Monday, January 6, 2014

சோலைக் கிளியின் பொன்னாலே புழுதி பறந்த பூமி

- முஸ்டீன் - 

எல்லோருக்குமுள்ள பால்ய காலத்து நினைவுகள் பசுமையானவைதான். மீட்டிப்பார்ப்பதில் அவரவர் முதிர்ச்சி அதன் ரசனையைச் சுவைக்கச் செய்யும் ஒன்றாக மாற்றிவிடும். அதிலும் கவிஞனாக அவன் இருந்துவிட்டால் அந்த நினைவுகளில் கவிதை ரசம் சொட்டும். அது எல்லோருக்கும் இலகுவாக அமைந்துவிடுவதில்லை. கவிஞர்கள் என்று நாமம் போட்ட பலரும் தமது பால்ய நினைவுகளை எழுதியிருக்கிறார்கள்தான் அதற்காக அவையெல்லாம் ரசிக்கச் செய்யும் என்றில்லை. எல்லாவற்றிலும் கவித்துவம் கொளிக்கும் என்றுமில்லை. 

கானா மயிலாடக் கண்டிருந்த வான் கோழி அது போலத் தானாட என்று ஒரு விடயம் இருக்கிறது. சோளைக்கிளி பத்திக்கை தொடங்கிய பின்னர் பலருக்கும் தங்கள் நினைவுகளை எழுத வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. அதாவது சோளைக்கிளி பத்திக்கை எழுதும் போது பத்தியென்ற பெயரில் பல சொத்திகளும் எழுதிய பின்னணிக் கதைகள் பலவும் இருக்கின்றன அவற்றைப் பேசினால் புழுதி வாசனையை இங்கே இழந்து விடுவோம். அந்தக் கொடுமைகளையும் சமீபகாலமாக நாம் பல பத்திரிகைகளில் அனுபவித்து வருகிறோம்.  சிலர் புத்திசாலித்தனமாக நிறுத்திக் கொண்டார்கள். இன்னும் சிலர் புத்தகமாகப் போடும் எண்ணத்தில் அலைகிறார்கள். அதுக்குள்ள அவங்க கவித எழுதினாங்களாம் அதப் பிறர் களவெடுத்து தங்களோடது என்றார்களாம் அதையெல்லாம் இவங்க பெருந்தன்மையோட மன்னித்துவிட்டாங்களாம் என்றெல்லாம் பக்கம் பக்கமாய்க் கதை வேறு. 

கண்ட கண்ட கழுதையெல்லாம் அனுபவம் எழுதத் தொடங்கிய பின்னர் பத்தி வாசிப்பதையே விட்டுவிட்டேன். அவர்களை மரத்தில் கட்டி வைத்துச் சோளைக்கிளியின் இந்தப் பொன்னாலே புழுதி பறந்த பூமியால் சோப்ப வேண்டும்.

பத்திக்கை என்று வீரகேசரி ஞாயிறு வெளியீட்டில் உயிரெழுத்துப் பகுதியில் தொடராக சோளைக் கிளி எழுதியிருந்ததைப் படித்து அந்தப் பகுதியை அப்படியே பத்திரமாக சேமித்த ஞாபகம் இருக்கிறது. அப்போது ஆத்மா பல பயன் தரும் விடயங்களை அந்த நான்கு பக்கங்களுக்கூடாகவும் கொண்டுவந்து கொண்டிருந்த நேரம். ஆத்மா அந்தப் பக்கங்களை விட்டதோடு அந்தப் பக்கங்களும் கிளைமோருக்கு அகப்பட்டுச் செத்தவன் போலாயிற்று. பார்க்கச் சகிக்கவில்லை. 

தொடராகப் பத்திரிகையில் படித்ததை விட சுகமானதோர் அனுபவத்தை தொகுப்பாகப் படிக்கின்றபோது ஆனந்தமாக அடைய முடிந்தது. ரமீஸ் அப்துல்லாவின் நீண்ட அணிந்துரையை புத்தகம் படித்து முடித்துவிட்டுப் படித்திருக்கலாமே என்ற எண்ணம் என்னுள் ஏற்பட்டதைத் தவிர்க்க முடியவில்லை. உமாவரதராஜனின் சின்னஞ்சிறிய குறிப்பு ஒரு எகிப்து நாட்டுப் பேரீத்தம் பழத்தைச் சுவைத்தது போல இருந்தது.

தேவையில்லாத விடயங்களில் தலையிடுவதுமில்லை, மோசமான மனிதர்களுடன் தொடர்பாடுவதுமில்லை என்றும் ஒரு வரையறையைப் போட்டுக்கொண்டு அமைதியாக இருந்து இலக்கியம் படைக்கும் இனிய மனிதர் சோளைக்கிளி. அடுத்தது கிள்க்கு ரொசமும் கொஞ்சம் அதிகம்தான். மானமுள்ள மனிதனுக்குத்தானே ரோசம் இருக்கும். கவிதைகளாலேயே அறியப்பட்ட சோலைக் கிளியின் மறுபக்கம் போலவே இந்தப் பொன்னாலே புழுதி பறந்த பூமி தெரிகிறது. ஒரு இறுக்கமான கவிஞர் என்ற நிலையிலிருந்து சுவாரஷ்யமான மனிதர் என்ற நிலைப்பாட்டை  பொன்னாலே புழுதி பறந்த பூமி ஏற்படுத்துகிறது. 

ஊரிலுள்ள பல கவிதை நாம்பன்களால் அவரும் பாதிக்கப்பட்டிருக்கார் போல. அதென்ன நாம எழுதினா அப்பிடி வருதில்ல அவரு எழுதினா ஆகா ஓகோன்னு பேசுறாங்க என்று முணுமுணுக்கும் பல கவிதை ஆசாமிகள் இன்னும் வாழ்கிறார்கள். கட்டாக்காலிகள் பறவாயில்லை. 

சோலைக் கிளியின் ரசனை மட்டத்தை ஓரளவுக்கு மதிப்பிட நமக்குத் துணைசெய்யும் பத்திக்கை, அவரது ரசனை ஒரு ஆழமான கிணறு போல, மிக நீண்ட தொலைவில்தான் நமது உருவம் சின்னதாய்த் தெரியும் நாம் சத்தம் போட்டால் கூட தாமதித்து மெதுவாகத்தான் திரும்பிவரும். அந்த அமைதிக்கு எதிரொலிக்கும் அழகு புதுமை சேர்க்கும். அப்படித்தான் பொன்னாலே புழுதிபறந்த பூமியை நான் பாரக்கிறேன். இந்தப் பதிவு ஒன்றும் பம்மாத்துக்கு எழுதப்படும் குறிப்பு போன்றதல்ல. எனக்குள் ஊர்ந்து குறும்பு செய்து வாய்விட்டுச் சிரிக்கச் செய்தும் ஏக்கத்தோடு பெருமூச்செரியச்  செய்ததுமான எழுத்துக்களின் ஆனந்தத்தை, ஒர் இளையவனின் பார்வையில் இறக்கி ரசனையில் அமிழ்த்தி அதை அப்படியே வெளிப்படுத்தி விடுவதுதான், இது அவரின் எழுத்துக்குக் கிடைக்கின்ற வெற்றி, அவரைவிட பல வயது இளையவன் ஒருவனையும் அவரது எழுத்து கிறுக்குப்பிடிக்க வைக்கிறது என்றால்  பெருவெற்றிதானே. இது காலம் தீர்மானிப்பது. 

நான் ஊர்ப் பாடசாலையில் படிக்கும் காலத்தில் பாடசாலை முடிந்து வீடு வந்து சேரும் வரையும் காட்டில் பனம் பழம் பொறுக்கி அதைச் சூப்பிக் கொண்டே நடப்பது இனிமையான நினைவு. அது போல புச்சிப் பனங்கொட்டை என்றால் அதற்குத் தனி மவுசு அதைச் சூப்புவது மதுரமானது. இனிப்புக் குட்டான். அந்தப் பனங் கொட்டை சூப்பும் இனிமையான நினைவுகளை மீட்டுத் தந்தவர் சோலைக்கிளி.

எதை விட்டு வைத்தார்? அவரின் ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு நினைவினை மீட்டுத்தராமலில்லை. ஒன்பது வயதுவரை மட்டுமே எனக்கு எனது மண்ணோடு உறவு கொண்டாட முடிந்தது அதன் பின்னர் எனது மண்ணை நான் இழந்து மீண்டும் பெறும் போது நான் இளந்தாரியிகி இருந்தேன். அப்போதும் கூட அந்த நினைவுகள் விட்டுவைக்கிறதா? இதையெல்லாம் படிக்கும் போது பலர் மீது எனக்குக் கோபம் வருகின்றது. எனது குழந்தைப் பருவத்தைப் பலவந்தமாகப் பறித்து ரம்புட்டான் சோலைக்குள் மதில்களுக்குள்ளால் எறிந்துவிட்டமைக்காக. 

சோலைக்கிளிக்கு பொன்னால் புழுதி பறக்கவிட்ட பூமி அழியாத் தடங்கள் என்று நிறையவே அள்ளிச் சொரிந்து விட்டிருக்கிறது. இப்போது முகநூலில் வாக்கியங்களில் உட்காரும் கவிதை, பறவை போட்ட பழம் என்று நமது ரசனைக்குத் தீனி போடும் மகாரசனைப் பெக்டரி ஒன்றை அவர் நடாத்தி வருகின்றார். சின்னச் சின்னப் பத்திகள். குச்சிமிட்டாய் சாப்பிடுவது போலவும், மஸ்கெட்டியான் பழம் பறித்தும் பொறுக்கியும் நடு நாக்கில் வைத்து முரசோடு இணைத்து நசுக்கி சுவைத்துச் சாப்பிடுவது போலவும். 

இந்தக் கிளி இன்னும் நிறையப் பழங்கள் போட வேண்டும் கவலை மறந்து சிரிக்கவேணும்.


1 comment:

  1. அத்தனையும் உண்மை ஏனென்றால் நான் சோலைக்கிழியின் பால்ய நண்பன் என்றரீதியில் ,ஒத்துக்கொள்ளவேண்டிஇருக்கிறது.எம்சீயே.பரீத்

    ReplyDelete