றிப் பரப்புரைகள் செய்வதிலேயே காலம் கழித்தார்கள். அரசியல் சாயம்பூசி அதற்கூடாக அவரை மோசமாக விமர்சித்துத் திரிந்தவர்களின் பட்டியலில் சில இலக்கியவாதிகள் மிகவும் முக்கியமானவர்கள். கிடைத்த சந்தர்ப்பத்தில் எல்லாம் அவரை விமர்சிப்பதற்கு அவர்கள் தவறுவதே இல்லை. அவர்களின் மனதில் இத்தனைநாள் புரைNயுhடிப் போய் இருந்த பொறாமையின் வெளிப்பாடு அதில் மிகவும் வெளிப்படையாகத் தொக்கி நின்றது. ஆயினும் அவர்களது எவ்விதமான பேச்சும் மலினப்படுத்தலும் அவரது இயங்கு தளத்தில் கடுகளவும் தாக்கத்தைச் செழுத்தவில்லை. அவர் தன்பாட்டில் சலனமற்ற தெளிந்த நதி போன்று ஓடிக்கொண்டே இருந்தார்.

நளீமிய்யாவில் கற்கும் போது ஏபிஎம் இத்ரீஸ் சேர் எங்களுக்குள் புதிய சிந்தனைகளின் பல தளங்கதை; திறந்து தந்தார். அவர் யாத்ரா என்ற சஞ்சிகை குறித்தும் அது பதிவு செய்யப்பட்ட விதம் குறித்தும் பேசும் போது 2001இல் நாங்கள் இரண்டாம் வருட மாணவர்கள். அஷ்ரஃப் சிஹாப்தீன் குறித்து முதலாவது எதிர்மறையான பிம்பத்தை அவர் எம்மீது மிகத் தெளிவான தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் பதித்த போதுதான்  இத்ரீஸ் சேர் சொல்வது எந்தளவுக்கு உண்மையாக இருக்கும் என்பதை மீள உறுதிப்படுத்திக்கொள்ள நான் விரும்பினேன். 'யாத்ரா' என்ற பெயரை ஹிஜ்ரத் என்ற அரபுச் சொல்லில் இருந்து தானே உருவாக்கியதாக இத்ரீஸ் சேர் மீள மீள பல தடவைகள் சொன்னபோதும் அக்காலகட்டங்களிலேயே நான் அஷ்ரஃப் சிஹாப்தீனிடம் இது குறித்து வெளிப்படையாக இல்லாமல் யாத்ரா ஆரம்பிக்கப்பட்ட வரலாறு பற்றிய கதையாகக் கேட்டு சரியானதகவல் இதுவாகத்தான் இருக்கும் என்று உறுதிப்படுத்திக் கொண்டேன். பின்னர் ஒரு பொழுது இது பற்றி பொது வெளியில் எழுதினேன் அதற்கு அஸ்ரஃப் சிஹாப்தீன் தன்பக்கக் கருத்தை வெளிப்படையாகப் பதிவு செய்தார். ஆனால் இத்ரீஸ் சேர் அதற்கு மறுப்புச் சொல்லி எந்தப் பதிவையும் பொது வெளியில் வைக்கவில்லை, இந்த செக்கன் வரையும்.

இலங்கையின்முதலாவது முஸ்லிம் திரைப்படம் என்ற சுலோகத்தோடு 2009களில் நான் தயாரித்து வெளியிட்ட தீ நிழல் திரைப்படத்தின் பெயரை நான் இத்ரீஸ் சேரின் பேச்சில் இருந்துதான் எடுத்தேன். நளீமிய்யா வளாகத்தில்  2004களில் பத்தும் பலதும் கதைத்துக் கொண்டிருக்கையில் அல்குர்ஆன் வசனமொன்றுக்கு அவர் விளக்கம் சொல்லும் போது  'நரகில் கொழுந்துவிட்டெரியும் நெருப்புக்கு ஒரு நிழல் இருக்கும் பாருங்கள்' என்று ஒரு வசனத்தைப் பிரயோகித்தார் அதிலிருந்துதான் 'தீ நிழல்' என்ற பெயரை நான் தேர்வு செய்தேன். அந்தப் பெயர் எனக்குள் என்னவோ செய்து கொண்டே இருந்தது. பல வருடங்கள் கழிந்த போதும் அந்தப் பெயர் என்னை டிஸ்டேர்ப் பண்ணிக் கொண்டே இருந்தது. படத்துக்குத் 'தீ நிழல்' என்று பெயரைத் தெரிவு செய்த பின்னர்தான் திரைக்கதையே எழுதினோம். அதற்காக அத்திரைப்படத்தின் எல்லாமே அவர்தான் என்றாகிடுமா என்ன!!. இதை நான் இங்கு பதிவு செய்யக் காரணம் நான் நேர்மையாக இந்த விடயத்தில் செயற்பட்டேன் என்ற திருப்தியை அடைந்து விடுவதற்காகத்தான். ஆனால் என்னுடைய ஆசான் யாத்ரா விடயம் போன்று பல தடைவ தன்னுடைய நேர்மையைத் தானே கேள்விக்குட்படுத்தி இருக்கின்றார். மீள்பார்வை பத்திரிகை விடயத்தில், புரிதல் குறும்படம் விடயத்தில் என்று அவர் தனது நேர்மையைத் தொலைத்துச் செயற்பட்ட சந்தர்ப்பங்களை நினைக்கும் வருத்தமாக இருக்கின்றது. இருந்தாலும் அவர் எனக்கு ஆசான் பல புதிய விடயங்களைக் கற்பித்தவர். ஆயினும் சமூக செயற்பாட்டுக் களத்துக்குப் பொருத்தமற்றவர். அவர் ஒரு சிந்தனாவாதியாக மட்டும் இருந்துவிட்டுப் போயிருக்கலாம்.

2002இல் அஸ்ரஃப் சிஹாப்தீன் உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டின் செயலாளராக இருந்து செயற்பட்டார் என்பதற்காகவே இத்ரீஸ் சேர் அதில் கலந்துகொள்ளவில்லை. அந்த மாநாட்டில் இத்ரீஸ் சேருக்கும் கௌரவமளிக்கும் அறிவிப்பும் இருந்தது. அஸ்ரஃப் சிஹாப்தீன் தன்னை நேர்மையாக வெளிப்படுத்திய ஒரு தருனமாக அது இருந்தது. ஆயினும் இத்ரீஸ் சேர் அம்மாநாட்டில் தன்னைப் பேராளராகப் பதிவு செய்திருந்தும் நிகழ்வுக்குச் செல்லவில்லை. எனது வகுப்புத் தோழன் நவாசிடம் அவருக்கான புத்தகப் பையைப் பெற்று வரும் பொறுப்பை ஒப்படைத்திருந்தார். இப்படிப்பட்ட இத்ரீஸ் சேர் அஸ்ரஃப் சிஹாப்தீன் குறித்து வெளிப்படுத்தும் கருத்துகள் எத்தகையாதாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கின்றேன். அரபுச் சிறுகதைகளை தமிழுக்குக் கொண்டு வருதல் என்ற இத்ரீஸ் சேரின் கனவு செயற்படுத்தப்படாமல் கனவாகவே இருந்து தசாப்தங்கள் கடந்துவிட்டிருந்தது. முதன் முதலாக அரபுச் சிறுகதைகளைத் தொகுதியாகத் தமிழுக்குக் கொண்டு வந்த பெருமை அஸ்ரஃப் சிஹாப்தீனையே சாரும். ஆயினும் இச்சிறுகதைத் தொகுப்பு குறித்து ஒரு வரியையாவது இத்ரீஸ் சேர் எங்கும் எழுதவில்லை. இலக்கியவுலகில் எழுத்து நேர்மை, பேச்சு நேர்மை என்பது பற்றியெல்லாம் இங்கிருந்து துவக்கலாம். நான் இதையெல்லம் குறித்து எழுதக் கூடாது என்று நினைப்பதற்கு முதன்மைக் காரணியே உள்ளதை உள்ளபடி வெளிப்படையாக எழுதிவிடும் வருத்தம் இருப்பதுதான்.

2011க்குப் பின்னர் எனக்கும் ஓட்டமாவடி அறபாத்துக்கும் இடையில் நல்ல உறவு கிடையாது. சவுதி அரேபியாவின் ஒரு வஹாபி கொடுத்த 'தஃவாப் பணம்' அதாவது நமது பரிபாசையில் சொல்வதானால் 'பிச்சைச் சம்பளம்' அல்லது 'பிச்சைக் காசு' பெற்றுக் கொண்டு தப்லீக் ஜமாஅத்துக்கு ஏசித் திரிந்ததையும் எவனோ ஒரு அறபிக்காரன் கொடுத்த பணத்தில் இருந்து யாருக்காவது உதவி செய்யும் போது தனது சொந்தப் பணத்தில் இருந்து தர்மம் செய்வது போல படம் காட்டுவதையும் மோசமாகக் கிண்டலடிக்கும் நான் அறபாத்தின் சிறுகதைகள் குறித்தும் கவிதைகள் குறித்தும் மறுதலித்துப் பேசவோ மௌனமாகக் கடந்து செல்லவோ இல்லை. அதற்காக அறபாத் தனது சில புதிய கதைகளுடன் பழைய கதைகளைத் தொகுத்து சாதிக்கின் அடையாளம் பதிப்பகத்தினால் ஒரு தொகுதி போட்டு அதையும் தேசிய சாகித்திய விருதுக்கும் கிழக்குமாகாண சாகித்திய விருதுக்கும் சமர்ப்பித்து தேசிய விருது நிராகரிக்கப்பட்டு கிழக்கு மாகாண விருது மட்டும் கிடைத்து. ஆயினும் அதை தேசிய விருது போன்று படங்காட்டியதைக் கடந்து போக முடியவில்லை. நியாயப்படி முன்னனைய தொகுதிகளில் வந்த கதைகள் பின்னய தொகுதியில் சேர்க்கப்படுமாயின் அவை விருதுக்காக சமர்ப்பிக்க முடியாதவை, அது தெரிந்தும் அறபாத் விருதுக்காக அனுப்பி வைத்தது முதலாவது தவறு, கிழக்கில் கிடைத்த விருதை போய் வாங்கிக் கொண்டது இரண்டாவது மாபெரும் தவறு. அந்த வருடம் அறபாத்துக்கு விருதைப் பரிந்துரை செய்த நடுவர்கள் செய்தது எல்லாவற்றையும் விடப் பெரிய தவறு. இப்போது இந்தத் தவறைச் சுட்டிக் காட்டிவிட்டோம். மானமுள்ள நேர்மையான மனிசனாக ஓட்டமாவடி அறபாத் இருந்தால் தனது தவறுக்காக மன்னிப்புக் கோரிவிட்டு அந்த விருதைத் திருப்பிக் கொடுப்பதுதான் தர்மம் அவர் அதைச் செய்வாரா? ஆனால் இந்த அறபாத் அஸ்ரஃப் சிஹாப்தீனை பல சந்தர்ப்பங்களில் படுமோசமாக விமர்சித்திருக்கின்றார் ஆனால் ஒரு போதும் அவரது  படைப்பு குறித்து வாயே திறப்பதில்லை.

 தன்னை ஓர் உலக இலக்கிய மேதையாகக் கரடிவிட்டுத் திரியும் எஸ்எல்எம் ஹனிபா குறித்தும் சில வரிகளை இங்கு பதிவு செய்யத்தான் வேண்டும் ஏனெனில் மேடைகளில் அஸ்ரஃப் சிஹாப்தீனை வம்பாக இழுத்து நக்கலடித்து விமர்சித்திருப்பதை நான் கேட்டிருக்கின்றேன். அது என்ன காரணத்துக்காக என்று கேட்கத் தோன்றுகின்றது. இயலாமையின் வெளிப்பாடா? அல்லது பொறாமையின் வெளிப்பாடா?

ஆயினும் இவை எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு அஸ்ரஃப் சிஹாப்தீன் தனது இலக்கியப் பணியை அமைதியாகச் செய்து கொண்டே இருக்கின்றார். அவர்களது சேறுபூசுதல் அனைத்தையும் கடந்து அவரது பயணம் தொடர்கின்றது.

ஒரு மனிதன் கஷ்டத்தில் விழுவதும் சில வேளை அவனைப் பீடிக்கும் கஷ்டம் வாழ்வின் தூர எல்லையொன்றில் தூக்கி வீசிவிடுவதும் இயல்பானவை. கஸ்டத்தில் விழுத்திய அந்த சந்தர்ப்பத்திற்குள் ஏனையவர்களால் புரிந்து கொள்ள முடியாத ஆயிரம் மாயிரம் நிர்ப்பந்தங்களும் பலவந்தப் பிடிகளும் இருக்கும் அவற்றை வெளிப்படையாக தெரியப்படுத்தும் அல்லது பூடகமாகவேனும் சொல்லிச் செல்லும் நிலை இல்லாத போது அவன் கைவிடப்பட்டவனாகின்றான். அப்போது அவனுடைய அமைதியையும் மௌனத்தையும் கிழித்துக்கொண்டு வேதனைகளை மட்டுமே பரிசளித்துவிட்டு பொறாமைக்காரனின் பொறாமை மெல்லமாகக் கடந்து செல்லும்.

இன்னும் எழுதத் தோன்றுகின்றது ஆயினும் அடுத்த வெளியீட்டின் பின்னிணைப்பில் சந்திப்போம்.

No comments:

Post a Comment