Thursday, January 9, 2014

ரசனைக் குறிப்பு: யோ.கர்ணனின் சேகுவேரா இருந்த வீடு

முஸ்டீன்

சேகுவேராவின்ற வீட்ட எங்க தேடியும் கிடைக்கயில்ல, கிடைக்கயில்ல என்டத்துக்காக விடுவனோ, பௌசரின்ற  எதுவரை இணைய இதழில யோகர்ணனின்ட கதையொண்டப் படிச்சனான், தீரும்பிவராத குரல் ரொம்பப் பிடிச்சுப் போச்சுது. அதனால நானும் ஒரு கொமென்ட் அடிச்சன் பின்ன பௌசருக்கு ஒரு மெய்ல் வெச்சனான் அதில யோகர்ணனின்ட ஈமெய்ல் ஐடி தர முடியுமோ வெண்டு கேட்டிருந்தன் அவரும் உடனே எதுக்கு என்னத்துக்கெண்டு கேக்கயில்ல உடனே அனுப்பிட்டார். அதுக்குப் பிறகுதான் யோ.கர்ணனுக்கு மெய்ல ஒண்டு வெச்சன் அதில யாத்திராவில அவரின்றகட்டுரை ஒன்டப் படிச்சதப் பத்தியும் சொன்னன். எனக்கு சேகுவேராவின்ற வீடு எப்பிடியாவது வேண்டு மென்டு கேட்டன் அவரும் ஓமென்டவர் பின்ன பிடிஎப் போமட்டில அனுப்பிஇருந்தார். பின்ன வாசிக்க அவகாசமில்லாமத் திரியேக்கதான் கொல கேசிக்குப்பிறகு மட்டக்களப்புக்கு ரெண்டாவது தடவையா போகக் கிடச்சுது கொழும்பில இருந்து ரெயின் ஏறின நான் மட்டக்களப்பு வரையும் அந்தக் கதப்புத்தகத்தப் படிச்சன் யோகர்ணனக் கட்டிப்பிடிச்சுக் கொஞ்ச வேணும் போல இருந்திச்சுது. இப்பெல்லாம் ஆம்பிளயள ஆம்பிளயல் கொஞ்சும் போது கவணமா இருக்கவேணும் கேய் காரனெண்டு ஹோமோ செக்ஸ்முத்திரை குத்திப் போடுவினம். 


பின்ன மூனுநாள் உத்யோகபூர்வப் பயணம் ஐஞ்சு நாளாச்சுது பிறகு மட்டக்களப்பில இருந்து கொழும்புக்கு ரெய்ன் ஏறேக்க திரும்பயும் படிக்கனும் என்டு முடிவெடுத்த நான், படிச்சி முடிக்கிறத்துக்கு இடையில அதுவும் கடைசிக்கு முந்தின கத படிக்கேக்குள்ள லெப் டொப்பின்ற சார்ச் முடிஞ்சு போச்சுது இல்லாட்டி அன்டைக்கு ராத்திரியே கதைகளப்பத்தி மனசுக்குப் பட்டதெயெல்லாம் எழுதி முடிச்சிருப்பன். இந்தியாவுல மாதிரி பஸ்ஸூக்குள்ளேயும் ரெயினுக்குள்ளேயும் சார்ச் பண்ணிக்கொள்ளுர மாதிரி ஒரு பெசலிடீஸ் இருந்தா எவ்வளவு சுகம் இதுகளுக்கு ஏன் இந்த விசயம் விளங்கயில்லண்டு தெரியேல்ல சரி அத விடுவம் இனி யோகர்ணின்ட சேகுவேரா இருந்த வீடு பத்திப் பாப்பம். 


அது என்னெண்டு தெரியேல்ல நல்ல சுத்தமான பிரதேசக் கலப்பிடமில்லாத தமிழிலதான் இத எழுதனும் என்டு நினச்சநான் ஆனாலும் யோகர்னன் பிசகொண்டும் இல்லாம யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழில அற்புதமா எல்லாக் கதையளையும் படைச்சிருந்தார் அதன்ற தாக்கம் என்னையும் பிடிச்சுக் கொண்டிற்று, யாழ்ப்பாணத்துப் பாசை எனக்கு சுளுவா வரயில்ல ஆனாலும் யோ.கர்ணணின்ட புன்னியத்துல பாசை கொஞ்சம் வடிவா வந்துது. 

எல்லாம் மொத்தமா பதின் மூன்று கதைகள் 128 பக்கத்துல வடலி பதிப்பகம் பதிப்பிச்சிருக்கு. இந்தியாவுல பதிப்பிச்சதாலயோ என்னவோ இஞ்ச மார்க்கெட்டுல புத்தகம் கிடைக்கயில்ல. யோகநாதன் முரளி என்ற இவர் ஏற்கனவே தேவதைகளின் தீட்டுத் துணி என்று ஒரு கதைப் புத்தகமும் போட்டிருக்கார், அத்தோட கவிதை சிறுகதை குறும்படம் எல்லாத்திலயும் ஆழமாகக் கால் பதிச்சிருக்கார், அவரின்ற எல்லாக்கதையுமே பிடிச்சிருந்தது, எதையும் குறச்சி மதிப்பிடயில்ல எல்லாம் நூத்துக்கு இருந}று பர்சண்ட்  ஓகே இல்லாட்டி டபுள் ஓகே, உங்களுக்குக் கூட  ஒரு கதையெண்டாலும்  கூடப் பிடிக்காமப் போனா நான் மூக்க அறுப்பன். அது ஆர்ரெதென்பது இன்னும் முடிவாகயில்ல. அப்பிடி ஒரு கதையாவது பிடிக்காமப் போயிருந்தா நேர்ல கண்டு சொல்லுங்கோ.


யோவின்ற சிறுகதைகளப் பத்திப் பேசுறத்துக்கு நான் ஒன்டும் கொம்பர் கிடையாது ஆனா நானும் ஏதோ கதையென்று கிறுக்கித் திரியிறன் அந்தவகையில மனசில பட்டத எப்பிடியாவது போட்டு உடச்சிடுவன் அதப்போலத்தான் யோவும் மனதில் பட்டதையெல்லாம், ஆருக்கும் பயப்பிடாம போட்டு உடைக்கிறார், அவரின்ற சினமா ரசனையும் கதகளில விரவிக் கிடக்கு, இப்போதுள்ள எழுத்தாளர்கள் ஆறும் பார்க்காத பக்கங்களையெல்லாம் வித்தியாசமான யதார்த்தப் பாங்கில் அவர் பாக்கிறார், அதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. கதைகளப்பத்தி விளாவாரியாச் சொல்லி என்ற ரசனைய உங்களிட்டத் திணிக்க நான் தயாரில்ல நீங்களும் வாசிச்சுப் பார்த்திட்டுச் சொல்லுங்கோ நான் சொன்னது சரிதானெண்டு. 


இப்ப யாழ்ப்பாணத்தில இருக்கிற யோ என்னைப் பொருத்தவரைக்கும் வித்தியாசமான தளத்தில் வைத்து நோக்க வேண்டிய கதைஞர். இசகு பிசகெல்லாம் இல்லாம கதை தன் பாட்டில் சலிப்பில்hம ஓடுது, வாசிச்சி முடியும் வரையும் பிறகென்ன ?பிறகென்ன? எண்டு மனசுக்குள்ள ஒரே படபடப்பு கடைசியில எதிர்பார்க்காத முடிவு அப்பிடியே ஷெல் அடிச்சமாதிரி இருக்கும். கடந்தகால வரலாற்று நிகழ்வுகளை அப்பிடியே நிகழ்காலவோட்டத்தின் போக்கில் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்தித்தி விடுவார் துரும்பை இழுத்து கம்மாரிஸ் அடிச்சமாதிரியோ அல்லது துரும்பை இழுக்காமலேயே கம்மாரிஸ் அடிச்ச மாதிரியோ, 


கதைகளைத் தேடி அலைந்து திரியும் போக்கிலிருந்து மாறுபட்ட கதைஞர்களில யோவைத் தனித்துவமானவராக நான் பார்க்கிறேன். யாவும் கற்பனை என்ற போக்கு இப்போதெல்லாம் பெரிதாக இல்லை இன்றே எண்ணத் தோன்றுகிறது. அதுவும் வடபுலத்திலிருந்து யாவும் கற்பனைப் பேர்வழிகள் இப்போதெல்லாம் எழுதுவதும் குறைவு போலத்தான் தெரிகிறது. ஈரானியத்திரைப்பட இயக்கநர் அப்பாஸ் கியாரெர்ஸதமி 'என்னைச் சூழ நடப்பவைகளைத்தான் நான் படமாக்குகிறேன்' என்பார் அது போல தன்னைச் சூழ இருக்கும் மக்களின் அண்றாடங்களுக்குள் புகுந்து கதை சொல்லும் யோ.கர்ணன் மாயாஜாலப்புலத்தில் நின்று புரியாதபடி சொற்களைப் புணைந்து  ஏதேனுமார் இசத்தின் பாற்பட்டு வசனங்களைக் கொழுவிச் சென்று வாசகனைத் திணறடிக்கும் காரியத்தைச் செய்யவில்லை, அது ஒரு பெருத்த ஆறுதல், 


பாலியல் சார்ந்த சொல்லத் தயாரில்லாத பல விசயங்களை விரசமில்லாமல் போட்டு உடைத்துச் செல்லும் போக்கு கதைகளில் இழையோடுகிறது. அவை சொல்லப்படவேண்டியவைதான்  ஆனாலும் பலர் அதைச் சொல்லத்தயாரில்iலாத போக்கு பரவலாக இருப்பது நமக்குத் தெரியும் ஆயினும் இங்கு யோ தெளிவாக இக்கட்டான சூழலிலும் கூட பொதுப்புத்தி இப்படித்தானிருந்தது என்பதை அலட்டிக் கொள்ளாமல் கண்ணத்தில் அறைந்தாற்போலச் சொல்லுவது அற்புதமானது. 

விடுதலைப் புலிகள் தொடர்பில் சொல்லவேண்டியவைகளைச் சொல்வது என்பதைத் தாண்டி ஒரு நியாயமான நேர் கோட்டுப் பாதையில் பயணிப்பது போன்றே தென்படுகின்றது. இயக்கம் சார்ந்த விடயங்கள் சலிப்பில்லாத இயல்பான போக்கில் தானாக நகர்வது போலத்தான் தோன்றியது, சொல்லத்தயங்கி அச்சப்பட்டுப் பதுங்கிஇருக்கும் போக்கு அல்லது சாடைமாடையாக சுற்றிவளைத்து பூடகமாக உண்மை சொல்லுதல் என்ற சிக்கலுக்குள் யோ. கர்ணன் அகப்பட்டுக்கொள்ளவில்லை. புலிகள் சார்ந்த இலக்கியம் படைப்பதென்றால் இப்படித்தான் என்பதைத் தாண்டி யோ பாடமெடுப்பதாகவே எனக்குப்பட்டது. 

யுத்தத்தின் பின்னரான வாழ்க்கை குறித்தும் அது என்ன என்பதிலும் தேடல் உள்ளவர்கள் யோவின் கதைகளைப்படிக்கும் போது கூடுதல் தகவல் பெற்றுக் கொள்ள முடியுமெனக் கருதுகின்றேன், அப்படியான விடயப்பரப்பினுள் யோ அலட்டிக்கொள்ளாமல் நுளைந்து வெளியேறுகிறார். விளிம்பு நிலை மக்கள் என்றொரு சொல்லாடல் இப்போதெல்லாம் ரொம்பப் பரபரப்பாகப் பயன்படுத்தப்படுவதுண்டு அப்படிப்பட்ட மக்கள் மீதான கழிவிரக்கம் மிக முக்கியமானதொன்றாகவும் பார்க்கப்படுகிறது. அத்துடன் அவர்களின் வாழ்வியலுக்குள் நின்று சில விடயங்களைப் பேசுதல் என்பதும் கவனயீர்ப்புப் பெறவேண்டியதொரு அம்சமே. அந்தப் பணியையும் யோ செய்திருப்பதாகப் படுகிறது. 


பச்சை பச்சையாகச் சொல்லப்படும் விடயங்கள் களத்தில் இருந்த ஒருவனின் நேரடி வாக்குமூலமாகவே இருக்கவேண்டும் அப்படியானால் அது அழகிய இலக்கியத்தில் உண்மை வடிவம் பெறுதல் தவிர்க்கவொணாததுதான். அந்த உண்மைகளைப் பலர் ஏற்றுக்கொள்ள மறுப்பதும் பலர் ஆ!! பாத்தீங்களா, எங்களுக்குத் தெரியும்தானே என்று சப்புக் கொட்டிக் கொள்வதும் எங்கேனும் அரங்கேறும். ஒன்றை மறுத்தால் இன்னொன்றை ஏற்றல் இன்னொன்றை ஏற்றால் மற்றொன்றை நிராகரித்தல், பிடித்துப் போதல் பிடிக்காமல் போதல் பிடித்தும் பிடிக்காமலும் போதல் இப்படித்தானே வாழ்க்கை பல முரண்களுக்குள்ளால் சிக்குப்பட்டுப் பயணிக்கிறது, அல்லது இழுத்துச் செல்லப்படுகிறது, இங்கும் வாழ்க்கையைப் பலர் இழுத்துச் செல்கிறார்கள் வாழ்க்கை பலரையும் இரும்புப்பிடி பிடித்து இழுத்துச் செல்கிறது, வாழ்க்கையின் போக்கில் அடித்துச் செல்லபபடுதலும் நிகழ்கிறது, சாவதற்கு நியாயம் சொல்ல வேண்டும் ஆனால் வாழ்வதற்கு நியாயம் சொல்லத் தேவையில்லை சாகும் வரை வாழ்வதுதான் நியாயம் வாழ்க்கை இப்படித்தான் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் பல்பரிமாணங்களை அதுவாக எடுத்துக் கொள்கிறது. யோவின் கதைகள் அப்படித்தான் யதார்த்தமான போக்கில் விளாசித் தள்ளுகிறது. 


கதை சொல்லும் பாங்கில் கறாறாக நடந்து கொள்ளாத யோ பாத்திரப்படைப்பில் கறாறாக இருந்திருக்கிறார் என்று படுகின்றது, கதைவடிவங்கள் மாறுபட்டுக் கோண்டே இருக்கும் சூழலில் யோவும் தனக்கான வகைப்படுத்தலைச் சட்டகத்தைத் தூக்கியெறிந்து விட்டுத் தேர்ந்தெடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது, மனிதர்கள் போட்ட சட்டகங்களையெல்லாம் உடைத்தெறிவதில் எனக்கும் உடன்பாடுதான் காரணம் அது மனிதர்கள் போட்டது என்பது மட்டும்தான். ஏன் இந்த வடிவங்களில் மாற்றம் செய்தாய் என்று யாரும் எம்மை அழைத்து விசாரிக்கப்போவதுமில்லை, குற்றம் சுமத்தி குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிடப் போவதுமில்லை, அதனால் தனக்குரிய வடிவங்களைத் தெரிவு செய்வதில் அல்லது புதிய வடிவங்களை உருவாக்கிக் கொள்வதில் தப்பில்லைதான் என்று தோன்றுகிறது. வேறு யாரேனும் மேதாவிகள் யோவைக் குற்றம் சொல்லட்டும் நான் மேதாவி கிடையாது என்பதால் அவர் முன்வைக்கும் பல்வேறு வடிவங்களையும் ஏற்றுக் கொள்கிறேன். 

கதைகளின் அரசியல் பல்வேறு பரிமாணங்களில் பேசப்பட வேண்டியதுதான் அதற்காக இங்கு அரசியல் பார்வையை நான் முன்வைக்கத் தயாரில்லை, அந்தவிடயத்தில் யோவுடன் நானும் கதைகளின் அரசியல் புலத்தில் ஒன்றித்து விடுகிறேன். குத்திக் கிழித்து மருந்து போட்டுப் பெரிய கட்டும் போட்டு யோவைக் கட்டிலில் கிடத்த நான் அவருடன் முரண்பட்டிருக்கவேண்டும் இங்கு உடன்பட்டுக் கொண்டதால் அதற்கு அவசியமில்லாது போகிறது. அவரவர்க்குரிய கருத்துச் சுதந்திரத்தின் எல்லைகளை அவரவரே அறிவர் இங்கு யோவின் எல்லைகள் விசாலித்திருப்பது கவனிக்கத் தக்கதாகும். 

காக்கிச் சீருடைக்குள் புகுந்து துப்பாக்கி தூக்கி விறைப்பாக நின்று சல்யூட் அடிக்கும் கருத்தியலில் இருந்து யோ தன்னை விடுவித்துக் கொண்டதாகப் படுகிறது, அது நல்ல விடயம்தான் பலருக்கு அது பிடிக்காமலும் போகலாம் இன்னும் பலர் பயமுறுத்தி பேனையைப் பிடுங்கிக் கொள்ளவும் கூடும் ஆயினும் யோ ரொம்ப ஜாக்கிதையானவர் பேய் பிசாசுக்கெல்லாம் அவர் பயப்படமாட்டார் என்று நம்புகின்றேன். வாழ்த்துக்கள் யோகநாதன் முரளி என்கிற யோ.கர்ணனுக்கு.

யோ பற்றிய எந்தப் பின்புலமும் தெரியாமல் கதைகளைப்படித்துவிட்டு மட்டும் எழுதிய இது பெரும்பாலும் நியாயமானதாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்

இரண்டு சொட்டுக்கள் 

அவள் கண்களிலிருந்தது கலவரமென்பதை அப்போது கண்டேன் இரண்டு அடி பின்னால் போய் சுவரோடு சாய்ந்து நின்றாள். கதவைப் பார்த்தாள் பூட்டியிருந்தது திறந்திருந்தால் வெளியே ஓடியிருப்பாள் மாதிரியிருந்தது.அவளுக்கு மூச்சு வாங்கியது பிறகு மெல்லச் சொன்னாள்
'இப்படி இந்த வேலை செய்றாவெண்டு எங்கட அம்மாவை நீங்கதான் சுட்டனீங்கள்'

(திரும்பி வந்தவன் - முதலாவது கதையின் கடைசிப் பகுதி)


'ச்சா எவ்வளவு பெரிய பிழை விட்டிட்டன்..' எனத் தனக்குள்ளே சொல்லிக் கொண்டார் பிறகு, இந்தப் பிழைக்கு தான்மட்டுமே பொறுப்பில்லைதானே எனவும் யோசிக்கத் தலைப்பட்டார் ஏனெனில் குமரன் பத்மநாபன் எனும் பெயர் பத்திரிகைகளில் வருவதில்லை

அப்படி வந்தாலும் யாழ்ப்பாணத்திலும் பிற இடங்களிலும் யுத்தத்தின் அழிவுகளை நினைத்து கண்ணீர் விடுவது மாதிரி படங்களெதுவும் பிரசுரமாகியிருக்கவில்லைதானே 

(இரண்டாவது தலைவர், கடைசிக் கதையின் கடைசிப் பகுதி)

No comments:

Post a Comment