கெட்ட ஆவிகள்
(இரத்தக் குளியல் குறுநாவலுக்கான பின்னிணைப்பாக எழுதியது)
எல்லா வெளியீடுகளின் பின்னாலும் ஒரு பின்னிணைப்பு இருக்கும், அது கொஞ்சம் பெரிதாகவும் இருக்கும், ஆனால் இதில் மிகவும் சிறிதாகவும் அதே நேரம் கனதிமிக்கதாகவும் ஒரு குறிப்பு
இது ஒரு கொலைகாரனின் குரல் இப்படித் தொடங்கினால் வடிவாக இருக்கும், அது பொருத்தமானதா இல்லையா என்பதையெல்லாம் தாண்டி இப்போதைக்கு அது மிகவும் பொருத்தமானது, அப்படியாகவே நான் இருந்துவிட்டுப் போகிறேன், அதுவும் சும்மா கிடையாது புலிச் சின்னத்துடன் குத்தப்பட்ட முத்திரை, எனக்குப்பிடித்த மூன்று பேருக்கு இந்தப்புத்தகத்தை சமர்ப்பணம் செய்திருக்கிறேன்,
மேஜர் நிஷாம் துவான் முத்தலிப் இலங்கை இராணுவத்தின் தேர்ந்த புலனாய்வு வீரன் மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்டு 2005 மே 31 காலை 7.50 மணிக்கு நாரஹேன்பிட்ட பொல்ஹென்கொடச் சந்தியில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டவர், அவர் எதிர்பாராத வண்ணம் மரணம் அவரை அனைத்துக் கொண்டது, அடுத்தது லெப்டினன் ஜெனரல் பாரமி குலதுங்கா 2006 ஜூன் 26 கொழும்பு பன்னிப்பிட்டிய இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் வைத்துத் தற்கொலைத் தாக்குதல் மூலம் கொடூரமாகக் கொல்லப்பட்டவர், அடுத்தது பிரிகேடியர் சு.ப.தமிழ்ச் செல்வன் 02 நவம்பர் 2007 கிளிநொச்சி சமாதான செயலகத்தில் வைத்து விமானக் குண்டு வீச்சில் பல முக்கிய தளபதிகளுடன் கொல்லப்பட்டவர், இவர்கள் மூவர் குறித்தும் நிறைய எழுதுவதற்கு என்னிடம் விடயங்கள் இருக்கின்றன, ஆனால் இப்போதைக்கு நான் எதையும் எழுதப் போவதில்லை, காலம் கணியட்டும் அவகாசமும் அமைதியான மனோ நிலையும் கிடைக்கட்டும் அப்போது இறைவன் நாடினால் நிச்சயம் எழுதுவேன், இந்த மூன்று மரணங்களும் எனது மனதைக் கலங்க வைத்தவை, யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்ட காலத்தில் வௌ;வேறு நிகழ்வுகளில் இவர்கள் மூவரையும் நேரடியாகச் சந்தித்த இனிமையான அனுபவம்தான் அவர்கள் மரணித்த பின்னரும் கூட அவர்களை நினைவுகூரச் செய்கிறது, எந்தப் பின்புலமும் இல்லாது அரும்பு மீசை துளிர் விடத் தொடங்கிய காலத்து நினைவுகள் அவை, மனதுக்கு இனிமையானதும் சுமையானதுமான நினைவுகளை மீட்டிப் பார்ப்பதிலும், நினைவு கூர்வதிலும் ஓர் அலாதி இன்பம் இருக்கத்தான் செய்கிறது,
இந்தக்குறிப்புகள் நிச்சயம் பலருக்கு ஆச்சரியத்தைத் தரக் கூடும், காரணம் இரு வேறுபட்ட போர்முனைகளில் நின்று களமாடியவர்களை எப்படி ஒருவனால் ஒரே தளத்தில் எடை போட முடிகிறது? என்பதுதான் அது. அத்துடன் இப்போது விடுதலைப்புலிகள் அமைப்பைப் பற்றிப் பேசவே முடியாத ஒரு சூழலில், பயங்கரவாதியாகிப் போன சு.ப. தமிழ்ச் செல்வனை நினைவு கூர்வது அல்லது அவர் பற்றிப் பேசுவது, அல்லது நினைவுகளை மீட்டிப்பார்ப்பது, பலருக்கு அச்சம் தரும் நிகழ்வுகள் ஆனால் எனக்கு மிகவும் அற்பமானவை, பலர் பேசுவதற்குத் தயங்கும் விடயங்கள் எனக்குப் பசுமையான நினைவுகள், எதுவாயினும் சரி எனது மனதில் பட்டதை நான் சொல்லிவிட வேண்டும் என்று கருதுவதால் இவையெல்லாம் பெரிய காரியமே கிடையாது,
எனது தந்தையும் எதிர்பாராத விதமாகக் கொல்லப்பட்டவர்தான், அதுவும் கொடூரமாக, உயிரோடு கொஞ்சம் கொஞ்சமாக சித்திரவதை அனுபவித்து இறந்தார், 1985 எப்ரல் 29 வாழைச்சேனை மூக்கர்கல் பகுதியில் வைத்து எனது தந்தை செய்ஹ் இஸ்மாயீல் மற்றும் போஸ்ட் மாஸ்டர் முகைதீன் அப்துல் காதர் உட்பட எட்டுப் பேர் விடுதலை வேண்டிப் போராடிய ஆயுதக் குழுவொன்றினால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார்கள் அவர்கள் ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு சாக்குப் பை கொடுக்கப்பட்டு அதில் மணல் நிரப்பப் பணிக்கப்பட்டார்கள், பின்னர் அந்த மணல் மூடையுடன் இறுகக் கட்டி அனைவரையும் உயிரோடு ஆற்றில் அமிழ்த்திக் கொன்றார்கள், அவர்கள் யாருமே மரணத்தை அவ்வளவு சடுதியாக எதிர்பார்த்திருக்க மாட்டார்கள், எனது தந்தை இவ்வாறு கொல்லப்படும் போது அவருக்கு வயது 25 தான், இந்த இழப்பை யாரால்? எப்படி? ஈடு செய்ய முடியும்! அது இன்னமும் ஈடு செய்யப்படவில்லை, அது ஈடு செய்ய முடியாததுதான். இதையெல்லாம் உணரத் தொடங்கிய போது மனதில் ஆழமாகப் பதியத் தொடங்கிய ஒன்றுதான் 'அநியாயம் எந்தவடிவில் இருந்தாலும் எதிர்த்தல்' என்பது.
மரணங்கள் இப்படித்தான் பல விதத்திலும் பாதிப்பை ஏதோவோர் வடிவத்தில் ஏற்படுத்தித்தான் செல்லும், மரணங்கள் ஒவ்வொருவர்க்கும் வௌ;வேறுவிதமான உணர்வுகளை ஏற்படுத்திச் செல்லும். லெப்டினன் ஜெனரல் பாரமி குலதுங்க கொல்லப்பட்டபோது விடுதலைப்புலிகளும் விடுதலைப் புலி ஆதரவுத் தமிழ் மக்களும் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்தார்கள், இராணுவத் தரப்பு கோபத்தின் உச்சத்திலும் அரச தரப்பும் மக்களும் சோகத்தின் உச்சத்திலும் இருந்தார்கள், லெப்டினன் ஜெனரல் பாரமி குலதுங்கவின் உறவுகள் இழப்பின் அதிஉச்ச வேதனையை அனுபவித்தார்கள், அதே நேரம் திருமணம் முடிக்காத பிரம்மச்சாரியான லெப்டினன் ஜெனரல் பாரமி குலதுங்காவின் குடும்பத்தார்க்கு பிரதமர் ரட்ண சிறி விக்ரம நாயக்க அனுதாபச் செய்தி அனுப்பி இருந்தார், அதில் மனைவி குழந்தைகளின் ஆழ்ந்த துயரில் தாமும் பங்கெடுத்துக் கொள்வதாக ஆச்சரியமான செய்தி வாசிக்கப்பட்டது, அது போல இன்னும் கொஞ்சப் பேருக்கு அது வெறும் செய்தி வேறு சிலருக்கு அது ஒரு விசயமே கிடையாது, ஒவ்வொரு மரணமும் அப்படித்தான், வௌ;வேறு தளங்களில் வௌ;வேறு விதமான இழப்பின் ரேகைகளைப் பதிவு செய்து செல்லும்,
இப்படித்தான் எனது வாழ்க்கையிலும் ஒரு மரணம் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தியது, அது எனது தந்தையின் மரணம், இளமைக்காலத்துக் கனவுகள் அனைத்தையும் களவாடிக் கொண்டு எனது பிறந்த மண்ணைவிட்டும் தூக்கியெறிந்தது, ஓர் அநாதை நிலையத்தில் சிறைப்படுத்தியது, எனது எல்லாவற்றையும் அத்தோடு இழந்தேன், மண்வாசனை கமழும் எனது மொழியை, பாஷையை, சொற்களை இழந்தது இன்று வரையும் ஈடுசெய்யப்படாத ஒன்றுதான், அம்மரணம் எனது தாய்மடியைப் பிடுங்கிக் கொண்டது, அன்பை அரவணைப்பை, பாசத்தை, என்று எல்லாவற்றினையும்..., அதன் தாக்கம் நீண்டு கொண்டே சென்றது, அந்தப் பாரிய பள்ளத்திலிருந்து சிறுகச் சிறுக ஏறினேன், ஒவ்வொரு பிடியாக மிகவும் கஷ்டப்பட்டுப் பிடித்தேன், ஒவ்வொரு அடியாக மிக நிதானமாக வைத்தேன், சிகரம் தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் போது, எனது கண்களுக்குள் அதன் பிரகாசம் பாயும் போது, இரு கைகளையும் உயர்த்தியபடி மேலே மேலே குதித்து மகிழ்ச்சிப் பிரவாகத்தில் நான் சாதித்துவிட்டதாய் பயங்கரமாகச் சப்தமிட்டுச் சொல்லி பெருமிதத்துடன் இறைவனின் முன் மண்டியிட்டுச் சிரந்தாழ்த்தி அவன் நாமத்தைக் கண்ணீரோடு உச்சரிக்கும் கனவுகளோடு அடுத்த பிடியைப் பிடிப்பதற்கிடையில், இறுதி அடியை எடுத்து வைப்பதற்கிடையில் ஒரு சின்னஞ்சிறு இடைவெளியில் ஒர் எலும்புக் கூடு எனது வாழ்க்கையில் ருத்ர தாண்டவம் ஆடி ஓய்ந்தது, மீண்டுமோர் அதளபாதாளத்தில் தூக்கியெறிந்தது.
அந்த எலும்புக் கூடு எனது அனைத்துத் தளங்களிலும் அதி உச்ச அதிர்வுகளைப் பதிவு செய்தது, கல்வி, பொருளாதாரம், ஆன்மீகம், குடும்பம், சமூகத் தளம், நட்பு வட்டாரம், உறவுகள் என்று எல்லாப் பக்கங்களிலும்... எதையும் விட்டு வைக்கவில்லை, லாபமும் நட்டமும் ஒருங்கே விளைந்தன, ஒரு கொள்ளைக்காரனாக, ஒரு கொலைகாரனாக, அது என்னை வேடிக்கை பார்த்தது, எனது உண்மையான பக்கங்களைப் போலியாக்கியது எனது ஒட்டுமொத்த உழைப்பையும் கேள்விக்குள்ளாக்கியது, எனது முயற்சிகள் அனைத்தையும் கேலிக்குள்ளாக்கியது, என்னைச் சூழ இருந்த பல்லாயிரம் மனிதர்களையும் விட்டு ஒற்றையாய்த் தூக்கியெறிந்தது, என்னைச் சூழ இருந்த பல போலிகளை எனக்கு அடையாளங்காட்டியது, உண்மையாகவே என்னை நேசிப்பவர்களை அது எனக்குத் தெரியப்படுத்தியது, ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகச் சிந்திக்கவும் கருத்துச் சொல்லவும் வழி வகுத்தது, வாழைச்சேனை வை.அஹமது என்ற நல்ல கலைஞனின் கதைகளைத் திருடிக் கொண்டு அவற்றைத் தனது பெயரில் வெளியிட்டு தன்னை இலக்கிய வாதியாக நிறுவிக் கொண்ட ஆடு மாடுகளுக்கு ஊசி போடும் ஒருவன் குதியோ குதியென்று குதித்தான், அரபியின் பணத்தில் ஊருக்குள் ஆடுமாடு வெட்டிப் பங்கு வைத்தவன் கண்ணீர் வடித்தான், அநியாயம் என்று வெகுண்டெழுந்தான், வேசிகளின் முந்தானையில் அன்றிரவைக் கழித்த கலிசரைகள் எல்லாம் ஆண்டவனே என்ன கொடுமை இது என்று புலம்பின, பிறரின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டவனும், குடிகாரனும், கஞ்சாக்குடியனும், பொடியன் அடிக்கும் மாஸ்டர்களும் சாபமிட்டார்கள், ஒரு கொலைகாரனின் தம்பி சந்திக்குச் சந்தி செய்தி சொன்னான், ஜாமியா நளீமிய்யாவில் கற்றுத் தேறிய அவ்லியாக் குஞ்சுகளும் மலாயிக்காமார்களும் எஸ்எம்எஸ் பரப்புரையில் ஈடுபட்டார்கள். தலைநகரில் கூட்டம் போட்டு அவதிப்பட்டார்கள் இப்படி எல்லாமும் அரங்கேறிக் கொண்டிருக்கையில்...
நான் ஏகாந்தத்தின் பிடியில் சிக்கிக் கொண்டேன், வாழ்க்கையில் தோற்றுப் போனவர்களின் பட்டியலில் இனி எனது பெயரும் இருக்கும் என்று விரக்தியின் அந்திமத்திற்கே சென்றேன், இப்படியான இக்கட்டான நிலையில் அதிலிருந்து விடுபட்டு பழையவாழ்க்கையை விடவும் மிகச் சிறந்த வாழ்க்கையை என்னால் மீண்டும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை எனக்குள் விதைத்தது அல்குர்ஆன்தான்.
அந்த நாடகத்தின் காட்சிகள் அரங்கேறும் போதும், பல்லாயிரம் மனிதர்கள் வேடிக்கை பார்க்கும் போதும், ஒரு புன்னகையுடன் என்னை தைரியமாக நிமிர்ந்து நிற்கச் செய்தது அல்குர்ஆன்தான், காக்கிச் சட்டை அதிகாரிகள் என்னை நம்பவைத்து மோசம் செய்த போதும் தமது ஆளுமை வீச்சைப் பரீட்சித்துப் பார்க்கும் களமாக என்னைப் பயன்படுத்திக் கொண்ட போதும் தைரியமாக அனைத்தையும் எதிர்கொள்ளச் செய்ததும் அல்குர்ஆன்தான், எனக்குக் கிடைத்த ஏகாந்தத்தினை அல்குர்ஆன் முழுமையாகப் போர்த்திக் கொண்டது, அந்தக் கடலில் முற்றாக மூழ்கிட உடலில் உள்ள அத்தனை அணுக்களும் ஆவலோடு துடித்துக் கொண்டிருந்தன, ஒவ்வொரு வசனங்களும் புதுப்புது அர்த்தங்களை என்னுள் விதைத்தன, பல்லாயிரம் சூரியன்கள் ஒருமித்து என்னுள் சுடர்வது போல் உணர்ந்தேன், ஒரு நாளைக்குக் குறைந்தது ஆயிரம் வசனங்களையாவது படித்தேன், அதிசயமான மாற்றத்தினை அது என்னுள் ஏற்படுத்தியது, உலக மாந்தர்கள் அனைவரில் இருந்தும் அந்நியப்பட்டுப் போனேன், எனக்கு எதுவுமே பெரிதாகத் தெரியவில்லை, யாருமே பெரிதாகத் தெரியவில்லை, அல்லாஹ் என்ற ஒப்பற்ற சக்திக்கு முன்னால் நான் அற்பமாகி நின்றேன், முஹம்மது என்ற மனிதரின் அசைக்க முடியாத பற்றின் ஒரேயொரு துளியினை நான் அனுபவிப்பது போல உணர்ந்தேன் அவரின் வாழ்க்கை குறித்து அல்குர்ஆன் பேசும் போது கண்ணீர் மடைதிறந்தோடியதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை, எனக்குத் தேவையான அனைத்தையும் அது அள்ளித் தந்தது, என் இதயத்தை முழுமையாக ஆக்கிரமித்தது, வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது,
அந்த வாழ்க்கையை இழக்க மனம் ஒப்பவில்லை, அல்குர்ஆனுக்கு இத்தனை வசீகரச் சக்தி இருக்கிறதா!! சத்தியமாக பலவீனனாகிய நான் வியந்து போனேன், இத்தனை நாளும் இந்த இன்பத்தை அனுபவிக்காமல் வீணாக்கி விட்டோமே என்று கைசேதப்பட்டேன் அதை நினைத்தாலும் கண்ணீர் ஊற்றெடுத்தது, எல்லா மனிதர்களும் தூக்கத்தைச் சுகித்துக் கொண்டிருக்கும் போது கட்டாயம் நித்திரை கொள்ள வேண்டும் என்ற கண்டிப்பான விதிகளைத் தாண்டி எதையும் பொருட்படுத்தாமல் இறைவா இறைவா என்று அவன் மன்றில் தலை சாய்க்கும் போது என்னைத் தேடுகிறேன், எங்குமே கண்டு கொள்ள முடியவில்லை, ஒரு தூசியிலேனும் நான் இல்லை அப்படியானால் எனது பெறுமானம்தான் என்ன? ஒன்றுமே இல்லை, ஒருதூசுத் துணிக்கைக்கேனும் பெறுமதியில்லாத நாமா இத்தனை காலமும் பெருமிதப் பட்டுக் கொண்டு வாழ்ந்து களித்தோம் என்று அழுகை அழுiகாயக வந்தது, அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை, எங்காவது என்னை மட்டும் தனிமையாக இருளில் விட்டுவிட்டால் போதும் என்று தோன்றியது, தனிமையை மனம் முழுமையாக யாசித்தது, அந்த யாசகம் மனித சஞ்சாரமே இல்லாத பகுதியொன்றில் தூக்கி வீசப்படவேண்டாமா? என்று என்னை வாட்டியது, அப்போதுதான் ஹிராகுகை ரஸூலுல்லாவுக்கு எவ்வளவு ஆறுதலாக இருந்திருக்கும் என்று தோன்றியது. அது போலதொரு குகை எனக்கும் கிடைக்காதா எனும் ஏக்கம் எங்கும் வியாபித்துப்பரவியது.
எனக்குத் தேவையான அந்தச் சூழலை ஏதோவோர் விதத்தில் அமைத்துக் கொண்டேன், என்னைச் சூழ காக்கிச் சட்டைஅணிந்தவர்கள் இருந்தார்கள், அவர்கள் கதைத்தார்கள், சப்தமிட்டார்கள், சிரித்தார்கள், எல்லாம் செய்தார்கள் ஆனால் நான் தனிமையில் இருந்தேன், அப்போது மனதை முழுமையாக வியாபித்தது அல்லாஹ்வின் நினைவுகள்தான் அவை என்னைக் கொள்ளை கொண்டன, நோன்பு நோற்கத் தூண்டின, உலக இன்பங்கள் எல்லாவற்றையும் மறுதலிக்கச் செய்தன, தொடர்ந்து ஐந்து மாதங்கள் நோற்ற நோன்பை வருடம் முழுவதும் நோற்கக் கூடாதா என்ற கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் மிகைத்தன, ஆன்மீகத்தில் கட்டற்று பைத்திய நிலைக்குச் செல்கிறோமோ என்று கூடத் தோன்றியது,
அப்போது நபிகளாரின் போதனைகளுக்குள் அமிழ்ந்து போகிறேன், ஒவ்வொரு ஹதீஸ்களும் அல்குர்ஆனின் வாசகங்களை மீள்வாசிப்புச் செய்யத் தூண்டின, இரண்டே முக்கால் தசாப்த கால வாழ்க்கையையும் வீணடித்துவிட்டோம் போல இருந்தது, மரணிக்கும்வரைச் சிறையிலேயே கிடந்துவிடலாம் போல இருந்தது, அந்தச் சிந்தனைகள் முனைப்பு பெறும் போது வாழ்வின் மீதான புதிய பக்கங்களை நபிகளார் திறந்து தந்தார், அல்குர்ஆன் அதில் ஒளிபாய்ச்சியது, பாதையை விஸ்தீரனமாக்கித் தந்தது, நான் பயணப்பட வேண்டிய இலக்குகளையும் தகர்த்தெறிய வேண்டி தளங்களையும் மாற்றங்களையும் இழப்புகளையும் பாதிப்புக்களையும் அது தெளிவாக்கிக் காட்டி இனிப் போ என்றது. யாரோ சிலர் என் கூடவே பயணிப்பது போலவும், எனக்குப் பின்னாலும் எனக்கு முன்னாலும் அணிவகுத்துச் செல்வது போலவும் தோன்றியது, நானும்; எல்லாவற்றையும் எதிர் கொள்வதற்குத் தயாரானேன்,
இப்போது ஒரே ஒரு எதிர்பார்ப்பு மட்டும்தான் எச்சம், அது மரணம்! எப்போது வரும் என்பதுதான், நாளையும் வரலாம் நாற்பது வருடங்களின் பின்னும் வரலாம் ஆனாலும் நான் பயணப்பட்டுக் கொண்டே இருப்பேன், எனது பயணத்தை யாராலும் எதற்காகவும் எப்போதும் எப்படியேனும் தடுத்துவிடவே முடியாது, கண்ணுக்கெட்டிய தூரம் அல்குர்ஆனின் ஒளி தெரிகிறது, அது தெரிகின்ற தூரம் வரை நபிகளாரின் வாழ்க்கை எல்லாவற்றையும் தெளிவுபடுத்திக் காட்டுகிறது, உயிர் மூச்சு எச்சமுள்ளவரை அது தொடர்ந்து கொண்டே இருக்கும்
எனது இருப்பை அவ்வெலும்புக்கூடு ஆட்டம் காணச் செய்தது, புதைப்பதற்கும் தோண்டுவதற்கும் அவர்களுக்கு ஒரு எலும்புக் கூடு கிடைத்தது, தோண்டியதோடு அவர்கள் பிரச்சினை முற்றாக முடிந்துவிட்டது, ஆனால் அது என்னைத் தள்ளிவிட்ட பாதாளத்தில் இருந்து இனி மீள முடியுமா என்று எண்ணத் தோன்றியது. அவமானப் படுத்தி வேடிக்கை பார்த்தது, அத்தோடு நான் இழிந்து அழிந்து விட்டதாய்த் தெருநாய்கள் இணையத்தளங்களில் ஊளையிட்டன, இன்னும் சில களிசரைகள் சாக்கடை அரசியல் செய்தன, ஒரு களிசரை பாராளுமன்றத்திலும் குரல் கொடுத்தது, இன்னும் சில மானங்கெட்ட ஜென்மங்கள் எலும்புக் கூட்டுக்குப் பச்சை போர்த்தி புனிதப்படுத்தி கூட்டம் சேர்த்து தலைமைத்துவத்தை நிறுவிடும் முனைப்போடு தலையில் ஒரு தொப்பியை மாட்டிக் கொண்டு போலியான சோகத்தை முகத்திலிருந்து புட்டம்வரை அப்பிக் கொண்டு பவ்வியமாக நின்றன, எதிர்கொள்ளத் திராணியில்லாத எதுவுமே தெரியாத சில கோழைகள் பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டுவிட்டு நாட்டை விட்டேயோடின, இங்கு ஏமாற்றப்பட்டதும் உண்மையிலேயே ஏமாந்து பேனதும் அந்த எழும்புக் கூட்டின் உறவுகள் என்று கருதப்பட்டவர்கள்தான்.
அது ஒரு தேச துரோகியின் மரணம், அப்படித்தான் வரலாறு பதிந்து கொண்டது, அந்த மரணம் குறிப்பிட்ட நபரின் குடும்பத்தில் ஏற்படுத்திய சோக அலை ஈடு செய்ய முடியாதது, இறந்து போனவன் எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும், கள்வன், காவாளி, பெண்புடியன், நாட்டை விற்று, சமூகத்தை விற்று மானங்கெட்ட பிழைப்பு நடாத்தியவன், இன்னோர் தேசத்தின் கைக்கூலி, நடைமுறையில் பொருளாதார இலாபங்களை மட்டும் குறியாகக் கொண்டு வாழ்ந்தவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் அவனது மரணமும் பல்வேறுவிதமான புரிதல்களை சமூகத் தளத்தில் பதிவு செய்யத் தவறவில்லைதான்
ஒரு தளத்தில் அவர் ஒரு புனிதமான மனிதராக, கௌரவத்திற்குறியவர், மறு பக்கத்தில் அவனை இயக்கிவர்களுக்கு அவன் மனித உரிமைப் போராளி, தமது குட்டு வெளிப்பட்டு விடுமோ என்று அஞ்சிக் கொண்டிருந்த கூட்டத்தார்க்கு அவன் சமூக சேவகன், இன்னொரு பக்கத்தில் தேசத்தின் மீது பற்றுக் கொண்டவர்கட்கு அவனது மரணம் நியாயமானது அவசியமானது, அவன் சாகடிக்கப்பட வேண்டியவன்தான், அவனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அது சந்தோசமான செய்தி, அவன் இறந்ததால் தமது நலன்களை இழந்தவர்களுக் அது பரிதாபமானது, அவனை மட்டும் மாட்டி விட்டுத் தப்பித்துக் கொண்டவர்கட்கு அது அச்சுறுத்தல், அவனோடு கூடவே இருந்து அனுபவித்து விடுபட்டுப் போனவர்களுக்கு மரணபயம், அவனால் காட்டிக் கொடுக்கப்பட்டவர்கட்கு அவன் துரோகி, ஆனால் உண்மையில் அவனது மரணம் நியாயமாகப் பாதித்தது அவனுடைய மனைவியையும் பிள்ளைகளையும்தான், அவனது மரணத்தை மருமக்கள் வியாபாரமாக்கிக் கொண்டபோதும் மகன்மார் ஜம்பர் போட்டுக் கொண்டு இஸ்லாத்தைப் பாதுகாக்கும் அமெரிக்கக் கைக்கூலிகளான பெண்கள் உரிமைக்காகப் போராடும் ஓரினச் சேர்க்கையாளர்களிடமும் லெஸ்பியன்களிடமும் கையேந்தி இழப்பீடு பெற்ற போதும், கேள்விக்குள்ளாக்கப்பட்டது தந்தையின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்த சிறுசுகளின் கனவுகள்தான்,
எங்கெங்கிருந்தெல்லாமோ அவர்களுக்குப் பல மில்லியன்கள் இழப்பீடுகளாக வரும் போது தம்மை நிலை நிறுத்திக் கொள்ளுவதிலும் தாம் எதிரிகள் குற்றவாளிகள் என்று கருதிய அனைவரையும் பழி வாங்குவதிலும்தான் அவர்களை சைத்தான் வழி நடாத்தினான், அந்தப் பணதில் அவர்களை அவன் மக்காவுக்கும் கூட்டிச் சென்றான், கஃபாவின் முன்றலில் தூய்மையோடு அழுது உண்மையான ஈமானோடு பிரார்த்தித்திருந்தால் நிச்சயம் அந்தப் பிரார்த்தனைகள் வீண் போயிருக்காது, சொந்த உழைப்பில் ஹலாலான பணத்தில் கஃபாவின் மண்ணை மிதிக்கும் போது எண்ணங்கள் எல்லாமே ஈடேறிவிடும், இறைவன் ஆவலோடு காத்திருப்பான் அடியானின் பிரார்த்தனையை அப்படியே ஏற்றுக்கொண்டு அருள்பாலிக்க, அவனது உடை ஹராம், அவனது உணவு ஹராம், அவனே மொத்தமாகக் ஹராத்தில் இருக்கிறான் அப்படி இருக்கும் போது இறைவா இறைவா என்று வானோக்கி ஏந்திய கரங்களோடு பிரார்த்திக்கும் போது அவனின் பிரார்த்தனையை எப்படி இறைவனால் அங்கீகரிக்க முடியும் என்று ரஸூலுல்லாஹ் கேட்ட கேள்வியை கொல்லப்பட்டதாகக் கருதப்பட்டவனின் புத்திரர்களிடம் கேட்க ஆசைப்படுகிறேன், குடும்பத்தோடு மட்டுமல்ல முழு ஊரோடு போனாலும் கஃபாவின் முன்றலில் ஹலாலிற்குள்ள பெறுமதி ஹராத்திற்கு எப்போதும் கிடைப்பதில்லைதான்,
யாரோ கொடுத்த இழப்பீட்டுத் தொகையில் காக்கிச் சட்டைக்காரர்களுக்கு மதுபான போத்தல்களையும் பொரித்த கோழிகளையும் பல்லாயிரம் செலவு செய்து வாங்கிக் கொடுக்கும் போதே அவர்கள் உண்மையைத் தொலைத்துவிட்டார்கள், அது அமெரிக்காவின் கிறீன்கார்ட் பெறுதல்தான் உலகில் கிடைக்கின்ற உச்ச பெறுபேறு என்ற எல்லைவரைக் கொண்டு சென்று நிறுத்தியதில் தப்பில்லைதான்,
ஆனாலும் பாவம் அந்தப் புத்திரர்களும் ஊர்மக்களும் யார் யாரோ போட்ட நிகழ்ச்சி நிரலுக்குள் அகப்பட்டுச் சின்னாபின்னமாகிப் போயினர், சம்பந்தமே இல்லாதவர்களையெல்லாம் இன்னும் பழிவாங்கிக் கொண்டிருக்கிறார்கள், அதை என்னால் தடுக்க முடியாது, அதற்காக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவும் முடியாது, என்னால் உரத்துச் சொல்ல முடியுமானது ஒன்றே ஒன்றுதான்!
வீணாக மோதிக் கொள்ளாதீர்கள், அல்லாஹ்வை மறுதலித்த ஒருவனுக்கு இருப்புக் கொள்ள உங்கள் பிளவு விடுகின்ற இடைவெளி வசதியாய்ப் போய் விடும், நீங்கள் இந்த மனித சட்டத்தால் தண்டிக்க நினைப்பவர்கள் யாருமே குற்றவாளிகள் கிடையாது, உங்களுக்குக் கிடைத்திருக்கும் ஆதாரங்கள் எல்லாமே வடிவமைக்கப்பட்டவைகள்தான், உங்களுக்குள் மோதிக் கொண்டு இறை மறுப்பாளனை இருப்புக் கொள்ள அனுமதிக்காதீர்கள், உங்களுக்கு என்னென்ன தெரிந்து கொள்ள வேண்டுமோ என்னிடம் வாருங்கள் தெளிவுபடுத்துகிறேன் மற்றபடி எங்குமே எப்போதுமே உங்களுக்கு எதுவுமே தெரியப் போவதில்லை, மனிதன் உருவாக்கிய பலவீனமான சட்டங்கள் இங்கு சிலரின் நலன்களை மட்டும்தான் நிறுவும், இறைசட்டங்களுக்கு மட்டுமே உள்ள வீச்சு தனித்துவமானது, எதனாலும் யாராலும் எந்த அதிகாரத்தாலும் புறந்தள்ள முடியாதது, அநியாயத்தால் எதிர் கொள்ளப்படும் எல்லாமே தோற்றுப் போகும்,
மோதிக் கொண்டு பகைமை விதைத்து விரிசல்பட்டு எதிரிகளைப் போல தமக்குள் பிணங்கிக் கொண்டிருக்கும் மூன்று தரப்பாருக்கும் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன், இது வரை காலமும் உங்களுக்குள் பிரயோகித்துக் கொண்ட மோசமான வார்த்தைகளுக்காகவும், ஒருவரை மாறி ஒருவர் தூற்றிக் கொண்டு இழிவுபடுத்தித் திரிந்தமைக்காகவும் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள், உடனடியாகச் சந்தித்து கட்டியனைத்து முஸாபஹா செய்து உங்களுக்குள் உள்ள பகைமையைத் துடைத்தெறியுங்கள், ஒரு பொதுத் தளத்தில் அதைச் செய்யுங்கள் இதயசுத்தியோடு அதைச் செய்யுங்கள் நீங்கள் மூன்று தரப்பாரும் ஒரே தரப்பாக மாறிடுங்கள், உங்கள் மூன்று தரப்பாருக்கும் தெரியாத உண்மைகளை இறைவன் உங்களுக்குத் தெளிவு படுத்துவான், அப்போது வல்லாஹி நீங்கள் அனைவரும் அறிந்து கொள்வீர்கள் உண்மையான எதிரி யார் என்று. அதல்லாது இப்படியேதான் மோதிக் கொண்டிருப்போம், நாங்கள் உயர்ந்தவர்கள், எங்களிடம் பணம் இருக்கிறது, எங்களிடம் அதிகாரம் இருக்கிறது, நாங்கள் ஏன் இறங்கிப் போக வேண்டும் என்று தம்மைத்தாமே நியாயப்படுத்திக் கொண்டு போகும் போது உங்களில் யாரையும் அந்தச் ஷைத்தானிடமிருந்து காப்பாற்ற முடியாது, அல்லாஹ்வைத் தவிர.
மனித சட்டத்தை நம்பாதீர்கள் அது எல்லோரையும் கைவிட்டு விடும், அல்லாஹ் நமக்கென்றே போட்டிருக்கும் சட்டங்களை மனந்திறந்து நம்புங்கள் விசுவாசியுங்கள், அந்தத் தூய்மையான நம்பிக்கை நிச்சயம் உங்களைக் காப்பாற்றும். ஒரு போதும் இம்மியளவும் கைவிடாது, தோற்றுப் போக விடாது, உங்கள் தராதரங்களைத் தூக்கி நிறுத்தும்!
நீங்கள் தயாரா?
உங்களில் அல்லாஹ்வுக்கு அதிகம் பயப்படுகிறோம் என்று நினைப்பவர்கள் இதில் முந்திக் கொள்ளுங்கள்.
தயவு செய்து இடைத் தரகர்களை உங்களுக்கிடையில் நியமித்துக் கொள்ளாதீர்கள்,
உங்கள் அனைவருக்கும் உள்ள ஒரே ஒரு சரியான தெரிவு அதுவாகத்தான் இருக்க முடியும்.
இன்னும் பகிரங்கமாக நான் எனக்காக ஒன்றைச் சொல்ல முடியும்
இந்த மனித சட்டத்தை விட்டுத் தள்ளுங்கள், நான் குற்றம் செய்திருந்தால் இறைவன் நிச்சயம் பகிரங்கமாகத் தண்டிப்பான். அதைப் பகிரங்கமாக நான் முக மலர்ச்சியோடு ஏற்றுக் கொள்வேன்,
இறைவா இந்த விடயத்தில் நான் குற்றவாளியாக இருந்தும் மனித சட்டத்தில் இருந்து தப்பித்துக் கொண்டாலும் என்னை விட்டுவிடாதே மிகவும் கேவலமாக மிகப் பகிரங்கமாகத் தண்டித்து விடு,
நான் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடு,
நான் நிரபராதியாக இருந்தால் நீ தந்திருக்கும் சோதனையில் இருந்து வெற்றிகரமாக மீண்டு அல்குர்ஆனின் நிழலில் இந்த தேசத்தினைக் கட்டமைக்க உதவி செய்,
உனக்கு உண்மையாளனாக இருந்தால் என்னை மகிமைப்படுத்தி அதிகாரத்தைத் தா,
எனது கனவுகளும் இலட்சியங்களும் தூய்மையானதாக இருந்தால் அவற்றை அங்கீகரித்து நிலைப்படுத்து.
உன்னைச் சந்திக்கும் அந்த நாளுக்காக நான் காத்துக் கிடக்கிறேன்.
சோதனைகள் மனிதனுக்கு பல்வேறு வடிவங்களில் வருவது வழையானது.. எனினும், நீங்கள் அனுபவித்தவை உங்கள் சக்திக்கும் மீறியதாகவே தென்படுகின்றது... ஆனாலும் எல்லாம் வல்லவனின் துணையுடன் அனைத்து தடைகளையும் தாண்டி, எதிர்நீச்சலுடன் வாழ்க்கையை மறுமைக்காக வெற்றிகொள்ள நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கு அல்லாஹ்வின் இந்த அடியேனும் பிரார்த்திக்கின்றேன்.. அல்ஹம்துலில்லாஹ்...
ReplyDeleteநன்றி ரஸூல் பிரார்த்தனைகள்தான் என்னைத் திடப்படுத்தி வாழ வைக்கின்றன, உங்களைப்போல நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை எனக்கென்ன கவலை.
Deleteநன்றி ரஸூல் பிரார்த்தனைகள்தான் என்னைத் திடப்படுத்தி வாழ வைக்கின்றன, உங்களைப்போல நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை எனக்கென்ன கவலை.
ReplyDelete