Saturday, December 6, 2014

யமுனா ராஜேந்திரன் பக்கமுள்ள நியாயம்

யமுனா ராஜேந்திரன் பக்கமுள்ள நியாயம்
- முஸ்டீன்-

கடந்த சில வாரங்களாக யமுனா ராஜேந்திரன் ஓர் எழுத்தாளராக வெளிப்படுத்தும் கோபமும் அதில் புதைந்திருக்கும் நியாயமும் இக் குறிப்பை எழுதத் தூண்டின.

படைப்புலகம் சார்ந்தும் பதிப்புலகம் பற்றியும்  யமுனா ராஜேந்திரன் வெளிப்படுத்தியிருக்கும் அம்சங்கள் நியாயமான சிந்தனையுள்ள ரோசமுள்ள யாரையும் ஒரு கணம்  நின்று சிந்திக்கத்தூண்டும். அன்மைக்காலமாக இலங்கை பதிப்புச்சூழலின் பலவீனங்கள் குறித்து சில  உரைகளிலும் சில குறிப்புக்களிலும் எனது மன ஆதங்கத்தினை வெளி;படுத்தியிருந்தேன். யமுனா ராஜேந்திரனின் குறிப்புக்களைப்டிக்கின்ற பொழுது ஒரு படைப்பாளனாக நான் சஞ்சலப்பட்டுப் போகிறேன். கொஞ்ச நாட்களுக்கு முன்னர் கவிஞர் சோலைக்கிளியோடு இது பற்றிய சில விடயங்களைப் பேசிக்கொண்டதாக ஞாபகம். 'அவர்கள் எல்லாம் யாவாரிகள் நஸ்டம் வராமல் பார்த்துக்கொள்வார்கள்.நம்மையெல்லாம் முதலீடாக பயன்படுத்தியும் கொள்வார்கள்.' என்ற கருத்துப்பட அவர் சொன்னதில் பொதிந்திருந்த மெல்லிய ஆதங்கம் யமுனா ராஜேந்திரனின் கட்டுரைகளில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஒரு திரைப்படத்தை அறிவுபூர்வமாக ரசிப்பதற்கு  எனக்கு கற்றுத்தந்தது யமுனா ராஜேந்திரனின் எழுத்துக்கள் தான். அவரின் நூலினை தந்து எனக்கு அறிமுகப்படுத்தியவர் சரிநிகர் எம் கே.எம். ஷகீப் அவர்கள் தான்.அந்த வகையில் எனது ரசனையில் பெருந்திருப்பம் ஒன்றினைத் தந்து விசாலித்த பார்வையை  விதைத்து என்னைச் செதுக்கிய ஆசானுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதிக்கு எதிராக எனது கண்டனக் குரலையும் பதிவு செய்வதில் மன நிறைவடைகிறேன்.

யமுனா மிக வேகமாக வாசிப்பவர்.2010ஆம் ஆண்டு கீற்று இணையதளத்தின் 6 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் இலங்கை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அரசியல் இன கலாசார ஒடுக்குமுறைகள் தொடர்பாக நான் ஆற்றிய உரை மிகுந்த சலசலப்பை உண்டு பண்ணியதன் பின்னர் சரியாகப் புரிந்துகொள்ளப்டாத அந்த உரையின் விரிவாக்கத்தினையும் உள்ளடக்கியதாக கீற்று மிக நீண்டதொரு நேர்காணலைச் செய்து பதிவேற்றி  பதினைந்தாவது நிமிடத்தில் தோழர் ரமேசின் அழைபேசியிற்கு தொடர்பினை ஏற்படுத்தியவர் யமுனா ராஜேந்திரன் தான். அதுதான் அவரோடு உறவாடிய முதல் சந்தர்ப்பம். அவரின் பேச்சில் இருந்த நிதானமும் அமைதியும் அவர்மீது மதிப்பைக் கூட்டின. இத்தனைக்கும் எமக்குள் எந்த அறிமுகமோ தொடர்போகிடையாது. ஆயினும் நியாயமான எதையும் அவர் விட்டுவிலகுவதில்லை என்பதற்கு நேர்காணல் குறித்து அவர் சொன்ன கருத்துக்கள் சான்றாக இருந்தது. அப்படிப்பட்ட ஒருவர் மிகவும் மனம் நொந்து போகும் வகையில் பதிப்பாளர்கள் நடந்து கொள்வது மிகவும் வேதனைக்குரியது.

ஏனையவர்களின் எழுத்துக்களைத்தான் விற்றுப் பிழைக்க முடியும் என்ற நிலையில் முழுமையான வியாபாரிகளாக அவர்கள் பரிமாணம்பெறுவது படைப்பாளிக்கு நிகழும் கொடுமைதான். தவிர்க்க ஏதேனும் மாற்றுவழிகள் உண்டா என்பதையும் ஆராய வேண்டி இருக்கின்றது. எல்லாமே வியாபாரமாகிப் போன பின்னர் இலாபத்தைப் பற்றி மட்டுமே கனவு காண முடியும். அதைத்தான் அவர்கள் செய்கின்றார்.

யமுனாவின் தரப்பு நியாயத்தைப் புரிந்து கொண்டு அவருக்காகக் குரல் கொடுக்க வேண்டியது நேர்மையான எழுத்தாளர்களின் கடமை என்றுதான் எனக்குத் தோன்றுகின்றது. ஒருமாபியாவாக காப்ரேட் சிந்தனையோடு பதிப்பகங்களும் பதிப்பாளர்களும் மாறிக் கொண்டிருப்பது ஆரோக்கியமானதல்ல. அனைவரும் கவனம் செலுத்தவேண்டிய ஒரு விடயமாகும்.
பின்னனொரு நாளில் ஆன்மாக்கள் ஊமையாகி
பணம் அனைத்தையும் பேசிக் கொண்டும் தீர்மானித்துக் கொண்டுமிருக்கும்.

No comments:

Post a Comment