Sunday, August 5, 2012

இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகள்

இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகள்

கொழும்புத் தமிழ்ச் சங்க வளாகம், உலகத் தமிழிலக்கிய மாநாடு 2012 ஜூன்
இருவர் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள் அதன் சாரம்சம்

சோலைக் கிளியைத் தெரியுமா?

கருத்து 01: சோலைக் கிளிக்கு பெரிய நெனப்பு, அவரு யாரையும் மதிக்கிறல்ல, சரியான கர்வம் பிடிச்சவன், யாரோடையும் சரியாப் பழகமாட்டாரே, அந்தாள்ர முகத்தில சிரிப்பே இரிக்காது, அவர்ர கவிதைகள யாரும் கணக்கெடுக்கிறதில்ல, பெரிசா யாரோடையும் கதைக்கயும் மாட்டான் மனிசன், என்னமோ உலகத்துல அவரு மட்டும்தான் கவித எழுதுறெண்டு கர்வம்,

அஷ்ரஃப் சிஹாப்தீனைத் தெரியுமா?

கருத்து 02: ஆள் புகழுக்கு அலஞ்சி திரியிறாரு, எல்லாத்தையும் அவரு மட்டும்தான் செய்ற மாதரி நெனப்பு, அவர்தான் பெரியாள் எண்டு நெனச்சிக்கிட்டுத்தான் ஓடித் திரிகிறாரு, ஒரு ஆளுக்கிட்ட எவ்வளவு பிரயோசனம் எடுக்க ஏலுமோ அவ்வளவுக்கு பிரயோசனம் எடுத்துட்டு கழற்றிவிட்டிருவான் பாவி, சரியான வில்லங்கம் புடிச்ச ஆள், எல்லாம் புகழுக்குத்தான்.

கருத்து 03: சோiலைக் கிளிக்கு அஷ்ரஃப் சிஹாப்தீனப் பிடிக்காது, அஷ்ரஃப் சிஹாப்தீனுக்கு சோiலைக் கிளியைப் பிடிக்காது

அவர்கள் இருவரினதும் உரையாடல் தொடர்ந்து கொண்டிருக்கும் போது அஷ்ரஃப் சிஹாப்தீன் வருகிறார், கொஞ்சம் கூட சலனமில்லாத முகத்துடன் வாங்க அஷ்ரஃப் இன்டைக்கி ஆய்வரங்கம் சுப்பர், நல்லா இருந்திச்சு, மற்றதெல்லாம் அவ்வளவு வேலெயில்ல உங்கட எண்டா கலக்கிச்சி... என்றார்கள்

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது, அது வரையும்  நிகழ்ந்த எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும், சங்கத்தின் முன்றலில் சோலைக் கிளி மனைவியுடன் அமர்ந்திருந்தார், அவர் மீது எனக்கு அளவில்லாத பிரியம், அது அவருடைய அடக்கம், ஆளுமை வீச்சு என்பவற்றால் வந்தது, மட்டக்களப்பு மீறாவோடையில் இலை துளிர்த்துக் குயில் கூவும் என்ற எஸ்.நளீமின் இரண்டாவது கவிதைப் புத்தக வெளியீட்டு விழாவுக்கு சிறப்புப் பேச்சாளராக வந்திருந்தார், அப்போதுதான் முதன் முதலாக நான் சோலைக் கிளியைப் பார்த்தேன், அவர் பேச்சைக் கேட்டேன், அன்றிலிருந்து அவர் மீது ஒரு காதல், ஏற்கனவே என்.ஆத்மா சோலைக்கிளியைப் பற்றி நிறையவே சொல்லியிருந்தார், அந்த ஈர்ப்பும் அன்று பல மடங்கு மெருகேறியிருந்தது, ஏற்கனவே சோலைக்கிளியின் கவிதைகளுடன் நல்ல பரிச்சயமிருந்தது,  சோலைக் கிளியுடன் பேச வேண்டும் என்று விரும்பினேன், ஆனாலும் அன்று அது நிறைவேறவில்லை, மிகவும் தூரத்தில் இருந்தபடி நான் புரிந்து கொண்ட சோலைக்கிளி பற்றிய விம்பம் இதுதான்,

உலகத் தமிழிலக்கிய மாநாடு 2012 ஜூன் அன்று கொழும்புத் தமிழ்ச்சங்க வளாகத்தின் அலுவலக முன்றலில் அமர்ந்து கொண்டிருந்தார், அப்போதுதான் அவருடன் தாரளமாகப் பேசக் கிடைத்தது, நிறையப் பேசினோம், பல வருடங்கள் பழகிய பாசப்பிணைப்புடன் பேசினோம், பழகுவதற்கு அவ்வளவு இனிமையான மனிதர், முகத்தாட்சினைக்காக முதுகு சொறியாத சிறந்த குணம், எனக்கு அது பிடித்திருந்தது, பிடித்ததைப் பிடித்தது என்பார் பிடிக்கவில்லையாயின் அதையும் அப்படியே சொல்லி விடுவார் அதனால் தான் அவரை நிறையப் பேருக்குப் பிடிக்கவில்லை, என். ஆத்மாவும் அப்படித்தான் முகஸ்துதி இல்லாத கறாரான மனிதர், முகத்திலடித்தாற் போல எதையும் தெளிவாகச் சொல்லி விடுவார் வாய்ப்புக்காகவும் புகழுக்காகவும் யாரையும் எதிர்பார்க்காத உறுதியான மனிதர் அதனால்தான் அவரையும் நிறையப் பேருக்குப் பிடிக்காமல் போகிறது, இருவரும் ஒத்த குணம் அதனால்தான் ஒத்துப் போகிறது, எப்போதுமே பரஸ்பரம் முதுகு சொறிய மாட்டார்கள், ஆனால் தூய்மையான பிணைப்பும் காரசாரமான கருத்தாடலும் இருக்கும்.

சோலைக்கிளிக்கு வசப்பட்ட கவிதை மொழி பலருக்கு வசப்படவில்லை அதனால் அவரை இழிவாகச் சொல்வதும் தரக்குறைவாகக் கதைப்பதும் தீர்வாகிடுமா? அவரவர்க்கு முடிந்ததைத்தான் அவரவர் செய்யலாம், ஒரு முறை ஒராபி பாஷா கிறியேஷன் ஸ்தாபகர் அஷ்ஷெய்ஹ் அல்தாப் பாருக் ரூபவாஹினி பெருநாள் நிகழ்ச்சிக்காக ஒரு சிறுவர் பாடல் எழுதித் தரும்படி என்னிடம் கேட்டார், அவர் எனக்குத் தம்பி மாதிரி மிகவும் நேசத்திற்குறியவர். நானும் ரொம்பச் சிரமப்பட்டு ஒரு பாடலை எழுதிக் கொடுத்தேன், எனது பார்வையில் அது சிறப்பான பாடல், ஏனெனில் மிகவும் கஷ்டப்பட்டு சொல்லெடுத்;து எழுதியது, ஆனால் அதை ஆத்மா பார்த்து விட்டு இது தரமில்லை என்றார், அதுவும் எனது முன்னிலையிலேயே சொன்னார், அதற்காக அவர்மீது துளியளவும் கோபம் வரவில்லை, தரமான படைப்பைப் படைக்க நான் இன்னும் தயாராக வேண்டும் என்று மட்டும் தோன்றியது,   சோலைக்கிளியிடம் மெட்டையும் கொடுத்து எழுதச் சொன்ன போது ஒரே நாளில் பாடல் வந்தது, வரிகள் நச்சென்று விழுந்திருந்தன, பாடல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மனதாரப் பூரிப்படைந்தேன், ஆத்மாவின் மீது மதிப்பும் கூடியது, சோலைக்கிளியின்  மீது ஈர்ப்பும் கூடியது, அந்தப் பாடல்தான் ரூபவாஹினியில் ஒளிபரப்பானது, நான் கஸ்டப்பட்டு எழுதினேன் என்பதற்காக தரமற்றது தரமாகவுமில்லை, சோலைக்கிளி இலகுவாக எழுதினார் என்பதற்காக தரமானது தரமிழக்கவுமில்லை, அவர் தனது மண்ணிலிருந்து சொற்களை அறுவடை செய்கிறார், அதனால் மண்வாசனை கமலும் தரமான படைப்புக்களைப் படைக்க அவரால் முடிகிறது, இறுக்கமான வீச்சில் வரிகள் விழுகின்றன, அவற்றைப் புரிந்து கொள்ள வாசகன் தன்னைக் கொஞ்சம் மேம்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது,

சோலைக்கிளியிடமிருந்து அப்போது தற்காலிகமாக விடைபெற்றுக் கொண்டு வெளியேறும் போதுதான் அந்த இருவரினதும் உரையாடலைச் செவியேற்கவேண்டி வந்தது, அப்போதுதான் அஷ்ரஃப் சிஹாப்தீன் ஆய்வரங்கு முடித்து விட்டு வந்தார், அவர்கள் இருவரும்  ஆய்வரங்குப் பக்கமே போகவில்லை ஆனால் அவரைக் கண்டதும் ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளினார்கள், அவர்களிடமும் வழமையான புன்னகையை உதிர்த்துவிட்டு அவர் விடைபெற்றுக் கொண்ட போது, நான் அஷ்ரஃப் சிஹாப்தீனைச் சந்தித்தேன்
'அஷ்ரஃப் நாநா கொஞ்சம் பேசனும்'
'எதுவா இருந்தாலும் வேகமாச் சொல்லுங்க அவசரமாப் போகனும்' என்றார்
'சோலைக்கிளியத் தெரியுமா?'
'தெரியும் ஆனா இதுவரையும் சந்திச்சதில்ல'
'அப்படீன்னா கொஞ்சம் வாங்க, உங்களுக்குச் சோலைக்கிளியப்பிடிக்காதாமே உண்மையா?'
'சீச்சி அப்படியெல்லாம் ஒண்டுமில்ல யாரு சொன்னா'
'அப்ப வாங்க ஒரு ரெண்டு நிமிசம் அவரோட கதைச்சிப் பாருங்க'
'ஆள் வந்திரிக்காரா'
அவரைக் கையோடு அழைத்துக் கொண்டு சென்றேன்,
எனக்குத் தெரிந்த அஷ்ரஃப் நாநா கடினமான உழைப்பாளி, தேர்ந்த வாசிப்பாளன், அவ்வளவு எளிதில் எதையும் நல்லா இருக்கென்று சொல்ல மாட்டார், அவ்வளவு வித்தியாசமான ரசனை மட்டம், அதனால்தான் அவர் நிறையப் பேருக்குப் பிரச்சினை, எல்லாவற்றையும் அங்கீகரிக்க வேண்டும் நல்லா இருக்கென்று வாயாரப் புகழ வேண்டும் இது பலரது எதிர்பார்ப்பு, அது நடக்காத போது அவன் ஆள் சரியில்ல என்பது குத்தப்படும் ஒரே முத்திரை, இந்தியாவின், அடையாளம் பதிப்பகத்தின் ஊடாக ஓட்டமாவடி அறபாத்தின் புத்தகம் வெளிவந்த தருனத்தில் அஷ்ரஃப் சிஹாப்தீன் தினகரன் வாரமஞ்சரியில் ஒரு பத்தி எழுதிக் கொண்டிருந்ததார், அப்போது அறபாத்தின் தொகுதியைப் பற்றி அஷ்ரஃப் சிஹாப்தீன் தனது பத்தியில் எழுதவில்லையென்பதற்காக முகைதீன் மௌலவி வாய்விட்டுச் சொன்ன விடயம், சஹாப்தீன் மௌலவிட மகனப் போல பொறாம புடிச்சவன நானெண்டா உலகத்துல காணல்ல, ஏனென்று கேட்டபோது, அறபாத்துட புத்தகம் இந்தியாவில இருந்து வெளிவந்திருக்கு அதப் பத்தி எழுதாம வேற என்னத்தையோவெல்லாம் பத்தி எழுதியிருக்கான் ஆசாமி, அறபாத்துட மேல்ல அவ்வளவு பொறாம அவருக்கு, இது போல பல விடயங்களை அவர் சொல்லிக்கொண்டே போகும் போது, அஷ்ரஃப் சிஹாப்தீன் அப்படியில்லை என்பதை நிருபிக்க வேண்டியிருந்தது, அறபாத்தின் புத்தகத்தை பிராந்தியத்தில் ஒரு குட்டி வெளியீடாக வைத்து முக்கியமான சகலரையும் அழைத்து வித்தியாசமான முறையில் அதைச் செய்ய பல ஏற்பாடுகளைச் செய்தும் கடைசி வரையும் அது முடியாமற் போயிற்று, அறபாத்தின் மீது யார்யாரெல்லாம் பொறாமை என்று கதை அடிபடுகிறதோ அவர்கள் அனைவரையும் அழைத்து அன்றோடு முகவரியில்லாத கட்டமைக்கப்பட்ட அந்த முரண்பாட்டுக் கோட்டையைத் தகர்த்தெறிந்து ஒரு சுமுகமான நிலையைத் தோற்றுவிக்க வேண்டும் என்பதுதான் எனது எதிர்பார்ப்பாக இருந்தது, அந்நிகழ்வு நடந்தேறியிருந்தால் அறபாத்திற்கும் புது உட்;சாகம் கிடைத்திருக்கும், தவறான புரிதல்களும் விடுபட்டுப் போயிருக்கும், ஆனால் ஓட்டமாவடி அறபாத் அஷ்ரஃப் சிஹாப்தீன் மீது சேறு பூசியோ அல்லது அஷ்ரஃப் சிஹாப்தீன் ஓட்டமாவடி அறபாத் மீது சேறு பூசியோ நடந்து கொள்ள மாட்டார்கள்,   ஒரு அரசியல் அலையின் பின்னர்தான் நிறையவே விமர்சித்து பூதாகர விம்பத்தால் வடிவமைக்கப்பட்டார் அஷ்ரஃப் சிஹாப்தீன் என்பது எனக்குத் தெரரியும்,

அஷ்ரஃப் சிஹாப்தீனின் ஸெய்த்தூன் கவிதை மிகவும் பிரபலமானது, அக்கவிதை பலஸ்தீனக்கவிதைகளின் சாயலில் பிரதிபண்ணப்பட்டது என்றவகையில் அறபாத் எழுதினார், புலிகளின் காலத்தில் எந்தவொரு முஸ்லிம் பெண்மணியும் கற்பழிக்கப்படவில்லை, எனவே அது பலஸ்தீனக் கவிதையின் கொப்பிதான் என்று அறபாத் பகிரங்கமாவே எழுதி வாதிட்டார், மற்றபடி கதவு மூலையில் நின்று கொண்டு காதோடு காது வைத்து அறபாத் கிசுகிசுக்கவில்லை, அதனால் அறபாத்தின் தேடல் ஆய்வு வாசிப்பு ஆகியவற்றின் சாரம் அது, ஆனால் உண்மையில் விடுதலைப் புலிகளால் முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள் என்ற ஆதாரங்கள் அறபாத்திற்குக் கிடைத்திருந்தால் நிச்சயம் அவர் தனது கருத்துப் போக்கில் மாற்றம் கொண்டு வந்திருப்பார், விடுதலைப் புலிகளால் பல பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள் என்பதற்கான நிறைய ஆதாரங்கள் பிற்பட்ட நாட்களில் எனக்குக் கிடைத்தன ஆனால் அவை அறபாத்திற்குக் கிடைக்கவில்லை அதனால்தான் அவ்வளவு காரமாக எழுத வேண்டியிருந்திருக்கிறது, அது இலக்கிய உலகில் வாஸ்தவமானது, இப்போது கூட அறபாத்திற்கு அந்த உண்மை தெரிய வரும் போது மானசீகமாக அவர் அஷ்ரஃப் சிஹாப்தீனிடம் நிச்சயம் மன்னிப்புக் கேட்டபார், அது அவரது தயாள குணம், இடையில் மூட்டி விடுவதற்கும் சேறு பூசுவதற்கும் ஒரு கூட்டம் அலைகிறது, அவர்களுக்குத் தேவை முரண்பாடான சூழல் அவ்வளவுதான், இந்த அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதுதான் எஸ்.நளீமிற்கும் அஷ்ரஃப் சிஹாப்தீனுக்கும் இடையேயான முரண்பாடும், அஷ்ஷெய்ஹ் ஏபிஎம் இத்ரீஸிற்கும் அஷ்ரஃப் சிஹாப்தீனுக்குமிடையேயான முரண்பாடும், அவை பலராலும் பலவடிவங்களிலும் ஊதிப் பெருப்பிக்கப்படுகின்றன, இருவர் சேர்ந்து இதைக் கட்டமைத்து  முடித்துவிடுவர், யாத்ரா இதழின் பின்னணியில் இருந்து வடிவமைக்கப்பட்ட முரண் பல பொல்லாப்புகளைச் சப்தமின்றி உருவாக்கிவிட்டு வேடிக்கை பார்க்கிறது, இவற்றை நீக்குவதற்குப் பலர் முயற்சிப்பதே இல்லை, அதைக் கூர்மைப்படுத்த மட்டும் நிறையப் பேர் அலைகிறார்கள், பிடித்தவர்களென்றால் முதுகு சொரிவது பிடிக்கவில்லையென்றால் மலினப்படுத்துவது, இது போலவே எஸ்எல்எம் ஹனீபாவும், இன்றும் பலராலும் பலவாறு தூற்றப்படுபவர் அது குறித்து நிறைய உண்மையான விடயங்களை மற்றுமொரு குறிப்பில் பகிர்ந்து கொள்கின்றேன், எஸ்எல்எம் யார்? எப்படிப்பட்டவர்? என்பது இன்னும் பலருக்குத் தெளிவில்லாதவை.
உண்மைகளை உரக்கச் சொல்லுவதற்குப் பலருக்கு தைரியமில்லை, ஒருவரை முகத்தில் புகழ்வதும் அவர் இல்லாதவிடத்து இகழ்வதும் கேவலப்படுத்துவதும் அரங்கேறிக் கொண்டேயிருக்கின்றன,
 
அச்சு முறை, வடிவமைப்பு, எழுத்துருத் தேர்வு, வர்ணத் தேர்வு என்பவற்றில் அதிக அக்கறை எடுத்துக் கொள்பவர் அஷ்ரஃப் சிஹாப்தீன், அவருடைய ரசனை இந்த விசயத்தில் மிகவும் மேம்பட்டது, அதனாலும் நிறையப் பேரின் காட்டமான விமர்சனம் அவர் மீது பதிந்தது, என்பேன், இப்போதுதான் பலர் இணையதளத்தில் குதியாட்டம் போடுகின்றனர், இவர்களெல்லாம் கணனியைத் தொடுவதற்குப் பல வருடங்களுக்கு முன்னரே அதில் கரை கண்டவர், அது குறித்து எப்போதேனும் அவர் அலட்டிக் கொண்டது கிடையாது,

இப்போது அஷ்ரஃப் சிஹாப்தீனும் சோலைக் கிளியும் சந்தித்துக் கொள்ளப் போகிறார்கள்,
சோலைக்கிளியிடம் கேட்டேன்
'அஷ்ரஃப் சிஹாப்தீனைத் தெரியுமா?'
'இல்லை, நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன் ஆனால் இதுவரைக் கண்டதில்லை'
'இவர்தான் அஷ்ரஃப் சிஹாப்தீன்'
சோலைக்கிளியும் அஷ்ரஃப் சிஹாப்தீனும் முகமன் கூறிக் கொண்டார்கள், கைலாகு கொடுத்துக் கொண்டார்கள், அஷ்ரஃப் சிஹாப்தீன் கதிரையொன்றை இழுத்துப் போட்டுக் கொண்டு கிளியுடன் கதைக்கத் தொடங்கினார், அவசரமாகச் செல்ல வெளிக்கிட்டவர் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அங்கு கழித்தார், இருவரும் பல விடயங்கள் குறித்து தெளிவாகப் பேசிக் கொண்டார்கள், நான் அவர்களின் உரையாடலை எதுவுமே பேசாமல் இரண்டு பேராசான்கள் ஒன்றினைந்து நிகழ்த்தும் விரிவுரையைச் செவிமடுப்பது போலப் பார்த்துக் கொண்டிருந்தேன், மிகவும் சுவாரஸ்யமான அந்த உரையாடலுக்குத் தடை போட்டது பசி, அப்போதும் அவர்கள் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல் கதைத்துக் கொண்டிருந்தார்கள், எவ்வளவு நேரம் வயிறு தாக்குப் பிடிக்கும்? பின்னர்  இருவரும் விடை பெற்றுக் கொண்டனர், பின்னர்தான் மூத்த இலக்கியவாதி மானா மகீன் வந்தார் இன்னுமொரு சுவாரஷ்யம் நிகழ்ந்தது, அதையும் பிறகு பார்ப்போம்,

அப்போது ஏற்கனவே சோலைக் கிளியையும் அஷ்ரஃப் சிஹாப்தீனையும் விமர்சித்துக் கொண்டிருந்த கனவான்களைக் கடந்து சோலைக் கிளி செல்லும் போது அவர்களுக்கு இவர்தான் சோலைக் கிளி என்று அறிமுகப்படுத்தினேன், அப்போது போட்டார்கள் ஒரு போடு இருவருமே இணைந்து,

'ஆஹ் நீங்களா சோலைக் கிளி இது வரையும் கண்டதில்ல நீங்க பங்ஷனுக்கெல்லாம் வாரதில்ல அதான் தெரியாது, அற்புதாமன கவிதைகள் எழுதுறீங்க நல்லா இருக்கு, காத்திரமான கவிதைகள், விழா வெச்சா கட்டாயம் எங்களையும் கூப்பிடுங்க'

எனக்கு வானமே இடிந்து தலையில் விழுந்தாற்போலாயிற்று, எப்படியெல்லாம் இந்த மனிதர்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள், இப்படிப்பட்டவர்களிடமிருந்து எப்படிச் சத்திய எழுத்துக்களை எதிர்பார்க்க முடியும்,
ஆனாலும் அவர்கள்தான் இப்போது இலக்கிய ஜாம்பவான்கள்

தொடரும்...

11 comments:

 1. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கு . இன்னும் எழுதுங்கள் .
  ஹஸீர்

  ReplyDelete
 2. மிகவும் அருமை .வாசிப்பிற்கான ஆவல் மேலோங்கியது இருந்தது.தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 3. அருமையாக இருந்தது முஸ்டீன் , நீங்கள் கதை சொல்லும் லாவகம் இன்னும் ஆர்வத்தை தூண்டுகிறது தொடருங்கள் உண்மைகளை ....

  ReplyDelete
 4. நன்றி பர்வீன், உண்மைகள் எப்போதேனும் வெளிவரும், அதை யாராலும் முடக்க முடியாது,

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நன்றி, சொல்ல வேண்டியவைகளைச் சொல்லித்தானே ஆக வேண்டும்,

   Delete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. நன்றாக இருக்கின்றது,தொடர்ந்து எழுதுங்கள்

  ReplyDelete