Sunday, July 28, 2013

01. ஹராங்குட்டி சிறுகதைத் தொகுப்பு மூன்று பார்வைகள் - பார்வை 01 (அஷ்ரஃப் சிஹாப்தீன்)


ஹராங்குட்டி சிறுகதைத் தொகுப்பு - இரத்தம் தோய்ந்த கதைகள்!

முஸ்தீன் ஒரு வித்தியாசமான போக்காளி. பதினைந்து பேர் குழுமியிருந்து கலந்துரையாடும் போது ஒரு விடயத்தில் பதினான்கு பேரும் ஒரு கருத்தோடு ஒன்றிப் போக அந்த விடயத்தை வேறொரு கோணத்தில்  ஒருவன் சிந்திப்பான் என்றால் அவன்தான் முஸ்தீன்.

யாரையும் எதிர்பார்த்திராத வேளையில் எனது வீட்டு அழைப்பு மணி ஒலிக்கும். திறந்தால் முஸ்தீன் நிற்பான். எங்காவது ஓர் அவசரத்தில் வீதியில் சென்று கொண்டிருப்போம். அங்கே ஒரு முனையில் அவன் நின்று கொண்டிருப்பான். இந்த வேளைகளிலெல்லாம் அவனது கையில் ஒரு ஃபைல் அல்லது ஒரு பை இருக்கும். அவ்வப்போது எந்த முயற்சியில் அவன் இயங்கிக் கொண்டிருக்கிறானோ அந்த முயற்சி பற்றிய தஸ்தாவேஜூகள் அந்த ஃபைலுக்குள் அல்லது பைக்குள் இருக்கும்.

நான் கடமை புரிந்த அமைச்சுக் காரியாலயத்துக்கு அடிக்கடி வருவான். தனது முயற்சிகள் அரை மணி நேரம் அமர்ந்து பேசுவான். அவனது பேச்சினூடாகப் பல வினாக்களைப் போடுவான். நமது பதிலில் பலதை வெட்டிப் பேசுவான். சிலதை ஏற்றுக் கொள்ளுவான். 

ஒரு முறை அவன் நடத்தும் நிகழ்வு ஒன்றுக்கு என்னை அழைப்பதற்கு எனது காரியாலயத்துக்கு வந்திருந்தான். பேசிக் கொண்டிருந்து விட்டு ஓர் அழைப்பிதழை நீட்டினான். ஒரு நிகழ்வுக்கான சம்பிரதாயபூர்வமான எந்த முறைமையையும் பின்பற்றி அச்சிடப்படாத அழைப்பிதழாக அது இருந்தது. அந்த நிகழ்வுக்குப் பிரதம அதிதி மத்திய கிழக்கு நாடு ஒன்றின் இலங்கையில் உள்ள தூதுவர். இவனுக்கு மிகவும் பழக்கமான நபராக அவர் இருந்தார் என்று நினைக்கிறேன். என்னதான் அறிமுகம், நட்பு இருந்தாலும் அவர் ஒரு நாட்டின் தூதுவரல்லவா? அவரது பெயருக்கு முன்னால் 'அதிமேன்மை தங்கிய' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இவனது அழைப்பிதழில் அவரது பெயர் மட்டும் மொட்டையாக அச்சாகியிருந்தது. இதைப் பார்த்ததும் எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது. கடும் கோபத்தை அடக்கிக் கொண்டு அவனைப் பார்த்தேன். 'கட்டாயம் வந்துடுங்க!' என்று வெகு சாதாரணமாகச் சொல்லி விட்டுக் கிளம்பி விட்டான்.

பாடசாலையில் படிக்கும் போது எப்படி இருந்தான் என்று தெரியவில்லை. ஆனால் கல்லூரிப் படிப்புக்கு வந்ததிலிருந்து நீண்ட காலமாக மற்றவர்கள் பார்வையில் 'கிறுக்குப் புடிச்ச பய'லாகத்தான் தெரிந்தான், திரிந்தான். அவனைப் பற்றிக் கேள்விப்படும் போது 'ஏதோ தேவையற்ற வேலை செய்து திரிகிறான்' என்ற மனப்பதிவு ஏற்படும் விதமாகவே தகவல்கள் கிடைக்கும். தன்னைப் பற்றித் தனது எதிர்காலம் பற்றிக் கவலைப்படாமல் ஒரு 'ஹத்து மத்து'க்கு அடங்காமல் திரிகிறானே என்ற கவலை எனக்கும் ஏற்பட்டதுண்டு. ஆனால் தன் போக்கை, செயற்பாட்டையிட்டு மற்றவர்கள் என்ன கருதுகிறார்கள் என்பதையிட்டுச் சிறிதளவேனும் அவன் கவனத்தில் கொண்டதாக எனக்குத் தெரியவில்லை.

ஒரு நாள் முஸ்தீன் தொலைபேசியில் தொடர்பு கொண்டான். 'ஒரு சினிமா எடுத்திருக்கிறேன். கொழும்பில் எங்காவது ஓரிடத்தில் பல்திறப்பட்டவர்களையும் அழைத்து இதைத் திரையிட விரும்புகிறேன். நீங்கள் எனக்கு எந்த வகையில் உதவி செய்வீர்கள்?' என்று கேட்டான். அது வரை தனிப்பட்ட முறையில் எந்த உதவிகளையும் என்னிடம் கேட்டிராத முஸ்தீனிடம் 'நான் இடத்தை ஏற்பாடு செய்து தருகிறேன். மற்றைய ஏற்பாடுகளைப் பாருங்கள்' என்றேன். அதன் படி ஏறக்குறைய அறுபதுக்கு மேற்பட்ட பல்வேறு துறைசார்ந்தவர்களுக்கு மத்தியில் அதைத் திரையிட்டோம். அவனது முயற்சிக்காக அவனைப் பலரும் பாராட்டினார்கள்.

முஸ்தீனைப் பற்றிப் பலரும் பலவிதமாகப் பேசிய போதும் எனக்கு அவன் மீது ஓர் அபிமானம் இருந்தது. அவனுக்குச் சமூகத்தின் மீதிருந்த பேரபிமானமே அதற்கான காரணமாகும். படித்துப் பட்டம் பெற்றுப் பெரும் அரச பதவிகளில் அமர்ந்திருந்து 'தனக்கு மட்டுமே எல்லாம் புரியும்' என்ற எண்ணத்தோடு சமூகத்தொடர்புகள் ஏதுமின்றி, சமூகத்தின் மீது எந்த அக்கறையும் இன்றி வெறுமனே முந்நூறு ரூபாய் வவுச்சருக்காக அல்லாடும் படிப்பாளிகளை விடச் சமூகப் பற்றுக் கொண்ட முஸ்தீன் மீது எனக்கு அபிமானம் இருந்தது நியாயம்தானே. 

2

'தமிழ்மிரர்' இணையத்தளத்தில் 'குப்பை வாளி' என்று ஒரு கதை இடம்பெற்றிருந்தது. முஸ்தீன் எழுதிய கதை என்றறிந்ததும் படிக்கத் தொடங்கினேன். அந்தக் கதையில் முஸ்தீனின் எழுத்து நடையும் அந்தக் கதை பேசும் விடயமும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. உண்மையில் அந்தக் கதை மூலம் முஸ்தீன் வேறு ஒரு கட்டத்துக்கு நகர்ந்து விட்டான் என்ற மகிழ்ச்சி பரவியது. பொலிஸ் தடுப்புக்குள் இருக்கும் ஒருவன் அங்கிருந்த குப்பைவாளியைப் பற்றியா சிந்திப்பான்? அதைப் பற்றிச் சிந்திக்கவும் அதைக் குறியீடாக்கிச் சில விடயங்களைச் சொல்லவும் தேர்ச்சி மட்மல்ல, மிகுந்த திறமையும் வேண்டும். அது முஸ்தீனுக்குக் கைகூடி வந்திருக்கிறது.

இந்தத் தொகுதி ஒரு மதிப்புரைக்காக என்னிடம் வரும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. கதைகள் ஒவ்வொன்றாகப் படிக்க ஆரம்பித்த போதுதான் எனக்குப் புரிந்தது, முஸ்தீன் எனது கையில் ஒரு வெடிகுண்டைத் தந்து விட்டுப் போயிருப்பது. 

இந்தத் தொகுதியில் பன்னிரண்டு கதைகள் அடங்கியிருக்கின்றன. இவற்றில் முதலாவது கதையாக இடம்பெற்றுள்ள 'குப்பை வாளி', கடைசிக் கதையாக உள்ள 'மனச்சாட்சி கொன்று' ஆகிய இரண்டு கதைகளும் ஒரு வகைக்குள் அடங்கும். இந்தத் தொகுப்பின் தலைப்பாக அமையும் கதையான 'ஹராங்குட்டி' மற்றொரு வகை. அந்தக் கதையுடன் ஏனைய ஒன்பது கதைகளும் சேர்த்துப் பத்து வெடிகுண்டுகள். ஆம். அப்படித்தான் என்னால் சொல்ல முடியும்!

ஒரு போர் முடிந்த பிறகு பல ஆயிரம் உண்மைகளும் பல ஆயிரம் கதைகளும் வெளிவர ஆரம்பிக்கும். அவை  போர் முடிந்ததிலிருந்தும் போர் முடிந்து சில காலங்களுக்குப் பின்னரும் சில வேளை பல ஆண்டுகள் கழித்தும் வெளிவரலாம். கால, தேச, வர்த்தமானங்கள், கதையை வெளியே கொண்டு வருவோரின் உள நிலை என்பவற்றைப் பொறுத்து அவை அமையும். அவ்வாறான கதைகள் நமது பிரமைகளைக் கலைத்து விடும். அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த தகவல்களைத் தெட்டத் தெளிவாகச் சொல்லிப் போகும். மக்கள் நினைவில் பதிந்திருக்கும் படிமங்களின் சாயத்தைக் கரைத்து நம்பமுடியாத ஒன்றை ஏற்க வேண்டிய அவசியத்தை உருவாக்கும்.

இரண்டாம் உலகப்போரின் கதைகள் இன்னும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதற்குப் பிறகு வௌ;வேறு நாடுகளுக்கிடையில் நடைபெற்ற போர்களில் இடம்பெற்ற நம்பமுடியாத சேதிகளும் தகவல்களும்; வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்தப் போர்களிலெல்லாம் வெளிவராமல் போன செய்திகளும் தகவல்களும் கதைகளும் ஆயிரமாயிரம்.

இரு தேசங்களுக்குள் இடம்பெறும் போரை விட பல்வேறு இனங்கள் வாழும் ஒரு தேசத்துக்குள் நடைபெறும் போர்தான் மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்பதை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தும் நூல்தான் 'ஹராங்குட்டி!' 

இலங்கைக்குள் நடந்த போரில் மூன்று இனங்கள் (பொது மக்கள்), வௌ;வேறு கருத்துப் போக்குகளுடன்  இயங்கிய போராட்டக் குழுகள், அரசு, அரச எதிரணிகள், அயல்நாடுகள், சர்வதேசம் - இவர்களுக்குள் நடக்கும் கயிறிழுப்பும் காய் நகர்த்தலும் சாதாரண பொது மகன் நினைத்தே பார்த்திராத விடயங்களை நிகழ்த்திச் சென்றிருப்பது பின்னால் வெளிவருகிறது. பிரபல பத்திரிகையாளரான, கொலையுண்ட, 'தராக்கி' என்றழைக்கப்பட்ட சிவராமின் கரங்கள் கொலைக் கறையுடையவை என்ற தகவலை அண்மையில் கவிஞர் நட்சத்திரன் செவ்விந்தியன் குறிப்பிட்டிருந்ததானது இவ்வாறான தகவல்களுக்கு உதாரணம்.

நடந்து முடிந்தவற்றின் ஒரு பகுதியைப் பற்றி அதிகம் எழுதாமல் புரிந்து கொள்வதற்கு சி.சிவசேகரம் அவர்களின் கவிதை ஒன்று நமக்குப் போதுமானது.

துரோகி எனத் தீர்த்து
முன்னொருநாட் சுட்டவெடி
சுட்டவனைச் சுட்டது.
சுடக் கண்டவனைச் சுட்டது.
சுடுமாறு ஆணை
இட்டவனைச் சுட்டது.
குற்றஞ் சாட்டியவனை
வழக்குரைத்தவனைச்
சாட்சி சொன்னவனைத்
தீர்ப்பு வழங்கியவனைச் சுட்டது.
தீர்ப்பை ஏற்றவனைச் சுட்டது.
சும்மா இருந்தவனையுஞ் 
சுட்டது.

இதற்கப்பால் சொந்தக் குரோதங்களைச் சாதித்துக் கொள்ளவும் ஒருவரின் சொத்தை அபகரித்துக் கொள்ளவும் எப்போதோ நடந்த ஒரு சிறிய விடயத்துக்காப் பழியெடுக்க 'துரோகி' என்றோ 'பயங்கரவாதி' என்றோ காட்டிக் கொடுத்தல் அல்லது சட்டத்தின் பிடியில் சிக்க வைத்தல் அல்லது கொலை செய்தல் என்று பல் விடயங்கள் நடந்தேறியிருக்கின்றன. இவற்றில் இதுவரை வெளிவந்த தகவல்கள், சம்பவங்கள், கதைகள் மிகவும் சொற்பமானவை. வெளிவந்திராதவற்றைத் தெரிந்திருந்தவர்களில் பலர் இன்னொரு கபடத் தனத்துக்கு அகப்பட்டு, கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது ஒரு குண்டுத் தாக்குதலில், துப்பாக்கிப் பிரயோகத்தில் - இடையில் அகப்பட்டு உயிரிழந்திருக்கலாம். 

இவற்றிலிருந்ததெல்லாம் தப்பிப் பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் அற்பத் தொகையினர் சம்பவங்களையும் தகவல்களையும் வெளியே கொண்டு வருவதற்குச் சந்தர்ப்பங்களை எதிர்நோக்கியிருப்பார்கள். புலிகளின் வதைமுகாமில் ஒன்;றரை வருடங்கள் துன்புற்ற தனது கதையை தேனீ இணையத்தளத்தில் மணியம் என்பவர் இப்போது எழுதி வருகிறார். அவரது நேரடி அனுபவங்களைச் சொல்லி வரும் அவர் கொள்ளை, கொலைகளோடு சம்பந்தப்பட்ட பலர் இப்போது மேற்கத்தேய நாடுகளில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடுகிறார். 'மனமாற்றம்' என்ற கதையில் வரும் ராபியைச் சுட்டுக் கொன்ற இருவரில் ஒருவர் மற்றொரு துப்பாக்கிச் சூட்டில் இறந்ததையும் மற்றையவரான சாந்தன் என்பவர் இப்போது கனடாவில் வசித்து வருவதாகவும் முஸ்தீன் குறிப்பிடுகிறார். 

ஏதோ ஒரு வகையிலான ஆபத்திலிருந்தும், தாம் செய்த பாவங்களின் காரணமாக தம்மைத் துரத்தும் மரணத்திலிருந்தும் தம்மைக் காத்துக் கொள்வதற்காக நாட்டை விட்டு வெளியேறியோர் அதிகம். சொகுசு வாழ்க்கைக்காகத் தமது வாழ்வும் ஆபத்திலிருப்பதாகக் காட்டிக் கொண்டு சென்றவர்களும் இருக்கவே செய்கிறார்கள். சிலர் எவ்வாறு அங்கு சென்றார்கள் என்பதை எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்காது. ஆனால் அங்கே போயிருந்து இவர்கள் மனிதாபிமானம், சமூக அக்கறை பற்றிப் பேசுவதையும் எழுதுவதையும் ஒரு நாவலாகவே எழுலாம்.

எதிர்வரும் காலங்களில் நாம் பல புதிய கதைகளை அறிய, நம்ப முடியாத விடயங்களைக் கேள்விப்படத் தயாராக இருக்க வேண்டும். 

3

முஸ்தீன் எழுதியிருக்கும் இக்கதைகள் வெளிப்படுத்தும் நபர்களும் அவர்கள் சார்ந்த தகவல்களும் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குபவை. முஸ்தீன் இப்பணியை மேற்கொள்ளவில்லையென்றால் வேறு யாரும் இவற்றை வெளியே கொண்டு வந்திருப்பதற்கு வாய்ப்பில்லை என்றே நான் கருதுகிறேன். முஸ்தீனின் செயற்பாட்டுத் தளம் யாரும் புக நினையாதது. எனவே இந்தக் கதைத் தொகுதி கடந்த காலத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் வாழ்ந்த மக்களின் அவல வாழ்வின் வெட்டு முகமாகத் தோற்றமளிக்கிறது.

நான் ஏற்கனவே சொன்ன ஒன்பது கதைகளுள் வரும் பாத்திரங்களானகொமைனி முஸ்தஃபா, பேயன், புகாரி, கேர்ணல் லத்தீப், சமது நானா, அஸீஸ், ராபி ஆகியோரின் பக்கங்களையும் அவர்கள் சார்ந்த ஏனைய பக்கங்களையும் நமக்கு முன்னே முஸ்தீன் விரித்து வைக்கிறார். எமது பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களான கொமைனி முஸ்தஃபா, பேயன், புகாரி, கேர்ணல் லத்தீப் ஆகியோரில் புகாரியை மட்டுமே எனக்கு நன்கு தெரியும். கொமைனி முஸ்ஃபாவைப் பற்றித் தெரிந்திருந்த போதும் அவரது தோற்றம் ஞாபகத்தில் இல்லை. ஒரு முறை ஊரில் நின்ற வேளை ஜூம்ஆத் தொழுகைக்காக மீராவோடைப் பள்ளிவாசலுக்குச் சென்ற போது ஒரு எஸ்.எல்.ஆர். துப்பாக்கியுடன் (அத்துப்பாக்கி அந்த ரகத்தைச் சேர்ந்தது என்று பக்கத்தில் நின்றவர்கள் பேசிக் கொண்டனர்) தொழுகைக்கு வந்திருந்தார். சிறுவயதில் நேருக்கு நேர் சந்தித்தால் சிரித்துக் கதைக்கும் புகாரி அங்கு யாரையும் கண்டு கொள்ளவில்லை. புகாரியையும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

இவர்களுள் சமூகத்தைக் காப்பது என்று செயல்படத் தொடங்கி வேறு வலைகளுக்குள் சிக்கிக் கொண்டவர்கள், துப்பாக்கியை ஏந்தினால் தாமும் மக்களின் அவதானிப்புக்குள்ளாகுவோம் என்ற 'ஹீரோயிஸ'  எண்ணம் கொண்டு இயக்கங்களில் இணைந்த விடலைகள் அநேகம். பயன்படுத்தப்பட்ட பிறகு கொலை செய்யப்பட்டவர்கள், எதிர்த்து நிற்கிறார்கள் என்று தமிழ் விடுதலை இயக்கங்களால் கொல்லப்பட்டவர்கள் என்று - போராட்டத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் இயங்கியோரால்  இவர்களை உயிரிழக்க நேர்ந்திருக்கிறது. அதேவேளை, துப்பாக்கிகளைக் கையில் எடுத்துக் கொண்ட பிறகு இவர்கள் மக்களின் மீது நாட்டாமை செய்யத் தொடங்கிய காரணத்தால்  மக்களால் வெறுக்கப்பட்டார்கள். 

பல இயக்கங்கள் விடுதலைக்காக இயங்கிய காலகட்டம், போராட்டம் உக்கிரமடைந்த காலகட்டம், இந்திய அமைதிப்படை வந்த கால கட்டம், சமாதான ஒப்பந்தக் கால கட்டம் என்று முக்கியமான காலப்பகுதிகளில் கிழக்கு முஸ்லிம் பிராந்தியங்களின் நிலைமையை இக் கதைநாயகர்களூடாகவும் கதைகளினூடாகவும் முஸ்தீன் நம்மைத் தரிசிக்க வைத்திருப்பது இந்த நூலின் முக்கியமான ஒரு சிறப்பம்சமாகும். 

தான் பெற்றுக் கொண்ட தகவல்களின் அடிப்படையில் குறிப்பாக உரியவர்களின் வாக்கு மூலங்களின் அடிப்படையில் இக்கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. கதை நாயகர்களது தகவல்களைக் கொண்டு அல்லது வாக்கு மூலங்களைக் கொண்டு அவர்களது செயற்பாடுகளை விபரித்ததோடு பெரும்பாலும் முஸ்தீன் நின்று கொள்கிறார். அவற்றைத் தனது தராசில் ஏற்றி நிறை, குறை சொல்லாமல், அவர் விலகி நின்றபடி அவற்றை மக்கள் சமூகத்தின் முன் சமர்த்திருப்பது இத்தொகுதியின் இன்னொரு சிறப்பு.

தமிழ் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தவர்கள், முஸ்லிம் சமூகத்தை விமர்சித்தவர்கள், போராட்டக் குழுக்களின் தகவல்கள் அடிப்படையில் ஊடகங்களில் எழுதியவர்கள், ஊகங்களின் அடிப்படையில் கருத்துத் தெரிவித்தவர்கள், போராட்டத்தை விமர்சித்தவர்கள் என்று சகலருக்கும் இக்கதைகள் பேசும் விடயங்கள் பற்றியதும் கதை நாயகர்கள் பற்றியதுமான தமது மனப் பதிவுகளில் சிறியதாகவோ பெரிய அளவிலோ மாற்றமொன்றை இத்தொகுதி ஏற்படுத்த இடமுண்டு. 

எல்லாவற்றையும் விட, என்றாவது மற்றொரு போராட்டம் முளை கொண்டால் தான் ஏன் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கக் கூடாது என்பதற்கும் யாரை நம்புவது யாரை நம்பக் கூடாது என்பதற்கும் இந்தப் போராட்டத்தில் நான் யார்? எதற்காக ஈடுபடுகிறேன்? என்ற கேள்வியற்று இறங்காமலிருப்பதற்கும் துப்பாக்கிகளைத் தூக்கி விட்டால் மட்டும் போராளியாகவோ 'ஹீரோ' வாகவோ மாறிவிட முடியாது என்பதற்கும் ஓர் இளைஞனுக்கு இத்தொகுதி வழி காட்டுவதாக நான் நம்புகிறேன்.

இத்தொகுதியின் தலைப்புக்குரிய கதைதான் 'ஹராங்குட்டி.' இது குறித்து எழுதுவதை விடப் படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்வது நல்லது. கேடுகெட்ட நடத்தையில் ஈடுபடும் சாமியார்கள், பாதிரியார்கள், பிக்குகள் வரிசையில் ஆலிம்கள் என்று அறியப்பட்ட ஒரு சிலரது கெட்ட நடத்தை பற்றி இக் கதை பேசுகிறது.  

4

வழமையான சிறுகதைப் பாணிக் கதைகளாக இதற்குள் அடங்கியிருக்கும் எல்லாக் கதைகளும் இமையவில்லை. சிறுகதைகளின் வடிவம் மாற்றத்துக்குள்ளாகியிருக்கிறது. இங்கே சொல்லப்படும் விடயங்கள் தம்மை வெளிப்படுத்த முஸ்தீன் ஊடாக எடுத்துக் கொண்ட வடிவத்தில் இவை வந்திருக்கின்றன.  அப்படித்தான் நான் நினைக்கிறேன்.

நிறைய எழுதியிருக்கிறார் முஸ்தீன். இரத்தமும் சதையும் அச்சமும் புதைகுழிகளுமாகக் கொத்துக் கொத்தாக  எழுத்துக்கள். இந்த எழுத்துக்கள் என்னில் ஓர் அழிச்சாட்டியம் நடத்துவதற்கு என் மேனியில் ஏறி நடந்து திரிவதாக ஒரு பயமும் ஏற்பட்டது. எனவே ஒவ்வொரு கதையையும் நில நாட்கள் விட்டுத்தான் படிக்க வேண்டியிருந்தது.

ஒரு குறிப்பிட்ட விடயத்தை கதையில் ஓர் இடத்தில் மட்டும் அல்லாது வேறு வார்த்தைகளில் வேறு இடத்திலும் பேசுவதாகத் தெரிகிறது. இது வாசகனை அலுப்புக்குள்ளாக்கக் கூடியது. தகவல்களைக் கொண்டு பிதுங்கும் இத்தொகுதியின் கதைகளை எழுதும் போது இந்த விடுபாடுகள் மன்னிப்புக்குரியவை தான். 

அஷ்ரஃப் சிஹாப்தீன்

No comments:

Post a Comment