Saturday, November 15, 2014

கிராமத்தான் கலீபாவின் நழுவி கவிதை தொடர்பில் இரண்டு நிகழ்வுகளில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு

கிராமத்தான் கலீபாவின் நழுவி கவிதை தொடர்பில் இரண்டு நிகழ்வுகளில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு

கவிதைச் செயற்பாடும் அது சார்ந்தவையும் மிகவும் அலாதியானவை. அதற்கென்று ஒரு நல்ல மனதும் தன்மையும் வாய்க்கவேண்டும். நல்ல மனதுள்ள பலர் அமைதியாகப் படைப்புச் செயற்பாட்டில் ஆழமாகச் செயற்படும் போது கவிதைத் தளத்திலும் அதன் நேர்மறை மாற்றங்களை நாம் அவதானிக்க முடியும். ஒருவரின் ரசனை மட்டத்தின் அளவுக்கேற்பதான் அவரின் எழுத்துக்கள் வெளிப்படும். ஆகாயம் வரைக் குதித்தாலும் வரண்ட எழுத்துக்கள் வரலாற்றில் நின்று நிலைப்பதில்லை. கிராமத்தான் கலீபாவுக்கு செழிப்பான எழுத்துக்களின் வாசல் திறந்திருக்கிறது, அவர் அதில் தோய்ந்தெழுந்து படைப்பு வீரியத்தால் தன்னை நிலைப்படுத்திக் கொள்வார் என்ற எதிர்பார்ப்புகளுடன் சில விடயங்களையும் பகிர்ந்து கொள்ள நாடுகின்றேன்.

இன்று நண்பர் கிராமத்தான் கலீபாவின் முதலாவது கவிதைப் புத்தகம் வெளிவருகின்ற இச்சந்தர்ப்பத்தில் எனக்குக் தரப்பட்ட பணி நூல் அறிமுகம். வெறுமனே புத்தகத்தைக் காட்டி இதுதான் புத்தகம் இது இப்படிப்பட்டது அப்படிப்பட்டது என்று சொல்லாமலும், உரையாற்ற வந்திருப்பவர்களின் பணியினையும் நானே எடுத்துக் கொள்ளாமலும் சில விடயங்களையும் இணைத்தே இந்நூலை அறிமுகம் செய்ய நாடுகின்றேன். அந்த வகையில் மனதைக் கவரும் வகையில் அமைந்திருக்கும் அட்டைப்பட வடிவமைப்பும் அதற்காகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிறமும் கொஞ்சம் தூக்கலாக இருப்பதை நாம் அனைவரும் நிச்சயம் ஏற்றுக் கொள்வோம்.அட்டைப்படமே மிகத் தெளிவாக இது காதல் அத்தியாயம் என்பதைப்பறைசாற்றி நிற்பதையும் எம்மால் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. வடிவமைப்பு விவகாரத்தில் அஷ்ரப் ஷிஹாப்தீன் மேமன்கவி போன்றவர்கள் அதிக சிரத்தையெடுத்துக் கொள்வார்கள். இந்தப்படம் முகநூலில் இடப்பட்டபோதே நானும் மனைவியும் அது குறித்துப் பேசிக்கொண்டோம். அது போல நிச்சயமாக மேமன்கவியவர்கள் கலீபாவுடன் இந்த அட்டைபடம் தொடர்பில் கலந்துரையாடி இருப்பார் வாழ்த்தி  இருப்பார் புகழந்து இருப்பார் என்று திடமாக நம்புகின்றேன். பொதுவாக இலக்கியவாதிகளுக்குள் அவருக்குத்தான் அதில் அக்கறை அதிகம்

பின்னட்டையில் கலீபாவின் படத்துடன் தர்கா நகர் தேசிய கல்வியற்கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதியான தாஜூல் உலூம் கலைவாதி கலீல் அவர்களின் குறிப்பு இடம்பெற்றுள்ளது. கிராமத்தான் பற்றி அவர் தனது புரிதலைப் பகிர்ந்து கொண்டுள்ளார். ஒப்பு நோக்குநர் அதைப் படித்துப் பார்க்கவேயில்லை என்பதற்கு அதில் மலிந்து கிடக்கும் எழுத்துப் பிழைகள் சான்று. பொதுவாக பட்டம் பேர் புகழ் அனைத்தையும் சொல்லி ஒருவரை அழைப்பதில் எனக்கு சங்கடம் இருக்கின்றது. தனிப்பட்ட ரீதியில் அது எனக்கு விருப்பமில்லாத ஒன்று. ஒருவர் இருக்கும் போது அவரது முன்நிலையில் மட்டுமே நாம் அவரது பட்டம் புகழ் என்று அனைத்தையும் சொல்லி அழைக்கிறோம் அது அவருக்குக் கொடுக்கப்படும் மரியாதை என்றும் நம்புகின்றோம். 
அதேவேளை அவர் இல்லாத இடத்தில் அவரைப்பற்றிப் பேசும் போது நாம் அவரது பட்டங்களைச் சொல்லி அவரைக் கௌரவப்படுத்தி அழைப்பதில்லை. இதை நான் பல தடவை பலரிடமும் அவதானித்திருக்கிறேன். ஒருவர் மீது நமக்கு உண்மையான அன்பு இருந்தால் அவர்மீதுள்ள மரியாதை அவர் இல்லாத இடத்தில்தான் அதிகமாக வெளிப்படும். துரதிஸ்டம் இலக்கிய உலகில் அது இல்லை. வெறுமனே கலைவாதி கலீல் என்று போட்டிருந்தால் கூடப் போதுமானது என்று நான் கருதுகின்றேன். அவர் விருப்பம் எதுவென்று  எனக்குத் தெரியவில்லை. இப்போதுள்ள இளையவர்கள் மட்டுமல்ல பழையவர்களும் முகத்தில் புகழ்வதில் குறை வைப்பதில்லை.

அழகிய மஞ்சல் நிற மப்ளிடோ தாளில் 84 பக்கங்களில் எட்டுக்குறிப்புக்களுடனும் 36 கவிதைகளுடனும் முந்நூறு ரூபாய் பெறுமதியில் அச்சாகியிருக்கின்றது நழுவி. பேனா பதிப்பகம் இதனை வெளியிட்டிருககின்றது. 
குறிப்பு ஒன்று: புத்தகம் பற்றிய தகவல்கள்
குறிப்பு இரண்டு: பால்ய நண்பனுக்கான சமர்;பணம்
குறிப்பு மூன்று: பீ.ரீ.அப்துல் மஜீத், அஹமது பைசல், எம்.எஸ்.அப்துல் மலிக், கிண்ணியா அமீர் அலி ஆகியோருக்கான நன்றி நவிழல்
குறிப்பு நான்கு: மருதூர் ஏ.மஜீத் அவர்களின் வாழ்த்துடன் கூடிய கிராமத்தானின் கவிதைகள் பற்றிய அவரது கருத்துக்கள்
குறிப்பு ஐந்து: கலாபூசணம் ஏ.எம்.எம்.அலியின் ரசனைக் குறிப்பு
குறிப்பு ஆறு : கிண்ணியா அமீர் அலியின் ரசனைக் குறிப்பு
குறிப்பு ஏழு: ஒரு சித்திரப் பூச்சியின் சிறகடிப்பு என்ற தலைப்பில் கிராமத்தான் கலீபாவின் கவர்ச்சிகரமான நறுக்கியெடுத்த வார்த்தைகளாலான இருபக்கக் குறிப்பு
குறிப்பு எட்டு: பதிப்புரை.

அனைத்தையும் அமைதியாகப் படித்து முடித்த பின்னர் எனக்குப் தோன்றிய ஒரேயொரு விடயம் சித்திரப் பூச்சி மட்டும் மேலதிகமாக இன்னும் இரண்டு பக்கங்களுக்குச் சிறகடித்திருந்தாலே போதும். அது வே மிக அழகாக அமைந்திருக்கும். ஏனைய சில குறிப்புக்கள் அவசியமே பட்டிருக்காது. இதைச் சொல்லும் போது பலருக்கும் கோபம் வரக் கூடும். ஆயினும் என்ன செய்வது எனக்குத் தோன்றுவதைச் சொல்லிவிடுவது எனது இயல்பாயிற்றே. உண்மையில் முன்னுக்குப் பின்னுக்கெல்லாம் குறிப்பு எழுதித்தருமாறு ஒருவரிடம் கேட்பது அவருக்குக் கொடுக்கப்படும் மரியாதையின் நிமித்தமே. அந்த மரியாதை பலரும் புகழ்ந்து விடுவதிலேயே கழிப்பதையே அவதானித்திருக்கிறேன்.  அவ்வாறு குறிப்பெழுதக் கொடுப்பது அவருக்களிக்கப்படும் கௌரவம். அந்தக் கௌரவத்தை வெறும் வார்த்தைகளால் புகழ்ந்துவிட்டுத் தம்மை நிலை நிறுத்திக் கொள்ளும் உபாயத்தை பல உரைகளில் அவதானித்திருக்கிறேன். இங்கும் எழுதப்பட்டுள்ள உரைகளை நீங்கள் படித்துப் பாருங்கள். அதற்காக இங்கு உள்ள உரைகளைக் குற்றம் சொல்லவரவில்லை. ஆனால் மனதை இடிக்கும் ஒரு விடயத்தை போட்டு உடைக்காமல் விட்டுவிடவும் முடியவில்லை. அது பதிப்புரை பற்றியது.

கிண்ணியா பேனா பதிப்பகம் சார்பாக ஜே.பிரோஸ்கான் பதிப்புரை எழுதியிருக்கின்றார். அதில் எனக்கு இடிக்கின்ற விடயங்களைச் சொல்லிக் காட்டியாக வேண்டும். கலீபாவின் நழுவி கவிதைத் தொகுதி குறிப்பிட்ட பதிப்பகத்தின் பதின்மூன்றாவது வெளியீடு. கலீபா தனது கவிதைத் தொகுதி பேனா பதிப்பகம் ஊடாகவே வெளிவர வேண்டும் என்று விருப்பப்பட்டதாக இரண்டு இடங்களில் சொல்கின்றார். என்னமோ குறிப்பிட்ட பதிப்பகமே தனது புத்தகத்தைப் பதிப்பிக்க வேண்டுமென்று கெஞ்சிக் கேட்டது போல நமக்குத் தோன்றுகின்றது. பொதுவாக நம்நாட்டுப் பதிப்புச் சூழலில் புரவலர் புத்தகப்பூங்கா பலரின் புத்தகங்களை தனது செலவில் வெளியிட்டு வைத்துள்ளது. ஆனால் இங்கு நழுவி கவிதைத் தொகுதிக்காக நிச்சயமாக மொத்தத் தொகையையும் கலீபாவேதான் செலவு செய்திருப்பார் என்று திடமாக நம்புகின்றேன். அப்படித்தானே கலீபா?

அப்படி இருக்கும் போது இந்தப் பதிப்புரை கேலிகுரியதாகின்றது. ஒரு படைப்பாளனின் உழைப்பிலும் பணத்திலும் பதிப்பகங்கள் இலவசமாகத் தம்மைத் தாமே  புகழ்ந்து மதிப்புக்குரியவர்களாகக் கட்டமைத்துக் கொள்ளும் போலியை  வன்மையாகக் கண்டிக்கத் தோன்றுகின்றது. இந்தியாவைப் போல இங்கு எழுத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் கிடையாது. தானே எழுதி தானே பணம் செலவு செய்து அச்சிட்டு தானே வெளியீட்டு நிகழ்வுக்கும் செலவு செய்து இங்கு நாம் குடிக்கும் ஒவ்வொரு மிடறு நீருக்கும் கலீபாவே தனது பணத்தில் ஏற்பாடு செய்திருப்பார். இப்படிப்பட்ட துரதிஸ்ட நிலையில்தான் எழுத்தாளன் தனது புத்தகத்தைப் பொது வெளிக்குக் கொண்டு வருகின்றான். அதை விஸேட பிரதி என்ற யெரில் எவரும் காணாதபடி வெறும் கவரை வைத்துவிட்டு புத்தகத்தை வாங்கிச் செல்லும் சில பேர்வழிகளையும் சுமந்துகொண்டதுதான் நமது இலக்கியப் பரப்பு என்பதை மிகக் குறுகிய காலத்தில் நான் புரிந்து கொண்டேன். ஒவ்வொரு வெளியீட்டு விழாவும் இந்த அவலத்தைச் சுமந்துதான் நிகழ்ந்து முடிகின்றது. நூல் அறிமுகத்தில் ஏன் இதெல்லாம் சொல்கின்றேன் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் ஒரு எழுத்தாளன் தனது படைப்பை பொருளாதார ரீதியில் வெற்றியடைச் செய்ய முடியாத துரதிஸ்டமான நிலையில்தான் இங்கு இருக்கின்றான் என்பதை பல தடவைகள் அவதானித்தன் வெளிப்பாடாகவே அவற்றைச் சொல்லத் தோன்றியது.

இந்த நூலை ஆகா ஓகோ என்று புகழ்ந் தள்ளிவிட்டு கலீபாவையும் நன்றாகப் புகழ்ந்து தள்விட்டு அற்புதமான புத்தகம் வாங்கிப்படியுங்கள் என்று கூறிவிட்டுப் போக மனது இடம் தரவில்லை, கல்வியில் மிக உயர்ந்நத நிலையில் இருக்கின்றவரல்லர் இந்தக் கிராமத்தான் கலீபா. மரத்தைக் கட்டில்களாகவும் கதிரைகளாகவும் புத்தக அலுமாரிகளாகவும் இன்னும் பலவாகவும் செதுக்குகின்ற ஒரு சிற்பிதான் இந்தக் கலீபா, அரது தொழிலே அழகியல் நேர்த்தியும் ரசனையும் மிக்கது. அப்படிப்பட்ட ரசனை உணர்வுகளுக்குள் தினம் தினம் வாழும் அவர் எழுதிய கவிதைகள் தரமான இடத்தை அடையவேண்டும், இன்னும் தரமான படைப்புக்களைத் தரவேண்டும் வெறுமனே காதல் மட்டுமல்ல கவிதைக்குரிய சமாச்சாரம் என்பதைப் புரிந்து கொண்டு தரமான பல கவிதைகளை அவர் எழுத வேண்டும் என்ற ஆதங்கத்தை இங்கு வெளிப்படுத்துகின்றேன். 

கவிதைகள் குறித்துப் பேசுவதற்கு இங்கு நண்பர் நாச்சியாதீவு பர்வீன் வந்திருக்கின்றார், அது போல பேராசிரியர் துரைமனோகரன் வந்திருக்கிறார், அவர்கள் கலீபாவின் கவிதைகளின் ஆழ அகலம் குறித்துப் பேசுவார்கள். பர்வீனின் உரை நிச்சயம் மிகக் கனதி மிக்கதாக இருக்கும். எனவே அந்தப் பகுதியை நான் தொடத் தேவையில்லை. 
வகவக் கவியரங்கிலே ஒரு பரிகாரி பற்றிய நெடுங்கவிதையொன்றை கலீபா வாசித்தார். அது மிகவும் நல்ல கவிதை அது போல பல கவிதைகள் இதில் இருக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனேன். ஆயினும் அப்படிப்பட்ட பல கவிதைகளை அவர் இன்னொரு தொகுப்பாகக்கூட வைத்திருக்காலாம். காதலும் காதலியும் அவரை தனித் தொகுதி போடவைக்கும் அளவுக்கு மிஞ்சிப் போய்விட்டார்கள், பொத்துவிலுக்குப் புகழ் சேர்க்க இன்னுமொரு எழுத்தாளன் புறப்பட்டுவிட்டான். அந்த மண்ணின் இயற்கையோடும், பண்பாடு பாரம்பரியங்களோடும், மக்களோடும் மீண்டும் ஒரு கவிதைத் தொகுயினூடாக அவரின் இன்னுமொரு புதிய பரிமானத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் விடைபெற முன்னர் இத்தொகுதி பொருளாதார ரீதியிலும் வெற்றியடைய வேண்டுமென வாழ்த்துகின்றேன். 

இந்த உரைதான் கொழும்பு வை எம்எம்ஏ மண்டபத்தில் கலீபாவின் நழுவி கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் நான் பேசியது. அது போல இன்று அவரது ஊரிலேயே அதே தொகுதியின் அறிமுக விழாவிலும் பேசுமாறு அவர் அழைத்திருக்கின்றார். அதுவும் அவரது கவிதைகளைப் பற்றி. திறனாய்வு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் பொத்துவில் சூழல் எப்படியிருக்கும் என்று நான் மதிப்பிட்டு இருந்தேனோ அதையே இங்கு காண்கின்றேன். இந்த விழாவில் நான் அதிகம் பேசினால் அல்லது இந்த நேரத்தில் கவிதைகள் குறித்து அளவோடு Nசினால் கூட அது அவ்வளவு பொருத்தமானதாக இருக்கும் என்று கருதவில்லை எனவே கலீபாவின் கவிதைகள் குறித்து எனது சின்னஞ் சிறிய ரசனைக் குறிப்பை மட்டும் முன் வைக்க நாடுகின்றேன்.

இந்த விழாவில் நான் கலந்து கொள்வேன் என்று  கருதியே இருக்கவில்லை, ஆயினும் அந்த சந்தர்ப்பம் அமைந்துவிட்டது. இந்தக் கடற்கரையும் இந்த மணல் மேடுகளும் பற்றைகளும் செடிகளும் கொடிகளும்தான் கலீபாவின் கவிதைகளில் அவரின் காதலியிலும் காதலிலும் புதைந்து எழுகின்றது. பொதுவாக காதல் கவிதைகளை ரசிக்கும் போக்கு என்னிடம் இல்லை. அப்படி ரசிக்கத் தோன்றாத ஒன்றைப் பற்றி சும்மா போலியாக வெறும் வார்த்தைகளால் ஆகா ஓகோ என்று புகழ்ந்துவிட்டுச் செல்ல நான் தயாரில்லை.   ஆனால் அந்தக் காதலுக்குள்ளாலும் பல செய்திகளை நகர்த்த முடியும், அதை ஓரளவு கலீபா செய்திருக்கின்றார். எனது வாசிப்புக்குட்பட்டவகையில் அது  போதாது. கலீபாவுக்குள் ஆற்றல் மிகு எழுத்துக்கள் இருக்கின்றன. அவ்வப்போது அவற்றை முகநூலில் அவதானிக்க முடியுமாக இருக்கின்றது. அதிகம் அதிகம் படித்துக் கொண்டே இருந்தால் நமது எழுத்துக்களும் செழுமையடைந்து கொண்டே செல்லும் கலீபா இன்னுமின்னும் அதிகமாக வாசிக்க வேண்டும் அதன் பயனை எழுதும் போது நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். 

மனதில் ஊற்றெடுக்கும் விடயங்களுக்கு வெறும் கவிதை மட்டும்தான் வடிவமன்று, இன்னுமுள்ள  இதர இலக்கிய வடிவங்களிலும் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள் அதுவும் உங்களுக்குக் கை கூடும். கொழும்பு வெளியீட்டு விழாவில் பேராசிரியர் துரை மனோகரன் சொன்னது போல உங்களுக்குள் ஒரு பாடலாசிரியனும் ஒளிந்து கொண்டிருக்கிறான். கவிதை தவிர்ந்த ஏனைய வடிவங்களிலும் உங்களால் நிலைத்த நிற்க முடியும், இந்த மண்ணிலேயே பல்லாயிரம் விடயங்கள் புதைந்து கிடக்கின்றன. அவற்றைத் தோண்டியெடுத்து உயிர்ப்பித்துக் காட்டுங்கள். நிச்சயம் அவை செழுமைமிக்கவையாக மின்னும். ஒன்றை புதுமையாகவும் நேர்த்தியாகவும் அழகுபடுத்த உங்களுக்குச் சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை, சதாவும் நேர்த்தியில் பொழுதைக் கழிக்கும் உங்களுக்கு அது மிகவும் கடினமானதுமல்ல, உங்கள் எழுத்துக்களை பல்வேறு வடிவங்களில்; எதிர்பார்க்கிறோம் என்ற செய்தியைச் சொல்லி விடைபெறுகின்றேன் நன்றி. வஸ்ஸலாம்.

1 comment: