ஓர் அஸ்தமனத்திற்குப் பின்னால்
பெரிதாய்ச் சொல்லி விடுவதற்கு ஒன்றுமில்லை என் மனதில் தோன்றிய வைகளுக்கு ஏதோவோர் விதத்தில் எழுத்து வடிவம் கொடுத்திருக்கிறேன். அவை கவிதைகள் என்று நான் நினைத்துக்கொள்கின்றேன். அப்படி நினைத் துக் கொண்டமைக்காக தமிழ் இலக்கிய உலகிடம் மன்னிப்புக் கோருகின்றேன். எனது தேடலின் அறுவடைகளாய்ச் சேமிக்கப்பட்ட யதார்த்தங்களின் பின்புலத்தி;ல் நின்றுதான் எழுதியிருக்கின்றேன். எழுத வேண்டும் என்று தோன்றியது. காலம் எழுத வைத்தது.
தீவிரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவசர காலச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் இருந்த அனுபவம் எனக்கும் இருக்கிறது. அதுவும் யுத்தம் முடிவுற்ற தருவாயில். பல மாதங்கள் சிறைச்சாலையில், அந்தக் காலப் பிரிவில் செதுக்கப்பட்டவைதான் இந்த எழுத்துக்கள். சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லி விட்டேன் என்று தான் நினைக்கின்றேன். எதைப் பற்றிய அச்சமும் எனக்கில்லை.
பேனையும் ஒரு போர்க்கருவிதான். அதி உன்னத பயன்பாட்டை அடையவும் பெரும் போரை வழிநடாத்தவும் எனக்கான ஆயுதமாக அதையே தேர்ந்தெடுத்துக்கொள்கின்றேன். சாகத் துணிந்த பின்னரான எனது தெரிவு இதுவொன்றுதான். சிறைச்சாலையில் நான் அனுபவித்த வேதனைகள் சொல்லி மாறாது. அவற்றை அவ்வளவு எளிதில் எளித்தில் வடித்திடவும் முடியாது. எதுவாயினும் எனக்கு நிறைய எழுதுவதற்கு அவகாசம் கிடைத்தது. அதனால் நஷ்டமேதுமில்லை.
பேசிப்பேசி காலங்கடத்தும் மனிதர்களிலிருந்து கொஞ்சமேனும் வித்தியாசமாக இருக்க முயற்சித்ததன் விளைவுகள் மிகவும் அதீதமானது. எனக்கான செயற்பாட்டுத் தளத்தை நானே தீர்மானிக்கின்றேன். அதுபோலத்தான் எனது எழுத்துக்களும். எல்லாக் கட்டமைப்புகளையும் கடந்து அது என்னுள்ளால் பயணிப்பதை எனது உணர்வுகளை ஊடறுத்து வெளிவருபவை. சமரசம் செய்து கொள்ள மறுப்பவை. எனது எழுத்துக்களின் தரம் பற்றி நான் கவலைப்படவில்லை. அது காலம் செய்யும் பணியாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லாத ஒன்று. நடந்து கொண்டிருக்கும் பல்லாயிரம் போர்களில் புன்னகை பேராயுதமாய் பயன்படுத்தப்படும் தருணங்களில் எனது தொகுதி வெளிவருகிறது. போர் எனின் இழப்பு நிச்சயம். புன்னகை ஆயுதம் அது எதையெல்லாம் சிதைக்குமோ தெரியவில்லை. பொருத்திருந்து காண்போம். கணிப்போம்.
இரண்டாவது மரணமும் மூன்றாம் சாமத்துப் பேயும் என்பது எனது முதலாவது கவிதைத் தொகுதி. அது இன்னும் வெளிவரல்லை. அவை 2002 கள் தொடக்கம் 2007 வரை எழுதப்பட்டவை. போர்க்காலக் கவிதைகள். இறைவன் நாடினால் அதுவும் வெளிவரும். எனது முதல் தொகுதியை வெளியிடும் பணிகள் தாமதித்துக்கொண்டே போயின. அந்தத் தாமதத்தினை இந்தத் தொகுதி சந்தர்ப்பத்திற்கேற்ப பயன்படுத்திக்கொள்கிறது.
நான் எழுதிய முதல் கவிதை பிரசுரமாகவில்லை. ஆனால் இரண்டாவது கவிதை 1998 இல் தினகரனில் பிரசுரமானது. எம்.எச்.எம்.ஷம்ஸ் முதலாவது கவிதையை தினகரன் புதுப்புனல் பகுதியில் பிரசுரிக்க முடியாமைக்காக வருத்தம் தெரிவித்தார். அன்றோடு பத்திரிகைக்கு எழுதுவதை விட்;டுவிட்டேன். எப்போதும் இரண்டுக்குத்தான் மதிப்பு போல எனது வாழ்வில். பின்னர் பத்திரிகையில் ஒரு கவிதை அதுவும் கடைசியாக 'எங்கள் தேசம்' அதிலும் கடைசி வரியை நீக்கிவிட்டு பிரசுரித்தார்கள். 2003 இல் வெளியானது அதனால் பொல்லாத கோபம் வந்தது. பின்னர் பத்திரிகைகளுக்கு எழுதும் ஆர்வம் அறவே இல்லாததால் எழுதியவைகள் யாரையும் சென்றடையவில்லை
.
அணிந்துரை, ஆசியுரை, வாழ்த்துரை மதிப்புரை என்று எதற்குப் பின்னாலும் என்னால் அலையமுடியவில்லை. ஒரு தொகுதியை அவர்களிடம் கொடுத்துவிட்டு எழுதி விட்டீர்களா? எப்போது கிடைக்கும்? என்று விசாரித்து விசாரித்து காத்திருந்து சலிப்படையும் அனுபவம் எனக்கு வேண்டாம் என்பதால் இன்னும் அவர்களின் உரைகள் கிடைக்கவில்லை. அவைகளை அவர்கள் தரும்போது தரட்டும். அடுத்த பதிப்பிலேனும் சேர்த்துக்கொள்வோம்.
சிலர் குறிப்பெழுது பயந்து போனார்கள். பின்னும் ஏன் அதற்காக காத்திருப்பானேன்.
ஆனால் நிச்சயம் இத்தொகுதி குறித்து கருத்துக்களை முழுமையாக பதிவு செய்யும் எண்ணம் இருக்கிறது. இறைவன் துணையில் அதுவும் ஒரு நாள் கைகூடும். அப்போது தைரியமானதும், உண்மையான பற்றுள்ளதுமான உயிர்ப்பான உணர்வுள்ளவர்களுமான மனிதர்கள் பற்றி அறிந்து கொள்ள ஒரு சின்ன விளக்கக் குறிப்பாக இருக்கும். காத்திருந்து காத்திருந்து காலத்தை வீணடித்து வெளிவராமல் தாமதித்துப் போன 'இரண்டாவது மரணமும், 'மூன்றாவது சாமத்துப் போர்' தொகுதியின் கவலைக்கிடம் இதற்கும் வரவேண்டாம் என்பதால் மொட்டையாக வெளிவருகிறது என்று வைத்துக்கொள்வோம்.
ஒரு நீண்ட குறிப்போடு மீண்டும் சந்திப்போம்
அன்புடன்
முஸ்டீன்
29/04/2012