உணர்வுகளையெல்லாம் ஒன்றுதிரட்டி
அனைத்தையும் மறக்க நினைக்கிறேன்
காலம் புன்னகைத்துக் கொள்கிறது
முடியாததை முயற்சிப்பதாக
ஆதரவுக்காய் ஒரு குரலேனும் ஒலிக்காது
ஏகாந்தமாய்க் கைவிடப்பட்ட பொழுதில்
மனசாட்சி சாந்தம் கொண்டிருந்தது
உணர்வுகளேதுமற்று மரத்துப் போய்...
இழைக்கப்பட்ட துரோகத்தை நினைக்கையில்
உடல் வெப்பம் உச்சமடைந்து வியர்த்து
வெறி கொண்டு செயற்படத் தூண்டிற்று மனது
புத்தி அமைதி தெளிக்க பொறுமை வியாபித்தது
இறையச்சம் கட்டிப் போட
கண்கள் கலங்கி சிரம் தாழ்ந்தது
இறைவா நீ
தண்டிக்கிறாயா?
சோதிக்கிறாயா?
இயல்பாக உதிரும் வார்த்தைகள்
ஆண்டவன் மீது அனைத்தும் சாற்றி
ஏதுமற்று வெறுமையாகிப்போகையில்
அனைத்தையும் மறக்க நினைக்கிறேன்
அப்போதும் முடியாமற்றான் போகிறது.
தண்டனையாயின் அனுபவிக்கவும்
சோதனையாயின் பொறுமையுடன்
எதிர்கொண்டு வெல்லவும்
வலுகொள்கிறது மனது.
உறுதியாக எனக்குத் தெரியும்
நான் வீழ்ந்துவிடவில்லையென்று
அறியாத உலகம் பழிக்கும்
எல்லாம் உயிர் கொண்டெழுகையில்
எல்லாமும் மாறும்
நானும்
வெறிகொண்ட மூர்க்கமான யுத்தவீரனாய்
No comments:
Post a Comment