Friday, April 20, 2012

மௌனப் போரும் புன்னகை ஆயுதமும்





அமைதியாகத் தொடரும் ஆக்கிரமிப்பு
அமாவாசையில் தீட்டப்பட்ட திட்டம்,
அது அப்படித்தான் இப்போதைக்கு ஜொலிக்கிறது.
சூரியஸ்தமனத்தில் வீரியம் பெறும்
கொள்கை கோட்பாடுகள்,
விடியலோடு மௌனம் போர்த்திக் கொள்ளும்.

ஒரு பாம்பின் நகர்வு,
பதித்திருப்பது ஒற்றைத்தடம்,
சத்தமில்லாத நகர்வுகளுக்கு பின்னால்
பொதிந்திருக்கும் அர்த்தங்கள்
அவ்வளவு எளிதில் புலப்படாது,
எஞ்சியிருக்கும் தடயங்கள்தான் சான்று.
புயலுக்கு முன்னரும் பின்னரும்
நிலவுகின்ற அமைதி சொல்லும் செய்தி
மிகவும் கனதியான அர்த்தம் பொதிந்தது.

தேசப்படத்தில்
எல்லைகளுக்கு இடப்படும்
புதிய கோடுகள்,
தசாப்தங்கள் கடந்து
அடிமையாக்கும் கை விலங்குகள்,


மௌனமான மாயப் பரப்பினுள்
சிதைக்கப்பட்ட பாரம்பரியங்கள்
எஞ்சியிருப்பதும் ஆச்சரியம்தான்,
துப்பாக்கிகள் தூங்கிக்கொள்ள
பேனைகள் விழித்துக் கொண்டன!
சத்தமிட்டு அடக்கிவிடுவது
அராஜகமாகி விடுவதனால்தான்,
புன்னகைத்து அடிமையாக்கும் வினோதம்
அன்றாடங்களில் சங்கமித்து விடுகிறது.

ஒருவருக்கும் தெரியாத புதிய பாஷை
ஏற்படுத்தப் போகும் ஈர்ப்பும்,
உளமாற அள்ளித் தெளிக்கப்படும் அன்பும்,
ஆறத் தழுவியபடி சொரியப்படும் புன்னகையும்,
கண்ணீரைத் துடைத்து விடும் கரங்களும்,
ஆறுதலுக்காய் வீசப்படும் சொற்களும்,
பெயர்த்தெடுக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டவை.

ஒரு மாலைப் பொழுதிற்குள்
ஈர்த்தெடுத்த மனங்களை,
போலியாய் புனையப்பட்ட
பாசக் கயிற்றினால்
எப்போதைக்கும் கட்டிப்போட்டிட வேண்டாம்.

'நாளைகள் உனக்கில்லை
இன்றுமட்டுமே உனக்கானது'
யாரோ சொன்ன தத்துவம் உண்மைதான்!
இன்றைய புன்னகைகள்
நாளைய உனது விரோதிகள்,
இன்று உனக்குச் சாவு
நாளை உனக்கு அழிவு,
இன்றுகளும் நாளைகளும்
இப்படித்தான் செய்தி சொல்கின்றன.

எல்லா யதார்த்தங்களையும் தாண்டி
இன்று அடிமையாக்கப்பட்ட போதில்,
நேற்றைய அந்த விரோதி
நாளை உரத்துச் சொல்வான்,
'விரைவில் எல்லோருக்கும் விடுதலை' என்று
அப்போதும் கூட
மானங்கெட்ட கரங்கள்,
மரத்துப் போன மனது அமைதிகாக்க
கண்ணீரைத் துடைக்க நீளும்.

புல்லரித்துப் போய் புதிரோடு
பார்த்துக் கொண்டிருப்பதை தவிர,
தெரிவுகள் ஒன்றுமே இல்லாத
சூனியப் பகுதியொன்றில்,
மௌனமான அந்தப் போர் தொடரும்
புன்னகை ஆயுதங்கள் சுமந்தபடி.

No comments:

Post a Comment